கதிர்

எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 07, 2020

திரௌபதிம்

முகநூலில் நேற்று ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன்.

//ஒரு கருத்தை ஏற்பதா? எதிர்ப்பதா? என்று குழப்பம் வரும் போது பார்ப்பனீயம் எதை ஆதரிக்கிறது என்று பார்!
யோசிக்காமல் அதை எதிர்த்து நில்!
-பெரியார்//

இதற்கு என்ன அர்த்தம்? நமக்குள்ள நடக்கும் பிரச்சினைகளை நீங்கள் எதற்கு முகநூலில் எழுதுகிறீர்கள் என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு பகீர் என்றது. நான் நிறைய சந்தர்ப்பங்களில் பெரியார் குறித்தும் இலக்கியம் குறித்தும் என் மனைவியுடன் பேசுவதுண்டு. பெரிய கொட்டாவி ஒன்றை விட்டு "அதுக்கென்ன இப்ப" என்பது போல பார்ப்பார். இத்தனைக்கும் வீட்டில் நானூறு புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது. ஓய்வான சமயங்களில் நான் எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளின் நீளமான பட்டியல் ஒன்றை வாசிப்பார். நான் புத்தகங்களை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

விஷயத்துக்கு வருவோம். இந்த நிலைத்தகவலில் பொதுவான ஒரு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். அது பெரியார் சொன்ன ஒரு கருத்து. அதில் எங்கே நம் பிரச்சினை இருக்கிறது என்றேன்?

அதுசரி, நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும். அதை ஏன் இப்போ எழுதணும்?

அதைச் சொல்றதுக்கு முன்னாடி பெரியார் பற்றியும், திராவிடர் கழகம், பற்றியும், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சாதியொழிப்பு பற்றியெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிப் பேச ஆரம்பித்தால் இரவு சோறு நிச்சயம் கிடைக்காது. அதைப் பற்றிப் பேசப்போவதுமில்லை. ஆனால் அந்த நிலைத்தகவல் என்னை இந்த இக்கட்டில் கொண்டு வந்துவிடும் என எழுதியபோது எண்ணவில்லை. 

இப்போது ஒரு கருத்து சமூகத்தில் நடக்குதென்று வைத்துக்கொள்வோம். அது நம் சமூகத்திற்கும், மக்களுக்கும் ஏற்புடையதா? இல்லையா என்றொரு குழப்பம் வரும்போது பார்ப்பனீயம் அதை ஆதரித்தால் அதை எதிர்த்து நில்
அப்படின்னு பெரியார் சொல்லியிருக்கார் என்றேன்.

பார்ப்பனீயம்னா என்ன? 

எனக்கு நெஞ்சு வலித்தது. சமூகமே ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது மகிழ்ச்சியில் இருப்பது எனக்கு பெரும் துயரைத் தந்தது.

நான் பேச ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது என தொண்டையைச் செருமிக் கொண்டு இப்போ திரௌபதி என்றொரு படம் வந்திருக்கிறது. அதன் போஸ்டரில் "ஜாதிகள் உள்ளதடி பாப்பா" என்று டேக்லைன் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். படமும் வெளிவந்து வசூலில் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இது நல்ல படமா நஞ்சை விதைக்கும் படமா என்று எல்லோரும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் என் முடிவைப் பற்றி ரெண்டு வரி எழுதியிருக்கிறேன் அதுதான் அந்த நிலைத்தகவல்?

மலையாளப்படமா?

இல்லை, தமிழ்ப்படம்தான். 

இதுல விவாதிப்பதற்கு என்ன இருக்கு?

பார்ப்பனீயம் இதுல எங்க வந்துச்சு?

பாரதிய ஜனதா, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள்ல இருக்கிற சிலர் இந்தப்படத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.  இந்த கட்சிகள் எல்லாம் பிராமணக் கொள்கைகள் உடையவை, பிராமணியம் தீண்டாமையை ஆதரிக்கும் கட்சி. பாமக, வன்னியர் பேரவை, முக்குலத்தோர், சோழர் படை, என எல்லா ஜாதி சங்கங்களும் இந்தப்படத்தை மக்களுக்கு இலவசமா டிக்கெட் எடுத்து தரோம்னு கூட அறிவிச்சிருக்காங்க.  தீண்டாமைய ஒழிக்கணும்னு தமிழ்நாட்டுல எவ்வளவு போராட்டாங்கள் நடந்து இப்ப இருக்கிற நிலையை அடைஞ்சிருக்கோம். இப்பவும் எல்லாமும் ஒழிஞ்சதா சொல்ல முடியாது ஆனா மத்த மாநிலங்கள்ல இருக்கறதை விட ஜாதிப்பிரச்சினை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவான மாநிலம். இப்படி இருக்கற நேரத்துல மறுபடி இருபது, முப்பது ஆண்டுகளுக்கு பின்னாடி இழுத்துட்டுப்போற பிற்போக்கு கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கு.

இந்த மாதிரி பார்ப்பனீய கொள்கைகள் உடைய கட்சிகள் ஆதரவு இந்தப்படத்துக்கு இருக்கிறது. எதோவொரு ஆதாயத்துக்கு அவங்க ஆதரிக்கறாங்க என்ற ஒரு காரணமே போதும் இப்படத்தை எதிர்க்கறதுக்கு. அதனால அந்த நிலைத்தகவல் இட்டேன்.

எவனோ என்னமோ படம் எடுத்துட்டுப் போறான் உனக்கென்ன?

இந்தப் படம் வெற்றி பெற்றால் இதைப்போல இன்னும் பத்து படம் வரும். எல்லாத்தையும் நாடக காதல்னு சொல்லி கடைசில காதலித்தாலே குற்றம்னு கொண்டுவந்து தாலிபான் ஆட்சியைக் கொண்டு வருவார்கள். இதெல்லாம் எதிர்க்கணும் இல்லியா?

ஆமா... இப்படி ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரியல. நீ சொல்லிதான் எனக்கே தெரியும். எல்லாரும் இப்படி பேசி பேசிதான் சின்ன விஷயத்தைப் பெருசா ஆக்கறிங்க. 

அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

Friday, March 06, 2020

பக்தி மார்க்கம் - அஷ்வகோஷ்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ் அவர்களின் சில சிறுகதைகள் அந்த மொழிநடைக்காக பெரும் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது. பெரும்பாலான வாசகர்கள் அவரின் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம், தற்செயல், சிதைவுகள் என குறிப்பிட்ட சில கதைகளையே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். உண்மையில் அவருடைய சிறுகதைகளில் எல்லாமே எல்லா நேரத்திலும் வாசிக்கக் கூடியவையாக இருப்பது பேரதிசயம்.  அவர் கதைகளின் அடிப்படை பலமே அதன் எளிமைதான். எந்த விதமான ஜோடனைகளும் இன்றி
பூச்சுகள் இன்றி சராசரி மனிதர்களின் உரையாடல் இருக்கும். பாலியல் கதைகள் எழுதியிருக்கிறார் ஆனால் பாலியல் சொல்லாடல் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலான கதைகள் உரையாடல் வழிதான். எளிய நடுத்தர வர்க்கம், கிராமப்புற விவசாய சனங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள்தான் அவரின் கதைகள் பேசும். 

எனக்கு ஒவ்வொருமுறை எதை வாசிப்பது என்ற குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அஷ்வகோஷ் சிறுகதைத் தொகுப்பு நூலை எடுத்து எதாவது ஒரு பக்கத்தில் பிரித்து அக்கதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். அதை ஏற்கனவே வாசித்திருந்தால் கூட மறுபடி வாசிக்கும்போது வேறொரு கோணத்தில் கதை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

அப்படி ஒரு கதையை நேற்று வாசித்து இரவு முழுக்கச் சிரித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு அதில் ஓர் வரியை ஒளித்து வைத்திருந்தார். அதை நேற்றைய மீள் வாசிப்பில் கண்டுகொண்டேன்.

கதையின் பெயர் "பக்தி மார்க்கம்". பெயரைப் பார்த்ததும் ஆன்மீகக் கதை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கதை. ஒரு கட்சியின் வட்டப்பேரவைக் கூட்டத்தில் கட்சியின் புதிய நிலைப்பாட்டை விவரிக்கும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டின் மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை ஒரு தோழர் எழுப்புகிறார். அந்த எளிய கேள்வியின் வழியாக நடக்கும் உரையாடலில் கடைசி வரை கேள்வி எழுப்பிய தோழருக்கு விடையே கிடைக்காது. மாறாக கேள்வி கேட்டவரையே குழப்பி கட்சியின் நிலைப்பாட்டுக்கு அவரை சம்மதிக்க வைத்துவிடுவார்கள்.

அந்தக்கதை இப்படி ஆரம்பிக்கும்.

"ஆகவே தோழர்களே இன்றைய காலகட்டத்தில், இப்போதுள்ள யதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து, ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்ற, சரியானம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு நமது கட்சி வந்துள்ளது, ஆகவே வரக்கூடிய காலகட்டங்களில் நடைபெற இருக்கிற... தேர்தலில்""

இப்படி ஆரம்பிக்கும் கதையில் ஒரு தோழருக்கு ஐந்தும் ஐந்தும் பத்துதானே வரும் எப்படி ஒன்பது வரும் என கேள்வி எழுப்புகிறார்.  அக்கேள்விக்கு இடைக்கமிட்டித் தோழர், மேல்கமிட்டித்தோழர் என ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆங்கிளில் பதில் அளிக்கிறார்கள். சிரிக்காமல் இக்கதையைப் படிப்பது மிகச்சிரமம்.

அதில் வந்த ஒரு பத்தியில் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கும்போது வீட்டம்மணி முறைத்தார். அப்பத்தியை அப்படியே கீழே தருகிறேன்.

போனதடவை அப்படிதான் அஞ்சும் அஞ்சும் பதனொண்ணுன்னு முடிவு பண்ணமே... அப்ப, எங்க போனாலும்.... என்னாங்க இது அஞ்சும் அஞ்சும் பத்துன்னுதான் ஆரம்பத்துல சொன்னீங்க. இவ்வளோ நாளும் அப்பிடியேதான் சொல்லிக்னு வந்தீங்க. இப்ப போய்த் திடீர்னு என்னாங்க பதனொன்னுன்னு சொல்றிங்க, எல்லாம் ஆரம்பத்துல நல்லாதான் சொல்றாங்க. அப்புறம் போவப் போவ எல்லாரும் மத்தவங்க மாதிரிதான் ஆயிடறாங்க... உங்க கட்சி அப்படி ஆவாதுன்னு பாத்தம். கடைசீல நீங்களும் அப்படி ஆயிட்டிங்களான்னு கேட்டாங்க. அதுவே நம்ம தோழர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியாயிருந்தது. அது போதாதுன்னு இப்ப வேற் அவங்ககிட்ட போய் அஞ்சும் அஞ்சும் ஒம்பதுன்னு சொல்லி அதுக்கு அவங்க விளக்கம் கேட்டாங்கள்னா என்னா பதில் சொல்றது. அதனாலதான் தோழர் இதெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது இந்த சிக்கல் இல்லண்ணா ஏன் இதெல்லாம் கேக்கறோம்"

இதுல என்ன தோழர் சிக்கல். அப்ப நாம்ப பு.ந.கவோட கூட்டு வச்சிருந்தோம். பதனொண்ணுன்னு சொன்னோம். இப்ப பூ.ஊ.கவோட கூட்டு வச்சிருக்கறோம். அதனால ஒம்பதுன்னு சொல்றம்... இதுல என்ன தோழர் தப்பு என மேல்க்ககமிட்டி தோழர் பதில் சொல்கிறார்.

பு.ந.க,     பூ.ஊ.க.... யூகிக்க முடிகிறதா?

அதுக்குதான் விடிந்தும்கூட சிரித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, March 04, 2020

கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் துவங்கிவிட்டதாக செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. முதல் கட்டமாக கேரளாவில் வுஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு அறிகுறி தென்பட்டு சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டார்கள். இதுவே மிகப்பெரிய ஆச்சரியம். அந்த மூன்று பேரிலிருந்து வேறு எவருக்குமே பரவாமல் தடுத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். கேரள அரசு உண்மையிலேயே மெச்சத்தக்கது. சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அரசு நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துமே இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறார்கள். சிங்கப்பூரின் இன்னொரு சாதக அம்சம் இங்கு இருக்கும் வெயில்தான். வெப்பம்தான் இந்தக் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கிறது. இன்றைய நாளில் வுஹானின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸ். ஊட்டியை விட ஆறேழு டிகிரி குறைவு. இந்தக்காலநிலையில் வைரஸ்கள் எளிதில் சாவதில்லை, தொடுதல் மூலமோ, ஒரே அறைக்குள் பயணப்பட்டாக வேண்டிய சூழலோ எதுவானாலும் எளிதில் பரவிவிடும் வாய்ப்புள்ளது. இன்று சிங்கப்பூரில் 28 டிகிரி செல்ஷியஸ். இங்கு அதிகமாக பரவாததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

இருந்தாலுமே கூட பொதுமக்களும், அரசாங்கமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்கள் கூடுமிடங்களைத் தவிர்க்க வேண்டுமாய் அறிவுறுத்துகிறார்கள், தொட்டுப் பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். எல்லா வங்கி, அரசு,பள்ளிகள், கல்லுரிகள்,  தனியார் நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரையும் வாசலிலேயே வைத்து உடல் சூட்டைச் சோதிக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரை தனிமைப்படுத்தி, அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள். பொதுப்போக்குவரத்தில் எந்நேரமும் கிருமி நாசினி கொண்ட திரவங்களை வைத்து அழுந்தத் துடைத்தபடியே இருக்கிறார்கள். லிப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடி, பேருந்தின் கம்பிகள், ரயில் பெட்டி நின்ற ஐந்து நிமிடத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஒரு குழு சென்று சுத்தமாக துடைத்து அனுப்புகிறார்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கூட்டங்கள், தொழில் சந்திப்புகள், எதுவாக இருந்தாலும் தவிர்க்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

வைரசை விட போலிச்செய்திதான் மிகப்பெரிய அபாயம். அப்படி போலிச் செய்திகளைப் பரப்புபவர்களை மிகக்கடுமையான தண்டனைக்கு ஆளாகலாம் என எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் தண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. வெளிநாட்டு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவரின் வேலை உரிமத்தை ரத்து செய்து நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்ய முடியும் என அறிவித்திருக்கிறார்கள். வைரஸ் தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை முற்றிலுமாக தடுத்துவிட்டது அரசின் மிகப்பெரிய சாதனை.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் உயிரழப்பு என்பது இல்லை என்பது  கவனிக்க வேண்டிய விஷயம். மிக உயர்ந்த சிகிச்சையை வழங்கி உயிரைக் காப்பாற்றி அனுப்புகிறார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று முற்றிலும் வைரஸ் நீங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அரசு. ஒருவரியில் சொல்வதென்றால் இமாலய சாதனை. சிங்கப்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிக்க தீவில் மிக எளிதாக பரவி பலிவாங்கக்கூடிய வைரஸ் காய்ச்சலை ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் தடுத்திருப்பது நிச்சயமாக சாதனைதான்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். வட இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது இரண்டே நாட்களில் பத்து மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நம் ஆட்சியாளர்கள் அப்படி. மக்களை பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் கூட்டம் வடநாட்டில் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  டெல்லியில் இன்னும் கோடை தொடங்கவில்லை, குளிர்காலத்தின் இறுதிக்கட்டம், வுஹான் நகரத்தை விட ஐந்து டிகிரி அதிகம்தான். இருந்தாலுமே கூட ஒரு நாளில் 28 பேருக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி இந்தியாவில் தலை என்றால் மற்ற நகரங்களுக்கு மிக எளிதாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு என எல்லாமே மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள்தான். இங்கெல்லாம் பரவினால் தடுக்க கடவுளாலும் முடியாது. அப்படி ஆகாது என வேண்டிக்கொள்ளலாம்.

ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கச்சொல்லும் கூட்டமும், மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்லும் கப்சா கும்பலும், நமக்கெல்லாம் வராது பாஸ் எனச் சொல்லும் ஆட்களும் இருப்பதுதான் பயத்தைக் கொடுக்கிறது.


வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழான வல்லினத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். படைப்புகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்திருக்கிறேன். இம்மாத இதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். அதில் இரண்டு சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டது. மீதி பத்தும் உலகின் பல பகுதிகளிலிருந்து எழுதும் புதிய, மூத்த, சற்று அறிமுகம் ஆன எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆசானும், சு.வேணுவும் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்கள். அனோஜன், சுரேஷ் பிரதீப், நவீன், சுனில் கிருஷ்ணன் என அறியப்பட்ட எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கதைகளையும் வாசித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால் ஆசானின் சமீப கதையான சா தேவி படித்த சோர்வில் இருந்ததால் ஆசான் கதையைத் தவிர்த்து எல்லாவற்றையும் வாசித்தேன்.  தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் எல்லாவிதமாகவும் சிறுகதைகளை எழுதிப்பார்த்துவிட்டார்கள். வாசகர்களும் திளைப்பில் இருந்து மீண்டு விட்டார்கள், ஆனாலும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதை ருசித்துவிடவேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியாது. மிக அபூர்வமாகவே கலைத்தருணங்கள் மிளிர ஒரு கதை பேசப்படும்.  அப்படியான கதைகளைத் தேடித்தான் எல்லா கதைகளுமே வாசிக்கப்படுகின்றன. 

தெய்வீகனின் கதை “கறை நதி” முதல் வரியிலேயே உள்ளிழுத்துக்கொண்டது. எழுத்து நடை அ.முத்துலிங்கத்தைப் போலவே உணர முடிந்தது. சொற்களின் தேர்வு, உரையாடல்களுக்கிடையேயான பகடி. ஒரு கணம் இக்கதை அ.மு எழுதியதுதானோ என்றொரு மயக்கம் கொள்ள வைத்தது. இலங்கையிலிருந்து மேல்படிப்புக்கு ஆஸ்திரேலியா வரும் ஒருவனுக்கு இத்தாலிய முதியவர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்கிறது. பிறகு பகுதி நேர வேலை கிடைக்கிறது, அங்கே ஒரு சம்பவம் பிறகு முடிவு. வெகு இயல்பான கதை. சொல்லிச்செல்லும் விதமும், இடையிடையே வரும் தகவல்களும் கதையை ஆர்வமாக வாசிக்கக் கோருகிறது. எனக்கு மிகவும் பிடித்த கதையாக இதைச் சொல்வேன்.

அனோஜன் பெயரை அங்குமிங்கும் கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக இலக்கிய உலகில் உச்சரிக்கப்படும் பெயர். ஆசானின் தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது படித்த நினைவுள்ளது. அவரின் பச்சை நரம்பு சிறுகதைத் தொகுப்பு வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ள புத்தகம். அவரின் பெயர் பார்த்த உடனே ஆர்வமாக வாசித்தேன். கதையின் தொடக்கம் பொம்மையை புணர்வதாக ஆரம்பித்த உடனே சா தேவி போல கதை என்ற சலிப்பு உண்டானது. ஆனால் கதை வேறு தளத்தில் பயணித்தது. ஆரம்பகட்ட சலிப்பை எண்ணி நொந்துகொண்டேன். பிரமாதமான கதை.
இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களை வலியச்சென்று பிடித்து இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பார்கள் என்ற தகவல் புதியது. அதுவும் வீட்டுக்கொருவர் ஆண் பெண் பேதமின்றி. ஒருவீட்டில் 16 வயது நிரம்பிய பெண்ணை இயக்கத்திற்கு அனுப்பு விருப்பமில்லாத அப்பா அவளுக்கு விருப்பமில்லாத மூர்க்கனுடன் திருமணம் செய்து அனுப்புகிறார். அவள் கற்பமடைகிறாள். போர்ச்சூழலின் விபத்தொன்றில் அவள் கர்ப்பபை எடுக்கும்படி ஆகிறது. பிறகு இலங்கை வந்து படிப்பைத் தொடர்கிறாள். பொம்மையை புணரும் அதே சமயம் நிஜத்தில் தடுமாறும் அவனிடம் நானும் ஒரு பொம்மைதான். என்னைப்புணர்ந்தாலும் கர்ப்பம் தரிக்க முடியாது என்கிறாள். கதையின் இரண்டு பகுதிகளை ஒன்றாகச் சேர்த்த விதம் அபாரமானது.  போர் முடிந்த இந்த பத்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனப்பார்வை இலக்கியத்தில் பல்வேறு படைப்புகளின் வழியாகப் பதியப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். எல்லாத்தரப்பு மக்களின் பாடுகளும் வாசிக்கப்படவேண்டும். பதியப்படவேண்டும்.

சுசித்ராவின் கதை ஆராய்ச்சி மாணவி ஒருத்தியின் பயணம் வழியாக ஒரு தீவின் மக்களை, சடங்குகளை, வாழ்வியலைச் சொல்கிறது. திசைகளை நாம் பார்ப்பதற்கும் அத்தீவின் மக்கள் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எனக்கு இப்போது திசைகள் குழப்பம்தான் சிறு வயதில் இன்னும் மோசம். இடது மாட்டை இழுத்துப்பிடிக்கச்சொன்னால் எது இடது என்றொரு குழப்பம் படர்ந்துவிடும். தெக்காலப் போய் வடக்குல திரும்பணும் என்றால் எது தெற்கு எது வடக்கு என்று மண்டை காயும். என்னை ப்போலவே பலர் இருக்கலாம். நம் திசையறியும் அறிவு நமக்கு சரியாக போதிக்கப்படவில்லையோ என்று தோன்றும். ஆனால் கதையில் வரும் சிறுகுழந்தைகள் கூட திசையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்வியல் அறிவு. அது போதிக்கப்படுவதில்லை தலைமுறைகளாக கடத்தபடுவது என்று நினைத்துக்கொண்டேன். என்னைப்போன்ற திசைக் குழப்பவாதிகள் இருமுறை வாசிக்கவேண்டிய கதை இது. வித்தியாசமான சிறுகதை.

அடித்தூர் என்றொரு கதை. சிறுகதை எழுதப்பயிலும் எல்லோருமே முதலில் தேர்ந்தெடுப்பது சிறுவயது நினைவுகளை எழுதிப்பார்ப்பதுதான். பல மறந்த விஷயங்கள் துல்லியமாக மேலெழுந்து வந்து எழுத்தில் அமரும். எழுதியவருக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும். அப்படியொரு கதைதான் இது. தனது தாத்தா பாட்டியின் நினைவுகளை அசைபோடும் பேரனின் கதை. கதையின் முதல் பாராவில் தாத்தா ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்பினார் என்று வருகிறது. நடுவில் உள்ள விரலை அவர் என்ன செய்தார்? மடக்கினாரா அல்லது நடுவிரல் இல்லையா? அது எப்படி அருகிலேயே ஒரு விரல் இருக்க அவர் ஏன் மூன்றாவதாக உள்ள விரலைத் தேர்ந்தெடுத்தார். அனிச்சையாக நான் எனது ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்புவதுபோல முயற்சித்துப் பார்த்தேன். சுலபமாக வரவில்லை. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்தால்தான் சுலபம் அதுதான் உலக வழக்கமும் கூட. கதையைவிட்டு நான் இப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். உடனே சினிமாவில் வந்த நாக்கால் மூக்கைத் தொடும் காட்சி நினைவுக்கு வந்தது.
அந்தத் தாத்தாவின் பிடிவாத குணம் அவருக்கு நேர் எதிரான குணமுடைய பாட்டியின் குணம் இடையில் ஒரு பேரன் பாத்திரம் என மூன்றே பாத்திரங்கள்தான். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றியது.

சுரேஷ் பிரதீப்பின் வெம்மை சிறுகதை அபூர்வ வகை. அவரின் கதைகள் மிகுந்த கவனத்தோடு வாசிக்க வேண்டியவை. சில கதைகளை முதல் வாசிப்பிலேயே கொடுக்க வேண்டிய அனுபவத்தைக் கொடுத்து விடும். சில கதைகளை திரும்பத் திரும்ப வாசிக்கையில் வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தபடியே இருப்பவை. இரண்டாவது வகை கதைகள் சுரேஷ் உடையது.  மகாபாரதத்திலிருந்து ஒரு கருவை எடுத்து புனைவாக மாற்றியிருக்கிறார். கதை வாசிக்கும்போது தளபதி படமும், கர்ணன் சிவாஜி வாயில் ரத்தம் கொப்பு நினைவுக்கு வந்தனர். சந்தேகமில்லாமல் குந்தி களங்கிய கண்களுடைய ஸ்ரீவித்யாதான்.  இதிகாசங்களில் இருந்து இப்படி ஏராளமான சம்பவங்களை உருவியெடுத்து சிறுகதைகளாக மாற்றலாம். திரையில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வரவேற்கப்பட வேண்டிய உத்தி எழுத்து. இதுபோன்ற கதைகளை நீண்ட அனுபவமும் பயிற்சியும் உள்ளவர்கள் எளிதில் அடையாளம் கண்டு நுழைந்துவிட முடியும். கதைக்கு இடையேயான மெல்லிய விவரணைகளை அனுமதிக்கலாம் ஆனால் நீளமான விவரணைகள் அலுப்பூட்டுபவை, அன்றி அதையும் வாசகன் சோர்வடையாமல் எழுத முயல வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை கதை இயல்பாக இருந்தது. ஆசான் பள்ளியைச் சேர்ந்தவர் என்றே இவரை மனதில் நினைத்திருந்தேன். அந்த எழுத்தின் சாயல் இவரிடமும் இருக்கிறது என்றே வாசக மனம் சொல்லியது. இதற்கு முன் அனோஜனின் கதையிலும் அப்படி உணர்ந்தேன். மனதிற்கு நெருக்கமான முன்மாதிரி எழுத்தாளர்களின் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது. அப்படி எழுதியவர்களின் எழுத்து பிற்காலத்தில் தனித்த இடத்தில் தானாகவே சென்று அமர்ந்துவிடும். இந்த சிறப்பிதழில் கறை நதி கதைக்கு அடுத்த இடத்தில் இக்கதையை மனம் நினைத்துக் கொள்கிறது. ஒரு மருத்துவர், அவரின் அக்கா மகனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய தந்தை பொறுப்பில் இருக்கிறார். முதல் பெண் பார்த்து அது தடைபட்டுப் போன சோகத்தில் இரண்டாவது பெண் அமையும்போது பெண்ணைப் பற்றிய ஒரு உண்மை இவருக்குத் தெரிகிறது. உண்மையைச் சொல்லி நிறுத்தினால் தன் தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியாது, சொல்லாமல் விட்டால் தன் மருமகனின் வாழ்க்கையைப் பாழ்பண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு வரக்கூடும். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தவிக்கையில் ஒரு அற்புதம் நிகழ்கிறது. இக்கதை எனக்கு கி.ராவின் மின்னல் சிறுகதையை நினைவுபடுத்தியது. ஒரு நல்ல சிறுகதை உங்களை தொந்தரவு பண்ணும் அல்லது இன்னொரு நல்ல சிறுகதையை நினைவுபடுத்தும்.

துவந்த யுத்தம் என்ற கதையை கிரிதரன் ராஜகோபாலன் என்பவர் எழுதியிருக்கிறார். சற்றே நீளமான கதை. ஸ்க்ரோல் வாசிப்புக்குப் பழக்கப்பட்ட விரல்கள் அடம்பிடித்தன. விரலே நொந்துகொள்ளும்படி ஸ்க்ரோல் செய்யச் செய்ய போய்க்கொண்டே இருந்தது. விவரணைகள் மிக அதிகமாக இடம்பெற்றிருந்ததுதான் காரணம் என யூகிக்கிறேன். இப்போதெல்லாம் ஒப்பீடு இல்லாமல் ஒரு கதையை வாசிக்க முடியவில்லை. இக்கதைக்குள் நுழைந்த உடனே எனக்கு கோணங்கி நினைவுக்கு வந்தார். தொன்மம்தான் காரணம். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூலிகளாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியாவிலிருந்து மொரிஷியஸ் சென்றவர்களின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் மலேரியா காய்ச்சலில் இறந்த இந்தியர்களின் கல்லறைத்தோட்டத்தில் புதிய சர்ச் கட்டுவதற்காகவும் அதைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்படும் வேலு என்பரின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. வரலாற்றுப்பிண்ணனி உடைய கதைகளை வாசிக்கும்போது அவ்வரலாற்றுச் சம்பவங்கள் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில கதைகளுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. உதாரணம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கப்பால், சயாம் பர்மா மரண ரயில்பாதை, எரியும் பனிக்காடு போன்றவை. நாவல் அளவுக்கு விரித்து எழுத வாய்ப்புள்ள களம் உடைய கதை இது. ஒருவேளை இது நாவலாக வரும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக அமையலாம்.

சு.வேணுகோபால் கதைகள் எப்போதுமே ஒரு அதிசயத் திறப்பை முடிவில் உண்டாக்கிவிடும். இக்கதையில் பார்வையற்றவராக வரும் பாத்திரம் கோவை ஞானியாக இருக்குமோ என்றொரு சம்சயம் ஏற்பட்டது. ஒரு சிறிய நிகழ்வுதான் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும். அதுபோல குழப்பமான மனநிலையில் ஒருவரைச் சந்திக்கச்செல்பவர் அவரின் பாதையிலேயே சென்று தனக்கான தெளிவை அடைந்துகொள்ளும். சு.வே கதை கூறும் முறை மிக நுட்பமானது. இக்கதையில் மேலும் ஒருபடி கூடி வந்திருக்கிறது. பழனிச்சாமி ஐயா, ஒரு இடத்தில் பழனிவேல் அய்யா என்று மாற்றி எழுதியிருந்தது கண்டு குழம்பி மேலே சென்று பழனிச்சாமி ஐயா என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. மற்றபடி அந்தப் பாத்திர உருவாக்கம் அபாரம்.

மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை. திரையைப் பார்த்துக்கொண்டே வாசித்ததால் கண்கள் பூத்துவிட்டன. வல்லினம் குழுவினர் பாராட்டத் தகுதி உடையவர்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தகவல் பிழை, எழுத்துப்பிழைகளை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும். எல்லாருமே கணினியில் தட்டச்சு செய்து கதைகளை அனுப்புபவர்கள். பேனாவில் வருவதை விட க.த இல் பிழை அதிகம் வர வாய்ப்புண்டு. அதிகம் ஒற்றுப்பிழைகள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். அமிர்தலிங்கம் இரண்டு இடங்களில் அமிர்ந்தலிங்கமாகிவிட்டார். ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

Tuesday, March 03, 2020

திறப்பு

தன்னை மீட்டெடுத்தல் என்பது அபூர்வமாக நடக்கும் விஷயம். இன்னது நிகழப்போகிறது என்பதே தெரியாது நடந்துவிடும் ஆச்சரியம். சில நாட்களாக எதிலும் மனம் ஈடுபாடு இன்றி அலைந்து திரிந்தது. பிரத்யேகக் காரணங்கள் ஒன்றுமில்லை. மனக்கதவுகள் தானாக சாத்திக்கொண்டன. ஒரு திறப்பிற்காக நானும் காத்திருந்தேன். இடையில் நானாக சில காரியங்களை திறப்பிற்காக முயற்சி செய்து பார்த்தேன். பயணம். எங்காவது பயணம் சென்று வந்தால் ஓரளவு மனதுக்கு புத்துணர்சி கிடைக்கக் கூடும் என எண்ணி, பிறகு நடைமுறை சாத்தியங்களை நினைத்து தவிர்த்துவிட்டேன். தவறான புத்தகத் தேர்வுகள் வாசிப்பையும் முடக்கிப்போட்டன. திரைப்படங்கள் பார்க்கலாம் என நெட்பிலிக்ஸ் பக்கம் ஒதுங்க, தனது ஆக்டோபஸ் கரங்களால் அது என்னை இழுத்துக்கொண்டது. வகை தொகை இல்லாமல் படங்கள், தொடர்கள். சமீப ஆறுமாதத்தில் அதில்
செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால் என் வாழ்நாளில் மொத்த கணினி உபயோகத்தின் நேரத்தில் பாதியை அதில் செலவிட்டிருக்கிறேன். நான்கு சீசனும், சீசனுக்கு பத்து அத்தியாயங்களும், அத்தியாத்திற்கு குறைந்தளவு ஒரு மணி நேரமும் ஓடக்கூடிய தொடர்களை அதிகபட்சம் நான்கு நாட்களில் முடித்திருக்கிறேன்.

நைட் ஷிப்ட் வாட்ச்மேன் போல நடைகூட தள்ளாடிப்போனது. இதனால் நான் இழந்தது நிறைய. பிள்ளைகளுடனான அணுக்கமின்மை, வீட்டம்மணியுடன் உரையாடல் குறைந்தமை, வார இறுதிகளில் சமையல் பக்கம் உதவி நின்றது, நண்பர்களுடனான சந்திப்பு குறைந்தது. வாசிப்புப்பக்கம் கொஞ்சமும் செலவழிக்காதது. என பட்டியல் நீளும். ஒரே நல்ல விஷயம் குடி அமர்வுகளில் சமீப காலமாக பங்கேற்கவில்லை.

ஒரு திறப்பு எல்லாவற்றிற்கும் உண்டல்லவா... காலப்போக்கில் இந்த நெட்பிளிக்ஸ் போரடிக்க ஆரம்பித்தது. தொடர்களில் நாட்டம் குறைந்து மொத்தமாக மறைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முன்பு போல அதில் நேரம் அதிகம் செலவழிப்பதில்லை.

சென்றவாரம் டாக்டர் சைமன் அழைத்திருந்தார். வீட்டம்மணி முன்பு வேலை பார்த்த கிளினிகின் பல் டாக்டர் அவர். கிளினிக்கில் கணினி சம்பந்தப்பட்ட வேலைகளில் உதவி தேவை என்றால் என்னை அழைப்பார். செய்து தருவேன். இந்த முறை ரசீதுகளைப் பிரிண்ட் செய்வதுபோல சிறிய அளவில் ஒரு பிரிண்டரை கவுண்டருக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும் என்றார். அதற்கு முன் சைமன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு கனவான். வாழ்வில் நிறைய பெரிய மனிதர்களை சந்தித்தாலும் சிலரை மட்டுமே கனவான் என மனதில் வைத்திருப்போம் அல்லவா அதுபோல ஒரு கனவான் அவர். ஒரு குறுஞ்செய்தியில் எத்தனை மரியாதை கலந்த வார்த்தைகள் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு வார்த்தைகளை அன்புடன் கலந்துதான் அனுப்புவார். நான் அதற்கு ஒற்றை வரியில் பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கனவானுக்கும் சில்லறைக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சைமன் ஒரு வேலையிட்டார் அல்லவா. அதற்காக சிம்லிம் சென்று ஒரு பிரிண்டர் வாங்கவேண்டும். வேலையிலிருந்து நேராக சிம்லிம் சென்று வாங்கி கிளினிக்கில் பொருத்துவதாக திட்டம் வகுத்துக்கொண்டேன். கிளினிக் போகும் வழியில்தான் ராஜாராம் முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். அங்கே ஒரு டீக்கடையும் இருக்கிறது. நண்பர்களுடன் நின்று கொண்டே தேநீர்க்கோப்பையுடன் உரையாடுவது அலாதியான விஷயம். இங்கு எல்லா கடைகளிலும் அமர்ந்து சாப்பிடும் முறைதான் உள்ளது. சிங்கப்பூரிலேயே நின்றுகொண்டு சாப்பிடும் ஒரு கடை அதுதான். அதனால் அவ்வழியாக செல்லும்போதெல்லாம் அங்கே நின்று ஒரு டீ சாப்பிடுவது வழக்கம். சோகம் என்னவென்றால் ராஜாராம் எப்போதுமே பிசியாக இருப்பார். சும்மா இருப்பது அபூர்வம். அவர் சும்மா இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வேன். ஆனாலும் எவர் தலையிலாவது விளையாடிக்கொண்டிருப்பார்.

அம்பானியுடன் கூட தேநீர் அருந்த வாய்ப்புண்டு. ஆனால் ராஜாரமுடன் அருந்த முயல்வது கடினம். வேலையிலிருந்து சற்று நேரம் விலகி டீ சாப்பிடலாம் என்று அவரை அழைப்பது சரியாக இருக்காது. அது அவரது தொழிலைக் கெடுக்கும் செயல். ராஜாவின் கடைக்குச் செல்ல மற்றுமொரு காரணம் அங்கே புத்தகங்கள் இருக்கும். சாரு, ஆசான், எஸ்ரா, ஷோபா சக்தி, லசகு என இலக்கியவாதிகளின் பெயர்கள் சரளமாக புழங்கும். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புவது வழக்கம். கெட்ட வார்த்தை என்ற சாருவின் நூல் ஒன்று கண்ணில் பட்டது. கேட்டவுடன் “எடுத்துட்டுப் போங்கணே” இதுல்லாமா கேட்டுகிட்டு இருப்பாக என்றார்.

எடுத்துவந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு திறப்பு நிகழும் என்று காத்திருந்தேன் அல்லவா, அந்தத் திறப்பை கெட்ட வார்த்தைதான் செய்துகொண்டிருக்கிறது. வாசித்துக்கொண்டிருக்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் எழுத்து சாருவினுடையது.

சீன ராயா என்றொரு சிறுகதை எழுத ஆரம்பித்து நான்கு பாராக்களுடன் நிற்கிறது. அதைத் தொடர வேண்டும். முடிக்கவேண்டும். வலைப்பூவில் தினமும் எதையாது தோன்றுவதை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவலை சாரு ஏற்படுத்திவிட்டார். இந்த உத்வேகத்தை எழுத்தும் வாசிப்பும் மட்டுமே உருவாக்கும்.
Tuesday, March 27, 2018

டண்டண்டண் டண் டக்க

மனைவி ஊருக்குச் செல்வது என்பது கணவர்களுக்கு கொண்டாட்ட மனநிலை. நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கறியும் குடியுமாக இருக்கலாம். நண்பர்களோடு எங்காவது வெளியில் செல்லலாம். சினிமா, வாசிப்பு, ஊர்சுற்றல், மீன் பிடித்தல் போன்ற அபாயமான காரியங்களை எவ்வித இடையூறுமின்றி செய்யலாம். இதுபோன்ற கொண்டாட்டம் எல்லாம் ஊரில்தான் சாத்தியம் கைக்கும் வாய்க்குமான இந்த ஊர் வாழ்வில் அதெல்லாம் யதார்த்தம் மீறிய கனவு. ஒரு அவசர காரியமாக மனைவி சென்ற வாரம் ஊருக்கு போயிருந்தார். மகிழ்ச்சியை வெளிக்காட்டாதது மாதிரியும் பிரிய நேரும் சோகத்தை சுமந்தது மாதிரியும் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் நம் முகம் அந்நேர சுக துக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும் முகம். இரட்டை மனநிலையை நடித்துகூட வரவழைக்க முடியாது. இருந்தும் எப்படியோ ஒப்பேற்றி "நீ இல்லாம நாலஞ்சு நாள் என்ன பண்ண போறன்னே தெரியல" என்பது போல முகத்தை வைத்துக்கொண்டேன். ஒட்டுமொத்த மனைவிகள் சமூகமும் உளவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் கணவர்களை பெர்பார்ம் பண்ண விட்டு கலாமாஸ்டர் போல ரிசல்ட் சொல்வார்கள். "ரொம்ப நடிக்காத" என்பது போல.

சனிக்கிழமை இரவு விமானநிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வெளிவரும்போது நான் முற்றிலும் ஜனகராஜாக மாறியிருந்தேன்.  சின்ன சட்ட சிக்கல் என்னவென்றால் நவீனன் என்னுடன் இருந்தான். அவனை முழுநேரமும் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து அழைத்து வரும்வரை, பிறகு அவன் செய்யும் லோலாயங்கள் அனைத்தையும் ஜென் மனநிலையில் கையாள வேண்டும், இப்படி நாள் முழுவதும் பார்த்துக்கொள்ள வேண்டும். ப்ளே லிஸ்டில் நான்கு படங்களை வரிசையாக ஓடவிட்டால் நாள் முழுவதும் ரெண்டு இஞ்ச் கூட நகராமல் லூப்பில் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பான். அவ்விதம் செய்யலாகாது கண்ணுக்கு கேடு என நிறுத்தினால் அவன் கேள்விக்கணைகள் என்னை நிலைகுலையச் செய்துவிடும். ஒரு பதிலைத் தொடர்ந்து நூறு கேள்விகள் வரும். "ஸ்பைடர் மேன் அண்ணனா, சூப்பர் மேன் அண்ணனா? ஸ்பைடர் மேன் அம்மா யாரு? ஸ்பைடர் பூச்சி கடிச்சா ஸ்பைடர் மேன் ஆயிடலாமா? அந்த பூச்சி எங்க இருக்கு? என்ன அங்க கூட்டிட்டு போப்பா, அத என்ன கடிக்க சொல்லு நான் ஸ்பைடர் மேன் ஆயிடறேன்.  இந்த பில்டிங்லருந்து அப்படியே அந்த பில்டிங்கு இப்படித் தாவறேன் என சோபாவிலிருந்து நேராக என் நெஞ்சில் தரையிறங்குவான். நான் உடல் உறுதியாக இருந்தே ஆகவேண்டும்.

அதெல்லாம் கற்பனை கதாபத்திரங்கள் மை சன் என்று சொன்னாலும் அவன் ஏற்பதில்லை. "நீ பொய் சொல்ற போப்பா" என்பதுபோலவே பார்ப்பான். மனைவி ஊருக்குச் சென்றதும் முதலில் தோன்றியது கொஞ்சம் பன்றிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிடவேண்டும் என்ற வெறி. வீட்டில் சமைப்பதில்லை. அனுமதிப்பதில்லை. நிஜத்தில் நடந்தது என்னவோ மூன்று நாட்களாக அடுப்பே பற்றவைக்கவில்லை. இவனை சமாளிப்பதிலேயே எனது அனைத்து சக்திகளும் கரைந்துவிடுவதை கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்விதம் மனைவி தடை போட்டிருந்தாலும் ஊரில் கதை வேறு. எப்போவாவது மாமனார் பன்றிக்கறி வாங்கிவந்து சமைத்து சாப்பிடுவார். அவரே சமைப்பார். வீட்டுக்கு வெளியே. நல்லா மணக்க மணக்க இறக்கி வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்து பார்த்தால் சட்டி காலியாக இருக்கும். தின்றுவிட்டு ஆளுக்கொரு திசையில் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட வீட்டிலிருந்து வந்து எனக்கு தடை விதித்திருக்கிறார். இது பொதுவாகவே எல்லோர் மனநிலையும் இதுதான். பன்றிக்கறி சாப்பிடுவது இழிவான செயல். அது வெண்பன்றியானாலும் சரி காலா பன்றியானாலும் சரி. வார்டன்னாவே அடிப்போம் மனநிலை.

மாடுதான் கோமாதா வேணாம். பன்றி என்னா பண்ணுச்சி என்று கேட்கக்கூட முடிவதில்லை. பன்றி என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தையாகத்தானே நாம் உபயோகிக்கிறோம். தம்பி இங்கிருந்த வரை எப்போவாவது பன்றிக்கறி சமைத்து பொதி கொண்டுவருவான். பண்ணையாள் போல வெளியில் ஒதுங்கி சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

நெடுநாட்களாக பனிரெண்டு வருட சிவா ஒன்று கிடக்கிறது. அதை என்னவென்று கேடகாலம் என்றாலும் கூட முடிவதில்லை. பின்னிரவில் கூட சாத்தியமில்லை. நவீனனை தூங்கச்செய்துவிட்டு இரண்டு போடலாம் என்றால் என்னை அவன் தூங்கச்செய்துவிடுகிறான்.  காலை எட்டறைக்கு பள்ளி செல்லவேண்டும். பல்விளக்க வைத்து குளிக்க வைத்து, யூனிபார்ம் அயர்ன் செய்து, சாக்ஸ் உள்ளாடையிட்டு, தலைசீவி பவுடர் அடித்து வெளியில் வந்து ஓடி மூச்சு முட்ட பள்ளியில் விட்டால் தண்ணி பாட்டிலை மறந்து விட்டிருப்பேன். சம்பளத்தில் பாதியை பள்ளிக்குதானே தருகிறேன் இன்றொருநாள் குடுக்க கூடாதா என்றால் பிலிப்பைனி டீச்சர் வாழைப்பழக் கூழை வாயில் வைத்துக்கொண்டே ஆங்கிலத்தில் பள்ளி விதிமுறைகள் குறித்த பாடம் எடுக்கிறாள். எல்லாம் முடித்து சலிப்போடு டீக்கடையில் அமர்ந்து தே தாரே குடித்து எழும்போதுதான் நினைவுக்கு வந்தது பர்ஸ் எடுத்து வரவில்லை. கல்லாவில் நிற்பவரிடம் "அப்புறம்ணே எல்லாம் நல்லா போகுதா? வியாபாரம்லா எப்புடி" என்று உறவாடி கடன் சொல்லிவிட்டு வர நேர்ந்தது.

மனைவி சென்ற முதல்நாளே இப்படி. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் மோசம். நான் சரியாக திட்டமிடவில்லை, ரூம்போட்டு திட்டம் போட்டிருந்தாலுமே கூட இதுதான் கதி என்பது போலவே இருந்தது. எதை செய்துகொடுத்தாலும் "காண்டாமிருகம் சுச்சா" மாதிரி இருக்கு என்பது போல நவீனன் பார்வை இருந்தது. சமையல் க்ரிட்டிக்கில் இவன் என் வாரிசாக வருவான் என மகிழ வேண்டிய நேரத்தில் வளர்த்த கடா பழமொழியும் நினைவுக்கு வருகிறது. மெனுகார்டை நீண்ட நேரம் மேய்ந்து இட்லி ஆர்டர் செய்வதுபோல அதையும் இதையும் செய்து தின்று பார்க்கவேண்டும் என்ற வெறி உப்புமாவில் வந்து முடிகிறது. இதுதான் வாழ்க்கை. ஏன் இந்த வாழ்க்கை சாமான்யர்களுக்கு மட்டும் தினசரி திண்டாட்டங்களை ஒவ்வொரு நொடியும் வகுப்பெடுத்துக் கொல்கிறது என்று புரிவதில்லை.

நாளை மனைவி வந்துவிடுவார். எல்லா பொறுப்புக்களையும் ஒப்படைத்துவிட்டு அக்கடாவென்று இருக்கலாம் என நினைக்கிறது மனது. இதற்கு முன் இருந்த சலிப்பு நிலையே பரவாயில்லை என்று உணர்த்தியதுதான் இந்த நான்கு நாட்களின் சாதனை. இருகோடுகள் தத்துவம். 
Friday, March 16, 2018

மார்க்கும் ரேச்சலும்

மார்க்கும் ரேச்சலும்

”இந்த 4டி நம்பருக்கு ஆறு வெள்ளி விழுந்திருக்கு; இத எடுத்துகிட்டு நாலு வெள்ளி தர முடியுமா?” என்று கேட்டபோதுதான் அறிமுகமானார் மார்க் க்றிஸ்னி.
நல்ல ஆங்கிலத்தில்தான் கேட்டார். அதில் ஒரு கோபம் தெறித்து விழுந்து என்னை பயமுறுத்தியது. ’எனக்குக் கொடுக்கவில்லை என்றால் நீ உயிர் வாழ்வது பயனற்ற செயல்’ என்று சொல்வதுபோல இருந்தது.
அவர் கண்களில் பழுப்பு நிற விரக்தியுடனான அகோர பசி தெரிந்தது. மேலதிகமாக எனக்கு எதுவுமே தேவையில்லை. நாலு வெள்ளி பணம். மேற்கொண்டு பேச்சு எதையும் விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன். ஏற்கனவே பலரிடம் முயற்சித்திருக்கக் கூடும். நான் எத்தனையாவது ஆள் என்பதை யூகிக்க வேண்டிய அவகாசத்தை அவர் கொடுக்கத் தயாரில்லை.
4டி தாளை கொடுக்காவிட்டாலுமே கூட நான்கு வெள்ளிகளை அவருக்குக் கொடுத்திருப்பேன் என்றாலும் அவர் அதற்குச் சம்மதிக்க மாட்டார் எனத் தோன்றியது. எண்களை நான் நோட்டமிடவுமில்லை. இளநீல நிற வெள்ளித் தாள்கள் இரண்டை எடுத்து நீட்டினேன்.
என் கண்களை ஏறிட்டுப் பார்க்கவுமில்லை. வெடுக்கென பிடுங்கிக் கொண்டு நம்பர் சீட்டை கையில் திணித்து நேராக மூலைக்கடை மலாய்க்கடைக்குள் நுழைந்து ஒரு சைவர் சொல்லி டேபிளில் அமர்ந்தார். இரண்டு சிந்தெடிக் தாள்களை ஸ்பூன் போர்க் நிரம்பிய ப்ளாஸ்டிக் கூடைக்குக் கீழே நன்கு தெரியுமாறு காற்றில் பறக்காமல் இருக்க அதன் அடியும் வைத்துவிட்டு காத்திருக்கலானார். நொடிகளில் பொறுமை இழந்தவர் எங்கேயோ பார்த்தபடி டேபிளில் விரலால் தட்டத் தொடங்கினார். தட்டு வரும் திசையில்தான் அவர் கண்கள் நிலைக்குத்தியிருந்தது.
4டி தாளை இரண்டாக மடித்து மணிபர்சுக்குள் வைத்துக் கொண்டேன்.
இந்த நேரத்தில் அவரிடம் எவனாவது நேரம் கேட்பது தற்கொலைக்குச் சமமான காரியம்.
பீங்கான் தட்டில் கொஞ்சம் சோறும் அருகருகே இரண்டு கூட்டுப் பொரியலும் குவளையில் குழம்பு ரசமும் வைத்தபடி போய்விட்டவனைப் பார்க்கவில்லை அவர். திடீரென தன் முன்னே பேரதிசயம் நிகழ்ந்து சோறு உண்டாகியதைப்போல பரவசத்துடன் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அந்தத் தெருவில் அவர் மட்டுமே இருப்பதைப் போல உணர்ந்தார். சாலையில் நடமாடிக்கொண்டிருந்த மனிதர்கள் திடீரென காணாமல் போனார்கள். ஸ்பூனை ஒதுக்கிவிட்டு கையால் சோற்றைப் பிசைந்தார். முழுதாகப் பிசைந்து முடிக்கக்கூட இல்லை, எடுத்து வாயில் போட ஆரம்பித்தார். இதற்கு முன் எத்தனை வேளை சாப்பிடாமல் இருந்தாரோ… உள்ளே உணவு செல்லச் செல்ல மெல்ல அவரின் பசி அடங்கிக்கொண்டே வந்தது. அவரின் கண்கள் குளிர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தன. மறைந்து போன சில மனிதர்கள் மறுபடியும் தோன்றி நடமாடத் தொடங்கினார்கள். அவர் சாப்பிட்டு நிமிர்ந்தபோது சாலையில் சகஜ நிலை மீண்டது.
இழந்துகொண்டிருந்த நம்பிக்கைகள் மெல்ல அவரிடம் முளை விடத்தொடங்கின. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மார்க்கை பலகாலம் முன்பே தெரியும். ஆனால் அறிமுகமில்லை. அவரும் என்னை நன்றாகவே அறிந்திருப்பார். அவரின் பக்கத்து அறைதான் நான். கடந்த இரண்டு வருடமாகவே அவரை நன்றாக அறிந்திருப்பவன்.
எவரிடமும் பேசமாட்டார். தினசரி சவர முகம். மீசையை மழித்திருப்பார். மாதம் ஒருமுறை கேசத்திற்கு நிறம் அடிப்பார். அந்நாட்களில் அவரின் முகத்தில் பெருமிதம் நிறைந்திருக்கும். லேசான தொப்பை. சராசரி உயரம். நடையில் லேசாக சிவாஜி கணேசனை நினைவுபடுத்தும் தோள் சாய்ந்த வெற்றி நடை. இடது கை பழக்கமுள்ளவர்.
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் தன் பிலிப்பினோ தோழியை யாருக்கும் தெரியாமல் அறைக்கு அழைத்து வருவது வழக்கம். அப்படி வருவதை ஒரு நாள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்விதம் ஒரு பெண், ஆண்கள் மட்டுமே தங்கியிருக்கும் அறைகளைத் தாண்டி வந்து போவது நிறைய பேருக்குத் தெரியவில்லை. குறிப்பாக வாடகைக்கு விட்டிருக்கும் வங்காளிக்கு அறவே தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டான். அதிகாலையில் கட்டில் அதிர மரப்பலகைகளால் ஆன தரை மெல்ல சப்தமெழுப்பி என்னை விழிக்கச் செய்திடும். என்னோடு அறையைப் பகிர்ந்துகொண்ட நண்பர் சடாரென எழுந்து அட்டைச்சுவரின் மேல் காதைப் பொருத்தி எந்தக் கோணத்தில் சம்போகம் போய்க்கொண்டிருக்கும் என்று யூகித்துச் சொல்வார்.
தோழியை வெளியேற்றும் முன்பு சன்னமாக கதவைத் திறந்து இடவலம் பார்த்து எவருமில்லையென உறுதிப்படுத்திக்கொண்டுதான் வெளியேறுவார். சட்டென நீளும் அவர் தலை மழைநீரில் முங்கியெழும் தவிட்டுக்குருவியின் பதற்றத்தோடு இருக்கும். மெல்ல கதவைத் திறந்து தோழியின் கையை இறுகப் பற்றியபடி வெளியேறுவார்.
இப்படியெல்லாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. அவர் இந்த ஊரின் பிரஜை. போதாத காலம், இந்தக் கூண்டு அறைகளில் தங்கியிருக்கிறார்.
மார்க்கைப் பற்றி சகலமும் தெரிந்தாலும் இன்னும் அவரிடம் பேசிப் பழகவில்லை. அவர் யாரிடமும் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த 4டி சம்பவத்திற்குப் பிறகு பொது இடங்களில், அறை திரும்பும் நேரங்களில், கழிவறைக்குக் காத்திருக்கையில் என்பது போன்ற சந்தர்ப்பங்களில் பார்க்க நேர்ந்தால் சிறிதாக புன்னகைக்க ஆரம்பித்திருந்தார்.
ஒவ்வொருநாளும் வேலை முடிந்து அறை திரும்புகையில் அவர் முகம் பார்ப்பதற்கு தீர்க்க முடியாத சூத்திரமொன்றைத் தீர்க்க முயற்சித்து தோல்வியுற்றுத் திரும்புபவனைப்போலதான் இருக்கும். கையில் சைனீஸ் கோப்பி கருமையான நிறத்தில் இருக்கும். அதைக் குடிப்பாரா இல்லையா எனத் தெரியாது. ஆனால் காலையில் வெளியேறும்போது குப்பைகளுடன் அதே கோப்பியைக் கொண்டுபோய் தோம்பில் போடுவதை சிலமுறை பார்த்திருக்கிறேன். தினமும் இருமுவார். சில முறை இருமல் அடங்க வெகுநேரம் ஆகும்.எச்சில் கோழையாக துப்பிக்கொண்டிருப்பது கேட்கும். அதுபோன்ற சமயங்களில் சகிக்க முடியாமல் எழுந்து போய் விடுவேன்.
”என்னதான் பிரச்சினை இந்தாளுக்கு?”
ஆனால் கேட்டுக்கொள்வதில்லை.
இரவு அறை திரும்பிக் கொண்டிருந்தேன்.
திடீரென தூணுக்கு பின்புறமிருந்து மார்க் தோன்றினார். என் வருகைக்காகவே அந்த இடத்தில் காத்திருந்ததுபோலத் தோன்றியது
”ப்ரடர், ஒங்க ஹ்ண்ட்போன் கொஞ்சம் குடுங்களேன், மொலாளிக்கி ஒரு போன் அடிச்சிட்டுத் தரேன் என்றார்.”
தயக்கத்துடன் எடுத்துக் கொடுத்தேன். அவரும் போன் வைத்திருக்கிறார்தான். காசில்லாமல் இருந்திருக்கும்.
யாருக்கோ போன் அடித்தார். முகத்தில் எந்தச் சலனமுமில்லை. ரிங் போய்க்கொண்டே இருக்க யாரும் எடுக்கவில்லை.
பாஸ்டர்ட் என்று சொல்லியபடி திரும்ப முயற்சித்தார்.
இந்த முறை எடுத்துவிட்டான். எனக்குத் தெரியாத சில ஆங்கில வசைகளை வேகமாகக் கொட்டிக்கொண்டே இருந்தார். அவ்வார்த்தைகளைக் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டேன். குறிப்பாக உச்சரிப்பு லயம்.
இன்னும் 30 மினிட்ஸ்ல அக்கவுண்ட்ல பணம் வரலன்னா ஐ வில் சூ யூ. அண்ட் ஐ வில் நாட் வொர்க் ஃபார் யூ எனிமோர், யூ ஃபக்கிங் பாஸ்டர்ட் என்று பேசிக்கொண்டிருந்தார்.
இன்னும் எனக்கு இந்தளவு கோர்வையாக ஆங்கிலத்தில் திட்ட வாய்கூடவில்லை. உற்று கவனித்துக் கொண்டேன். பின்னால் உதவும்.
அவர் பொறுமை இழந்து ஹைபிட்சில் போய்க்கொண்டிருந்தார்.
எனக்கு திகிலாகி விட்டது. இருப்பது ஒரு போன். கோபத்தில் தரையில் அடித்தால் சில்லு சில்லாகப் பறந்துவிடும். யாரிடம் முறையிடலாம் என்று கிலிபிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூன்று சாரிகளை வரிசையாகச் சொல்லியபடி போனை எடுத்து தோளில் துடைத்து அழுக்கு, வியர்வை என ஒட்டியிருக்கிறதா என சரிபார்த்துவிட்டு என்னிடம் நீட்டினார்.
பவ்யமாக வாங்கி வைத்துக்கொண்டேன்.
”சம்பளம் தர மாட்றான்லா… ச்சீ பாய்.”
என்ன சம்பளம்?
ஒரு வாரம் சம்பளம் ஹோல்ட் பண்ணி வச்சிருக்கான்லா… சாப்புட காசுல்ல சுன்னி லா பேசறான் அந்த ச்சீ பாய் என்றார்.
எனக்கு ஒருவாறு புரிந்தது.
என்ன வேலை என்றேன்.
மங்கு கழுவுற வேலை என்று கையை நீட்டினார்.
நாள் முழுக்க கையை தண்ணீரில் ஊறப்போட்டிருந்தால் சொதசொதத்துப் போயிருக்குமே அதைப்போல இருந்தது. நக நுனிகளில் வெள்ளை நிறம் படர்ந்து நகங்கள் அரித்து மழுங்கியது போல இருந்தன. மங்குகளில் உள்ள எண்ணைப் பிசுக்கு போக கெமிக்கல் வேறு சேர்த்திருப்பார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் நகம் இருந்த இடம் தெரியாமல் போய்விடக்கூடும்.
”என்னங்க மார்க், இப்டி இருக்கு கையி? க்ளவுஸ் போட்டுக்கலாம்ல?” என்றேன்.
”அதப்போட்டுதான்லா இப்டி இருக்கு. இல்லன்னா வெரல் காணாம போயிருக்கும்.”
”மங்கு கழுவத்தான் மெஷின் இருக்குமே?”
எரிச்சலோடு என்னைப் பார்த்தார். நான் பம்மிக்கொண்டேன்.
கிளம்பறேன் என்று சொல்ல நினைத்த நேரத்தில் “பீர் சாப்புடலாமா?” என்றார்.
’போன் பண்றதுக்கே காசில்ல. பில்ல நம்ம தலையில கட்டிடுவாரோ’ என்று தயங்கினாலும் அப்படியொன்றும் அதிக செலவாகாது.
போலாம் என்றேன்.
பள்ளத்துக்குப் போயிடலாம் என்று ஜாலான் பசார் ஹாக்கர் செண்டரைக் கைகாட்டினார்.
ஆம், அது கொஞ்சம் பள்ளத்தில்தான் இருந்தது.
இருவரும் மெதுவாக பள்ளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
என்ன வேலை என்றார்
ஃபுஜி கம்பெனில டெக்னிகல் சப்போர்ட்.
கம்ப்யூட்டர் வேலையா?
இல்ல. காப்பியர் மெஷின் இருக்குல்லயா? அங்க ப்ராப்ளம் வந்தா சரி பண்ற வேலை.
எத்தனை வருஷமாச்சு இங்க வந்து?
ஜனவரி வந்தா நாலு வருஷம்.
தெல்வாரா ஆண்டி ஷாப் ஹவுஸ்ல நீங்க தங்கிருக்கும்போதே பாத்திருக்கேன். ஆனா பேசினதில்ல.
ம்ம்… அந்த ஆண்டி கடய தூக்கிட்டாங்க லா. நஷ்டம் ஆச்சாம். பங்களாக்காரன் புருசன் சரியில்ல லா.
”கடக்காச கொண்டு போய், ஓழ்ல பாதி கசினோல பாதிய உட்டடிச்சிட்டான். பாவம் அந்தப் பொம்பள, எப்படி வியாபாரம் ஆன கட தெரியுமா அது?” என்று தான் முன்பு தங்கியிருந்த இடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே நடந்து வந்தார். நான் உம் கொட்டியபடி வந்துகொண்டிருந்தேன்.
பள்ளத்தை நெருங்கியிருந்தோம். கீழே பணம் எடுக்கும் மெஷின் காலியாக இருந்தது. கொண்டு போய் கார்டைச் சொருகி எண்களை அழுத்தினார்.
வசவொன்றை உதிர்த்துவிட்டு என்னைப் பார்த்தார்.
இன்னும் போடல அந்த ச்சீ பாய். போன குடு என்று கையை நீட்டினார்.
பராவல்ல, என்கிட்ட காசு இருக்கு வாங்க போலாம்.
அவர் ஒத்துக்கொள்வதாய் இல்லை. மறுபடி அதே நம்பருக்கு போன் போட்டு ஏசினார்.
ஏன் முதலாளியை கெட்ட வார்த்தையை திட்டறிங்க மார்க்?
அவன்லாம் மொதலாளியா, கம்னாட்டிப்பய. ஏமாத்தி சம்பாதிக்கற காசு ஒடம்புல ஒட்டாது லா.
நகரின் கொஞ்சம் தரம் அதிகமான சாப்பாட்டுக்கடைகளில் மங்கு கழுவுவதற்கான காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார் மார்க்கின் முதலாளி. இங்கேயே பிறந்த வட இந்தியன். வேலைக்கு ஏமாந்த வயதான கிழங்கட்டைகளை அனுப்பி பாதியை எடுத்துக்கொண்டு மீதியை இழுத்தடித்து கொடுப்பான்.
முடியாது… ஃபைவ் மினிட்ஸ். இல்லனா நாளையிலிருந்து வரமுடியாது.
சொன்னமாதிரியே ஐந்து நிமிடத்தில் 50 வெள்ளி அக்கவுண்டில் விழுந்திருந்தது.
நொடியில் உருவி எடுத்தார். டேபிளில் அமர்ந்தோம்.
சீனக்கிழவி வந்ததும் மூன்று டைகர் பீர் ஆர்டர் செய்து கிழவி கையில் ஐம்பது வெள்ளியைத் திணித்தார்.
ரெண்டு பேர்தானே இருக்கோம்? எதுக்கு மூணு சொல்றிங்க மார்க்?
அந்தக் கிழவிக்கும் ஒண்ணு. எப்பவும் தனியா வருவேன். அப்போலாம் அவளுக்கும் ஒண்ணு வாங்கிக் கொடுப்பேன். கொஞ்ச நேரம் உக்காந்து பேசுவா. அது பழகிடுச்சி.
அவங்க கடையில வாங்கி அவங்களுக்குக் குடுக்கறதுலாம் ரொம்ப ஓவர்.
நீலநிற வாளியில் பாதியளவு ஐஸ் கட்டிகள் இருக்க அதில் மூன்று பியர் போத்தல்கள் வெளியே தலைநீட்டியவாறு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. வாளியை கையில் பிடித்துக்கொண்டு மறுகையில் மூன்று கண்ணாடித் தம்ளர்களை எடுத்து வந்துகொண்டிருந்தாள். கிழவிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். பழைய நடிகர் வீகே ராமசாமி நடப்பது போல ஆடி ஆடி வந்துகொண்டிருந்தாள். மார்க்கிடம் பரிவு நிறைந்த புன்னகையுடன் சீன மொழியில் எதையோ சொல்லியபடி நுரை வராமல் தம்ளர்களை சாய்த்து பியரை ஊற்றினாள். நான் உன்னிப்பாக கவனித்துக்கொண்டேன். சுத்தமாக நுரை வரவில்லை.
மூன்று பேரும் உயர்த்திப் பிடித்து சியர்ஸ் சொல்லிக்கொண்டோம். அவள் அமரவேயில்லை. நின்றபடி ஒரு மிடறு விழுங்கி சைனீஸில் எதோ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
என்ன என்பது போல மார்க்கைப் பார்த்தேன்.
“பிசி டைம் லா… அப்பப்போ வந்து குடிச்சிட்டுப் போயிடும், நாம குடிக்கலாம்” என்றார்.
”உடல் உழைப்பு தேவைப்படாத எவ்வளவோ வேலை இருக்குல்ல. செக்யூரிட்டி, சேல்ஸ்மேன், மார்க்கெட்டிங் வேலன்னு ஏகப்பட்டது இருக்கே, அதெல்லாம் பாக்கலாம்ல, முஸ்தபாவுக்கு போனா போதுமே. அரசாங்க வேலை மாதிரில்ல அது. ஐம்பது வயசுக்கு மேல இப்படி கஷ்டமா இருக்கற வேலை ஏன் செய்றிங்க?”
”ஃபிப்டி செவன்.”
சரி அம்பத்தேழுதான். அந்த மாதிரி வேலையா தேடிக்கலாம்ல.
அது எனக்கு சரிப்படாது லா. ஐ வாண்ட் டெய்லி கேஷ். என்னால ஒரு மாசம் முழுக்க உழைச்சு அந்த சம்பள தேதிக்காக காத்திருக்கறது சரியா வராது. வேலை முடிஞ்சதும் காசு வேணும். அவ்வளவு தேவை இருக்கு. ஒருவாரம் விட்டு வச்சதுக்குதான் இன்னிக்கு காசுல்லாம நிக்கிறேன்.
அதெல்லாம் ஒரு காலம். மாச சம்பளம் வாங்கி, வீடு மனைவி இருந்தது. டிவோர்ஸ் வாங்கிட்டுப் போனதுக்கப்புறம் நான் ஒண்ணுமில்லாம ஆகிட்டேன்.
போட்டோ எடுத்துக்காட்டினார். மஞ்சள் நிற சீனப்பெண். அந்தப்போட்டோவை மிக நீண்ட காலம் அவர் பர்சில் வைத்திருந்திருக்கக் கூடும். ஓரங்களில் மடங்கி புகைப்படத்தின் நிறம் வெளுத்திருந்தது.
ஏன் என்னாச்சு எனக் கேட்கவில்லை.
பதினெட்டு வருசம் ஒரே வீட்ல இருந்தோம். புள்ளைங்க இல்ல. ஆனாலும் சந்தோஷமாதான் இருந்தோம். தத்து எடுத்துகலாம்னு சொன்னேன். அவ சம்மதிக்கல. அப்படியே வாழ்ந்துடலாம்னு பாத்தேன். ஆனா திடீர்னு ஒருநாள் வந்து பிரிஞ்சிடலாம்னு சொன்னா. ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங்ல இருந்தேன். நான் ஒரு சக்சஸ்புல் சேல்ஸ்மேன். கைல தாராளமா காசு இருக்கும் செலவழிக்க முடியாத அளவுக்கு இருக்கும். டிவோர்ஸ் கேஸ் முடிஞ்ச உடனே வீடு அவ பேருக்கு குடுத்துட்டேன். நான் தெருவுக்கு வந்தேன். முன்ன மாதிரி வேலையும் பாக்க முடியல. காசு தேவப்படறப்ப வேலைக்கு போவேன். தேவையில்லன்னா அறையிலயே இருப்பேன். சாப்பாடு, ரூம் சேவா, கைச்செலவுக்கு வர்ற மாதிரி வேலை செஞ்சா போதும், இனிமே சேர்த்து வச்சி என்ன பண்ண போறேன்.
சொந்தம்னு சொல்லிக்க கொஞ்சம் பேர் இருக்காங்க. இருக்கறதோட சரி. யாரையும் போய் பாக்கறதுமில்ல. மொதல்ல நான் உயிரோட இருக்கறனான்னே அவங்களுக்குத் தெரியாது.
இடையிடையே கிழவி வந்து மாறாத புன்னகையுடன் குடித்துவிட்டுப் போனாள். அவ்விதம் வரும் சமயங்களில் மார்க்கின் முதுகில் ஆதரவுடன் தடவியபடி இருந்தது அவளது இன்னொரு கரம். பூனை தனது வாலை தரையில் தவழ விடுவதுபோல ஒருவிதமான தாளம் இருந்தது. அதை அன்புடன் ஏற்றுக்கொண்டிருந்தார் மார்க்.
விடைபெறும்போதும் அதே முகம் கொள்ளாத சிரிப்புடன் விடைகொடுத்தாள் கிழவி.
வெளியே வந்து துளி புகையிலையை எடுத்து வெள்ளை நிற காகிதத்தில் இட்டு உருட்டி ஓரத்தில் நாவால் தடவி ஒட்டிக்கொண்டதும் ஒரு சிகரெட் தயாரானது. அதைப் பற்றவைத்தார். அறை திரும்புவதற்குள் மூன்று முறை உருட்டி இழுத்து முப்பது முறை இருமினார்.
அவரது அறை முழுக்க பணத்தை லேமினேட் செய்து சுவற்றில் ஒட்டியிருந்தார். பணம் என்றால் நிஜப்பணம் அல்ல. அதையே கொஞ்சம் பெரிதுபடுத்தி பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யப்பட்டது. வரிசையாக ஐந்து, பத்து, அம்பது, நூறு வெள்ளி நோட்டுகள். எல்லாவற்றிலும் ஸ்பெசிமன் எழுதியிருந்தது. சீனர் வீடுகளில் தொங்குவது போல சிவப்பு நிறத் தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மங்கலாக கோடாலித் தைலம், டைகர் தைலம், சிரவி தைலம் என எல்லா வகை தைலங்களும் ஒன்றாகத் தேய்த்துக்கொண்ட மணம் அறை முழுக்க நிரம்பியிருந்தது. ஏர்கான் காற்றுக்கு அவை வெளியே போக சாத்தியமில்லாமல் உள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தன.
சுவற்றில் இருந்த பணத்தைப் பார்த்து ”என்ன இதெல்லாம்?” என்றேன்.
”காலைல எந்திரிச்சதும் பணத்துல முழிச்சோம்னா நல்லதுல்ல, அதான்” என்றார்.
”அப்படின்னா ஒங்ககிட்ட நெறைய பணம் சேர்ந்திருக்கணுமே?” என்றேன் சிரித்தபடி.
டேபிள் மேலே நிறைய மாத்திரைகள் இருந்தன. குப்பிகளில் கஷாயம், கீழே காலியான மதுப்புட்டிகள். நீலநிற மாத்திரையைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. என்ன இது என்றேன்.
”நீ ஒரு ரெண்டு அட்டையை எடுத்துக்கோ, கல்யாணமாச்சுன்னா யூஸ் ஆகும்” என்றார்.
”இவ்ளோ வயசுக்கப்புறம் இதெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது. பக்கவிளைவுகள் அதிகம்” என்றேன்.
”டிக்சன் ரோட்டுல மாத்திர விக்கிற சீனன் ஒருத்தன் நம்ம கூட்டாளி. திடீர்னு ஒருநாள் வந்தான் கொஞ்சம் மாத்திரை குடுத்துட்டு வித்து காசா மாத்திக்கன்னு சொல்லிட்டு மலேசியா போயிட்டான். நான் யார்கிட்ட லா கொண்டுபோய் விக்கிறது. கட்டிலுக்கு கீழ இன்னும் இருக்கு ஒன்னோட கூட்டாளிங்க யாருக்காவது குடு” என்றார்.
பிறகு மார்க்கின் அன்றாடங்களில் ஏதோவொரு நொடியில் நானும் இருக்குமாறு அமைந்து விடுவது வாடிக்கையானது. சில சமயம் போன் அடித்து “சாப்பாடு வாங்கிட்டேன், வந்துட்டே இருக்கேன். வெய்ட் பண்ணு” என்று சொல்வார். நாளைக்கு பீச்சுக்கு போலாம் என்பார். வெள்ளைக்காரர்களின் வீட்டு பார்ட்டிகளில் வேலைக்கு போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். அதற்கான சம்பளமும் உண்டு. இரவு ஒரு மணிக்கு தே தாரே வாங்கி வந்து எழுப்பி குடிக்கச்சொல்வார். அகால நேரம் குறித்து கோபித்துக் கொண்டதற்கு அடுத்த நாட்களில் கதவில் மாட்டிவிட்டுச் சென்றிடுவார். விடியலில் கதவு திறக்கும்போது கைப்பிடியில் தே தாரே தொங்கும்.
”புத்தாண்டு அன்று எங்கயும் போகவேணாம். ஒரு இடத்துக்கு போகனும்” என்றார்.
எந்த இடம்?
சொல்றேன் லா, ரெடியா இரு என்றார் சிரித்தபடி.
அன்று ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அழைத்துச் சென்றார். எரிச்சலாக வந்தது. விடுமுறை நாளில் அத்தனை மக்களும் அங்கேதான் இருந்தனர். அங்குதான் ரேச்சலை முதல் முதலாக பார்த்தேன். இயல்பிலேயே மனித இனத்திற்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு துணை தேவைப்படுகிறது. மார்க்கின் கேர்ள் ப்ரெண்ட் ரேச்சலுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ரேச்சலுக்கு முன்புற எத்துப்பல். சிரிக்கும்போதெல்லாம் வெட்கத்தில் வாயை மறைத்துக்கொண்டாள். வயதும் ஐம்பதுக்குள் இருக்கும். கிழவியின் சுருக்குப்பை போல முலைகள் தளர்ந்திருந்தன. நடையில் துளி தளர்வு தெரிந்தது இருந்தாலும் அதை மறைப்பது போல வேலைகளை வேகமாக செய்தாள். இருவரும் மிக அந்நியோன்யமாக இருந்தனர். அவள் மார்க்கிடம் காட்டிய அபாரமான அன்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மார்க் முன்பே ரேச்சலிடம் என் வருகையை சொல்லியிருப்பார் போல. எனக்கும் சேர்த்தே தன் கையால் சமைத்து எடுத்து வந்திருந்தாள். மார்க் ஒரு வைன் பாட்டிலைத் திறந்து எல்லோருக்குமாக ஊற்றினார்.
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் இதே பார்க்கில் இதே பெஞ்சில் கடந்த ஐந்து வருடமாக சந்தித்து வருவதாக மார்க் சொன்னபோது அவர்களுக்கிடையேயான காதலை உணர முடிந்தது.
எதிரே கடற்கரை, சிமெண்ட் பெஞ்ச், மிதமான வெயில் வயது முதிர்ந்த காதலர்கள் என அந்த இடம் இதற்கு முன் வாழ்வில் காணாததாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தை மிக நேர்த்தியாக சுத்தம் செய்தாள் ரேச்சல். அவர்கள் தனியாக பேசிக்கொண்டிருக்கட்டும் என அங்கிருந்து கொஞ்சம் காலாற நடந்துவந்தேன்.
கிளம்பும்போது கொத்தாக ரப்பர் பேண்ட் இடப்பட்ட கடிதங்களை மார்க்கிடம் கொடுத்தாள். அவை காதல் கடிதங்களாக இருக்க வாய்ப்பில்லை. வைப்பு நிதி, வங்கிகள் போன்றவற்றிடமிருந்து வந்தவை. பிரிக்கப்படாமல் இருந்தன.
என்ன கடிதங்கள் என்று கேட்டேன்.
எனக்கு வந்ததுதான். இன்னும் கொஞ்ச நாள்ல ரேச்சல் கூட பிலிப்பைன்ல போய் செட்டில் ஆகப்போறேன். ரேச்சலோட கிராமம் ரெண்டு மலைக்கு நடுவுல ரொம்ப அழகான கிராமம். நாங்க ரெண்டே பேர்தான். சிபிஎஃப் பணம், கொஞ்சம் சேவிங்க்ஸ் எல்லாம் எடுத்து சிட்டிசன்ஷிப்ப கேன்சல் பண்ணிட்டு அங்கப் போறேன். அதான் எல்லா அட்ரசையும் இப்பவே பிலிப்பைனுக்கு மாத்திட்டேன். எனக்கு வர்ற கடிதம் எல்லாம் அங்க போய் ரேச்சல் மூலமா என் கைக்கு வரும். சொல்லிக்கொண்டே சில கடிதங்களை பிரிக்காமலே குப்பைத் தொட்டிக்கு அனுப்பினார். சிலதை திறந்து வாசித்துவிட்டு அதையும் குப்பையில் போட்டார்.
மார்க்குக்கு முதல் அட்டாக் வந்தபோது தெய்வச்செயல் போல நான் அருகில்தான் இருந்தேன். நெஞ்சைப் பிடித்தபடியே எழுந்து வந்து என் கதவைத்தான் தட்டினார். வரும் அறிகுறி தெரிவதற்கு முன்பே எமர்ஜென்சி போன் செய்து அவரே பேசிவிட்டுத்தான் கதவைத் தட்டியிருந்தார். இரு கைகளிலும் அவரைத் தூக்கி படிகளில் இறங்கி வரும்போதே ஆம்புலன்ஸ் ஆட்கள் வந்துவிட்டனர். ஸ்ட்ரெச்சரில் தூக்கி வேனில் போகும்போது என் கண்கள் கலங்கியிருந்தன.
மூன்றாவது நாளில் எதுவுமே நடக்காதது போல சுருட்டிய சிகரெட் புகைத்தபடி அதே பெருமித நடையோடு எதிரே வந்தார்.
”ஆய்சு கெட்டி லா.” வந்துட்டேன் என்றார் சிரித்தபடி. ஆனால் உடலில் சோர்வும் தளர்வும் தெரிந்தது. முந்தின நாள் பார்த்த விளம்பரத்தை அவரிடம் காட்டினேன். அதே மங்கு கழுவுகிற வேலைதான். ஜப்பானிய உணவகம். ஆனால் சம்பளம் மூவாயிரம் வெள்ளிகள். பேப்பரை அப்படியே கத்தரித்து பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
அந்த வேலைக்குப் போய் வந்த மூன்றாம் நாளே கடும் காய்ச்சல் ஒருவாரம் படுக்கையாகிப் போனார். விசாரித்ததில் ஜப்பானிய உணவகத்தில் நல்ல சம்பளமாக இருந்தாலும் வேலை கடுமையாக இருந்திருக்கிறது. பனிரெண்டு மணி நேர வேலையில் மொத்தமே பதினைந்து நிமிடங்கள்தான் ஓய்வு. வரிசையாக மங்குகள் மலைபோல காத்திருக்குமாம். கழுவி, துடைத்து, அடுக்கி நிமிர்ந்து பார்த்தால் உடலின் அத்தனை சக்தியையும் உறிஞ்சியிருக்கிறது.
ஏன் அந்த விளம்பரத்தை அவருக்குக் கொடுத்தோம் என்றானது. வார இறுதியில் ரேச்சல் வந்து பார்த்துவிட்டுப்போனாள். விசும்பும் சத்தம் பக்கத்து அறையிலிருந்த எனக்குக் கேட்டது.
உடல் தேறியபின்பு ஒருநாள் மார்க் வந்தார். ”ஒரு சின்னாங்கான வேலை கெடச்சிருக்கு, ஆனா இங்கிருந்து பாக்க முடியாது. வேலை எடத்துலதான் தங்கணும்னு ஸ்திரிக்டா சொல்லிட்டாங்க” என்றார்.
”என்ன வேலை?” என்றேன்
சீனன் வீடு லா, தரை வீடு. பெரிய பணக்காரன். ரெண்டு நாய் வச்சிருக்கான்லா. புள்ள மாதிரி வளக்கறானாம். அதுக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுக்கணும். நல்லா பாத்துக்கணும். அவனே ரூம் தந்துடறேன்னு சொல்றான். சாப்பாட்டுக்கு அங்கயே சொல்லிட்டான். ஆனா சம்பளந்தான்லா ரொம்ப கம்மி. அதான் யோசிக்கறேன். ஆனா வேலை ரொம்ப சின்னாங்கான வேலை. ரெஸ்ட் எடுக்கலாம்.
எவ்ளோ சம்பளம்?
எழுநூறு வெள்ளி தரானாம். யோசிச்சிட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். ரேச்சல் கிட்ட கேட்டேன். இனிமே மங்கு கழுவ போனின்னா ஒடம்பு ஒருமாசம் கூட தாங்காது இந்த வேலைக்குப் போன்னு சொல்றா, சீனங்கிட்ட போன்னு சொல்றா. நீ என்ன சொல்ற?
அவங்க சொல்றதுதான் சரி. ரெஸ்ட் கெடைக்கற வேலை. இப்ப இருக்கற நெலமைக்கு அதான் பெஸ்ட்.
ரூம் சேவா ரெண்டு மாசம் பாக்கி இருக்கு. 1500 வெள்ளி. ஓனருக்கு என்ன சொல்றதுன்னே தெரிலயே. காசு அடைக்காம எப்டி போறது?
அத நான் பாத்துக்கறேன். வேற யாரையாவது வேலைக்கு எடுக்கறதுக்குள்ள நீங்க கெளம்புங்க. நான் ஓனர்ட்ட சொல்லிக்கறேன்.
கைகளைப் பிடித்துக்கொண்டார். ரெண்டு மாசம் சம்பளம் எடுத்ததும் திருப்பித் தருவதாக வாக்களித்தார்.
மொத்தமே இரண்டு அட்டைப் பெட்டிகளில் அடைக்கும் அளவுக்குத்தான் அவரது பொருட்கள் இருந்தன. டாக்சி பிடித்து வழியனுப்பும்போது கண்ணீர் மல்க விடைபெற்றதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. தொடர்பு எண்ணை மாற்றிவிட்டிருந்தார். காசுக்கு இல்லையென்றாலும் உடல்நிலை பற்றி விசாரிக்கக் கூட எந்த தொடர்புமில்லாமல் போனது. ரேச்சல் எண்கூட என்னிடம் இல்லை. என்ன மாதிரியான மனிதன் இவன் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
எப்போதாவாது மார்க்கின் நினைவு வரும்போது இரண்டு மலைகளுக்கு இடையிலான சிறு குடிசையில் இந்த கிழஜோடிகள் எவ்வித கவலையுமில்லாமல் காலை ஆட்டிக்கொண்டே ஆவி பறக்க நேநீர் அருந்திக்கொண்டிருப்பது போன்ற சித்திரம் வரும். லேசாக புன்னகைத்துக் கொள்வேன். ஆனால் சட்டென மார்க்குக்காக நான் ஓனரிடம் ஜாமீன் எடுத்த வெள்ளிகள் நினைவுக்கு வந்து கெடுத்துவிடும். போற புண்ணியவான் திருப்பிக் குடுத்துட்டாச்சும் போயிருக்கலாம். ஒருவேளை குடுக்கறதுக்கு மனசு இல்லன்னா இல்லன்னாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கலாம். எனக்கென்னவோ மார்க் இங்குதான் இருப்பதாக மனதுக்குள் எண்ணம் ஓடியது. அப்படி இருந்தால் கூட எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான் குடையும் கேள்வி. அப்போதுதான் சட்டென நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பீச்சில் சந்திப்பார்கள் என்று சொன்னது மின்னலாக ஓடியது.
இந்த வருடம் அங்கு போய்ப்பார்க்கலாம். பணம் பிரதானமல்ல. மார்க்கை சந்திக்கலாம் என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தது.
நான் நினைத்ததுபோல இல்லை. புத்தாண்டன்று அவர்கள் வரவில்லை. நெடுநேரம் காத்திருந்துவிட்டு திரும்பலாம் என்று திரும்பி விட்டேன். இந்நேரம் பிலிப்பைன்ஸ் தீவொன்றில் கடலில் கால் நனைத்தபடி இருவரும் ஒயின் சாப்பிட்டபடி இருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கூட மார்க்குக்கு என் நினைவு வராமல் போய்விடும் என்று நினைத்தபடி திரும்பிக்கொண்டிருந்தேன்.
பஸ் ஸ்டாப் அருகே வந்திருந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நடையை வேகப்படுத்தியபொது யாரோ குடையை எனக்கும் சேர்த்து குடைபிடித்தார்கள்.
அது ரேச்சல்தான். சுற்றுமுற்றும் பார்த்தேன். மார்க் தென்படவில்லை.
சட்டென தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள். சிலர் விநோதமான காம்பினேஷனைக் கண்டு புன்னகைத்தபடி சென்றனர்.
அதே சிமெண்ட் பெஞ்ச் அருகே நின்றவாறுதான் என்னைப் பார்த்தாளாம்.
என்னாச்சு? மார்க் எங்கே?
மறுபடியும் விசும்பத்தொடங்கி அழுகையுனூடே சொன்னாள்.
மார்க் இறந்து ஆறுமாதமாகிறது.
சட்டென இருள் கவியத்தொடங்கியதுபோல உணர்ந்தேன். என்னாச்சு? ஏன்? எப்படி? ஏன் தகவல் சொல்லவில்லை? எல்லா கேள்விகளுக்கும் அவள் ஒற்றை பதில்தான் தந்தாள்.
செகண்ட் அட்டாக், ஒருவாரம் கழித்து பேப்பர் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.
அவள் கைகளில் ரப்பர் பேண்ட் சுற்றிய பிரிக்கப்படாத கடிதங்கள் இருந்தன.
இறந்த தம் மூதாதையர் சொர்க்கத்தில் செலவுக்குக் காசின்றி பசியோடிருப்பர். அதனால் பூமியில் உள்ளவர்கள் டம்மி நோட்டுகளைத் தீயிலிடுவார்கள். அது புகையாகச் சென்று அவர்களிடம் அடையும் என்றொரு நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. மார்க், தான் ஒரு சீனன் என்றே சொல்லிக்கொள்வார். சர்ச்சுக்குப் போவதை விடவும் விகாரத்துக்குதான் அதிகம் செல்வார்.
நான் கடைசிவரை மார்க் கொடுத்த நம்பர் சீட்டைக் காசாக மாற்றவில்லை. என் அன்புக்குரிய மார்க் க்றிஸ்னி… நான் இந்தச் சீட்டைத் தீயிலிடுகிறேன். இது ஆவியாக உன்னை வந்தடையும் நேரம் நீ பசியோடிருந்தால் இந்தக் காசை வைத்துப் பசியாறிக் கொள் நண்பனே!

-
உமா கதிர்