எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Friday, April 11, 2008

ஒரே கடல்.

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா
நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்
திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.

உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்
இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது
நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும்
சொல்ல முடியாது.

நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன்.
இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள்
மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல்
நம்பிக்கை இல்லாதவன்.



ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி. வேலையில்லாத கணவனுடன் குடும்பம்
நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.
இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.

மீராவின் குழந்தைக்கு உதவுகிறார் மம்முட்டி நன்றி சொல்ல மம்முட்டியின் வீட்டுக்கு
வரும் மீரா அந்த வீட்டையும், தனியனான மம்முட்டியையும் கண்டு பிரமிக்கிறாள்.
இது அவளுக்கு முற்றிலும் புதியதான உலகம். தயங்கியவாறே நன்றி சொல்லிவிட்டு
செல்கிறாள். உதவிபெறல்களின் தொடர்ச்சியாக இருவருக்கும் உறவு ஏற்படுகிறது.
மம்முட்டியின் சிபாரிசில் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது.

மம்முட்டி மூலம் கர்ப்பமாகிறாள் மீரா. இதைச் சொல்ல வரும் மீராவினை தன்
அறிவுஜீவித்தனத்தால் காயப்படுத்தி அனுப்பும் மம்முட்டி. உடல்சுகத்தை தாண்டி
தன்னிடம் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை என்ற உண்மை தெரியவரும்போது
மீராவுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தான் கொண்டிருக்கும் நேசத்தை
புறக்கணிக்கும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.




இயல்புக்கு மாறான தொடர்ந்த சில சம்பவங்களில் மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறாள். சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கணவனுடன்
திரும்புகிறாள்.

இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்
இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு
இருப்பதை உணர்கிறாள். ஒரே கடல் என்ற தலைப்பிற்கு அர்த்தம் அந்நேரத்தில்
புரிய வரும். மிக வலிமையான தலைப்பு.

ஒரு அழகான பெண்ணின் காதலை, பரிசுத்தமான அன்பை, குடும்பத்தை கலைத்த
குற்ற உணர்ச்சியில் பெரும் குடிகாரராகிறார் மம்முட்டி. தன்னால்தான்
கர்ப்பமுற்றாள் என்பதை நம்ப மறுக்கிறார் அதன் விளைவாகவே மீரா மனநிலை பாதிக்கப்படுவதையும்நம்ப மறுக்கிறார். உண்மையை ரம்யா கிருஷ்ணன்
விளக்கும்போதும் நம்ப மறுக்கிறது. பேலா (ரம்யா கிருஷ்ணன்) உயர்தர பார்
நடத்தும் தனிமை பெண். திரைப்படத்தில் ஒரு பெண் பார் நடத்த வேண்டுமென்றால் இயக்குனர் அந்த பாத்திரத்திற்கு ப்ளாஷ்பேக் வைத்திருப்பார். அதற்கென்று சில
ரீல்கள் செலவில்லாமல் பாத்திரமே சொல்வது போல செய்து நம்மை
காப்பாற்றி விட்டார்.

உலக பந்தங்கள் அனைத்து சுயநலமானவை என்று நினைக்கும் அவனுக்கு
அடுத்தவனின் மனைவி மூலம் வாரிசு ஏற்படுவதை ஏற்க முடியவில்லை.
தொடர்ச்சியான சுயகேள்விகள் மூலம் பெரும் குடிகாரனாகிறார் மம்முட்டி. முடிவில்
தான் மீராவை காதலிப்பதை உணர்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய். கணவன்
என்ற பந்தங்களை விட்டு வேளிவர முடியாத ஒருத்தியின் மேல் காதல் என்பது
சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

நம் சமூகம் கட்டமைத்த உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாதது என்பது மேலை
நாட்டுக் கலாச்சாரம். நம் சமூகத்துக்கு முற்றிலும் பொருந்தி வராத கலாச்சாரம்.
புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் உறவுச்சிக்கல்களின் முடிவில் காதலின்
புனிதத்தை உணர்கிறான். இருவரின் காதலையும் இச்சூழல் ஏற்க மறுக்கிறது.
மிகவும் சிக்கலான இக்கதையில் மிகச்சிறந்த நடிப்பாக மம்முட்டியையும், மீரா
ஜாஸ்மினையும் சொல்லலாம்.

புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயாவின் ஹீரக் தீப்தி என்ற
நாவலின் தழுவலே ஒரே கடல். மிக அபூர்வமான படம். தனது வாழ்க்கையில் நடித்த
மிகச்சிறந்த படம் என்று மீரா ஜாஸ்மின் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மம்முட்டி
பற்றி சொல்லவேண்டியதில்லை. படத்தின் இருபெரும் தூண்கள் இவர்கள்தான்.
நரேனின் நடிப்பு சுமார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திணிப்பாக மட்டும் உள்ளது.

நான்கே நான்கு பாத்திரங்கள் கொண்டு கலவையான உணர்ச்சிகளுடன் ஒரு மிகச்சிறந்த
படத்தை கொடுத்த இயக்குனர் ஷ்யாமப்ரசாத் அவர்களுக்கு பாராட்டுகள்.

நிச்சயம் தமிழில் எடுக்கவேண்டிய படம். மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியான
ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே!