எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, May 28, 2016

பால்கனிகள் - சு.வேணுகோபால்வாசிக்கும் நூல்களைப் பற்றி சிறு குறிப்பாவது எழுதிவிடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் ஒரு சில புத்தகங்கள் பெரிதாக ஈர்ப்பதில்லை. ஈர்க்கும் புத்தகங்களைப் பற்றி எழுத உட்கார்ந்தாலும் முழுபடைப்பை சிறு குறிப்பைக்கொண்டு எழுதிவிடமுடியுமா என்று யோசிப்பதால் எழுதுவதில் ஒரு தயக்கம் உண்டாகிறது. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது. அப்படி ஒரு புத்தகம்தான் சு.வேணுகோபால் அவர்களின் “பால்கனிகள்”. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு நான் பார்த்த வகையில் சு.வே அவர்களைப்பற்றி இலக்கிய உலகில் அறிந்திருக்கவேயில்லை. தீவிரமாக இயங்கவில்லை எனினும் பெரும் எழுத்தாளர் முதல் புதிதாக எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர் வரை அங்கும் இங்குமாக இணையம் முழுக்க பல தகவல்களும் குறிப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இவரைப்பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை. பால்கனிகள் வாசித்து முடித்தபோது ஏன் இவரை இதுநாள் வரை வாசிக்கவில்லை என்று உணர முடிந்தது. இதைப் படி என்று பரிந்துரைத்தவரின் மேல் உள்ள நம்பிக்கையால்தான் இதை வாசிக்கவே ஆரம்பித்தேன். ஒருவித அலட்சியத்துடம் வாசிக்க ஆரம்பித்து பிரமிப்புடன் முடித்தேன் என்பதுதான் உண்மை. அந்த வகையில் பால்கனிகளில் இடம்பெற்றுள்ள இரண்டு குறுநாவல்களுமே மிக முக்கியமான தளத்தில் இயங்கும் சிறந்த படைப்புகள். எளிமையான மொழியும் முகத்தில் அறையும் உண்மைகளுமாக உண்மையான எழுத்து சு.வேணுகோபால் உடையது.


விருத்தாசலம் சென்று வந்த ஒருவரிடம் கண்மணி என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் அவரிடம் ஒரு புத்தகம் இருக்கு வாங்கிட்டு வரணும் என்று வேண்டினேன். அவரும் கண்மணி குணசேகரன் அவர்களைப் பார்த்து அவரின் சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வாங்கி வந்தார். ஒரே ஒரு பிரதிதான் உள்ளது அதையும் என்னிடம் கொடுத்து விட்டார். கூடவே வேறு சில புத்தகங்களையும் அனுப்பினார். சு.வேணுகோபாலின் ”பால்கனிகள்”, தா.பாண்டியனின் “ஒரு லாரி ட்ரைவரின் அனுபவங்கள்”, நாஞ்சில் நாடனின் “தொல்குடி” போன்றவை வந்து சேர்ந்தன.எதுக்கு இதயெல்லாம் கொடுத்து அனுப்பிருக்கார் என்றுதான் முதலில் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாமல் பால்கனிகள் எடுத்து வாசிக்கத் தொடங்கி முழுவதுமாக வாசித்து முடித்து விட்டேன். சற்றே பெரிய சிறுகதை. குறுநாவல் என்ற வகைக்குள் வருமா என்றறியேன். மொத்தம் அறுபது பக்கங்கள்.

இரண்டு பேரின் பார்வையில் விரியும் கதை. கிட்ணன் என்பவனின் கதை. பின்னாளில் அவன் திருநங்கையாய் மாறுகிறான். அவனை மொத்த குடும்பமும் வெறுக்கிறது ஆனால் திவ்யா என்ற அவளின் சகோதரி வெறுக்கவில்லை. அவன் மீது தனிப்பட்ட ப்ரியம் கொள்கிறாள். ஆண் என அறியப்பட்டிருந்த அவனின் பெண்மை விழித்தெழும் கணங்களில் குடும்பத்தினர் சகோதரன் மூலம் ஏற்படும் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திவ்யாவின் வீட்டிற்கு தஞ்சமடைகிறான். எல்லாவற்றிலும் பெண் தன்மையை உணரும் கிட்ணனை யாருக்குமே பிடிப்பதில்லை, திவ்யாவைத் தவிர. தன் பெரியம்மாவின் அந்திமக் காலங்களில் பணிவிடை செய்ய எல்லோரும் அருவெருப்பாக யோசிக்கும்போது இவன் தனியாளாக பெரியம்மாவை குளிப்பாட்டி, ஆடையிட்டு, மருத்துவ உதவிகள் செய்தல் என பார்த்துக்கொள்கிறான். திவ்யா வங்கி ஊழியை. குழந்தை பெற்றுக்கொண்டு மருத்துவ விடுப்பில் அவ்வீட்டில் கொஞ்சநாள் வாழ்கிறான். திவ்யா வேலைக்கு சென்றிருந்த ஒருநாளில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது என வீட்டின் பின்னால் தூக்கிச் சென்று தன் குறுமுலைகளில் வாய்பதிக்கச் செய்கிறான் கிட்ணன். வேலையிலிருந்து திரும்ப வரும் திவ்யா குழந்தையைக் காணாது தேடும்போது அந்த காட்சியைக் கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைகிறாள். கிட்ணனை கண்டிக்கவில்லை எனினும் உள்ளூர அவனின் மீது வெறுப்பு உண்டாகிறது. அதை உணரும் கிட்ணன் திவ்யாவின் நகைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

பிள்ளை பெற்ற தாய்மார்கள் பிள்ளையை பால் மறக்கடிக்கச்செய்யும் போது மனதளவில் உடைந்துவிடுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் திவ்யா தன் குழந்தையை பால் மறக்கச்செய்ய எடுக்கும் முயற்சிகளை ஒரு பெண்ணே எழுதியிருந்தால் கூட இத்தனை உணர்வுபூர்வமாய் எழுத்தில் கொண்டு வரமுடியுமா என தெரியவில்லை. பால் மறக்கச்செய்தாலும் உடலுக்கு அது தெரியாதல்லவா. சுரப்பது அதன் வேலை. மறக்கச்செய்த முதல் நாளில் திவ்யா பணியில் இருக்கும்போது பால் சுரந்து தானாக வெளியேறி மார்பகம் முழுதும் ஈரமாகிவிடும் சக ஆண் ஊழியர்களிடம் சமாளித்து பாத்ரூம் சென்று ரண வேதனையுடன் பாலை தரையில் பீய்ச்சி அடிப்பாள். நியாயமாக பிள்ளைக்கு சேர வேண்டிய இம்முலைப்பால் வாழ்க்கைச்சூழல் காரணமாக தரையில் சிந்தப்படுவதை எண்ணிக்கொண்டே சத்தமிடாமல் அழுவாள். இந்தப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களில் எழுதியிருக்கிறார். நான் மனைவியிடம் கொடுத்து இந்தப்பகுதியை மட்டும் வாசிக்கச் சொன்னேன். இயல்பிலேயே வாசிப்பதில் எல்லாம் ஆர்வம் காட்டாதவர். படித்து முடித்ததும் யார் எழுதியது எனப்பார்த்தார். ஒரு ஆண் இத்தனை அனுபவப்பூர்மவாக எழுதியிருப்பதைக் கண்டுகொண்டதும் ஆச்சரியப்பட்டார். பால் கசிந்து ஆடையில் பட்டு பின்பு அடைபோல ஆகிவிடும். மெல்லிய பால்வாடையும் வரும். இத்தனையும் கவனித்துக்கொண்டு வேலையையும் பார்க்கவேண்டும். நிஜவாழ்வில் நான் பார்த்தும் கண்டுகொள்ளப்படாத பகுதி இவை. பிள்ளையை பால் மறக்கச் செய்த சூழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

ஓடிப்போன கிட்ணன் ஐந்தாறு வருடங்கள் கழித்து முழுமையான பெண்ணாக வருகிறாள். இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சகோதரனலிருந்து பெற்றவர் ஊரார் என அனைவருமே அடித்து அவமானப்படுத்தியும் அனுப்பும்போது சொல்கிறாள். மறைவா கூட்டிட்டு போய் வாயத்தொறடா வாயத்தொறடா கெஞ்சின நாய்களும், என்னை அவுத்துப் பாத்த நாய்களும் எனக்கு நியாயம் சொல்ல வேணாம். ஒரு வாரிசா எனக்கு சொத்துல பாத்தியதை இருக்கு. என் பங்கை பிரிச்சுக் கொடுங்க என்று எதிர்க்கும்போது மொத்தக் கூட்டமும் சேர்ந்து அடித்து துரத்துகிறது. சொந்தங்களே ஆனாலும் மனிதர்களின் உணர்வற்ற மட்டித்தனமான எண்ணங்களை வேணு இத்தனை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். திருநங்கைகளே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார்கள். அதை வாசித்தும் இருக்கிறேன் அங்கெல்லாம் கண்டுகொள்ளப்படாத பதிவு செய்யாத பல விஷயங்களை அத்தனை கச்சிதமாகவும் நுண்ணுனர்வோடு பதிவு செய்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. பெண்களைத்

காலம் ஓடுகிறது. குழந்தைகளை பெரியவர்களாகிறார்கள், பெரியவர்கள் முதியவர்களாகிறார்கள். கிட்ணன் உலகத்தின் ஒரு மூலையில் வாழ்கிறாள். தன்னை நிராகரித்த, மறுத்த மனிதர்களின் முன்னே தனக்கென ஒரு மேன்மையான வாழ்வை வாழ்கிறாள். திவ்யா தன் பணிசார்ந்த ஒரு கருத்தரங்கிற்காக கோவை செல்லும்போது எதேச்சையாக அங்கே கிட்ணனை சந்திக்கிறாள். தான் நேசித்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை தனக்கு நெருக்கமானவர்களிடம் பிரகடப்படுத்தவேண்டும் என திவ்யாவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே திவ்யா சந்திக்கும் காட்சிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் கீழ்மைகளையும் பகடி செய்வது போல கனவிலும் இல்லாத ஒரு புதுவாழ்க்கையை வாழ்வதைக் காண்கிறாள் திவ்யா. கிட்ணனின் மேல் அளவில்லாத அன்பு சுரக்கிறது. அவள் எவ்விதம் வாழ்கிறாள் என்பதை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

படித்து முடித்து இரண்டு நாட்களாக கிட்ணன் நினைவாகவே இருந்தது. வாசித்தது புனைவாகவே தெரியவில்லை. திருநங்கையாக மாறும் ஒவ்வொரு ஆணும் சந்திக்கும் பாடுகள்தான் அவை. வாழ்நாள் முழுக்க நினைவு கொள்ளும்படியான படைப்பு.

இரண்டாவது குறுநாவல் “இழைகள்”

பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து ஆசிரியராக இருக்கும் ராமமூர்த்தி தனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தான நிகழ்வில் இருந்து தொடங்குகிறது. இதுவும் ஒரு அற்புதம்தான். இன்னொரு பதிவில் இதைப்பற்றி எழுதுவென்.