எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, November 22, 2009

பிரிதுயர்


வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?

Wednesday, November 11, 2009

முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு
உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்
தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது
கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்
எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து
என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி
எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக
இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு
பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய
வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை
தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்
முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை
அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய
செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை
வேறெங்குமே கண்டதில்லை.

கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்
இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே
அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக
வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்
பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து
விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்
நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.

அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே
செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்
தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு
மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த
இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்
சென்றிருப்பார்.

விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்
பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்
ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி
நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்
தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று
விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்
வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா
இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த
ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்
என நினைத்துக்கொண்டிருந்தேன்.

நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த
ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்
கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.

விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து
தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி
கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்
செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்
விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி
அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று
கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்
என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது
கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்
என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்
இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த
எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.

முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து
தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்
பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.

தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்
எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக
மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக
இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்
போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே
என்று தினமும் புலம்புகிறார்.

இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து
கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.

இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த
தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே
ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து
விட்டார்.

வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.




சம்பந்தமில்லாத பின்குறிப்பு

பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்
நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ
எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த
பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.
இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்
முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்
உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

Thursday, October 15, 2009

அன்பினால் நிறைந்த வீடு

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை
மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி
அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்
ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்
முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது
வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க
கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என
ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.

முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்
தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக
சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது
சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே
தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்
அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த
முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்
படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ
விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.
பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு
கட்டவும் எண்ணமிருக்கிறது.



படத்தில் பாலுவும் கரிசலும்

இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்
சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது
சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.
அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.
த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்
பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்
கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக
பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.



பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.

பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்
ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து
பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற
கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்
வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு
அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.

நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று
அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,

அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்
எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்
என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல
இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்
என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது.

மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்
கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு
வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்
அறிவுரை கூறினார்.

குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை
ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்
என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு
ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே
அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்
வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக
மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு
வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்
பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி
வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்
எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.

சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,
அதிகாரம் போன்றவற்றின் மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்

"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)
கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"

"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"

கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்
கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)

எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்
என்று நினைக்கிறேன்.

இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி

Wednesday, August 12, 2009

அங்காடித்தெரு


உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு வெட்கம் சொல்ல
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமைக்காடு
நீ வந்தாய் பூக்களோடு
இனி தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றைத்தவிர என் கையில் ஒன்றுமில்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

படம் : அங்காடித்தெரு
பாடியவர்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் என்று நினைக்கிறேன். விஜய் ஆன்டனிக்கு
இன்னும் இந்த அளவுக்கு மெலடி கொடுக்கும் பக்குவமெல்லாம் வரவில்லை. அவர்
வேறு ரக இசையமைப்பாளர். இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து பின்னர்
படத்திலிருந்து ஜி.வி வெளியேறிவிட்டாராம் அந்த இரு பாடல்களில் இதுவும்
ஒன்றாக இருக்கவேண்டும்.

எதுவாக இருந்தாலும் உருகுதே மருகுதே பாடலைப்போல் இதுவும் இனிமையான
ஒரு பாடல்

Tuesday, July 21, 2009

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில்
இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால்
தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்
வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை
வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு
பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு
அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக
புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.

இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான
பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது
அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.
நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்
உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு
எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை
அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்
இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்
மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”
என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை
வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?
தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்
சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை



சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள், புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது
குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர
நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்
நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.
கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்
துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய
புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.
நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு
அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து
செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்
அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை
எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.

அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து
எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக
பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம்.

புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.

இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர
மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.

ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று
அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண
மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.

பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று
கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்
என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்
தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு
சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.
ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என்று குறிப்பிடுகிறார்.

தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்
ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்
இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.
தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்
ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று
திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி
“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்
முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.

பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்
பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான
நேரம் வரும் என்று சொல்கிறார்.

பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே
கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி
தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே
இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.

கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.

நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.

அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்
என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.

அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.

எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.
வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான
புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.
-
பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை
என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.

உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.

சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு
என எடுத்து வந்து வாசித்தேன்.

எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?

ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.

Wednesday, July 08, 2009

கேக்குறாங்கய்யா கேள்விகள...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தா வெச்சது. ரொம்ப

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கக்கா சாம்பார் + சோறு

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெப்படி முடியும்

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இல்ல

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு

14. பிடித்த மணம்?

வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு

எ.நி.ச.அறை

17. பிடித்த விளையாட்டு?

திருடன் போலீஸ்

18. கண்ணாடி அணிபவரா?

இல்ல

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்

20. கடைசியாகப் பார்த்த படம்?

நாடோடிகள்.

21. பிடித்த பருவ காலம் எது?

கடும் வெயில் கோடைக்காலம் அல்ல

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?



இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமீரகம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரிஞ்சா சொல்லுவம்ல

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லாவே இருக்கணும்னு

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரில

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அட சரியா தெரிலங்க.

எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.

Sunday, May 31, 2009

குயில்


பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்
கண்டதேயில்லை என் கண்கள்
தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்
சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்
குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது
மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு
அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு
தினசரி நாங்களிருவரும் குயிலிடம்
கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்
உன் அக்கா பெயரென்ன என்று
கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்
வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்
அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக
கூவிக்கொண்டிருந்தது.

Thursday, May 28, 2009

நினைவுகளின் நீள்கரங்கள்


உனது நினைவுகளின் நீள்கரங்கள்
என்னை சதா துரத்தியபடி வருகின்றன
உனது நேசத்தின் எல்லைகள் தாண்டிய
இடங்களைத் தேடி ஒளிகிறேன்
கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த
மறுநொடி துரோகத்தின் கதவுகள்
அடைபடுகின்றன வழக்கம்போல்
பொங்கும் காமத்திற்கப்பால்
காதலென்பது பொய்யென
உனக்கு எப்போது புரியும்...
உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி

Tuesday, May 12, 2009

மூன்று படங்கள்

சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்
வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பது
கூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்
அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த
வெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை. சென்னையில்
வெப்பமென்றால் ஊரில் தினசரி நான்கு மணி நேரம் மின்வெட்டு. அதிகாலை மற்றும்
நன்பகலில் இரண்டு மணி நேரங்கள். அதிகாலையில் மின்சாரம் இல்லாமல் உறக்கம்
கலைவதென்பது முன் ஜென்ம சாபம். சில நாட்களில் பழகிவிட்டது. அப்போது
பார்த்த மூன்று படங்கள். மூன்றுமே கவர்ந்திருந்தன.

Brokeback Mountain (ப்ரோக்பேக் மவுண்டைன்)



படத்தின் கரு இரு இளைஞர்கள் காதலிக்கிறார்கள். தெளிவாக சொல்லவேண்டுமென்றால்
ஓரினச்சேர்க்கையாளர்கள். படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தபிறகு பார்க்கவேண்டுமா
என்று யோசித்து பிறகு பார்த்தேன். காதல் என்பது பெண் மீது மட்டுமே வர வேண்டும்
என்பதல்ல அது ஆண் மீது கூட வரலாம். அன்பு ஒன்றே அங்கே பிரதானமாக இருக்க
வேண்டும். இந்தப்படத்தில் இருவர் கொள்ளும் அன்புதான் அவர்களை கடைசிவரை
இணைக்கிறது.

கதை நிகழும் வருடம் 1963 இரு இளைஞர்கள் ஆடுமேய்க்கும் வேலைக்காக வ்யோமிங்
மலைப்பகுதிக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்
செல்லும் வேலை. அங்கேயே தங்குவது. சாப்பிடத்தேவையான பொருட்களை
அவ்வப்போது எழுதி வாங்கிக்கொள்ளலாம். எனிஸ் எப்போதாவது பேசும் வகை.
ஜாக் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் வகை. தனிமை சூழ்ந்த இயற்கை
அவர்களை ஒன்றிணைக்கிறது. இருவருமே ஏழ்மைப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்ச குளிர் நாள் ஒன்றில் இருவரும் ஒன்றுகலக்கிறார்கள். விடியலில் அவரவர்
முகமும் குற்ற உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். பின்வரும் நாட்களில் தங்கள்
காதலிப்பதை உணர்கிறார்கள்.

இருவரும் காதலர்களைப்போல் இருப்பதை பார்க்கும் முதலாளி அடுத்தபருவத்தில்
இருவரையும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரவர் சொந்த
ஊருக்கு செல்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்கும் திருமணம் குழந்தை என்று
ஆகிறது. அதேசமயம் கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை இருவருக்குமே கசக்கிறது.
அவர்கள் இருவரும் சுதந்திரமாக, ஆடையில்லாமல், மலையின் புல்வெளிகளில்
இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த ஞாபகம் வர இருவரும் தொடர்பு கொள்கிறார்கள்.
நான்கைந்து வருடம் கழித்து மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அவர்களிடம் முன்பைவிட
காதல் பெருகுகிறது. எனிஸ் மனைவி இதை கவனிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு
தன் கணவன் பின்புறம் புணர்வதை அதிகம் விரும்புவது ஏன் என்று புரிகிறது.

இருவரும் சேர்ந்து சுற்றுவது தொடர்வதால் எனிஸ் ன் மனைவி விவாகரத்து
கோருகிறாள். ஆழ்மனதில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவன் என்பதில்
வருத்தப்படுபவனாக எனிஸ் உணர்ந்தாலும் அன்பின் காரணமாக அதை தொடர்கிறான்.
ஆனால் ஜாக் தான் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுடையவன் என்பதை நம்புகிறான்.
ஒருமுறை எனிஸ் உடன் கருத்துவேறுபாடு ஏற்படும்போது ஓரினச்சேர்க்கை விடுதிக்கு
சென்று வேறு ஒருவனுடன் உடலுறவு கொள்கிறான்.

வேறுபாடு களைந்து மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். சுற்றுகிறார்கள். மறுபடி பிரிகிறார்கள்
பின்னர் விபத்து ஒன்றில் ஜாக் இறக்கிறான். தாமதமாக அறியும் எனிஸ் மிகவும்
உடைந்துபோகிறான். ஜாக்கின் பெற்றோரை சந்திக்க செல்லும்போது தாம் பனிமலையில்
சண்டைபோட்டுக்கொண்ட போது ஜாக்கின் சட்டையில் ரத்தகறை எற்பட்ட அந்த
சட்டையை பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கிறான். அந்த சண்டைதான் அவர்களை
ஒன்றிணைத்தது. படம் இப்படி முடிகிறது. இன்றைய நாகரீக உலகில் ஓரிணச்சேர்க்கை
அங்கீகரிப்பட்டதாக இருந்தாலும் படம் நடக்கும் காலத்தின் அது தவறான செயலாக
சமூகம் பார்த்தது. இருவருக்கு அது குறித்த குற்றவுணர்ச்சி படம் நெடுக இருக்கும்.
சிறப்பான ஒளிப்பதி மற்றும் நடிப்பின் மூலம் இப்படத்தை சிறப்பாக தந்திருக்கிறார்
இயக்குடன் ஆங் லீ. தைவானை பிறப்பிடமாக கொண்டாலும் அமெரிக்க சூழ்நிலையை
இயல்பாக படம்பிடித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகப்பெரும்
சர்ச்சைகளை கிளப்பிய இந்த திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது
குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு: தனிமையான சூழ்நிலையில் ஒன்றிணையும் இவ்வகை கதையை கல்லூரிக்காலத்தில் நான் கேட்டிருக்கிறேன். தோட்டவேலை, ஒட்டகம் மேய்க்க என்று
இந்தியாவில் இருந்து 60களில் வேலைக்கு சவுதிக்கு சென்ற ஒருவர் சொன்ன கதையது.
நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் அவர். தான் இவ்விதம் செய்தது
சரி, தவறு என்று வாதம் செய்யாமல் அன்றைய சூழ்நிலையில் உடலுறவு கொண்டாக
வேண்டிய சூழ்நிலையில் செய்ததாக சொன்னார் அவர். மூன்று வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே மற்ற மனித முகங்களை பார்க்க வாய்ப்பிருக்கும் வேலை
அவருக்கு மற்ற நாட்களில் நகரத்திலிருந்து பலநூறு மைல்கள் தள்ளியிருக்கும்
தோட்டங்களில் வேலை செய்தவர் அவர். வருடத்திற்கு ஒரு விடுமுறை நாள்தான்.
கடிதம் ஒன்றே போக்குவரத்து அது வந்து சேரவே பல மாதங்களாகுமாம். இத்தகைய
சூழ்நிலையில் உடனிருக்கு எவருடனாவது ஓரல் செக்ஸ், மற்றும் ஓரினச்சேர்க்கை
வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்று சொன்னார். ஆனால் இவை எல்லாம்
ரகசியமாக வைத்திருப்பார்கள். எனக்கு அவர் இதைச் சொன்னபோது அவருக்கு
வயது 65 இருக்கலாம். நாற்பது வருடகாலங்கள் பாலைவனத்தில் கழித்திருக்கிறார்.
நாற்பது வருடங்களில் ஐந்து முறை மட்டுமே இந்தியா வந்து சென்றிருந்தார்.


Diving Bell and the butterfly



யாராவது கண்களால் ஒரு நாவலை எழுதி முடித்ததாக சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? ஆனால் நடந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக
கொண்ட படம். ஜீன் டொமினிக் பாப் ஒரு பேசன் பத்திரிக்கை எடிட்டர். விவாகரத்தானவர்
வார இறுதிகளில் குழந்தைகளை சந்திக்கும் பாசமிகு தந்தை. திடிரென்று பாரலைஸ் என்று
சொல்லக்கூடிய உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நோயில் விழுகிறார். மூன்று வாரங்கள் கோமா நிலையில் இருக்கும் அவர் ஒரு நாள் மீள்கிறார். அது அவர் ஒப்புக்கொண்ட
நாவல் ஒன்றை எழுதுவதற்காக மட்டுமே. இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணும்
இரு காதுகள் மட்டுமே வேலை செய்கின்றன. மற்றபடி அவரின் உடலுறுப்புகள் ஒன்றுகூட
வேலை செய்யாது.



அவருடன் பேச வேண்டுமென்றால் அவரின் இடது கண்ணிற்கு நேராக சென்று குனிந்து
பேச வேண்டும் அவரால் திரும்ப பதிலளிக்க முடியாது. ஆனால் எழுத்துக்களை வரிசையாக
சொன்னால் குறிப்பிட்ட எழுத்து வரும்போது ஒருமுறை இடது கண்ணை திறந்து மூடுவார்.
இப்படி வரிசையாக சொல்லப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டினால் உங்களுக்கான பதில்
கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு கண் சிமிட்டல்கள் மட்டுமே உங்களால் அவரிடமிருந்து
பெறக்கூடிய பதில். ஒருமுறை கண் சிமிட்டினால் ஆம் என்று அர்த்தம். இருமுறை கண்
சிமிட்டினால் இல்லை என்று அர்த்தம். இந்த முறையினால் அவரின் தெரபி மருத்துவரின்
உதவியோடு தான் எழுத ஒப்புக்கொண்ட நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் வெளியாகி
பெரும் விற்பனையாகிறது. ஆனால் நாவல் வெளிவரும் பத்து நாட்களுக்கு முன்பே
மரணமடைகிறார். விந்தையான இந்தக்கதையை படிக்கும்/பார்க்கும் அனைவருக்குமே
உணர்ச்சிமயமாக இருக்கும். இது நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான
திரைப்படம்.

ப்ரெஞ்ச் மொழியில் வெளியான இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கு
பரிந்துரைப்பட்டிருந்தது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படம்
எடுக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜூலியன் ஷெனபில் இன் இதற்கு முந்தைய இரண்டு
படங்களும் சுயசரிதைத் தன்மை கொண்டது இப்படமும் அதே. இப்படத்தின் திரைக்கதையை
எழுதிய ரொனால்ட் ஹார்வர்டிரின் குறிப்பிடத்தக்க திரைப்படம் தி பியானிஸ்ட்.

இதே போன்ற ஸ்பானிய மொழிப்படமான சீ இன்சைட் The Sea Inside இதே போன்றதொரு
சுயசரிதைத் தன்மை கொண்டதுதான். தனது மரணத்திற்காக போராடும் ஒருவரின் கதை
அதிலும் கதையின் நாயகன் ஆரம்பம் முதல் இறுதி வரை படுக்கையிலே இருப்பார்.
இதிலும் அதே. படத்தின் இறுதியில் இருவருமே இறந்து போவார்கள். நிஜ வாழ்க்கையில்
எவருமே ஒருநாள் இறந்து போவதைப் போல.

மூன்றாவது படமாக The legend of 1900 படம் பற்றி பிறகு எழுதலாம். இதுவே நீண்டு
விட்டது.

ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்.

Sunday, May 10, 2009

புறாக்களை பார்ப்பவனின் கதை

மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது
மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே
டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு
நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு
சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு
மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு
வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே
பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.
எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு
செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல
இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.
இப்படி குறைபட்டுக்கொண்டார்.

மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது
தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு
அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்
கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு
எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது
நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.

மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்
தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு
புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும்
விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்
கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.
நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு
என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு
வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை
சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல
ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்
அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி
வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல
மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க
மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்
இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற
எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட
வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்
முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.

கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க
அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ
அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி
என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி
"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு
நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.

பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள
கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை
எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.

சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்
பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்
மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து
பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்
முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக
பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்
ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை
சுற்றல் இல்லை.

வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்
போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்
மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது
நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்
என புறாக்கள் இருந்தது.

ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல
புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்
இங்கேயும் நடந்துகொண்டிருந்தன.

மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே
அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு
ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.

"மெறிக்கறதுனா என்னடா?"

"ஏறி அழுத்தும்பாருங்க"

"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"

"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"

"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?

அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்
போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.
அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள
தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.
அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி
போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி
ஒடச்சிடும்.

"ஏண்டா அப்டி பண்ணுது... ?

அது அப்டிதான் மாமா...

ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா
அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.

"ஏண்டா அப்டி?

அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு
நினைக்கிறேன்.

"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?

"ஆமாம்"

"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"

"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"

"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...
பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்
ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே
இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?

"நெஜமாவா மாமா"

"ம்ம்... படிப்பியா"?

பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான
விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்
போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்
பேசுவதில்லை.

இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.
கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.
பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக
உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து
திட்டு வாங்கினான்.

"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."

வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து
வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.

"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."

அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு
பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது
அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.

அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்
உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்
அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.
மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.

புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்
கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.

"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா
இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...

இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க
எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க
மாமா...

"ம் சொல்றேண்டா போன குடு"

இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா
ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும்.

சரிடா போன வைக்கிறேன்.

போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.

Saturday, April 11, 2009

வாத்தியார் அண்ணன்

இங்கு வந்து மூன்று நாட்களாகின்றன. இதற்கு முன் நாட்கள் அதன் தொடர்ச்சியில் செல்வதுபோலத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த மூன்று நாட்கள் தனித்தனியான வெவ்வேறு நாட்களாக தெரிகின்றன. முற்றிலும் புதுமையான உலகம் அதே பழைய முகங்களில் காண்கிறேன். அயல்தேசம் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரவர் வேலையில் அவரவர். வேலைவிட்டு வரும்போதும் போகும்போதும் ஒரு புன்னகையோடு எல்லாமும் முடிந்துவிடுகிறது. பகல்வேளைகளில் என்னை தனிமை தின்னத்தொடங்கியது. எல்லோரும் வேலையோடு வரும் இந்த தேசத்தில் வேலைதேடி வந்தது என் தவறுதான் என்று முதல்தினமே உணர்ந்திருந்தேன்.

நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு
அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய
பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது
பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு
பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள
நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்
மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்
அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.

அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை
வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்
என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்
தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்
சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்
என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று
பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்
உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை
செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார்.

தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்
அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட
உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு
இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.
இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.


இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள
வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை
அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.
இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து
படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு
கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய
வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.

ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்
வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்
அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால்
வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு
விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.
அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்
வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே
ஆச்சு" என்றேன்.

வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு
ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்
அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.
என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு
கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்
அதிக பிரயோஜனம் இல்லை.

அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக
உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்
நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.
அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள்.


அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்
அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்
நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்
என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு
முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.
எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக
சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்
குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த
தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக
பிரார்த்தனை செய்துகொண்டது.

Monday, March 30, 2009

நகரத்துப் பூக்கள்

காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.

Monday, March 16, 2009

நாட்குறிப்பு போன்றவை 1

சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.

எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.

போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.


கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.


மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.

காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.

பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?

புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.

சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

Monday, January 12, 2009

நாட்குறிப்பு போன்றவை

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.

எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.

குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.

---

இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

---

எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.

குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....

Saturday, January 10, 2009

எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.

விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.

க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)

இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.

சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.

--

இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.

மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.

சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.

விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.

விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.

சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.

--

இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.

Friday, January 02, 2009

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா


பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.

எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.

அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.

இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.


சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"


''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!


இப்படி சொல்லியிருந்தார்

நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.

அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.

ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.

ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.

சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.

எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"