எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Friday, September 12, 2008

Jaane tu ya jaane na, Bashu


கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை
ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்
ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த
மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்
ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான்.

Jaane tu ya Jaane na



இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி
இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்
தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான
இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி
திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட
ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.
ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே
இல்லாமல் அதற்கே சென்றேன்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.
அதிதி என்ற அழகுப் பிசாசு
ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்
ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி
ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா
ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா
ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்
அதிதியின் ஓவியத்தம்பி
கவ் பாய் சகோதரர்கள்
"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்
கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு

ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்
கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக
சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்
ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க
ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்
ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே
அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்
கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்
ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்
இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.
அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.


நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை
அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை
காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்
மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.
அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.

ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்
தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.
ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்
மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது
இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே
சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.

நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.
சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை
கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.

படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்
வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்
அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக
அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.

பாஷு (bashu)


ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்
இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்
போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே
இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான
வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்
பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்
தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.

பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்
இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்
குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து
பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு
எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக
இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.
உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.
பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.

மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு
ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்
அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்
மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.

ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி
கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது
மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி
கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்
பரிவுகொள்கிறாள்.

அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு
வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்
சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி
எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.

கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து
எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்
ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது
போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக
விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான
கவிதை போன்ற காட்சி.

அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல
கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.
வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து
கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை
விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.
இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்
பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.

இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக
வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்
பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து
வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த
தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.

இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்
கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்
வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.
அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.

பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான
படைப்பாளி.

Tuesday, August 05, 2008

குசேலன், நாஞ்சில், Two Women

படம் பாத்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்தவர் சொன்னார். "எவ்வளவு
செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ போட்டுத்தள்ளிரணும்டா" என்று.
வேறு படத்தின் ஷோக்கள் திரையிட்டு நேரமானதாலும் குசேலன் மட்டும்தான் பார்க்க
முடியும் என்ற நிலை. கூட வந்திருந்த மலையாளத்து பையன் படம் முடிந்ததும்
காறி துப்பினாலும் துப்பி விடுவான் என்ற பயத்தினால் நான் அறைக்கே திரும்பிட
நினைத்திருந்தேன்.

பசுபதி வெயில் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இரண்டாவதாக
ஈ என்ற படத்தில் ஓரளவுக்கு நடித்திருப்பார் பிறகு மஜாவில் "ஸ்மார்ட் பாய்" என்று சொல்லும் இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியும். மற்ற
எல்லா படமும் குசேலன் மாதிரிதான்.

அரங்கில் நுழைந்தபோது எனக்கு முன்னரே நான்கு பேர் வந்துவிட்டிருந்தனர். பிறகு
எங்களைத்தவிர வேறு யாரும் வரவில்லை. இதற்கு முன்பு தொட்டி ஜெயா என்ற
படத்திற்கு நானும் என் நண்பனும் சென்றிருந்தபோது தியேட்டரில் ஒருவரும் இல்லை
எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் படத்தை ஓட்டினார்கள்.

வயதான காலத்தில் நயனின் இடைசுற்றி, உதடு வருடி, இடுப்பை ஆட்டி நடனம் ஆடும்
கோமாளித்தனமெல்லாம் சகிக்கவில்லை. பீவாசுவுக்கும் நடன இயக்குனருக்கும் மனித
வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை தருமளவுக்கு ரஜினியை கொடுமைபடுத்தி
இருக்கிறார்கள்.

இந்த வசனத்தை மம்முட்டி பேசுவதுபோல் படித்தால் அந்த கேரள நண்பன் சொன்னது
புரியும்.

"ரஜினின்ற மலைய நம்பி இந்த படத்த எடுக்கலடா நயந்தாராவோட ----- நம்பிதான்
எடுத்துருக்காங்க. ஏண்டா நல்ல நல்ல படத்த எல்லாம் இப்டி நாசம் பண்ணி வைக்கறிங்க"

எலேய் மொக்க படம்லாம் எப்படி எடுக்கறதுன்னு கத்து தர்றதும் ஒரு கலைதான் இத
போய் குத்தம் சொல்லக்கூடாது.

கேரள சினிமாலயே இப்பலாம் மொக்கைப்படம் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சி. அதிசயமா
வர்ற கதையுள்ள சினிமாவயும் நம்மாளுங்க கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி ரீமேக்
பண்ணி கெடுத்துடறாங்க.

கத பறயும் போள் "மாம்புள்ளிக் காவில் மகரந்த" பாட்டில் அந்த ஹீரோயின் இடுப்பு
நளினமாக ஆடி அற்புதமான கலை வடிவில் உள்ள பாடலை இங்கே பான்பராக்
வாயுடன் நடனமாடி கெடுத்துள்ளனர். நயன், ரஜினி க்ளோசப் காட்சிகளில் யாருக்கு
லிப்ஸ்டிக் அதிகம் என்று கண்டுபிடிப்பதில் பெரிய போட்டியே நடந்தது. திரையில்
ராமராஜனுக்கு அடுத்தபடியாக ரஜினி லிப்ஸ்டிக் கம் க்ளோசப் காட்சிகளில் ரசிகர்களை
அதிகம் கொடுமைப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்தான்.

பின்னிருக்கை நண்பர் சொன்னதுதான் எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ...
இங்க ஒருத்தர் சொல்லிருக்கறத பாருங்க.

சீனிவாசன் என்ற படைப்பாளிக்கு தமிழ்சினிமா செய்த மிகப்பெரும் அவமானம் குசேலன்.

---

விகடனில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொடரினை ஒவ்வொருவாரமும் எதிர்
பார்த்து கிடக்கவே கூடாது. எப்போது அதை தூக்குவார்கள் என்றே தெரியாது. அதேபோல
குமுதமும். உதாரணத்திற்கு ஓ பக்கங்கள், அகம் புறம் போன்ற கட்டுரைத்தொடர்.
கடந்த மூன்று வாரங்களான நாஞ்சிலாரின் தீதும் நன்றும் என்ற தொடர் வந்துகொண்டு
இருக்கிறது. சமூகத்தின் மீது கோபம் கொள்ளவைக்கும் கட்டுரைகள் நாஞ்சிலுடையவை.
பின்வரும் வாரங்கள் பல தளங்களில் வாசகர்களை இட்டுச்செல்வார் என்று நம்பலாம்.
குறிப்பாக நாஞ்சில் நாட்டு சமையல் முறை. ஏற்கனவே வஞ்சகமில்லாமல் சாப்பிடும்
பழக்கம் உள்ளவனாக இருந்தபோதும் நாஞ்சிலின் எழுத்துக்கள் உணவின்மீது காதலை
ஏற்படுத்திவிட்டது. இதைப் படித்தால் உங்களுக்கே புரியும்

---


உலகிலேயே அழகிய பெண்கள் உள்ள நாடு ஈரான் என்று எவரோ/எங்கோ சொல்லி
கேட்டதாக ஞாபகம். அழகிய பெண்களைக் கண்டால் மட்டுமே இந்த வாக்கியங்கள்
நினைவில் வந்துபோகும். நானும் இரானில் உள்ள தீவிற்கு நான்கைந்து முறை
சென்றிருந்தும் ஒருமுறைகூட பேரழகுடைய பெண்களை காணமுடியவில்லை. ஆனால்
ஒருமுறை ஷாப்பிங் மால் சென்றபோது நிறைய பெண்கள் அணி அணியாக வந்து
இருந்தனர். முக்கால்வாசிபேர் முகத்தை மூடி இருந்தனர். மிகச்சிலர் திறந்து விட்ட
முகத்துடன் வந்தனர். ஓரளவுக்கு உண்மையாகவே அழகானவர்கள்தான். குறிப்பாக
சிவப்புமல்லாத/மாநிறமும் அல்லாத ஒருவகை பால் நிறமேனி அவர்களுக்கு. கடும்
வெயில் அடித்த அந்த பருவத்தில் ஒருவருக்கு கூட வியர்க்கவில்லை. எனக்கோ
வியர்த்துக் கொட்டியது.

படத்தின் முதல் காட்சியாக தன் தோழி ரோயாவுக்கு தொலைபேசி மருத்துவமனைக்கு
வரவைத்து ஃப்ரெஸ்தா தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். நீண்டாநாள் பிரிந்த
தன் தோழியிடம் கதையை சொல்லிமுடிக்கும் கடைசி நிமிடத்தில் அவள் கணவன்
இறக்கிறான். பதினைந்து வருடங்கள் பிரிந்திருந்த தன் தோழியிடன் கதையை
சொல்வதுதான் two women படம்.

கடந்த வாரத்தில் two Women என்ற இரானியப் படம் பார்க்கையில் இந்த நினைவுகள்
மீண்டு வந்து நிழலாடியது. வகுப்பில் எத்தனைபேர் இருந்தாலும் நன்றாக படிக்கும்
மாணவர் ஒருவர் மட்டுமே இருக்கமுடியும். அப்படிப்பட்ட மாணவி ஃபெரஸ்தா
அவளுக்கு ஒரு தோழி பெயர் ரோயா. இருவரும் இணைபிரியா தோழிகள்.
எல்லா திறமையிலும் நிகரற்றவள் ஃபெரஸ்தா அவளை ஒருவன் காதலிக்கிறான்.
நன்றாக படித்து வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற
லட்சியத்தில் டெஹ்ரானில் உள்ள தன் மாமாவின் வீட்டில் தங்கி படிக்கும் அவள்
அவனின் காதலை நிராகரிக்கிறாள். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் நானே
உன் கணவன் என்று சொல்லும் அவனை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தி
பொதுமாத்து வாங்க வைக்கிறாள்.

வன்மம் கொண்ட அவன் பழிதீர்க்க சந்தர்ப்பம் தேடுகிறான். தன் மாமாவின் மகனுடன்
தெருவில் நடந்து செல்கையில் அவள் முகத்தில் ஆசிட் வீசுகிறான் அது அவள் மேல்
படாமல் அத்தை மகன்மீது படுகிறது. கோபம் கொண்ட உறவினர் படித்தது போதும்
நீ கிளம்பு என்று சொல்ல தன் மீது எந்த தவறுமில்லாமல் தன் படிப்பு வீணாகிப்போவதை
எண்ணி கண்ணீருடன் தன் ஊருக்கு பயணமாகிறாள் ஃப்ரெஸ்தா. அங்கும் வருகிறான்
அந்த ஒருதலைக்காதலன். அவளைத் துரத்தும்போது இருவரும் ஒரு விபத்தில் சிக்கி
காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அஹ்மத் என்பவரின் உதவியிடன் ஃப்ரெஸ்தா
மீது குற்றமில்லை எனவும் விபத்துக்கு காரணமான அந்த ஒருதலைக்காதலன் முகம்மத்
பதினான்கு வருடம் சிறை செல்கிறான். திரும்பி வந்து உனைக்கொல்வேன் என்று சொல்கிறான்.

பண உதவி செய்த அஹ்மத் அவளை திருமணம் செய்ய முன்வருகிறான் அவளுக்கோ
இஷ்டமில்லை. இருவீட்டாரும் இணைந்து பேசி அவளின் ஒப்புதல் இல்லாமல் மணம்
நடைபெறுகிறது. திருமணமான முதல் நாளில் இருந்து அவளின் மேல் சந்தேகம் தினம்
தினம் நரகவேதனை. பேசினால், நடந்தால், பார்த்தால் கூட குற்றம் என்கிறான்.

இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அப்பொழுதும் தினம் சந்தேகம் பேச்சுகள் என்று
போகிறது. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறைக்குச் சென்ற
முஹம்மத் அதே சமயத்தில் வெளிவருகிறான்.

கொலைசெய்ய துரத்தும் முகம்மதுவிடம் இருந்து தப்பி ஓடுகிறாள். ஒரு முட்டுசந்தில்
மாட்டி இனிமேல் ஓடமுடியாது என்று சொல்லி அங்கேயே திரும்பி உட்காருகிறாள்.
அவன் கொல்லவருகிறான்.

கடைசிவரை நான் எனக்காக வாழவில்லை. வாழவிடவுமில்லை. என் லட்சியங்கள்
இரண்டு ஆண்களின் முன்னால் அர்த்தமற்றுவிட்டது. இனிமேல் வாழ்வதில் எனக்கு
ஆசையில்லை என்னைக்கொன்றுவிடு என்று அழுகிறாள் ப்ரெஸ்தா. அதேசமயம்
பின்னால் வரும் ப்ரெஸ்தாவின் கணவன் முகம்மதுவுடன் தன் மனைவி கள்ள
உறவு வைத்துள்ளதான தன் சந்தேகம் உறுதிபட்ட்டது என நம்பி முகம்மதை கொல்ல
முயற்சிக்க அங்கே மாறாக ப்ரெஸ்தாவின் கணவனுக்கு கத்திக்குத்து விழுகிறது.

பெண்ணின் கனவுகள், உணர்வுகள் எப்படி சமூக நிர்பந்தங்களால் அழிக்கப்படுகின்றன
என்பதை ஓவியம்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பெண்களின்
உணர்வுகள் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் ஏனென்றால் இயக்குனரும் பெண்தான்.
எழுத்தாளரான தஹ்மின் மிலனியின் நாவலை அவரே இயக்கிய இந்தப்படம் இஸ்லாம்
சமூக பெண்களுக்கு நேரும் பிரச்சினைகளை பெண்களுக்கே உண்டான மென்மையுடன்
சொல்லியிருக்கிறது.

Saturday, July 07, 2007

எனது ஈரான் பயணம் - 2

முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்று
சொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர்தான் அவருடன் பேசிய அந்த மூன்று மணிநேரங்களில்
எவ்வளவு துயரம் எவ்வளவு இன்னல் அடைந்திருக்கிறார் என்று அறிய முடிந்தது.

பார்த்திபன் என்ற அவர் ஒரு இலங்கைத்தமிழர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பத்து
வருடங்கள் இருந்தவர். இயக்கத்தில் இருந்தவர் என்றதும் மிக ஆர்வத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன். இயக்கத்தில் இருந்த ஒருவருடன் நேரடியாக பேசுவத
இதுவே முதல் முறை.

என் கண்முன்னே என் உறவினர்கள் ஊர்க்காரர்கள் சித்திரவதை செய்யப்படுவதும்
கேள்வி விசாரணையில்லாமல் கொல்லப்படுதையும் காணச் சகிக்காமல் பள்ளியிலிருந்து
இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

இயக்கத்தில் சிறுவர்களை சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுப்பதை விட இளைஞர்களை
சேர்க்கலாம் இயக்கத்தில் நீங்கள் இணையும்போது பதினைந்து வயதிலிருக்குமா?

பதினைந்து வயதுதான். இயக்கத்தில் சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஆயதப்பயிற்சி
தருவதில்லை. முதலில் படிப்பு பின்பு அவரவர்க்கு எந்த துறையில் நாட்டம் இருக்கிறதோ அதைப்பொறுத்து படிக்க வைப்பார்கள். தேவையென்றால் வெளிநாட்டுக்கு கூட அனுப்பி
படிக்க வைப்பார்கள். பெற்றோர் இல்லாத பலர் இதுபோன்ற படிப்பினை பெற்றிருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அடிப்படை பயிற்சி கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பது கட்டாயமாக
சேர்க்க மாட்டார்கள் ஈழவிடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மட்டுமே இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள்.

2005ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவித்த போது இஅயக்கத்திலிருந்து வெளிவந்தேன்.
பின்னர் கருணா அணி பிரிந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவுடன்
இயக்கத்திற்கு திரும்பவில்லை.

இயக்கத்தில் இருந்த காரணத்தால் உள்ளூர் போலிசாரால் அடிக்கடி சிறை சென்று வர
நேர்ந்தது எந்த காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் சிறையில் கழித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம், லட்சம்னு கொடுத்து வெளியே வந்தேன். என்னுடன்
இருந்த பொடியன்கள் பலரை சிறையில் அடித்தே கொன்று விட்டார்கள். மிஞ்சியிருப்பது
நான் மட்டுமே. ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பா
இறந்திருப்பேன்.

சென்ற வருடம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை
பிடித்துச்சென்றார்கள். என்ன குற்றம் என்றே தெரியாமல் கையெழுத்திட்டேன். ஆறுமாதம்
சிறைதண்டனை. சிறை என்றால் சாதாரண சிறை இல்லை. மூன்றுக்கு ஆறு அளவில்
உள்ள சிறையில் இரண்டு பேர் நெருக்கியடித்து இருக்க வேண்டும். மலஜலம் கழிப்பது
எல்லாமே அதே அறையில்தான். வருத்தம் வந்து விட்டால்கூட மருத்துவ வசதி
கிடையாது. கேட்டால் அடிப்பார்கள் என்று வருத்தம் வந்த சேதிகூட யாரும்
சொல்வதில்லை. டாக்டர் குறித்த நாளில் பிரசவம் ஆனதா, என்ன குழந்தை
பிறந்தது, சுகப்பிரசவமா என்று எதுவுமே தெரியவில்லை.

கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் சந்திக்கும் ஒருநாளில் என் மனைவியும் குழந்தையும்
வந்திருப்பதாக சொன்னார்கள். மிகுந்த ஆவலுடன் முண்டியடிக்கும் கூட்டத்தின் நடுவில்
பயங்கர சப்தத்திற்கு இடையில் ஓடினேன். என் மனைவி முன் நின்றும் என்னை
அடையாளம் தெரியவில்லை. நான்கு மாதம் முகம் வழிக்காமல், முடிவெட்டாமல் உடல்
இளைத்து இருந்தேன். எதிரில் நின்ற என் தாய் தந்தைக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் மணம் செய்த பெண்ணுக்கு எப்படி தெரியும்.

முதல் முதலாக என் குழந்தையை தூக்கும்போது கையில் விலங்கோடு தூக்கினால்
எப்படி இருக்கும்? குற்ற உணர்ச்சியோடு திரும்பினேன். எதிரில் ஜெயிலர் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவசரப்படித்தினார். நான் பார்க்க விரும்பவில்லை என்றும் என்
குழந்தையை முதல் முதலில் கைவிலங்கோடு தூக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்து
நகர்ந்தேன்.

திடீரென்று கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. யார் என்ன பேசுவது என்று திகைத்த
போது மறுபடியும் அவரே தொடர்ந்தார்.

வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.
வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். வசதியாக வாழ்ந்த குடும்பம் இன்று தெருவிலும், மரத்தின் அடியிலும் குடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பொருள்களை
கொள்ளை அடித்து அப்படியே வீட்டை நொறுக்கி விடுவார்கள்.

முதலில் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன் நாளாக நாளாக போலிசார்
எல்லா வழக்குகளுக்கும் என்னையே தேடி வந்து இழுத்து செல்லவே. அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே என்று துபாய் வந்தேன்.

எங்க வேலை செய்யறிங்க?

எங்கயும் வேலை செய்யலங்க. வேலை தேடினேன் கிடைக்கவில்லை. விசா மேல விசா
போட்டு இது மூணாவது விசிட். வேலையும் கிடைக்கல பணமும் செலவாகிட்டே இருக்கு.
வீட்டுக்கு பணம் அனுப்புவது இல்லாமல் வீட்டிலிருந்தே வரவழைத்து செலவு செய்து
கொண்டிருக்கிறேன். நாட்டுக்கும் திரும்ப முடியாமல் இங்கயும் இருக்க முடியாமல்
ரொம்ப சிரமமாக இருக்கிறது என்றார்.

நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலைக்கு
முயற்சி செய்யலாம்தானே?

என் கூட்டாளி பொடியன்கள் எல்லாருமே சாதாரண வேலை செய்பவர்கள்தான் இருப்பினும்
அவர்கள் மூலமாக கிடைத்த ஓரிரு வேலையும் இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தேன் பிறகு
திருப்பி அனுப்பிவிட்டார்கள்.மேலும் செலவழிக்க பணமும் இல்லை இந்த விசாவிலாவது
வேலை கிடைக்காவிட்டால் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை.

என்ன வேலை தெரியும்?

டெய்லரிங் வேலை நல்லா தெரியும். துணிகளை வெட்டி வடிவா தைப்பேன் என்று கூறவே
அங்கிருந்து துபாயில் டெய்லர் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பேசி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டேன். ஆள் அனுப்புங்க வேலை தெரிஞ்சா எடுத்துக்கொள்கிறேன்
என்று கூறினார்.

விசா கிடைத்து துபாய் வந்ததும் மறக்காமல் போன் செய்யுங்கள் என்று தைரியம்
கூறிவிட்டு வந்தேன். இன்னும் எத்தனை காலம் அகதிகளாக இவர்கள் வாழ்க்கை
அமையுமோ தெரியவில்லை. கடைசியாக ஒன்று சொன்னார் இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் கொஞ்ச
நாளில் எங்கள் நாட்டிலே வாழும் நிலை ஏற்படும் என்று உறுதியாக கூறினார்.

மெய்ப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கள் கண்ணீருக்காக, எங்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள்
வெகுசிலரே. சுப.வீ,பழ.நெடுமாறன் அய்யா, வைகோ போன்றவர்கள்தான் என்றார்.
உடனே கொண்டு சென்றிருந்த ஆ.வி இதழில் சுப.வீ எழுதும் "அது ஒரு பொடா காலம்"
பகுதியினை காட்டினேன். ஆர்வத்துடன் படித்தார்.

இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.

எனது ஈரான் பயணம் - 1

கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாக
சென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசா
மாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேறி பிறகு புதிய விசாவில் உள்
நுழைய வேண்டும். முன்னர் வேலை பார்த்த கம்பெனி விசாவில் இருந்து புதிய
கம்பெனி விசாவுக்கு மாறுவதால் நானும் செல்ல வேண்டியதாயிற்று. முன்னரே இரண்டு
மூன்று முறை சென்று வந்த அனுபவம் இருந்தாலும் அதே விமானத்தில் சென்று
திரும்பியதால் ஊர்சுற்ற நேரமில்லை. இந்த முறை அபுதாபி திரும்ப விமானம்
இல்லாததால் இரண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.

நான் கொண்டு சென்றிருந்த N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
கூகிளில் சிக்கிய படம் இங்கே. அதுவுமில்லாமல் கொளுத்தும் வெயில் வேறு
கவுந்தடித்து தூங்கவே நேரம் சரியாக இருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஈரானிய மக்களில் பெரும்பாலோனோர்கு பார்சி தவிர வேறொரு மொழியும்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி தெரியாதது போல. ஒன்றிரண்டு
பேர் சுமாராக ஆங்கிலம் பேசினார்கள். விமான நிலைய அதிகாரிகள் கூட சைகை
மொழிதான் பேசினார்கள். எங்கள் ஊர் பேருந்து நிலையத்தை விட சற்று பெரிதான
விமான நிலையம். அறுபது பேர் அமரக்கூடிய விமானம். விமானத்தில் ஏறியதும்
பாதி விலைக்கும் வாங்கி வந்த விமானமோ என்று எண்ணத்தோன்றியது. விமானம்
கிளம்ப ஆரம்பித்ததும் அவரவர் குலசாமியை கும்பிடுவது போல பாவத்துடன்
காணப்படுவதை அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.

உலகத்திலயே சேச்சிகள்தான் அழகு என்ற எண்ணத்தை ஈரானிய பணிப்பெண்ணை
பார்த்ததும் சற்றே தளர்த்த நேர்ந்தது (சேச்சிகள் மன்னிக்க). ஈரானிய பெண்கள்தான்
உலத்திலேயே மிக அழகு என்று யாரோ எங்கோ சொல்லக்கேட்ட ஞாபகம்
வந்துபோனது. அந்த பெண்ணிற்கே கூச்சம் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று வில்லன் போல விமான பணிப்பையன் வந்துவிட்டான். (விமானத்துல
எல்லாம் எவண்டா பையன வேலைக்கு வைக்க சொன்னது?) விமானநிலையத்தில
இறங்கியதும் ஏதோ பணய கைதிகளை நடத்துவது போல விமான பணியாளர்கள் நடத்தினார்கள். அவர்கள் பேசும் மொழியின் தோரணைதான் அப்படியே தவிர
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

விமானநிலையத்தில் இறங்கியதும் நம் ஊர் ஆட்டோக்காரர்களை போல் அல்லாமல்
நாகரீகமாக எங்கள் ஹோட்டலில் தங்குங்கள் என்று கையை பிடித்து இழுத்தார்கள்.
எல்லோரும் வேனில் ஏறவே தயக்கத்துடன் கடைசி ஆளாக ஏறி ஹோட்டல் வந்ததும்
முதல் ஆளாக இறங்கினேன். நேராக பதிவு செய்யும் அலுவலகம் சென்றேன். அங்கேயும்
முக்காடிட்டு அழகான இரு பெண்கள் அவர்களிடம் அடுத்த விமானம் எப்போது என்று
விசாரித்தேன். அதெப்படி இவங்க மட்டும் மெழுகு மாதிரி முகத்தில மாசு மருவில்லாமல்
இருக்கிறார்கள் எந்த சோப்பு போட்டு குளிக்கறிங்கன்னு கேவலமான கேள்வி கூட கேட்க
நினைத்தேன்.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால்தான் ஹோட்டலில் அறையே தருவார்கள்.
அப்போதுதான் பாக்கெட்டை தடவி பார்த்தேன் காணவில்லை. அடங்கொய்யால
எவனோ அடிச்சிட்டான் போலருக்குன்னு மனசு பதறிப்போச்சு. பாஷை தெரியாத
ஊர்ல பாஸ்போர்ட்ட தொலச்சிட்ட எப்படிடா ஊருக்கு போவன்னு உள்ளுக்குள்ள
உதறல். கொஞ்சநேரம் கழிச்சி நிதானமா வந்த வழி போன வழி எல்லாம் தேடினேன்
நிதானமா உக்காந்து யோசிச்சேன். ஒருவேளை ரிசப்ஷன்ல தவற விட்டிருப்பனோன்னு
நேராக அங்கு சென்று அந்த ஈரானிய பெண்ணிடம் கேட்டேன். கேவலமான நமட்டு
சிரிப்புடன் எடுத்து நீட்டினாள். தேங்க்ஸ்னு சொல்லிகிட்டே திரும்பி பார்க்காமல்
வந்துவிட்டேன்.

தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே பல ஷாப்பிங் மால்கள் இருந்தது நான்
போன நேரம் கல்லா கட்டும் நேரமாதலால் அனைவரும் பூட்டிக்கொண்டு செல்ல
இருந்தனர். உலகத்துலயே சாயங்காலம் ஆறுமணிக்கு கல்லா கட்டுறவங்க இவங்களாதான் இருப்பாங்க. விலையெல்லாம் துபாயுடன் கம்பேர் பண்ணும்போது டபுள் டபுளா
விக்கறாங்க. ஒரு திராம்ஸ் கொடுத்தால் 2400 ஈரானிய ரியால் தருகிறார்கள். பெரும்பாலும்
அனைத்து கடைகளிலும் டாலர்,திராம்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். தரை
இறங்கியவுடன் லட்சாதிபதியாகும் ஆசையில் 100 திராம்ஸ் பணத்தை ஈரான் மதிப்பிற்கு
மாற்றிக்கொண்டேன். இரவு உணவுக்கு 28800 ரியால் செலவு செய்ததை இங்கு
பெருமையுடம் கூறிக்கொள்கிறேன்.

ஹோட்டலில் தொண்ணூரு சதவீதம் பேர் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்
பேசியது சைனா மக்கள் பேசுவது போல கொய்ங் மொய்ங் என்று இருந்தது. மீதி
பத்து சதவீத ஆட்கள் கேரளத்து சேட்டன்கள். இவனுங்க பண்ண சேட்டை கொஞ்சமா
நஞ்சமா... அறையில் இருந்த சேட்டன் ஒருவர் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேணயர்கள்
இந்த தமிழ்காரனுங்கள் என்று கூறினார்

அட நன்னாறி நாய... ஷகிலாவுக்கு கட் அவுட் வச்சிட்டு ஏண்டா இதபேசறிங்க?
என்று சொன்னவுடன் அடக்கி வாசித்தார்.

எவ்வளவு நேரம்தான் இந்த சேட்டன்கள் கூட சண்டை போடறது. அப்படியே பீச் பக்கம்
போலாம்னு போனேன். நம்ம மெரினா பீச் மாதிரியே இருந்தது நிறைய விசைப்படகுகள்
கரையில் நிறுத்தியிருந்தார்கள் ஆனால் அதன் நிழலில் காக்காய் கூட உட்காராமல்
வெறிச்சோடி இருந்தது ஏமாற்றாம்தான்.

வரும்வழியில்தான் ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது.

தொடரும்.

பி.கு: தொடர் எழுதணும்லாம் எழுதலங்க. பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா
வாசிக்காம போயிடுவாங்கன்னுதான் இரண்டு பதிவா போடறேன்.