எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, December 25, 2007

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன்

கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்
சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்
வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை
ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டு பார்க்க விரும்பியவர் நாம்,
நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை
அண்டாவில் விட்டு நீர் சேர்த்து கலக்கி அரைகிளாஸ்
பத்து ரூபாய் எனப் பிரசாதம் வினியோகித்தவர் நாம்,
பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம்,
நடிகைக்கு தீண்டல் தாண்டிப்போனால்
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம்,
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின்
பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்,
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா? மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாலுடன் பிறந்த வாயப்பன் என்பதா?நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இத்தலைப்பே கட்டியம் கூறும்
இக்கட்டுரைத் தொகுப்பின் சாரத்தை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில்
முதன்மை இடம் தரும் நாஞ்சில் நாடனின் பல்வேறு தலைப்பிலான
கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இதை நான் எழுதும்போது எனக்கும்
குற்றவுணர்ச்சியே மேலொங்கி நிற்கிறது. சத்தியமாக இந்நூலின் அறிமுக
பதிவாகவே படிப்பவர்கள் உணர வேண்டும் என்ற முனைப்பிலேதான்
ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து எழுத வைக்கிறது என்னை. அத்தனை
வீரியமுள்ள வீச்சு நாஞ்சில் நாடனுக்கு. ஆகவே இதை சிறுவனின்
மழைக்கால குதூகலத்தை போலவே எண்ணி வாசிக்கலாம் என்றுமே
இப்பதிவு இந்நூலின் விமர்சனமாக அமைந்து விடாது என்பதை உணர்வேன்.

இத்தனை நாள் வாழ்ந்தும் இதுவரை வாய்க்கப்பெற்ற அனுபவங்களும்
எனக்கு கற்றுத் தந்தவை யாவும் பொய்யென உணர்த்தி பயங்கொள்ள வைக்கும்
கட்டுரைகள். இக்கட்டுரை வணிக ரீதியிலான பத்திரிக்கையிலும் வரும் காலம்
இதுவாக இருந்தால் கண்டிப்பாக நம் சமூகத்தின் நிலை இன்று வேறாகயிருக்கும்.
மக்களை போகத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்கும் வணிக பருவ இதழ்களுக்கு மத்தியில் வாசிப்பனுபவம் உள்ளவன் இதை படிக்கும்போது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவான். அதைப்போலதான் நானும். ஒவ்வொருமுறை புத்தகத்தை பிரிக்கும்போதும்
குற்றம் செய்தவன் போலவே முனை மடித்து உறங்குகிறேன்.

கண்மணி குணசேகரனின் சிறுகதைகளை படித்தபோது திகைத்து போனேன்.
நம்மக்கள் சிறுகதை என்ற வடிவத்தை பேப்பர்களில் ஒருபக்க, அரை, முக்கால்,
ஒன்றரை பக்கங்களால எச்சில் படுத்தி வாசகர்களின் மீது எறிகிறார்கள்
என்று தோன்றியது.

மேற்கோல் காட்டப்பட்ட வரிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் நிறைய.
வெந்ததை தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கை மத்தியில் வாழும் மக்கள்
கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏறி மிதித்து வாழலாம். அப்படிப்பட்ட
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாற்று சிந்தனைகளுக்கும்
முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கும் காலம் வரும்போது எல்லாக்கதவுகளும் திறக்கும்.

படைப்பாளியின் பெயரைக் கொண்டே மொத்த படைப்பையும் எடைபோடும்
மனிதர்கள் இங்கு அனேகம். புறந்தள்ளுவதற்கும், உதாசீனப்படுத்தவும் நிறைய
காரணங்களை மடி மீதே வைத்து அலைகிறோம். தமிழில் ஏராளமான
இலக்கியவாதிகள் போலவே சர்ச்சைகளும் ஏராளம்.

தமிழ் வார்த்தைகளுக்கு அரசியல் பார்வை கொண்டு ஒதுக்கப்பட்டவையாக சில
வார்த்தைகளை கூறலாம். வழக்கொழிந்து போய்விட்ட காரணத்தினாலேயே அவை
கெட்ட வார்த்தைகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் அதிர்வுகளை
ஏற்படுத்த வேண்டி சேர்ப்பது அல்ல. வலியை பதிவிக்க சொந்த மொழியில்
உள்ள வார்த்தைகளை பயன்படுத்தவே இயலாத சூழல் நம் தமிழ்ச்சூழல் மட்டுமே.
அவ்வகையில் மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் என்ற கட்டுரையினை
தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

"மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கட்டு போகாத குண்டு மாங்கா"
என்றெழுதும் கவிச்சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின்
வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும்,
கனிமொழிக்கும் உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும்
கவிதை எழுத பாடம் நடத்துகிறார்கள்.


கட்டுரைத் தொகுப்பு முழுவதும் எள்ளல் கலந்த கோப எழுத்துக்கள் நிறைந்து
காணப்படுகிறது ஒன்றையும் விடாது வாசிக்க வேண்டியவை. இலக்கிய அறிமுக
கொண்டவர், இல்லாதார் எவர் படைப்பையும் மிக நேர்மையாகவும் நேர்த்தியுடனும்
விமர்சித்திருக்கிறது. எல்லா இலக்கிய சர்ச்சைகளிலும் பங்கு கொண்டவராயினும்
எதிலும் நடுநிலையாக நின்று எவர்க்கும் பகையாளி என்றில்லாமல் இருக்கும்
ஒரே எழுத்தாளர்.

நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கட்டுரையில் இடஒதுக்கீடு
பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் மிகச்சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்.
"காலில் செருப்பின்றி நடப்பவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டியிட்டு
வெல்ல வேண்டியுள்ளது. ஸ்பார்டகஸ் போல. எத்தனை நியாயமற்றததொரு போர்?
வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதப்படாமல் பிரச்சினையின் ஆழம் தொடும்
அற்புதமான எழுத்து.

வாசச்சமையலும் ஊசக்கறியும் என்ற கட்டுரையில் நாஞ்சில் நாட்டு சமையல்
பற்றி மிக விரிவானதோர் கட்டுரை. வாசிக்கும்போதே பசியெடுக்கும் விதம்
அனுபவித்து எழுதியது. பசியுணர்ந்தவனுக்கு மட்டுமே ருசியின் அருமை தெரியும்
என்பது போல. தொலைக்காட்சியிலோ, முப்பது நாள் முப்பது கறி போன்ற
புத்தகங்களில் உள்ளது போல அல்ல.

நாவலாசிரியனுக்கு கட்டுரை, விமர்சன கட்டுரை என்பது தேவையில்லாத வேலை
என்கிறார்கள். பிறக்கும்போதே நாவலாசிரியனாக பிறக்கவில்லை. நாஞ்சில்
நாடனை பொருத்தவரை கட்டுரை வாசிப்பு என்பது சிறுகதை வாசிப்புக்கு
இணையான சுகத்தை தரவேண்டும். விஷயஞானம் உள்ள எவரும் எதையும்
எழுதலாம் என்கிறார். இவர் வைக்கும் வாதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல்
இல்லை மாறாக முனை மடிக்காமல் வாசிக்க தூண்டுகிறது. இலக்கிய நண்பர்களுடன்
அமர்வுகள் குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தாலும் பிற எழுத்தாளர்கள்
பற்றிய தெரிவு இல்லாததால் சலிக்க வைக்கிறது. தீவிர வாசிப்பு அனுபவம்
உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

கட்டுரை புத்தகங்கள் படிப்பதிலே இதுவரை சுணக்கம் இருந்தது. மாற்றிக்
கொள்ள வேண்டிய கருத்து இது.

எந்த வகையிலும் இப்பதிவு புத்தகத்தின் விமர்சனமாக ஆகாது. தொகுப்பின்
மொத்த சுவையையும் ஒரே பதிவில் கொண்டுவரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

Saturday, December 15, 2007

ரகசியத் தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்.


நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
எனக்கென்று எந்த கவலைகளும் இல்லாவிட்டாலும் கூட நீண்ட நாள் இந்த
தவறான புரிதல் சங்கடத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் போல
தோன்றியது. எங்கோ ஓர் இடத்தில் நான் அவனை கவர்ந்திருக்கலாம் ஆனால்
அந்த கணம் அவனால் மறக்க முடியாததாகவும் நான் நினைத்தேயிராத பல
மாற்றங்களை தரும் என்று நினைக்கவில்லை. வாழ்க்கையில் நான் எவற்றுக்கும்
கவலைப்பட்டதே இல்லை. எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சில
மணித்துளிகளில் இயல்புக்கு திரும்பி விடுவதை என்னை அறிந்த நாள் முதல்
எனக்கு தெரியும். சில சமயங்களின் இதை வரமாக சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.
சிலர் ஜடம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் நான்
நானாகவே இருந்து வருவதில் எனக்கு கர்வம் அதிகம். ஆனால் நேற்று நடந்த
சம்பவங்களும் முன் நடந்த சிறு சிறு நிகழ்வுகளும் என்னை மிகுந்த மன
உளைச்சலுக்கு தள்ளின. முன்னெப்போதும் இதுபோன்ற அவஸ்தை இருந்ததில்லை.

அவனை அலுவலகம் சேர்ந்த நாள் அன்றே கவனித்தேன். சிறு சிறு வேலைகளிலும்
நேர்த்தி தெரிந்தது. நட்பான முகம். கீழ் பணிபுரிபவர்களிடம் சாத்வீகமான முறையில்
பேசி வேலை வாங்கும் திறமை எல்லாம் அவனை மிகுந்த திறமையுள்ளவனாக
காட்டின. பாசாங்கில்லாத நேசமுகம் என்று முதல் சந்திப்பிலேயே உறுதி செய்து
கொண்டேன்.

எப்படி எங்களுக்குள் நட்பு ஆரம்பித்தது என்று நினைவில்லை. அதேபோல
எப்போது அவன் என்னை தன் துணை என்று மற்றவர்களிடம் கூற ஆரம்பித்தான்
என்றும் நினைவில்லை. அது எனக்கு தெரிய வந்தபோது சிறிதாக அதிர்ச்சி
தோன்றி மறைந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொல்லக்கேட்டவர்கள்
வந்து என்னிடம் சொன்னவர்களின் அறிவுரையாக "அவனிடம் பழகாதே அவன்
ஒரு மாதிரி" என்று லேசாக எச்சரித்தார்கள். என் அலுவலகத்தோழி கூட
என்னை மாறுகண் கொண்டு கண்ணடிப்பதை எவ்விதத்தில் சேர்ப்பது என்று
குழம்பிப்போனேன்.

அவனே என்னிடம் நேரில் வந்து சொல்லும்போது பதிலாக என்ன தருவது
என்பதை யோசித்தும் இருள் கவிழ்ந்த திரைகளே முன் தோன்றின. அதிக
எதிர்பார்ப்புகள்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம். நட்பைத்தவிர
எவ்விதத்திலும் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதேபோல அவன்
என்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்று புரியவில்லை.

எனக்கு அவனிடத்தில் பிடித்ததாக சில காரணங்கள் இருந்தன. அடர்ந்த மிருதுவான
படிய வாரிய கேசம், கடக்கும்போது வீசும் மெல்லிய நறுமணம். எல்லா செய்கையிலும்
தான் ஒரு நேர்த்தியாளன் ஒரு தேர்ந்த மனையாள் தன் கணவன் தேவையை முன்
கூட்டியே அறியும் வல்லமை பெற்றவள் போல முகபாவங்களை வைத்தே
வார்த்தைகளை அறியும் சக்தி அவனிடம் இருந்தது. அவனிருக்கும் இடத்தில் நிறைய
பேச்சுகள் இருக்காது. வந்த சிலநாட்களில் அவனிடமிருந்து பலரும்
இப்பயிற்சியை பெற்றிருந்தனர்.

என்னை என்னையன்றி யார் பார்த்துக்கொள்ள முடியும் என்ற வார்த்தையினை
தத்துவார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு பலரிடம் பெருமையடித்துள்ளேன்.
அவ்வெண்ணத்தை தகர்த்தெறிவது போல நான் காய்ச்சலில் வீழ்ந்த நான்கு நாட்களில்
வீட்டுக்கே வந்து அத்தனை உதவிகள் செய்தபோதுதான் நட்பையும் மீறிய
ஏதோவொன்று வந்தது. நன்றி கூறவில்லை.

அதன்பிறகு எங்கள் நட்பு பலம்பெற்றது. எங்கு செல்கினும் துணை அவனே என்றாகிப்
போனது. பெரும்பாலும் சாப்பிடவோ, சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்லவோ, ஆடை
வாங்கவோ என சென்றது. இதற்கிடையில் அலுவலகத்திலும், நண்பர்களுமே கூட
அவனே சொன்னதாக சொன்ன தகவல்கள்தான் என் அத்தனை ஏமாற்றங்களுக்கும்
காரணம். இது நிகழக்கூடிய ஒன்றாக நான் கற்பனை செய்யவில்லை. ஆனால் பிறர்
எச்சரித்ததனை கவனமெடுத்திருக்கலாம்.

பார்களுக்கு சென்று மதுவருந்துவதில் எனக்கு உடன்பாடில்லை தவிர ராப் இசை
ஒலிக்க பாலின பேதமின்றி ஆடும் ஆட்டம் மிகுந்த தலைவலியை கொடுப்பதாகவும்
மூன்றாவது முறை சென்ற போது உணர்ந்தேன். ஆகவே அவனை வீட்டிற்கு
அழைத்தேன். மிக நிறைய பேசினோம் என்பதை விட அதிகமாக குடித்தோம்
என்பதுதான் சரி. மிதமிஞ்சிய போதையில் உன் நட்பு எனக்கு சமீப கால
சந்தோஷங்களில் ஒன்று என்றான். பிரியும்போது என் உதடுகளில்
அழுந்த முத்தமிட்டான்.அன்றே எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது. இவ்வித உறவில் தவறோ, சரியோ என்ற
விவாதத்தில் போகாமல் இதை நான் விரும்பவில்லை என்பதை அவனிடம் நான்
மிகுந்த கவனத்தோடு சொல்லவேண்டும். இதில் பரிகாசங்களுடனான வார்த்தைகள்
வந்து விழுந்து விடக்கூடாது என்று எனக்குள்ளே பல குறிப்புகள் எடுக்க துவங்கினேன்.
பிறர் நிராகரிப்பின் வலியைப்போல என்னுடைய விளக்கமும் அவனுக்கு அமைந்து
விடக்கூடாது என்பதை அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொண்டேன். பழையபடியிலான
நட்பை தொடரமுடியும் என்ற குழந்தைத்தனமான நம்பிக்கை மீது இப்போது எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருநாள் அவனுடன் காபி சாப்பிடும்போது முத்தத்தை பற்றியும் அவன் தவறான
புரிதலைப் பற்றியும் மனக்குறிப்புகளின்படி வார்த்தைகளாக்கிக் கொண்டிருந்தேன்.
திடீரென எழுந்தவன் காபியை முகத்தில் எறிந்து விட்டு கெட்ட வார்த்தையொன்றை
உதிர்த்து விட்டுச்சென்றான். அவனின் ஏமாற்ற முகத்தை அன்று காண நேர்ந்தது.

அரசு உத்தியோகத்திற்காக மனுக்கள் எழுதிப்போட்டு வீட்டிலிருந்த காலம் அது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான சாலைவசதியை சிரமேற்படுத்தி
செய்துகொண்டிருந்தார் கனத்த முதலீடு செய்த எம்.எல்.ஏ. சாக்குப்பைகளும், டயர்
கால்களுமாக பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ரோடு ரோலரில் தார் ஒட்டிவிடாமல்
இருக்க அதன் மீது தண்ணீரை ஊற்றியபடி வந்துகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.
அவள் உடலுக்கு சற்றும் பொருந்தவில்லை அந்த புடவை. வேலையின் காரணமாக
உடல் கட்டித்துப் போயிருக்கலாம். கவனமின்றி பள்ளி நண்பனுடன் கடக்கையில்...

சேகர் அது நம்ம கூட படிச்ச வேலாயுதம் மாதிரி இல்ல? என்றேன். சேகர் எதையும்
கவனிக்காதது போல நடந்து கொண்டிருந்தான். அவனிடம் கேட்கவில்லை என்பது
போல முகத்தை எங்கோ செலுத்தி இருப்பதை கவனித்து விட்டு மீண்டும் அந்த
சேலைப்பெண்ணை பார்த்தேன்.

"கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அது வேலாயுதம்தான். என்னைப் பார்த்த
அவள் கண்களில் என்னால் உணர முடிந்தது. அவனின் கண்கள் மிக விசேஷமானவை
எதையோ எதிர்பார்க்கும் அவை. ஒரே வித்தியாசம் அவன் கண்கள் அவள் கண்களாகி
எனக்கு அந்நியப்படுத்தியது. நான், வாத்தியார் உட்பட ஏகப்பட்ட கிண்டல்கள்,
கேலிகளால் ஒன்பதாவதோடு நின்று போனான். பிறகு இப்போதுதான்
சேலை கட்டி பார்க்கிறேன்.

"தண்ணிய ஊத்துடா அங்க என்ன அவன மொறச்சி பாத்துகிட்டு இருக்க? அவன்
என்ன ஒம்மாமனா? என்றபடி அவளை ஏசினான் எம்.எல்.ஏ.

ரோலர் சத்ததையும் மீறி தட தடவென சிரித்தனர்.

திடுக்கிட்டவள் வெடுக்கென்று கழுத்தை வெட்டி இழுத்து "ம்ஹீம்" என்ற முனகலோடு
தண்ணீரை ரோலரில் ஊற்ற ஆரம்பித்தாள்.

எதற்கு இப்போது வேலாயுதம் முகம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
காபித்தண்ணீர் முகத்தில் பிசுபிசுத்து என் முகம் மிகவும் விகாரமாகி விட்டதைப்
போல உணர்ந்தேன் துடைக்க மனமின்றி.

சர்வேசர் போட்டிக்காக

Friday, December 14, 2007

நீயா? நானா?

நம்ம பய ஒருத்தன் தினமும் போன் பண்ணி அரை மணி நேரமாச்சும்
பேசாம இருக்க மாட்டான். திடீர்னு ஒரு மூணு நாள் போன் பண்ணல.
எங்கிட்டாச்சும் எக்குதப்பா பேசி போலீஸ்ல மாட்டிகிட்டானா. இல்ல
ஒரேடியா பார்சல் பண்ணிட்டாங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னு ஒரு
நண்பனா ஆர்வம். அதனால ஆபிஸ்கு போன போட்டேன்.

ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?

விச் கோபிநாத் யூ வாண்ட் சார்!

ம்ம்... ஜஸ்டிஸ் கோபிநாத். எப்ப போன் பண்ணாலும் இவனுங்களே போன்
அட்டெண்ட் பண்றானுங்க. இந்த அரபுநாட்டுல போன் அட்டெண் பண்றதுக்குன்னே
பிறந்தவங்கன்னு பேரெடுத்த பிலிப்பைன்காரிகள போடாம ஏன் இவனுங்கள
போடறாங்கன்னு தெரில. அதுசரி நம்ம நண்பன் வேல செய்ற கம்பெனி
அது எப்படி உருப்படும்.

அவர் மூணு நாளா சிக் லீவ்ல இருக்கார்னு பதில் வந்தது.

படுபாவி உடம்பு சரியில்லன்னு போன் பண்ணி சொன்னா என்னவாம்னு
ஸ்ட்ரெய்ட்டா துரைக்கே போன் பண்ணேன்.

தம்பி: என்னப்பா உடம்பு சரியில்லயாமே? எனக்கு உடம்பு சரியில்லன்னு போன்
சொல்றதுக்கு என்ன?

கோபி: "ஆமாண்டா எனக்கு உடம்பு சரியில்லன்னு நானே உங்களுக்கு
போன் பண்ணி சொல்லணுமா?"

தம்பி: "ஏன் அதுக்கு வேற யாராச்சும் ஆள் வெச்சிருக்கியா?தமிழ்மணத்துல அதிக
நேரம் குடியிருக்காதன்னு சொன்னா கேட்டாதான! இப்ப பாரு உனக்கு
காய்ச்சல் வந்துடுச்சி.

கோ: இப்பல்லாம் நான் தமிழ்மணம் அதிகமா படிக்கறதுல்ல.

த: ஏன் சாமி,? நிறைய இலக்கிய கட்டுரைகள் வர்றதுல்லன்னு உனக்கும்
வருத்தமா?

கோ: அட அதுல்லப்பா மேட்டரு. முதல்ல எல்லாம் தரமான மொக்கைப்பதிவர்கள்
இருந்ததுனாலயும், சுவாரசியமான பதிவுகள் நிறைய வந்துகிட்டு இருந்ததினாலயும்
தமிழ்மணம் நல்லா இருந்துச்சு. இப்ப வர்றவங்களுக்கு மொக்கையே போட
வரல, எல்லாமே சக்கையா இருக்கு. நல்லாவும் எழுத வரல. நம்ம ஐஎஸ்ஓ
மொக்கை செந்தழலார் கூட இல்லாதது பெரும் இழப்பு. அதுவுமில்லாம நல்ல
பதிவுகள தேடி புடிச்சி படிக்கறதுக்குள்ள கண்ணு பூத்து போயிடுது. ஒன்றிரண்டு
பதிவுக்காக நாம நாள் பூரா அலைஞ்சி தேடியும் கிடைக்கலன்னா ஏமாற்றமாகிடுது.
அதனால அந்த பக்கம் போக்குவரத்து கம்மி பண்ணி என்னோட கவனத்தை
குமுதம், விகடன், வண்ணத்திரைன்னு போக ஆரம்பிச்சிட்டேன். அங்க இதவிட
நல்லா மொக்க போடறாங்கப்பா!

த: என்னலே வர வர ஒனக்கு எலக்கிய தாகம் அதிகமாயிடுச்சி. நம்ம தினமணி
புகழ் சரவணர் கூட நல்லா மொக்கை போடறாரே! அதையும் பாக்கறதில்லயா
நீயி?

கோ: அது என்ன தினமணி புகழ்?

த: அதான்யா இந்த ஆவி புகழ், தினமலர் புகழ், குமுதம் புகழ், அந்த மாதிரி.

கோ: ஓஹ் அப்படி சொல்றியா! இத அவரே சொன்னாரா? இல்ல நீயே சொல்றியா?

த: இத பத்திரிக்கை அடிச்சே சொல்லியாச்சு. அந்த மேட்டர விடு, பருவ மழை
பொய்த்தாலும் மாசத்துக்கு ஒரு பதிவு கண்டிப்பா உன்கிட்டருந்து வரும்.
உலகமே எதிர் பாத்துட்டு இருக்கற பதிவ எப்ப போட போற?

கோ: மவனே உனக்கு ஓவர் நக்கலாகிபோச்சுடா! நானும் எதையாச்சும் எழுதி
என்னோட ரசிகர்கள திருதிபடுத்தலாம்னு பாக்கறேன் எதுவுமே தோண
மாட்டேங்குது நீதான் எதாச்சும் ஒரு ஐடியா கொடேன்.

த: இப்படி கேட்டியே இது நியாயம். நீ தமிழ்மணத்த நல்லா மேயணும். அப்படி
மேய்ஞ்சின்னா ஒருநாளைக்கு மூணு பதிவு போடலாம். இப்ப உதாரணத்துக்கு
உன்ன மாதிரி ஆளுலாம் என்ன எழுதலாம்னு மண்டைய போட்டுகிட்டு
குழப்பிக்காம இருக்கறதுக்குதான் பிட்டு போட்டி, நஒக போட்டின்னு
வச்சி கதறடிச்சிகிட்டு இருக்காங்களே! அதுல எதுலயாச்சும் ஒண்ணுத்துல
கலந்துகிட்டு ஒருநாளைக்கு மூணு சிறுகதைகள் வீதம் எழுதினின்னா ஒரே
மாசத்துல சிறுகதை தொகுப்பே போடற அளவுக்கு பதிவுகள் வந்து
குமியும்ல, இந்த சிறுகதை எழுதறதுல எதாச்சும் டவுட்டுன்னு வந்துச்சின்னா
கோவியார்கிட்டயும், வினையூக்கி அய்யாகிட்டயும் விவரம் கேட்டுக்க
எனக்கு தெரிஞ்சு நூத்துக்கணக்கான சிறுகதைகள் எழுதுன ஆளுங்க
அவங்கதான்.

கோ: பிட்டு அடிக்கறதுக்கு போட்டி வேற வைக்கறாங்களா? அது என்ன நஒக?
எதுனாச்சிம் கெட்ட வார்த்தையா?

த: பிட்டு போட்டின்னா போட்டோ எடுத்து பதிவு போடறது. நஒகன்னா...

கோ: இரு... இரு... இரு... இந்த போட்டா புடிக்கற சமாச்சாரமெல்லாம்
நமக்கு வராதுப்பா.

த: லேய் போட்டோ எடுக்கறது பெரிய மேட்டருல்லப்பா உதாரணத்துக்கு நம்ம
குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது.
இதுலாம் வெளில யாருக்கும் தெரியாது...

கோ: சரி அடுத்து நஒக ன்னா என்னன்னு தெளிவா சொல்லு!

த: அதுவும் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல! நச்சின்னு ஒரு கதை எழுதணும்.
அதை உன்னோட பதிவுல போட்டு நச்சின்னு லேபிள் போட்டினா நச்சு தயார்.
முக்கியமா நம்ம செல்லா அண்ணன் எழுதுவாரே அந்த மாதிரி நச்சின்னு
இருக்கணும் புரிஞ்சிதா?

கோ: என்னென்னமோ சொல்ற!

த: அப்படியும் உனக்கு பதிவு போட மேட்டருல்லன்னா பாருக்கு போய்
ரெண்டு பீர ஏத்து அப்படியே சூட்டோட சூட்டா உக்காந்து கவிதை எழுது.
அய்யனார் கவுஜ மாதிரி லெவல் பண்ணிடலாம். அதுவும் வரலன்னு வச்சிக்க
பில்லா படத்தை உல்டா பண்ணி ஒரு பல்லா, குல்லா, கல்லான்னு
தொடர்ச்சியா பதிமூணு பதிவு போடலாம். இப்பலாம் தொடர்கதை எழுதலன்னா
பதிவர்னே ஒத்துக்க மாட்டேங்கறாங்க தெரியுமா? அதுனால நாளைக்கே ஒரு
பதிவு தொடர்கதை எழுதிடு, கதைய பத்தி யோசிக்காத.

"கதை அருமை" "சூப்பர் டர்னிங் பாயிண்ட்" "முடிவை ஏற்கனவே யூகிக்க
முடிந்ததுன்னு" "சிறப்பான நடை" "வாழ்த்துக்கள்"னு எதுனாச்சும் கமெண்ட்
வந்துகிட்டே இருக்கும் நீயும் அதுக்கு பதில் பின்னூட்டம் போட்டுகிட்டே
இருக்கலாம்.

ஸ்டேட்டர் பார் கவுஜ எல்லாத்தையும் ஒரு பதிவா போடலாம். நம்ம
வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும். அப்படியும் போர்
அடிச்சிதுன்னா ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.

கோ: நீ இப்படியே எல்லாத்தையும் நக்கலடிச்சிட்டு இரு ஒருநாள் உனக்கு எவனாச்சும்
ஆப்பு வைப்பான். எப்ப பாத்தாலும் தமிழ்மணம் பத்தியே பேசிட்டு இருக்க வேற
எதுனாச்சும் பேசு.

த: ஓம் ஷாந்தி ஓம் ட்ரெய்லர் பாத்தியா மச்சி? தீபிகா படுகோனேவ பாத்து நான்
படுகோணலாயிட்டேன்னா பாத்துக்க!

கோ: ஏண்டா அதுல ஷாருக்கான்னு ஒரு ஸ்டார் இருக்கறத நீ பாக்கவேல்லியா?

த: நாங்கள்லாம் அன்னப்பறவை வம்சம்டா தேவையானத மட்டும்தான் எடுத்துப்போம்.
லேட்டஸ்டா நம்ம காபி வித் அனு பாத்தேன்.
செம க்யூட்ரா அவங்க. அதுவும் அவங்க தலைய சாய்ச்சி உற்சாகத்தோட கேள்வி
கேக்கற அழகு இருக்கே சான்சே இல்ல மச்சி, கேள்வி மொக்கையா இருந்தாலும்
கேக்கற அழகுன்னு ஒண்ணு இருக்குல்ல அதான், அதத்தான் ஐ ரியலி லைக்.

கோ: பாவனா போய் அனுபுராணம் ஆரம்பிச்சிட்டியா? வேற எதுனா பேசு
இல்லன்னா போன வைய்யி இப்பதான் எனக்கு காய்ச்சல் விட்டுருக்கு.

த: சரி வேற மேட்டருக்கு வரேன். உம்பேர வச்சிகிட்டு பயங்கர புத்திசாலியா,
அழகா திறமையானவரா ஒருத்தர் இருக்காரே தெரியுமா ஒனக்கு?

கோ: இந்த பேர்ல இருக்கற எல்லாருமே ஆளப்பிறந்தவர்கள்தான், ஆமா நீ யார
சொல்ற?

த: நீயா? நானா? கோபிநாத்த சொல்றேன். நம்ம புலி பீதில போட்ட பதிவுனால
முழுசா அந்த நிகழ்ச்சிய இறக்கி பாத்தேன். உண்மைலயே இந்த மாதிரி
டாக் ஷோ நம்ம ஊருக்கு புதுசு. அதுலகூட ஒரு பொண்ணு லூசுத்தனமா
இந்த இனத்துல பொறந்ததுல ரொம்ப பெருமைப்படறேன்னு ஆரம்பிச்சி
இத்தன இன்ச்ச்ல இஞ்சினியர் மாப்ள வேணும்னு கேட்டதுலருந்து பெற்றோர்கள்
வரிசைல அமைதியா பதில் சொன்னது வரைக்கும் எல்லாமே சூப்பர்.
அதுல கூட பாத்தின்னா பெண்களுக்குதான் தனக்கு வரப்போற கணவன்
எப்படி இருக்கணும்னு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள்னு இருக்கு ஆனா
நம்ம பசங்கதான் பூமிகா, மழை ஸ்ரேயான்னு வழக்கமா பதில் சொன்னாங்க.
மைக் முன் பிளிறிய அந்த பெண்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ற மாதிரி
ஆண்கள வேணும்னா அவங்களே மொத்தமா ஜப்பானின் யாமசாக்கி ரோபோ
தொழிற்சாலையில் ஆர்டர் கொடுத்துதான் செய்யணும். அந்த மாதிரி
சைஸ் வாரியா கேக்கறாங்கப்பா!

த: ஆமா உனக்கு இந்த மாதிரி எதுனா எதிர்பார்ப்பு இருக்குதா கோபி? ஏன்
கேக்கறன்னா என்னவிட ரெண்டு வயசு பெரியவன் என்னைவிட உலக
அனுபவம் உனக்கு ஜாஸ்தி அதனாலதான் கேக்கறேன்.

கோ: டேய் என்கிட்டவே லந்தா? நானே சதுரங்க குதிரை நாராயணன் வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கை ஆகிடுமோன்னு கவலபட்டுகிட்டு இருக்கேன்
நீ வேற வேதனைய கெளப்புற.

த: ஆனா எனக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு. என்னன்னு கேளேன்!

கோ:........

த: நீ கேளேன்....

கோ:........

த: சும்மா கேளேன் கோபி

கோ: நான் கேக்கலன்னா நீ சொல்லாமலா போயிட போற? சொல்லித்தொல!

த: அது... எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது. எதாவது ஒரு குக்கிராமத்துல,
பஸ் கூட போகாத ஊர்ல, ஈவன் பால்வண்டில போற வசதி கூட இல்லாத
ஊர்லதான் பொண்ணு எடுப்பேன். மேக்சிமம் அஞ்சாவதுதான் படிச்சிருக்கணும்.
கையெழுத்து போட தெரிஞ்சிருக்கணும் ஆனா தமிழ் படிக்க தெரிய கூடாது.
ஊர்லருந்து கடிதாசி வந்தா கூட நாந்தான் அவளுக்கு படிச்சி காமிக்கணும்.
மொதல்ல அந்த பொண்ண தாவணிலதான் பாக்கணும். உதாரணத்துக்கு ரெட்டை
வால் குருவி படத்துல மைக்மோகனுக்கு பிடிக்காத மனைவியா கம்பி ஜடை
பின்னி ஒரு நடிகை இருப்பாங்கல்ல அதே மாதிரி, இல்லன்னா தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ஆனா பொண்ணு
கருப்பா இருக்கணும். பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்.....

கோ: எலேய்.. எலேய் நிறுத்து போதும். விவேக் சொன்னது சரிதான். நீ சொல்ற
மாதிரி பொண்ணு லெமூரியா கண்டத்தோட போயே போச்சு. இனிமே உன்கிட்டருந்து
போன் வந்துச்சின்னா ஆள் இல்லன்னு சொல்லி வச்சிடறேன்.
என்னால முடியாதுடா சாமி.

Monday, December 10, 2007

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,
காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.
எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோ
ஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சி
பத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்க
ஓகே மன்னிச்சிடலாம். இன்னும் ஏன் இந்த மாதிரி படம் விட்டுகிட்டு இருக்கிங்க?

போனவாரம் ஊர்லருந்து ஒரு கல்யாண டிவிடி வந்திருந்தது அதுல வீடியோ
அவங்க பக்கம் திரும்பும்போதெல்லாம் மொபைல எடுத்து சும்மனாச்சுக்கும்
காதுல வச்சு பேசறானுங்க. அட பந்தில கூட ஒருத்தன் பாக்கெட்ட கஸ்டபட்டு
துழாவி எடுத்து காதுல வைக்கிறான்.

போட்டோ எடுக்கறாங்கன்னு தெரிஞ்சா போதும் மொகத்துல அரை கிலோ
கோலமாவ அப்பிகிட்டு வந்து போன்ல பேசற மாதிரி போஸ் கொடுப்பிங்களே!
திருங்கய்யா மக்கா திருந்துங்க!

Friday, December 07, 2007

குறிப்புகள்.

என் பிறந்தநாள் டிசம்பர் மாதத்தில் வருவதில் மிகப்பெரிய சங்கடம் அந்த மாதத்தில்
வீசும் கடும் குளிர். அம்மா சொல்வாங்க விடிகாலைல எந்திரிச்சு குளிச்சி முருகன்
கோவிலுக்கு போய் வான்னு. மிக பிரயத்தனப்பட்டு குளிக்க வேண்டிய நாட்கள்
இவை. என் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் என்னிக்குன்னு எனக்கு தெரியாது
ஆனா என்னோட பிறந்தநாளுக்கு எல்லாரும் கண்டிப்பா வாழ்த்து சொல்வாங்க
திருப்பிச் செலுத்தனும்னு தோணியதேயில்லை. மறதிதான் என்பதைத் தவிர
வேறெதுவும் காரணமில்லை.

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

*****************************

பிறந்தநாளை முன்னிட்டு அமீரக வாழ் மக்கள் அனைவருக்கும் விடுமுறை
அளிக்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக அமீரக தமிழ் மன்றத்தினர் நடத்திய
கலைநிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்தன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேரன்
வந்திருந்தார். அபிஅப்பா, சுல்தான், முத்துக்குமரன் தவிர மற்ற அனைத்துப்
பதிவர்களும் வந்திருந்தனர். ஆனால் பேசமுடியாமல் போய் விட்டது.
நாங்கள் பேசாவிட்டால் என்ன எங்களுக்கெல்லாம் சேர்த்து ஆசிப் அண்ணாச்சி
நிறைய பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே அவர்தான். நாவில்
தமிழ் விளையாடுகிறது கூடவே நகைச்சுவையும். "இந்தாளு ரேடியோல
பேசிட்டு இருந்தவர்டா நல்லா பேசுவார் என்று பின்னால் இருந்தவர்கள்
பேசிக்கொண்டார்கள். ஆமாங்க அவர் ரொம்ப நல்லவர் என்று திரும்பி
அவர்களுக்கு பதில் சொன்னேன். (அண்ணாச்சி பேமண்ட் கரெக்டா வரணும்).

நிகழ்ச்சி வர்ணனை என்பது வெகு கவனமாக கையாளப்படவேண்டிய விஷயம்
அதைக் கூட அனாயசமாக கையாண்டார் அண்ணாச்சி. மன்றத்தின் மூத்த
தலைவர்கள் ஒரு குயர் பேப்பரில் எழுதி வைதிருந்ததை வாசிக்க நம்
அண்ணாச்சியோ வர்ணனையில் புதிய சாதனை படைத்தார் என்றே சொல்ல
வேண்டும் ஏனென்றால் நிகழ்ச்சி நிரல் முதல் கொண்டு மாறுதலுக்குள்ளான
நிகழ்ச்சிகள் வரை நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் வர்ணனை செய்து
கொண்டிருந்தார். சிலசமயம் திரைமறைவில் இருந்து கொண்டு குரல் மட்டும்
கம்பீரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வந்து விட்டது. நிகழ்ச்சி 6 மணிக்கு
என்று சொல்லி அதே நேரத்தில் ஆரம்பித்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தாமதமாக வந்த மாமாக்கள், மாமிக்கள் பட்டுப்புடவை சரசரக்க வந்தார்கள்.
பத்திரிக்கையில் நிகழ்ச்சி நேரத்தை பார்த்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை
7.30 க்கும் 8.30 க்கும் ரெண்டு இன்ச் பவுடர் அடித்துக்கொண்டு நிறைய பேர்
உட்கார இடம் இல்லாமல் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பி விட்டு
தாங்கள் உட்கார்ந்து கொண்டார்கள். சினிமாவுக்குன்னா சீக்கிரமா போறாங்க,
இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தாமதமா வர்றாங்கன்னு தெரில. சீரியல்னா
கரெக்ட் டைமுக்கு குந்த வச்சி பாக்க தெரியற மக்களுக்கு ஏன் இது புரியலன்னு
தெரில. இந்தியாவிலருந்து வந்த சேரன் சீக்கிரமா வந்துட்டார். உள்ளூர்ல இருந்து
வர்றவங்களுக்கு என்ன பிரச்சினையோ தெரில.

**நேத்து ஒரு பேப்பர் துண்டு பாத்தேன் எதோ ஒரு மாவட்டத்தின் பகுதி
ஒன்றில் தினசரி இரவு 10 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறிது நேரம்
கழித்து திரும்பவும் இணைப்பு கொடுக்கிறார்களாம். இது போன்ற தினசரி
துண்டிப்பால் சீரியல்கள் பார்க்க சிரமம் இருப்பதாக பெண்கள் எல்லாம் அணி
திரண்டு மின்சார அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு
கொடுத்தார்களாம். வாழ்க வளர்க.

அரங்கம் சின்ன அரங்கம் அடுத்தமுறை இதை விட சிறப்பாக இருக்கும் என்று
எதிர்பார்க்கலாம். வழக்கம்போல சேரன் மனதில் பதியும் விதமாக பேசினார்.
விரைவில் அமீரகவாழ் மக்களின் துயர் கதையை திரைப்படமாக எடுக்கப்போவதாக
சொன்னார் அதற்கு தொழில்முறை நடிகர்களை நடிக்க வைக்காமல் இங்கிருந்தே
தேர்வு செய்யப்போகிறாராம். அவரின் லட்சியப்படம் என்று கூட சொன்னார்.

தமிழ்நாட்டுல இருந்து வர்ற நான் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசறேன். ஆனா
நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் நண்பர் ஆசிப் தூய தமிழில் பேசி என்னை
வெட்கப்படவைக்கிறார். குற்றவுணர்ச்சியா இருக்கு எனக்கு என்று சேரன் பகிரங்கமாக
பாராட்டினார். அண்ணாச்சி அவர்கள் பேசுவதை விட நன்றாக பாடுவார் என்பது
ஏனோ சேரனுக்கு தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது தெரிவிக்காமல்
மறைத்து சதி செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. :) நல்லவேளை
அவர் பாடாமல் எங்கள் வயிற்றில் வடை வார்த்தார்.

விழாமலரின் அட்டைப்படம் வடிவமைக்க நம் குசும்பர் சரவணரிடம் உதவி
கேட்டு இருந்தார்களாம். என்ன கொடும சரவணர் இது???

குழந்தைகள் அச்சுப்பிச்சுன்னு ஆடினாலும் அழகாதான் இருக்கும். நிகழ்ச்சியில்
ஆடிய சிறுமிகள் மிகவும் கவர்ந்தார்கள்.

சிறப்பாக நடந்த நிகழ்ச்சி. அடுத்த விழாவில ஆசிப் தமிழுக்கு இன்னும் சில
ரசிகர்கள் கூடியிருப்பார்கள். (ஆசிப், இதுக்காகவாச்சும்...)

*****************************

கடந்த வாரத்தின் மந்தமான மாலையொன்றை பரபரப்பூட்ட போன்பூத் படத்தை
எத்தனையாவது முறை பார்த்தேன் என்று தெரியவில்லை, பார்த்தேன். எத்தனை
முறை பார்த்தாலும் சலிப்பை தராத படம். காலின் பெரல் நடிப்பு அற்புதமாக
இருக்கும். அந்த படம் முடிந்த பிறகு சற்று பரபரப்பாக உணர்ந்தேன். மீள
புத்தகம் படிக்கலாம் என்று யூமா வாசுகியின் மஞ்சல் வெயிலை கையில்
எடுத்தேன்.

தன் காதலிக்கு எழுதும் கடிதமாக கதை ஆரம்பமாகிறது இந்தக்கதையில் வரும்
கதாநாயகன் கதிரவனுக்கு முன்னால் இதயம் முரளி எல்லாம் துகளுக்கும் கீழ்.
அந்தளவுக்கு மென்மையான ஓவியர். தாழ்வு மனப்பான்மையுள்ள, கோழை,
பெண்களிடம் பேசுவதி தயக்கமுள்ள, வறுமையில் தவிக்கும் ஒரு சாதாரண
பத்திரிக்கை ஓவியன். தன் காதலியிடம் காதலை தெரிவிக்கவே இந்த
கடிதம் ஆனால் காதலிக்கல்ல. தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல.
யூமா வாசுகியின் எழுத்து நடை பிரமிப்பான தனித்துவம் கொண்டது என்பதை
வாசிக்க ஆரம்பித்த உடனே புரிந்து கொண்டேன். தன் காதலியை பற்றிய
வர்ணனையாகவும் சந்தித்த வேளை இவற்றை விளக்கவே கிட்டத்தட்ட 80
பக்கங்கள் எழுதியிருக்கிறார். பத்தி பிரிக்காத பக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிக்க வாசிக்க நாம் கதிரவனுடன் இருப்பது போன்ற உணர்வு. அத்தனை
மென்மையான நாயகன் சில இடங்களின் "இவன் சொல்லுவானா சொல்றதுக்குள்ள
செத்துடுவானா" என்ற எரிச்சலை கிளப்பினாலும். ஒரு கதை கடிதமாக
எழுதப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

யூமா வாசுகியின் நடையில் உள்ள தனித்துவம் மிக சுலபமாக முதல் வாசிப்பிலேயே
கண்டுபிடிக்கலாம் அதுதான் கண நிகழ்வை இம்மி பிசகாமல் பதிவிக்கும் நடை.
மேம்போக்காக சம்பவங்கள் நடந்தன என்று சொல்லி கதை நகர்த்தாமல் நம் கை
பிடித்து நேராக கொண்டு செல்வது போன்றது. அதேபோல கதையின் இடையில்
வரும் ஓரிரு பாத்திரங்களும் மிக நல்லவர்கள் வாட்ச்மேன், நண்பர்கள். குறிப்பாக
பக்கத்து வீட்டு குழந்தைகள். மிக முக்கியமாக கான் முகம்மது சென்னைபோன்ற
நெருக்கடி நகரத்தில் ஏரியாவுக்கொரு கான் முகம்மதுவை காணலாம். இந்த
கான் முகம்மது பாத்திரத்தை நகல் செய்துதான் மொழி படத்தில் பாஸ்கர் செய்த
பாத்திரம் அச்சு அசலாக இந்தகதையிலும் வருகிறது சிறிய மாற்றங்களுடன்.
ராதாமோகன் இந்த நூலை வாசித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது நகல் செய்வதில்
எந்த தவறும் இல்லை அதை ஒழுங்காக செய்யவேண்டும். மூலத்தை சிதைக்காமல்
திரையில் கொண்டு வந்ததால் ராதாமோகனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

புத்தகங்களில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் அப்படியே படத்திலும்
காப்பி அடிப்பது வழக்கம்தான் ஆனால் சில எதேச்சையாக நடந்ததும் உண்டும்.
புயலிலே ஒரு தோணி நாவலின் நாயகன் பாண்டியன் ஜப்பானியர் வசம் சிக்கிய
டச்சுப்படை தளபதிக்கு உதவி செய்வார். உலகப்போர் நடைபெற்ற சமயம்
டச்சுப்படை வசம் இருந்த இந்தோனேசியா ஜப்பானியர் வசம் வந்தபோது
டச்சுக்கதிகளை மணல் அள்ளும் வேலைக்கு எடுத்துச்செல்வர் அப்போது பரிதாபமாக
காட்சி அளிக்கும் அவருக்கு உதவி செய்வார். கதையின் கடைசியில் பாண்டியன்
இக்கட்டான மரண சூழ்நிலையில் இருக்கும்போது டச்சுத்தளபதியின் மகன்
பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வருவார். இதேபோன்ற காட்சி தி பியானிஸ்ட்
படத்தில் சற்று மாறுதல்களுடன் வரும். பு.தோணி உலகப்போர் முடிந்த சமயம்
எழுதப்பட்டது. பியானிஸ்ட் படம் சமிபத்தில் எடுக்கப்பட்டது. இரண்டுமே
உலகப்போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதுடன் சம்பவத்தின் கரு
ஒன்றேதான். கதையிலும் சரி காட்சியிலும் சரி நெகிழ வைக்கும் விதமாக
இருக்கும்.

**********************

நிகழ்ச்சி முடிந்து அய்யனாரும் நானும் பிற நண்பர்களும் காரில் வந்து கொண்டிருந்த
போது துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் நடக்க போவத்ற்கான அறிகுறிகள் அங்கங்கே
தென்பட்டன. வண்ண விளக்குகள் தோரணங்கள், ஹோர்டிங்குகள் எல்லாம். இந்த
ஒரு மாதம் துபாய் களைகட்டும். இந்த மாதிரி விழாக்காலங்களில் எல்லாம் நம்
ஊர் போல இரட்டிப்பு சம்பளம் போனஸ் என்று எந்த எழவுமே இல்லாமல்
பொருள் வாங்க விழா எடுப்பது முட்டாள்தனமானது. என்ன மாதிரி ஆளெல்லாம்
எங்கருந்து வாங்கறது? என்று கேட்டேன்.

"அதுக்குதான் க்ரெடிட் கார்டு கொடுத்துருக்கானுங்கல்ல தேய்க்க வேண்டியதுதான"
என்று நண்பர் சொன்னார்.

என்னய்யா சுத்த விவரமில்லாதவனா பேசற! பின்னால அதுக்கும் நாந்தான
பணம் கொடுக்கணும் நான் சொல்ல வர்றது போனஸ். அதுவுமில்லாமல் இந்த ஊர்ல
க்ரெடிட் கார்டு தேய்ச்சோம்னோ நீ தேய்ஞ்சு கட்டெறும்பாக்கிதான் ஊருக்கு
அனுப்புவானுங்க. இந்த மாதிரி தேய்ச்சு வட்டி கட்டமுடியாம அசலும் கட்ட
முடியாம நிறைய பேரை பாத்திருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும்னா
நம்ம கலைஞர இங்க கொண்டு வந்து அஞ்சு வருசம் உக்காத்தி வச்சம்னா
கடனை வட்டியோட தள்ளுபடி செய்ய ஆவண சட்டங்கள போடுவாருல்ல என்ற
அருமையான ஐடியாவை கொடுத்தேன். அப்படியே கலைநிகழ்ச்சிகளும் பேரரசு
போன்ற இயக்குனர்களுக்கு சிறந்த திரைக்கதாசிரியர் விருது போன்றவற்றை
கண்குளிர பார்த்துக்கொண்டிருக்கலாம். கூடவே நமீதா ஆட்டமும் போனசாக!!

*****************

பதிவு பெருசாகிட்டே போகுது அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

Saturday, December 01, 2007

பூம்பாவாய் ஆம்பல்...ஆம்பல்..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்

அதிக சிரமமின்றி அறையில் நுழைந்திருந்த சூரிய வெளிச்சம் சிகரெட் புகை வளையங்களை தனித்து அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது. விரலை சுடப்போகும் நெருப்புச்சாத்தானை பற்றிய பிரக்ஞை இல்லாமல் சுரேஷ் தன் சிந்தனைகளில் மாட்டிக்கொண்டிருந்தான்.

'சர்வசாதாரணமா ஆளாள்கிட்ட பொய் சொல்றவளுக்கு, தேடுபொறியில அவ பேர போட்டு தேடுனா இருக்குற ஆர்குட் லிஸ்ட் எல்லாத்தையும் காட்டிடும்ன்னு தெரியாமலா இருக்கும். சரி, இந்த விஷயத்த அவ ஏதோ ஜாலிக்காகவோ, இல்லை ஏமாத்தனும்ன்னோ செய்யறதா இருக்கட்டும். ஆனா அவளோட ப்ரொஃபைல்ல தன் மனைவி பெயர் எப்படி வந்தது. இப்போது ஏமாந்து கொண்டிருப்பது அவளா, நானா, இல்லை என் மனைவியா!
ஏன் ஆம்பல், சுரேஷ்ங்கற பெயர்ல இருக்கறவங்கள மட்டும் குறி வச்சிருக்கா? சுரேஷ்ங்கறவன் அவளை காதலிச்சு ஏமாத்திட்டானா.... இல்ல... இல்ல...'

ஆம்பல் யாரென்ற எண்ணத்தை விட தன் மனைவி எப்படி இதில் வந்தாள் என்ற விஷயம்தான் அவனுக்கு பிடிபடாமலே இருந்தது. மற்ற சுரேஷ்களிடம் இதைப்பற்றி மெயில் அனுப்பி விசாரிக்கவும் பயமாக இருந்தது. ஏனெனில் 5 நாட்களுக்கு முன்பு வரை ஆம்பலை பற்றி யாரென்ன சொன்னாலும் தானே நம்பியிருக்க மாட்டான்.. அல்லது தான் விசாரிப்பது ஆம்பலுக்கு தெரிந்து அதனால் வேறு ஏதேனும் பிரசினைகள் வரக்கூடும் என எண்ணினான்.

நினைக்கும்போதே தலையை வலிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. சுரீரென சூடு விரலை தொட சிகரெட் நழுவி தரையில் விழுந்தது. சற்று நேரம் அந்த சிகரெட்டையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் இந்தியா கிளம்ப தயாராக வைத்திருந்த பெரிய ஏர் பேக்கை உருட்டிக்கொண்டு வெளியில் வந்து கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

அவனது பயணத்தில் விபரீதங்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறான் என்பது அப்பொழுது வரைக்கும் அவனுக்கு தெரியவில்லை.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^


பிரபுவின் வீட்டுக்குள் தூக்கம் கலைந்த கண்களுடன் நுழைந்தான் ராகவன். காமிக்ஸ் கதைப்புத்தகத்தில் ஒன்றிப்போயிருந்த பிரபு, ராகவனின் வருகையால் நிமிர்ந்தார்.

"என்ன சார், அர்ஜன்ட்டா வர சொல்லியிருந்தீங்க?"

"ஒரு சின்ன விஷயம் இப்பத்தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லேந்து எனக்கு வந்தது. அதைப்பத்தி விஷயத்தை வெளியில விசாரிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு. அட ஏன் நிக்குறீங்க. உக்காருங்க"

"தேங்க் யூ சார்" என்றபடி சோபாவில் தளர்ந்தபடி அமர்ந்தான் ராகவன்.

"டீயா.. காபியான்னு கேட்டு போட்டு கொடுக்கற அளவுக்கு வீட்ல யாரும் இல்ல. அதனாலதான்" என்றபடி எழுந்தவர் அருகில் இருந்த ப்ரிட்ஜில் இருந்த பெப்சி டின்னை எடுத்து ராகவனின் அனுமதிக்கு காத்திராமல் நீட்டினார்.

பெப்சியின் மேல் விரலால் கோலம் போட்டபடி அமர்ந்திருந்த ராகவன், பிரபுவும் அமர்ந்ததும், "என்ன விஷயம் சார் அது!" ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டான்.

"இறந்த அந்த பொண்ணுக்கு இடது கையில் ஆறு விரல்ங்கறது ரிப்போர்ட்ல இருந்தது. ஆனா.."

"ஆனா..!" தவிப்பின் உச்சியில் இருந்தான் ராகவன்.

அவன் பதட்டத்தை பொருட்படுத்தாது பிரபு பொறுமையாக அமைதியான குரலில் கூறினார்.

"அந்த ஆறாவது விரல், அவளுக்கு ஆபரேஷன் செஞ்சு வச்ச போலி விரல்"

ராகவன் அதிர்ச்சியில் இருக்க, பிரபு தொடர்ந்தார்.

"பொதுவா ஆறாவது விரல் இருக்கறது அதிர்ஷ்டம்ன்னு நம்பறவங்க இன்னும் நம்ம நாட்டுல இருக்காங்க. ஆனா வாஸ்து கணக்கா விரலையே மாட்டி வச்சிருக்கற மொதோ பொண்ணு இவதான்னு நினைக்கிறேன்"

ராகவனின் தவிப்புகள் அதிகமானது.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^

அந்த பெரிய வீடு வெளிச்சத்தை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் இருளை விழுங்கி அமர்ந்திருந்தது. ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு ஒளிர்ந்த ஒரு நைட் லேம்ப் தன் சக்திக்கு ஏற்ற வகையில் இருளுடன் போர் புரிந்து தன் சக்தியை செலவிட்டது. அந்த வெளிச்சத்தின் கண்களில் பட்டுத்தெறித்தது அந்த சிறுமியின் புகைப்படம்.

ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006

அகில உலக ஆங்கில சினிமா விமர்சக சுப்புடு,
ஜாவா பாவலர்,
காலேஜ் குமரிகளின் கனவுக்கண்ணன்,
தற்போது அமெரிக்க கன்னிகளின் (?) இதயத்தில் மையம் கொண்டிருக்கும் புயல்,
தேன்கிண்ணத்தில் பால் வார்த்துக்கொண்டிருக்கும் அசல் இளைஞன்,
திரு கப்பி அவர்கள் அடுத்த பாகத்தை தொடர்வார்கள்...