எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label வலைப்பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label வலைப்பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, December 04, 2006

அமீரக வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

ஆசிப் அண்ணாச்சியின் தலைமையில் மற்றுமொரு மாபெரும் மாநாடு
அமீரகத்தில் இனிதே நடைபெற்றது. சந்திப்புக்கு வருவதாக சொன்ன பிற
நண்பர்கள் பலர் வர இயலாதபடி செய்து விட்டார் வருணபகவான். இந்த சந்திப்பு அருமையான ஒரு விவாதக்களமாக அமைந்தது. பல தலைப்புகளில் நண்பர்கள்
நன்றாக பேசினார்கள். குறிப்பாக அண்ணாச்சியும் பெனாத்தல் சுரேஷ் அவர்களும் நகைச்சுவையாக அதே சமயம் நல்ல கருத்துக்களுடன் பேசினார்கள்.மாநாட்டில்
கலந்து கொண்டவர்கள் விவரம்.


ஆசிப் மீரான்
பெனாத்தல் சுரேஷ்
நண்பன்
இசாக்
முத்துக்குமரன்
கவிமதி
லியோ சுரேஷ்
தமிழன்பு
சுந்தரராமன்
செண்பகராஜன்
தம்பி.

லியோ சுரேஷ் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். நேரம் தவறாமை
என்பது மிக முக்கியம் என்பதை முன்வைத்து பதிவுகளின் நோக்கம் என்ன?
எதிர்காலத்தில் இதனால் நாம் சாதிப்பது என்ன? என்று விவாதத்தை துவக்கினார்.

பதிவுகள் அவசியமா? பதிவுகளுக்காக பின்னூட்டமா? பின்னூட்டத்துக்காக
பதிவுகளா? தமிழ்மண கவிதைகள், பெரியார் போன்ற பல தலைப்புகளில்
விவாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட நேரத்திக்கு சந்திப்பு நடபெற்றிருந்தால்
இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இந்த சந்திப்பில் என்னுடைய பங்கு எனபது பார்வையாளனுக்கும் கீழேதான் என்பது சந்திப்பில் இடம்பெற்ற அனைவருக்கும்
தெரியும். நிறைய விஷயங்களில் தெளிவான பார்வை இல்லாததும் ஒரு காரணம்.

எழுத்து என்பது தொழில்முறை எழுத்தாளருக்கு மட்டுமே சொந்தமில்லை,
அனைவருக்கும் பொதுவானது. வாசகன் என்பவன் வாசிக்க மட்டுமே அல்ல
அவனுக்கும் சில கருத்துக்கள் உண்டு அதை பொதுவில் வைத்து விவாதம்
நடத்த உதவியாக இருக்கும் இந்த பதிவுகள் என்பது மிக அவசியம் என்று
அருமையாக பேசி விவாதத்தை துவக்கி வைத்தார். ஒரு விஷயத்துல
நமக்குன்னு ஒரு கருத்து இருக்கும் அதை பொதுவில் வைத்து விவாதிக்கும்போது
புதிய சில விஷயங்கள் தெரிய வரும், மற்றவர்களின் பார்வையையும் அறிய
ஒரு வாய்ப்பு. சில முரண்பட்ட கருத்துக்கள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு
மட்டுமே சொந்தமாக இருந்ததை இப்பொழுது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக வெளியிடலாம் என்பது ஒரு மிகப்பெரிய
சுதந்திரம். வலைப்பூவின் சக்தி குறித்து நண்பன் ஒரு செய்தி குறிப்பிட்டது
சுவாரசியமானதாக இருந்தது. இராக் யுத்தத்தின் போது யுத்தக்கள செய்திகளை
இரு பெரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு கொண்டிருந்தது. (CNN, Al JAZEERA) இரண்டுமே நடந்ததை நடுநிலையோடு வெளியிட்டதாக யாரும் நம்பபோவதில்லை.
அந்த நேரத்தில் இராக்கியர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதை எவ்வித சார்புத்தன்மையும் இல்லாமல் தன் வலைப்பூவில் எழுதியது பரபரப்பை
உண்டாக்கியது. உலகமே அந்த வலைப்பூவினை வாசித்தனர் என்றார். இது போல சுதந்திரமாக செய்திகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள ஏதுவாக உள்ள
ஒரு ஊடகம் இது. எழுதி வைத்து பேசறதுக்கே நம்மாள முடியாத போது
அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.

அடுத்து பதிவுகள் எழுதப்படுவது பின்னூட்டங்களுக்காக மட்டுமா?. சில
மொக்கையான பதிவுகள் (என் பதிவுகள் போல) பின்னூட்டங்கள் நிறைய பெறுவதும்,அருமையான படைப்புகள் பல கவனிக்கப்படாமல் போவதும் எதனை அறிவுறுத்துகிறது? வாசிப்பவர்கள் நகைச்சுவையை மட்டுமே விரும்புபவர்களா?
எதனால் இப்படி என்ற சுவாரசியமான விவாதம். என் பதிவில் நான்
பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை நேரமின்மையும் நேரவிரயமும்
காரணங்கள். நான் எழுதிய கவிதைகளை சேமித்து வைக்கும் ஒரு இடமாக
வலைப்பூவினை பயன்படுத்துகிறேன். என்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரி, உலாபேசி எண் அங்கேயே
உள்ளது. என்பதை இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில் சொன்னதை நினைவு
கூர்ந்தார் நண்பர் இசாக். வலைப்பூக்களில் ஒருபுறம் கடுமையான விவாதங்கள் நடைபெற்றாலும் ஒருபுறம் நகைச்சுவை பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தீவிரமான விவாதங்களில் பங்கேற்க விரும்பாதவர்களும் சர்ச்சைகளில் சிக்க
விரும்பாதவர்களும் நகைச்சுவை பதிவுகள் எழுதுவதையே தேர்ந்ததெடுக்கின்றனர்.
இதில் என்னுடைய கருத்து என்பது பின்னூட்டங்கள் என்பது அவசியமே
பதிவு வெளியிட்டு சில நொடிகளில் மற்றவர் கருத்தை பின்னூட்டங்களில்
அறிய முடிவது வரமே.

கவிதைகள் குறித்து பேச்சு வந்த போது கவிமடத்தலைவர் கவுஜைகளின்
மன்னன் ஆசிப் அவர்கள் பெரும்பாலான கவிதைகள் காதலை மையமாக
வைத்தே எழுதப்படுவது எதனால்? இதுபோல எழுதப்படும் கவிதைகள்
புலம்பல்கள் போலவே தோற்றமளிக்கிறது. காதல் என்ற பொருளைத்தாண்டியும்
நிறைய விஷயங்க உள்ளன. வெறும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டு
புனையப்படுவது கவிதை என்று சொல்ல முடியாது. கவிதைகளின்
பாடுபொருள் என்பது காதல் மட்டுமேயல்ல.

எளிதில் தீப்பற்றக்கூடிய, முடிவில்லாததுமாகிய பெரியார் என்ற விவாதம்
வந்த போது அது எளிதில் முடியக்கூடியதாக இல்லை. முக்கியமான எனது
கருத்து என்னவென்றால் பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.

அமீரகசெய்திகளுக்கு வலைப்பதிவாளர்கள் யாரும் முன்னுரிமை கொடுத்தால்
வாசகர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நண்பர் செண்பகராஜன்
குறிப்பிட்டார். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தின செய்திகள்
போன்றவைகளையும் பதிப்பித்தால் நன்று என்றார். இங்கு வெளியிடப்படும் செய்தித்தாள்களின் செய்திகளே தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்தான்.
வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் சட்டச்சிக்கல்கள் போன்றவைகளை
நயமாக எடுத்துரைத்தார் நண்பர் ஆசிப்.

நான் என்ன பேசினேன்னு கேக்கறிங்களா? நான் பேசவில்லை பேசுவதை கேட்டு
கொண்டிருந்தேன். என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது ஆமாம்.

மீதி அடுத்த பதிவில்!