எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, July 28, 2007

ஒப்பந்தக்காதல்.

ஒரு பெண்
ஒரு காதல்
ஒரு தீண்டல்
சில முத்தம்
இப்படியாக இன்றைய
காதல்கள் அரங்கேறுகின்றன
எனக்கும் அப்படியான
ஒரு பெண்
ஒரு காதல்
சில தீண்டல்
பல முத்தங்கள்
வேண்டுமாய்
அவசரமாக ஒரு காதல்
தேவைப்படுகிறது.

Friday, July 20, 2007

அன்பின் நிராகரிப்புகள்.

கண்டிப்பா மன்னிக்க மாட்டாள். ஏன் என்றால் அவள் உயிரோடு இல்லை. உயிரோடு
இருந்தபோது அவள் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பு எனக்கு புரியவே
இல்லை. எவ்வளவு கேவலமாக நடந்திருக்கிறேன் நான். விவரம் தெரியாத வயது
அது என்று எனக்கு நானே சமாதானம் சொல்ல மனம் ஒப்பவில்லை. தீடிரென்று
யாரோ ஒருவர் எனக்கு நினைவூட்டியிருக்கிறார் நம்மீது காட்டும் அன்பின் உதாசீனங்களை
எவரும் தாங்க முடியாதென்று. அவள் என்மீது காட்டிய அளவுகடந்த பாசத்திற்கும்
அன்பிற்கும் காரணம் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. தாத்தாவுக்கும் எனக்கும்
ஒரே மாதிரியான குணாதிசயங்கள் என்று அவளின் கடிதங்கள் படித்த போதுதான்
தெரிந்துகொண்டேன். எதையோ தேடும்போது கைக்கு சிக்கியது அந்த கடிதங்கள். பாட்டி
தன் கைப்பட எழுதியது நிறைய அடித்தல் திருத்தல்களுடன் அந்த கால எழுத்துக்கள்.
பொதுவாக எனக்கு கடிதங்கள் படிப்பதில் அக்கறையே இருந்ததில்லை அதுவும் கட்டாயமான அந்த முதல் இரண்டு "நலமறிய ஆவலை" என்றுமே விரும்பியதில்லை. அந்த இரண்டு ஆவல்களுக்குப்பின் தான் கடிதத்தின் சாரமும் அது தரும் சுகமும் எத்தனையோ
ஆறுதல்களுக்கு சமம் என்று அறிந்திருக்கவில்லை.

தனித்து விடப்பட்டதனால் வந்த வெறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே
விடுதிக்கு வரும் கடிதங்களை கூட படிக்காமல் கத்திக் கப்பல் செய்து வாய்க்காலில்
விட்டிருக்கிறேன். இதுபோல எத்தனை அன்பின் நிராகரிப்புகளை செய்திருப்பேனோ
தெரியவில்லை அதற்கெல்லாம் ஒருசேர மன்னிப்பு கேட்கத்தான் செல்கிறேன். அவளே
இல்லாத வீட்டில் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்ற குழப்பம் இல்லை. அவள் புழங்கிய பொருள்களிடம், நடந்த வீதிகளில், பின்கட்டு மரத்திடம், முக்கியமாக அந்த கழனிதொட்டியிடம் கேட்க வேண்டும். பங்கு பாகம் பிரிக்கும்போதுகூட அந்த வீட்டை என்பேரில்தான் எழுதி வைத்திருக்கிறதாக கேள்விப் பட்ட போதும் "யாருக்கு வேணும் அந்த வீடு" என்றுதான் எண்ணினேன். பத்துக்கும் மேற்பட்ட அந்த கடிதங்களை வாசிக்க மொத்தமாக பத்து நிமிடத்தைக்கூட ஒதுக்காமல் விட்டதன் குற்ற உணர்ச்சி முகத்தில் படர்வதை உணரமுடியாமல் இல்லை. என்ன செய்வது வயதின் கோளாறு, தனிமையின் கர்வம் அது.

ச்சே இதுபோல குழந்தைத்தனமா முன் எப்போதுமே இருந்ததில்லை. தற்சமயம்தான்
மாற்றிக்கொள்கிறேனே ஒழிய முழுவதுமாக என்னால் இப்படியே இருப்பது சாத்தியமில்லை.
எப்போதோ செய்த தவறுகளுக்கு இப்போது வருத்தம் தெரிவிக்க போகிறேன் அவ்வளவே.
ஆனால் பெறவேண்டியவர்கள் என்று எவரும் அங்கு இல்லாததுதான் மனதை என்னவோ
செய்கிறது. எதோ கடனை செலுத்த திட்டம் போடுவது போல மனதின் ஓட்டங்கள்
இருக்கிறது அதற்கேற்பவே என்முகபாவங்களும் மாறுமோ? அப்படி இருக்குமாயின்
இப்பொழுதே அதுகுறித்த திட்டங்களும் மனனங்களும் நிறுத்திக்கொள்வேன் எனை
பார்ப்பவர்கள் கண்கள் என்னைப்பற்றி சிறிதும் எடை போடாதவாறு அதாவது என்
மனஓட்டங்கள் யாருக்கும் புரியாதவாறு இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
இதே போன்று மவுனமாக சிந்தித்துக்கொண்டே வந்தால் சற்று நேரத்தில் தலைவலி
வருவது திண்ணம் என்று தோன்றியது. கவனத்தை வேறு எதிலாவது திருப்பவேண்டும்.

எப்படியும் இன்னும் இரண்டு மணிநேரம் பயணம் செல்லவேணும். பேருந்திலும் அதிகம்
கூட்டமில்லை மவுனமான ஒரு சவ ஊர்வலத்தை போல பேருந்து சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து எதற்காக எங்கு சென்று கொண்டிருக்கிறார் என்று
தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒவ்வொருவர் முகமாக பார்க்க ஆரம்பித்தபோது
ஒருவரின் முகமும் எதையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஒருவேளை எனைப்போலவே
கர்வமுள்ளவர்களுடன் பயணிக்கிறேனா என்ற சந்தேகம் வந்து போனது.

மனதோடு ஒத்திகை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.கனகப்பிள்ளையைத்தான்
ஞாபகத்திற்கு கொண்டு வரவேண்டும். அவர்மீதுதான் நான் மித மிஞ்சிய நேசம்
வைத்திருந்தேன் , எனது தாத்தாவாகிய அவரின் கம்பீரம், அலட்சியப்பார்வை,
சுருட்டு இவையெல்லாம் மிகவும் பிடிக்கும். மாதமொருமுறை சந்தைக்கு சென்று
வட்டமாக இருக்கும் பெரிய பெரிய புகையிலையை வாங்கி வந்து அவரே சுருட்டு
தயாரித்துக் கொள்வார். அவருடன் சந்தைக்கு போவதென்பது எப்போதாவது
அரிதாக நடக்கும் நிகழ்வு ஆனால் அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி
காத்திருக்கிறேன்.

இளமுருகு அத்தனை நாளாக சொம்பில் தண்ணீர்தான் கொடுக்கிறார் என்று நினைத்தேன்.
அது பின்னொரு நாளில் பெண்களின் ஒரே ஆசையான சுமங்கலியாக போய்ச்சேர வேண்டும் என்ற கனவினை தகர்த்து எரிந்தது. கனகப்பிள்ளை சாப்பிடும்போது அந்த சொம்பு
பக்கத்திலேயே இருக்கும் அவ்வப்போது எடுத்து மடக் மடக்கென்று குடித்து விட்டு
ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு சாப்பிடுவார். சோடா குடிக்கிறார் என்றுதான் கடைசி
வரை நினைத்தேன் அப்படிதான் அவரும் எனக்கு சொல்லியிருந்தார்.

தாத்தா உயிரோடு இருந்தவரை அதிகமாக இருவரும் பேசிக்கொண்டதே இல்லை.
தாத்தாவின் அறைக்கு சாப்பாடு கொண்டு போகும்போது பேசும் ஓரிரு வார்த்தைகள்
தவிர அவர்கள் பேசிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் இருவருக்குள்ளும்
அன்பு மட்டும் வானளவு என்பதை நான் அறிவேன். உண்டு முடித்த பின் தட்டு
சமையலறைக்கு திரும்ப வரும் வரை எதற்காகவோ காத்திருப்பது போல மனது எங்கும் ஒட்டாமல் காணப்படும் அவளின் முகத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம். சாப்பிட்டபின்
தட்டில் கொஞ்சம் அதிகமாக மீதம் வைத்திருந்தால் கூட அவளின் முகத்தில் குழப்ப
ரேகைகள் படர்ந்து விடும்.

இப்படி எளிதில் முகபாவனைகள் மூலம் தன் உள்மனத்தை காட்டிக்கொடுப்பவர்களைதான்
எனக்கு பிடிப்பதில்லை பாட்டியும் அப்படிப்பட்ட ஒருத்திதான். உண்மையை சொல்லப்போனால் உள்ளத் தூய்மை உள்ளவர்கள் அவர்கள். அதைத்தான் நான் குருட்டு மனப்பான்மையுடம் உதாசீனப்படுத்தி காயப்படுத்தி இருக்கிறேன்.

தாத்தாவின் முகமும் குணாதிசயங்களும் எனக்கு அமைந்திராவிட்டால் என்மீது இவ்வளவு
பிரியம் வைத்திருப்பாளா என்பது சந்தேகம்தான் என்று எண்ணியிருந்தேன்.

"வெத்தல பாக்கு போட்டுட்டு என்கிட்ட பேசாதே, முத்தம் கொடுக்காதே" உன் வாய்
ரொம்ப நாத்தம் அடிக்குது என்று ஒருமுறை சொன்னதற்க்காக வெற்றிலை போடுவதை நிறுத்திவிட்டாள். அப்போதுகூட காரணமில்லாமல் மேலும் வெறுப்பை உமிழ்ந்துதான் வந்திருக்கிறேன். ஆரம்பம் முதலே காரணம் இல்லாமல் வந்துவிட்ட வெறுப்பு சிறுசிறு விஷயங்களுக்கு கூட தன் வக்கிரத்தை உஷ்ணமாக உதிர்த்து வந்தது. ஒருவேளை வயதின் காரணமாக தளர்ந்து விட்ட தோளினாலும், இடுங்கிய கண்களினாலும் வண்ணாத்தி வீட்டு சித்ராவைப்போல டால்கம் பவுடரின் வாசனை அவள் மீது வீசாமல் இருந்ததாலும்
அவளை வெறுத்திருப்பேனோ தெரியவில்லை. சிறுவயதில் இருந்தே வலுக்கட்டாயமாக விடுமுறைகளுக்கு அங்கு அனுப்பப்பட அதுவே தொடர்ந்து விட்டது.

விடுமுறை இல்லாத ஒரு பள்ளிநாளில் அவள் இறந்து போனாள்.

சாவுக்கு கூட காரணம் சொல்லி வராமல் இருந்து விட்டேன். என்ன ஒரு பிறப்பு
நானெல்லாம். மனிதரின் இறப்புக்கு கூட செல்லாமல் விட்டது பெருந்தவறு.

பேருந்தில் ஏறிய கூட்டம் என் கவனத்தை சிதைத்து நிகழ்வுலகுக்கு எனைக்கொண்டு
வந்தது. ஒரு நடுத்தர வயதுப்பெண் இடுப்பில் குழந்தையுடன் தட்டுத் தடுமாறி ஏறி வந்தவள் என் அருகில் வந்து நின்றாள் இடுப்பில் இருந்த குழந்தையை மடியில் வைத்துக்கொள்ளுமாறு பணிவுடன் எனை கேட்டுக்கொண்டவள், நான் மறுக்க மாட்டேன் என்று என்னைப்பாராமல்
என் மடியில் உட்காரவைத்தாள். முகத்தில் இருந்து அறிந்து கொண்டாளா நான் மறுக்க மாட்டேன் என்று? வாழ்வில் முதல் முறையாக இதுபோன்ற கேள்விகள் எழுந்து என்
கர்வத்தை ஓட ஓட விரட்டி என்னை ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச்செல்கிறது.

அவளை ஏறிட்டு பார்த்தேன். வண்ணாத்தி வீட்டு சித்ரா தான் அவள். இரண்டாவது முறை
பார்த்து உறுதி செய்துகொண்டேன். நாந்தான் செல்வா என்று அவளிடம் சொன்னால் மிகுந்த
சந்தோஷப்படுவாள். பால்ய கால பள்ளி விடுமுறையின் பாதிபகல் நாட்கள் அவளுடன் தான்
ஆற்றங்கரையில் இருந்திருக்கிறேன். எப்படி எனை அடையாளம் தெரியாமல் போனது? கல்யாணமாகி குழந்தை பெற்று விட்டதால் சீக்கிரமே அவள் முகம் மூப்பெய்திவிட்டது.

உன் பேர் என்னப்பா?

"செல்வகணபதி"

என்ன படிக்கற?

"மூணாவது படிக்கிறேன்"

எப்படியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆகியிருக்கும்.

அவளையே திருமணம் செய்வதாக ஆற்றங்கரை நாட்களில் உறுதி கூறி இருக்கிறேன்.
அவளும் சிரித்தபடியே என் தலை கோதிவிட்டிருக்கிறாள்.

மணமேடையில் இருந்தபோது எல்லா மணமகளுக்கும் இருப்பதுபோல என் வருகையை
அவள் எதிர்பார்த்திருக்கக் கூடும். வராமல்போகவே கிடைத்த வாழ்விற்கு தன்னை
தகுதிபடுத்திக்கொண்டிருப்பாள்.

தங்கம் என்ற எனது பாட்டியின் பெயருடன் செல்வம் என்ற பெயரையும் இணைத்து
தங்கச்செல்வன் என்று கணபதிப்பிள்ளைதான் எனக்கு பெயர் வைத்ததாக அம்மா
சொல்வாள்.

செல்வா என்று அழைக்கப்பட்ட என் பெயருடன் கணபதி என்ற பெயரினை
இணைத்து தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறாள் சித்ரா.

பழைய நினைவுகளில் மூழ்கிய நான் என்னையறியாமல் அவளை பார்த்து புன்னகைத்தேன்
கழுத்தை வெட்டி வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். இன்னும் எனக்கு சிரிப்பு அதிகமானது.
திருமணம் பெண்களை எத்தனை கட்டுக்கோப்பாக மாற்றுகிறது என்ற வியப்பு.

ஊர் வந்து விட்டிருந்தது.

மகனை வெடுக்கென்று பிடுங்கி எடுத்துக்கொண்டு இறங்குகிறாள். என்ன பெண் இவள்?

தாத்தா இல்லாத ஊருக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக பதினைந்து வருடங்கள்
இருந்திருக்கிறேன். கடிதம் படித்திராவிட்டால் இங்கு வராமல் அப்படியே இறந்திருப்பேனோ
என்னவோ!

மாமா எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார் போல. ஒருவேளை அம்மா
போன் மூலம் தகவல் சொல்லி இருப்பாள்.

வாங்க தம்பி!

வரமறுத்து பின் வந்து ஒட்டிக்கொண்டது புன்னகை.

வரேன் மாமா!

வழக்கான விசாரிப்புகள்! இதெல்லாம் எப்பதான் நிறுத்த போறாங்களோ!

"எல்லாம் நல்லா இருக்காங்க மாமா."

அத்தை, சுகுணா, சுகந்தி எல்லாம் எப்படி இருக்காங்க?

எல்லாம் நல்லா இருக்காங்க தம்பி.

"கணபதிபிள்ளை பேரன் மாதிரி தெரியுதே" டீக்கடைக்காரர்.

ஆமாங்க அவரோட பேரன்தான் நான். செல்வியோட மகன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

பாட்டி வீட்டுல யார் குடியிருக்காங்க மாமா?

யாருமில்லப்பா, பூட்டிதான் கிடக்குது. கிழவி சாகும்போது "என் பேரனத்தவிர
வேற யாரும் இங்க குடியிருக்க கூடாது"ன்னு உன் பேர்ல உயில் எழுதி வச்சிட்டுதான்
போச்சு.

கண்கள் ஈரமாவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

Monday, July 16, 2007

அவியல்கள் + வலைப்பதிவர் சந்திப்பு

தலைப்புக்காக பெனாத்தல் சுரேஷுக்கு நன்றி.

Bus Conductor

எதாவது ஒரு கூட்டுறவு வங்கி கிராமத்துக் கிளையின் உதவியுடன் ஒரு முழு
மலையாளப்படத்தையும் எடுத்து விடலாம். ஷகிலா திரைப்படங்கள் நீங்களாக
அனைத்து மலையாளப்படங்களுக்கும் இது பொருந்தும். கூடவே திரையில் தன்
முகம் தெரிந்தால் போதும் சம்பளம் கூட தேவையில்லை என்று ஆசையில்
இருக்கும் சிலர் இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்துவிடலாம். வசனம் எழுத
பேனா வாங்கும் செலவு மட்டும் கணிசமாக இருக்கும். (அம்புட்டு வசனம்யா!
க்ளைமேக்ஸ்ல கூட நம்ம கேப்டன் இந்தளவுக்கு பேச மாட்டாரு) ஆனால்
எந்த தளத்தில் இயங்கும் கதையானாலும் சரி அதன் ஆழம் வரை சென்று
உருப்படியான விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதே பாராட்டும்
விஷயம்தான்.நகைச்சுவையில் இவர்களை அடிச்சிக்க ஆளே இல்லை. யாரையும்
புண்படுத்தாத, இயல்பான வசனங்கள் கொண்ட நகைச்சுவை காட்சிகள் ரசிக்க
வைக்கும்.

பாவனாவின் நடிப்பை திறனாய்வு செய்வதற்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சியில்
அவரின் சில படங்களை பார்த்தேன் அவற்றின் விளைவாக தெரிந்ததே இது.
அழகைத்தவிர குறிப்பிட்டு சொல்லும்படியாக பாவனாவிடம் ஒன்றுமில்லை.
நடிப்புத்திறமை கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. பக்கத்து அறையில் தங்கியிருக்கும்
சேட்டனிடன் அழுது அடம்பிடித்து வாங்கிய குறுந்தகட்டை வாங்கி பார்க்க
தொடங்கினேன் முழுவதுமாக ஒரு வட்டு முடிந்தும் பாவனாவை காணவில்லை
மறுவட்டின் கடைசி நாப்பது நிமிடங்களுக்கு மட்டும் மேக்கப் போடாமல்
கிளிசரின் மட்டும் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். கதைன்னு பாத்தா
ஒண்ணும் கிடையாது லைட்டா விக்ரமன் வாடை அடிக்குது. எவ்வளவுதான்
அடிச்சாலும் க்ளைமேக்ஸ்ல மட்டும்தான் கதாநாயகன் அடிவாங்கி, அவமானபட்டு
உண்மைய போட்டு உடைக்கறது. மத்தபடி நகைச்சுவை ப்ரமாதமாக இருந்தது.
கமலுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் மம்முட்டிதான்.
அதனாலதான் இந்த படத்தை பார்த்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க.

தியேட்டர்களில் வெளிவராத திரைப்படத்துக்கு கூட விமர்சனம் எழுதி படமே
வேஸ்ட், பணம் வேஸ்ட் என்று ஒப்பாரி வைக்கும் சுப்புடுக்கள் இந்த மாதிரி
லோபட்ஜெட் படங்களை கண்டுகொள்வதே இல்லை அதனால் துணிந்து
எழுதுகிறேன்.

கருப்பசாமி குத்தகைக்காரர்.
நினைத்து நினைத்து பார்த்தேன்.
காசு இருக்கணும்.

இப்பலாம் ரெண்டு குறுந்தகடு அடங்கிய ஒரு படத்தை பாத்து முடிக்கறதுக்குள்ள
தாவு தீர்ந்துடுது. இந்த மூணு படங்களை பார்க்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள்
தடங்கள்கள், இன்னல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பதிவாக மட்டுமே
போட்டு உங்களை இம்சிக்க முடியும்.

க.சா.கு

இந்த இயக்குனர் படம் இயக்கிக்கொண்டிருக்கையில் எல்லா இயக்குனர்கள் சொல்வது
போலவே "நான் சொல்லப்போற காதல் ரொம்ப வித்தியாசமானது" என்று சேனலே
இல்லாத டீவில் அளந்து விட்டுக்கொண்டிருந்தார். இந்த வசனத்தைதான் எல்லாரும்
சொல்லிட்டு சூப்பர் டூப்பர் மொக்கைகளா எடுத்துகிட்டு இருக்காங்க. அதே வரிசைல
ஒரு மொக்கையாத்தான் இதையும் சேர்க்க முடியும்.

படத்துல கரணை பார்த்ததுமே ராமராஜன பாத்த மாதிரி இருந்துச்சி. அப்படியே
கரகாட்டக்காரன் ராமராஜன் முகம். ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் மட்டும் மிஸ்ஸிங்.
படத்தோட கதைய சொல்ல ஆரம்பிச்சா எல்லாரும் ஓடிருவிங்க. ஏன்னா அது ஒரு
கதையே இல்ல. கதாநாயகிக்கு பொண்ணுக்கு உண்மைலயே படிச்சி டாக்டராகணும்னு
ஆசை இருந்தா கண்டிப்பா டாக்டர் ஆகலாம். அதைவிட்டுபோட்டு எந்த நேரமும்
கண்ண கசக்கிகிட்டு கரண் பின்னாடி போய் என்னைய படிக்க வைங்க படிக்க
வைங்கன்னு படம் முழுக்க கெஞ்சிகிட்டு இருக்குது. ஏம்மா நீ பாட்டுக்கு காலேஜுக்கு
போய் வரலாம்ல ஏன் சின்ன புள்ள மாதிரி அடம்புடிக்கற?
கடைசி வரைக்கும் பொறுத்து பார்த்து கடைசியில் போங்கடான்னு விட்டுட்டேன்.
ஒருவேளை க்ளைமேக்ஸ்ல இயக்குனரு எதாச்சும் ட்விஸ்ட் வச்சிருந்து தெரியாத்தனமா
அதை மிஸ் பண்ணீருந்தேன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க.

நினைத்து நினைத்து பார்த்தேன்.

இன்னிவரைக்கும் இந்த படத்தை ஏண்டா பாத்தோம்னு நினைச்சி வேதனைப்படறேன்.
இன்றைய கல்லூரி மாணவிகள் தமிழை எப்படி டமிலாக பேசுகிறார்கள் என்பதனை
நாசூக்காக படத்தின் நாயகி மூலம் இயக்குனர் சொல்ல வருகிறார் என்று நினைத்து
ஆஹா பெரிய ஆள்தான் போலருக்குன்னு நினைச்சேன். கடேசில பாத்தா அந்த
கதாநாயகி பாகிஸ்தான்ல இருந்து வந்தாங்களாம். அப்போ பாகிஸ்தான்லயும்
சென்னைலயும், வட இந்தியாவுலயும், சேட்டுகளும் ஒரே மாதிரிதான் டமில்
பேசுகிறார்களா? இயக்குனர்தான் சொல்லணும்.

இந்தியப்பையன் பாகிஸ்தான் பொண்ண லவ் பண்ணும்போது சில தேசியவாதிகள்
எதிர்க்கிறார்கள் நான் பார்த்த வரைக்கும் இதான் கதை. இதுக்கு மேல பாக்க
முடியல, பாக்கவும் முடியாது.

காசு இருக்கணும்.

இந்த படத்தை பாக்கறதுக்கு காசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் படத்தை பார்த்த
பிறகு மருத்துவரிடம் செல்வதற்கு கண்டிப்பாக காசு தேவை. இந்தியாவே பாராட்டிய
ஒரு இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறார். பொண்ணை கதாநாயகியா போட்டு
இன்னொரு படம் எடுக்க போறாரோ என்னவோ. சார் பணமுடையா இருந்தாலும்
இந்த மாதிரி படத்துல நடிச்சி பேர கெடுத்துக்காதிங்க சார். இந்த படத்தோட
கதையெல்லாம் சொல்லணுமா... தேவையில்ல விடுங்க.

கொசுறு:

அல் அய்ன் ல் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு பிறகு அதுகுறித்து பதிவு எதையும்
போடவில்லை என அபிஅப்பா, குசும்பன் எல்லாரும் திட்டி தீர்த்தார்கள். இதில்
குசும்பர் கொலைமிரட்டலே விட்டார். அதனால் அதுகுறித்து எனது பார்வையையும்
பதிகிறேன்.

முதலில் இதை வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லவே முடியாது. நெருங்கிய இதயங்களின்
சந்திப்பு என்று சொல்லலாம். (சந்திப்புக்கு பிறகு நொறுங்கியது என்று கூட சொல்லலாம்)
மின்னலுடன் ஒரு வருடமாக தொலைபேசிமூலம் பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததில்லை.
அவரும் துபாய் வரமுடியாத சூழ்நிலை அதனால் எல்லோரும் போவோம் என்று
முடிவாகி சென்றோம். சும்மா சொல்லக்கூடாதுய்யா மனுசன் எல்லாரையும் கைல வச்சி
தாங்காத குறைதான் அத்தனை உபசரிப்பு.

Photo Sharing and Video Hosting at Photobucket

வலமிருந்து இடமாக அபிஅப்பா, கோபி, லியோ சுரேஷ், மின்னுது மின்னல், குசும்பர் (இவர பாத்ததும் வைரமுத்துன்னே நினைச்சேன்), சென்ஷு, சென்ஷி பின்னால மகேந்திரன்.பெ, பக்கத்துல நான், எனக்கு முன்னாடி அய்யனார் மற்ற நால்வரும் அனானி தெய்வங்கள்.


நான் எதிர்பார்த்தை விட வித்தியாசமான உருவ அமைப்பில் இருந்தார். இரட்டை வேட
சரத்குமார் படங்களில் சரத்துக்கு தம்பி வேடம் போட்டால் எப்படி இருப்பாரோ அப்படி
இருந்தார். (யாருப்பா அது கொடுத்த காசுக்கு மேல கூவாதிங்கன்னு சொல்றது.)

வலைப்பதிவில் கும்மி அடிப்பது தமிழின் எதிர்காலத்தை பாதிக்கும்னு எழுத்தாளர் மாலன்
குறைபட்டு ஒரு பதிவு எழுதியதாக அய்யனார் சொன்னார். ஆமாம் உண்மைதான்
அவர்கள் எல்லாம் தொழில்முறையான துறையில் இயங்கி வருகிறார்கள். ஆனால் இங்கே
இருப்பவர்கள் கிடைக்கும் நேரத்தில், திராவிட, பார்ப்பனிய, கம்யூனிச, மக இக, சம்ஹாரங்களுக்கு இடையையே தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே வருகின்றனர்.
நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவுகளில் போய் கும்மி அடிப்பதில்லையெ கும்மிக்கென்றே
தனியாக ஒரு வலைப்பதிவில்தான் கும்மி அடிக்கிறோம் ஒருவேளை அப்படி எதாவது
நல்ல பதிவுகளில் போய் அதை திசை திருப்பும் விதமாக காமெடி செய்திருந்தால்
அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். பதிவெழுதுவது கும்மியடிப்பது அவரவர் விருப்பம்
அதை யாரும் தடுக்க முடியாது என்று எனது கருத்தை சொன்னேன். கும்மியடிப்பதால்
மட்டும் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுவதாக சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு
என்று கும்மிகள் சார்பாக எனது கருத்தை சொன்னேன். எத்தனை காலத்துக்குதான்
கும்மி அடிப்பார்கள் அதுவும் ஒரு கட்டத்தில் சலித்து போனால் வேறு எதையாவது
தேடுவார்கள் ஆதலால் யாரும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்றேன்.
மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.

மற்றபடி ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் பயங்கரமாக இருந்தது. சந்திப்பு முடிந்தவுடன்
ஒருவருக்கு இரண்டு வீதம் "உடம்பு வலி நிவாரணி மாத்திரை"யை எல்லாருக்கும்
மின்னுது மின்னல் இலவசமாக அன்பளித்தார். அதுவும் பத்தாது எனக்கு என்று நான்காக
உள்ளே தள்ளியும் "முடியல" என்று குசும்பர் அழுத குரல் துபாய் வரை எட்டியது. எம்புட்டு சேதாரம்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

அமீரகம் வந்ததுமுதல் இதுபோன்ற சந்தோஷமான நாளை அனுபவித்ததே இல்லை என்று
அனைவரும் மொழிந்தார்கள். இது வலைப்பதிவின் வெற்றியா அல்லது நட்பின் பூரணமா
என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் கூட உட்கார விடாமல் எல்லா இடத்தையும் சுற்றி
காண்பித்து அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும்.

Saturday, July 07, 2007

எனது ஈரான் பயணம் - 2

முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்று
சொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர்தான் அவருடன் பேசிய அந்த மூன்று மணிநேரங்களில்
எவ்வளவு துயரம் எவ்வளவு இன்னல் அடைந்திருக்கிறார் என்று அறிய முடிந்தது.

பார்த்திபன் என்ற அவர் ஒரு இலங்கைத்தமிழர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பத்து
வருடங்கள் இருந்தவர். இயக்கத்தில் இருந்தவர் என்றதும் மிக ஆர்வத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன். இயக்கத்தில் இருந்த ஒருவருடன் நேரடியாக பேசுவத
இதுவே முதல் முறை.

என் கண்முன்னே என் உறவினர்கள் ஊர்க்காரர்கள் சித்திரவதை செய்யப்படுவதும்
கேள்வி விசாரணையில்லாமல் கொல்லப்படுதையும் காணச் சகிக்காமல் பள்ளியிலிருந்து
இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

இயக்கத்தில் சிறுவர்களை சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுப்பதை விட இளைஞர்களை
சேர்க்கலாம் இயக்கத்தில் நீங்கள் இணையும்போது பதினைந்து வயதிலிருக்குமா?

பதினைந்து வயதுதான். இயக்கத்தில் சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஆயதப்பயிற்சி
தருவதில்லை. முதலில் படிப்பு பின்பு அவரவர்க்கு எந்த துறையில் நாட்டம் இருக்கிறதோ அதைப்பொறுத்து படிக்க வைப்பார்கள். தேவையென்றால் வெளிநாட்டுக்கு கூட அனுப்பி
படிக்க வைப்பார்கள். பெற்றோர் இல்லாத பலர் இதுபோன்ற படிப்பினை பெற்றிருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அடிப்படை பயிற்சி கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பது கட்டாயமாக
சேர்க்க மாட்டார்கள் ஈழவிடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மட்டுமே இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள்.

2005ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவித்த போது இஅயக்கத்திலிருந்து வெளிவந்தேன்.
பின்னர் கருணா அணி பிரிந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவுடன்
இயக்கத்திற்கு திரும்பவில்லை.

இயக்கத்தில் இருந்த காரணத்தால் உள்ளூர் போலிசாரால் அடிக்கடி சிறை சென்று வர
நேர்ந்தது எந்த காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் சிறையில் கழித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம், லட்சம்னு கொடுத்து வெளியே வந்தேன். என்னுடன்
இருந்த பொடியன்கள் பலரை சிறையில் அடித்தே கொன்று விட்டார்கள். மிஞ்சியிருப்பது
நான் மட்டுமே. ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பா
இறந்திருப்பேன்.

சென்ற வருடம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை
பிடித்துச்சென்றார்கள். என்ன குற்றம் என்றே தெரியாமல் கையெழுத்திட்டேன். ஆறுமாதம்
சிறைதண்டனை. சிறை என்றால் சாதாரண சிறை இல்லை. மூன்றுக்கு ஆறு அளவில்
உள்ள சிறையில் இரண்டு பேர் நெருக்கியடித்து இருக்க வேண்டும். மலஜலம் கழிப்பது
எல்லாமே அதே அறையில்தான். வருத்தம் வந்து விட்டால்கூட மருத்துவ வசதி
கிடையாது. கேட்டால் அடிப்பார்கள் என்று வருத்தம் வந்த சேதிகூட யாரும்
சொல்வதில்லை. டாக்டர் குறித்த நாளில் பிரசவம் ஆனதா, என்ன குழந்தை
பிறந்தது, சுகப்பிரசவமா என்று எதுவுமே தெரியவில்லை.

கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் சந்திக்கும் ஒருநாளில் என் மனைவியும் குழந்தையும்
வந்திருப்பதாக சொன்னார்கள். மிகுந்த ஆவலுடன் முண்டியடிக்கும் கூட்டத்தின் நடுவில்
பயங்கர சப்தத்திற்கு இடையில் ஓடினேன். என் மனைவி முன் நின்றும் என்னை
அடையாளம் தெரியவில்லை. நான்கு மாதம் முகம் வழிக்காமல், முடிவெட்டாமல் உடல்
இளைத்து இருந்தேன். எதிரில் நின்ற என் தாய் தந்தைக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் மணம் செய்த பெண்ணுக்கு எப்படி தெரியும்.

முதல் முதலாக என் குழந்தையை தூக்கும்போது கையில் விலங்கோடு தூக்கினால்
எப்படி இருக்கும்? குற்ற உணர்ச்சியோடு திரும்பினேன். எதிரில் ஜெயிலர் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவசரப்படித்தினார். நான் பார்க்க விரும்பவில்லை என்றும் என்
குழந்தையை முதல் முதலில் கைவிலங்கோடு தூக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்து
நகர்ந்தேன்.

திடீரென்று கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. யார் என்ன பேசுவது என்று திகைத்த
போது மறுபடியும் அவரே தொடர்ந்தார்.

வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.
வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். வசதியாக வாழ்ந்த குடும்பம் இன்று தெருவிலும், மரத்தின் அடியிலும் குடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பொருள்களை
கொள்ளை அடித்து அப்படியே வீட்டை நொறுக்கி விடுவார்கள்.

முதலில் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன் நாளாக நாளாக போலிசார்
எல்லா வழக்குகளுக்கும் என்னையே தேடி வந்து இழுத்து செல்லவே. அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே என்று துபாய் வந்தேன்.

எங்க வேலை செய்யறிங்க?

எங்கயும் வேலை செய்யலங்க. வேலை தேடினேன் கிடைக்கவில்லை. விசா மேல விசா
போட்டு இது மூணாவது விசிட். வேலையும் கிடைக்கல பணமும் செலவாகிட்டே இருக்கு.
வீட்டுக்கு பணம் அனுப்புவது இல்லாமல் வீட்டிலிருந்தே வரவழைத்து செலவு செய்து
கொண்டிருக்கிறேன். நாட்டுக்கும் திரும்ப முடியாமல் இங்கயும் இருக்க முடியாமல்
ரொம்ப சிரமமாக இருக்கிறது என்றார்.

நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலைக்கு
முயற்சி செய்யலாம்தானே?

என் கூட்டாளி பொடியன்கள் எல்லாருமே சாதாரண வேலை செய்பவர்கள்தான் இருப்பினும்
அவர்கள் மூலமாக கிடைத்த ஓரிரு வேலையும் இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தேன் பிறகு
திருப்பி அனுப்பிவிட்டார்கள்.மேலும் செலவழிக்க பணமும் இல்லை இந்த விசாவிலாவது
வேலை கிடைக்காவிட்டால் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை.

என்ன வேலை தெரியும்?

டெய்லரிங் வேலை நல்லா தெரியும். துணிகளை வெட்டி வடிவா தைப்பேன் என்று கூறவே
அங்கிருந்து துபாயில் டெய்லர் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பேசி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டேன். ஆள் அனுப்புங்க வேலை தெரிஞ்சா எடுத்துக்கொள்கிறேன்
என்று கூறினார்.

விசா கிடைத்து துபாய் வந்ததும் மறக்காமல் போன் செய்யுங்கள் என்று தைரியம்
கூறிவிட்டு வந்தேன். இன்னும் எத்தனை காலம் அகதிகளாக இவர்கள் வாழ்க்கை
அமையுமோ தெரியவில்லை. கடைசியாக ஒன்று சொன்னார் இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் கொஞ்ச
நாளில் எங்கள் நாட்டிலே வாழும் நிலை ஏற்படும் என்று உறுதியாக கூறினார்.

மெய்ப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கள் கண்ணீருக்காக, எங்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள்
வெகுசிலரே. சுப.வீ,பழ.நெடுமாறன் அய்யா, வைகோ போன்றவர்கள்தான் என்றார்.
உடனே கொண்டு சென்றிருந்த ஆ.வி இதழில் சுப.வீ எழுதும் "அது ஒரு பொடா காலம்"
பகுதியினை காட்டினேன். ஆர்வத்துடன் படித்தார்.

இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.

எனது ஈரான் பயணம் - 1

கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாக
சென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசா
மாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேறி பிறகு புதிய விசாவில் உள்
நுழைய வேண்டும். முன்னர் வேலை பார்த்த கம்பெனி விசாவில் இருந்து புதிய
கம்பெனி விசாவுக்கு மாறுவதால் நானும் செல்ல வேண்டியதாயிற்று. முன்னரே இரண்டு
மூன்று முறை சென்று வந்த அனுபவம் இருந்தாலும் அதே விமானத்தில் சென்று
திரும்பியதால் ஊர்சுற்ற நேரமில்லை. இந்த முறை அபுதாபி திரும்ப விமானம்
இல்லாததால் இரண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.

நான் கொண்டு சென்றிருந்த N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
கூகிளில் சிக்கிய படம் இங்கே. அதுவுமில்லாமல் கொளுத்தும் வெயில் வேறு
கவுந்தடித்து தூங்கவே நேரம் சரியாக இருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஈரானிய மக்களில் பெரும்பாலோனோர்கு பார்சி தவிர வேறொரு மொழியும்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி தெரியாதது போல. ஒன்றிரண்டு
பேர் சுமாராக ஆங்கிலம் பேசினார்கள். விமான நிலைய அதிகாரிகள் கூட சைகை
மொழிதான் பேசினார்கள். எங்கள் ஊர் பேருந்து நிலையத்தை விட சற்று பெரிதான
விமான நிலையம். அறுபது பேர் அமரக்கூடிய விமானம். விமானத்தில் ஏறியதும்
பாதி விலைக்கும் வாங்கி வந்த விமானமோ என்று எண்ணத்தோன்றியது. விமானம்
கிளம்ப ஆரம்பித்ததும் அவரவர் குலசாமியை கும்பிடுவது போல பாவத்துடன்
காணப்படுவதை அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.

உலகத்திலயே சேச்சிகள்தான் அழகு என்ற எண்ணத்தை ஈரானிய பணிப்பெண்ணை
பார்த்ததும் சற்றே தளர்த்த நேர்ந்தது (சேச்சிகள் மன்னிக்க). ஈரானிய பெண்கள்தான்
உலத்திலேயே மிக அழகு என்று யாரோ எங்கோ சொல்லக்கேட்ட ஞாபகம்
வந்துபோனது. அந்த பெண்ணிற்கே கூச்சம் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று வில்லன் போல விமான பணிப்பையன் வந்துவிட்டான். (விமானத்துல
எல்லாம் எவண்டா பையன வேலைக்கு வைக்க சொன்னது?) விமானநிலையத்தில
இறங்கியதும் ஏதோ பணய கைதிகளை நடத்துவது போல விமான பணியாளர்கள் நடத்தினார்கள். அவர்கள் பேசும் மொழியின் தோரணைதான் அப்படியே தவிர
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

விமானநிலையத்தில் இறங்கியதும் நம் ஊர் ஆட்டோக்காரர்களை போல் அல்லாமல்
நாகரீகமாக எங்கள் ஹோட்டலில் தங்குங்கள் என்று கையை பிடித்து இழுத்தார்கள்.
எல்லோரும் வேனில் ஏறவே தயக்கத்துடன் கடைசி ஆளாக ஏறி ஹோட்டல் வந்ததும்
முதல் ஆளாக இறங்கினேன். நேராக பதிவு செய்யும் அலுவலகம் சென்றேன். அங்கேயும்
முக்காடிட்டு அழகான இரு பெண்கள் அவர்களிடம் அடுத்த விமானம் எப்போது என்று
விசாரித்தேன். அதெப்படி இவங்க மட்டும் மெழுகு மாதிரி முகத்தில மாசு மருவில்லாமல்
இருக்கிறார்கள் எந்த சோப்பு போட்டு குளிக்கறிங்கன்னு கேவலமான கேள்வி கூட கேட்க
நினைத்தேன்.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால்தான் ஹோட்டலில் அறையே தருவார்கள்.
அப்போதுதான் பாக்கெட்டை தடவி பார்த்தேன் காணவில்லை. அடங்கொய்யால
எவனோ அடிச்சிட்டான் போலருக்குன்னு மனசு பதறிப்போச்சு. பாஷை தெரியாத
ஊர்ல பாஸ்போர்ட்ட தொலச்சிட்ட எப்படிடா ஊருக்கு போவன்னு உள்ளுக்குள்ள
உதறல். கொஞ்சநேரம் கழிச்சி நிதானமா வந்த வழி போன வழி எல்லாம் தேடினேன்
நிதானமா உக்காந்து யோசிச்சேன். ஒருவேளை ரிசப்ஷன்ல தவற விட்டிருப்பனோன்னு
நேராக அங்கு சென்று அந்த ஈரானிய பெண்ணிடம் கேட்டேன். கேவலமான நமட்டு
சிரிப்புடன் எடுத்து நீட்டினாள். தேங்க்ஸ்னு சொல்லிகிட்டே திரும்பி பார்க்காமல்
வந்துவிட்டேன்.

தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே பல ஷாப்பிங் மால்கள் இருந்தது நான்
போன நேரம் கல்லா கட்டும் நேரமாதலால் அனைவரும் பூட்டிக்கொண்டு செல்ல
இருந்தனர். உலகத்துலயே சாயங்காலம் ஆறுமணிக்கு கல்லா கட்டுறவங்க இவங்களாதான் இருப்பாங்க. விலையெல்லாம் துபாயுடன் கம்பேர் பண்ணும்போது டபுள் டபுளா
விக்கறாங்க. ஒரு திராம்ஸ் கொடுத்தால் 2400 ஈரானிய ரியால் தருகிறார்கள். பெரும்பாலும்
அனைத்து கடைகளிலும் டாலர்,திராம்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். தரை
இறங்கியவுடன் லட்சாதிபதியாகும் ஆசையில் 100 திராம்ஸ் பணத்தை ஈரான் மதிப்பிற்கு
மாற்றிக்கொண்டேன். இரவு உணவுக்கு 28800 ரியால் செலவு செய்ததை இங்கு
பெருமையுடம் கூறிக்கொள்கிறேன்.

ஹோட்டலில் தொண்ணூரு சதவீதம் பேர் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்
பேசியது சைனா மக்கள் பேசுவது போல கொய்ங் மொய்ங் என்று இருந்தது. மீதி
பத்து சதவீத ஆட்கள் கேரளத்து சேட்டன்கள். இவனுங்க பண்ண சேட்டை கொஞ்சமா
நஞ்சமா... அறையில் இருந்த சேட்டன் ஒருவர் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேணயர்கள்
இந்த தமிழ்காரனுங்கள் என்று கூறினார்

அட நன்னாறி நாய... ஷகிலாவுக்கு கட் அவுட் வச்சிட்டு ஏண்டா இதபேசறிங்க?
என்று சொன்னவுடன் அடக்கி வாசித்தார்.

எவ்வளவு நேரம்தான் இந்த சேட்டன்கள் கூட சண்டை போடறது. அப்படியே பீச் பக்கம்
போலாம்னு போனேன். நம்ம மெரினா பீச் மாதிரியே இருந்தது நிறைய விசைப்படகுகள்
கரையில் நிறுத்தியிருந்தார்கள் ஆனால் அதன் நிழலில் காக்காய் கூட உட்காராமல்
வெறிச்சோடி இருந்தது ஏமாற்றாம்தான்.

வரும்வழியில்தான் ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது.

தொடரும்.

பி.கு: தொடர் எழுதணும்லாம் எழுதலங்க. பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா
வாசிக்காம போயிடுவாங்கன்னுதான் இரண்டு பதிவா போடறேன்.

Thursday, July 05, 2007

என்ன செய்ய???

"மச்சி என் ஃபோன புடுங்கி கால் ரெஜிஸ்டர் எல்லாம் செக் பண்றாடா" இவள
நம்பி எப்படி என் வாழ்க்கைய கொடுக்க முடியும் சொல்லு.

**********

"இந்தாளுக்கு விளம்பர இடைவெளைல பசிச்சா என்ன? எப்ப பாத்தாலும்
சீரியல் ஆரம்பிக்கும்போதுதான் பசிக்குது. ச்சே

**********

"எல்லா மாசத்துலயும் ஒண்ணுல இருந்து பத்து தேதிக்குள்ள" இருக்கற மாதிரி
செட் பண்ணிட்டா இருபதாம் தேதிக்கு மேல ஆறிப்போன காபி "டொக்"னு
சத்தத்தோட கிடைக்காம சூடா கிடைக்க வாய்ப்பு இருக்குமா?

**********

"அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ மேட்ரிமோனி புரொபைல்ல நீ பார்க்கறது
எல்லாம் உண்மைன்னு நம்பினா என்னை மாதிரிதான் ஆவ"

**********

"மச்சான் போன வைய்யி நான் அப்புறம் பேசறேன்"

ஏண்டா?

என் பொண்டாட்டி வர்றாடா...

நீ என்னமோ கள்ளக்காதலிகிட்ட பேசுன மாதிரி ஏண்டா பயப்படற? தங்கச்சிகிட்ட
நான் சொன்னேன்னு சொல்லு.

"சொன்னா மட்டும் வெளங்கிற போவுதா அவளுக்கு வைடா மாப்ள"

**********

"எத்தனை நாள்டா உள்ள இருந்த"?

"பதிமூணு நாள்"

கல்யாணம் ஆனவுடனே வெளிய விட்டுட்டாங்களா?

ம்ம்

ரெண்டு பேரும்தான ஓடிப்போனிங்க? ஏன் உனக்கு மட்டும் ஜெயிலு
அவளுக்கு வேற கல்யாணம்?

"......."

கேஸு?

வாபஸ் வாங்கிட்டதா ஸ்டேசன்ல சொன்னாங்க.

"இனிமேலாச்சும் பாத்து சூதானமா இருந்துக்க".

**********

இதெல்லாம் எங்கயோ பார்த்தது, கேட்டது, அனுபவிச்சது. அதது, அப்பப்போ,
அந்தந்த வயசுல வரணும். அது தானா வந்தாலும்,முக்கியமா வலுக்கட்டாயமா
வரவழைச்சாலும் ஆபத்துதான்.

எனக்கு தெரிஞ்சி ஏகப்பட்ட உதாரணங்கள் நட்பு வட்டாரத்துலயே இருக்காங்க
அதுல இன்னமும் ஒருத்தன் மீளாமல் இருக்கான். தேவையில்லாம அதுக்கு
முக்கியத்துவம் கொடுத்ததுனால அவனோட வாழ்க்கையே போச்சி. சமீபத்துல
அவனை பத்தி கேட்ட ஒரு செய்தியே இந்த மாதிரி டயலாக்கா அள்ளி
வீசுற அளவுக்கு போயிடுச்சி.

அப்படி என்னதான்யா இருக்கு அந்த வெங்காயத்துல?ன்னுதான்
கேட்க தோணுது.