எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, February 11, 2010

பூச்சிறுமி


னனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில்
பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள்
பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள்
வாசல்புறத்திலும் வாகனத்திலும்
எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம்
தங்கைக்கும் பூ வைப்பாள்
சாமிக்கென தனியே பூ கொய்வாள்
காலையில் செம்பருத்தி ரோஜாவும்
மாலையில் மல்லிகையும் சூடிக்கொள்வாள்
நேற்றிலிருந்து எனது கணினித்திரைக்கு
அடியிலும் சில பூக்களிட்டிருந்தாள்
இனி தினமும் வைக்கப்போவதாக
சொல்லியிருக்கிறாள்.

Sunday, November 22, 2009

பிரிதுயர்


வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?

Monday, March 30, 2009

நகரத்துப் பூக்கள்

காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.

Thursday, December 18, 2008

இரவின் இசை


இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின் நள்ளிரவு சப்தங்களை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத
சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை
உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்
கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய
ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.
உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு
வண்டுகளின் ரீங்காரம் என
எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.
விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.

Saturday, November 01, 2008

நெடிதுயர்ந்த பனையின் நிழல்


நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்
கதிரவனின் நகர்விற்கேற்ப
நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ
தற்காலிகமென்றோ வரையிடமுடியாத
தனிமை. தனிமை சுகிக்கும் கணங்களாக
நான் குறிப்பிடுபவையாவன சிலது கேள்.
தொட்டாற்சிணுங்கி தொடு பின் தழை
விரியும் கணங்கள் காத்திரு.
அடர்மழை காண் அதன் கடைசித்துளி
ஓசை உற்று கேள்.
அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி
செய், உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.
சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்
ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்.
நிலைக்கண்ணாடி முன் உடல் வருடி
முழுநிர்வாணம் ரசி, காற்றுப்புக அனுமதி கொடு.
இவையாவும் நாளுக்கொன்றாய் உரு மாறும்
நிலாவாகவும்
அது தரும் தற்காலிக குளிர்மை போலவும்
சுகிக்கவில்லையெனில் எப்போதாவது ஒன்றின்
மற்றொன்று தொடர்ச்சியாய் நடக்கும்
விசேஷ கணத்திற்காய் காத்திரு.

Friday, October 17, 2008

ஜனனி


வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள்.
பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த
விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள்.
இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல்
போர் தொடுப்பதாக எண்ணம். போர் என்பது
ஒரே ஒரு அடி மட்டுமே. பொருட்களின் மீது
கம்பு பட்டெழும் வினோதமான ஒலியை
ரசித்தவாறு முன்னேறுகிறாள். ஜடப்பொருட்கள்
யாவும் அவள் முன் மண்டியிட்டன. எதிர்ப்புகள்
இல்லாத இப்போரில் குதூகலம் அடைந்திருந்தாள்.
ராணியைப் போன்ற தோரணையுடன் என்னருகே
வருகிறாள். துயிலிலாழ்ந்து மேலெழும் முதுகில்
அடித்தபோது அவ்வினோதமான ஒலி இல்லை.
ஏமாற்றமடைந்தவள் பலம் கொண்ட மட்டும் கம்பை
வீசுகிறாள். துயிலகன்ற கோபத்தில் என் விழிகள்
அவளைப் பார்க்கிறது. சற்றுமுன்னிருந்த மகிழ்ச்சியின்
வேர்களனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
இரு கீழிமையின் விளிம்புகளிலும் நீர்த்தேக்கம்.
எந்நேரமும் வெடித்துக்கிளம்பலாம்
என்ற அழுகை முகம். ஆதூரமாய் அணைக்கிறேன்
மார்பில் அவளின் இளஞ்சூடான கண்ணீர்த்துளிகள்.

Monday, September 15, 2008

காரிருள் தேவதை


கோடிட்ட இப்பக்கங்களை தினம் தினம்
நிரப்ப யாதொரு அதிசயமும் நிகழ்ந்துவிடவில்லை.
நாட்குறிப்பில் இந்த சுவாரசியமற்ற நாட்களை
என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது.
ஒலிகள் எல்லாம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட
பேரமைதியான இரவு.
இருள்சூழ்ந்த அறையின் முழுவதும்
வண்ணங்கள் மறைந்துவிட்டிருந்தன.
பின்னிரவுப்பொழுதொன்றில் இருள் தேவதை
உள்ளிறங்கி வந்திருந்தாள்.
இருளுக்கு ராகம் இருப்பதை இன்றுதான்
கண்டுகொண்டேன். அவள்
பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி
இருளில் சுழன்றாடினாள்.
சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்
ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட
அவளின் நிறம் இப்போது காரிருள்.
விளக்கின் திடீர்ப்பிரவேசத்தில் கலைந்த அவள்
தன் கடைசி ராகத்தை என் முகத்திலெறிந்தபடி
வெளியேறினாள்.
உடலில் மைதுனத்திற்கு பின்னான அதிர்வுகள்.
அறைக்குள் வண்ணங்கள் ஒவ்வொன்றாக
மீண்டும் வரத்தொடங்கின.

Friday, August 29, 2008

நாற்புறமும் தனிமையின் நர்த்தனம்


நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறது
சிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்
பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்
நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.
தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.
அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்
தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்
சேமித்திருந்தேன்.
சுகந்தியுடனான சொற்கள் காலாவதியாகிவிட்டன
என்று முன்பொரு யுகத்தில் கனலில் இட்டேன்.
தேவி விடாப்பிடியாக அடம்பிடித்து சொற்களை
திரும்பப் பெற்றுக்கொண்டாள்.
முத்துலட்சுமி இறந்தபோது அவளுடனான சொற்களும்
எப்படியோ மாயமாகி விட்டிருந்தன.
சாந்தியுடன் சொற்பரிமாற்றமில்லை எனினும்
பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்
யுகமாயிரமாயிர சில்லறைச்சொற்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்.
இன்று நீ விட்டுச்சென்ற சொற்களை மயிலிறகு
பெட்டி ஒன்றில் அடைக்கையில் நிலம் அதிர
கீழே விழுந்தது ஒரு சொல்.
வெடித்துச் சிதறிய அறையின் நாற்புறமும்
தனிமையின் நர்த்தனம்.

Friday, August 15, 2008

கருணையற்ற கோடை

நீளமான இந்த கோடையில்
குறைந்தபட்சமான குளிர்ந்த காற்று போதும்
உனக்காக ஒரு கவிதையினை எழுதிவிடுவேன்.
கொஞ்சம் நீர்த்துளிகள் வானத்திலிருந்து.
அல்லது
பாசாங்குகள் அற்ற மழலையின் சிரிப்பு.
அல்லது
பழுத்த இலை ஒன்று மென்காற்றை கிழித்துக்
கீழிறங்கும் காட்சி.
அல்லது
கண்கள் மூடிய சவத்தின் மவுனம்.
அல்லது
எதிர் வீட்டுப் பூனையின் ஆச்சர்யமான தலையுயர்த்தல்.
அல்லது
தென்னையோலையின் கடைசித்துளி மழைநீர்
குளத்தில் வீழ்ந்தெழும் அந்நொடி.
அல்லது
முதல் முட்டை இட்ட கோழியின் ஆசுவாசமான
கெக் கெக் கெகே... சப்தம்.
அல்லது
விணையின் நரம்பில் நகங்கீறி குருதி
தெறிக்கும் உச்சம்
இக்கடும் கோடையினை மதியிலகற்றவும்
முகமறியா உனக்காக அபூர்வான சொற்களை
கோர்க்கவும் சிலவற்றை நினைவுகொள்கிறேன்
தோழி.

Monday, January 21, 2008

நெகிழ்வுதரும் காட்சிகள், எழுத்துக்கள் மற்றும் ஒரு கவிதை

தனிமையின் வழி என்ற கட்டுரைத் தொகுப்பை அய்யனார் என்னிடம் கொடுக்கும்போதே
அருமையானது என்று சொல்லியே கொடுத்தார். வாங்கி இரண்டுமாதம் கழித்துதான்
அதை பிரித்து பார்க்க நேரம் வாய்த்தது. அவர் சொன்னதுக்கும் மேலாக இருந்தது.
இதை கட்டுரைத் தொகுப்பு என்று கூட சொல்லமுடியாது. தனியனின் வலி நிறைந்த
பயணம்தான் தனிமையின் வழி.

கதையைப் போல கற்பனையைப் போல எழுதிவிட முடியாதது தன்னைப் பற்றிய
குறிப்புகள். ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் முடிவுகள் மிக
நெகிழ்ச்சியாக இருந்ததை இதற்கு முன் எப்போதும் கண்டதில்லை. எந்த ஒரு
வார்த்தையைக் கொடுத்தாலும் அந்த வார்த்தையைக் கொண்டு அழகான நினைவலைகளை
கட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. நாம் எழுதும்போதுகூட சுவையானவை
என்று கருதுவதை மட்டுமே எழுதுகிறோம். (இந்த எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு)வாசிப்பவர் நம்மீது சிறிதளவு பிரமிப்பாவது அடைய வேண்டும் குறைந்த
பட்சம் கவனிக்கப்படவாவது வேண்டும் என்ற முனைப்பு தெரியும்.

நான் எழுதிய சில பதிவுகள் நெகிழ்ச்சியாக இருந்ததாக வாசித்தவர் சிலர் சொல்லி
இருக்கிறார்கள். அதை நேரடியான எழுத்தின் மூலம் நான் அடைந்தது இந்த
கட்டுரைத் தொகுப்பில்தான். சுந்தர ராமசாமி, மணிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி
ஆகியவர்களுடன் தனது நட்பை விவரிக்கும் குறிப்புகளை படிக்கும்போது
அதிகாலைப் பொழுது. முனை மடித்து வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
வாசித்து முடிக்கும்போது குரல் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
உண்மைகளைப் பற்றி எழுதும்போது அவை உண்மையாக இருப்பதே அபூர்வம்.
குழம்பிய நிலையில் இருப்பதாக நினைக்கும்போது சுகுமாரனின் குறிப்புகள்
ஒன்றை படிக்க வேண்டும்.

நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்

-------

ஒம்பது ரூபாய் நோட்டு படம் பார்க்க நேர்ந்தது. முதலில் தங்கர் மீது
எனக்கு பயங்கர கொலைவெறி இருந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.
அதை பழி தீர்க்கும் விதமாக சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், சிதம்பரத்தில்
அப்பாசாமி போன்ற படங்களை இன்னமும் பார்க்கவில்லை. சத்யராஜ் வாழ்க்கையில்
உருப்படியான இரண்டாவது படம் இது என சொல்ல வைக்க கூடிய கதை.
நாவல் வடிவத்தில் படிக்காது இருந்ததனால் இரண்டையும் ஒப்பிட்டு திருப்தியடையாத
மனநிலை என்பது இல்லவே இல்லை, தலைவர்களின் வரலாறோ, நாவலை
அடியொற்றி எடுக்கப்படும் படங்கள் மூலத்தை பிரதிபலிப்பதாக எவரும் சொல்லி
கேட்டதுமில்லை.

என்னைப்பொருத்த வரை தங்கரின் மேல் உள்ள கோபத்தின் அளவை வெகுவாக
குறைத்திருக்கிறது. அவரின் மற்ற படங்களை பார்ப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இறுதிக் காட்சிகளின் போது கமீலா, மாதவரய்யா மேல் காட்டும் வருத்தத்தை
மட்டும் வழக்கமான சினிமா விதிகளின் அடிப்படையில் அமைந்தது போல
ஒரு தோற்றம். படத்தின் இரண்டு காட்சிகள் மிகுந்த நெகிழ்வுகளை தந்தது.
நாசர் வீட்டுக்கு சத்யராஜ், அர்ச்சனா நிராதரவாக செல்லும் காட்சி மற்றும்
மாதவரய்யா இறந்த காட்சி. இவையிரண்டும் அடுத்த நெகிழ்வான காட்சிகள்
காணும் வரை மனதில் இருக்கும்.

நன்றி தங்கர்.

------------

என் மொழி புரியாத வெளி தேசத்தவர்களிடம் பேசுவதில் அலாதியான ஆசை
எப்போதுமே உண்டு. சொல்ல வருவதை நமக்கு புரிய வைப்பதில் அவர்களின்
முகத்தில் குழப்ப ரேகையுடன் கூடிய மெல்லிய பதைப்பு தெரியும். அவற்றில்
புதிய முகபாவங்கள் தென்படலாம். எனக்கும் இது பொருந்தும். அந்த வகையில்
நேற்று இரண்டு துருக்கியர்களை சந்தித்தேன். (இதுபோல சந்தித்தது பற்றி மட்டுமே
எழுதுவதாக சில விஷமிகள் பரப்புவதால் நீண்டநாள் கழித்து இப்போது எழுதுகிறேன்)
அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை, அரபியும் ஷோய ஷோய எனக்கு
எனக்கு அரபியும் சுத்தமாக வராது. ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனின் செய்தி
வாசிப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். துருக்கி நாட்டு பெண்கள் மிக
அழகானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை விளக்கிச் சொல்ல ஐந்து
நிமிடம் பிடித்தது.

உடனே சிடி பேக்கிலிருந்து விதவிதமான சிடிக்களை எடுத்து கொடுத்தார்கள்.
எல்லாமே பார்த்து சலித்தவை. எதாவது திரைப்படம் இருக்கிறதா என்று சோதிக்க
ஐந்து நிமிடம் செலவழித்து எடுத்தது ஒரு இராக்கிய படம். பெயர் தெரியவில்லை.
ஆங்கிலத்திலோ, அல்லது இராக்கிய மொழியிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
துருக்கியில் டப்பிங் செய்திருந்தது. சப்டைட்டில் கூட இல்லை.



கதைக்களன் சதாமைத் தேடி அமெரிக்கப்படைகள் சுற்றும் மற்றும் அபு க்ரைப்
சிறையில் இராக்கியர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி பேசும் படம். படத்தில்
பெரும்பாலான இடங்களில் வசனங்கள் இல்லாதது வசதியாக இருந்தது.
முக்கியமான ராணுவ தளபதியை (பாண்டம் மம்மி படத்தில் நடித்த மாயாவிதான் இவர். இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் தமிழில்)போட்டுத்தள்ள மூவர் படை கிளம்புகிறது
ஒவ்வொரு முறையும் தப்புகிறார். முடிவில் ஒரு பெண்ணின் குறுவால் மூலம்
மரணம் அடைகிறார். அப்பெண் திருமணத்தின் போது நடந்த விருந்தில் புதுக்
கணவன் கொல்லப்படுகிறார்.

சுற்றிலும் வீடுகள் நடுவில் மைதானம் போன்ற இடத்தில் அனைவருக்கும் தேநீர்
கொடுக்கப்படுகிறது. மணப்பெண் உட்பட பெண்கள் வீட்டின் மேலிருந்து ஆண்கள்
நடனமாடுவதை பார்க்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியான இரவை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போது அமெரிக்க படைகள் வருகிறது. ஏதோ காரணம் சொல்லி
யாரையோ தேடுகிறது. நவீன ரக துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு அருகில்
சிறுவன் ஒருவன் அதிசயமாக துப்பாக்கியை பார்க்கிறான். விளையாட்டு சாதனம்
என்று நினைத்து குழலில் குச்சியை விடுகிறான். அந்த வீரன் கோபப்பட்டு சிறுவனை
ஒதுக்க மீண்டும் மீண்டும் குச்சியை விடுகிறான் சிறுவன். சலிப்படை வீரன்
மூன்றாவது முறை ஒதுக்கும்போது மூன்று குண்டுகளை வரிசையாக சிறுவனின்
இதயத்தில் செலுத்துகிறான். தொடர்ச்சியான இந்த காட்சியில் துப்பாக்கியிலிருந்து
குண்டு வெளியாவதை தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. கூட்டத்தில் சலசலப்பு
ஏற்படுகிறது. சிறுவனின் தந்தை பதைப்புடன் ஓட அவரையும் சுடுகிறார்கள்.
மாப்பிள்ளை கதறியபடி வர அவரையும் சுடுகிறார்கள். மணப்பெண் ஓடிவர
துப்பாக்கி முனையால் ஓர் அடி அவளும் மயக்கமாகிறாள். அப்பெண் அமெரிக்க
தளபதியை பழிவாங்க குறுவாளுடன் செல்லும் காட்சிகள் பரிதாபத்தை
வரவழைக்கிறது. அதே தளபதியை கொள்ள வரும் மூவருக்கு உதவி செய்கிறாள்.
கடைசியில் மரணமடைகிறார்.

இடையில் அபுகிரைப் சித்திரவதைகள், கைதிகளை நிர்வாணமாக்கி நாயை ஏவி
விடும் காட்சிகள், அமெரிக்க நிருபரை கடத்தி தலையை சீவ முயலும் தீவிரவாதிகள்
இடம் மதகுரு ஒருவர் மீட்டு நிருபரை அனுப்புவது(உண்மைச்சம்பவம்னு நினைவு)
ஊரையே காலி செய்யும் காட்சிகள் போன்றவை மனதைப் பிசைகிறது. இது எந்த
மொழிப்படம் என்பது தெரியவில்லை. தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்தால்
இராக், அல்லது துருக்கியர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடியதில் படத்தின் பெயர் kurtlar vadisi என தெரிந்து கொண்டேன்.

------

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.

----------

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதல் பயணம். மகிழ்ச்சியாக உணர்கிறேன். சகோதரரின் திருமணத்திற்காக
அவசர பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவல். சந்திப்புகள்
இருந்தால் தெரியப்படுத்தவும். தொடர்பு கொள்ள 9944111050.

Monday, October 29, 2007

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?

ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு :)

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா?

Photo Sharing and Video Hosting at Photobucket

பொய் சொல்லாம சொல்லுடா...

Photo Sharing and Video Hosting at Photobucket

அடிங்ங்...

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்ப சொல்லு...

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ பொய்தான சொல்ற?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி:விகடன்

Wednesday, October 17, 2007

அவைகளை அப்படியே விட்டு விடுங்கள்



அதனால் யாருக்கொன்றும் தீங்கில்லை
அந்த "மற்றவர்"களால் ஒரு பயனுமில்லை
அப்பொழுதே விட்டிருக்கலாம்
நாளையும் விடப்போகலாம்
விடாமலும் போகலாம்
அவளோடு சேர்ந்திருந்திருக்கலாம்
வேறொருத்தியும் நயமாக கிடைக்கலாம்
நயமில்லாமலும் போகலாம்.
எதுவுமற்றும் யாராலும் இருக்க
முடியலாம்.
நம்பகத்தன்மை என்றுமே உங்களைச்
சார்ந்தே இருக்கலாம்.
இல்லாமல் போகும்போது
நீங்கள் இல்லாமலிருக்கலாம்
வாழ்க்கையில் ஏராளமான
"லாம்"கள் இருக்கின்றன.


வை

ளை


ப்

டி
யே

வி
ட்
டு

வி
டு
ங்

ள்.


நன்றி: முடியலத்துவம்.

Monday, September 17, 2007

பேரன்பு கொண்டவள்



பலநூறு ஆண்டுகள் வேர் விட்ட ஆலமரத்தின்
நிழலைப்போல உன் அன்பு என் மீது படர்ந்திருக்கிறது.
அங்கே நிழலைத்தவிர வேறெதுவும் கண்டதில்லை
இலையுதிராத மரத்தின் மடியினைப்போல எவ்விதமான
காலநிலையிலும் நிழல் பரப்பும் உன்னதம்.
புகமுடியாக் கானகத்தின் உயர்ந்த கிளையிலிருந்து
வெடித்தெழுந்த பஞ்சு ஒன்று தென்றலென என்மீது
அமர்ந்தது போல நம் உறவு.
கட்டமைத்த வார்த்தைகளுக்குள் சிக்காதது
எவ்வித அலங்காரமும் அற்ற வார்த்தைகளின்
வடிவம் அது.
காதல்
நட்பு
வரம்
மகிழ்ச்சி
துயரம்
பகிர்தல்
பிரிவு
போன்ற வழமையான வார்த்தைளைக் கொண்டு
சிறப்பிக்க முயன்ற நான் தோற்றுப்போய்
இறுதியாக கண்டெடுத்த வார்த்தை
ஆகப்பொருத்தமாய் நீயும் ஓர் தாயடி.

Tuesday, June 05, 2007

அரூப வெளிகளில் சுற்றித்திரியும் மோகினிகள்

என் நினைவுக்கூடங்களை
ஒவ்வொன்றாக தனிமையின்
வெளிகளுக்கு பிரயத்தனப்பட்டு
அனுப்பியும் எஞ்சிய புலன்களில்
ஒன்று விழித்திருந்தது
என்னையறியாமல்.

யாரோ ஒருத்தியின் வருகைக்காக
அது விழித்திருக்கக் கூடும்.

என்றாவது வருபவள்தான்.

அவளை
முன்
பின்
பார்த்ததில்லை.
குரல் மட்டுமே அறிந்திருந்தேன்

எவளொருத்தியின் முகமாவது
ஒட்ட வைத்து உருவகப்படுத்த
முயன்றும்
இவையாவும் எனக்குப் பொருந்துவன
அல்ல என எக்காளமிட்டுச்
சிரிப்பவள் இந்த அரூபக்காரி.
எனவே அப்படியப்படியே
தொடர்ந்தது எங்கள் உறவு.

வெக்கையில் கண்ணீர் சிந்தும்
மயானச்சுவர்கள் போல
கசிந்துருகி நின்றாள்.

என்னையும் அரூபவெளிக்குள்
அழைத்துச் செல்லும்
முயற்சியாக அவளின் மெல்லிய
விசும்பல்கள்.

எஞ்சிய ஒரு புலனும் அடங்க
உடல் விட்டு எழுந்தேன்.

வழக்கமான சிறு தீண்டலில்
மாயமானாள்.

அவளின் அடுத்த வருகைக்குள்
பொருந்தச் செய்வதாக
ஒரு முகம் தேட வேண்டும்.

எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!

Sunday, June 03, 2007

கவுஜையாக பின்தொடரும் ஒருவன்

சாலையில் நடந்து செல்கிறேன்
சாலை கோணலல்ல
என் நடை கோணலாகியதா?
பின் தொடர்பவர் எவரிடமாவது
கேட்க நினைத்து
வேண்டாம்
உன் நடை நேர் என அவசரமாக
ஒரு பதில் அதுவும் அவனேதான்.
தொடர்கிறான்...

மனித கூட்டத்தின் நடுவே சென்று
என் அவனை தொலைக்க வேண்டும்
சுயத்தையும் இருப்பையும் நித்தம்
கேள்விக்குள்ளாக்குபவன்.

சிலசமயம் காணாமல் போவான்

அவனை மறந்த ஒரு காலைப்பொழுது
எதிர்பட்ட ஒருத்தியின்
ஏளனப்புன்னகையில்தான்
உரைத்தது...

கீழ் குனிந்து இழுத்து மூடினேன்.
நினைவிலிறுத்திக் கொண்டே இருக்கிறான்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை

சிரைக்க முனையும்போது
ப்ளேடு வாங்க மறந்த ஞாபகம்.

தலைவாரும்போது கண்ணாடியில்
தெரியும் காதுமடல் சோப்பு நுரை

காலணிக்குள் கால்நுழைக்கையில்
மனம் செய்தே நுழைக்கிறேன்
கதவு திறந்து வெளிக்கிடுகையில்
கண்சிமிட்டி நுழைகிறான்

ஏண்ணே எனக்கு மட்டும் இந்த மாதிரி???

டேய் இதெல்லாம் வயசுக்கோளாருடா
எல்லாருக்கும் வர்றதுதான் ஏதோ உனக்கும் மட்டும்
வந்துட்டா மாதிரி கவுஜ வடிக்கிறயே.

காக்கா ஒரு எடத்துல உக்காராது
மனசு ஒரு எடத்துல நிக்காது

போக போக சரியாகிடும்டா.

ம்
அப்படின்ற...

Tuesday, April 17, 2007

எனக்குள் நான்...

தினமும் சந்திக்கும் நபர்தான்
தினமும் சிறிதளவேனும் புன்னகை சிந்துபவர்தான்
இன்று வினோதமாக...

தாயின் கரம்பற்றிய குழந்தை
தெருமுனையை தாண்டும் வரை திரும்பியபடி
பார்க்கிறது வினோதமாக....

இளைஞர்கள் சிரித்தபடி வருகிறார்கள்
என்னைக் கடந்தபின் அவர்களின்
சிரிப்புக்கு கருப்பொருளானேன்

பாவத்தையும் கழிவிரக்கத்தையும்
வெளிக்காட்டியபடி
என் வயதையோத்த வயசாளிகள்

பார்ப்பவர்களின் பேசுபொருளானேன்
நான் பேசாதிருந்தும்

அனைவரும் விலகுகிறார்கள்
எனக்குள் நான் பேச ஆரம்பித்ததும்...


சமீபத்தில் படித்த இந்த கவிதை கண நேரம் சிந்திக்க வைத்தது கவிதையின்
ஒவ்வொரு ஆழ்ந்து ரசித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் தனக்குள் பேச
ஆரம்பிக்கும்போது உலகம் அவனுக்கு அந்நியமாகிறது. கிட்டத்தட்ட தியானத்தை போன்றதொரு நிலை.

எழுதியவர் கண்டிப்பாக இப்புற உலகினை மௌனக்கண் கொண்டு பார்த்திருக்கிறார்
என்பது புலனாகிறது. எந்நேரமும் சலசலவென்று பேசும் மக்கள் கூட்டத்தில் இருந்து
விலகி மௌனம் காத்தலே ஒரு வித்தியாசம் என்றாகிப்போன இந்த உலகத்தில்
தனக்குள் ஒருவன் பேசினால் எப்படி இந்த சமூகம் பார்க்கும் என்பதை இயல்பாக
கவிதையில் வடித்திருக்கிறார். எதுவுமே மிகையாகிப்போனால் சலிப்பு தட்டி விடும்
நம் கவிஞர்கள் காதல், பெண், நிலா, மலர்கள், தேவதைகள், கனவுகள்
இதையெல்லாம் தாண்டி வெளிவந்து இயல்பான கவிதைகள் வடிக்க ஆர்வம்
காட்ட வேண்டும். அதற்கு முன் உதாரணமாக இக்கவிதையினை சொல்லலாம்.

பி.கு

இக்கவிதையினை வடித்தவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு துபாயில் ஒரு
எண்ணைக்கிணறு பரிசாக காத்திருக்கிறது.

Tuesday, March 27, 2007

ஆச்சரியங்கள்

ஆச்சரியப்பட வைக்கும் அழகு
என்றார்கள்!

ஆச்சரியத்தை தேக்கி வைக்கும்
முகமல்ல எனது.

கடந்து போகும்
ஜீவராசிகளில்
ஒருத்தி நீயெனவே
ஆச்சரியங்கள் கொள்ள
அவசியமில்லை.

நூல்கள் சில சொன்னது
அன்றாடங்களை மாற்றும்
வல்லமை காதலுக்குண்டென்று
எனக்குள் அந்த மாற்றங்கள்
எதுவும் நிகழவில்லை.
சலனமில்லாத குளம்
கல்லெறிந்தால் கண நேரத்தில்
சுயம் மீள்வேன்.

Saturday, January 20, 2007

Dialed List

அம்மா...
அவள்...
கையிருப்பை அறிய...
ஏனைய நண்பர்கள்
பின்னே
இம்மூன்று எண்களுமே
மேல் நிற்கும்
சுழற்றப்பட்ட எண்களாய்!

Tuesday, January 09, 2007

நகுலன் கவிதைகள்

நல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்
சினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக
விலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு
மட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்
போது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை
ஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.

Photobucket - Video and Image Hosting

பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில
கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்
போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.

"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது"


தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த
புரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்
தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

இனி அவரின் கவிதைகள்!

எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!


என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!


எனக்கு
யாருமில்லை
நான்
கூட!


யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!


நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!


உன்னையன்றி
உனக்கு வெறு யாருண்டு?


ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!


முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!


வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!



இதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான
அர்த்தங்கள் கொண்டவை.

நன்றி: ஆனந்த விகடன்

Sunday, November 05, 2006

என் நண்பனுடன் ஒரு நாள்.

சென்ற வார விடுமறை நாளில் என் பள்ளித்தோழனின்
அறைக்கு சென்றிருந்தேன். பத்தாம் வகுப்போடு
நின்றுவிட்டதுடன் விவசாயத்தை கவனித்துக்
கொண்டிருந்தவனை இங்கே பார்சல் பண்ணிட்டாங்க.
கொத்தனாராக வேலை பார்க்கிறான். மிக நீண்ட
நாட்களாக அழைத்துக் கொண்டே இருந்தான்.இங்க
வாடா மாப்ள,என் ரூமுக்கு எல்லாம் வரமாட்டியான்னு.
அதனால ஒரு விடுமுறை நாளை அவனுக்காக ஒதுக்கி
அவங்கூடவே இருந்தேன். அது ஒரு கேம்ப் நூத்துக்கனக்கான
நபர்கள் ஒரு வளாகத்திற்கும் தங்கியிருந்தார்கள் ஒரே
கம்பெனியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மாநிலத்தவர்கள்,
நாட்டவர்கள் வித்யாசமான நாளாகவும் அதே சமயம்
அவர்களின் கொடுமையான வாழ்க்கையையும் பார்த்தேன்.

நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் அவர்களின்
விடுதி. பேரமைதியாக இருந்தது ரொம்ப நேரம்
நானும் அவனும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அவன் பேச நான் கேட்க நேரம் போனதே தெரியலை.
எல்லாம் பேசி முடிக்கையில் எனக்குள்ளே ஒரு சோகம்.
அங்க நான் பார்த்தது அவனுடன் பேசியது எல்லாம்
சேர்ந்து கவிதையா எழுதுன்னு ஒருத்தன் உள்ள இருந்து
இம்சை பண்ணதினால உங்களுக்கு இந்த அவஸ்தைய
படிக்கணும்னு எழுதி இருக்கு. எழுதி முடிச்சிட்டு
என்ன தலைப்பு வைக்கலாம்ணு யோசிச்சேன் ஒண்ணும்
புரியல. அதனால வாசிக்கிற நீங்களே இதுக்கு
ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்க.

பாலையும் கடலாகும் (கண்ணீரால்)

கனவுகளுடனே வந்தோம் அதே
கனவுகளுடனே செல்கிறோம்
திரும்ப எங்களை இங்கனுப்ப ஒரு
காரணம் காத்திருப்பதை அறியாமல்.

தங்கையின் திருமணத்தை முடித்து
தனக்கான வழிதேடும்போது அம்மாவின்
மரணம் மறுபடியும் இங்கனுப்பும்.

வீட்டுத் திருமணங்களை வீடியோவில் மட்டுமே
பார்க்கும் பாக்கியமும், முதல் குழந்தையின்
அழுகையை தந்திக்கம்பியில் மட்டுமே கேட்கும்
அவலமும் எங்கள் வரம்.

பின்னிரவு விசும்பல்கள் பெருமூச்சோடு மடியும்
பின்வரும் காலங்கள் சுகம் மேலிட்டதாய் அமையும்
என்ற சுயதேற்றுதலை தினமும் சந்திக்கிறேன்.

என் போன்றவர்களின் கண்களில் எதை தேடுகிறேன்?
எதை காணுகின்றேன்?

முற்பருவ இளைஞன் முகத்தில் பருக்களோடு
காதலியை பிரிந்த வலியும்.

இரண்டு மாத விடுமுறைத்தழுவலின் மிச்சமும்
முறுவலின் சொச்சமுமாக அதிகாலை நித்திரையில்
தலையணையையணைக்கும் பக்கத்து
படுக்கைக்காரர்.

வாரயிறுதியில் நகரத்தில் "சுகங்கண்டு" திரும்பும்
இலவசமாக அறிவுரைகளை தெளித்த
அறைப்பெரியவரின் கண்களில் தெரியும் காமம்.

வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...

இன்றைய வேலையிறுதியின் கோடியில் முதுகறுக்கும்
வெய்யிலில்....

துணி வெளுக்கும்போது உடையில் தெரியும்
உப்புக் கோடுகளில்...

கழிவரைக்கு காத்திருக்கும்போது அவசரத்தில் பிடறி
மயிர் சிலிர்க்கையில்

எங்கும்....

எங்கும்...

எங்கும்...



என்றாலும்.

விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.

நாங்களும் வாழ்கிறோம்.