எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, January 21, 2008

நெகிழ்வுதரும் காட்சிகள், எழுத்துக்கள் மற்றும் ஒரு கவிதை

தனிமையின் வழி என்ற கட்டுரைத் தொகுப்பை அய்யனார் என்னிடம் கொடுக்கும்போதே
அருமையானது என்று சொல்லியே கொடுத்தார். வாங்கி இரண்டுமாதம் கழித்துதான்
அதை பிரித்து பார்க்க நேரம் வாய்த்தது. அவர் சொன்னதுக்கும் மேலாக இருந்தது.
இதை கட்டுரைத் தொகுப்பு என்று கூட சொல்லமுடியாது. தனியனின் வலி நிறைந்த
பயணம்தான் தனிமையின் வழி.

கதையைப் போல கற்பனையைப் போல எழுதிவிட முடியாதது தன்னைப் பற்றிய
குறிப்புகள். ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் முடிவுகள் மிக
நெகிழ்ச்சியாக இருந்ததை இதற்கு முன் எப்போதும் கண்டதில்லை. எந்த ஒரு
வார்த்தையைக் கொடுத்தாலும் அந்த வார்த்தையைக் கொண்டு அழகான நினைவலைகளை
கட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. நாம் எழுதும்போதுகூட சுவையானவை
என்று கருதுவதை மட்டுமே எழுதுகிறோம். (இந்த எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு)வாசிப்பவர் நம்மீது சிறிதளவு பிரமிப்பாவது அடைய வேண்டும் குறைந்த
பட்சம் கவனிக்கப்படவாவது வேண்டும் என்ற முனைப்பு தெரியும்.

நான் எழுதிய சில பதிவுகள் நெகிழ்ச்சியாக இருந்ததாக வாசித்தவர் சிலர் சொல்லி
இருக்கிறார்கள். அதை நேரடியான எழுத்தின் மூலம் நான் அடைந்தது இந்த
கட்டுரைத் தொகுப்பில்தான். சுந்தர ராமசாமி, மணிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி
ஆகியவர்களுடன் தனது நட்பை விவரிக்கும் குறிப்புகளை படிக்கும்போது
அதிகாலைப் பொழுது. முனை மடித்து வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
வாசித்து முடிக்கும்போது குரல் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
உண்மைகளைப் பற்றி எழுதும்போது அவை உண்மையாக இருப்பதே அபூர்வம்.
குழம்பிய நிலையில் இருப்பதாக நினைக்கும்போது சுகுமாரனின் குறிப்புகள்
ஒன்றை படிக்க வேண்டும்.

நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்

-------

ஒம்பது ரூபாய் நோட்டு படம் பார்க்க நேர்ந்தது. முதலில் தங்கர் மீது
எனக்கு பயங்கர கொலைவெறி இருந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.
அதை பழி தீர்க்கும் விதமாக சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், சிதம்பரத்தில்
அப்பாசாமி போன்ற படங்களை இன்னமும் பார்க்கவில்லை. சத்யராஜ் வாழ்க்கையில்
உருப்படியான இரண்டாவது படம் இது என சொல்ல வைக்க கூடிய கதை.
நாவல் வடிவத்தில் படிக்காது இருந்ததனால் இரண்டையும் ஒப்பிட்டு திருப்தியடையாத
மனநிலை என்பது இல்லவே இல்லை, தலைவர்களின் வரலாறோ, நாவலை
அடியொற்றி எடுக்கப்படும் படங்கள் மூலத்தை பிரதிபலிப்பதாக எவரும் சொல்லி
கேட்டதுமில்லை.

என்னைப்பொருத்த வரை தங்கரின் மேல் உள்ள கோபத்தின் அளவை வெகுவாக
குறைத்திருக்கிறது. அவரின் மற்ற படங்களை பார்ப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இறுதிக் காட்சிகளின் போது கமீலா, மாதவரய்யா மேல் காட்டும் வருத்தத்தை
மட்டும் வழக்கமான சினிமா விதிகளின் அடிப்படையில் அமைந்தது போல
ஒரு தோற்றம். படத்தின் இரண்டு காட்சிகள் மிகுந்த நெகிழ்வுகளை தந்தது.
நாசர் வீட்டுக்கு சத்யராஜ், அர்ச்சனா நிராதரவாக செல்லும் காட்சி மற்றும்
மாதவரய்யா இறந்த காட்சி. இவையிரண்டும் அடுத்த நெகிழ்வான காட்சிகள்
காணும் வரை மனதில் இருக்கும்.

நன்றி தங்கர்.

------------

என் மொழி புரியாத வெளி தேசத்தவர்களிடம் பேசுவதில் அலாதியான ஆசை
எப்போதுமே உண்டு. சொல்ல வருவதை நமக்கு புரிய வைப்பதில் அவர்களின்
முகத்தில் குழப்ப ரேகையுடன் கூடிய மெல்லிய பதைப்பு தெரியும். அவற்றில்
புதிய முகபாவங்கள் தென்படலாம். எனக்கும் இது பொருந்தும். அந்த வகையில்
நேற்று இரண்டு துருக்கியர்களை சந்தித்தேன். (இதுபோல சந்தித்தது பற்றி மட்டுமே
எழுதுவதாக சில விஷமிகள் பரப்புவதால் நீண்டநாள் கழித்து இப்போது எழுதுகிறேன்)
அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை, அரபியும் ஷோய ஷோய எனக்கு
எனக்கு அரபியும் சுத்தமாக வராது. ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனின் செய்தி
வாசிப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். துருக்கி நாட்டு பெண்கள் மிக
அழகானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை விளக்கிச் சொல்ல ஐந்து
நிமிடம் பிடித்தது.

உடனே சிடி பேக்கிலிருந்து விதவிதமான சிடிக்களை எடுத்து கொடுத்தார்கள்.
எல்லாமே பார்த்து சலித்தவை. எதாவது திரைப்படம் இருக்கிறதா என்று சோதிக்க
ஐந்து நிமிடம் செலவழித்து எடுத்தது ஒரு இராக்கிய படம். பெயர் தெரியவில்லை.
ஆங்கிலத்திலோ, அல்லது இராக்கிய மொழியிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
துருக்கியில் டப்பிங் செய்திருந்தது. சப்டைட்டில் கூட இல்லை.கதைக்களன் சதாமைத் தேடி அமெரிக்கப்படைகள் சுற்றும் மற்றும் அபு க்ரைப்
சிறையில் இராக்கியர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி பேசும் படம். படத்தில்
பெரும்பாலான இடங்களில் வசனங்கள் இல்லாதது வசதியாக இருந்தது.
முக்கியமான ராணுவ தளபதியை (பாண்டம் மம்மி படத்தில் நடித்த மாயாவிதான் இவர். இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் தமிழில்)போட்டுத்தள்ள மூவர் படை கிளம்புகிறது
ஒவ்வொரு முறையும் தப்புகிறார். முடிவில் ஒரு பெண்ணின் குறுவால் மூலம்
மரணம் அடைகிறார். அப்பெண் திருமணத்தின் போது நடந்த விருந்தில் புதுக்
கணவன் கொல்லப்படுகிறார்.

சுற்றிலும் வீடுகள் நடுவில் மைதானம் போன்ற இடத்தில் அனைவருக்கும் தேநீர்
கொடுக்கப்படுகிறது. மணப்பெண் உட்பட பெண்கள் வீட்டின் மேலிருந்து ஆண்கள்
நடனமாடுவதை பார்க்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியான இரவை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போது அமெரிக்க படைகள் வருகிறது. ஏதோ காரணம் சொல்லி
யாரையோ தேடுகிறது. நவீன ரக துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு அருகில்
சிறுவன் ஒருவன் அதிசயமாக துப்பாக்கியை பார்க்கிறான். விளையாட்டு சாதனம்
என்று நினைத்து குழலில் குச்சியை விடுகிறான். அந்த வீரன் கோபப்பட்டு சிறுவனை
ஒதுக்க மீண்டும் மீண்டும் குச்சியை விடுகிறான் சிறுவன். சலிப்படை வீரன்
மூன்றாவது முறை ஒதுக்கும்போது மூன்று குண்டுகளை வரிசையாக சிறுவனின்
இதயத்தில் செலுத்துகிறான். தொடர்ச்சியான இந்த காட்சியில் துப்பாக்கியிலிருந்து
குண்டு வெளியாவதை தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. கூட்டத்தில் சலசலப்பு
ஏற்படுகிறது. சிறுவனின் தந்தை பதைப்புடன் ஓட அவரையும் சுடுகிறார்கள்.
மாப்பிள்ளை கதறியபடி வர அவரையும் சுடுகிறார்கள். மணப்பெண் ஓடிவர
துப்பாக்கி முனையால் ஓர் அடி அவளும் மயக்கமாகிறாள். அப்பெண் அமெரிக்க
தளபதியை பழிவாங்க குறுவாளுடன் செல்லும் காட்சிகள் பரிதாபத்தை
வரவழைக்கிறது. அதே தளபதியை கொள்ள வரும் மூவருக்கு உதவி செய்கிறாள்.
கடைசியில் மரணமடைகிறார்.

இடையில் அபுகிரைப் சித்திரவதைகள், கைதிகளை நிர்வாணமாக்கி நாயை ஏவி
விடும் காட்சிகள், அமெரிக்க நிருபரை கடத்தி தலையை சீவ முயலும் தீவிரவாதிகள்
இடம் மதகுரு ஒருவர் மீட்டு நிருபரை அனுப்புவது(உண்மைச்சம்பவம்னு நினைவு)
ஊரையே காலி செய்யும் காட்சிகள் போன்றவை மனதைப் பிசைகிறது. இது எந்த
மொழிப்படம் என்பது தெரியவில்லை. தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்தால்
இராக், அல்லது துருக்கியர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடியதில் படத்தின் பெயர் kurtlar vadisi என தெரிந்து கொண்டேன்.

------

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.

----------

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதல் பயணம். மகிழ்ச்சியாக உணர்கிறேன். சகோதரரின் திருமணத்திற்காக
அவசர பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவல். சந்திப்புகள்
இருந்தால் தெரியப்படுத்தவும். தொடர்பு கொள்ள 9944111050.

Sunday, January 13, 2008

எறும்புகளின் வாக்குமூலம்.எறும்புகளில் ஏழாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு வகைகள் உள்ளது என
டிஸ்கவரி சேனலில் சேனலில் அறிமுகத்தோடு உங்களுக்கு அறிமுகப்படுத்தும்
நிகழ்ச்சி அல்ல இது. மாறாக உங்களுக்கு தெரிந்த, அல்லது உங்களை கடித்த
எறும்புகளின் குறிப்பாக இது அமையும் என்பது எங்கள் கருத்து. எந்த ஒரு முன்
முடிவுகளுக்கும் வந்துவிடாதீர்கள், ஆனால் சில குறிப்புகள் உங்கள் ஆழ்
மனதை பிரதிபலிப்பதாகவும் அமையலாம் ஆகவே சிறு அசுவாரசியத்தோடு
இதை படிக்க ஆரம்பித்தேயேர்களானால் எனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.
இது ஆராய்ச்சிக்கட்டுரையின் நோக்கத்தோடு எழுதப்பட்டதன்று. ஆகாவேதான்
இத்தனை மன்றாடல்கள்.

அனேக சமயங்களில் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது
சுவாரசியமான சில சமயங்களிலோ சில எறும்புகள் உங்களைக் கடித்திருக்க
கூடும் நீங்களும் அனாயசமாக உங்களின் இடக்கை சுட்டு விரலால் அதை
நசுக்கி வெற்றிச் சிசிப்பு சிரித்தபடி உங்கள் அடுத்த கண சுவாரசிங்களில்
ஈடுப்பட்டிருக்கலாம். அப்படி உங்களால் சாகடிப்பப் பட்ட எறும்பு எதைத்
தேடி வந்ததென்று உங்களில் ஒருவர் யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி
யோசித்ததனால் வந்ததுதான் இது. முன்பே சொன்னது போல நீங்கள்
ஆச்சரியப்படும் வகையில் இங்கே ஒன்றும் இல்லை என்பதை உங்களின்
தாழ்வான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


சாரணர் இயக்கம் கூட எங்களிமிருந்து கற்றுக்கு கொண்டதுதான் என அறிவியல்
பூர்வமாக நம்புங்கள். என்னவர்களின் முன்னோர்கள்தான் யுகம் யுகமாக பாம்புகளுக்கு
வசிப்பிடம் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? மாட்டீர்கள்,
எங்களிடம் சுரக்கும் உன்னத வாசனைதான் எங்களை விரட்டுகிறது. நாங்கள் கட்டும்
புற்றுக்களே எங்கள் வாழ்விடங்களாக இல்லாமல் போகும் சோகம் முன்
எப்போதோ எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

உங்கள் வீட்டில் கோழி வளர்த்திருக்கிறீர்களா? வளர்த்திருந்தீர்கள் என்றால்
கோழிக்குஞ்சுகளுக்கு செல்லை இட்டிருப்பீர்கள். கழுத்தின் அடியில் அந்த
செல்கள் உருள்வதை உங்கள் கைகளால் தடவி உணர்ந்திருப்பீர்கள். அவையும்
எங்கள் வழித்தோன்றல்களே. உங்கள் வீட்டில் இனிப்பு பொருள்களை மூடி
வைப்பது எங்களைப் போன்ற நாசக்காரர்களால்தான் எங்களால் உங்களுக்கு
பெரிய இழப்பொன்றுமில்லை. ஆனால் மனிதருள் கோடியிலும் சிறிய உருவமான
எங்களைக் கண்டு உங்களுக்கு இளப்பம், மேலும் எங்களின் எண்ணிக்கையைக்
கண்டு உங்களுக்கு பயமாக இருக்கக் கூடும்.

உங்கள் வீட்டின் பருப்பும், சர்க்கரையும், எள்ளும் இன்ன பிற தானியங்களையும்
நாங்கள்தான் கொள்ளையடிக்கிறோம். வேண்டுமானால் இதை வெள்ளைத் தாளில்
எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் முன்பு ஏன் கொள்ளையடிக்கிறோம் என்று நீங்கள்
யோசிதிருக்கிறீர்களா? இல்லையென்றால் சொல்கிறேன். எங்கள் ராணியின் கட்டளைக்கு
ஏற்ப மழைக்கால சேமிப்பு கிடங்குகளுக்கே உங்கள் தானியங்கள் கடத்தப்படுகின்றன.
கமிஷன் வைத்து அலசினால் கூட எவ்வளவு காணாமல் போனது என்பதை கண்டு
பிடிக்க முடியாமல் போகும் அளவைத்தான் நாங்கள் உருட்டிச் செல்கிறோம்.
வழியில் தென்படும் ஒன்றிரண்டு உறும்புகளை நீங்கள் கொல்வதால் எங்களுக்கு
ஏராளமான தகவல்கள் வந்து சேராமல் போகின்றன, மேலும் அவ்வெறும்புகள்
என்னவாயின என்பதை தேட சிறு படையை அனுப்புகிறோம். உங்களைக்
காட்டிலும் அற்பமான உயிரினம் நாங்கள். அடுத்தமுறை எங்கள் படையினத்தின்
இடையூறுகளை மன்னித்து விடுங்கள், உங்கள் பலம்பொருந்திய மூச்சுக் காற்றினால்
ஊதுவீர்களேயானால் நாங்கள் பறந்து விடுவோம். தயவு செய்து நசுக்கியோ
தேய்த்தோ விடாதீர்கள்.

கொசுக்களைப் போல ஈனத்தனமான சத்தமிட்டோ அல்லது ஈக்களைப் போல
ரீங்காரமிட்டோ உங்களின் மகிழ்ச்சியை கெடுப்பதில்லை என்பதை நீங்கள்
நினைவு கொள்ளவேண்டும். உங்கள் வீட்டினில் கூட சுவரோரமாகவோ அல்லது
சுவற்றின் மேலோதான் எங்களின் படை அணிவகுத்துச் செல்லும் அவை
எல்லாமே தத்தமக்கு இட்ட கட்டளைகளின் போக்குக்கு செல்கின்றன அடுத்த
முறை கவனிக்கும்போது அவற்றை கலைத்து விடாதீர்கள். எங்களில் சில வகை
எறும்புகள் உங்களை கடித்து துன்புறுத்தியிருக்கலாம் அதை ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் அது திட்டமிட்ட செயல் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும். எதிர்ப்படும் உணவுப்பொருளின் சுவையறியவே அப்படி செய்கிறோம்.
எங்களுக்கு வாசனைதான் இயற்கை மூலமாக அறியப்பட்டதே தவிர
அதன் சுவை எங்களுக்கு தெரியாதது.

எங்கள் இன எறும்புகளில் கறுப்பு நிறத்திலும் உருவத்திலும் சிறியதாக இருக்கும்
இனங்களை நீங்கள் சாமி எறும்பு என்கிறீர்கள். கடிக்கும் எறும்புகளுக்கு என்ன
பெயர் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியாது. என்னது? சித்தெறும்பு
என்னை கடிக்குது என்று பாட்டு கூட எழுதி இருக்கிறீர்களா? சரிதான் எங்களைக்
காட்டிலும் உருவத்திலும், கொடுக்கிலும் பெரிது வாய்க்கப்பெற்ற எறும்பைத்தான்
சொல்கிறீர்கள். ஆம் அவைகளுக்கு பற்கள் கொஞ்சம் நீளம்தான் அவைதான்
உங்களை துன்புறுத்துகின்றன என்றால் எங்களின் ராணி எறும்புக்கு ஒரு தகவலை
அனுப்பி விடுகிறோம். அவைகள் இனி எந்த யுகத்திலும் உங்களை துன்புறுத்தாது.
சித்தெறும்பு பற்றி பாடியதாக அறிந்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதே
சமயம் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்ல விருப்பம். எங்களின் ஆதிகால
முன்னோர்கள்தான் சித்தெறும்பை விட பன்மடங்கு பெரிதான உருவத்தில்
இருந்தார்கள். அவை கொட்டினால் நீங்கள் உடனடி மரணம் அடைவீர்கள்.
இன்றும் அடர்வனங்களின் ஏதாவதொரு மரப்பட்டையின் உள்ளே என் மூதாதையர்
வசித்திருக்க வாய்ப்புள்ளது. அதைப்பற்றிய கவலை வேண்டாம். அவை இப்போது
தன் வீரியம் இழந்திருக்கக் கூடும். ஒருவேளை வீரியமுள்ள எறும்பு கொட்டினால்
கூட உங்களின் மிஞ்சியிருக்கும் சுவடிகளில் ஏதாவதொன்றின் மூலையில் நிவாரண
குறிப்புகள் இருக்கக்கூடும். என்னது அலோபதி மருத்துவம் பார்க்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள் இயல்பாகவே நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இதன் பாதிப்பு
அதிகம் தெரியாது. எங்களின் சுபாவம் இரத்த ஓட்டத்தில் கலப்பதல்ல. எனவே
நீங்கள் தைரியம் கொள்ளலாம். இதனால் அதிர்ச்சி கொள்ள வேண்டால் அவ்வினம்
அழிந்துதான் நாங்கள் இவ்வுறு பெற்றோம். உங்களுடன் பல நூற்றாண்டு காலம்
வாழ்ந்தாயிற்று.

குழந்தைகளை கடித்ததால்தான் எங்கள் இனங்கள் மீது தாய்மார்கள் கடுஞ்சினம்
கொண்டுள்ளதாக தாமதமாக அறியப்பெற்றோம் ஆகவே ஒரு சுற்றறிக்கையும்
கூடவே மிருதுவான பொருள் எவற்றின் மீது உங்களின் பிரயோகம் இருக்க
வேண்டாம் என சுற்றரிக்கையும் அனுப்பினோம். இனி உங்கள் குழந்தை அழுதால்
இடுக்குகளில் எறும்பு கடித்திருக்கிறதா என தேடவேண்டாம் அவை பாலுக்காக
கூட அழலாம். எங்களுக்கும் கல்வியறிவு புகட்டி விட்டீர்களானால் நாங்களும்
பகுத்தறிந்து எங்கு எது உள்ளது என தேடிப்பெற்றுக்கொள்வோம்.

எங்களின் குரல்கள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துபவனாக இருக்கும் என்று
நினைக்கிறேன். அதனால் ஒரு சுவாரசியமான சம்பவம் சொல்கிறேன். எங்களின்
கிழக்குப் பகுதி வீட்டில் ஒரு தனியன் வசிக்கிறான். காலையில் காபியும் மாலையில்
ஏதோ ஒரு திரவத்தையும் உட்கொண்டு உயிர்வாழ்பவன். அந்த பகுதியில் இருந்து
எங்களுக்கு வரும் தகவல்கள் வினோதமானவை. காலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் சர்க்கரைத்துகள்களை சேகரித்தும் மாலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் மடிந்துபாதியும் சித்தம் கலங்கி மீதியும் வருகின்றன
. எங்களுக்கு பெரிய
ஆச்சரியம். கமிட்டி அமைத்து விசாரித்து பார்த்ததில் அவன் காபியையும் மதுவையும்
ஒரே கோப்பையில் குடிப்பவனாக இருக்கிறான். அந்தநாள் முதல் எங்கள் இனங்களுக்கு
மது சம்பந்தப்பட்ட வாசனையை பிறித்தறிய விசேஷ பயிற்சிகள் கொடுத்து பழக்கினோம்.
இதனால் எங்களுக்கு ஏராளமான வீரர்கள் விரயமாகாமல் இருப்பது பின்பு ஒரு
எண்ணிக்கை கணக்கெடுப்பில் கண்டுபிடித்தோம்.

இன்று நவீன முறைகளில் எங்களை ஒழிக்க பல கருவிகள் வந்து விட்டன. பல
நிறுவனங்கள் கூட எங்களை நம்பி முதலீடு செய்திருப்பதாக அறிந்தோம். மகிழ்ச்சி.
அவர்கள் தற்காலிகமாக எங்களை ஒழிக்கவே சாதனம் கண்டுபிடித்துள்ளார்கள்
அவர்களால் உங்களுக்கு பூரணத்துவ விடுதலை கொடுக்க வாய்ப்பில்லை.
வேண்டுமானால் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம்.

மொக்கைகளின் தந்தை செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

மொக்கை போட அழைத்த சத்யாவுக்கு என்னுடைய வருத்தங்கள். :)

Monday, January 07, 2008

குளிர், குமரிகள், குழந்தைகள்

குளிர்காலத்திற்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு ஆதியோடந்தமாய் தொடர்பிருப்பதாக
நினைப்பதுண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வெகுகாலத்திற்கு நினைவை
விட்டு அகலாமல் இருப்பதும் காரணம். ஒரு குளிர் காலத்தில்தான்
திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பணிமாற்றம்
செய்யப்பட்டார் என் தந்தை. எங்களுக்குள் பெரிய இடைவெளி எப்போதுமே
சூழ்ந்திருக்கும் அது விவரம் தெரிந்த நாள் முதலே உண்டானது அதை மாற்றிவிட
அவருக்கும் தோன்றவில்லை எனக்கும் தோன்றவில்லை.

கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து "வந்தால் உன் பெற்றோருடன் வா"
என்று அனுப்பி இருந்தார்கள். பனி நிறைந்த இரவில் பேருந்து ஏறி அவரைக்
காண புறப்பட்டேன் விடியல்காலையில் நான்கு மணி சுமாருக்கு கதவைத்
தட்டி உள்ளே அறைக்கு சென்றேன்.என் பேச்சுலர் அறைக்கும் அவர்
அறைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. வெளியே சென்று டீ வாங்கி
வந்தார். குளிக்க வெந்நீர் போட்டு தந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு கூட்டிச்
சென்றார். இருள்கவிழ்ந்த கோயிலில் இருவருமாக உள்நுழைந்தோம்.

எங்களைத்தவிர யாரும் அந்த அதிகாலையில் வரவில்லை. கண்கள் மூடியபடி
வெகுநேரம் நின்றிருந்தார் நானும் சிறிதுநேரம் கண்கள் மூடி இருந்தேன். கண்
திறந்தபோது என் எதிரே ஒரு தாவணி அணிந்த பெண்ணும் அவளுக்குப்பின்னே
அவளது அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் என ஒரு படை சூழ வந்தாள்
அவளுக்குத்தான் பிறந்தநாளாக இருக்கக்கூடும், சற்றுமுன் அய்யர் மந்திரம்
சொல்லுமுன் ஏதோ ஒரு பெயரை கேட்ட ஞாபகம் அந்த நேரத்தில் பெயர்
முக்கியமல்ல என எண்ணி அவள் பின்னே பிரகாரச்சுற்றுக்குள் சென்று விட்டேன்
இரண்டாவது சுற்று வரும்போதுதான் அப்பா என்னையே முறைப்பது தெரிந்தது
மூன்றாவது சுற்றின் முடிவில் அனைவரும் வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து
பேசிக்கொண்டு இருந்தார்கள். என் வயதோ என்னை விட ஒன்றிரண்டு வயதோ
அதிகமிருக்கலாம் அவளுக்கு. எதுவும் பேசாமல் அப்பாவின் பக்கத்தில் போய்
நின்றேன் ஏற்கனவே வைத்திருந்த விபூதியின் கீழ் குங்குமத்தை வைத்தார்.
பிறகு கார் ஏறி அந்த குடும்பம் பறந்து போனது. விடுமுறை எடுக்க முடியாத
காரணத்தால் முதல்வருக்கு கடிதம் எழுதி உறையுனுள் வைத்து தந்தார்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் மறக்க ஆரம்பித்தாலும் அவள்
வண்டியில் ஏறி சென்ற காட்சி இன்றும் மனதினுள் அழியாமல் இருக்கிறது.

**************************

துபாயை போல கட்டிட நெரிசல்கள் அதிகம் இல்லாத நகரம் இது, மரங்களும்
மணல்வெளிகளும் நிறைந்த இடம் இதுவாகையால் எங்குமில்லாத வாட்டிடும்
குளிர் இங்கு. ஒருநாள் மாலை காலீத் என்ற சூடானியர் அவர் வீட்டு கம்பியூட்டரில்
இன்டெர்நெட் வேலை செய்யவில்லை என்றும் வந்து சரி பண்ணி தர முடியுமா
என்றும் கேட்டுக்கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே போல
ஏதோ பிரச்சினை என்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன். அவர் வீட்டில் அழகான்
குட்டிப்பெண் இருக்கிறாள் பெயர் ஈலாஃப் என்று ஞாபகம். அந்த குட்டி மறந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன். ஒரு ஆப்பிரிக்க சிறுமி என்னிடம் இவ்வளவு
அன்பு வைத்திருப்பாள் என்று நினைக்கவேயில்லை. காலீத் வீட்டில் நுழையும்போதே
Mr.கதிர் என்றபடியே ஓடிவந்து கைகொடுத்தாள் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான
தருணம் அது. அவளின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போனேன்.

கம்ப்யூட்டரை சரி செய்த பின்னர் நான் தங்கியிருக்கும் இடத்துக்கே என்னை
கொண்டு வந்து விட காரை எடுத்தார் காலீத்.எடுக்கும்போது யாரோ காரின்
கதவை தட்டும் சத்தம் கண்ணாடி வழியே யாரும் தெரியவில்லை. கதவை
திறந்தால் ஈலாஃப் நிற்கிறாள். அவளையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
புறப்பட்டோம். வழிநெடுக நிறைய பேசினேன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
அரபியை தவிர வேறெதுவும் தெரியாது, பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையாம்.
நடு நடுவே அவள் பேசியது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் இறங்கும்
இடம் வந்ததும் தன் சிறிய உதடுகளை குவித்து கன்னத்தில் முத்தமிட்டாள்
ஈலாஃப் நான் பெற்ற முத்தங்களில் மிகச்சிறந்த முத்தம் அது. பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.
காரின் பின் கண்ணாடி வழியே கையை அசைத்து போவது மங்களான பனியின்
புள்ளிகளுக்கு இடையே தெரிந்தது. நான் ஓவியனா இருந்தால் அந்தக்காட்சியை
வரைந்து வைத்து பின்னாளின் பார்த்து நினைவுகூர்ந்து கொள்ளலாம் என்று
தோன்றியது.

***************************

காதலை சொல்ல குளிர்கால காலைகள் உகந்ததல்ல என்பது அவளிடம் காதலை
சொன்னபோதுதான் தெரிந்தது. தினமும் காலையில் கோபால் நாயுடுவின் மரம்
போன்ற செம்பருத்திச்செடியில் பூக்கள் பறிப்பாள். முதல் நாள் பார்ப்பதுபோலவே
எல்லா நாளும் தோன்றிய நாட்கள் அவை. பள்ளியின் இறுதி பருவத்தின் இருந்த
காலம் அதுவாதலால் நயமாக என் ஆசையை தெரிவிக்க இயலாதவனாகிவிட்டேன்.
என்னை மறுத்தவள் நம் சரக்கல்ல என்று தோன்றியதால் காலப்போக்கில் அவளை
காதலித்ததிற்கான தடயங்கள் என் மனத்தில் அழிந்து போயிருந்தது. ஒரு குளிர்கால
அதிகாலை, திருச்சிக்கு போகும் வழியில் ஒரு கிராமத்து பேருந்து நிறுத்த
நிழற்குடையின் அருகில் முகப்பொலிவுகள் இழந்த ஒரு பெண் இரு குழந்தைகளுடன்
நின்றிருந்தாள். அவளேதான் முப்பது வயதை தாண்டியது போல அம்முகம்
மாறிவிட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்தில் வந்தடைந்தேன்.
நிழற்குடையில் பார்த்த அந்த பத்து நொடிகளை மறந்துவிடு என்றும், பூப்பறிக்கும்
அவள் முகத்தை மட்டும் நினைவடுக்குகளில் பதியவும் போராடி இரண்டுமே
இன்றுவரை என் நினைவில் இரண்டுமே நிலைத்திருக்கிறது.

*******************************

ஒரு குளிர்கால அதிகாலையில்தான் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள கோமுகி
அணைக்கரை தாவடியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் என் நெருங்கிய
நண்பன். இன்றும் தெளிவாக நியாபகம் இருக்கிறது அது மலைப்பிரதேசத்தின்
அடிவாரத்தில் அமைந்த அம்மன் கோயில் அதன் நான்குபுறமும் பிரம்மாண்டமான
மூங்கில் மரங்கள் அடர்ந்து பெரிய வனம் போல காட்சி அளித்தது. இங்கு தினமும்
வந்து சாமி கும்பிடுவாள் என்றும் சொன்னான். மேலும் இன்று தன் காதலை
வெளிப்படுத்த போவதாகவும் சொன்னான். அவனை விட இரண்டு வயது மூத்தவள்
அவள், பத்தாவது தவறி இரண்டாண்டுகள் கழித்து தேறியவள். வழக்கமான கிராமத்து
பெண் அவள். நாசூக்கான மறுப்புகள் சொல்லத்தெரியாதவள். என்னவோ புணரத்தான்
அழைத்தது போல அவள் ஆர்ப்பாட்டம் செய்து செருப்பை நீட்டிவிட்டாள். மறுநாள்
குளிர்பிரிந்த காலையில் வயலின் நடுவே இருந்த மரத்தில் தொங்கிவிட்டான்.
இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.

********************************

அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்து ரசித்த பெண்ணொருத்தி குளிர் கால
விடியலில் என்னிடம் லிப்ட் கேட்டாள். அந்த நிகழ்வு எனக்கு சுவாரசியமானது.
ஒரு குளிர்காலத்தின் விடியலிள் அவள் பள்ளித்தோழிகளுடன் நடந்து
வந்துகொண்டிருந்தாள் உடன் இருவர் இருந்தனர். அப்போதுதான் புதிதாக சுசுகி வாங்கியிருந்தார்கள். யாருமில்லாத சாலையில் ஓட்டிப்பழக எடுத்துச்சென்றேன்.
பத்திருபது கிராமங்களை அணைத்து போகும் அந்த சாலை பல வளைவுகளை
கொண்டது. தோழிகளுடன் வந்துகொண்டிருந்தவள். ஏதோ உற்சாக மிகுதியில்
லிப்ட் கிடைக்குமா என்று கத்தி விட்டாள். சற்று தூரம் கடந்திருந்த நான் வண்டியை திருப்பினேன்.

அவளை நெருங்கியவுடன் அவள் இரண்டு தோழிகளுக்குப்பின் முகம்
மறைத்துக்கொண்டாள் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், மன்னிச்சிடுங்க என்று
சொன்னாள். சிரித்துக்கொண்டே கிளம்பினேன். பிறகு பேருந்திலோ, கடைத்தெருவிலோ, தெருவை கடக்கையிலோ சின்னவெட்கத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்து முகம்
மறைக்க இடம் தேடுவாள்.

********************************

ஒரு குளிர்கால இரவில்தான் எங்கள் ஊரில் உள்ள கூந்தல் நீளமான பெண்ணொருத்தி
ஒன்பதாவது பெயிலானாள் என்று தீக்குளித்துக்கொண்டாள். அவளின் கூந்தல் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கே கூந்தல் நீளமான கேரளத்து சேச்சிகளை காணும்
போதெல்லாம் முத்துலஷ்மி என்ற அப்பெண்ணின் நினைவு வரும். பெயிலானதுக்கெல்லாம்
தீக்குளிக்க ஆரம்பித்தால் நான் பதினெட்டுக்கும் அதிகமான முறை தீக்குளிக்க வேண்டும்.

*******************************

குளிர்கால அதிகாலையில்தான் என்னை வளர்த்த பாட்டி இறந்து போனாள்.

ஒரு குளிர்கால இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில்
விரைத்து செத்துப் போயிருந்தது.

ஒரு குளிர் நிரம்பிய இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு
வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த
நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் நியாபகம் வரும்.

ஒரு குளிர் நிரம்பிய அதிகாலையில்தான் கொடைக்கானலின் லாட்ஜ் ஒன்றில் மிக
அதிகபட்சமாக குடித்திருந்தேன்.

குளிர் நிரம்பிய இந்த இரவில்தான் பாம்பே ஜெயஸ்ரி பாடிய பாரதியின் கவிதைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். வரும்கால குளிர் இரவுகளில் பாரதியும் பின் ஜெயாவின்
குரலும் என் நினைவுக்கு வரலாம்.

வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களை இந்த
குளிர்காலம் தந்திருந்தாலும் வெயிலைப்போல அத்தனை கொடுமையாக
இருக்கவில்லை. வெயில் கால நினைவுகளுடன் பிறகு வருவேன்.
(விடமாட்டோம்ல )