எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

Friday, January 02, 2009

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா


பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.

எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.

அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.

இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.


சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"


''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!


இப்படி சொல்லியிருந்தார்

நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.

அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.

ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.

ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.

சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.

எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"

Wednesday, September 17, 2008

கோயில்களைப்பற்றி

கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்
ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்
மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை
முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய
பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்
சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்
எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்
பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள
கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்
மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே
காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.
எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை
அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை
என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்
பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.
கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்
செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.

அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத
குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.
அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்
இருக்கிறது.

தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை
செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது
குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி
கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்
வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்
ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்
இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக
கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா
சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்
மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக
பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல
பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று
ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.
நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு
குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்
ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து
கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்
கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்
போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று
ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு
குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்
அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை
அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்
போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும்.

அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்
மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை
போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்
உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்
கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்
அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்
கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்
கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான
தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.
எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே
இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்
சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்
வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.

எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்
வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு
கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான
விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு
தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.
அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம்.
இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்
குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்
பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்
முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து
வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்
அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த
இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்
அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது
அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்
வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா
தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது
அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து
இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம்.
முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல
தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது
அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,
ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான
பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்
முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்
வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்
வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்
தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்
கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்
தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.
ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து
இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்
முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்
கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட
இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது
போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை
அழைத்துச் செல்லும்.

எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.
அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை
முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்
குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.
சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்
பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்
வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி
சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.

கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்
செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது
எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.

புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு
மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்
என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது
கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்
ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்
என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை
தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.
அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று
அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்
வந்ததே இல்லை.

குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி
இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.
திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள
பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்
அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது
அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்
கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட
அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே
வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை
தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன்.

கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்
இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்
சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.

கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்
நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து
நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.

Sunday, April 20, 2008

நாய்களைப்பற்றி....

நகுலனின் நாய்கள் நாவலை சமீபத்தில் படித்து முடித்தேன். வேறொரு நாளில்
நாய்கள் பற்றி என்ன எழுதியிருந்தார் என்று நினைவுகொள்ள விரும்பியபோது
மனத்திரையில் வெள்ளைத்தாள்களே தோன்றின. அப்படிப்பட்ட புகமுடியா உலகம்
நகுலனது. அப்படி மீண்டும் உலகிற்குள் போகவிரும்பினால் நீங்கள் ஒரு மனம்பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக்கொள்பவராகவோ இருந்தால்
கூடுதல் தகுதி.

எங்கள் வீட்டில் ஒரு பூனை வளர்த்தோம். பூனை என்றாலே அழகுதானே... பக்கத்து
வீட்டு சிறுமி ஒருத்தி அந்த பூனையை வாஞ்சையுடன் தூக்கி முத்தமிட்டாள். இந்த
பூனைக்கு பேர் என்ன? என்று கேட்டாள்.

அப்போதுதான் பெயரின் அவசியத்தை உணர்ந்து அந்த நொடியிலிருந்து பூனைக்கு ஒரு
பெயர் வைக்க யோசித்தேன். அது பெண் பூனையாக இருந்தது. யோசித்ததில் எந்த
பெயரும் பொருந்தவில்லை. இறுதியாக அதற்கு "பூனை" என்றே பெயர் வைத்தேன்.

மறுபடியும் அச்சிறுமியை அழைத்து "இந்தப்பூனைக்கு பேர் வைத்து விட்டேன்" என்று
சொன்னேன்.

சிறுமி மிக்க ஆவலுடன் என்ன பேர் என்று கேட்டாள்.

"பூனை" என்றேன்.

அவளும் சிரித்தபடியே பூனை என்று அழைக்கத் தொடங்கினாள். இன்று அப்பூனை
வளர்கிறது.

இன்று எதேச்சையாக கதாவிலாசத்தில் ராமகிருஷ்ணனின் நகுலன் குறித்த
கட்டுரையினை வாசித்தேன். ஏற்கனவே வாசித்ததுதான் இருந்தாலும் ராமகிருஷ்ணனின் எழுத்தும் நகுலனையும் பிடிக்கும் என்று மறுபடியும் வாசித்தேன்.

அங்கேயும் இதே போல நகுலன் பூனைக்கு பூனை என்றே பெயர் வைத்திருப்பதாக
எழுதி இருந்தார். என்றோ படித்தது என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது
சமயத்தில் அது வெளிப்பட்டுருக்கிறது. இப்படித்தான் எவர் எவரையோதான் நாம்
வாழ்நாளில் கடைபிடிக்கிறோம்.

ஏன் நவீனனை நாய் என்று அழைக்கக்கூடாது? என்று அடிக்கடி நவீனன் டைரியில்
வருகிறதென்று தெரியவில்லை.

நாம் நாயைப்பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட நாட்களில் எனக்கென்று ஒரு நாய் வளர்த்துக்கொள்ள ஆசை இருந்தாலும்
வீட்டின் அனுமதி கிடைக்கவில்லை. என் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் நண்பர்
ஒருவர் இருந்தார். அவர் ரஜினியின் தீவிர எதிரி. ஒவ்வொரு நாய்க்கும் ரஜினியின்
படங்களையே பெயராக இட்டு மகிழ்ந்தார். அப்படித்தான் அந்த நாய்க்கு "முத்து" என்று
பெயரிட்டு அழைத்தார். ஏற்கனவே அவர் வீட்டில் "வீரா" என்ற நாய் இருந்தது.

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விடுவேன். போகையில்
ஒரு ரூபாய்க்கு தவிட்டு பிஸ்கெட் என்று அழைக்கப்படும் அந்த வட்டமான
பிஸ்கெட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கொள்வேன். ஒரு ரூபாய்க்கு இருபது
தருவார்கள். டவுசரின் பையில் போட்டுவிட்டு வேகமாக கரும்புக்காடு, நெல்வயல்,
பருத்தி தோட்டங்களை தாண்டி நடந்து செல்வேன். அவரின் வீடு வயல்களுக்கு நடுவே மஞ்சள் சுண்ணாம்புடன் தனித்து அடையாளம் தெரியும்.

அப்போதுதான் அவர் சொன்னார் "முத்து" என்றொரு நாயை ராஜபாளையத்தில்
இருந்து வாங்கி வந்திருப்பதாக. வீராவுக்கு பத்து முத்துவுக்கு பத்து என்று
பிஸ்கெட்டுகளை பிரித்து கொடுத்தேன். நான் கண்ட நாய்களிலே மிகச்சிறப்பான நாய் "முத்து"தான். கோபமாக பேசினால் சாப்பிட மறுக்கும். எத்தனை நாளானாலும்
தட்டில் சாதம் கூட அப்படியே இருக்கும். சமாதானமாக பேசினால் மட்டுமே
சமாதானமாகும்.

உதாரத்திற்கு ஒரு கோழிக்காலை எடுத்து வாசல்படிக்கு உள்பக்கம் வைத்தால் அது
வெளியே உட்கார்ந்திருக்கும் கூப்பிட்டாலும் உள்ளே வராது. அவ்வளவு ஒழுக்கமாக
வளர்த்து இருந்தார்கள்.

தொடந்தது போல நான்கைந்து மாத ஞாயிறுகளையும் பார்த்துவிட்ட முத்துவுக்கு
என்னோடு வந்துவிடவேண்டும் என்று ஆசை. ஒருநாள் அங்கிருந்து திரும்பி
வரும்போது எனக்கு தெரியாமல் என்னோடே வந்துவிட்டது. பிறகு நான்கைந்து
முறை திருப்பிக் கொண்டு விட்டும் திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது.
அவர்களுக்கே சலிப்பாகி விட்டதைப் போல அங்கயே வளரட்டும் என்று விட்டு
விட்டார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டிலேயே வாழ்ந்து வந்தது. மிகச்சிறந்த
பாதுகாப்பை அது எங்கள் வீட்டிற்கு அளித்தது. வெற்று ஆள் ஒருவர் கூட
உள் நுழைய முடியாது. நாய்கள் மிகுந்த ஞாபகசக்தி கொண்டது. எத்தனை வருடம்
கழித்து வந்தாலும் வாசனை மூலம் யார் என்று அறிந்துகொள்ளும்.

அந்த ஊரின் எல்லையில் அமைந்துள்ள கடைசி வீடு எங்கள் வீடு. இரவில் அதிக
நடமாட்டம் இருக்காது. பழகிய வாசனை அல்லாத எவரும் எங்கள் வீட்டைத் தாண்டி
சுலபத்தில் போய்விட முடியாது ஆனால் நான் இரவு எத்தனை தாமதமாக வந்தாலும்
தூரத்தில் வரும்போதே தலைதூக்கிப் பார்க்கும். என் காலடியோசை கூட அதற்கு
அத்துபடி. என் நடை எப்படி இருந்தாலும்.

எப்படி ஒழுக்கமாக இருந்தாலும் அந்த முத்துவுக்கு காமத்தை மட்டும் கட்டுப்படுத்தவே
முடியவில்லை. ஒரே தெருவில் சலித்து போய் அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று
ஆட்டையை போட்டு வந்தது. முத்துவுக்கு எதிராக மற்ற எல்லா நாய்களும் ஒன்றுபட்டு
முத்துவின் காம ஆட்டத்தை அழிக்க திட்டம் போட்டு கடிக்க ஆரம்பித்தன. முதலில்
சிறு சிறு காயங்கள் பிறகு பெரிய காயங்கள், சிலநாள் ஓய்வுக்குப்பிறகு மறுபடியும்
அதேபோல வேட்கைப்பயண விழுப்புண்கள். ஓய்வு பெறும் வயது வந்தது கூட
நினைவில்லாமல் தொடர்ந்து தெருத்தெருவாக போய் கடைசியாக அதன் காமத்தை
அதன் போக்கில் விட்டு விட்ட பின்னர் எப்போதாவது வரும் போகும்.

கொஞ்சநாள் கழித்து அடையாளம் தெரியாத அளவுக்கு அடிவாங்கி வந்து தோட்டத்தில்
படுத்திருக்கும் தெம்பு வந்தவுடனே திரும்பி செல்லும் பிறகு வரும். எதோ ஒரு
சண்டையில் ஒரு சொறிநாய் கடித்துவிட்டது போல. இதற்கும் சொறி வந்து விட்டது.
தெருவாசிகள் சொறிநாயை விட்டுவைக்க கூடாது என்று முறையிட்டபின்னர் ஒரு
சுபயோக சுபதினத்தில் தூக்கிலிட்டு கொன்றாயிற்று.

இப்படித்தான் முத்துவின் கதை முடிந்தது.

என் பள்ளிக்கால நண்பனின் வீட்டில் ஒருநாய் வளர்த்தார்கள். அவனின் அப்பா இவனிடம்
பேசியதைவிட லட்சக்கணக்கான வார்த்தைகள் அதிகமாக மணி என்ற அந்த நாயிடம்
பேசியிருப்பார். மணியிடம் மட்டுமல்ல அவர் தெருவில் உள்ள நாய்களிடம் கூட
நின்று நிதானமாக பேசிவிட்டுதான் போவார். தெருநாய்களிடன் பேசும்போது மட்டும்
போதையில் இருப்பார். அவரும் அப்படிதான் குடியை விடமுடியாமல் மறுவாழ்வு
மையம் சென்று வந்தார். எல்லா பழக்கமும் காணாமல் போனது. ஆனால் நாயுடன்
பேசுவது மட்டும் முன்பிருந்ததை விட அதிகமானது. இப்போதெல்லாம் அவர்
நாயுடன் மட்டும்தான் பேசுவார். நாய்தான் எதுவும் இவரிடம் பேசுவதில்லை.

கண் திறவாத நாய்க்குட்டிகள் முலைதேடும் காட்சியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?


நெகிழ்ச்சியாக இருக்கும் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். முடிந்தால்
தூக்கி கொஞ்சி பாருங்கள். வினோதமான வாடையுடன் கத கதப்பை உணரலாம்



நாய் குட்டி போட்டவுடன் எவராவது அதன் அருகில் போயிருக்கிறீர்களா?

கண்டிப்பாக போகமுடியாது. நான் பலமுறை முயன்று தோல்வியை தழுவியிருக்கிறேன்.
ஏதோ ஒரு நாயுடன் கலவி கொண்டு பெற்றதாயினும் குறிப்பிட்ட காலம் வரை
குட்டிகளிடம் யாரையும் அண்ட விடுவதில்லை. பிறந்த நாய்க்குட்டிகள் கண்ணை
திறக்காமல் அரை போதையில் இருக்கும்போது அதனிடமிருந்து ஒரு வாசனை வரும். (நாற்றம் என்று கூட சொல்லலாம்) அதை முகர எனக்கு அப்போது பிடிக்கும்
ஆனால் தாய்நாய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும்.

என் கல்லூரி நண்பன் ஜெயக்குமாருக்கு நாய்கள் என்றாலே ஆகாது. நாய்கள் இருப்பதாக
சொன்னால் அந்த தெருவில் நடப்பதற்கே பரிசீலனை செய்பவன். சிறிய வயதில்
எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கலாம். ஆனால் அவன் வீட்டு நாய்க்கு கூட
பயம். கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு ச்சூ ச்சூ என்றபடியேதான் போவதும்
வருவதும். அவனிடம் உங்கள் வீட்டில் நாய் இருப்பதாக சொன்னால் முடிந்த வரை
உங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்ப்பான். சினிமாவில் வருவதுபோல கோரமாக
எதாவது ப்ளாஷ்பேக் இருக்கலாம்.

ஐந்தாவது வரை நானும் என் உடன் பிறந்த தம்பியும் ஒன்றாகத்தான் டியூஷன்
செல்வோம் அப்படியொருநாள் செல்லும்போது வாத்தியார் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த
நாயை கொஞ்சிக்கொண்டே வந்தான். நாய் என்ன நினைத்ததோ தெரியவில்லை. எகிறி
வந்து முகத்திலே கடித்து விட்டது. சரியாக மேல் உதட்டில் ஒரு ஓட்டை. அழுது
கொண்டே வீட்டுக்கு ஓடினோம். பிறகு அந்த வாத்தியாரிடம் செல்வதை நிறுத்தி
விட்டோம்.

சமீபத்தில் ஒருநாய் மூன்று குட்டிகள் இட்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று
பார்க்கலாம் என்று போனபோது உர்ர் என்று உறுமும் சத்தம். பின்வாங்கினேன்.

எல்லா ஊர்களிலும் நாய்கள் ஒரே குணத்தைதான் கொண்டிருக்கிறது.

நாய்க்காரப்பாட்டி


எங்கள் பள்ளிக்கு எதிரே வடை சுடும் பாட்டி
ஒருத்தி இருந்தாள். நிலவில் வடை
வடை சுட்டவள் இவளாகத்தான் இருக்குமோ
என்ற ஐயம் கூட எனக்கு உண்டு.
என் வாத்தியார் அதே பள்ளியில் படித்த
போதுகூட இவள் பாட்டியாகவும், வடை
சுடுபவளாகவும், தனிமைக்காரியாகவும்
இருந்தாள். ஆனால் அவளுக்கு ஆறு
கால்கள்.
ஆம்
அவளுடன் ஒரு கிழட்டு நாயும் இருந்தது.
இப்போது எத்தனை என்று தெரியவில்லை.
ஆனால் அந்த நாய்க்கு நான்குதான்.

Wednesday, February 27, 2008

இராமரும் முருகனும் பிற்சேர்க்கையாக சுஜாதாவும்



பஞ்சாயத்து செய்திகளை சொல்ல பறையடிப்பவர் தெருமுக்குகளில் நின்று
சொன்னதெல்லாம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. பறையடிக்கும்போது
மோளத்தை சூடு காட்ட வைக்கோலினை சிறிது எடுத்து தீயிட்டு காயவிடுவார்கள்.
அப்போதே சிறுவர் கூட்டம் கூடி பறை இசையை ரசிக்க கூடிவிடும். எப்போது
அடிப்பார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். திடீரென்று மழைபெய்வது
போல் அடிப்பார்கள். கேட்டதும் கையை காலை அசைக்க தூண்டும் அடி.
மழைவிட்டது போல அடி நிறுத்தும்போது ஒருவர் ஓங்கி குரலெடுத்து ராகத்தோடு
பாடுவார். அனைத்து வீட்டிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்து செய்தி வாங்கும்.
சிலர் நெருங்கி வந்து விசாரிப்பர். பெரும்பாலும் இவையணைத்தும் அதிகாலையிலோ
அல்லது இரவிலோ நடக்கும். இப்போதைய ராப், அதிரும் ட்ரம்ஸ் இசைக்கெல்லாம்
ஆதி எதுவென கேட்டால் நிச்சயமாய் பறைமேளத்தை சொல்வேன்.

பறைமேளம் மூலம் செய்தி சொல்லும் முறையை நவீனமாக்கிதான் முருகன்
வந்தார்.

முருகனுக்கு ஒருகண் பார்வை மட்டுமே மறுகண் எப்படி போனதென்று
தெரியவில்லை. ஊருக்குள் அவரைத்தெரியாத ஆள் இருக்கு முடியாது. திருமணம்,
மஞ்சள் நீர், மரணசெய்தி, தியேட்டரில் புதிய படம் போட்டால் செய்தி, அரசியல்
நிகழ்ச்சி என அனைத்துக்கும் இவர் உதவி தேவை. ஒரு ஆட்டோவில் மைக்செட்
ஸ்பீக்கர் சகிதம் இவர் நுழைந்து விட்டால் அனைத்து காதுகளும் கூர்தீட்டி நிற்கும்
என்ன செய்தி சொல்லபோகிறார் என்று. சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும். நானும் என் டவுசர் காலத்தில் நோட்டீஸ்
வாங்க அவர் பின்னே ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில் ஒருவர் மிதிக்க
இவர் பின் அமர்ந்து சென்று செய்தி சொல்வார். பெருமாலும் விளம்பரம் மட்டுமே
சொல்வதுண்டு. மரண செய்திகளுக்கென்றும், விளம்பரசெய்திக்கென்றும், திருமண
செய்திக்கென்றும் தனித்தனி அலைகளில் பேசுவதை தொடர்ந்து கேட்பவர் மட்டுமே
உணர முடியும்.

உங்கள் பொன்மலை / க்ரசண்ட்
திரை அரங்கில்
நாளைமுதல் தினசரி நான்கு காட்சிகளாக
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.


இன்றும் முருகனுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது முருகன் பாணியை விட நவீனாமாக லோக்கல் கேபிள் சேனல்களில்
ஐந்து நிமிட இடைவெளியில் நாளுக்கு 8756 முறை ஒரே செய்தியை தொலைக்காட்சியின்
அடிக்கோடியில் ஓட விடுகிறார்கள். யாரும் பார்க்கத்தான் ஆளில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஊர் கிராமம் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வந்து நகரத்துடன் இணைந்திருப்பதுடன் பல அரிய விஷயங்களை சிதைத்து விட்டு
இவ்வுருவம் பெற்றிருக்கிறது.

உதாரணத்திற்கு என் பள்ளிப்பருவத்தில் முடிவெட்ட இராமர் என்பவர் வருவார்.
வெற்றிலை குதப்பிய வாயுடனும், சிவந்த முட்டைக்கண்கள் உடைய பார்க்க
அச்சமூட்டுபவர் போல தோன்றினாலும். வாய் திறக்கும்போது வெள்ளந்தியாக
தெரிவார். "வா கண்ணு ஏன் பயப்படுற? செத்த நிமிசம் உக்காருப்பா...
என்று கெஞ்சுவார். அவர் வரும் திசை தெரிந்தாலே இரண்டு தெரு தள்ளி நிற்பேன்.
வலுக்கட்டாயமாக தேடி இழுத்து வந்து மனையில் உக்கார வைப்பார் அப்பா.
தலையில் தண்ணீர் தெளித்து 'கரக்' 'கரக்' என்று வெட்ட ஆரம்பிப்பார்.
வெட்டும்போது கண்ணாடியை நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும். இது
ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

பின் அவரது வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு கடைத்தெருவில் சலூன்கடை
வைத்தார்கள். முன்னும் பின்னும் பார்க்க பெரிய பெரிய கண்ணாடிகள். எந்நேரமும்
சிலு சிலுவென்ற பாட்டுச்சத்தம். கத்தரி மறைந்து அரைமணிக்கொருதரம் கடைக்குள்
வந்து தலை சீவி தலையை திருப்பி திருப்பி பார்த்து திருப்தியுறாத இளந்தாரிகள்
என்று மாறிப்போனபோது இராமரிடம் ஊரில் உள்ள பல் பெயர்ந்த கிழவாடிகள்
மட்டுமே வாடிக்கையாளர்கள் என்றானார்கள்.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது இராமரை சந்திக்க நேர்ந்தது. முக்கத்தில்
முதுமை வரைந்த கோடுகள். ஆனால் அதே பெரிய சிவந்த கண்கள் இம்முறை
பயம்காட்டவில்லை. நீண்ட கழியின் முனையில் பண்ணருவா பாதி வளைத்துக் கட்டி ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ஆடு வளர்க்கிறாராம்.
எப்போதாவது வரும் தொழில் மீது நம்பிக்கை அற்றிருக்கலாம்.


இன்று மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட சலூன்கள். அத்தனையிலும் ஆளுயர
கண்ணாடிகள். முடிவெட்டும் கோவிந்தனிடமும், கண்ணனிடமும், லவ்லியிடமும்
இராமரின் சாயல்கள் மறைந்திருந்தன.
---

பின்குறிப்பு: இன்னிக்கு ஏண்டா ரீல் சுத்திகிட்டு இருக்கன்னு தோணுச்சுன்னா அதுக்கான
காரணம். இன்று அதிகாலை உறக்கத்தில் முருகன் ஆட்டோவுக்கு பின்னால்
கலர் கலராக நோட்டீஸ் வாங்கி அருகிலுள்ள பசங்களிடம் நாந்தான் அதிகம்
நோட்டீஸ் வாங்கினேன் என்று பெருமையட்டி பின் அதை கப்பல் செய்து அனைவரும்
வாய்க்காலில் விட்டதுபோல ஒரு கனவு. அதான் கொஞ்சம் சுத்தியாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.
---

சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை ஏனெனில் நமது வாசிப்பு அந்த தளத்தில் விரிவடையாமல் இருந்ததே
காரணம். ஆனால் இவர்தான் சுஜாதா என்று தெரியும். கல்லூரியின் இறுதி பருவத்தில்
ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது. சிறிய உதவியில்லாமல்
காருக்குள்ளிருந்து வெளியே வரவோ, படி ஏறவோ முடியாது.

கோடம்பாக்கம் என்பதால் அடிக்கடி எதாவது ஒரு நடிக பிரபலத்தையும் அவர் பின்
சிறு கூட்டங்களையும் காணலாம். பென்டாசாப்ட் எதிரில் உள்ள பொட்டிக்கடையில்
நின்று புகைக்கும்போது எப்போதாவது நீல நிற ஸ்கோடா கார் வந்து நிற்கும்
"டேய் சுஜாதாடா" வாங்கடா போய் பேசலாம் என்று அழைப்பேன். "டேய் உனுக்கு
வேலையே இல்லையா" என்று விலகிவிடுவார்கள். ரசிகனுடன் நடிகர்கள் கொள்ளும்
வசீகரத்துக்கு இணையாக எழுத்தாளருக்கும் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
வேலை முடிந்து கிளம்புவதற்கு முன்னர் எப்படியாவது சந்தித்து பேசவேண்டும்
என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.

இன்றளவும் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" தவிர வேறெதும் படித்ததில்லை.
அவர் மீது நான் கொண்டது சினிமா மோகமேயன்றி வேறெதுமில்லை.

Monday, February 25, 2008

புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டி

இங்கிருந்து கிளம்பும்போதே அய்யனார் ஒரு லிஸ்ட் கொடுத்து அதில் உள்ள
புத்தகங்களை வாங்கி வரச்சொன்னார். எங்கு தேடியும் கிடைக்காத வரிசை அவை.
நாஞ்சில் நாடன் நாவல்கள் தந்த ஈர்ப்பால் அவரின் மற்ற அனைத்து நாவல்களையும்
எப்படி அலைந்தாவது வாங்கிவிட முயற்சி செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது. அவற்றை வாங்கும்போதும், வாங்கியபின்னர் படித்த அனுபவங்களுமே
இங்கு பேசப்போகிறேன்.

இந்தியா வந்ததும் மறக்காமல் சந்திக்க வேண்டும் என்று அன்புடன் சுரேகா கேட்டுக்
கொண்டார். திருச்சி சென்று அவரை பார்க்க முடிவானதும் அங்கேயே புத்தகங்களும்
வாங்க முடிவு செய்திருந்தேன். அவர் ஒரு பதிவர், உதவி இயக்குனர் என்ற
அளவிலேயே தெரியும் நயமாக பேசுவார் என்பது நேரில் சந்தித்த போதுதான்
தெரிந்தது. இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். திரையுலகம் சம்பந்தப்பட்ட
செய்திகள் வழக்கம்போலவே ஒவ்வாமையைத் தந்தது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எனக்கு தனி மடல் இட்டு ஊக்கப்படுத்தியர்
திருச்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர். அவரை சந்திக்க பி.எஸ்.என்.எல்
அலுவலகத்திற்கு சென்றோம் அங்குதான் அவர் வேலை செய்கிறார். அரசு
அலுவலகத்துக்கே உண்டான வாசனை, கோப்புகள், தடித்த கண்ணாடி அணிந்து
சிரமப்பட்டு தடிமனான நோட்டில் எதையோ எழுதும் பெருசுகள் என்று அனைத்து
லட்சணமும் பொருந்தின. என்னை கண்ணைக் கட்டிக்கொண்டு எதாவது ஒரு அரசுத்
துறை அலுவலகத்தில் நிறுத்தினால் அது எந்த மாதிரியான அலுவலகம் என்பதை
சரியாக சொல்லிவிடுவேன்.

பாஸ்போர்ட் வந்த புதிதில் அதைப் பெற்றுக்கொள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்
இருந்து ஒரு நற்சான்றிதழ் வாங்கி காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
அதற்கு அலுவலர்களே 50 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள். காலம் காலமாக
நடந்து வரும் இந்த பாரம்பரிய வழக்கத்தை அரசு ஊழியரான என் தந்தையே
மீற அவர் மனம் ஒத்துழைக்கவில்லை. கையில் அம்பது ரூபாய் தந்து "நீயே
போய் வாங்கி வா என்றார்".

சின்ன சின்ன வேலைகளிலும் ஒன்று, இரண்டு என்றே கமிஷன் அடித்து பழகியதால்
கையூட்டு கொடுக்க வைத்திருந்த ஐம்பதில் இருபதை ஆட்டையை போட்டேன்.
நிர்வாக அலுவலர் முன்பு நின்று 30 ரூபாயை நீட்டும்போது விலைவாசி நிலவரம்
தெரியுமா? உங்கப்பாவே இப்படி நடந்துக்கலாமா? என்று நியாயம் பேசினார்.
அல்லாம் தெரியும் பேப்பர குடுங்க சார் என்று வாங்கி வந்தேன்.

இப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம்,
பஞ்சாயத்து அலுவலகம், நீதிமன்றம் என்று அரசின் அத்தனை அலுவலகத்தின்
வாசனையையும் பிரித்தறிய நாசி பழகிக் கொண்டது. விஜயபாஸ்கர் அலுவலகம்
சென்ற போது அத்தனையும் மனதின் முன் மீண்டும் எவ்வித மாற்றங்களும்
இல்லாமல் நிழலாடியது.

விஜயபாஸ்கர் என்னைப் பார்த்ததும் மிகவும் பதட்டமடைந்து விட்டார். இதைக்
கண்ட சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கே புரியவில்லை. கம்ப்யூட்டரை
தட்டுவதும் தொலைபேசியில் பேசுவதுமாக மதிய உணவு வரை இருந்தார்.
நானும் சுரேகாவும் அரசு அலுவலகம் என்றும் பாராமல் அலப்பறை கொடுத்துக்
கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் மதிய உணவாக தி இங்கிலிஷ் பேக்கரியில்
பொறை (பொறைகூட நல்லாருக்கும்) வாங்கி சாப்பிட்டு இடத்தை காலி செய்தோம்.

முன்பின் பழக்கமில்லாத, இணைய எழுத்துகளின் மூலம் அறிந்த ஒருவரை காணும்
போது ஒரு நண்பனிடம் பழகுவது போல பேசுவது, பழகுவது என்பது
அனைவருக்கும் சாத்தியமல்ல.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில் ஒரு புத்தகக்கடையை பார்த்தோம்.
உரிமையாளரை தட்டி எழுப்பி புத்தகம் வாங்க வந்திருப்பதாக சொன்னோம்.
சுவாரசியம் இல்லாமல் உள்ளே சென்று பார்க்குமாறு கையை காட்டி விட்டு
மறுபடியும் தூங்க சென்றார்.

ஊறுகாய் செய்வது எப்படி முதல் எந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்து
எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றால் புருசனுக்கு நல்லது
என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. ரேடியோ பழுது பார்ப்பது, டீவி
ரிப்பேர் செய்வது எப்படி போன்ற புத்தகங்கள் இல்லாமல் போனது மகிழ்ச்சி
அளித்தது. ஆயிரக்கணக்கான "எப்படி" புத்தகங்களுக்கு நடுவே தரமான நாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகளைக் காண சந்தோஷமாக இருந்தது. நாஞ்சில் நாடனின்
"தலைகீழ் விகிதங்கள்", ரமேஷ் ப்ரேமின் "ஆதியிலே மாம்சம் இருந்தது" மற்றும்
எம்.டி வாசுதேவன் நாயரின் காலம் நாவல் தந்த சுகத்தினால் அவரின் சிறுகதை
தொகுப்பு ஒன்றும் வாங்கினேன்.

சொல்ல மறந்த கதை படத்தினை இன்னும் பார்க்கவில்லை என்பதால் தலைகீழ்
விகிதங்கள் வாங்கினேன். பார்த்தாலும் வாங்கி இருப்பேன் அது வேறு விஷயம்.
தெப்பக்குளம் அருகில் சில புத்தக கடைகள் இருக்கும் அங்கு சென்றால் நாஞ்சில்
நாடன் புத்தகங்கள், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் ஆகியவை கிடைக்கலாம்
என்று சுரேகா கூறவே சுவாரசியமில்லாமல் கிளம்பினேன். ஏனென்றால் கல்லூரிக்
காலத்தில் நூலகத்தில் இருந்து தலையணை சைஸ் கம்பியூட்டர் புத்தகங்களை
ஆட்டை போட்டு தெப்பக்குள புத்தக சந்தையில் பாதி விலைக்கு விற்றிருக்கிறேன்.
அங்கே என்ன கிடைக்க போகிறது என்ற நினைப்பில்தால் அந்த அசுவாரசியம்.

நினைத்ததற்கு எதிர்மாறாக அங்கே இதுவரை வாசித்திராத நாஞ்சில் நாடனின்
நான்கு (பேய்க்கொட்டு, மிதவை, என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு)
நாவல்கள் கிடைத்தன. ஜெயமோகனின் திசைகளின் நடுவே மிகுந்த தயக்கத்திற்கு
பிறகு வாங்கினேன்.

"அது இருக்குதா"? "இது இருக்குதா"? என்று கடைக்காரரை காய்ச்சி எடுத்துக்
கொண்டிருந்த சமயம் இரண்டு சுமார் பிகர்கள் சாண்டில்யன் புத்தகங்களாக வாங்கி
குவித்துக் கொண்டு இருந்தார்கள். "பருவம்" "விருந்து" "இன்பலோகம்"
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எங்கள் நண்பர் குழாமில் அதிகமுறை சுற்றிய
முக்கால்வாசி புத்தகங்கள் சாண்டில்யன் புத்தகங்களே. மருந்துக்கு கூட அந்த மாணவிகள்
பாட புத்தகங்களை வாங்காதது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை.



எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ
மேல கிளிக்கி பாத்துட்டா நான் பொறுப்புல்ல.

புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. உலகத்தில்
உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உபதேச புத்தகங்கள் என்பது என்னவோ
செய்கிறது. என்னைப்பொறுத்தவரை ஓஷோ புத்தகங்களை படிக்கும் நிலை வரவில்லை.

இன்று காலைமுதல் மாலைவரை உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேன். மிகவும்
நன்றி என்று சொன்னபோது "எல்லாத்தையும் செஞ்சுபுட்டு என்ன கதிர் இது
டயலாக் என்று கலாய்த்து வழியனுப்பினார். பேருந்தில் புத்தக குவியல்களுடன்
உட்கார சென்றதும் எதோ "வாய்ப்பாடு விக்கவந்தவன் போலருக்கு" என்ற நினைப்பில்
இடம் தர மறுத்தனர். ஒரு கல்லூரி மாணவன் மட்டும் ஒதுங்கி இடம் கொடுத்தான்.
"ஏன் சார் குமுதம், விகடன் மாதிரி பொஸ்தகம் வாங்க மாட்டிங்களா"? எதுவுமே
புரிலயே சார் என்றேன்.

-----------

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு
மிக அருகில் புத்தக கண்காட்சி. நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே
(சும்மா பில்டப்பு) எழுதிய the old man and sea புத்தகத்தின் தமிழில் கடலும் கிழவனும்
கிடைத்தது. சி.சு செல்லப்பாவின் ஜீவனாம்சம் ஒன்றும் வாங்கினேன். காலச்சுவடு
பதிப்பகத்தை தவிர மற்ற அனைத்து பதிப்பகங்களும் புத்தக சந்தைக்கே உரித்தான
புதிய பெயர்களுடன் காணப்பட்டது. ஒருவேளை எனக்கு தெரியாமல் அப்படிப்பட்ட
அச்சகங்கள் நிறைய இருந்திருக்கலாம்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எழுதிய, பேருந்து நிலையங்களில் தொங்கி
கொண்டிருக்கும் மர்ம நாவல்களுக்கு பரம ரசிகையான என் அக்காவிடம் கடலும்
கிழவனும் புத்தகத்தை படிக்க கொடுத்தேன். "என்னடா இது டப்பிங் படம் பாக்கற
மாதிரி இருக்கு" என்று சொல்லி புத்தகத்தை தூக்கி எறிந்தாள்.

ஆர்வக்கோளாரில் கவிதை எழுதும் சித்திப் பையனும் இதே ரகம் அவனிடம்
மெர்க்குரிப்பூக்கள் நாவலை கொடுத்து படிக்க சொன்னேன். மறுநாள் என்னண்ணா
இது "செக்ஸ் புக்கு" மாதிரி இருக்கு என்று சொல்லி கொடுத்து விட்டான். ஆக
வாசிப்பு தன்னளவில் வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர யாரும் அதை திணிக்க
முடியாது. மேலும் அது ரசனையை பொறுத்து அமைவது.

Saturday, February 23, 2008

மாறாததும், மாறியதும்

சில பெருசுகள் மண்டைய போட்டுடுச்சு.

சில சிறுசுகள் ஓடிப்போச்சு.

சிகரெட் விலை ஏறி போச்சு.

சண்டை போட்ட பக்கத்து வீட்டு சனம் பாத்தவுடனே சிரிக்குது.
காலம் எல்லாத்தையும் தோசை மாதிரி திருப்பி போடும்ன்ற உண்மை உண்மைதான்.

மண்டபத்திலாவது எதும் தேறுமான்னு பாத்தேன், அங்கயும் ஒரு லோடு மண்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மொபைல் போன் இருக்குது. எல்லாருமே
ரெண்டு மொபைலாவது வச்சிருக்காங்க. (ரேஷன்ல கூட தர்றாங்களாம்பா)

"இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.

துப்பாய்ல எங்க இருந்த? என்ற கேள்வியை அனைவரும் கேட்டு கேட்டு
சாகடித்தனர். யோவ் வடிவேலு உன்னய...

டீக்கடையில் டீ குடிச்சதும் கடைக்காரர் பத்திரமா டீகிளாசை வாங்கி
வைத்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்.

ஊர்ல உள்ள மக்கள விட அதிகமா ஒரு ரூபாய் தொலைபேசி பொட்டிகள் தொங்குது.

ஸ்கூல் பொண்ணுங்க கூட பக்கத்துல யார் வர்றாங்க போறாங்கன்னு கவனிக்காம
கை நிறைய ஒரு ரூபாய் வச்சிகிட்டு லொடக் லொடக்னு காச விட்டு கடல போட்டுகிட்டு இருக்குதுங்க. அப்படி போடற காச உண்டியல்ல போட்டா அத வச்சு ஒரு குடும்பமே
வாழலாம்.

எல்லா விலையும் ஏறினாலும் எங்க ஊர் தியேட்டர்ல இன்னமும் அஞ்சு ரூபாய்தான்
டிக்கெட் விக்கறாங்க. இடைவேளைல குடிச்ச டீ கூட அதே சுவை. முன்னல்லாம்
சூடா சமோசா போடுவாங்க. தட்டுல பரப்பி தியேட்டர் உள்ள வந்து விக்கறத
நிறுத்திட்டாங்க. தியேட்டர் பொட்டிக்கடைல ரஸ்னா பாக்கெட் அமோக விற்பனை.
ஆனா நான் ரஸ்னா குடிக்கறதை நிறுத்திட்டேன். :)

எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு
கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு மிரட்டலான தமிழ் பெயர் வைக்கிறாங்க. உதாரணம்
சங்கிலிக்கருப்பன், பாதாள பைரவி.

எல்லார் வீட்டுலயும் கலைஞர் டீவிதான் பாக்கறாங்க.

ரெண்டு டீவி இருக்குற வீட்டுல மூணாவதா கலைஞர் டீவி கொடுத்துருக்காங்க.
கிட்டதட்ட எல்லா வீட்டுலயும் இதுதான்.

எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க. புருடா புராணத்துல இதுக்கு
எதாச்சும் தண்டனை இருக்குதான்னு பாக்கணும் இல்லாட்டி உருவாக்கணும்.

ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.

பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!

ரோட்டுல போற எதாச்சும் ஒரு பொண்ண ரெண்டு நிமிசம் தொடர்ந்தாப்புல
பாத்தம்னா அடுத்த அஞ்சாவது நிமிசத்துல ரெண்டு மூணு பேர் பைக்ல வந்து
"ஏன் பாத்த"ன்னு ஜோதிகா ரேஞ்சுல கேள்வி கேக்கறானுங்க.

ஒரு ஒயின்ஷாப் இருந்த ஊர்ல இப்ப அஞ்சு டாஸ்மாக் இருந்தும் கேட்ட
சரக்கு கிடைக்கவில்லை. என்ன கொடும இது...

ஒருநாளைக்கு மூணு என்ற வீதத்துல ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம்
மின்சாரத்தை நிறுத்தி வச்சிடறாங்க. முன்னாடி இதுபோல இல்ல. இப்ப மட்டும்
ஏன்னு தெரில. இங்கருந்து கர்னாடகாவுக்கு போகற மின்சாரத்துல எந்த
தடையுமில்லை.

முன்னவிட தினத்தந்தி சாணி பேப்பரின் தரம் குறைந்து சினிமா படங்களின்
விளம்பரங்களும், பிறந்தநாள் வாழ்த்து பக்கங்களாலும் நிறைந்திருக்கிறது.
இப்ப டீக்கடைய நம்பி பத்திரிக்கை நடத்துறாங்கன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல.

இப்பலாம் குங்குமத்துக்கு இனாமா எதுவும் கொடுக்கறதில்லயாம். என்ன ஏதுன்னு
கேட்டா இனாமா கொடுத்த பொருள் எதுவும் சந்தைக்கு வரும்போது காசு கொடுத்து
வாங்கறதில்லியாம். இத அடுத்த வாரம் இனாமா வாங்கிக்கலாம்னு விட்டுருப்பாங்க
போலருக்கு.

தாரே சமீன் பர் படத்தை அக்கா பசங்களுக்கு போட்டு காட்டணும்னு ஆவலோட
டிவிடி வாங்கி வந்து போட்டேன். அஞ்சாவது நிமிசத்துல "அட இதுவா மாமா
நான் ஏற்கனவே இந்த படத்தோட கதைய கேட்டுட்டேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல் மிஸ் சொன்னாங்களாம். மிஸ் பேர் என்ன? வயசு என்னன்னு
கேட்டதுக்கு "அய்யய்ய ஆய் மாமான்னு" சொல்லிட்டு தூங்கிட்டான்.

நிறைய பேர பாக்கணும்னு நினைச்சு பாக்கமுடில. எங்க ஊர்லருந்து சென்னை
போகணும்னா குறைந்தது 10 மணி நேரம் ஆகுது. பத்து மணி நேரம், பன்னெண்டு
மணி நேரம் ட்ராபிக் எல்லாம் சாதாரணம். ரோடு போடறாங்களாம். இதுக்காகவே
போகவில்லை.

பதிவர்களில் சந்தித்தது இரண்டு பேர்தான். சுரேகா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்.
ரெண்டு பதிவர்களின் பேரும் சுந்தர். அப்புறம் என்னுடைய தீவிர ரசிகர்(?)
ஒருத்தரையும் பார்த்தேன். யோவ் அய்யனார் எனக்கும் ரசிகர் இருக்காங்க!

"பக்கத்து சீட்டுல பாட்டி உக்காராம பிகர் உக்காரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்குங்க
அய்யனார்னு சொன்னேன். உனுக்குலாம் ஆயாதாண்டா பக்கத்துல உக்காரும்னு சாபம்
விட்டார். பத்தினன் சாபம்தான் பலிக்கும்னு நினைச்சேன்.

சினிமாக்கு போற வழில ஒரு ஆயா எலந்தபழம்னு கூவிகிட்டே போச்சு. ரெண்டு
ரூபாய்க்கு வாங்கி பேண்ட் பாக்கெட்ல போட்டு கடிச்சி தின்னுகிட்டே போனேன்.
"ஏண்டா நீ உண்மைலயே துபாய்லருந்துதான் வந்தியா"ன்னு கேட்டுட்டான்.

இல்லடா மச்சி, நான் அபிதாபி...

சும்மா இது ஒரு வருகைப் பதிவு மட்டும்தான்.

Monday, January 07, 2008

குளிர், குமரிகள், குழந்தைகள்

குளிர்காலத்திற்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு ஆதியோடந்தமாய் தொடர்பிருப்பதாக
நினைப்பதுண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வெகுகாலத்திற்கு நினைவை
விட்டு அகலாமல் இருப்பதும் காரணம். ஒரு குளிர் காலத்தில்தான்
திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பணிமாற்றம்
செய்யப்பட்டார் என் தந்தை. எங்களுக்குள் பெரிய இடைவெளி எப்போதுமே
சூழ்ந்திருக்கும் அது விவரம் தெரிந்த நாள் முதலே உண்டானது அதை மாற்றிவிட
அவருக்கும் தோன்றவில்லை எனக்கும் தோன்றவில்லை.

கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து "வந்தால் உன் பெற்றோருடன் வா"
என்று அனுப்பி இருந்தார்கள். பனி நிறைந்த இரவில் பேருந்து ஏறி அவரைக்
காண புறப்பட்டேன் விடியல்காலையில் நான்கு மணி சுமாருக்கு கதவைத்
தட்டி உள்ளே அறைக்கு சென்றேன்.என் பேச்சுலர் அறைக்கும் அவர்
அறைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. வெளியே சென்று டீ வாங்கி
வந்தார். குளிக்க வெந்நீர் போட்டு தந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு கூட்டிச்
சென்றார். இருள்கவிழ்ந்த கோயிலில் இருவருமாக உள்நுழைந்தோம்.

எங்களைத்தவிர யாரும் அந்த அதிகாலையில் வரவில்லை. கண்கள் மூடியபடி
வெகுநேரம் நின்றிருந்தார் நானும் சிறிதுநேரம் கண்கள் மூடி இருந்தேன். கண்
திறந்தபோது என் எதிரே ஒரு தாவணி அணிந்த பெண்ணும் அவளுக்குப்பின்னே
அவளது அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் என ஒரு படை சூழ வந்தாள்
அவளுக்குத்தான் பிறந்தநாளாக இருக்கக்கூடும், சற்றுமுன் அய்யர் மந்திரம்
சொல்லுமுன் ஏதோ ஒரு பெயரை கேட்ட ஞாபகம் அந்த நேரத்தில் பெயர்
முக்கியமல்ல என எண்ணி அவள் பின்னே பிரகாரச்சுற்றுக்குள் சென்று விட்டேன்
இரண்டாவது சுற்று வரும்போதுதான் அப்பா என்னையே முறைப்பது தெரிந்தது
மூன்றாவது சுற்றின் முடிவில் அனைவரும் வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து
பேசிக்கொண்டு இருந்தார்கள். என் வயதோ என்னை விட ஒன்றிரண்டு வயதோ
அதிகமிருக்கலாம் அவளுக்கு. எதுவும் பேசாமல் அப்பாவின் பக்கத்தில் போய்
நின்றேன் ஏற்கனவே வைத்திருந்த விபூதியின் கீழ் குங்குமத்தை வைத்தார்.
பிறகு கார் ஏறி அந்த குடும்பம் பறந்து போனது. விடுமுறை எடுக்க முடியாத
காரணத்தால் முதல்வருக்கு கடிதம் எழுதி உறையுனுள் வைத்து தந்தார்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் மறக்க ஆரம்பித்தாலும் அவள்
வண்டியில் ஏறி சென்ற காட்சி இன்றும் மனதினுள் அழியாமல் இருக்கிறது.

**************************

துபாயை போல கட்டிட நெரிசல்கள் அதிகம் இல்லாத நகரம் இது, மரங்களும்
மணல்வெளிகளும் நிறைந்த இடம் இதுவாகையால் எங்குமில்லாத வாட்டிடும்
குளிர் இங்கு. ஒருநாள் மாலை காலீத் என்ற சூடானியர் அவர் வீட்டு கம்பியூட்டரில்
இன்டெர்நெட் வேலை செய்யவில்லை என்றும் வந்து சரி பண்ணி தர முடியுமா
என்றும் கேட்டுக்கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே போல
ஏதோ பிரச்சினை என்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன். அவர் வீட்டில் அழகான்
குட்டிப்பெண் இருக்கிறாள் பெயர் ஈலாஃப் என்று ஞாபகம். அந்த குட்டி மறந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன். ஒரு ஆப்பிரிக்க சிறுமி என்னிடம் இவ்வளவு
அன்பு வைத்திருப்பாள் என்று நினைக்கவேயில்லை. காலீத் வீட்டில் நுழையும்போதே
Mr.கதிர் என்றபடியே ஓடிவந்து கைகொடுத்தாள் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான
தருணம் அது. அவளின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போனேன்.

கம்ப்யூட்டரை சரி செய்த பின்னர் நான் தங்கியிருக்கும் இடத்துக்கே என்னை
கொண்டு வந்து விட காரை எடுத்தார் காலீத்.எடுக்கும்போது யாரோ காரின்
கதவை தட்டும் சத்தம் கண்ணாடி வழியே யாரும் தெரியவில்லை. கதவை
திறந்தால் ஈலாஃப் நிற்கிறாள். அவளையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
புறப்பட்டோம். வழிநெடுக நிறைய பேசினேன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
அரபியை தவிர வேறெதுவும் தெரியாது, பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையாம்.
நடு நடுவே அவள் பேசியது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் இறங்கும்
இடம் வந்ததும் தன் சிறிய உதடுகளை குவித்து கன்னத்தில் முத்தமிட்டாள்
ஈலாஃப் நான் பெற்ற முத்தங்களில் மிகச்சிறந்த முத்தம் அது. பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.
காரின் பின் கண்ணாடி வழியே கையை அசைத்து போவது மங்களான பனியின்
புள்ளிகளுக்கு இடையே தெரிந்தது. நான் ஓவியனா இருந்தால் அந்தக்காட்சியை
வரைந்து வைத்து பின்னாளின் பார்த்து நினைவுகூர்ந்து கொள்ளலாம் என்று
தோன்றியது.

***************************

காதலை சொல்ல குளிர்கால காலைகள் உகந்ததல்ல என்பது அவளிடம் காதலை
சொன்னபோதுதான் தெரிந்தது. தினமும் காலையில் கோபால் நாயுடுவின் மரம்
போன்ற செம்பருத்திச்செடியில் பூக்கள் பறிப்பாள். முதல் நாள் பார்ப்பதுபோலவே
எல்லா நாளும் தோன்றிய நாட்கள் அவை. பள்ளியின் இறுதி பருவத்தின் இருந்த
காலம் அதுவாதலால் நயமாக என் ஆசையை தெரிவிக்க இயலாதவனாகிவிட்டேன்.
என்னை மறுத்தவள் நம் சரக்கல்ல என்று தோன்றியதால் காலப்போக்கில் அவளை
காதலித்ததிற்கான தடயங்கள் என் மனத்தில் அழிந்து போயிருந்தது. ஒரு குளிர்கால
அதிகாலை, திருச்சிக்கு போகும் வழியில் ஒரு கிராமத்து பேருந்து நிறுத்த
நிழற்குடையின் அருகில் முகப்பொலிவுகள் இழந்த ஒரு பெண் இரு குழந்தைகளுடன்
நின்றிருந்தாள். அவளேதான் முப்பது வயதை தாண்டியது போல அம்முகம்
மாறிவிட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்தில் வந்தடைந்தேன்.
நிழற்குடையில் பார்த்த அந்த பத்து நொடிகளை மறந்துவிடு என்றும், பூப்பறிக்கும்
அவள் முகத்தை மட்டும் நினைவடுக்குகளில் பதியவும் போராடி இரண்டுமே
இன்றுவரை என் நினைவில் இரண்டுமே நிலைத்திருக்கிறது.

*******************************

ஒரு குளிர்கால அதிகாலையில்தான் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள கோமுகி
அணைக்கரை தாவடியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் என் நெருங்கிய
நண்பன். இன்றும் தெளிவாக நியாபகம் இருக்கிறது அது மலைப்பிரதேசத்தின்
அடிவாரத்தில் அமைந்த அம்மன் கோயில் அதன் நான்குபுறமும் பிரம்மாண்டமான
மூங்கில் மரங்கள் அடர்ந்து பெரிய வனம் போல காட்சி அளித்தது. இங்கு தினமும்
வந்து சாமி கும்பிடுவாள் என்றும் சொன்னான். மேலும் இன்று தன் காதலை
வெளிப்படுத்த போவதாகவும் சொன்னான். அவனை விட இரண்டு வயது மூத்தவள்
அவள், பத்தாவது தவறி இரண்டாண்டுகள் கழித்து தேறியவள். வழக்கமான கிராமத்து
பெண் அவள். நாசூக்கான மறுப்புகள் சொல்லத்தெரியாதவள். என்னவோ புணரத்தான்
அழைத்தது போல அவள் ஆர்ப்பாட்டம் செய்து செருப்பை நீட்டிவிட்டாள். மறுநாள்
குளிர்பிரிந்த காலையில் வயலின் நடுவே இருந்த மரத்தில் தொங்கிவிட்டான்.
இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.

********************************

அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்து ரசித்த பெண்ணொருத்தி குளிர் கால
விடியலில் என்னிடம் லிப்ட் கேட்டாள். அந்த நிகழ்வு எனக்கு சுவாரசியமானது.
ஒரு குளிர்காலத்தின் விடியலிள் அவள் பள்ளித்தோழிகளுடன் நடந்து
வந்துகொண்டிருந்தாள் உடன் இருவர் இருந்தனர். அப்போதுதான் புதிதாக சுசுகி வாங்கியிருந்தார்கள். யாருமில்லாத சாலையில் ஓட்டிப்பழக எடுத்துச்சென்றேன்.
பத்திருபது கிராமங்களை அணைத்து போகும் அந்த சாலை பல வளைவுகளை
கொண்டது. தோழிகளுடன் வந்துகொண்டிருந்தவள். ஏதோ உற்சாக மிகுதியில்
லிப்ட் கிடைக்குமா என்று கத்தி விட்டாள். சற்று தூரம் கடந்திருந்த நான் வண்டியை திருப்பினேன்.

அவளை நெருங்கியவுடன் அவள் இரண்டு தோழிகளுக்குப்பின் முகம்
மறைத்துக்கொண்டாள் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், மன்னிச்சிடுங்க என்று
சொன்னாள். சிரித்துக்கொண்டே கிளம்பினேன். பிறகு பேருந்திலோ, கடைத்தெருவிலோ, தெருவை கடக்கையிலோ சின்னவெட்கத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்து முகம்
மறைக்க இடம் தேடுவாள்.

********************************

ஒரு குளிர்கால இரவில்தான் எங்கள் ஊரில் உள்ள கூந்தல் நீளமான பெண்ணொருத்தி
ஒன்பதாவது பெயிலானாள் என்று தீக்குளித்துக்கொண்டாள். அவளின் கூந்தல் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கே கூந்தல் நீளமான கேரளத்து சேச்சிகளை காணும்
போதெல்லாம் முத்துலஷ்மி என்ற அப்பெண்ணின் நினைவு வரும். பெயிலானதுக்கெல்லாம்
தீக்குளிக்க ஆரம்பித்தால் நான் பதினெட்டுக்கும் அதிகமான முறை தீக்குளிக்க வேண்டும்.

*******************************

குளிர்கால அதிகாலையில்தான் என்னை வளர்த்த பாட்டி இறந்து போனாள்.

ஒரு குளிர்கால இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில்
விரைத்து செத்துப் போயிருந்தது.

ஒரு குளிர் நிரம்பிய இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு
வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த
நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் நியாபகம் வரும்.

ஒரு குளிர் நிரம்பிய அதிகாலையில்தான் கொடைக்கானலின் லாட்ஜ் ஒன்றில் மிக
அதிகபட்சமாக குடித்திருந்தேன்.

குளிர் நிரம்பிய இந்த இரவில்தான் பாம்பே ஜெயஸ்ரி பாடிய பாரதியின் கவிதைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். வரும்கால குளிர் இரவுகளில் பாரதியும் பின் ஜெயாவின்
குரலும் என் நினைவுக்கு வரலாம்.

வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களை இந்த
குளிர்காலம் தந்திருந்தாலும் வெயிலைப்போல அத்தனை கொடுமையாக
இருக்கவில்லை. வெயில் கால நினைவுகளுடன் பிறகு வருவேன்.
(விடமாட்டோம்ல )

Wednesday, August 15, 2007

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!

காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ ஒரு வேலை என்னை
இயக்கி கொண்டே இருக்கிறது. அதனிடத்தில் இருந்து விடுபட நான் எடுக்கும்
முயற்சிகளின் முடிவு சலிப்புகளின் எல்லையாக உள்ளது. இந்த சலிப்பினால் நாப்பது
வயதில் ஏற்படுகிற மன அயற்சி இப்போதே வந்து விடுமோ என்று எண்ணுகிறேன்.
தினமும் எதிர்கொள்ளும் முகங்களுக்கு எதிர்ப்புன்னகை கூட வறட்டுத்தனமாக இதழில்
பொறுத்த வேண்டியதாக இருக்கிறது.

சில பெண்களுக்கு எத்தனை வயதானாலும் குழந்தை குணம் மாறுவதே இல்லை.
குழந்தைகள் பொய்யானவற்றை தனது தாயிடம் விவரிக்கும்போது கைகளை
ஆட்டி முகத்தை கோணலாக்கி உதடு சுழித்து சொல்லும் அது உண்மையா
இல்லையா என்பது தவிர்த்து நாமும் நம்மையறியாமல் ரசிக்கத் தொடங்கி
விடுகிறோம். அது சொல்லப்படும் விஷயங்களைப் பொறுத்து சந்தோஷமும்
துக்கமும் நமக்கும் ஏற்படும் குழந்தையின் உடல் மொழி தெரிந்தவர்களுக்கு
புரியும். இந்த குணங்களை ஒத்த ஒரு ஈராக்கிய பெண் எங்கள் அலுவலகத்தில்
பணிபுரிகிறாள்.

லெபனான் அல்லது எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில்
அதிகம் அவளும் அதுபோன்றொதொரு நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கக்
கூடும் என்ற நினைப்பில் இருந்தேன். இரண்டொரு தினங்களுக்கு முன் தான்
தெரிந்தது அவள் ஒரு ஈராக்கி என்று. பொதுவாகவே அரபுநாடுகளைச் சேர்ந்த
பெண்களுடன் அதிகம் பழகுவதில்லை அது ஏனோ பிடிப்பதே இல்லை. முக்கியமாக
அவர்களின் திரவிய மோகம், பகட்டு வாழ்க்கை. போலி புன்னகை. ஆனால் இந்த
ஈராக்கிய பெண்மணியிடம் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. சில குணநலன்களில் எனது
தாயினை ஒத்திருபதாலோ என்னவோ தெரியவில்லை. சில வேளைகளில்
அவளை மம்மா என்று கூட என்னை மறந்து அழைத்திருக்கிறேன் பதிலுக்கு
அவள் புன்னகை புரிவது சற்று கூடுதலாக என்னைக் கவரும்.

ஈராக் பெரியநாடு, சதாம் என்ற சர்வாதிகாரி ஆண்ட நாடு தற்போது அங்கங்கே
குண்டுகள் வெடிப்பதாக செய்திகளில் படிப்பது என்பதைத் தவிர வேறொன்றும்
தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருப்பதில்லை என்பதைவிட எனக்காக
ஒதுக்கிக்கொள்ளும் சிலமணி நேரங்களை செலவிட விருப்பமில்லை என்பதே
உண்மை.

ஈராக்கின் தெற்குப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு
வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக சற்றுமுன் வலைப்பதிவில்
வாசித்திருந்தேன். ஓய்வாக இருக்கும் சமயத்தில் இதுகுறித்து அவளிடம் பேச
வேண்டும் ஒருவேளை அவள் அந்த பகுதியினை சேர்ந்தவளாக இருப்பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது காயமடைந்திருப்பார்களா என்று விசாரிக்க
வேண்டும் என்று மனதினில் குறித்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் அதிகம் வேலை இல்லாத மாலைநேரம் அனைவரும் வீட்டுக்கு
திரும்ப சில மணித்துளிகள் இருந்தன. ஏதோ ஒரு சந்தேகம் கேட்க என்னறைக்கு
வந்தவளிடம் கேட்டேன். இதற்காகவே காத்திருந்தது போல நிறைய பேசினாள்.

குண்டு வெடித்து 150 பேர் இறந்து விட்டார்களாமே என்று கேட்டேன்.

குண்டு வெடிக்கவில்லை என்றால் இப்போதெல்லாம் போர் அடிக்கிறது. தினமும்
வெடிப்பதால் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. இழப்புகள், சேதங்கள் அதிகமாகும்
போதுதான் மீடியாக்கள் பெரியகட்டம் கட்டி செய்தி வெளியிடுகின்றன. இருபது
முப்பது என்றால் மூக்குப்பொடி விளம்பரத்தின் மூலையில் சிறிய பெட்டிச் செய்தியாக
வெளியிடுவார்கள். நேற்று நடந்த வெடிப்புகூட எங்கள் பகுதியில் நடந்ததுதான்.

தொலை தொடர்புசாதனங்கள், மின்சாரம் கூட இல்லாத பகுதியாகிவிட்டது எங்களின்
வசிப்பிடம். நான்கு ஊர்களுக்கு தள்ளி குண்டு வெடித்தால் கூட எங்கள் பகுதியில்
குண்டு சத்தம் கேட்கும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் அங்கிருந்த போது என் வீட்டினுள்
குழந்தைகளை வைத்து பூட்டி விடுவேன் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிடுவேன்
இல்லையென்றால் வெடி சத்தத்தில் எனது குழந்தைகள் அழ ஆரம்பித்துவிடும்.
எல்லாரையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவ்வப்போது தெருவழியாக செல்லும்
துப்பாக்கி ஏந்தியவர்கள் வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து
இழுத்துச் சென்று விடுவார்கள் அதனால் நான் மட்டும் வீட்டுக்கு வெளியே
நின்று யாருமில்லை என்று சொல்லிவிடுவேன். என்னைச் சுட்டால் கூட எனது
குழந்தைகளை காப்பாற்றிவிடுவேன் என்றார்.

நாங்களும் ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் நிலைமை
மிக மோசமாக உள்ளது. விரைவில் இது தீரும் இன்ஷா அல்லாஹ். பேசிமுடிக்கும்
நேரத்தில் அவளது முகம் அழும் தோரணைக்கு வந்திருந்தது. அவள் பேசியது
தெளிவான ஆங்கிலமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு புரிய வைக்க
அவளது கைகளை ஆட்டியும், சோகமான முகபாவங்களை குழந்தைகளை போல்
வலுக்கட்டாயமாக முகத்தில் திணிக்கும்போதும் வார்த்தைகளால் உருவாக்க முடியாத
புரிதல்களை எனக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். எனக்கும் நன்றாகவே புரிந்தது.

நேரம் முடிந்து அலுவலகத்தில் அனைவரும் வாகனங்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.
அவளின் தோழிகள் நெடுநேரம் அழைத்தமையால் மீதியை நாளைக்கு சொல்கிறேன்
என்று சென்று விட்டாள். வலுக்கட்டாயமாக புன்னகையை உதட்டுக்கிழுத்து விடை
கொடுத்தேன்.

என்னுடன் பேசும் பழக்கமில்லாத யாவரும் சந்தோஷமாக ஆரம்பித்து
சோகநிலையிலேயே முடிக்கின்றனர். ஒவ்வொருமுறை இப்படி ஆகும்போதும்
எனக்குள்ளேயே குற்ற உணர்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Friday, August 10, 2007

நானும் கவிஞர்தாங்க!!!

எந்த வேலைகளும் இல்லாத ஒருநாள் மாலை நேரம்.

ஆசிப் அண்ணாச்சியிடம் இருந்து போன்.

எப்படி இருக்கிங்க தம்பி அண்ணன்.

ஆஹா அண்ணாச்சி நல்லா இருக்கேங்க உங்க புண்ணியத்தில என்று சொனேன். எங்கே
இருக்கிங்க என்றேன்.

பேரணில இருக்கேன் தம்பி

என்னது துபாயில பேரணியா?!! என்ன சொல்றிங்க...

ஆமாய்யா முன்னால நூறு வண்டி பின்னால நூறு வண்டி நடுவில நானு இப்டி
போனா பேரணின்னுதான்யா சொல்லணும்.

அப்டின்னா தினமும் பேரணி காணும் தலைவர் நீங்க என்று சிரித்தேன்.

ஆமாம் துபாய்ல இருந்து ஷார்ஜா போற எல்லாருமே தினமும் பேரணி காணும்
தலைவர்கள்தான்.

இன்னிக்கு வழில பேச்சுத்துணைக்கு நீதான்யா சிக்கின. தினமும் அட்டவணை போட்டு
ஒவ்வொருத்தர்கிட்டயா பேசுவேன் இன்னிக்கு ஒன்னோட முறை என்று சொல்லி
கிட்டத்தட்ட நாப்பது நிமிடங்களுக்கு மேலாக பேசினார். இடையில் இரண்டு முறை
இணைப்பு தானாகவே துண்டித்துக்கொண்டது ஆனாலும் மனிதர் விடவேயில்லை
அடுத்த நொடியே மறுபடியும் அழைத்து பேசிக்கொண்டே இருந்தார்.

யாருடன் பேசினாலும் தனது உற்சாக நிலைக்கே கொண்டு வரும் சிறந்த
நகைச்சுவையாளர். அவ்வளவு நேரம் எப்படி பேசினேன் என்றே தெரியவில்லை.
நேரம் போனதே தெரியவில்லை அவ்வளவு உற்சாகம்.

யோவ் தம்பி போன வைய்யா விட்டா பேசிகிட்டே இருப்ப போலருக்கு. என் வீடு
வந்திடுச்சி என்று போனை வைத்துவிட்டார்.

துபாயில இருந்து ஷார்ஜாவுக்கு தினமும் போறவங்களுக்கு தெரியும் ட்ராபிக்கின் வலி.
காரை விட்டுட்டு நடந்து போனாவே அரை மணி நேரத்துல போயிடலாம் போலன்னு
தோணும். அப்படி ஒரு கொடுமையான விஷயம். அந்த நேரத்துல அவருக்கு போர் அடிக்ககூடாதுன்னு பேசினாராம். நல்லாருங்கப்பு என்று சொல்லி வைத்தேன்.

நானும் அய்யனாரும் ஒரு விழாவில் அண்ணாச்சியை சந்தித்தோம். விழாவுக்கு வந்த நண்பர்களிடம் இவர்தான் கவிஞர் தம்பி, இவர் பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார்
என்று கொஞ்சம் கூட சிரிக்காமல் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து வைத்தவர்களில் ஒருவர் "நானும் கவிஞர்தாங்க" என்று கைகுலுக்கினார். எனக்கு
சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏங்க இப்படி கவிஞர், கவிஞர்னு சொல்லி அறிமுகபடுத்தறிங்க என்றதற்கு, ஆமா
இல்லையா பின்ன? என்றார்.

கடந்த வாரம் அதிகாலை குறுஞ்செய்தியை படித்தபோது மனது கனத்துபோனது.
அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜெஸிலா ஒரு பதிவிட்டிருந்தார். நான்
இறந்து போனால் எந்தளவுக்கு வருத்தப்படுவீர்கள் என்று கேட்டிருந்தார். விளையாட்டு
போல சொன்னேன் அஞ்சு பத்து நிமிசம் வருத்தமா இருக்குங்க அப்புறம் சரியா
போயிடும் என்று. ஆனால் அதுபோல இல்லை என்பதை உணர்ந்தேன்.

அபிஅப்பா போன் செய்து ஆசிப்பின் தொலைபேசி எண் கொடுத்தார். எந்த
தொனியில் பேசுவது என்று யோசித்து யோசித்து பார்த்து விட்டுவிட்டேன். எவ்வளவு யோசித்தும் நாடகபாணி ஆறுதல் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.
மட்டுமில்லாமல் நான் ஆறுதல் கூறி தேற்றும் நிலை அவருக்கல்ல என்று
நினைத்தேன்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளர், நகைச்சுவை உணர்வுள்ளவர் தானாகவே இந்த
சோகத்திலிருந்து மீண்டு வருவார் என்று தெரியும்.

இரண்டு நாட்களுக்கு முன் மீண்டு(ம்) வருகிறேன் என்ற அவர் பதிவை பார்த்ததும்
மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆச்சரியப்படவில்லை.

*********************************************

அமீரகத்தில் இருக்கும் பதிவர்களுக்கு போரடித்தால் உடனே அய்யனாருக்கு போன்
செய்து கலாய்ப்பது வழக்கம். ரொம்ப போர் அடிக்கவே போன் செய்தேன்.

என்னய்யா சாயந்திரமாச்சின்னா கட்டிங் போடாம கைநடுங்கறதா கேள்விப்பட்டேன்
உண்மையா?

ஆமாய்யா இப்பலாம் வியாக்கிழமையாச்சுன்னா பனோரமா ராதிகாவ பாக்கலன்னா
ரத்தம் சூடாகிபோகுது.

ரொம்ப முத்திப்போச்சு சீக்கிரம் டிக்கெட்ட போட்டு நல்ல பீஸா பாத்து கல்யாணம் பண்ணிக்கறதுதான் நல்லது இல்லன்னா வேற மாதிரி ஆகிபோகும் பாத்துக்குங்க.

நாமள்லாம் ரிசர்வேஷன்பா. எவ்வளவு ஆட்டம் போட்டாலும் ஊர்ல ஒரு பீஸ்
நமக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்காங்க. தானாக முளைக்கும் கொம்புகளுக்காக
காத்திருப்பதை தவிர வேறொன்றும் இல்லை.

தம்பி ஒர் சந்தேகம் கேட்டா சொல்லுவியா?

நீ கேளு சாமி தெரிஞ்சா சொல்றேன். தெரிலன்னா லைன் சரியில்லன்னு கட் பண்றேன்,

நான் எழுதற எல்லா பதிவுகளும் பூங்காவில வந்திடுது. ஏன் தமிழ்மண நிர்வாகம்
என்னோட பதிவுகளுக்கு சிலபல டாலர்கள பரிசளிக்க கூடாது?.

தோ பார்றா... இது வேறயா நான் தமிழ்மண நிர்வாகிய பாத்தேன்னா இது குறித்து
பேசுகிறேன் என்று எஸ்கேப் ஆனேன். :-)

ஏதோ நல்லா இருந்தா சரிதான்.

**********************************************

கடந்த வாரம் அதி அற்புதமான கேள்வி ஒன்றை நம் குசும்பன் அவர்கள் கேட்டார்
(ஜெஸிலா வேண்டுகோளுக்கிணங்க குசும்பர் என்றே மரியாதையாக அழைப்போம்)
அதாவது குசும்பர் அவர்கள் கேட்ட கேள்வி "உலகிலேயே மிக விலை மதிக்க முடியாத
வைரம் எங்கே இருக்கிறதென ஸ்டேட்டஸ் மெசேஜில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நான் சொன்னேன். "உனக்குள்ளே வைரங்கள் இருக்கு அதை வெளியே தேடாதே" என்று.

என்ன புரிந்து கொண்டாரோ தெரியவில்லை."கருமம் புடிச்சவன்யா நீ" என்று ஓடிவிட்டார்.

**********************************************

கம்பெனியால் ஒதுக்கப்பட்ட அறையொன்றில் நானும் பங்களாதேஷை சேர்ந்த ஒரு
செக்யூரிடி ஆபிசரும் தங்கி இருக்கிறோம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை நாளிலும்
ஏதோவொரு காரணம் சொல்லி அறையிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.

ஏனென்றால் ஒரு பியரை குடித்துவிட்டு அய்யனாருக்கும் மேலாக உளருவது அவன்
வழக்கம் அதிலிருந்து எஸ்கேப் ஆகவே வெள்ளிக்கிழமை எங்காவது வெளியில் சென்று
விடுவது வழக்கம். இந்த வாரம் எங்கு செல்லவும் விருப்பம் இல்லாததால்
அறையிலேயே இருந்தேன்.

மதிய சாப்பாட்டுக்கு முன் ஒரு பியரை குடித்து முடித்திருந்தான். (கடைசி வரை
அவ்ளோதான் குடித்திருந்தான் என்பது வேறு விஷயம்). : - )

kathir "I am very soft one beer kick me lot" என்று போதையில் உளர ஆரம்பித்தான்.
எலேய் இதுக்குதாண்டா நான் ரூம்லயே தங்குறதில்ல என்று சொல்லாமல் அவனிடம்
பேச ஆரம்பித்தேன்.

எங்க ஒரு பியர் குடு குடிச்சிதான் பாக்காலாம் எவ்வளவு போதை வருதுன்னு
பாப்போம் என்று அவனிடம் இருந்து ஒவ்வொன்றாக வாங்கி பேசிக்கொண்டே
முடித்து விட்டேன்.

பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு குடித்த போதையனைத்தும் இறங்கிவிட்டது.

மவனே இனிமே ஒரு பியருக்கெல்லாம் ஆட்டம் போட்டேன்னு வச்சிக்க இதுதாண்டி
நடக்கும்னு சொல்றதுக்கு முன்னாடியே ஆள் ப்ளாட் ஆயிட்டான்.

*********************************************
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக பாவனா பெயரில் மெயிலும், மற்றுமொரு பதிவர்
பாவனா எனக்கு ராக்கி அனுப்புவது போலவும் மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உலகத்தில் யார் வேண்டுமானாலும் எனக்கு அக்கா, தங்கச்சி ஆகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால்
பாவனாவுக்கு மாத்திரம் அந்த உரிமை கிடையாது என்பதனை அவர்களுக்கு
சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சொல்லிக்கொள்ளும்படியாக வேறொன்றும் அதிசயமாக கடந்தவாரத்தில் நிகழ்ந்து
விடவில்லை அதனால்தான் இந்த மேலதிக சேர்ப்புகள்.

Saturday, July 07, 2007

எனது ஈரான் பயணம் - 2

முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்று
சொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர்தான் அவருடன் பேசிய அந்த மூன்று மணிநேரங்களில்
எவ்வளவு துயரம் எவ்வளவு இன்னல் அடைந்திருக்கிறார் என்று அறிய முடிந்தது.

பார்த்திபன் என்ற அவர் ஒரு இலங்கைத்தமிழர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பத்து
வருடங்கள் இருந்தவர். இயக்கத்தில் இருந்தவர் என்றதும் மிக ஆர்வத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன். இயக்கத்தில் இருந்த ஒருவருடன் நேரடியாக பேசுவத
இதுவே முதல் முறை.

என் கண்முன்னே என் உறவினர்கள் ஊர்க்காரர்கள் சித்திரவதை செய்யப்படுவதும்
கேள்வி விசாரணையில்லாமல் கொல்லப்படுதையும் காணச் சகிக்காமல் பள்ளியிலிருந்து
இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

இயக்கத்தில் சிறுவர்களை சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுப்பதை விட இளைஞர்களை
சேர்க்கலாம் இயக்கத்தில் நீங்கள் இணையும்போது பதினைந்து வயதிலிருக்குமா?

பதினைந்து வயதுதான். இயக்கத்தில் சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஆயதப்பயிற்சி
தருவதில்லை. முதலில் படிப்பு பின்பு அவரவர்க்கு எந்த துறையில் நாட்டம் இருக்கிறதோ அதைப்பொறுத்து படிக்க வைப்பார்கள். தேவையென்றால் வெளிநாட்டுக்கு கூட அனுப்பி
படிக்க வைப்பார்கள். பெற்றோர் இல்லாத பலர் இதுபோன்ற படிப்பினை பெற்றிருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அடிப்படை பயிற்சி கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பது கட்டாயமாக
சேர்க்க மாட்டார்கள் ஈழவிடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மட்டுமே இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள்.

2005ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவித்த போது இஅயக்கத்திலிருந்து வெளிவந்தேன்.
பின்னர் கருணா அணி பிரிந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவுடன்
இயக்கத்திற்கு திரும்பவில்லை.

இயக்கத்தில் இருந்த காரணத்தால் உள்ளூர் போலிசாரால் அடிக்கடி சிறை சென்று வர
நேர்ந்தது எந்த காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் சிறையில் கழித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம், லட்சம்னு கொடுத்து வெளியே வந்தேன். என்னுடன்
இருந்த பொடியன்கள் பலரை சிறையில் அடித்தே கொன்று விட்டார்கள். மிஞ்சியிருப்பது
நான் மட்டுமே. ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பா
இறந்திருப்பேன்.

சென்ற வருடம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை
பிடித்துச்சென்றார்கள். என்ன குற்றம் என்றே தெரியாமல் கையெழுத்திட்டேன். ஆறுமாதம்
சிறைதண்டனை. சிறை என்றால் சாதாரண சிறை இல்லை. மூன்றுக்கு ஆறு அளவில்
உள்ள சிறையில் இரண்டு பேர் நெருக்கியடித்து இருக்க வேண்டும். மலஜலம் கழிப்பது
எல்லாமே அதே அறையில்தான். வருத்தம் வந்து விட்டால்கூட மருத்துவ வசதி
கிடையாது. கேட்டால் அடிப்பார்கள் என்று வருத்தம் வந்த சேதிகூட யாரும்
சொல்வதில்லை. டாக்டர் குறித்த நாளில் பிரசவம் ஆனதா, என்ன குழந்தை
பிறந்தது, சுகப்பிரசவமா என்று எதுவுமே தெரியவில்லை.

கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் சந்திக்கும் ஒருநாளில் என் மனைவியும் குழந்தையும்
வந்திருப்பதாக சொன்னார்கள். மிகுந்த ஆவலுடன் முண்டியடிக்கும் கூட்டத்தின் நடுவில்
பயங்கர சப்தத்திற்கு இடையில் ஓடினேன். என் மனைவி முன் நின்றும் என்னை
அடையாளம் தெரியவில்லை. நான்கு மாதம் முகம் வழிக்காமல், முடிவெட்டாமல் உடல்
இளைத்து இருந்தேன். எதிரில் நின்ற என் தாய் தந்தைக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் மணம் செய்த பெண்ணுக்கு எப்படி தெரியும்.

முதல் முதலாக என் குழந்தையை தூக்கும்போது கையில் விலங்கோடு தூக்கினால்
எப்படி இருக்கும்? குற்ற உணர்ச்சியோடு திரும்பினேன். எதிரில் ஜெயிலர் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவசரப்படித்தினார். நான் பார்க்க விரும்பவில்லை என்றும் என்
குழந்தையை முதல் முதலில் கைவிலங்கோடு தூக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்து
நகர்ந்தேன்.

திடீரென்று கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. யார் என்ன பேசுவது என்று திகைத்த
போது மறுபடியும் அவரே தொடர்ந்தார்.

வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.
வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். வசதியாக வாழ்ந்த குடும்பம் இன்று தெருவிலும், மரத்தின் அடியிலும் குடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பொருள்களை
கொள்ளை அடித்து அப்படியே வீட்டை நொறுக்கி விடுவார்கள்.

முதலில் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன் நாளாக நாளாக போலிசார்
எல்லா வழக்குகளுக்கும் என்னையே தேடி வந்து இழுத்து செல்லவே. அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே என்று துபாய் வந்தேன்.

எங்க வேலை செய்யறிங்க?

எங்கயும் வேலை செய்யலங்க. வேலை தேடினேன் கிடைக்கவில்லை. விசா மேல விசா
போட்டு இது மூணாவது விசிட். வேலையும் கிடைக்கல பணமும் செலவாகிட்டே இருக்கு.
வீட்டுக்கு பணம் அனுப்புவது இல்லாமல் வீட்டிலிருந்தே வரவழைத்து செலவு செய்து
கொண்டிருக்கிறேன். நாட்டுக்கும் திரும்ப முடியாமல் இங்கயும் இருக்க முடியாமல்
ரொம்ப சிரமமாக இருக்கிறது என்றார்.

நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலைக்கு
முயற்சி செய்யலாம்தானே?

என் கூட்டாளி பொடியன்கள் எல்லாருமே சாதாரண வேலை செய்பவர்கள்தான் இருப்பினும்
அவர்கள் மூலமாக கிடைத்த ஓரிரு வேலையும் இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தேன் பிறகு
திருப்பி அனுப்பிவிட்டார்கள்.மேலும் செலவழிக்க பணமும் இல்லை இந்த விசாவிலாவது
வேலை கிடைக்காவிட்டால் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை.

என்ன வேலை தெரியும்?

டெய்லரிங் வேலை நல்லா தெரியும். துணிகளை வெட்டி வடிவா தைப்பேன் என்று கூறவே
அங்கிருந்து துபாயில் டெய்லர் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பேசி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டேன். ஆள் அனுப்புங்க வேலை தெரிஞ்சா எடுத்துக்கொள்கிறேன்
என்று கூறினார்.

விசா கிடைத்து துபாய் வந்ததும் மறக்காமல் போன் செய்யுங்கள் என்று தைரியம்
கூறிவிட்டு வந்தேன். இன்னும் எத்தனை காலம் அகதிகளாக இவர்கள் வாழ்க்கை
அமையுமோ தெரியவில்லை. கடைசியாக ஒன்று சொன்னார் இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் கொஞ்ச
நாளில் எங்கள் நாட்டிலே வாழும் நிலை ஏற்படும் என்று உறுதியாக கூறினார்.

மெய்ப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கள் கண்ணீருக்காக, எங்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள்
வெகுசிலரே. சுப.வீ,பழ.நெடுமாறன் அய்யா, வைகோ போன்றவர்கள்தான் என்றார்.
உடனே கொண்டு சென்றிருந்த ஆ.வி இதழில் சுப.வீ எழுதும் "அது ஒரு பொடா காலம்"
பகுதியினை காட்டினேன். ஆர்வத்துடன் படித்தார்.

இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.

எனது ஈரான் பயணம் - 1

கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாக
சென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசா
மாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேறி பிறகு புதிய விசாவில் உள்
நுழைய வேண்டும். முன்னர் வேலை பார்த்த கம்பெனி விசாவில் இருந்து புதிய
கம்பெனி விசாவுக்கு மாறுவதால் நானும் செல்ல வேண்டியதாயிற்று. முன்னரே இரண்டு
மூன்று முறை சென்று வந்த அனுபவம் இருந்தாலும் அதே விமானத்தில் சென்று
திரும்பியதால் ஊர்சுற்ற நேரமில்லை. இந்த முறை அபுதாபி திரும்ப விமானம்
இல்லாததால் இரண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.

நான் கொண்டு சென்றிருந்த N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
கூகிளில் சிக்கிய படம் இங்கே. அதுவுமில்லாமல் கொளுத்தும் வெயில் வேறு
கவுந்தடித்து தூங்கவே நேரம் சரியாக இருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஈரானிய மக்களில் பெரும்பாலோனோர்கு பார்சி தவிர வேறொரு மொழியும்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி தெரியாதது போல. ஒன்றிரண்டு
பேர் சுமாராக ஆங்கிலம் பேசினார்கள். விமான நிலைய அதிகாரிகள் கூட சைகை
மொழிதான் பேசினார்கள். எங்கள் ஊர் பேருந்து நிலையத்தை விட சற்று பெரிதான
விமான நிலையம். அறுபது பேர் அமரக்கூடிய விமானம். விமானத்தில் ஏறியதும்
பாதி விலைக்கும் வாங்கி வந்த விமானமோ என்று எண்ணத்தோன்றியது. விமானம்
கிளம்ப ஆரம்பித்ததும் அவரவர் குலசாமியை கும்பிடுவது போல பாவத்துடன்
காணப்படுவதை அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.

உலகத்திலயே சேச்சிகள்தான் அழகு என்ற எண்ணத்தை ஈரானிய பணிப்பெண்ணை
பார்த்ததும் சற்றே தளர்த்த நேர்ந்தது (சேச்சிகள் மன்னிக்க). ஈரானிய பெண்கள்தான்
உலத்திலேயே மிக அழகு என்று யாரோ எங்கோ சொல்லக்கேட்ட ஞாபகம்
வந்துபோனது. அந்த பெண்ணிற்கே கூச்சம் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று வில்லன் போல விமான பணிப்பையன் வந்துவிட்டான். (விமானத்துல
எல்லாம் எவண்டா பையன வேலைக்கு வைக்க சொன்னது?) விமானநிலையத்தில
இறங்கியதும் ஏதோ பணய கைதிகளை நடத்துவது போல விமான பணியாளர்கள் நடத்தினார்கள். அவர்கள் பேசும் மொழியின் தோரணைதான் அப்படியே தவிர
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

விமானநிலையத்தில் இறங்கியதும் நம் ஊர் ஆட்டோக்காரர்களை போல் அல்லாமல்
நாகரீகமாக எங்கள் ஹோட்டலில் தங்குங்கள் என்று கையை பிடித்து இழுத்தார்கள்.
எல்லோரும் வேனில் ஏறவே தயக்கத்துடன் கடைசி ஆளாக ஏறி ஹோட்டல் வந்ததும்
முதல் ஆளாக இறங்கினேன். நேராக பதிவு செய்யும் அலுவலகம் சென்றேன். அங்கேயும்
முக்காடிட்டு அழகான இரு பெண்கள் அவர்களிடம் அடுத்த விமானம் எப்போது என்று
விசாரித்தேன். அதெப்படி இவங்க மட்டும் மெழுகு மாதிரி முகத்தில மாசு மருவில்லாமல்
இருக்கிறார்கள் எந்த சோப்பு போட்டு குளிக்கறிங்கன்னு கேவலமான கேள்வி கூட கேட்க
நினைத்தேன்.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால்தான் ஹோட்டலில் அறையே தருவார்கள்.
அப்போதுதான் பாக்கெட்டை தடவி பார்த்தேன் காணவில்லை. அடங்கொய்யால
எவனோ அடிச்சிட்டான் போலருக்குன்னு மனசு பதறிப்போச்சு. பாஷை தெரியாத
ஊர்ல பாஸ்போர்ட்ட தொலச்சிட்ட எப்படிடா ஊருக்கு போவன்னு உள்ளுக்குள்ள
உதறல். கொஞ்சநேரம் கழிச்சி நிதானமா வந்த வழி போன வழி எல்லாம் தேடினேன்
நிதானமா உக்காந்து யோசிச்சேன். ஒருவேளை ரிசப்ஷன்ல தவற விட்டிருப்பனோன்னு
நேராக அங்கு சென்று அந்த ஈரானிய பெண்ணிடம் கேட்டேன். கேவலமான நமட்டு
சிரிப்புடன் எடுத்து நீட்டினாள். தேங்க்ஸ்னு சொல்லிகிட்டே திரும்பி பார்க்காமல்
வந்துவிட்டேன்.

தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே பல ஷாப்பிங் மால்கள் இருந்தது நான்
போன நேரம் கல்லா கட்டும் நேரமாதலால் அனைவரும் பூட்டிக்கொண்டு செல்ல
இருந்தனர். உலகத்துலயே சாயங்காலம் ஆறுமணிக்கு கல்லா கட்டுறவங்க இவங்களாதான் இருப்பாங்க. விலையெல்லாம் துபாயுடன் கம்பேர் பண்ணும்போது டபுள் டபுளா
விக்கறாங்க. ஒரு திராம்ஸ் கொடுத்தால் 2400 ஈரானிய ரியால் தருகிறார்கள். பெரும்பாலும்
அனைத்து கடைகளிலும் டாலர்,திராம்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். தரை
இறங்கியவுடன் லட்சாதிபதியாகும் ஆசையில் 100 திராம்ஸ் பணத்தை ஈரான் மதிப்பிற்கு
மாற்றிக்கொண்டேன். இரவு உணவுக்கு 28800 ரியால் செலவு செய்ததை இங்கு
பெருமையுடம் கூறிக்கொள்கிறேன்.

ஹோட்டலில் தொண்ணூரு சதவீதம் பேர் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்
பேசியது சைனா மக்கள் பேசுவது போல கொய்ங் மொய்ங் என்று இருந்தது. மீதி
பத்து சதவீத ஆட்கள் கேரளத்து சேட்டன்கள். இவனுங்க பண்ண சேட்டை கொஞ்சமா
நஞ்சமா... அறையில் இருந்த சேட்டன் ஒருவர் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேணயர்கள்
இந்த தமிழ்காரனுங்கள் என்று கூறினார்

அட நன்னாறி நாய... ஷகிலாவுக்கு கட் அவுட் வச்சிட்டு ஏண்டா இதபேசறிங்க?
என்று சொன்னவுடன் அடக்கி வாசித்தார்.

எவ்வளவு நேரம்தான் இந்த சேட்டன்கள் கூட சண்டை போடறது. அப்படியே பீச் பக்கம்
போலாம்னு போனேன். நம்ம மெரினா பீச் மாதிரியே இருந்தது நிறைய விசைப்படகுகள்
கரையில் நிறுத்தியிருந்தார்கள் ஆனால் அதன் நிழலில் காக்காய் கூட உட்காராமல்
வெறிச்சோடி இருந்தது ஏமாற்றாம்தான்.

வரும்வழியில்தான் ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது.

தொடரும்.

பி.கு: தொடர் எழுதணும்லாம் எழுதலங்க. பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா
வாசிக்காம போயிடுவாங்கன்னுதான் இரண்டு பதிவா போடறேன்.

Thursday, July 05, 2007

என்ன செய்ய???

"மச்சி என் ஃபோன புடுங்கி கால் ரெஜிஸ்டர் எல்லாம் செக் பண்றாடா" இவள
நம்பி எப்படி என் வாழ்க்கைய கொடுக்க முடியும் சொல்லு.

**********

"இந்தாளுக்கு விளம்பர இடைவெளைல பசிச்சா என்ன? எப்ப பாத்தாலும்
சீரியல் ஆரம்பிக்கும்போதுதான் பசிக்குது. ச்சே

**********

"எல்லா மாசத்துலயும் ஒண்ணுல இருந்து பத்து தேதிக்குள்ள" இருக்கற மாதிரி
செட் பண்ணிட்டா இருபதாம் தேதிக்கு மேல ஆறிப்போன காபி "டொக்"னு
சத்தத்தோட கிடைக்காம சூடா கிடைக்க வாய்ப்பு இருக்குமா?

**********

"அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ மேட்ரிமோனி புரொபைல்ல நீ பார்க்கறது
எல்லாம் உண்மைன்னு நம்பினா என்னை மாதிரிதான் ஆவ"

**********

"மச்சான் போன வைய்யி நான் அப்புறம் பேசறேன்"

ஏண்டா?

என் பொண்டாட்டி வர்றாடா...

நீ என்னமோ கள்ளக்காதலிகிட்ட பேசுன மாதிரி ஏண்டா பயப்படற? தங்கச்சிகிட்ட
நான் சொன்னேன்னு சொல்லு.

"சொன்னா மட்டும் வெளங்கிற போவுதா அவளுக்கு வைடா மாப்ள"

**********

"எத்தனை நாள்டா உள்ள இருந்த"?

"பதிமூணு நாள்"

கல்யாணம் ஆனவுடனே வெளிய விட்டுட்டாங்களா?

ம்ம்

ரெண்டு பேரும்தான ஓடிப்போனிங்க? ஏன் உனக்கு மட்டும் ஜெயிலு
அவளுக்கு வேற கல்யாணம்?

"......."

கேஸு?

வாபஸ் வாங்கிட்டதா ஸ்டேசன்ல சொன்னாங்க.

"இனிமேலாச்சும் பாத்து சூதானமா இருந்துக்க".

**********

இதெல்லாம் எங்கயோ பார்த்தது, கேட்டது, அனுபவிச்சது. அதது, அப்பப்போ,
அந்தந்த வயசுல வரணும். அது தானா வந்தாலும்,முக்கியமா வலுக்கட்டாயமா
வரவழைச்சாலும் ஆபத்துதான்.

எனக்கு தெரிஞ்சி ஏகப்பட்ட உதாரணங்கள் நட்பு வட்டாரத்துலயே இருக்காங்க
அதுல இன்னமும் ஒருத்தன் மீளாமல் இருக்கான். தேவையில்லாம அதுக்கு
முக்கியத்துவம் கொடுத்ததுனால அவனோட வாழ்க்கையே போச்சி. சமீபத்துல
அவனை பத்தி கேட்ட ஒரு செய்தியே இந்த மாதிரி டயலாக்கா அள்ளி
வீசுற அளவுக்கு போயிடுச்சி.

அப்படி என்னதான்யா இருக்கு அந்த வெங்காயத்துல?ன்னுதான்
கேட்க தோணுது.

Tuesday, June 19, 2007

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்

ஒரு முறை ஆமியில் இருந்த மாமா அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு வந்தார்கள்
அதை சமைச்சி சாப்பிட்ட பொறவுதான் இந்த வருத்தம் வந்தது. வகுத்துலே
ஊசி கொண்டு குத்துறாப்புல இருக்கி. நாட்டிலே டொக்டரிடம் காட்டினால்
வயித்துலே சிறிய கல் இருக்கிறதெண்டு சொன்னார்கள். ஆப்ரேசன் செய்ய
முடியாதெண்டும் மாத்திரை மூலமே சரிப்படுத்த முடியும் என்றும் சொன்னார்கள்.
சிறீலங்காவிலே பெரிய மருத்துவமனையிலே காட்டிதான் விமானமேறினேன்.
இங்க வந்தபிறகுதான் மறுபடி இந்த வருத்தம் வருதண்ணா. ஏன் எண்டுதான்
விளங்கல்லை.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு வந்த இலங்கை
நண்பரின் பேச்சுதான் இது. திடீர்னு அவருக்கு பயங்கரமான வயித்து வலி
வந்துடுச்சி. டாக்டர்கிட்ட தன் பிரச்சினைய எடுத்து சொல்ற அளவுக்கு ஆங்கிலம்
தெரியாத காரணத்தால் நானும் அவருடன் சென்றேன். அப்படி போனபோது
அவருடன் ஏற்பட்ட உரையாடலே மேல் உள்ளவை.

வாயிலை கடந்து செல்லும்போதும், வரும்போதும் கை அசைப்பார்.

ஏங்க வயித்துல ப்ராப்ளம் வச்சிகிட்டு எதுக்கு வந்திங்க? எல்லாம் சரியான பிறகு
வந்துருக்கலாமே!

அதுதான் அண்ணா நாங்க பண்ணின பாவம். எங்கட ஊரிலே எனக்கு சொந்தமாக
10 ஏக்கரும் ரெண்டு கிணறும் இருக்குது. கடந்த வருடம் கோயில் பூமியும் சேர்த்து
குத்தகைக்கு எடுத்து உழைத்தும் ஒண்ணும் காணல. கடன் வாங்கித்தான் விவசாயம்
பண்ணினோம். ரெண்டாவது முறை எடுக்கலாமெண்டுதான் நெல் விதைச்சேன்
அப்போதான் பிரச்சினை வந்து ஊரைவிட்டு ஓடிப்போனோம் அப்படியே பாடுபட்ட
நிலத்தை விட்டுபோட்டு. நல்ல விளைச்சலிலே ஆமிக்காரன் மாட்டை விட்டு மேய
விட்டுட்டான். மொத்தமும் கடனாகிப்போச்சு. அதெல்லாம் அடைக்கணும்
அல்லவா?

அதுக்கு ஏன் அவசரபட்டு வந்திங்க? ஏதாச்சும் தொழில் தெரிஞ்சாலும் பரவால்ல.
விவசாயத்தை மட்டும் தெரிஞ்சிகிட்டு வந்துட்டிங்களே. பாருங்க இங்க செக்யூரிட்டியா
நிக்க வச்சிட்டாங்க.

ஆமிக்காரனுக்கு பயந்தேதான் இங்கு வந்தேன். உழைக்கவெல்லாம் தெம்பிருக்கதுண்ணா
உடம்பிலே. ஆனால் உயிர்பயம்தான் கவலையாயிருக்கு. ரெண்டு வயசு பிள்ளைய
விட்டுபோட்டு வந்துட்டதுதான் இன்னும் வருத்தமாயிருக்குது.

பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு வந்துட்டிங்களே அவங்களுக்கு மட்டும் ஆபத்து
இல்லையா?

ஆண்கள கண்டாதான் அடிப்பான், உதைப்பான். பெண்களையும், குழந்தைகளையும்
அதிகம் துன்புறுத்த மாட்டான்.

மருத்துவமனை வந்திருந்தது. அந்த அரபி டாக்டரிடம் பேசி புரிய வைக்கறதுக்குள்ள
நாக்கு தள்ளிபோச்சு. நெஜமாவே இவன்லாம் டாக்டருக்கு படிச்சானா? இல்ல நம்மூரு
மாதிரியான்னு சந்தேகமாகிச்சு எனக்கு.

வழக்கம்போல, தேவையில்லாம எல்லா டெஸ்டும் எடுத்து வயித்துல கல்தான் இருக்குன்ற
பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. ஒரு ஊசி, மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.
எல்லாம் சேர்த்து 200 திர்ஹாமுக்கும் எட்டிவிட்டது. வந்து முதல் மாத சம்பளம் கூட
வாங்காமல் செலவாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. அந்த கவலையில் வயிற்று
வலி போயிடுச்சி.

இப்ப எப்படிய்யா இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவால்லங்கண்ணா

கொஞ்சம் சகஜ நிலைக்கு அவரை திருப்ப பேச்சை சுவாரசியமாக்க நினைத்தேன்.

ஏன்யா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?

மூண்டு வருடமும் ஐந்து மாதமும் ஆச்சு.

காதல் கல்யாணமா? வீட்ல பாத்தாங்களா?

சிறு புன்னகையுடன் வெட்கப்பட்டுக்கொண்டே காதல் கல்யாணம்தான் ஆச்சு என்றார்.

இந்த மாதிரி காதல் கதைகள கேக்கணும்னாவே கொஞ்சம் ஆர்வம் அதிகம் நமக்கு.
ஆமா எந்த இடத்துல பாத்திங்க முதல் முதல்ல? யார் முதலில் காதலை சொன்னது?

அவரும் சிரித்துக்கொண்டே என்ன இப்படியெல்லாம் கதைக்கறிங்களே என்று ரொம்பவே
கூச்சப்பட்டுவிட்டார்.

அட சும்ம சொல்லுங்க. அறைக்கு போக இன்னும் நேரமிருக்கு. உம்முனு இருக்காம
எதாச்சும் பேசலாமில்ல.

எங்கட மனைவிதான் முதலில் சொன்னது. பிறகு நானும் சொன்னேன்.

என்னன்னு?

மறுபடியும் வெட்கப்பட்டுவிட்டார்!

ஐ லவ் யூ எண்டுதான். வேறென்ன சொல்வார்கள். இதெல்லாம் கேள்வியெண்டு
கதைக்கறீங்களே அண்ணா!

சரி சரி கடைசியா ஒரே கேள்வி. பொண்ணு உங்க ஊரேவா? இல்ல பக்கத்து
ஊரா? எப்படி சந்திப்பிங்க என்ன பேசிப்பிங்க?

பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

யோவ்! உன்னயெல்லாம் என்ன செய்றது? சொந்த அத்தை பெண்ண யாராச்சும்
லவ் பண்ணுவாங்களா? நீங்க சும்மா இருந்தாவே பெரியவங்க அவங்களுக்குள்ள
பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.

சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.

ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.

Tuesday, May 29, 2007

VCC - 606207

சந்தேகமே வேணாங்க தலைப்புல இருக்கறது கிரிக்கெட்டு கிளப்பு பேருதான். வெங்கட்டாம்பேட்டை (ரோடு) கிரிக்கெட் கிளப் (VCC). மொதல்ல எங்க ஊரு கச்சிராப்பாளையம் கிரிக்கெட் கிளப்புன்னு வைக்கறதாதான் இருந்துச்சி ஆனா பாருங்க
வேற சில வெட்டி ஆபிசருங்க அதே பேர வச்சிட்டானுங்க அதனால VCC ன்னு
வச்சாச்சி இந்த பேரும் நாங்களா வச்சிக்கல தானா வந்துச்சி (இது என்ன பெருமையா?)
எங்க ஊர்ல இருக்கற மொத்தம் பத்து தெருவுக்கு எட்டு டீம் இருக்கும் இதுல
எல்லாரும் KCC ன்னு வச்சிகிட்டா டோர்னமெண்ட்ல கொழப்பம் வந்துடும். ஒருமுறை
வந்துச்சி டேய் இவனுங்க வெங்கட்டாம்பேட்டை தெருப்பசங்கடான்னு எவனோ
ஒருத்தன் சொல்ல எவனோ ஒருத்தன் எழுத அதுவே நிலைச்சி போச்சு.

அண்ணே வெங்கட்டாம்பேட்டைன்னு பக்கத்து குக்கிராமத்து பேர நம்ம டீமுக்கு
ஏன் வச்சிங்க ரொம்ப கேவலமா இருக்கு அதுவுமில்லாம அந்த ஊர் பசங்க
எங்கனாச்சும் ரப்பர் பந்துல விளாண்டு தோத்துட்டு வந்தா கூட நாமதான்
தோத்தோம்னு பேசிக்கறானுங்க அதனால அடுத்த போட்டி வர்றதுக்குள்ள
பேர் வச்சே ஆகணும்னு அடம்பிடிச்சானுங்க.

நாம பேர எவனுமே கேள்விப்பட்டுருக்க கூடாது ஆனா பயங்கர அர்த்தமுள்ளதா
வைக்கணும்னு யோசிச்சி யோசிச்சி வச்சதுல மூளை காய்ஞ்சதுதான் மிச்சம்.
ஏதேச்சையா ஸ்டார் மூவீஸ் பாக்கும்போது டெஸ்பெரடோ (Desperado )ன்னு
ஒரு படம் ஓடுச்சி ஆக்ஷன் படம் அட சூப்பரா இருக்குதேன்னு இந்த வார்த்தைக்கு
பாக்கறவன்கிட்டலாம் அர்த்தம் கேட்டேன் எவனுக்கும் தெரில. நம்ம சொக்கன்கிட்ட
கேப்பம்னு அவன்கிட்ட கேட்டா நாதாறி தெரியாததை தெரியாதுன்னு சொல்லவே
கூச்சப்படற நல்ல பய. அட அதுவாடா... அப்படின்னா பயங்கரமான மிருகம்
டைனோசர் மாதிரி ஆனா அது இப்ப அழிஞ்சி போச்சிடானு ஒரு பீலா விட்டான்.
நானும் நல்லாதான் இருக்குன்னு அந்த பேரையே வச்சிட்டேன்.

DCC (Desperado Cricket Club) இனிதே உதயமாகியது.

இப்பதாங்க ஒரு சிக்கல். இந்த பேர எந்த நாயுமே ஒழுங்க சொல்ல மாட்டீகிதுங்க

தாஸ்பார்டா
டாஸ்போடட்டா
டொஸ்பொராட்டா

கொஞ்சம் தேய்ஞ்சி போய் புரோட்டான்னு சொல்ல ஆரம்பிச்சானுங்க.

அண்ணே நாம அங்கங்க போய் தோத்துட்டு வரும்போதுல்லாம் பரோட்டா டீம்
கொத்து பரோட்டோ ஆகிடுச்சிடோய்னு கிண்டல் பண்றானுங்க வேற பேர்
வைக்கணும். வாய்ல நொழையாத இங்கிலிசு பேரெல்லாம் இருக்ககூடாது நல்ல
பேரா அழகா வைக்கணும்னு ஒருத்தன் அழாத குறையா வேண்டிகிட்டான்.

டேய் அடிக்கடி டீம் பேர மாத்தினா நல்லா இருக்காதுடா பாக்கறவனுங்க
பேர் கூட வைக்க தெரிலன்னு கிண்டல் பண்ணுவானுங்க.

இப்ப மட்டும் என்ன வாழுதாம். பேர மாத்துங்க இல்லாட்டி நான் கெஸ்ட்
ப்ளேயரா பக்கத்து தெரு டைகர் டீமுகு போயிடுவோம்னு மிரட்டிய பிறகு
பழைய பேரான வெங்கட்டாம்பேட்டை கிரிக்கெட் கிளப்புன்னு வச்சாச்சி.

ஆரம்பத்துல எந்த ஒரு நோக்கமும் இல்லாம சாயந்திரம், ஞாயிறுகள்ல பொழுது
போகணுங்கறதுக்காக விளையாட ஆரம்பிச்சது, பிறகு ஆள் அதிகம் சேந்து போனா
ரெண்டு டீமா பிரிச்சி விளையாடறது. அப்படி விளையாடும்போதுதான் பக்கத்து
ஊர்காரனுங்க பெட் மேட்ச் விளையாட வாங்கன்னு கூப்பிட, போனா செம அடி
குடுத்து அனுப்பனானுங்க. அப்படியே அடி வாங்கி அங்கங்க செயிச்சி நாமளும்
ஒரு டீம்னு ஆகிப்போச்சி. எங்க டோர்னமெண்ட் நடந்தாலும் நமக்கு ஒரு கடுதாசி
குடுத்து விடுவாங்க. தோ பார்றா நம்மளையும் ஒரு டீம்னு கூப்பிடறானுங்க
பத்திரிக்கைல பேரெல்லாம் போடறானுங்கன்னு ஊர் ஊரா போய் விளையாடினோம்.
மொத்தமா இருவது இருவத்தஞ்சு டோர்னமெண்ட் விளையாடியிருப்போம் ஆனா
ஒரே ஊர்ல மட்டும்தான் முதல் பரிசு வாங்கினோம்.

மொத மொதல்ல கிரிக்கெட் மட்டைய பிடிச்ச இடமே ரொம்ப வசதியான இடம்
நாலு பக்கமும் தடுப்புச்சுவர் வச்சிருக்க நெல்லு காய வைக்கிற களம். எங்க வீட்டு
பக்கத்துலயே இருந்ததால ரொம்ப வசதி. வெப்பன்ஸ்(பேட், ஸ்டிக்) எல்லாம் எங்க வீட்டு
மாட்டு கொட்டாய் ஓரமா இருக்கும் யார்வேணா எப்ப வேணா வந்து எடுத்துக்கலாம்
ஆனா பேட்டும் பந்தும் என்கிட்டதான் இருக்கும்.

அந்த நெல்லு காயவைக்கிற களம் எங்க ஊரு நாட்டாமைக்கு சொந்தமான இடம்.
அண்ணன் தம்பிக்குள்ள சண்டையா இருந்ததினால யார் மில் நடத்துறதுன்னி சண்டை
வந்து எவனுமே நடத்தாம நாங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம்.
கட்டாந்தரையா இருக்கறதுனால கார்க் பால் அடிக்கடி ஒடஞ்சு போகவே ஏரிக்கு மாறியது
எங்க மைதானம்.

பரந்து விரிஞ்ச ஏரி. நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)
அவ்ளோ தூரமெல்லாம் போக முடியாது நீயே போய் எடுத்து வந்தா அடுத்த பால்
போடுவேன். அடுத்த முறை ரொம்ப தூரம் போச்சின்னா அடிச்சவனே போய
எடுத்துக்கணும்னு அவசர ரூல் போட்டானுங்க. இப்படி பள்ளத்துல விழுந்தா அவுட்டு
கம்பத்த தாண்டி தூக்கி அடிச்சா அவுட்டுன்னு மேட்சுக்கு மேட்ச் விதிகள் மாறும்.
திடீர்னு அவுட்டாகிட்டோம்னா "டேய் போன மேட்சுல வச்ச ரூல்ஸ் அது, ஆட்டம்
ஆரம்பிக்கும்போதே அந்த ரூல்ச தூக்கியாச்சி தெரியாதா உனக்குன்னு ஏமாத்தலாம்.

வெளியூர் டோர்னமெண்ட் ஆடபபோனோம்னா மேக்சிமம் ஜெயிக்கணும்னு வெறியோட
விளையாடுவேன். கிரவுண்ட்ல கன்னாபின்னான்னு கோவம் வரும். சொந்த தம்பியா
இருந்தாலும் திட்டுவேன். எதிரணியெல்லாம் எனக்கு எதிரி அணியே இல்ல டீமுக்குள்ளயே
ஒரு எதிரி இருக்கான் அவந்தான் எந்தம்பி. கேட்ச் மிஸ் பண்ணிட்டான்னு திட்டுனோம்னா
உடனே கிரவுண்ட்லருந்து கிளம்பிடுவான் சரி அவன் மட்டும் போனா பரவாயில்ல வேற
ஆள போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஆனா இவரோட ஆதரவாளர்கள்னு நாலு
பேர கூட்டிட்டு போவாரு. அடுத்தமுறை திட்டமாட்டேன்னு சொன்னாத்தான் போராட்டத்த
வாபஸ் வாங்குவாரு.

சங்கராபுரத்துல பைனல்ல ஜெயிச்சி கப்பு வாங்கினது ஒருமுறைதான் எங்கள் அணி
முதல் பரிசு வாங்கியது. அதுக்கப்புறம் எங்க போனாலும் நாலாவதோ மூணாவதோ
உறுதி.

எல்லாருக்கும் சொந்த பேரு இருந்தாலும் கிரவுண்டுன்னு வந்துட்டா எவனுக்கும் ஒரு
பட்டப்பேரு வச்சே ஆகணும். பேட் மாதிரி கிரிக்கெட் விளாட அது ரொம்ப
அவசியம். அதனால அப்படியே கீழ குடுக்கறேன்.

கதிர் (நாந்தாங்க கேப்டன்)

சளி எ ஞானம் (கிரவுண்ட்ல எச்ச துப்பிகிட்டே இருப்பான் அதனால சளி)

கொப்பர எ சுப்பிரமணி (பீல்டிங் புலி)

சொக்கன் எ அசோக் (எங்கள் அணி வேகப்பந்துப்புயல்)

பீலாக்காடு எ மாதவன் (வாய்திறந்தாவே பொய்தான் அதனால இந்த அடைமொழி)

ஸ்லாட்டர் சக்தி (ஆஸி ப்ளேயர் ஒருத்தன் பேரு எதுகையா வருதுன்னு சேத்துகிட்டான்)

சோனி எ கவி (டீம்ல எனக்கு ஒரே எதிரி இவந்தான். சொந்த தம்பி வேற!!)

சொங்கி எ மணிவண்ணன் (இந்திய அணிக்கு ஏத்த பய)

ஏக்கே எ சரவணன் (பாதி மேட்சுல காணாம போயிடுவான்)

வெங்கலக்குண்டான் எ வெங்கடேசன் (குண்டானுக்குள்ள கோலிகுண்ட போட்டு உருட்டினா
என்ன சத்தம் வருமோ அதே மாதிரி பேசுவான், ஒண்ணுமே புரியாது)

மாண்டி எ ராஜேந்திரன் (இந்த பேர்எப்படி வந்துச்சின்னே தெரில, இவனுக்கு கட்டை
விரல் கிடையாது,நகங்கடிக்கிற பழக்கம் இவனுக்கு ஜாஸ்தி உணர்ச்சிவசப்பட்டு கடிச்சி
கடிச்சி கட்டை விரல் காணாமப்போயி மொழுக்குனு இருக்கு விரல் இருந்த ஏரியா.
இதனாலேயே கேட்ச் அடிக்கடி மிஸ் பண்ணுவான்)

இதத்தவிர சப்ஸ்டிடூட்னு ஒரு மூணு நாலு பேர் இருப்பானுங்க, பஸ்ல போக காசு
இல்லன்னா மட்டும் மாட்டு வண்டி வச்சிருக்க கோவிந்தன கூப்பிட்டுக்குவோம்
அப்பதான அவன் மாட்டு வண்டில ஓசில போக முடியும்.

விட்டா நான் மங்களம் போடாமா மங்களம் பாடிட்டு இருப்பேன். இத்தோட
முடிச்சிக்கிறேன்.

Thursday, May 24, 2007

அன்பு மலர்களே...

அந்தச் சிறிய பேருந்தில் ஒரு வரிசைக்கு ஐந்து உட்காரும் வசதி உள்ளது
மொத்தம் ஏழு வரிசை எல்லா இருக்கையிலும் ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
வண்டி கிளம்பி அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இரைச்சலான
நகரத்தை விட்டு வெளியே வந்ததாலோ என்னவோ பலர் தூக்கத்தை துணைக்கிழுத்திருந்தார்கள் சிலர் இழுக்க முயற்சி செய்து தோற்றவர்களாக
திரைச்சீலையை விலக்கி இருட்டு வெளியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலோரின் முகங்கள் நாளை பத்தோ முதல் திரும்ப ஆறுநாட்கள் வெயிலில் பன்னிரண்டு மணிநேர முதுகொடிக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற மலைப்பு
கலந்த சலிப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமைதியான பேருந்தில் திடீரென்று ஒருத்தர் போன்ல பேசறார்.

ஹல்ல்லோ... ஹல்லோ நாந்தாம்மா பைசல் பேசறேன். நல்லாருக்கிங்களா

ஆங் ஆங்

நான் நல்லா இருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை லீவு அதான் மச்சான பாத்துட்டு
வர துபாய் போயிருந்தேன். இப்ப துபாயிலருந்து அபுதாபி போயிட்டு இருக்கேன்.

ஜமீலா... ஜமீலா

நான் பேசறது கேக்குதா உனக்கு?

.....

ஆனா எனக்கு சரியா கேக்க மாட்டேங்குது. ஒரு நிமிசம் இரு நான் லவுடு ஸ்பிக்கர்ல போட்டுக்கறேன்.

ஆங் இப்ப சொல்லு.

............

என்னம்மா பண்றது போன மாசம் அர்ஜண்டுனு சொன்ன அதனால ரெண்டாயிரம் அனுப்பினேன். இந்தமாசம் இன்னும் சம்பளமே வரல. அந்த மலையாளிகிட்ட சம்பளம் கேட்டேன் மொத மாச சம்பளம் குடுக்கமாட்டோம் கம்பேனிலதான் இருக்கும்னு சொல்லிட்டான். பார்ட் டயம் பாத்துதான் அனுப்பினேன்.
அது கெடக்கட்டும் இஸ்கூல்ல சேத்துட்டியா புள்ளைய.

.............

இன்னும் நோட்டு பொஸ்தகம் வாங்கணுமா?

.....................

அட்மிசனுக்கே ரெண்டாயிரம் ரூவாயா?

....................


சரிம்மா அடுத்த மாசம் அனுப்பறேன். கொஞ்சம் செலவானாலும் புள்ளய படிக்க வைக்கணும்ல.

அப்புறம் நர்கீசுக்கு எப்படியிருக்கு?

........

என்னது பொறந்துடுச்சா?

.......

என்ன கொழந்த?

.....

பொம்பள கொழந்தையா? நல்லது.

சரிம்மா ரொம்ப நேரம் பேசறேன் அப்புறம் மிஸ்ஸுடு கால் குடுக்க காசு இல்லாம
போயிடும். வச்சிரவா?

...........

ஆமாம்மா

இப்பவே மாசத்துக்கு நாலு கார்டு போடறேன். அதுக்கு நூறு திராம்சு போச்சுதுன்னா
பொறவு சாப்பாடு, ரூம் வாடவ சேத்து மாசம் அய்ன்னூறு ஆகுது.

வச்சிரவா....

புள்ளைய நல்லா பாத்துக்கோ....

வச்சிர்றேன்.

வச்சிர்றேன்.

____________________
பஸ்ல இருந்தவங்க பாதிப்பேரு எழுந்து அக்னிப்பார்வை பாக்கறாங்க அவர.
ஊருக்கு போன் பேசினதுக்கு அப்புறம் ரெண்டு பேர ஜெயிச்ச மாதிரி ஒரு தெனாவட்டு
வந்து உக்காந்திருச்சு முகத்துல.

ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையுடனும் போன் உரையாடலின் தொனி மாறி
சில விஷயங்களை பேச ஆரம்பித்ததும் எனக்குள் இருந்த பரிதாபக்காரன் எழுந்து
உக்கார்ந்து அழ ஆரம்பித்தான். எல்லாத்தையும் நான் பாத்துகிட்டுதான் இருந்தேன்.

மறுபடி அமைதி கவ்வ தொடங்கிய நேரம்...

அண்ணே உங்கள பாத்தா தமிழ்காரரு மாதிரி தெரியுது, தழிழாண்ணே?

ஆமாங்க.

நானே உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்.

இதுதான் நான் அபுதாபிக்கு ரெண்டாவது முறையா வரேன். முசாப்பா ஏரியா
வந்துதுன்னா கொஞ்சம் சொல்லுங்க நான் அங்கதான் இறங்கணும்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

எனக்கு தெரியும்ணே நான் சொல்றேன். கவலபடாதிங்க.

நீங்க உரக்க போன் பேசிகிட்டு இருக்கும்போது தோ அங்க உக்காந்திருக்கானே அந்த பாக்கிஸ்தானி பாகல் ஆத்மினு உங்கள சொன்னானே..

அட அவனுங்க கடக்குறானுங்க குளிக்காதவனுங்க. வாரத்துக்கு ஒரு முறைவீட்டுக்கு பேசறேன் ஒழுங்கா பேசவேணாமா இவனுங்களுக்கு பயந்துகிட்டு குசுகுசுன்னு பேசினா இன்னும் அஞ்சு நிமிசம் எச்சா ஆகி பில்லு கூடிப்போயிரும்ணே!

முசாப்பாவுல எங்க போகணும். அங்க லேபர் கேம்ப்ல எனக்கு அங்க கம்பெனி அக்காமடேஷன் அங்கதான் போயிட்டுருக்கேன்.

என்னா வேலை?

கம்பியூட்டர்ல வேலங்க..

ஓகோ

நல்ல கம்பேனியா, நல்ல வேலையான்னு விசாரிச்சிட்டு வாந்திகல்ல? ஏன்னா என்னை மாதிரி கஷ்டபடவேணாம்ல.

நான் பாருங்க ஊர்லயே மாசம் எட்டாயிரம் சம்பளட்துக்கு வேல செஞ்சிட்டு
இருந்தேன். பக்கத்து வீட்டு கருவாயன் ரிட்டர்ன்ட் வரும்போது நாலு காணி வாங்கிப்போட்டான். அட நாலு காணி வேணாம் புள்ளய நல்லா படிக்க
வைப்போம்னு வந்தேன். ஏ.சி ரிப்பேர் வேலை செய்றேங்க.மாசம் நானூரு
அய்னூறுதாங்க மிஞ்சுது. அதான் வந்த கடனை அடைச்சிட்டு ஊருக்கு போகலாம்னு
முடிவு பண்ணிட்டேன். அடுத்த வருசம் ஏப்ரல் வந்துச்சின்னா ஒரு வருசம் முடியிது, அப்படியே ஊருக்கு போக வேண்டியதுதான். நான் தூக்கற ஏ.சி என்னை விட ஒரு
கிலோ சாஸ்தியா இருகுங்க. வேற வேலையும் தரமாட்டேங்கறானுங்க.

என்னை பேச விடாமல் அவரே பேசிக்கொண்டிருந்தார்.

உங்க பக்கத்து வீட்டு கருவாயன் மாதிரி நீங்களும் ஊருக்குள்ள பந்தா காமிக்காதிங்க
அப்புறம் உங்கல பாத்து இன்னும் நாலு பேரு கிளம்புவாங்க.

அட ஆமாங்க இங்க அந்த கருவாயன் எவ்ளோ கஷ்டபட்டு வேலை செய்றான்னு
பாத்தேன். அந்தளவுக்கு செய்ய நம்மகிட்ட தெம்பு இல்லிங்க இல்லன்னா நானும்
செய்வேன்.

என்னது பந்தாவா?

இல்லைங்க வேலை செஞ்சு சம்பாதிக்கரத சொன்னேன். இன்னும் பத்து நிமிசத்துல
முசாப்பா வந்துடும் இறங்குங்க. அண்ணே உங்க டெலிபோன் நம்பர் குடுங்க நான்
பேசறேன்.

மொபைல்தாங்க இருக்கு என்கிட்ட.

அட அதத்தாங்க சொன்னேன் நானு.

சொன்னேன்.

ரூமுக்கு வழி தெரியுங்களா?

தெரியாது ஆனா போயிடுவேன். டாக்சிக்காரன்கிட்ட சொன்னா விட்டுடுவான்ல. அது
போதும்.

சரிண்ணே பத்கிரமா போனதும் போன் பண்ணுங்க. அப்படி இல்லன்னா நான் அபுதாபி போனதும் போன் பண்றேன்.

சரிங்கண்ணே .

வர்றேங்க பைசல். வர்ற வெள்ளிக்கிழமை முடிஞ்சா வரேன் வந்து போன் பண்றேன்.

சரிங்கண்ணே.

உங்க பேர் சொல்லவேல்லயே!

கதிர்.

வாங்க கதிரண்ணே!

என்னிலும் பத்து வயது மூத்தவர் வார்த்தைக்கு வார்த்தை அண்ணே என்று அழைத்து கூச்சத்தை வரவழைத்தது.

அறையில் நுழையும்போது மணி பதினொண்ணு. ஒரு மிஸ்ஸுடு கால்.

யார்னு பாத்தா நம்ம பஸ்ல பார்த்தா ஆள்.

டாக்சி பிடித்து பாக்கிஸ்தானிகிட்ட தத்துபித்து இந்தி பேசி ரூமுக்குள்ள வர்றதுக்குள்ள
மறந்து போயிட்டேன். மெல்லியதாக ஒரு குற்ற உணர்ச்சி தாக்கியது.

கதிரண்ணே ரூம் போய்ட்டிங்களா?

நல்லபடியா வந்து சேந்துட்டேங்க, நீங்க எப்படி?

நல்லபடியா நானும் ரூம் வந்துட்டேங்க. நேரம் ஆச்சி நான் மறுபடியும் நாளைக்கு
மிஸ்ஸிடு கால் குடுக்கறேங்க. வச்சிர்றேன்.

சரிங்க பைசல். நாளைக்கு பாக்கலாம்ங்க!(நாளைக்கு பாக்க வாய்ப்பு இல்லன்னாலும்
இப்படி சொல்லி சொல்லி பழக்கமாகிடுச்சி :)) )

ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த இந்த நபர் இந்த ஒரு வாரமா தினமும்
சாயந்திரத்துல போன் பண்ணி நலம் விசாரிக்கிறார். நினைச்சி பார்க்கவே ரொம்ப
ஆச்சரியமா இருக்கு.

நாளைக்கு வெள்ளிக்கிழமை அபுதாபி போகணும்.

*******************

சிலபல காரணங்களால கடந்த ஒரு மாதமா பதிவு போடமுடியாம போச்சி.
கோடானு கோடி வாசகர்கள ஏமாத்தறதா குற்ற உணர்ச்சி தாக்கினதுனால
பெரும் முயற்சி எடுத்து இந்த பதிவை போடறேன். நம்ம கோபி ஊருக்கு
போறான்றத ஒரு தட்டி வச்சி அறிவிக்க முடியாத அபாக்கியசாலியாகிட்டேன்.
மன்னிச்சிடு கோபி அன்னான் சாரி அண்ணன்.

அட பின்னூட்டம் கூட போடமுடிலங்க. நல்ல நல்ல பதிவுகள் விட்டுப்போயிருக்கும்.
சரி பரவால்ல நான் வரலண்ணா என்ன குடி முழுகி போயிடும். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப கடந்த வாரம் சந்திச்ச ஒரு நபர பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணி எழுதியிருக்கேன்.


வரேங்க _/\_