எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Sunday, April 20, 2008

நாய்களைப்பற்றி....

நகுலனின் நாய்கள் நாவலை சமீபத்தில் படித்து முடித்தேன். வேறொரு நாளில்
நாய்கள் பற்றி என்ன எழுதியிருந்தார் என்று நினைவுகொள்ள விரும்பியபோது
மனத்திரையில் வெள்ளைத்தாள்களே தோன்றின. அப்படிப்பட்ட புகமுடியா உலகம்
நகுலனது. அப்படி மீண்டும் உலகிற்குள் போகவிரும்பினால் நீங்கள் ஒரு மனம்பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக்கொள்பவராகவோ இருந்தால்
கூடுதல் தகுதி.

எங்கள் வீட்டில் ஒரு பூனை வளர்த்தோம். பூனை என்றாலே அழகுதானே... பக்கத்து
வீட்டு சிறுமி ஒருத்தி அந்த பூனையை வாஞ்சையுடன் தூக்கி முத்தமிட்டாள். இந்த
பூனைக்கு பேர் என்ன? என்று கேட்டாள்.

அப்போதுதான் பெயரின் அவசியத்தை உணர்ந்து அந்த நொடியிலிருந்து பூனைக்கு ஒரு
பெயர் வைக்க யோசித்தேன். அது பெண் பூனையாக இருந்தது. யோசித்ததில் எந்த
பெயரும் பொருந்தவில்லை. இறுதியாக அதற்கு "பூனை" என்றே பெயர் வைத்தேன்.

மறுபடியும் அச்சிறுமியை அழைத்து "இந்தப்பூனைக்கு பேர் வைத்து விட்டேன்" என்று
சொன்னேன்.

சிறுமி மிக்க ஆவலுடன் என்ன பேர் என்று கேட்டாள்.

"பூனை" என்றேன்.

அவளும் சிரித்தபடியே பூனை என்று அழைக்கத் தொடங்கினாள். இன்று அப்பூனை
வளர்கிறது.

இன்று எதேச்சையாக கதாவிலாசத்தில் ராமகிருஷ்ணனின் நகுலன் குறித்த
கட்டுரையினை வாசித்தேன். ஏற்கனவே வாசித்ததுதான் இருந்தாலும் ராமகிருஷ்ணனின் எழுத்தும் நகுலனையும் பிடிக்கும் என்று மறுபடியும் வாசித்தேன்.

அங்கேயும் இதே போல நகுலன் பூனைக்கு பூனை என்றே பெயர் வைத்திருப்பதாக
எழுதி இருந்தார். என்றோ படித்தது என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது
சமயத்தில் அது வெளிப்பட்டுருக்கிறது. இப்படித்தான் எவர் எவரையோதான் நாம்
வாழ்நாளில் கடைபிடிக்கிறோம்.

ஏன் நவீனனை நாய் என்று அழைக்கக்கூடாது? என்று அடிக்கடி நவீனன் டைரியில்
வருகிறதென்று தெரியவில்லை.

நாம் நாயைப்பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட நாட்களில் எனக்கென்று ஒரு நாய் வளர்த்துக்கொள்ள ஆசை இருந்தாலும்
வீட்டின் அனுமதி கிடைக்கவில்லை. என் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் நண்பர்
ஒருவர் இருந்தார். அவர் ரஜினியின் தீவிர எதிரி. ஒவ்வொரு நாய்க்கும் ரஜினியின்
படங்களையே பெயராக இட்டு மகிழ்ந்தார். அப்படித்தான் அந்த நாய்க்கு "முத்து" என்று
பெயரிட்டு அழைத்தார். ஏற்கனவே அவர் வீட்டில் "வீரா" என்ற நாய் இருந்தது.

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விடுவேன். போகையில்
ஒரு ரூபாய்க்கு தவிட்டு பிஸ்கெட் என்று அழைக்கப்படும் அந்த வட்டமான
பிஸ்கெட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கொள்வேன். ஒரு ரூபாய்க்கு இருபது
தருவார்கள். டவுசரின் பையில் போட்டுவிட்டு வேகமாக கரும்புக்காடு, நெல்வயல்,
பருத்தி தோட்டங்களை தாண்டி நடந்து செல்வேன். அவரின் வீடு வயல்களுக்கு நடுவே மஞ்சள் சுண்ணாம்புடன் தனித்து அடையாளம் தெரியும்.

அப்போதுதான் அவர் சொன்னார் "முத்து" என்றொரு நாயை ராஜபாளையத்தில்
இருந்து வாங்கி வந்திருப்பதாக. வீராவுக்கு பத்து முத்துவுக்கு பத்து என்று
பிஸ்கெட்டுகளை பிரித்து கொடுத்தேன். நான் கண்ட நாய்களிலே மிகச்சிறப்பான நாய் "முத்து"தான். கோபமாக பேசினால் சாப்பிட மறுக்கும். எத்தனை நாளானாலும்
தட்டில் சாதம் கூட அப்படியே இருக்கும். சமாதானமாக பேசினால் மட்டுமே
சமாதானமாகும்.

உதாரத்திற்கு ஒரு கோழிக்காலை எடுத்து வாசல்படிக்கு உள்பக்கம் வைத்தால் அது
வெளியே உட்கார்ந்திருக்கும் கூப்பிட்டாலும் உள்ளே வராது. அவ்வளவு ஒழுக்கமாக
வளர்த்து இருந்தார்கள்.

தொடந்தது போல நான்கைந்து மாத ஞாயிறுகளையும் பார்த்துவிட்ட முத்துவுக்கு
என்னோடு வந்துவிடவேண்டும் என்று ஆசை. ஒருநாள் அங்கிருந்து திரும்பி
வரும்போது எனக்கு தெரியாமல் என்னோடே வந்துவிட்டது. பிறகு நான்கைந்து
முறை திருப்பிக் கொண்டு விட்டும் திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது.
அவர்களுக்கே சலிப்பாகி விட்டதைப் போல அங்கயே வளரட்டும் என்று விட்டு
விட்டார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டிலேயே வாழ்ந்து வந்தது. மிகச்சிறந்த
பாதுகாப்பை அது எங்கள் வீட்டிற்கு அளித்தது. வெற்று ஆள் ஒருவர் கூட
உள் நுழைய முடியாது. நாய்கள் மிகுந்த ஞாபகசக்தி கொண்டது. எத்தனை வருடம்
கழித்து வந்தாலும் வாசனை மூலம் யார் என்று அறிந்துகொள்ளும்.

அந்த ஊரின் எல்லையில் அமைந்துள்ள கடைசி வீடு எங்கள் வீடு. இரவில் அதிக
நடமாட்டம் இருக்காது. பழகிய வாசனை அல்லாத எவரும் எங்கள் வீட்டைத் தாண்டி
சுலபத்தில் போய்விட முடியாது ஆனால் நான் இரவு எத்தனை தாமதமாக வந்தாலும்
தூரத்தில் வரும்போதே தலைதூக்கிப் பார்க்கும். என் காலடியோசை கூட அதற்கு
அத்துபடி. என் நடை எப்படி இருந்தாலும்.

எப்படி ஒழுக்கமாக இருந்தாலும் அந்த முத்துவுக்கு காமத்தை மட்டும் கட்டுப்படுத்தவே
முடியவில்லை. ஒரே தெருவில் சலித்து போய் அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று
ஆட்டையை போட்டு வந்தது. முத்துவுக்கு எதிராக மற்ற எல்லா நாய்களும் ஒன்றுபட்டு
முத்துவின் காம ஆட்டத்தை அழிக்க திட்டம் போட்டு கடிக்க ஆரம்பித்தன. முதலில்
சிறு சிறு காயங்கள் பிறகு பெரிய காயங்கள், சிலநாள் ஓய்வுக்குப்பிறகு மறுபடியும்
அதேபோல வேட்கைப்பயண விழுப்புண்கள். ஓய்வு பெறும் வயது வந்தது கூட
நினைவில்லாமல் தொடர்ந்து தெருத்தெருவாக போய் கடைசியாக அதன் காமத்தை
அதன் போக்கில் விட்டு விட்ட பின்னர் எப்போதாவது வரும் போகும்.

கொஞ்சநாள் கழித்து அடையாளம் தெரியாத அளவுக்கு அடிவாங்கி வந்து தோட்டத்தில்
படுத்திருக்கும் தெம்பு வந்தவுடனே திரும்பி செல்லும் பிறகு வரும். எதோ ஒரு
சண்டையில் ஒரு சொறிநாய் கடித்துவிட்டது போல. இதற்கும் சொறி வந்து விட்டது.
தெருவாசிகள் சொறிநாயை விட்டுவைக்க கூடாது என்று முறையிட்டபின்னர் ஒரு
சுபயோக சுபதினத்தில் தூக்கிலிட்டு கொன்றாயிற்று.

இப்படித்தான் முத்துவின் கதை முடிந்தது.

என் பள்ளிக்கால நண்பனின் வீட்டில் ஒருநாய் வளர்த்தார்கள். அவனின் அப்பா இவனிடம்
பேசியதைவிட லட்சக்கணக்கான வார்த்தைகள் அதிகமாக மணி என்ற அந்த நாயிடம்
பேசியிருப்பார். மணியிடம் மட்டுமல்ல அவர் தெருவில் உள்ள நாய்களிடம் கூட
நின்று நிதானமாக பேசிவிட்டுதான் போவார். தெருநாய்களிடன் பேசும்போது மட்டும்
போதையில் இருப்பார். அவரும் அப்படிதான் குடியை விடமுடியாமல் மறுவாழ்வு
மையம் சென்று வந்தார். எல்லா பழக்கமும் காணாமல் போனது. ஆனால் நாயுடன்
பேசுவது மட்டும் முன்பிருந்ததை விட அதிகமானது. இப்போதெல்லாம் அவர்
நாயுடன் மட்டும்தான் பேசுவார். நாய்தான் எதுவும் இவரிடம் பேசுவதில்லை.

கண் திறவாத நாய்க்குட்டிகள் முலைதேடும் காட்சியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?


நெகிழ்ச்சியாக இருக்கும் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். முடிந்தால்
தூக்கி கொஞ்சி பாருங்கள். வினோதமான வாடையுடன் கத கதப்பை உணரலாம்



நாய் குட்டி போட்டவுடன் எவராவது அதன் அருகில் போயிருக்கிறீர்களா?

கண்டிப்பாக போகமுடியாது. நான் பலமுறை முயன்று தோல்வியை தழுவியிருக்கிறேன்.
ஏதோ ஒரு நாயுடன் கலவி கொண்டு பெற்றதாயினும் குறிப்பிட்ட காலம் வரை
குட்டிகளிடம் யாரையும் அண்ட விடுவதில்லை. பிறந்த நாய்க்குட்டிகள் கண்ணை
திறக்காமல் அரை போதையில் இருக்கும்போது அதனிடமிருந்து ஒரு வாசனை வரும். (நாற்றம் என்று கூட சொல்லலாம்) அதை முகர எனக்கு அப்போது பிடிக்கும்
ஆனால் தாய்நாய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும்.

என் கல்லூரி நண்பன் ஜெயக்குமாருக்கு நாய்கள் என்றாலே ஆகாது. நாய்கள் இருப்பதாக
சொன்னால் அந்த தெருவில் நடப்பதற்கே பரிசீலனை செய்பவன். சிறிய வயதில்
எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கலாம். ஆனால் அவன் வீட்டு நாய்க்கு கூட
பயம். கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு ச்சூ ச்சூ என்றபடியேதான் போவதும்
வருவதும். அவனிடம் உங்கள் வீட்டில் நாய் இருப்பதாக சொன்னால் முடிந்த வரை
உங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்ப்பான். சினிமாவில் வருவதுபோல கோரமாக
எதாவது ப்ளாஷ்பேக் இருக்கலாம்.

ஐந்தாவது வரை நானும் என் உடன் பிறந்த தம்பியும் ஒன்றாகத்தான் டியூஷன்
செல்வோம் அப்படியொருநாள் செல்லும்போது வாத்தியார் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த
நாயை கொஞ்சிக்கொண்டே வந்தான். நாய் என்ன நினைத்ததோ தெரியவில்லை. எகிறி
வந்து முகத்திலே கடித்து விட்டது. சரியாக மேல் உதட்டில் ஒரு ஓட்டை. அழுது
கொண்டே வீட்டுக்கு ஓடினோம். பிறகு அந்த வாத்தியாரிடம் செல்வதை நிறுத்தி
விட்டோம்.

சமீபத்தில் ஒருநாய் மூன்று குட்டிகள் இட்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று
பார்க்கலாம் என்று போனபோது உர்ர் என்று உறுமும் சத்தம். பின்வாங்கினேன்.

எல்லா ஊர்களிலும் நாய்கள் ஒரே குணத்தைதான் கொண்டிருக்கிறது.

நாய்க்காரப்பாட்டி


எங்கள் பள்ளிக்கு எதிரே வடை சுடும் பாட்டி
ஒருத்தி இருந்தாள். நிலவில் வடை
வடை சுட்டவள் இவளாகத்தான் இருக்குமோ
என்ற ஐயம் கூட எனக்கு உண்டு.
என் வாத்தியார் அதே பள்ளியில் படித்த
போதுகூட இவள் பாட்டியாகவும், வடை
சுடுபவளாகவும், தனிமைக்காரியாகவும்
இருந்தாள். ஆனால் அவளுக்கு ஆறு
கால்கள்.
ஆம்
அவளுடன் ஒரு கிழட்டு நாயும் இருந்தது.
இப்போது எத்தனை என்று தெரியவில்லை.
ஆனால் அந்த நாய்க்கு நான்குதான்.

Monday, October 29, 2007

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?

ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு :)

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா?

Photo Sharing and Video Hosting at Photobucket

பொய் சொல்லாம சொல்லுடா...

Photo Sharing and Video Hosting at Photobucket

அடிங்ங்...

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்ப சொல்லு...

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ பொய்தான சொல்ற?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி:விகடன்

Wednesday, April 04, 2007

முத்தழகு

மன்னிச்சிருங்க மக்கா. அழகுன்னு எதை சொல்றாங்க அப்படின்னு கருத்து
கேக்க போய் இந்த சுற்று விளையாட்டு வர காரணமாயிட்டேன். அழகான
ஆறு போட இலவசம் கூப்பிட்டிருக்காங்க பதிவு எழுத மேட்டர்லாம்
தமிழ்மணத்துல உலாவந்தாவே போதும் சிக்கிடும். அழகு என்பது அவரவர்
பார்வையில் வேறுபடும் என்பது போன பதிவில் நிரூபணமாகிவிட்டது.
எனக்கு பாவனாவை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா பாருங்க பல பேருக்கு
பாவனா யாருன்னே தெரியல பொதுவான ஒரு ஆளையே இப்படி
சொல்லும்போது அவரவருக்கு தனித்தனியான உலகத்தில் ஒரே அழகு
சாத்தியப்படாது. அழகு என்பது மாறுதலுக்கு உட்பட்டதாக இருந்தாலும் முதல்
தரிசனம் அதை மறக்கச்செய்திடும் அதுவே பின் தொடருமானால் நாம் வேறு
எதுவோ ஒன்றை தேட நேரும். எனக்கு தெரிஞ்ச சலிப்பு தட்டாமல் இருப்பது
மூன்று விஷயம்தான் வாசிப்பு, சாப்பாடு, தூக்கம் இந்த மூணு வேலையையும்
என்னால சிறப்பா செய்யமுடியும்.

நீங்கள்லாம் திட்டறதுக்கு முன்ன நானே மேட்டருக்கு வந்துடறேன்.

1.அழகு

குள்ளவண்டுன்னு ஒரு ஆளு எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல பண்ணையத்துக்கு
வேலை செஞ்சுகிட்டு இருந்தார் (இன்னமும்). பண்ணயத்து வேலைன்னா முதல்ல
என்னன்னு சொல்லிடறேன். வருஷத்துக்கு ரெண்டு புதுத்துணி, மூணு வேலை
சாப்பாடு, உறங்க இடம் வருஷம் இத்தனை மரக்கா நெல் அப்புறம்
பதினாறாயிரம் ரூபாய். அஞ்சு வருஷம் பாண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டா அவங்ககிட்டதான் வேலை செய்யணும். கிட்டத்தட்ட அடிமை மாதிரிதான்.
ஆனா அவங்க வீட்டுல ஒரு ஆளாத்தான் நடத்தினாங்க. எல்லாரும்
அவர் பேர் சொல்லி கூப்பிடவே நானும் குள்ளவண்டுன்னு கூப்பிடுவேன்.
எனக்கு நீச்சல் கத்து குடுத்த, மீன் பிடிக்க, இளநீர் வெட்ட இப்படின்னு
நிறைய கத்துக் குடுத்த குருசாமி.

என் கூட பத்தாவது வகுப்பு படிச்ச ராஜேஸ்வரி ஆர்ப்பாட்டமில்லாத அழகு.
நல்ல கருப்பு வட்ட முகம். முக்கியமா படிப்புல ரொம்ப கெட்டி. மத்த
பொண்ணுங்க ஒரு மார்க் குறைஞ்சாலும் உக்காந்து மூக்க சிந்தி மார்க்
வாங்கிடுவாங்க. ஆனா இந்த பொண்ணு எதுலயும் 95 க்கு குறைஞ்சு
எடுக்காது. பேரமைதியான பொண்ணு. தேர்வுகள் முடிந்து முடிவுகள்
வெளியாகி அந்த பொண்ணுதான் முதல் மதிப்பெண். எல்லாரும்
பாராட்டினாங்க.

காட்டுல கரும்பு வெட்டறாங்க வான்னு குள்ளவண்டு கூப்பிட்டுச்சி, போனேன்.
அங்க நிறைய பெண்கள் கரும்பு சுமந்து ட்ரெய்லர்ல ஏத்திகிட்டு இருந்தாங்க
வரிசையா போன பெண்கள்ல ராஜேஸ்வரியும் ஒருத்தி. சக்திக்கு மீறின சுமை
நாலு கட்டு கரும்பு தூக்கிட்டு போறது ரொம்பவே கஷ்டம். ஏன் இந்த
வேலைய செய்ற நீன்னு கேட்டேன்.

"எம்பொண்ணுதாம்பா அதுன்னு சொல்லிகிட்டே பின்னாடி கரும்பு வெட்டிகிட்டு
இருந்தார் குள்ளவண்டு". ஏன் குள்ளவண்டு படிக்கிற பொண்ண இப்படி
கஷ்டபடுத்தறிங்கன்னு கேட்டேன். லீவ்லதாம்பா இருக்கு அடுத்த வருசம்
கல்யாணம் பண்ணி குடுக்கணும்ல.

"உம்பொண்ணு நல்லா படிக்கும் மேல படிக்க வைய்யி குள்ளவண்டு"

"காசு எங்க இருக்கு படிக்க வைக்க, அப்படியே படிக்க வைச்சா சொந்தத்துல
அவ்வளவு படிச்ச மாப்ள இல்லிங்க தம்பி" அப்புறம் கல்யாணம் பண்றதுல
சிரமம் வந்துடும்.

சொன்ன மாதிரியே கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சி.

இது மாதிரி எத்தனை ராஜேஸ்வரிகள் திறமை வெளித்தெரியாமல்
போயிருக்கும்னு தெரில.

அழகு என்றவுடன் ஆயிரம் விஷயங்கள் மனசுல தோன்றி மறைந்தாலும் அழகும்
அறிவும் ஒருசேர அமைந்த ராஜேஸ்வரிதான் நியாபகத்துக்கு வருது.

*********************************

2. இடம்

இருக்கறது ஏ,சி ரூம்தான் எல்லா வசதியும் கிடைக்குது. சுகமான வாழ்க்கை,
எந்த நேரத்திலும் எதுவும் கிடைக்கும். ஆனா பாருங்க தூக்கத்த தினமும்
போராடித்தான் வாங்க வேண்டியிருக்கு. எங்க வீடு கூரை வீடா இருந்தாலும்
உலகத்துலயே எனக்கு பிடிச்ச இடம் அதுதான். எந்த மூலைல படுத்தாலும் சுகமா
தூக்கம் வரும். திண்ணையில ஆயிரம் கொசுக்களுக்கு இடையில
படுத்தாலும் கன்னா பின்னான்னு தூங்குவேன். கரண்ட் கட்டாகி கும்மிருட்டா
இருந்தா கூட தங்கு தடையின்றி எல்லா அறைக்கும் போய் வருவேன்
அவ்வளோ அத்துபடி. இங்க லொக்கேஷன் மேப் இருந்தா கூட ஆயிரம்
பேர்கிட்ட விசாரிச்சிதான் அத்தாதண்டி பில்டிங்க கண்டுபிடிக்க வேண்டியிருக்கு.
நான் எங்கெங்கயோ படுத்து தூங்கியிருக்கேன் ஆனா வீட்ல படுத்து தூங்கற
மாதிரி ஒரு சுகம் வரவேல்ல அதுவும் படுத்த அஞ்சாவது செகண்டுல எங்க
இருந்து வருமோ தெரியாது. சாப்பிட்ட தட்டை நேக்கா நகர்த்தி வச்சிட்டு
அப்படியே நீட்டிடுவேன் பிறகு தலவாணி இல்லாம பையன்
தூங்குறானேன்னு தூக்கம் கலையாம தலையணைய சொருகி விடுவாங்க.

ஒரு முறை வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருந்தாங்க பத்திரமா இருடா
கண்ணுன்னு சொல்லிட்டு சாப்பாடெல்லாம் இருக்கு பத்தலன்னா பக்கத்து
வீட்டுல போய் நிக்காம தோசை ஊத்தி சாப்பிடுன்னு சொன்னாங்க.
நானும் கண்ணும் கருத்துமா முன்பக்கம், பின்பக்கம் தாழ்ப்பாள் போட்டுட்டு
தூங்கிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா கூரைய பிச்சிகிட்டு தண்ணி ஊத்துது.
என்னடான்னு எந்திரிச்சா எங்கண்ணன் கூரைய பிரிச்சி தண்ணி ஊத்துச்சி
செம கடுப்புல வெளில வந்தா தெருவே நின்னு வேடிக்கை பாக்குது. ரொம்ப
நேரம் கதவ தட்டி பாத்துட்டு கதவு திறக்காமல் போகவே புள்ளைக்கு என்ன
ஆச்சோ ஏதாச்சோன்னு கூரைய பிரிச்சி பாத்து தண்ணி ஊத்திருக்காங்க.
நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட இடத்தை அழகான இடம்னு
சொல்லலாம்தானே?

********************************

3.நிகழ்வு

மறக்கவே முடியாத நிகழ்வுன்னா அது என்னோட ஆறாவது செமஸ்டர்தான்.

சீக்கிரம் போய் உங்க அப்பாவை மடக்குடா HOD ரூம் பக்கம் போய்கிட்டு
இருக்காரு உம்மேல இருக்கற கடுப்புல நீ வச்சிருக்க அரியர்ஸ் எல்லாத்தையும்
புட்டு புட்டு வச்சாருன்னா வசமா மாட்டிக்குவ.

கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தபால்காரரை
தாஜா பண்ணி நானே வாங்கிடுவேன் அதனால நான் எத்தனை அரியர்
வச்சிருக்கேன்னு அப்பாவுக்கு தெரியாது. கொடுமை என்னன்னா எத்தனை
அரியர் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியாது. முதல் வருஷத்துல நடந்த ஜூனியர்
சீனியர் சண்டை உள்ள போய் வெளில வந்ததினால கல்லூரிக்கு கெட்ட பெயர்.
ரெண்டு செமஸ்டர் எக்சாம் எழுத தடை போட்டுட்டாங்க.

"மொத்தம் பதினெட்டு அரியர்ங்க காலேஜிக்கு கரெக்டா வந்தாலும் எந்த
பரிட்சையிலும் பாஸ் ஆகல" இவனெல்லாம் உருப்படவே மாட்டான்.

வெறுத்து போய்ட்டாரு அப்பா.

"படிக்கறதுக்கு புஸ்தகம் எதுவும் கிடைக்கலயா?"

"மவுனம்."

"படிக்கறதுக்கு இஷ்டம் இல்லயா?"

"மவுனம்"

"லவ்வு கிவ்வு பண்றியா?"

"மவுனம் கூடவே கொஞ்சம் கண்ணீர்"

ஒழுங்கா படிக்கலன்னாலும் பரவால்ல, ஒழுக்கங்கெட்டவன்னு யாரும் சொல்லிட
போறாங்க படிப்ப முடிச்ச உடனே வீட்டுல இருக்காத. எங்கயாவது போய்
பொழச்சிக்கோ அதுவரைக்கும் வீட்டுல இருந்துக்க. தீர்க்கமா சொல்லிட்டாரு

வாழ்க்கையே வெறுத்து போச்சி. அவனவன் கடைசி செமஸ்டருக்கு படிச்சிட்டு
இருக்கான் நான் என்னடான்னா மூணாவது செமஸ்டருக்கான பேப்பர படிச்சிட்டு
இருக்கேன். அஞ்சாவது வகுப்பு பையன ஒண்ணாவது வகுப்புல உக்கார வச்ச
மாதிரி. முதல் வருட பொண்ணுங்க கூடல்லாம் உக்காந்து தேர்வெழுதணும்
இதவிட ஒரு அவமானம் யாருக்கும் வந்துருக்குமான்னு தெரியல இருக்கறது
ஒரே செமஸ்டர்

வைராக்கியமா ஒரு முடிவெடுத்து சாம, பேத, தான, தண்டம், கொஞ்சம்
படிச்சி ஆறாவது செமஸ்டர்ல ஏதோ பேருக்கு பதினெட்டு பேப்பரும் எழுதி
வச்சி வீட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டேன்.

ரெண்டு மாசம் கழிச்சி HOD கிட்ட இருந்து போன்.

"சாதனை பண்ணிட்டப்பா நீ காலேஜ் சரித்திரத்துலயே அதிக அரியர் வச்சவனும்
நீதான் ஒரேடியா எல்லா பேப்பரையும் பாஸ் பண்ணவனும் நீதான்"

என்னால நம்பவே முடியல. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து எப்பவுமே என்னை
காப்பாத்திடுது.

அப்பாவுக்கு போன் பண்ணேன்.

"அப்பா நான் பாஸ் பண்ணிட்டேம்பா"

************************************

4. குறும்பு

நாங்க மட்டும் இல்லன்னா நீ ஏதாச்சும் ஒரு மார்க்கெட்ல கத்திரிக்கா கூறு கட்டி
வித்துகிட்டு இருந்திருப்ப. உன் நல்ல நேரம் எங்க கண்ணுல மாட்டிகிட்டன்னு
அம்மா அடிக்கடி சொல்வாங்க.

அப்போ திண்டிவனத்துல இருந்தோம். மருத்துவர் ஐயா ராமதாசு க்ளினிக்
பக்கத்துல நாலு பில்டிங் தள்ளிதான் நம்ம வீடுன்னு பின்னால அப்பா
சொல்லியிருக்கார்.

அப்போ எல்கேஜி கூட படிக்கல, ஏதோவொரு வெயில்காலம் அப்பாவுக்கு
அம்மை போட்டுருந்ததால என்னை முன்வீட்டில தூங்க வச்சிட்டு எல்லாரும்
பின்கட்டுல இருந்திருக்காங்க. பாட்டிகிட்ட தூங்கறேன்னு அம்மாவும், அம்மாகிட்ட
தூங்கறேன்னு பாட்டியும் என்னை தேடாம விட்டுட்டாங்க.விடிஞ்சி பார்த்தா
என்னை வீட்டுல காணும். ஒருநாள் முழுக்க தேடியும் கிடைக்கல.

மூணு வயசு பையன் ஒருத்தன் பஸ் சக்கரத்துல சிக்கி நசுங்கி போயிட்டான்னு
ஒருத்தர் கொளுத்தி போடவே எல்லாரும் அழுது பொறண்டு ஆஸ்பத்திரிக்கு
ஓடியிருக்காங்க. அங்க ஒருத்தர் மார்க்கெட் பக்கம் அனாதையா ஒரு பையன்
சுத்திகிட்டு இருந்தான் மேல்சட்டை போடாமன்னு சொல்லவே அங்க போய்
பாத்திருக்காங்க.

அங்க நான் அமைதியாக உக்காந்து கத்திரிக்கா கூறு கட்டிகிட்டு இருந்தனாம்.
யார் கூப்பிட்டும் வரல.

உண்மையாவே உன் பையனா இருந்தா உன்ன பாத்ததும் ஓடி வந்திருப்பான்ல
ஏம்மா பொய் சொல்றன்னு மார்கெட்ல இருந்தவங்க எல்லாம் விரட்ட
ஆரம்பிச்சிட்டாங்க

"எனக்கே தத்துக் குடுத்துடும்மா இந்த புள்ளய"ன்னு அந்த பாட்டி அழுதுட்டாங்க.

ஒருவழியா குடும்ப பாட்டையெல்லாம் பாடி கூட்டிவந்தாங்க.

**********************************
5.காடு

காடு ரொம்ப அழகானது யாருமே இல்லாத இடத்தில ஒருநாளை செலவு
பண்ணோம்னா மனசுல இருக்க அத்தனை பாரமும் எங்க போச்சுன்னே
தெரியாது. பக்கத்துலயே கல்வராயன் மலை இருக்கறதுனால நினைச்ச
நேரத்துக்கு போகலாம் வரலாம். விதவிதமான மரங்கள், சுத்தமான காத்து,
நீர்வீழ்ச்சின்னு நிறைய இருக்கும். வெளில இருந்து வர்றவங்கதான் அங்கங்க
கன்னாபின்னான்னு எழுதி வச்சி பாறைய அசிங்கப்படுத்தறானுங்க. சில
பேர் காதல் கவுஜைய எழுதி வச்சி அங்கயே மருந்து குடிச்சி மண்டைய
போட்டு மலையையே ஒரு மர்ம பிரதேசம் ரேஞ்சுக்கு ஆக்கி
வச்சிட்டானுங்க.

எனக்கு இருக்கற ஒரே பிரச்சினை ரொம்ப தூரம் நடந்ததும் ஆரம்பிச்ச
இடத்துக்கு எப்படி வர்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிட்டு இருப்பேன்.
தெய்வாதீனமா யாராச்சும் ஆடு, மாடு மேய்க்கறவங்க வந்தாங்கன்னா அவங்க
கூடவே நடந்து வந்து பஸ் பிடிச்சி வீட்டுக்கு போயிடுவேன்.

பாக்கெட் தண்ணி, பிஸ்லரி, அக்குவாபினா இதுபோல என்னென்னமா
சுத்திகரிப்பு பண்ணி ஒரிஜினல் குடிதண்ணின்னு ஏமாத்துவானுங்க. ஆனா
மலைல கிடைக்கற தண்ணிக்கு ஈடாகாது குடிச்சதும் அடிவயிறு சில்லுன்னு
அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். இதுக்காகவே மலைக்கு அடிக்கடி போவேன்.

**********************************

6. குழந்தைகள்

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

அம்மா சமையல்கட்டுல பிசியா இருப்பாங்க, வேலைக்கு போறவங்களாவும்
இருப்பாங்க, அப்பா குழந்தைங்ககிட்ட அதிகம் பேச மாட்டாங்க. யார்கிட்டயும்
பேசாம மூலைல பையன் உக்காந்துட்டான்னா மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
அதனால கிடைக்கற நேரத்துல குழந்தைங்ககிட்ட எதையாவது பேச ஆரம்பிச்சி
விட்டா அவங்க போதும் பேசிகிட்டே இருப்பாங்க. முக்கியமா பெரியவர்கள்
அப்படின்ற விஷயத்தை மறந்துபோய் குழந்தையா மாறி பேச ஆரம்பிக்கணும்
இல்லன்னா கூச்சப்பட்டு ஒரு சில வார்த்தைகள்ல பதில் சொல்லிட்டு ஓடிடும்.

குழந்தைங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் ஸ்கூல்ல மிஸ் சொன்ன கதைய
சொல்றா மாப்ளன்னு அக்கா பையன கேட்டோம்னு வைங்க அவங்க சொல்லாத
கதைய இவன் எங்கங்கோ கொண்டு போய் கேக்கறவன் கேணைன்ற மாதிரி
முடிப்பாரு சிரிச்சிகிட்டே கேட்டோம்னா இன்னும் பல கதைகள் சொல்வாரு.

ஓட்டல்ல, பஸ்ல, கல்யாணத்துல, இப்படி எங்க குழந்தைகள பார்த்தாலும்
கண்ண சிமிட்டி, முகபாவனைகள் காட்டி, கன்னா பின்னான்னு சேட்டை
செஞ்சு அந்த குழந்தை நம்மளயே பாத்துகிட்டு இருக்கறமாதிரி செஞ்சுடுவேன்.
ஒரு சில குழந்தைங்க பாதில நம்ம சேட்டைய பாத்து அழ ஆரம்பிச்சுடும்.
(நம்ம முகராசி அப்படி)


****************************************************************************

எழுதி முடிச்சி வாசிச்சா வியர்டு பதிவு மாதிரி இருக்கு சரி இவ்வளவு தூரம்
கஷ்டப்பட்டு டைப் பண்ணியாச்சு வேற வழியில்ல மக்கா. எழுதனதுலயே
இந்த பதிவுதான் ரொம்ப பெரியதா இருக்கு. :(

நான் மூணு பேர கூப்பிடணும்ல.


அபிஅப்பா (இவருக்கு பஞ்சாயத்துராஜ்னு ஒரு புது பேர் வச்சிருக்காங்க)
அவந்திகா (கிரிக்கெட் பத்தி நிறைய சொல்றாங்க இப்ப என்ன சொல்ல
போறாங்கன்னு பார்ப்போம்)
அய்யனார் (இவர் எழுதற கவிதை (கவுஜ இல்லிங்க) ரொம்ப அழகா நளினமா
இருக்கு, சமீபத்தில் கிடைத்த நல்ல நண்பர்)

அழகு எல்லாமே "அ" வரிசைல வர்ற மாதிரி இருக்குல்ல :))

Saturday, March 31, 2007

அழகுன்னு எதை சொல்றாங்க???

என்னோட டெஸ்க்டாப்ல பாவனா, ஸ்க்ரீன்சேவர்ல பாவனா, போல்டருக்கெல்லாம்
பாவனான்னு பேரு தொட்டு எங்க பாத்தாலும் ஒரே பாவனா மயம்தான். இத
பாத்துட்டு நம்ம பய ஒருத்தன் என்னடா ஒரு மார்க்கமா இருக்கன்னு
கேட்டுபுட்டான். ரொம்ப அழகா இருக்கா மாப்ள அதான் பக்கத்துலயே வெச்சி
பாத்துகிட்டுருக்கேன்.

ஏண்டா வீணா போனவனே பருவத்துல பன்னிகுட்டி கூட அழகா இருக்கும் அதுக்காக
மடில எடுத்து வச்சி கொஞ்சுவியா? இதெல்லாம் ஒரு மூஞ்சி வந்துட்டான் அழகுன்னு
சொல்லிகிட்டு தூக்குடா அதையெல்லாம்.

"இவனுக்கு தெரியுமா பாவனாவோட அருமை". இருந்தாலும் அவன் சொல்றதுல
அர்த்தம் இருக்கத்தான் செய்யிது.

ரொம்ப நாளா இந்த டவுட்டு இருக்குங்க எனக்கு. சின்ன வயசில பள்ளியில் எனக்கு
பக்கத்துல உக்காந்திருந்த கவிதா ரொம்ப அழகுன்னு நினைச்சேன். அவள விட சூப்பரா
அமுதான்னு ஒருத்தி புதுசா வந்த உடனே கவிதா காணாம போயிட்டா. அப்புறம்
கஸ்தூரி டீச்சர், குஷ்பு, சுகன்யா, பானுப்பிரியா, மனீஷா, நேத்து அசின் இன்னிக்கு
பாவனா (கடைசி பேர சொன்ன வுடனே புதுசா பொறந்தமாதிரி இருக்கு) இப்படி
மாறிகிட்டே இருக்குங்க. அழகை நடிகைகள் முகத்துல நிரந்தரமா பாக்க முடியாதுன்னு
ஆகிப்போச்சு. நிலையான அழகுன்னு ஒண்ணு கிடையவே கிடையாதான்னு
மனசு கேட்டுகிட்டே இருக்கு

Photo Sharing and Video Hosting at Photobucket

மேல சொன்னதெல்லாம் திடீர்னு ஒரு நாள் காணாமல் போயிடுது. தினமும் ஸ்கூல்
போகும்போது அம்மா தலை சீவி விட்டு பவுடர் அடிச்சி விடுவாங்க அப்பலாம்
அடிக்கடி அவங்க கூந்தலை முகர்ந்து பார்ப்பேன் லேசான மல்லிகை மணம் வரும்
அதை இப்ப நினைச்சாலும் அழகான ஒரு நினைவா இருக்கு. பள்ளி கூடத்துல
என் வகுப்பு பெண்களின் ரிப்பன் முடிச்சை பார்த்தா படக்குனு பிரிச்சி விட்டுடுவேன்
இதுவே ஒரு பழக்கமாகி ஒரு முறை பஸ்ல ஒரு பொண்ணு ரிப்பன என்னையறியாமல்
பிரிச்சி விட்டுட்டேன் ஒரே ரசாபாசமாகி போச்சு இப்ப அதை நினைச்சு பார்த்தா
சின்னதா ஒரு சிரிப்பு வருது இதை அழகுன்னு சொல்லமாமான்னு தெரில.
தனிமையில் இருக்கும்போது இந்த மாதிரி பழசை நினைச்சி பார்த்து சிரிப்பது ஒரு
வகை அழகா.

எது அழகுன்னு தெரிஞ்சி ஒண்ணும் பண்ண போறதில்ல நானு இருந்தாலும் டவுட்டு
வந்தா கிளியர் பண்ணிக்கனும்ல சரி பக்கத்துல யார்கிட்ட கேக்கலாம்னு பாத்தா
நம்மள கண்டாவே அவனவன் தெறிச்சி ஓடறான். ஆன்லைன்ல யாரு இருந்தாலும்
கேட்டு விடலாம்னு போய் கேட்டேன். முதல்ல சிக்கினது நம்ம ராயலு.

தம்பி: ஏம்பா ராயலு அழகுன்னு எதை நீ நினைக்கற?

ராயல்: என்னோட புரொபைல் போய் பாரு அங்க ஒரு போட்டோ இருக்கு அதுதான்
அழகுன்னு நான் நினைக்கறேன்.

அங்க போய் பாத்தா அந்தாளு போட்டோவ போட்டு வச்சிருக்காரு. ரொம்ப
தலக்கனம் பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு. கோபியையும் வெட்டியையும்
கேட்டா என்னைய நம்பி பதில சொல்ல மாட்டேங்கறாங்க மாறா நாம ஒரு கேள்வி
கேட்டதுக்கு திருப்பி ஒம்பது கேள்வி கேட்டு நம்மள சாகடிக்கறாங்க.சரி நிறைய
அனுபவம் இருக்கற பெரியவர கேட்டா சரியா சொல்லுவாருன்னு நம்ம கொத்தனாரை
அணுகினேன்.

தம்பி: கொத்ஸ் ஒரு டவுட்டு

கொத்ஸ்: சொல்லுப்பா...

தம்பி: அழகுன்னு எதை சொல்றாங்க?

கொத்ஸ்: எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில்
ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு
படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு.

தம்பி: இதுவூம் நல்லாதான் இருக்கு. ரெண்டு நாளா பாவனாதான் அழகுன்னு
தோணுதுங்க பாஸ், இத பத்தி என்ன நினைக்கறிங்க?

கொத்ஸ்: மன்னிக்கவும் யாரு பாவனா?

தம்பி: என்ன கொத்ஸ் இப்படி சொல்லிட்டிங்க. பாவனாவை தெரிலன்னு சொன்னா
இளைஞர்கள் கொந்தளிச்சி போயிடுவாங்க.

கொத்ஸ்: யப்பா தெரியாத விஷயத்தைத் தெரியலைன்னு சொன்னா அது தப்புன்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்க நினைக்கறது தப்புன்னு தெரியாமலேயே நினைக்கறதுதான் தப்பு
வாழ்க விசு! அவரோட சில வசனங்களும் அழகு.

தம்பி:(புரிலன்னு சொன்னா இன்னும் விளக்குவாரோ!!) அழகுக்கு நீங்க சொன்ன
விளக்கம் அழகு, நாளைக்கும் இதே மாதிரி அழகான கேள்வியோடு இந்த
அழகுதம்பி வருவான்.

கொத்ஸ்: தம்பி தம்பி நில்லுப்பா, ஒரு சந்தேகம்

தம்பி: சொல்லுங்க கொத்ஸ். :)

கொத்ஸ்: என்னிய வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே!!

தம்பி: இல்லிங்க எசமான் அப்படிலாம் செய்வேணா திடீர்னு ஒரு டவுட்டு
வந்துச்சி நான் மட்டும்தான் பாவனா அழகா இருகான்னு நினைக்கறேனா இல்ல
எல்லாருமான்னு அதான் கேட்டேன். தப்பா நினைக்காதிங்க!

கொத்ஸ்: என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க. எதையாவது சொல்லி
குழப்பி விட நான் தயாரா இருக்கேன். குழப்பினாதான் தெளிவு பிறக்கும். இந்த
அழகு மேட்டரில் இன்னும் ஒண்ணு சொல்லறேன் சில அழகு வந்து நிரந்தர
அழகு, சில அழகு சீசனல் அழகு சீசனல் அழகை வந்து நிரந்திர அழகா நினைச்சு
ஏமாறக் கூடாது புரியுதா?ஆனா இந்த இந்தி ரேகா இருக்கங்க பாருங்க அவங்களுக்கு
எம்புட்டு வயசு பாருங்க ஆனாலும் அவங்க அழகு நிரந்திர அழகு.

தம்பி: அழகை நடிகைகள் முகத்தில தேடக்கூடாதோனு தோணுது.

கொத்ஸ்: அங்கயும் இருக்கு அதை மிஸ் பண்ணக் கூடாது ஆனா அங்க நிரந்திர
அழகு கம்மி. அழகோட மெயின் விதியே அதான் It is a very personal thing.

தம்பி: இயற்கை எல்லார் கண்ணுக்கும் அழகா தெரியும்தானே?

கொத்ஸ்: எனக்கு பீச் பிடிக்கும், உங்களுக்கு மலை பிடிக்கும், இன்னொருத்ருக்குப்
பனி மிடிக்கும் இன்னும் ஒருத்தருக்கு மழை பிடிக்கும் ஆனா எல்லாருக்கும்
எல்லாமும் பிடிக்கணுமுன்னு ரூல் இருக்கா என்ன?

தம்பி: இதை ஒரு பதிவா போட போறேன், ஆன் தி ரெக்கார்டா எடுத்துக்கலாமா?

கொத்ஸ்: ஆகா! பெருசு செஞ்சா மாதிரி செய்யறீங்களே.சரி போடுங்க போடுங்க.

இதான் பிரச்சினை மக்களே. நிரந்தரமான அழகுன்னு ஒண்ணு இருக்கா? இல்ல
பழைய நினைவுகள நினைச்சி பாக்கும்போது ஒரு புன்னகை வருமே அது அழகா,
நடிகைகள் அழகா, இயற்கை அழகா, காதலி அழகா, ராத்திரிகள் அழகா, குழ்ந்தையின்
சிரிப்பு அழகா, இல்ல அழகுன்றது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கா?
இப்படின்னு குழம்பி போயிருக்கேன். உங்க கருத்தை சொல்லி தெளிவு படுத்துங்க.

தனிமைல இருக்கும்போது நாம பண்ணின ஏதோவொரு குறும்பை நினைச்சி சின்னதா
ஒரு சிரிப்பு வருமே அந்த மாதிரி இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க சொல்லுங்க.