எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, June 26, 2006

கனவுகளைப்பற்றி...

கனவுகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கருத்து சொல்றங்கனு வார இதழ் ஒன்றின்
கட்டுரை படித்ததால் இந்த பதிவு.


நாம் காணும் கனவுகள் சிலமுறை சந்தோஷத்தை தந்தாலும் பலமுறை வீணான குழப்பங்களையே தருவது போல தோன்றூம் காரணம் நம்மில் உலவி வரும் கனவுகள் பற்றிய மூடநம்பிக்கைகள்.காலையில் கண் விழித்ததும் இரவு நான் கண்ட கனவுகளை நினைவுபடுத்த முயன்றிருக்கிறேன் கடைசியில் தோல்விதான் மிஞ்சும். சில சமயம் நினைவுபடுத்துகையில் பாதி கனவுவரை நினைவில் வந்து திடீரென்று மறைந்து போகும் பிறகு எதைப்பற்றி கனவுகண்டோம் என்று எப்படி முயற்சித்தாலும் ஞாபகத்திற்கு வரவே வராது. சில கனவுகள் பயங்கரமான அனுபவத்தை தரும் அது இரண்டு மூன்று நாட்கள் கூட மறையாத கனவுகளும் காலத்திற்கும் மறக்கமுடியாத கனவுகளும் உண்டு. என்னை பொறுத்த தூங்க போகும்முன் என்ன நினைக்கிறோமோ அதுதான் பெரும்பாலும் கனவில் அதனால் புத்தகங்களை படித்துக்கொண்டே உறங்கி விட்டால் வீணான கனவுகள் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. முக்கியமாக பேய் படம் அடிதடி சண்டை படம் பாத்துட்டு தூங்க போனால் கண்டிப்பா எதாவது கெட்ட
கனவு வந்து தொல்லை கொடுக்கறதுனால இப்போ இரவில் படமே பாக்கரது இல்லை.

சரி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்க பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர் ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

கனவுகளுகு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, ஆனால், விஞ்ஞான
ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டிவிடபடுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான் தோன்றி தனமாக தோன்றூம் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றி கூறினர். ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்த
பிரச்சினையை பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு
கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அது உங்களுக்கு ஏதொ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டுபிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே
நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது. தையல் இயந்திரம் கண்டுபிடிக்கும் போது, பல தவறுகள் செய்தபடி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்கு சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்து பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளை தெளிவுபடுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.


இப்படி போகிறது கனவுகளின் ஆராய்ச்சி.


பெரும்பாலும் எனக்கு கனவில் நடந்தது ஞாபகத்தில் இல்லையென்றாலும் ஒரு சில கனவுகள் இன்னமும் என்னால் மறக்கவே முடியாது. அவற்றுள் ஒன்றுதான் என் அண்ணனை நானே அருவாளால் வெட்டுவது போல வந்த கனவு. அன்னிக்கு திருப்பச்சி மாதிரி எதாவது படம் பாத்து இருப்பேன்னு நினைக்கிறேன்.

என்னதான் இருந்தாலும் கனவுலகம் என்பது சுவாரசியமான ஒன்றுதான்.

Monday, June 19, 2006

ஜுஜுபி மேட்டர்

என்னத்த சொல்றது. ஏதோ நாமளும் போட்டியில கலந்துக்கலாம்னு சிறுகதை (நிசமாதாங்க) எழுதி போட்டு வச்சேன். சரி இதுக்கு வரும் பின்னூட்டம் மற்றும் வசவுகளை வச்சி அடுத்த விஷப்பரிட்சையில இறங்கலாமா வேணாமானு முடிவு பண்ணிட்டுதான் எழுதினேன். எழுதி முடிச்சுபதிச்சும் பார்த்த பிறகுதான் தெரிஞ்சது பின்னூட்டம் இட தேவையான சுட்டி இருக்க வேண்டிய இடத்தில ஒண்ணுமே இல்ல. என்னடா இது வம்பா போச்சுனு கூடுமானவரைக்கும் முயற்சி பண்ணி பாத்துட்டு கடைசில இதுக்கு மேல நோண்டினா எங்க வலையே காணாம போய்டுமோ என்ற பயத்தில அப்படியே விட்டுடேன்.

யார்கிட்ட போய் கேக்கறது எப்படி கேக்கறது. என்னை போல புதுசா வலைப்பதிய வந்தவங்களுக்கு யாராச்சும் நம்மள படிக்கறாங்களா இல்லையானு தெரிஞ்சிக்கறதே பின்னூட்டத்தை வச்சிதான். கொஞ்சம் மனசை தேத்திகிட்டு நம்ம சாத்தான் கிட்ட கேட்டேன் தெரியலை தம்பினு சொல்லிட்டார். சரி நமக்கு நாமே திட்டதிலதான் முடியும்னு தோணவே பொறுமையா உக்காந்து தேடினேன் பின்ன சிக்கிடுச்சி.என்னடானு பாத்தா ஜுஜுபி மேட்டர். பப்ளிஷ் பண்ற இடத்திலயே பின்னூட்டம் தேவையா தேவையில்லையா என்ற ஆப்ஷன் இருக்கும் அது நோ என்று இருந்ததை யெஸ் என்று மாத்தின உடன் பிரச்சினை தீர்ந்தது.

இதுக்கெல்லாம் ஒரு பதிவானு நீங்க மனசுல நினைக்கறது தெரியுது. மத்தவங்க (புதியவர்கள்) இதனால பாதிக்கப்பட்டிருந்தா சுலபமா பிரச்சினை தீர்த்துக்கலாமே என்ற நல்ல எண்ணம்தாங்க.

Saturday, June 17, 2006

கொப்பரைத்தாத்தா - சிறுகதை


மனோ சாதாரணா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் படிக்க வைப்பதிலும் இன்னபிற விஷயங்களிலும் அவனது அப்பா எந்த குறையும் வைக்கவில்லை. ஏனெனில் அந்த குடும்பத்தில் கல்லூரி வரை சென்று படிக்கும் ஒரே பையன் என்பதால். மின்சாரவாரியத்தில் கணக்கெழுதும் அப்பா, கல்யாணமான் அக்கா, காத்திருக்கும் அண்ணன், இன்னும் பள்ளிய்றுதியில் இருக்கும் தம்பி என்று சற்றே பெரிய குடும்பம்தான் என்றாலும் அப்பாவின் மாதவருமானம் போதுமானதாகவே இருந்தது. எல்லாம் அம்மாவின் கச்சிதமான பட்ஜெட்டில். பற்றாக்குறையாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் சரி செய்து நிர்வாகத்தை சீராக வைத்துகொள்வாள்.

சக்திக்கும் மீறிய கல்லுரியில்தான் படிக்க வைத்தார் அப்பா. செமஸ்டர் பீஸ், தேர்வுக்கட்டணம்னு எப்படி எப்போது கேட்டாலும் கொடுத்து விடுவார். ஆனால் அந்த தொகயை புறட்டுவதற்கு எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்பதை அவர் கையில் இருந்து வாங்கும்போது அவர் கண்களில் பார்ப்பேன். இருபது வருடங்களாய் தினமும் அலுவலகக்திற்கு சைக்கிளில் சென்று வந்தே அவரது கால்கள் தேய்ந்திருக்கும். சமீபமாகத்தான் லோன் போட்டு ஒரு பெரிய வண்டி வாங்கினார். அதற்கு முன் எங்கு சென்றாலும் சைக்கிள்தான். அவரது கல்யாண சீராக வந்த சைக்கிள் என்பதால் அதை பத்திரமாகவே பாதுகாத்து வைத்திருந்தார். அதற்கு செலவு செய்த காசிற்கு பத்து சைக்கிள் வாங்கி இருக்கலாம்னு அம்மா வேடிக்கையாக சொல்வாள்.

பெரும்பாலான ஞாயிற்றுகிழமை காலைபொழுதினை சைக்கிளை துடைப்பதிலும் எண்ணை விடுவதுமாக செலவிடுவார். பைக் வாங்கியதால் அதற்கு சற்று ஓய்வு ஆனால் அப்பாவுகில்லை.

0

இன்னும் பத்து நிமிஷந்தாண்டா இருக்கு சீக்கிரம் கிளம்புடா மனோ என்று எழுப்பினான் செந்தில். அவசர அவசரமா பேருக்கு ஏதோ அள்ளி வாய்ல போட்டுட்டு மூலையில் ஸ்னேகா சிரித்த முகத்துடன் இருந்த ஒரு நோட்டினை எடுத்துகிட்டு கிளம்பினோம். சக மச்சிகளின் வணக்கங்களை ஏற்று திருப்பியபடியே செல்லும்போது பயங்கரமான சத்ததுடன் பைக் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது. மச்சி இந்த காக்கா நாரயணன் கொஞ்சம் ஒவராவெ படம் காட்ராண்டா. பொண்ணுங்க முன்னாடி பைக்கை வச்சி பிஸ்து காமிக்கறது, கிட்டக்க வரும்போது வேகத்தை கூட்டுறதுனு இவண் அலப்பறை தாங்க முடியலை ஏதாவது செஞ்சே ஆகணும்டானு செந்தில் சொன்னான்

விட்றா அவன் கிடக்குறான். வகுப்புக்கு டைம் ஆச்சு என்றபடியே நடையைக்கட்டினான் மனோ. ஆனால் செந்திலுக்கு கொஞ்சம் ஆத்திராமகவே இருந்தது. ஏன்னா இவண் ஆள் லதாகிட்ட வண்டில உக்காந்துகிட்டே கடலை போட்டதை பாத்துட்டான் அதான் காரணம்.
உணவு இடைவேளை வந்தது கேட்டான் செந்தில். டேய் மனோ உன் வீட்ல பைக் இருக்காடா?
ஏன் கேக்குற. இருக்கு

சரி நான் சொல்லுறதை கேளு அடுத்தவாரம் ஊர்ல இருந்து வரும்போது வண்டியை எடுத்துகிட்டு வாடா மாப்ளே. வந்ததும் அந்த காக்கா நாராயணன் முன்னாடி போய் நாம் பிஸ்து காமிச்சாதான் அவன் அடங்குவான். என்ன சொல்றே நீ?
வேணாம்டா மச்சி எங்கப்பாவே இப்ப கொஞ்ச நாளாதான் சொகுசா போய்ட்டு வர்றார் அதை கெடுக்க வேணாம்டா செந்தில்.

நான் என்ன உன்னை நிரந்தரமா இங்கயே எடுத்துட்டு வரசொல்ரேணா, சும்ம ஒரு வாரம்தாண்டா மாப்ளே. அப்புறம் கொண்டுபோய் விட்டுடலாம்.

நாளைக்கு காலேஜ் முடிஞ்சா நாலு நாள் தொடர்ந்தாப்ல லீவ் வருது திரும்ப வரும்போது எடுத்துட்டு வந்திடு.

ஏன் இவ்ளோ பேசறியே உன் வீட்ல எதோ வண்டி இருக்குனு சொன்னியே அதை எடுத்கிட்டு வாயேன் என்றேன்.

நான் மட்டும் அதை எடுத்திட்டு வந்தேன் காலேஜே என்னை பாத்து சிரிப்பா சிரிச்சிடும்.
ஏண்டா அப்படி சொல்றே?

சின்னவீடு படத்திலா பாக்யராஜ் வச்சிருப்பாரே அந்த வண்டி மாதிரிதாண்டா அது. பஜாஜ்ல போட்ட முதல் வண்டி அதுவாதான் இருக்கும். அதனாலதான் உன்னை எடுத்திட்டு வர சொல்றேன்.

என்னடா யோசிக்கிற இப்படி யோசிச்சா நாளைக்கு ஆனந்திகிட்டயும் பல்லை காமிச்சிட்டு நிப்பான் அந்த காக்கா.

ஆனந்திக்கும் எனக்கும் இருப்பது நட்பு மட்டுமே தான். இருந்தாலும். செந்தில் இப்படி சொன்னதும் உள்ளூர கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

சரிடா மச்சி ட்ரை பண்றேன்னு மேலுக்கு சொன்னாலும் உள்ள முடிவு பண்ணிட்டேன் எப்படியாவது தள்ளிட்டு வந்திடணும்னு.

பெரம்பலூர் பஸ் ஸ்டாண்ட். மச்சி மறந்திடாத பெட்ரோலைப்பத்தி கவலைப்படாத பாத்துக்கலாம்னு சொல்லிகிட்டே பஸ்ல ஏறினான் செந்தில்.

என் ஊருக்கான பஸ்ஸை தேடி ஜன்னலோர சீட் பிடித்து உட்கார்ந்ததும் கொஞ்ச நேரம் வெளியில் வெறித்து விட்டு விகடனை புரட்டினேன். நாலாவது பக்கம் புறட்டும்போதே தூக்கம் சொக்க கண்ணை சற்று மூடினேன்.

நாலு மணி நேரப்பயணம். தம்பி இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சினு எழுப்பும்வரை.கண்ணை கசக்கிகொண்டே அழுக்குபையோடு இறங்கினேன். இரண்டு வாரத்து அழுக்கு துணிகள் பையினுள் துருத்திக்கொண்டிருந்தது. விடுதியில் துவைக்க சோம்பேறித்தனம். அப்படியே வீட்டுக்கு எடுத்திட்டு வந்தா அம்ம சலவை செஞ்சிடுவாங்க என்ற நினைப்புதான்.

சரியாக ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். அதுக்குள்ள யாராவது வந்தா, வண்டில போனா தொத்திகிட்டே போய்டலாம்னு மனசு கணக்கு போட்டுகிட்டே கண்ணு தேடுது. அப்படி யாரும் வர்ற மாதிரி தெரியலை. பையை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு நடந்தேன்.
தூரத்தில் யாரோ சைக்கிளை ரிப்பேர் செய்ர மாதிரி உக்காந்து இருக்கவே யார்னு பார்த்தேன்.
கொப்பரை தாத்தாதான் அவரோட சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். அறுபதை கடந்த ஒற்றை நாடி சரீரமாக இருந்தாலும் நான் உழைச்சிதான் சாப்பிடுவேன். ஓய்வு எடுக்க வேண்டிய வயசு எனக்கு இன்னும் வரலை என்பதை அவரை பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடலாம். அதனாலே அவர் மீது எனக்கு தனி மரியாதை. ஊர் ஊரா போய் ஜோசியம் பாக்குறதுதான் அவர் தொழில். என்றாலும் நான் அவரிடம் ஜோசியம் பார்த்ததில்லை. அவரும் வற்புறுத்தியதில்லை. எந்த ஊர் போனாலும் சைக்கிள் தான். வழில எங்காவது பழுதாச்சினா சரி பண்றதுக்கு சாமானை கேரியர்ல கட்டி வச்சிருப்பார். அன்றைக்கும் அப்படிதான் பஞ்சர் போல. எல்லம் முடிஞ்சி எழுந்திருக்குபோதுதான் நானும் போனென்.

என்ன கொப்பர தாத்தா எப்படி இருக்கீங்க்? தொழில் எப்படி போகுது என்றபடியே அருகில் சென்றேன். நள்ளிரவு நேரத்திலும் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
எங்க தம்பி உங்க மாதிரி ஆளுங்க எல்லாம் இப்போ ஜோசியத்தை நம்புறதில்லை. நம்புறவங்களையும் கெடுக்கறிங்க அப்புறம் எப்படி தொழில் நல்லா போகும். எனக்கு அவரிடம் பிடித்ததே இந்த வயதிலும் அவரின் அசாத்திய உழைப்புதான். அவரோட நிஜப்பெயர் தெரியலனாலும் அவரோட பேரனின் பட்டப்பெயர் கொப்பரை, அதனால அவரை கொப்பரைதாத்தா என்றே அழைப்பேன்.

இரண்டு பேரும் பேசிகொண்டே நடந்து சென்றோம். வழியில்தான் அவர் வீடு. சரி நான் வரேன் தம்பி என்று சொல்லி அவர் விடைபெறும்முன் அவரின் கிளியை ஆசையாக இன்னொருமுறை தடவிக்கொடுத்தேன்.

அம்மா எனக்காகவே கண் விழித்திருந்தாள். வழக்கமான விசாரிப்போட நாளிதழில் கண்ணை பதிய விட்டார் அப்பா. முகம் கழுவிட்டு சாப்பிடவா என்று அம்மா துண்டை நீட்டினாள். இப்பவே சொல்லிடலாமா இல்லை நாளைக்கு பொறுமையா சொல்லிக்கலாமா என்ற யோசனையிலே உணவை முடித்தேன்.

மணி ஒம்பது ஆகுது இன்னும் என்ன தூங்கறான் எழுப்பு அவனை என்று அப்பா சொன்னது தெளிவாகவே கேட்டது. விடுங்க வீட்டுக்கு வந்தாதான் தூங்குறான் தூங்கிட்டு போகட்டும். பல இக்கட்டான சமயங்களில் இது போல வாதாடி என்னை காத்திடுவாள்.

வண்டியை நல்லா துடைச்சிட்டு அழுக்கு துணியை சன்னலில் சொருகிவிட்டு. ஒரு திருப்தியோடு சீட்டில் அமர்ந்தார். முதல் உதையிலே ஸ்டார்ட் பண்ணிட்டாரே என்ற ஆச்சரியத்தோட காபிகுடிச்சிகிட்டே திண்ணைல அமர்ந்தேன். எப்பவும் அப்பா அலுவலகம் செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்புவாள் அம்மா.அப்படியே என்னருகிள் வந்து என் தலை கோதினாள். நம்ம கோவிந்தனை வரச்சொல்லி இருக்கேன் முடியை வெட்டிக்க என்றபடியே காலி டம்ளரை எடுத்து கொண்டு சமயலறை சென்றவளை பின் தொடர்ந்தேன்.
அம்மா இந்த முறை நான் காலேஜ் போகும்போது வண்டி எடுத்துட்டு போறேம்மா என்று நைசாக அடி போட்டேன். உனக்கு எதுக்குடா வண்டி வேணும் இப்போ ஹாஸ்டல்ல தான இருக்குற பக்கத்திலயே காலேஜும் இருக்கு அப்புறம் வண்டி ஏன்? அதுவும் இல்லாம வேகமா போற ஆளு நீ ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுனா என்ன செய்வே. இல்லமா நான் மெதுவாவே போறேன் போய்ட்டு அடுத்த வாரமே திரும்பி வந்துடுறேன். நீதான் எப்படியாச்சும் அப்பாகிட்ட சொல்லி வாங்கி தரணும் என்றதும் யோசித்தாள். இது போதும் எப்படியும் க்ரீன் சிக்னல் கிடைச்சுடும்.

மதியம் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டார் அப்பா. சாப்பிட்டு கொண்டிருக்கும்போது மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தாள். இப்ப எதுக்கு அவனுக்கு வண்டி வேனுமாம் அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பஸ்ஸுலயே போகட்டும் அதான் நல்லது.
அங்கிருந்து நான் விருட்டென்று கோபமாக வெளியேறியதுமே புரிந்துகொண்டுவிட்டார். இருந்தாலும் எதையும் என்னிடம் பேசவில்லை.

என் கோபம் எல்லாருக்கும் தெரிய வேண்டி யாரிடமும் பேசாமல் உம் என்று முகத்தை வைத்துகொண்டு இருந்தேன். இரவு கூட பேருக்கு சாபிட்டுவிட்டு படுக்க போனேன். நாளெல்லாம் தூங்கியதால் உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.

அம்மாவும் அப்பாவும் வெளித்திண்ணையில் அமர்ந்து பேசிகொண்டிருப்பது தெளிவாகவே கேட்டது. பெரும்பாலான விஷயங்களை அனைவரும் உறங்கிய பிறகே பேசுவார்கள். தோளுக்கு மேலே வளர்ந்து விட்ட என்னிடம் வீட்டு பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

ஒரு வாரந்தானேங்க போனா போகட்டும் பையன் ஆசைப்படுறானே என்று அம்மா சொன்னாள். அதுக்கில்ல வசந்தா இவண் கண்ணு மண்ணு தெரியாத வேகத்தில போய் ஏதாச்சும் ஆச்சுனா நாம் என்ன பண்றது. நான் வேற ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லி வச்சிருக்கேன். என்கிட்ட பொருமையா போய் வறேன்னு சொல்லி இருக்காங்க.
சரி சரி உன் இஷ்டம்.

அனுமதி கிடைத்த சந்தோஷத்திலே எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
இந்தா வசந்தா இதுல ஆயிரம் ரூபாய் இருக்கு மெஸ்பில் போக மீதிய செலவுக்கு வச்சிக்க சொல்லு என்றபடியே அம்மாவிடம் சாவியை கொடுத்தார். பத்திரமா போய்ட்டு வா என்று வழக்கம்போல சொன்னாலும் இன்று ஏதொ ஒன்று அவர் முகத்தில் வித்யாசம் தென்படுவதை உணரமுடிந்தது.

அம்மாவின் சற்று கூடுதலான வழியனுப்பும் படலம் முடியும்போது கையில் முந்நூறு ரூபாயை திணித்தாள். கிளம்பிவிட்டேன்.

சரியாக இரண்டு மணி நேரத்தில் காலேஜில் இருந்தேன். ஆனாலும் கிளம்பும்போதே தாமதமாக கிளம்பியதால் முதல் வகுப்பு பாதி முடிந்திருந்தது. நேராக விடுதிக்குள் வண்டியை செலுத்தினேன். அறையில் எனக்காக செந்தில் காத்திருந்தான். ஏண்டா க்ளாஸ் போகாம இங்க உக்காந்து இருக்க என்றபடியே அவன் மேல் சாவியை வீசினேன்.

சொன்னபடியே வந்துட்ட மச்சி சரி சரி லேட் ஆனது ஆச்சு அப்படியே சினிமாக்கு போலாம் மதியம் வசந்தம்ல ஒரு பிடி பிடிச்சிட்டு தீபக் ரூம்ல ஒரு குட்டிதூக்கத்தை போட்டுட்டு எந்திருச்சோம்னா நாலரை மணிக்கு சாரதா காலேஜ் விடுற நேரத்தில பிகர்களை பாத்துட்டு சாயந்திரம் திரும்பரதுக்கு சரியா இருக்கும்னு கட கடனு சொல்றான். எனக்காக கத்திருந்த நேரத்தில இதைத்தான் யோசிச்சிடு இருந்துருப்பான்னு என்னால யூகிக்க முடிஞ்சாலும் அதை வெளிக்காட்டிக்காம அவனுடன் கிளம்பினேன்.

எந்த படம் போகலாம்னு ஒரே குழப்பம். மாப்ளே ராஜால தீனா போட்டுருக்கான் வேற எல்லாத்திலயும் மொக்க படமாதான் ஓடுது. சரி அதுக்கே போகலாம் என்று சொல்லி வேகத்தை கூட்டினேன்.

படம் முடிந்து வெளிவரும்போது கொஞ்சம் முறுக்கோடுதுதான் வந்தேன். படம் பாத்த எபெக்ட் கொஞ்ச நேரமாவது வேணாமா?. தியேட்டர் வாசலின் வேப்ப மரத்தடியில் அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டியவர்கள் குந்த வைத்து உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை ஏளனமாக பார்த்தபடியே என் கண்கள் வண்டியை தேடியது.

அப்போதுதான் ஏதெச்சையாக பார்த்தேன். நம்பவே முடியலை இருந்தாலும் அவர் பக்கத்தில் துருப்பிடித்த காற்றடிக்கும் பம்ப் சொருகியபடி அவரின் சைக்கிள் நின்று கொண்டிருந்தது நம்ப வைத்தது. எப்படி? எப்படியும் நூற்றியிருபது கிலோ மீட்டர் இருக்கும் நாம பெரிய வண்டியில வருவதற்கே மலைப்பாகவும் முதுகு வலியும் சேர்ந்து அழுத்தியதே என்ற ஆச்சரியத்தோடு கிளியை சீட்டு எடுத்து போட சொல்லும் கொப்பரைத்தாத்தாவை பார்த்தேன். வழக்கமாக அவரை பார்த்தவுடன் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு சென்று பெசும் நான் மவுனமாக நின்றிருந்தேன். எனக்குள் ஒரு குற்ற உணர்வு மேலோங்குவதை நன்றாகவே உணரமுடிந்தது. அதுவரை முறுக்கோடு காலரை உயர்த்திவிட்டிருந்ததை மிக கேவலமாக எண்ணினேன். நொடிப்பொழுதில் மாறிவிட்டிருந்தது எல்லாம்.

அறுபது வயசுக்கிழவன் இவ்வளவு தூரம் வந்து உழைக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தபோதிலும் உழைக்கிறார். இருபது வயசுப்பையன் பந்தாவுக்காக வண்டியில பறக்கிறோமே என்ற எண்ணம் ஓடியது. அதேநேரம் நம் அப்பா இந்த வெய்யிலில் அலுவலகத்திற்கு சென்று வர மறுபடி சைக்கிளுக்கே திரும்ப வைத்ததை நினைத்து வேதனைப்பட்டேன். இப்படி பலவாறாக என் சிந்தனைகளை மாற்றிய கொப்பரை தாத்தாவை சரியான தருணத்தில் வழிகாட்டிய கடவுள் போலவே பார்த்தேன்.

தெளிந்த ஒரு பெருமூச்சோடு இழுத்துகொண்டிருந்த சிகரெட்டை கீழிட்டு அணைத்தேன்.
ஏண்டா மச்சி ஒரு மாதிரியா இருக்க படம் பிடிக்கலயா என்றபடி தோளை உரசி நின்ற செந்திலை பார்த்து தீர்க்கமாக சொன்னேன்.

இப்பவே நான் வீட்டுக்கு போகணும் மாப்ளே என்ற என்னை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தான்.


கதிர்

Wednesday, June 07, 2006

என்னை பாதித்த ஒரு சம்பவம்

ஒரு சாதாரண விஷயம் என் மனதை எப்படி பாதித்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதை ஒரு விபத்து என்று சொல்ல முடியாது, திட்டமிட்ட கொலை என்றும் சொல்ல முடியாது. விதி என்று கூட வைத்து கொள்ளலாம். எந்த ஒரு உயிரின் மீதும் அதிக நேசம் கொள்ளும்போது அதனை பிரிந்தால் ஏற்படும் வலி நெஞ்சை விட்டு விலகாது. அதை சொல்லுவதுதான் இந்த சம்பவம். மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றலாம் ஆனால் இது என்னை அறியச்செய்தது. நீ இத்தனை கேவலமானவனா இல்லை இத்தனை கோபக்காரனா என்பதை தெரியப்படுத்தியது.

ஒவ்வொரு மனிதருக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒரு செல்லப்பிராணி மீது அதிக பற்றுதல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் பூனை என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த பெண்ணிற்கும் பூனை பிடிக்கும் எனபதாலோ என்னவோ தெரியவில்லை. என் வீட்டில் பொதுவாகவே எந்த ஒரு செல்ல பிராணிக்கும் இடமில்லை. ஏன் என்றால் அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மா ஒரு நாய் வளர்க்கலாம்மா அப்படினு சொன்னால் போடா நாய் வளக்கரானாம் நாய் ஒழுங்கா படிக்கிற வேலைய பாருடா என்பார். எல்லார் வீடுகளிலும் நடக்கும் கதைதான் இது என்றாலும் சிலர் வீட்டில் அடம்பிடித்து வாங்கி வந்து வளர்ப்பார்கள் ஆனால் என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை அப்படியே மறந்து விட்டேன். ஆனால் விதி எலியாக மாறி வந்து வீட்டிற்கு தொல்லை கொடுத்தது.

வேறு வழியில்லாமல் வீட்டில் பூனை வளர்ப்பது பற்றி ஒரு சின்ன ஆலோசனை கூட்டம் போட்டு முடிவெடுத்து விட்டார்கள். நான் சொன்னென், அம்மா புதுசா ஒரு மருந்து கண்டுபிடிசிருக்காங்க அதை வாங்கி வந்து எலிக்கு வச்சோம்னா எலி அதை சாப்பிட்டுட்டு எலி வெளில போய் செத்துடுமாம் என்றேன். அதைதாண்டா பக்கத்து வீட்டுலயும் வச்சாங்க எலி செத்துச்சுதான் ஆனால் அது வீட்டுகுள்ளயே ஏதோ ஒரு இண்டு இடுக்குல போய் செத்து போய் வீடே நாறிபோச்சு என்றாள். அம்மா இவண் சொல்றதெல்லாம் கேக்காதம்மா, நாளைக்கு எங்கயாவது ஒரு பூனையை தேடிப்பிடிச்சி எடுத்துகிட்டு வரேன் என்று குரல் கொடுத்தான் என் தம்பி.
ஆக ஒருமனதா முடிவு செஞ்சாச்சி பூனை வளர்க்கலாம் என்று. அப்போது நான் கேட்டேன் அம்மாவிடம் ஏம்மா உனக்கு பூனை பிடிக்கலனு அதுக்கு அம்மா சொன்ன் ரெண்டு விளக்கம் தந்தாங்க ஒன்று அதோட திருட்டுபுத்தி, ரெண்டாவது அது எங்கயாவது ஒரு மறைவான இடமா பாத்துதான் முக்கியமா அரிசி பானக்குள்ளயோ இல்ல துணி வைக்கிற இடத்திலதான் பேண்டு வைக்கும். இரண்டாவது, ஒரு வீட்டின் எஜமானன் தூங்கிய பிறகு தூங்குமாம் நாய், ஆனால் பூனை எப்போது எல்லாரும் தூங்குவார்கள் என்று காத்திருந்து சமையலறையில் நுழைந்து பாலை திருடி குடிக்கும். ஏம்மா நாய்க்கு ஒரு தட்டு வைக்கிற மாதிரி அதுக்கும் ஒரு தாடு வச்சிட்டா அது ஏன் திருடி குடிக்குது, நீ எப்படி செஞ்சாலும் அதோட குணத்தை மாற்றவே முடியாது என்றாள் அம்மா.

மறுநாளே ஒரு பூனை குட்டியோட வந்துட்டான் என் தம்பி. வெள்ளையும் மஞ்சலும் கலந்த ஒரு பொன்னிறமான கலர். பச்சை கலர் கண்கள். கூரான பற்களுடன் கூடிய கூர்மையான காதுகள். அம்மாவிடம் காட்டினான் ஒரு தணிக்கை குழு அதிகாரியின் பார்வையோடு அதன் வாலை தூக்கி பார்த்தாள் இதை எங்க பிடிச்சிட்டு வந்தியோ அங்கயே கொண்டு போய் விட்டுடு, ஏம்மா என்றான் தம்பி ஏன்னா இது பொட்டை பூனைடா இது நாலு குட்டி போடும் இதெல்லாம் வேலைக்காகாது விட்டுடுனா விட்டுடு. இவ்ளோ பெரிய வீட்ல சின்ன பூனைக்கா இடமில்லைனு அப்பா சொன்னதால பிரச்சினை அதோட முடிஞ்சது.

எல்லாவற்றையும் மிரண்ட படி பார்த்த பார்த்துகொண்டிருந்தது. அதை மெதுவா தூக்கி பார்த்தேன் ரொம்ப பயத்தோட இருந்தது கொஞம் பயத்தை தெளிவிக்க தடவிக்குடுத்தபடியே நானும் உறங்கி போனேன். வழக்கமா வீட்ல காலை மாலை இருவேலையும் டீ போடுவாங்க அப்போ எல்லாம் அதற்கும் கொஞ்சம் குடுப்பேன் இதே மாதிரி எதுவானாலும் அதுக்கும் கொஞ்சம் குடுப்பேன், இப்படியே அதுக்கு குடுத்து பழக்கினா அது எலிய போய் பிடிக்காது எலிதான் அதை பிடிச்சிட்டு போகபோகுது என்றாள் அம்மா.

வந்த கொஞ்ச நாள்ளயே எலியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்தது நல்ல பூனைதான் என்றாள் அம்மா. எனக்கு என்னவோ அது எலிதின்றது பிடிக்கவே இல்லை. இத்தனை அழகும் நளினமும் மென்மையும் கொண்ட பூனை ஒரு கொலை வெறியோட விரட்டி சென்று அதை வாயில கவ்விகிட்டு வாசல் வழியா வெளியேறும்போது அந்த அழகு காணாமல் போகும். அந்த சமயத்தில என்னை யாரும் தடுக்க வேணாம் என்கிற மாதிரி அதோட கண்களில் ஒரு எச்சரிக்கை கலந்திருக்கும்.

என்மீதுதான் அது ரொம்ப பாசம் கொன்டிருப்பதாக எல்லாரும் சொல்வார்கள். உண்மைதானே யார்மீதும் உண்மையான பாசம் காட்டும்போதும் அதே போல தான் நம்மிடமும் பழகுவார்கள். நான் கல்லூரி விட்டு வரும்போது எனக்காகவே காத்திருந்தது போல ஓடி வந்து என் காலை சுற்றும். அதன் வால் என் காலை சுற்றி ஒரு பாம்பை போல படர்ந்து செல்வதை மிகவும் ரசிப்பேன். தாயை பற்றி தந்தையிடம் புகார் சொல்ல அழுது கொண்டே ஓடி வரும் குழந்தை போல இருக்கும் அதன் கண்கலில் என்னை 8 மணி நேரம் பிரிந்திருந்த சோகம் மின்னி மறையும். நானும் அதற்கு பதில் கூறுவது போல ஆதரவாக அதன் முதுகில் தடவி கொடுப்பேன். வெளியில் கிளம்ப தயாரானதும் போகாதே என்பது போல அது பார்க்கும். அதற்காகவே சில நாட்கள் வெளியில் செல்லாமல் இருந்ததுண்டு.

அன்று கல்லூரியில் ஒரு சின்ன பிரச்சினை. வாத்தியாருக்கும் எனக்கும்தான். அதை மனதில் நினைத்து கொண்டே வந்ததால் கோபம் தணியவேயில்லை. விலங்குகளுக்கு மட்டும் மனிதர்களின் மனம் அறியும் திறமை இருந்திருந்தால் அன்று என் பூனை மெல்ல பின் வாங்கி போயிருக்கும் நம் எஜமானன் சற்று கோபமாயிருக்கிறான் என்று. ஆனால் தெரியாதே. வழக்கம்போல ஓடி வந்து என் காலை உரசி நடந்தது. வாடிக்கையான என் புன்னகை அதன் மீது படியவில்லையே என்ற காரணத்தினால் அது மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிகொண்டது. மெல்ல நான் விலகினாலும் அது விடுவதாக இல்லை. தன்னை புறக்கணிக்கிறான் என்பதை தாங்க முடியாத அது ஒரு வேகத்துடன் வந்து என் காலை அதன் கூரான நகத்தால் பிறாண்டியது.

ஏதோ ஒரு வேகத்துடன் அதை காலால் தள்ளி விட்டேன். சின்ன பூனைதானே அது எகிறி போய் சுவற்றில் அடித்து கீழே விழுந்தது. சட்டென நான் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை. நிதானிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அருகில் சென்று பார்த்தேன். தலை நேராக போய் சுவற்றில் மோதியிருந்தது, காதில் இருந்து ரத்தம் வழிவது தெரிந்தது, சுவற்றிலும் சிறிது தெரித்திருந்தது. கால்கள் வலிப்பு வந்ததை போல இழுத்ததுக்கொண்டே இருந்தது சற்று நேரத்தில் அதுவும் மெல்ல நின்றது. அந்த நேரத்தில் என்னில் ஏற்பட்ட மாற்றம் குற்ற உணர்வு அதற்கு முன் ஏற்பட்டதேயில்லை. ஒரு பாவமும் அறியாத சிறு பிராணியை. அதற்கு பின்பும் கூட. என் நேரம் யாரும் வீட்டில் இருக்கவில்லை. அதை அப்புறப்படுத்த மனமில்லாமல் வெறித்து பார்த்துகொண்டிருந்தேன். பழைய துணி ஒன்றை எடுத்து சுவற்றில் தெறித்திருந்த ரத்ததை துடைத்தேன். அதே துணியால் அள்ளி எடுத்து உடலை மறைத்து சுற்றினேன். யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் பாழடைந்த கிணற்றில் வீசினேன். யாருமே தேடவில்லை.

ரெண்டு மூணு நாள் கழிச்சி அம்மா கேட்டாங்க எங்கடா பூனையை காணும்னு தெரியலனு பொய் சொன்னேன். பூனையும் போச்சு எலியும் போச்சு என்று அம்மா நிம்மதி ஆனாங்க. நான் வேணா இன்னொரு குட்டி வாங்கிட்டு வரேன்னு சொன்னான் தம்பி. என்னையும் அறியாமல் வேகமா சொன்னேன் வேணாம் இன்னொரு பூனை வேணாம். எல்லாரும் ஆச்சரியமா பாக்கறாங்க என்னடா இது எந்த நேரமும் பூனையொட விளாடிகிட்டெ இருப்பான் இப்பொ வேணாம்னு சொல்றானே. என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். அந்த சம்பவத்திற்குப்பின் எந்த பூனையை பார்த்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சிதான் தோன்றுகிறது. சில நிகழ்வுகள் நம் நெஞ்சில் உறுத்தலாகவே தங்கி விடும் அது போலவே இது என் வாழ் நாளில் மறக்க முடியாத விஷயம். அன்று முதலே நான் யாரிடமும் கோபம் கொள்வதில்லை.


கதிர்

அன்னை

அன்னை


என்னில் உருவாகும் மாற்றங்களை அழகாக

உடனே கண்டறிவாள் என் பசியறிவாள் அதன்

அளவறிவாள் என் நடையில் என் பாவனையில்

வழக்கமான குறும்பு புன்னகை கூட பூக்காத என்

முகத்தை கேள்விக் குறியோடு பார்த்தாள்

நித்தமும் நித்திரை கொள்ளாமல் புறண்ட என்னை

பார்த்து புருவம் சுருக்கினாள் என்னையறிந்த தாய்க்கு

தாயையறியாத மகனில்லை நான் உரக்கச் சொன்னேன்

கண்டுவிட்டணம்மா அவளை!

கதிர்

வாசிப்பு

வாசிப்பு

வாசித்துக்கொண்டிருக்கும்போதே என் கவனம்

மெல்ல மெல்ல வெளியேறி செல்கிறது

என்னையறியாமல்

எங்கே விட்டோம் என தேடித் தொடர்கையிலும்

மீண்டும் தொடர்கிறது சிந்தையை ஒருமுகப்படுத்தி

செலுத்துகிறேன் திருமுகமாய் வந்து திருடுகிறாய்

இன்னமும் முற்றுப்பெறவில்லை என் வாசிப்பு..........

என் கல்லூரிக்காலத்தில் நான் அனுபவித்தது இது
எனக்குள்ளே ஓடிய வரிகளை இப்போது
பதியிலிட்டிருக்கிறேன்.

கதிர்

முதல் கவிதை

இது ஒரு சோதனை பதிவு தமிழ் யுனிகோட் எல்லாராலும் வாசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். ஆனாலும் இந்த வலையை ஒரு கவிதையோடு ஆரம்பிக்கிறேன்

முன் எப்போதுமில்லாமல் என் இதயம்
மிக வேகமாக படபடக்கிறது நீ என்னை
கடக்கும் போதெல்லாம்...

இந்த கவிதை உண்மையில் நான் உணர்ந்து அனுபவத்தில் எழுதிய கவிதை (இது கவிதையே இல்லை என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும் நான் இப்படித்தான் சொல்வேன்)

எந்த ஒரு இளைஞனுக்கும் இளமை பருவத்தில் காதல் வரும் அந்த கருமம் எனக்கும் வந்தது.(காதல் தொல்வி ஆச்சுன்னா கருமம்னு சொல்வாங்க இதே வெற்றின்னா ரொம்ப புனிதமானதுனு எழுதி இருப்பேனோ தெரியலை)

கதிர்
10.05.06