எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, April 06, 2016

உலக சுகாதார தினம்

காலையிலேயே யாரோ கதவு தட்டினார்கள்.

வீட்டில் கதவு தட்டப்படுவது இது இரண்டாம் முறை. முதல்முறையானது நான் சாவியை தொலைத்தபின் தட்டியதுதான். எல்லோரும் அவரவர்க்கான தனி சாவிகள் உண்டு. ”புக்கு விக்கிறேன்” ”பூ விக்கிறேன்” என்றெல்லாம் கதவைத் தட்டி விற்பனை செய்யும் தொழில் கிடையாது. காரணமில்லாமல் தட்டி தொந்தரவு தந்தால் போலீசுக்கு சொல்லிவிடுவார்கள். விருந்து வந்து தட்ட இது என்ன ஊரா? யாருமே இருப்பதும் தெரியாது செல்வதும் தெரியாது. கண்டிப்பாக வேறு யாரோவாகதான் இருக்க வேண்டும். 

கதவு திறந்தேன். நல்ல ஆங்கிலத்தில் ஒருவர் காலை வணக்கம் சொன்னார். “தேசிய சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து” வருவதாக சொல்லி அடையாள அட்டையைக் காட்டினார். மெல்லிய தேக சீனர்.

“கொசு இருக்கிறதா என சோதனை செய்ய வந்திருக்கிறார்.” என புரிந்துகொண்டேன். வழக்கமாக நடப்பதுதான்.

இங்கு திடீரென வீட்டுக்குள் வந்து சோதனை செய்வார்கள். எங்காவது நீர் தேங்கி நின்றால் சுத்தம் செய்ய சொல்வார்கள். வீட்டில் எங்குமே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள சொல்வார்கள் கொசு ஒன்றைப் பார்த்தாலும் அபராதம் கட்ட சொல்லுவார்கள். குறைந்த அபராதத்தொகை 200 வெள்ளிகள்.

என் வீடானது இரு அறைகளில் பேச்சிலர்களுடன் பகிர்ந்த வீடு. ஓரளவு சுத்தம் பேணி வந்தோம். 

உள்ளே வந்தார் கிச்சன், கழிவறைப்பக்கம் சென்று பார்த்தார். டார்ச் அடித்துப்பார்த்தார். ஒன்றும் இல்லை. தரை துடைக்கும் ப்ளாஸ்டிக் வாலியில் முந்தைய தினம் துடைத்த அழுக்குத்தண்ணீர் இருந்ததை பார்த்து விட்டார்.

“எத்தனை நாளாக இது இங்கிருக்கிறது? என்றார்”

இரவு மாப் போட்டு விட்டு அப்படியே இருக்கிறது. இதோ கீழே ஊற்றி விடுகிறேன் என்றேன்.

இப்படி தேங்கும் அழுக்கு நீரில்தான் கொசுக்கள் முட்டை இடும். இது கொசு பரவும் காலம். மிக அபாயகரமான டெங்கி கொசு பரவுவதாகவும், இந்த ஏரியாவில் “ரெட்  அலர்ட் ஸோன்” செய்திருப்பதாக சொன்னார்.

சென்ற வாரம் 86 வயது மூதாட்டி ஒருவர் டெங்கி காய்ச்சலால் இறந்துவிட்டார். அதை முன்னிட்டு   இப்பகுதியில் எல்லா வீடுகளிலும் சோதனை செய்து எச்சரிக்கை செய்து வருவதாக சொன்னார்.

86 வயது மூதாட்டி இருந்தென்ன போயென்ன என தோன்றினாலும் உயிருக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

இதே அதிகாரியை சென்ற வாரம் காலையில் பார்த்திருந்தேன். கூடவே மருந்து தெளிக்கும் இயந்திரத்துடன் ஒரு வேலையாள் இருந்தார். சந்தேகப்படும் இடங்கள் அனைத்திலும் மருந்து தெளித்தபடி வந்தார் அவர். என் வீட்டுக்கு அருகில் கம்பி வேலி இடப்பட்டிருந்த வெற்றிடம் ஒன்று உண்டு. வேலிக்கு உள்ளே பெயிண்ட் பக்கெட் ஒன்று நெடுநாளாக அதே இடத்தில் இருந்தது போல. ஒருவேளை அதில் தண்ணீர் தேங்கியிருக்கும் என சந்தேகித்தார் போல. உள்ளே போக முடியவில்லை. நின்ற இடத்தில் இருந்தே யாருக்கோ போன் அடித்தார். ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ஆள் வந்து கதவு திறந்து விட்டார். உள்ளே நுழைந்து வாலியை நோட்டமிட்டார். முழுக்க மழை நீர் தேங்கி இருந்தது. கதவு திறந்தவரிடம் அதை சுட்டிக்காட்டி எதோ பேசினார். நாலைந்து போட்டோ எடுத்தார். பின் வாலியை சுற்றி மருந்தடித்துவிட்டு கீழே தண்ணீரை ஊற்றி வாலியை கவிழ்த்துவிட்டு ஸ்பாட் பைன் அடித்து விட்டுச் சென்றார்.

பூட்டியிருக்கிறது என சோம்பல் கொள்ளாமல் போன் அடித்து வரவழைத்து சோதனை செய்தது என் கற்பனைக்கும் எட்டாத செயலாக இருந்தது. 

நன்றி கூறி விட்டு விடை பெறும் முன்பு “ கீழே ஒரு புறா இறந்து கிடக்கிறதே, அதற்கு நீங்கள்தான் அரிசி போட்டீர்களா?” என வினவினார்.

”நம்மள மட்டும் எப்படித்தான் இவ்ளோ சுலபமா கண்டுப்டிக்கறாய்ங்களோ” என நினைத்துக்கொண்டேன். அந்த புறா சீக்கு வந்தது போல நகர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. நல்ல வெயில் வேறு. கைப்பிடி அரிசியும் கொஞ்சம் தண்ணீரும் கொண்டுபோய் படியோரம் நிழலான இடத்தில் விட்டு வந்தேன். பிழைக்குமா, அரிசியை தின்னுமா என்றெல்லாம் தெரியவில்லை. பார்த்தும் காணாதது  போல செல்லக்கூடாதல்லவா. ஊரில் என்றால் பறவைகளுக்கென்று நுரோபின் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து வைத்தால் சரியாகிவிடும். இந்தப்புறாவுக்கு முற்றிய நிலை. அதுவுமில்லாமல் மாத்திரைக்கு எங்கு அலைவது. இது பற்றி தனியே கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் உள்ளது.

இதுக்கு தனியா அபராதம் கட்ட சொல்வார்களோ என்று ஒரு நொடி கலங்கிப்போனேன். புறாவுக்கு உணவளித்தல் கூட இங்கு குற்றம்தான்.

“எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டு  விட்டேன்?”

உன் வீட்டு வாசல்படிலதான் இருந்தது. வேறு யாராவது போட முடியாதல்லவா? மேலும் இந்தியர்கள் இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவயப்படும் மனதும் கொண்டவர்கள். 
சும்மாதான் கேட்டேன். நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். இதற்கு அபராதம் போடுவது என் வேலையல்ல. பயப்பட வேண்டாம் என்றார். மேலும் எச்சரிக்கையுடன் உணவிடுமாறு கேட்டுக்கொண்டார்.அப்பாடா பிரச்சினையில்லை. கீழே சென்று இருவருமாக அப்புறாவை எடுத்து குப்பையில் வீசினோம்.

மறுபடி நன்றி கூறி விடைபெற்றார். இவர் அரசு அதிகாரிதானா என்று கூட சந்தேகம். ஊரில் என்றால் வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க வரும் பெண் அதிகாரிகள் செய்யும் அழிச்சாட்டியங்களை ஒரு நொடி நினைத்துக்கொண்டேன்.

இந்த சின்ன கொசுவுக்காக இந்த அரசாங்கம் எத்தனை தூரம் அக்கறை எடுத்துக்கொள்கிறது என ஆச்சரியமளித்தது. இணையத்தில் தேடினால் மேலும் பல ஆச்சரியங்கள் கிடைத்தன.

நாடு முழுவதும் பத்தாயிரம் தன்னார்வலர்கள் இந்த வருடம் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் டெங்கினால் ஏற்படும் பிரச்சினைகள், சரிசெய்வது எப்படி, கொசு உற்பத்தி ஆகாமல் தடுப்பது, என பயிற்சியளிக்கப்பட்டவர்கள். இது பருவமே இல்லாத நாடு. கடும் வெயிலும், கடுமையான மழை பெய்யும் தீவு. எவ்வளவுதான் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்க விடுவதில்லை. மழை நின்ற அரைமணி நேரத்தில் தரை பளிச்சென்று இருக்கும். எப்படித்தான் பார்த்துக்கொண்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் நீர் தேங்குமல்லவா? அதைக் கண்டறிவதுதான் தன்னார்வலர்களின் வேலை. 

எத்தனைதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இந்த கொசுக்களை மட்டும் ஒழிக்கவே முடிவதில்லை. முன்பு Den-1 என்ற வைரஸ் முன்பு டெங்கி காய்ச்சலுக்கு காரணமாக இருந்தது என கண்டறிந்தனர். அதோடு இப்போது Den-2, Den-3, Den-4  என வைரஸ் வகைகள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். இவையனைத்துமே கொசு மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல்கள். சரியாக கவனம் செலுத்தி சிகிச்சை எடுக்காவிடில் மரணம் நிச்சயம். இவ்வகை கொசுபெருக்கத்துக்கு காரணம் எல்-நினோ பருவ மாற்றத்தையும் காரணம் என சந்தேகிக்கின்றனர். பொதுவாக ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் வரை இவ்வகை கொசுக்கள் பெருகுவதாக சொல்கின்றனர். சிங்கப்பூரின் இக்குறிப்பிட்ட மாதங்களில் வெயில் அதிகரித்தும் மழை குறைந்தும் காணப்படும். கொசு பெருக வெயில் காலம்தான் அதிகம் உதவுமாம். அதிகபட்சமாக 2013ஆம் ஆண்டில்  22170 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அரசாங்கப்பதிவு சொல்கிறது. இந்த வருடம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரித்துள்ளது.அரசாங்கங்கள்தான் இப்படி புலம்புகின்றனவே தவிர நான் இந்த நான்கு வருடங்களில் அதிகபட்சமாக ஒரு பத்து கொசுவை பார்த்திருக்கிறேன். ஊரில் என்றால் பத்து நிமிடத்தில் இத்தனை கொசுக்களை ஒரே ஆள் கொன்றிருப்பார். இங்கு குறைந்த அளவு கொசுக்களே இருக்கின்றன. ஆனால் அவைதான் பெரிய பாதிப்பை ஏறுபடுத்தும் வகைகள் போல. ஊரில் உள்ளதெல்லாம் சாதா கொசு. 

இந்த வாரத்தில் மட்டும் 308 பேர் டெங்கி காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவம் முன்னேறிய பொருளாதார தன்னிறைவு அடைந்த நாட்டிலேயே இவ்வளவு பாதிப்பு என்றால் இந்தியா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை நினைத்துப் பார்த்தால் பேரச்சமாக இருக்கிறது.

இவ்வளவு அழிவையும் செய்வது சின்னஞ்சிறு கொசுதான். சாதாரண காய்ச்சல் என்று விட்டுவிடாதீர்கள். மருத்துவரிடம் எல்லாவற்றையும் தெரிவித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எங்குமே நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உயிர் வாழ உயிர் மிக முக்கியம் மக்களே.

சென்ற வாரம் எழுதியது. இன்று ”உலக சுகாதார தினம்” என்பதால் பகிர்கிறேன். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் நம் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மைதான்.