எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, September 28, 2006

Enything for நமீதா!!!

நமீதா கூட ஒரு தபா சோறு திங்க போட்டி
வச்சாங்களாம் ஒரு மீஜிக் சேனல்காரங்க.
அதாவது இந்த போட்டியில செயிக்கிறவங்க நமீதா
கூட உக்காந்து ஒரு நைட்டு புல்லா சோறு
திங்கலாமாம். இங்கிலிபீசுல இதுக்கு பேரு கூட
என்னவோ டேட்டிங்னு சொல்றாங்க. இந்த
போட்டிக்கு எத்தன பேர் கலந்துகிட்டு
இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?

ஆறாயிரம் பேர் கலந்துகிட்டாங்களாம்!

Image Hosted by ImageShack.us

நம்ம ஊர்லதான் போலீசுக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க, சினிமாக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க. என்ன ஏதுன்னே தெரியாது ஆனா
வேடிக்க பாக்க கும்பலா நிப்பானுங்க. இந்த மாதிரி
சேவைய தொடர்ந்து செய்ய போறோம்னு S.S மீஜிக்
காரங்க சொல்றாங்க.

வெளங்கிரும்டோய்!

சரி போட்டில என்ன நடந்ததுன்னு பாக்கலாம்.

ஆறாயிரம் பேர வடிகட்டி ஆறாக்கினாங்க. அந்த
ஆறு பேர்ல சோறு பொங்க போற ஒரு அதிர்ஷ்டசாலிய
தேர்ந்தெடுக்கறதில சேனல்காரங்களே குழம்பிட்டதினால
அந்த பொறுப்ப நமீதா அம்மையார்கிட்டயே விட்டுட்டாங்க!

அந்த ஆறு பேரையும் டான்ஸ் ஆட விட்டு வேடிக்க
பாத்தாங்க அம்மையார். அந்த துடிப்பான இளைஞர்களும்
அம்மையார்கூட எப்படியாச்சும் சோறு பொங்கிடணும்னு
போட்டி போட்டுகிட்டு ஓரொண்ணும் ஒண்ணு, இம்மாம்
பெரிய பஞ்சு மிட்டாய், வருவீயா வரமாட்டியா போன்ற
கருத்தான பாடல்களுக்கு (உ)டான்ஸ் ஆடினாங்க.

யாரை பிக்கிக்கறதுன்னு அம்மையாருக்கே டவுட்டு
வந்திடுச்சாம் அந்த அளவுக்கு கலக்கிட்டாங்களாம்
நம்ம எளசுங்க. சரி பொது அறிவு போட்டி வச்சி
தேர்ந்தெடுக்கலாம்ணு அம்மணிக்கு தோணுச்சாம்!

எங்க வீட்ல எத்தினி நாய் இருக்கு?

இந்த பொ(றி)து அறிவு அடில கலங்கிப்போய்
வெடை தெரியாம பெக்கபெக்கன்னு முழிச்சானுங்க.
அட இதுகூட தெரியாதா? நாலு நாய்குட்டி வளக்கறேன்னு
சொல்லி கெக்கப்பிக்கேன்னு சிரிச்சுதாம் நமீதாகுட்டி
(உன்னையும் சேத்து ஒரு பன்னிகுட்டி)

சரி என்கிட்ட யாரு ஐ லவ் யூ னு வித்யாசமா
சொல்றீங்களோ அவங்கதான் அதிர்ஷ்டசாலிங்கோன்னு
சொல்லிபுடுச்சி, ஆறு பேர்ல ஒருத்தல் அவ கைல
கால்ல உழுந்து ரோசாப்பூவா காமிச்சி கெலிச்சிட்டான்.

இதில ஜகா வாங்கின அஞ்சு பேருக்கும் காதில பயங்கர
புகையாம். அடப்பாவிங்களா!

அப்புறம் என்ன??

அந்த ஒருத்தன் நமீதா கூட சோறு மட்டும்
பொங்கினானாம் ஐந்து நட்சத்திர விடுதியில்.

நாட்டின் சுதந்திரதின கொடியேத்தணும்னா
குமிவானுங்களா இவனுங்க.

Monday, September 25, 2006

சமத்காரம்

சமத்காரம்னா என்னன்னு கேட்பவர்களுக்கு முன்னாடியே
அதற்கான பதிலை சொல்லிவிடுகிறேன். அதாவது
ஒருத்தரை புகழற மாதிரி புகழ்ந்து இகழ்வதுதான்
சமத்காரம் என்று சொல்வார்கள். வஞ்சப்புகழ்ச்சி
அணின்னு சொல்வாங்களே அப்படி கூட சொல்லலாம்.
உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்கிறேன்

தஞ்சை மாவட்டத்தில் ஒரு மடாதிபதி, புலவர்கள்
கூட்டத்தை கூட்டினார். மடாதிபதியே தலைமை
வகித்தார். எல்லாப் புலவர்களும் வந்துவிட்டார்கள்
"கடை மடை" என்ற ஊரிலிருந்து ஒரு புலவர்
கடைசியாக வந்தார். அவரை பார்த்த மடாதிபதி,
வாரும் "கடை கடை மடையரே" என்றார், அப்படி
என்றால் "கடைமடை" என்ற ஊரை சேர்ந்தவர்
என்றும் அர்த்தம், "கடைசியில் வந்த மடையன்"
என்றும் அர்த்தம்.

நம்ம ஊர்ல இதையே வேற மாதிரி சொல்வாங்க
"கடை பிகரா" இருந்தாலும் சட்டுன்னு கரெக்ட்
பண்ணிடுறாங்கப்பா அப்படின்னு.

உடனே புலவரும் பணிவோடு "வணக்கம்
மடத்தலைவரே!" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

இது மாதிரியானா சொல்லாடல்களைத்தான்
"சமத்காரம்" என்று சொல்வார்கள்.

இதுபோல பேசுவது அண்ணாவுக்கு கைவந்த
கலை!

Image Hosted by ImageShack.us

கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் ஒரு நாடத்தில்
நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சரித்திர
நாடகத்தில் வந்த சக்ரவர்த்தி, தமக்கு எந்தெந்த
ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியை
பார்த்து கேட்டார்.

"வங்க ராஜா தங்கம் கட்டினார், கலிங்க ராஜா
நவமணிகள் கட்டினார்" என்றெல்லாம் அந்த
ராஜா அடுக்கினார்.

உடனே சக்ரவர்த்தி "சோழ ராஜா என்ன
கட்டினார்? என்று கேட்டார்!

வேலைக்காரனாக நின்ற என்.எஸ்.கே., "வேஷ்டி!
வேஷ்டி!" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

சமத்காரத்திற்க்கும் என்.எஸ்.கே சொன்னதற்கும்
சம்பந்தமில்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக
சொல்கிறேன்.

சரி பதிவு கொஞ்சம் சுவாரசியமா இருக்கணுமே
அப்படீங்கறதினால கீழே ஒரு சமத்காரத்தினை
கொடுக்கிறேன் அதற்கான பதிலை பின்னூட்டத்தில்
தெரிவிக்கலாம்! உங்களுக்கு தெரிந்தவற்றையும்
நீங்கள் இணைக்கலாம்!.

"காக்காய் கறி சமைத்துக்
கருவாடுமென்று தின்பர் சைவர்"

Sunday, September 24, 2006

மாயக்கண்ணாடி

Image Hosted by ImageShack.us

சேரன்: இது எப்படி இருக்கு?

ரசிகர்கள் : கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! நீங்க
நீங்க ஒருத்தர்தான் வெட்டிபந்தா இல்லாம
படம் எடுத்துகிட்டு இருந்தீங்க இப்ப அதுவும்
இல்லையா...?

சேரன் : படம் வந்தபிறகு பார்த்து சொல்லுங்கண்ணே
இப்பவே இழுத்தா எப்படி!

ரசிகர்கள் : பாக்கத்தானே போறோம்!

உங்களுக்கு என்ன தோணுது நண்பர்களே?

படம் உதவி : கூகிள் மற்றும் www.nowrunning.com

Thursday, September 21, 2006

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு!!! - 2

திஸ்கி

இந்த பதிவு கொஞ்சம் கவிச்சியாதான் இருக்கும்.
அதனால முன்னாடியே சொல்லிடறேன். பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்.

பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் நடந்த சம்பவம் இது.

அதான் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சாச்சே அப்புறம்
ஏண்டா ரெண்டாவது ஆட்டம் சினிமாக்கு
வரமாட்டேனு சொல்றே?

அவ்ளோ தூரெமெல்லாம் ராத்திரில வெளில விட
மாட்டாங்கடா பாபு. வேணுமின்னா நம்ம ஊரு
கொட்டாயிக்கு போவோம்.

இங்க வெள்ளை படந்தாண்டா ஓடுது எந்நேரமும்
மூக்க சிந்திகிட்டு இருப்பானுங்க! அங்கிட்டு பேய்
படம் ஓடுதுடா பேரு கூட "வா அருகில் வா". சித்ரா
கூட வரன்னு சொல்லியிருக்காடா மச்சி!

அதான பாத்தேன், எலி ஏன் ஜீன்ஸ் போட்டுகிட்டு
குறுக்கும் நெடுக்கும் ஓடுதுன்னு! ஆனா ஒண்ணு
நீதான் போகையிலயும் வரையிலயும் சைக்கிள
மிதிக்கணும் சொல்லிட்டேன். காசு வச்சிருக்கியா?

அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கெளம்புடா.

சரி சாப்பாடை முடிச்சுட்டு வீட்ல சொல்லிட்டு வரேன்
ரெடியா இரு. துரைசாமி கடையாண்ட வந்துரு

ம்ம்..

எத்தனை பில்டர் வாங்கின?

அரை பாக்கெட், போதுமா?

பத்தலன்னா கொட்டாயில வாங்கிக்கலாம்.

இவ்ளோ இருட்டா இருக்குதே பேய் படம் வேற
பாத்தபிறகு தனியா வீட்டுக்கு போயிடுவியா?

யாரபாத்து என்னா கேக்குற, சுடுகாட்டுக்கு பக்கத்தால
இருக்குற எங்க கொள்ளில நான் காவல் இருந்திருக்கேன்
தெரியும்ல.

சரி, சரி வந்து சைக்கிள மிதி.

சிவா இந்த அரச மரத்த தாண்டி தனியா போயிடுவியா?

அதெல்லாம் பாத்துக்கலாம் வா மச்சி!

நீ போயிட்டு சைக்கிள விட்டுட்டு டோக்கன் போடு
நான் சீட்டு வாங்கிட்டு நிக்கிறேன் வந்துடு.

ம்ம்

நல்ல வேள இன்னும் படம் போடல விளக்கும்
அணைக்கல. எங்க உக்காந்திருக்கா பாரு சிவா.

சித்ரா பொம்பளைங்க வரிசைல அவங்க அம்மா
கூட உக்காந்திருக்கா, ஒண்ணும் புடுங்க முடியாது
அப்படி ஆம்பளைங்க சீட்டுல உக்காருடா.

இடைவேளைலயாவது பேச முடியுமா?

இப்ப பேசி என்னத்த கிழிக்க போற நீ, ஒழுங்கா
படத்த பாருடா! வயசுக்கு வந்த பொண்ணு தனியா
ரெண்டாவது ஆட்டத்துக்கு வருவாளா? யோசிச்சு
பாத்துட்டு வரவேண்டியதுதான.

படம் பயங்கரமாவே இருந்துச்சி, நடுவில பாபு
கத்தினதில பின்னாடி இருந்தவன் முன்னாடி வந்து
திட்டிட்டு போனான்.

சிவா, படம் இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு
நினைச்சே பாக்கலடா! இப்போ எப்படி வீட்டுக்கு
போறதுன்னே தெரியலை வயித்த வேற கலக்குதுடா!

வா, வந்து சைக்கிள மிதி. இந்த சாக்கு சொல்ற
வேலை எல்லாம் இங்க வேணாம்.

எல்லாரும் படம் விட்டு போயிட்டாங்க இன்னும்
என்னடா பண்ணிகிட்டு இருக்க, வா போகலாம்.

ஒம்மொகத்திலயே தெரியுதுடா நீ பயந்துட்டேன்னு
இதுல இவரு காவல் இருந்தாராம், எவன்கிட்ட
கதை விடற நீ.

மச்சி சிவா ஒரு அஞ்சு நிமிஷம் இருடா அவசரமா
எம்.ஜி.ஆர பாக்க போகணும்டா!

கருமம் புடிச்சவனே அத தியேட்டருக்குள்ளவே
முடிக்க வேண்டியதுதான. போய் வா நான்
இங்கயே நிக்கிறேன்.

முடிச்சுட்டியா?

ம்ம் ஆனா தண்ணி இல்லடா,

அதுக்கு எங்க போறது நானு. இதெல்லாம் முன்னாடியே
யோசிக்கணும். இப்ப வந்து கேட்டா?

அப்படியே நடந்து வா வீட்டுக்கு போயிறலாம்!

இல்லடா சிவா தியேட்டர் இன்னும் மூடி இருக்க
மாட்டான் அங்க போகலாம்.

சரி, மூஞ்ச ஏன் அப்படி வச்சிருக்க! இயல்பா இரு.

அய்யயோ தியேட்டர் மூடிட்டாண்டா பாபு!

நல்லவேளை பாய் இன்னும் கடை மூடல அங்க
போலாம்.

பாய் ரெண்டு வாட்டர் பாக்கெட் குடுங்க.

தண்ணி பாக்கெட் காலி தம்பி, ரஸ்னா இருக்கு
தரட்டுமா?

ரஸ்னாவா?

பாபு ரஸ்னாதான் இருக்காம், அட்ஜஸ்ட்
பண்ணிக்கறியா?

என்னது, அட்ஜஸ்ட் பண்ணிக்கறதா...

என்ன யோசிக்கிற....

வேற வழியே இல்ல மச்சி...

சரி நான் அங்கிட்டு நிக்கிறேன் வாங்கிட்டு வந்திரு.

இந்தாடா..

முடிச்சுட்டியா?

ம்ம்

சைக்கிளை நானே எடுத்தேன். ரொம்ப நேரம்
எதுவுமே பேசலை.

சிவா, ஒரு விஷயம் சொல்லட்டுமா!

சொல்லு.

இங்க நடந்த விஷயத்தை தயவு செஞ்சி யார்கிட்டயும்
சொல்லாத மச்சி.

ச்ச்சே இத போய் யாராவது சொல்வாங்களா! அப்படி
எல்லாம் செய்ய மாட்டேன் கவலைப்படாதடா!!

**********************************************************

இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!

Wednesday, September 20, 2006

வாலிப வயசு!!! - 1

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு 2

கனவு இல்லம் வாலிப வயசு 3

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு 4

டேய் சிவா, காத கொண்டாடா இங்க!

எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.

"இல்லடா சீரியஸ் மேட்டர்"

எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்

அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
காத கொண்டா இங்க!

நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
பார்த்தேண்டா மச்சி..

அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.

இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.

அதுக்கு நான் என்னடா பண்றது?

இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
நின்னுக்கோ!

நின்னு!

சொல்றத முழுசா கேளுடா..

சொல்லு..

சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
லவ் பண்ணுவா பாரேன்.

டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!

ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.

"பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"

அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!

அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..

அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
ப்ளான்.

நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?

டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
தெரியும்ல..

தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
தைரியமா இரு.

எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?

உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..

டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
புரியாது!

ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
க்ளாசுக்கே வராதிங்கடா.

வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.

இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
சைக்கிள வாங்கினு வரேன்.

இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.

வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.

ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
கொஞ்சம் பேசணும்.

என்ன பேசணும்?

நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.

ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?

அழுகைய நிறுத்து சாந்தி!!

எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...

அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.

சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.

ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?

அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
ஆளே இல்லியா?

சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
மொத்தல்ல!

அவள மறந்துடு மச்சி!

ஏன்?

அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.

அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
மச்சி.

உனக்கு ராமாயிதான்!!

Friday, September 15, 2006

பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்!

வேலை தேடி துபாய் வந்த சமயம். ஏதோ ஒரு குருட்டு
நம்பிக்கையில் ப்ளைட்டு புடிச்சி வந்திட்டேன்.
வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து
அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில்
வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது
தெளிவாகவே புரிந்துவிட்டது. நமக்கு இங்கிலீசு
சுமாராதான் வரும், இந்தியோ சுத்தமா நஹி அப்புறம்
எப்படி வேலை கிடைக்கும்னு எல்லாரும்
பயமுறுத்திட்டாங்க. சரி வந்தது வந்தாச்சி விசா முடியுற
வரைக்கும் ஊர சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்பிட
வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். வந்து ஒரு
மாசத்தில பத்து இன்டர்வியூக்கு மேல அட்டெண்ட்
பண்ணிட்டேன். எல்லாமே ஊத்தல்ஸ், சொதப்பல்ஸ்தான்.
நம்ம விட திறமைசாலிங்க இருக்காங்களே
என்ன செய்யறது.

நான் தங்கி இருந்தது துபாயில் தேஹ்ரா என்ற இடத்தில்.
உறவினர்களுடன் இருந்தேன். நம்ம முயற்சி மட்டும்
நிக்கவே இல்ல தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்போதான் ஒரு அழைப்பு வந்தது ஆனால் துபாயில
இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் புஜைரா என்ற
ஊரில் இன்டர்வியூ. கிட்டத்தட்ட மூன்று மணி நேர
பயணம் இங்கிருந்து புஜைரா செல்ல. ஒதுக்கிடலாம்னு
நினைச்சேன் ஆனால் அறை நண்பர்களின்
வற்புறுத்தலால் சென்றேன்.

இவ்வளவு தூரம் யாரும் வரமாட்டாங்க வேலை
கிடைச்சுடும்னு நம்பிக்கைல போனேன். ஆனா எனக்கு
முன்னாடி அங்க பத்து பேர் உக்காந்து இருக்காங்க.
ஏதோ ஓரளவுக்கு அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன்.
இந்த வேலை இல்லாம போனாலும் நல்லதுதான் எவன்
இவ்வளவு தூரம் வந்து வேலை பார்ப்பான். மனசை
தேத்திகிட்டேன்.

நீங்க துபாய் போகணுமா?

ஆமாம்.

எங்க கம்பெனி ட்ரைவர் இப்போ துபாய் போக
இருக்காரு நீங்க வேணா அவர் கூடவே போயிருங்க!

தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு.

வெளிய வந்தேன். கார் தயாராக நின்றிருந்தது. உள்ளே
ஒரு பாகிஸ்தானியன் அமர்ந்திருந்தான்.

இவன் கூட போகலாமா வேணாமா? என யோசித்து பின்
வேண்டாம் என்று அவனை தவிர்த்து நடந்தேன்.

பொதுவாக பாகிஸ்தான் என்றாலே எந்த ஒரு
இந்தியனுக்கும் பிடிக்காது. ஏனென்றால் நம் நாட்டிலே
அமைதியை குலைப்பவர்கள், அப்பாவி மக்களை குண்டு
வைத்து கொல்பவர்கள் என்று தினசரிகளும்
சினிமாக்களும் எனக்கு சொல்லியிருப்பதும் ஒரு
காரணம்.

ஆவோ பாய்! ஆவோ!!

இவண் வேற ஒருத்தன், இந்தியிலதான் பேசுவான் போல
அப்போ கண்டிப்பா இவன் வண்டியில ஏறக்கூடாது!
பஸ்ஸுலயே போயிட வேண்டியதுதான்.

தொடர்ந்து ஹாரன் அடித்து வற்புறுத்தினான். எதுக்கு காசு
வீணாக்கற?, நான் துபாய்தான் போறேன் வந்து ஏறிக்கோ
துபாய்ல இறக்கி விடறேன்.

இல்ல நான் பஸ்ல போயிக்கிறேன்.

இப்போதாங்க பஸ் கிளம்பி போச்சு. இனிமே அடுத்த
பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும். டிக்கெட் கொடுப்பவர்
சொன்னார்.

அடடா! வலிய வந்து கூப்பிட்டான் அவன் கூடவே
போயிருக்கலாம். வீம்பா வந்திட்டோம். ரோட்டை
பார்த்தேன் அவனே வந்து கொண்டிருந்தான்.
என்னருகில் வந்து காரை நிறுத்தினான்.

எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டேன்.

ஆப்கா மதராஸி? ஆஞ்ஜி போட்டேன்!

ஏதோ இந்தியில பேச ஆரம்பித்தான். அய்யா சாமி
எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. இங்கிலிசுல சொல்லு
புரிஞ்சிக்குவேன்.

சாப்பிட்டாச்சா, வணக்கம்னு ரெண்டு மூணு தமிழ்
வார்த்தை சொல்லிட்டு கண் சிமிட்டினான்.

அவரை தெம்பூட்டும் விதமாக சிரித்து வைத்தேன்.

வீரப்பனை கூட அவனுக்கு தெரிந்திருந்தது
உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

பதினஞ்சி வருஷமா இங்க வேலை செய்யறேன்.
என்னை மாதிரியே அரை குறை ஆங்கிலத்தில்
சொன்னான்.

நானும் அவனும் கொஞ்ச நேரத்திலயே சகஜமாக பேச
ஆரம்பித்து விட்டோம். ஆனால் திடீர்னு அந்த கேள்விய
என்கிட்ட கேப்பான்னு எதிபாக்கவே இல்ல!

"பாகிஸ்தான் பத்தி என்ன நினக்கிற நீ ?"

என்ன சொல்றதுன்னே தெரியலை. நான் நினைக்கறதை
அப்படியே சொன்னா நடு பாலைவனத்தில இறக்கி
விட்டாலும் விட்டுறுவானோ? சரி என்ன ஆனாலும்
பரவாயில்லை.நான் என்ன நினைக்கிறேன் என்பதை
அப்படியே சொல்லிற வேண்டியதுதான்.

எனக்கு சுத்தமா பிடிக்காது. காட்டுமிராண்டிங்க ஊர்
அது.எனக்கு மட்டுமில்ல எந்த ஒரு இந்தியனுக்கும்
பாகிஸ்தானை பிடிக்காது. இந்த காரணத்துக்காகத்தான்
நான் உன்னுடன் வர மறுத்தேன். என் மனதில்
தோன்றியதை சொல்லி விட்டேன்

அவனுக்கு மூஞ்சியே சுருங்கி விட்டது.

எதுவும் சொல்லாம இருந்திருக்கலாமோ, பாவம்
அவன் மனசு கஷ்டப்படறானே என்று
வேதனைப்பட்டேன்.லொட லொடன்னு பேசிட்டு
வந்தவன் அமைதியாக மாறிட்டான்.

நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க
கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டு
மொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது. என்ன
பண்றது தலைமையே சரியில்லையே. நிஜமான
வேதனையுடன் சொல்கிறான் என்பது முகத்திலே
தெரிந்தது!

ஒருவேளை நம்ம நாடு பிரியாமலே இருந்திருந்தா
நல்லா இருந்திருக்குமோ!

தெரியவில்லை என்றேன்.

ஆனால் நான் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறேன்
தெரியுமா?

அது ஒரு புனிதமான நாடு. உங்க நாட்டு கலாச்சாரம்
எனக்கு ரொம்ப பிடிக்கும். காந்தியின் மீது எனக்கு
மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. எனக்கு என் நாட்டு
நண்பர்களை விட மதராஸி நண்பர்களே அதிகம்.

பாகிஸ்தானிகள் ஆறடி உயரத்தில், பருமனாகவும்,
பார்ப்பதற்கு ரவுடி போலவும் இருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன். இவனும் அப்படித்தான் இருந்தான்
ஆனால் இவண் கண்களே சொல்லியது நான் அந்த
ரகமல்ல என்று.

பேச்சு எங்கெங்கோ சென்றது. நான் நினைத்ததற்கு
மாறாக இருந்தது அவரின் குணாதிசயங்கள்.

இரண்டரை மணி நேர பயணம் மாதிரியே
தெரியவில்லை. சீக்கிரம் முடிந்தது போல
தோன்றியது.

விடைபெறும் தருணம். வழக்கமான கைகுலுக்கலில்
எல்லாம் முடிந்தது.

இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சீக்கிரமே வேலை
கிடைக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

ரொம்ப நன்றி!

இன்ஷா அல்லாஹ் சம்மதித்தால் நாம் மீண்டும்
சந்திப்போம்!

பாகிஸ்தான் மீதிருந்த என் பார்வையை சற்றே திசை
மாற்றி இருந்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு
வார்த்தையை கேட்டு என்னால் ஆச்சரியப்படாமல்
இருக்கவே முடியவில்லை!

இந்தியாவில்தான் நாமும் இருக்கிறோம் நமக்கு இது
தோணவே இல்லையே! ஏன?

என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக உள்ளதா?

சொன்னது இதுதான்.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது
புனித மெக்கா செல்வது கடமையாக கருதப்படும்.

எனக்கும் என் வாழ்வில் ஒருமுறையாவது தாஜ்மகாலை
தரிசிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை.

முடியுமா தெரியவில்லை! வேதனையோடு சொன்னார்!

யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!

Tuesday, September 05, 2006

யார் யாருக்கு லிஃப்ட் வேணும்?? போட்டிக்கு அல்ல!

Image Hosted by ImageShack.us

தமிழ்மண முகப்பில் கடந்த ஒரு வாரமா எல்லாரும்
லிஃப்ட் குடுங்க, கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா
சார்?. இப்படின்னு கேட்டுகிட்டே இருக்காங்க.
இதை பாத்துட்டு நம்மளுக்கு நேத்திக்கு ராத்தூக்கமே
இல்லாம போச்சு. என்ன என்ன பண்ணலாம்னு
தாவாங்கொட்டைய புடிச்சி உலுக்கி ரோசனை
செஞ்சதுல சூப்பரா ஒரு ஐடியா சிக்குச்சி.
அதான் இந்த லாரி ஐடியா. லிஃப்டுக்காக காத்திருக்கிற
ஆரும் கவலைபடவேணாம். ஆராரு எங்க இருக்கீங்கன்னு
தம்பியோட நிரந்தர முகவரி எண் 6, துபாய் குறுக்கு
சந்து விவேகானந்தர் தெரு, இந்த அட்ரஸ்க்கு பேஃக்ஸ்
அனுப்பிடுங்க. நீங்க எங்க ஒளிஞ்சிருந்தாலும் லிஃப்ட் தர
நான் ரெடி. ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல, அம்பது
பேருக்கு மேல நம்ம வண்டி தாங்கும். ஆளுங்க
அதிகமாச்சின்னா ரெண்டு சிங்கிளா கூட அடிச்சிக்கலாம்
கவலைப்படாதிங்க சாமிகளா!! யாராரு எங்க போகணும்னு
சொல்லுங்க பத்திரமா இறக்கி விடறேன்.

Sunday, September 03, 2006

டீக்கடை பெஞ்ச்...

"என்னதான் நம்ம வீட்ல தினசரிகள் வாங்கினாலும்
டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கிற சுகமே தனிதான்"
இப்படி சொல்றவங்கள நீங்க கண்டிப்பா கேட்டு
இருப்பிங்க.இது வியாதியாவே ஆகிப்போயிருச்சு.
சரி, என்னதான் அப்படி இதுல சொகம் இருக்குன்னு
பாக்கணும்னு ஒரு நாள் கிளம்பினேன். எட்டு மணி
வாக்கில டீக்கடை பக்கம் ஒதுங்கி மெதுவா ஒரு
நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். கொஞ்ச நேரத்தில கண்டிப்பா ஒரு
பேப்பராச்சும் நம்ம கைக்கு வந்து சேர்ந்திடும்.
"நகரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"

போச்சுடா எவன் வீட்டுல கன்னம் வச்சானோன்னு
உன்னிப்பா படிக்க ஆரம்பிப்போம். இதுக்கு முன்னாடி
நடந்த கொள்ளைகள விலாவிரிவா நாலு பத்தி எழுதி
இருப்பாங்க.பொறுமையோட அதையெல்லாம் படிச்சிட்டு.
இன்னிக்கு என்னதான் ஆச்சுன்னு பார்த்தா திடீர்னு
இதன் தொடர்ச்சி நாலாவது பக்கம், மூணாவது பத்தி
பார்க்கவும்னு இருக்கும். சரி நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.

டீக்கடைக்காரரை பார்த்து அண்ணே 'தினத்தந்தி
எக்ஸாம்'
நாளக்கிதானே! அப்படின்னு கேட்டு
பெருச ஒரு பார்வை பார்க்கணும்.

"தனியா மாட்டிகிட்டமோ" பொறவு வந்து படிச்சிக்கலாம்னு
பேப்பரை சுருட்டி கீழ வச்சிட்டு நைசா எஸ்கேப் ஆயிரும்.

வெற்றி!!

என்ன ஆச்சுன்னு நாலாவது பக்கம் போவோம் அங்கயும்
மொக்கையா ரெண்டு பத்தி எழுதிட்டு இரண்டாம் பக்கம்
ஏழாவது பத்தி பார்க்கவும்னு இருக்கும். இன்றைய
முட்டை விலை, வரிவிளம்பரம், இது நம்ம ஆளு,
பாக்யராஜ், ஷோபனா நடித்தது இதையெல்லாம் தாண்டி
ரொம்ப ஆர்வமா செய்திய தொடர்வோம். போலிஸாருக்கு
'டிமிக்கி' கொடுத்த கொள்ளையர்கள், கொள்ளையர்களை
விரட்டி பிடிக்க தனி போலிஸ் படை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பூக்கடை போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். அட எழவே.

இந்த சனியனை மொத பக்கத்திலயே போட்டா என்னா
கொறஞ்சி போயிரும்? ஒருவேளை இடம் பத்தலியோ
என்னமோ அப்படின்னு மொத பக்கத்துக்கு போனா, மேல
50 வருட பாரம்பரியமிக்க சுந்தரவிலாஸ் பாத்திரக்கடை,
வெற்றி பெற்ற மனிதர்கள் விரும்பும் பாக்கு, கீழ கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", ஹீரோ
ரெண்டு ஹீரோயினை கட்டி புடிச்சிகிட்டு சிரிப்பார்,
இந்தக்கலர், அந்தக்கலர், நொந்தக்கலர்னு ஒரு அம்மா
முந்தானய காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்கும்.

ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.

மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான். இளவரசிக்கு
என்ன நடந்தது? நாளை தொடரும்... நாலு படம்
போட்டு, மூணு வரி எழுதி இருப்பாங்க. நேத்திக்கு
என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் வர்றதுக்கே
ரெண்டு நிமிடம் ஆயிடுது, இதுல எங்க இருந்து
இத்தனை வருஷமா படிச்சிகிட்டு ஞாபகத்தில
வச்சிக்கிறாங்க?. ஒரே கொழப்பமா இருக்கு.

இதுல எதுனா சொகம் இருக்குதுங்களா?

"ஒண்ணுமே புரியல ஒலகத்தில"