எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, May 10, 2008

காலம் தவறிய சொற்களின் குவியல்

கடிதங்கள் எப்போதுமே நேரில் பேச முடியாத வார்த்தைகளால் நிரம்பிருக்கின்றன.
எந்த காலத்திலும் திருப்பி வாங்கிக்கொள்ள முடியாதவை அவை. தொலைபேசி
உரையாடலைப்போல் அல்லாத அவற்றின் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு. என்
பதின்ம வயதில் பலபெண்களால் ஈர்க்கப்பட்டிருந்தும் ஒருத்திக்கு கூட கடிதம்
எழுதாததை நினைத்தால் வேதனையளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கடிதம் இனியும்
எழுத சாத்தியமில்லாமல் போவதால் இப்போதே எனக்கு ஒரு கடிதம் எழுத
வேண்டும் என்று தோன்றுகிறது. என் காதலிகளான நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்.
இந்த கடிதத்தை உங்கள் எவர் கைக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது என்
பொறுப்பு. பிறகெதற்கு கடிதம் என்று கேட்கலாம். இக்கடிதத்தை எழுதி முடித்த
கணம் நீண்ட காலமாக என் மனதை ரணமாக்கி வந்ததை ஒரு முடிவுக்கு கொண்டு
வரலாம். ஆகவே காதலிகளே பயம்கொள்ள அவசியமில்லை.




அன்புள்ள தீபா

இக்கடிதத்தை எழுதும் கணம் என் இடது கன்னத்தில் உனது உதடுகள் விட்டுச்சென்ற
எச்சிலை தடவிக்கொள்கிறேன். எப்போதும் முத்தத்தோடு எச்சிலையும் சேர்த்தே
விட்டுச்செல்பவள் நீ. இதுகுறித்து எனக்கு எதுவும் கோபம் இல்லை. உன் அம்மா
உனக்கு சோறூட்டும்போது அடம்பிடிப்பாய். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் நமக்கு திருமணம் செய்து வைப்பதாக சொன்னபிறகுதான் நீ சாப்பிடுவேன் என்றது ஞாபகமிருக்கிறதா. பிறகு ஒவ்வொரு முறை இரவு உணவின்போது அதே
வாக்குறுதியை பெறுவதில் உனக்கு ஆனந்தம். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.
லிட்டில் மேரி பள்ளியை மறந்திருக்க மாட்டாய் என நம்புகிறேன். வகுப்பு பிரித்து
உட்கார வைக்கும்போது என்னைத் திரும்பி பார்த்துக் கொண்டே அழுது சென்றதை
எப்படி மறக்க முடியும் தீபா? நம் காதல் மூன்றாண்டுகள் வளர்ந்திருக்குமா? நாம்
மூன்றாவது படிக்கும்போது கடைசியாக பார்த்தது. இருபது ஆண்டுகள் கடந்து
விட்டது இப்போது. நாங்கள் வீட்டை காலி செய்தபோது நீ அழுவாய் என்று
உன்னை வேறு இடத்திற்கு கொண்டு சென்றார்கள் உன் அப்பாவும் அம்மாவும்.
அதை நீ அறியாமல் சைக்கிளில் ஏறி அமர்ந்து சென்று விட்டாய். உனக்கும்
சேர்த்து நான் அழுதேன் தீபா. உன் தங்கையிடம் பத்து நாளில் திரும்பி வந்து
உன்னைப் பார்ப்பேன் என்று சொன்னதை உன்னிடம் சொன்னாளா?

கேட்க மறந்துவிட்டேன் தீபா? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
உன் கணவனுக்கு காபி கலந்து தருகிறாயா? மிக்சியை ஓடவிட்டு சீரியலின் வசனம்
புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தைக்கு பாலூட்டுகிறாயா?
அல்லது அவசர அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறாயா?
நீ இறந்திருக்க மாட்டாய் என நம்புகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாய் என்று
தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. உன் பிஞ்சு முகத்தை நினைக்கையில்
நானும் அந்த பருவத்திற்கே செல்கிறேன். இப்போது வளர்ந்து பெரியவள்
ஆகியிருப்பாய். மழலையின் சுவடுகள் மறைந்து போய் வேறு ஏதோ உருவில்
நீ காட்சியளிப்பதை நான் காண விரும்பவில்லை. என்றாவது துர்சொப்பனம்
காணும்போது நான் இறந்திருப்பேன் என்பதை யூகித்துக்கொள். அதற்குமுன்
நீ ஐந்து வயது சிறுமியாக மாறி என் கன்னத்தில் முத்தமிடுவாயா தீபா?

வருகிறேன் தீபா.

அன்புள்ள கவிதா

எனக்குப் பிடித்த பெண்களை நான் காதலி என்றே அழைத்துக்கொள்வென். ஆகவே
கவிதா நீ அதிர்ச்சி அடையவேண்டிய அவசியமில்லை.

நம் முதல் சந்திப்பு ஐந்தாம் வகுப்பு படித்தபோது நடந்தது. நீ ஆர்ப்பாட்டமாக
பள்ளிக்கு வந்திறங்கிய அன்றைய தினம் நான் மறக்க முடியாத நாள். செருப்பில்லாமல்
பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் நீ குதிரை பூட்டிய வில்வண்டி
ஒன்றில் இருந்து வகுப்பிற்கு வந்தாய். அன்றே முடிவுசெய்துவிட்டேன் உன்னை
காதலிக்க வேண்டும் என்று. வகுப்புத் தலைவனாக உனக்கு பல சலுகைகள்
அளித்தும் நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உன்னிடம் பேச வரும்
போதெல்லாம் ஏளனமாக பார்ப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
சிலேட்டில் குண்டு குண்டு வார்த்தைகளால் கவிதா என்று எழுதி உன்னிடம்
காண்பித்தபோது அதன்மேல் தண்ணீர் ஊற்றி அழித்தாய் ஞாபகமிருக்கிறதா
கவிதா? அழகை உனக்கு பிடிக்காதா? நீ கூடத்தான் அழகாக இருக்கிறாய்.

என் நண்பர்களோடு பொன்வண்டு சேகரிக்கவும், திருட்டு மாங்கா ருசிக்கவும்
ஒரு மாந்தோப்பிற்குள் நுழைந்தேன். கூட்டு வகையினை சேர்ந்த மாங்கா
தோப்பு அது. உப்பு, காய்ந்த மிளகாயும் வைத்து சாப்பிட அதையும் கால்சட்டை
பையிலேயே வைத்திருந்தோம். திடிரென உன் சித்தப்பா வந்துவிட்டார்.
எங்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். உங்களுக்கு சொந்தமான தோப்பு
என்று தெரிந்திருந்தால் நான் சத்தியமாக நுழைந்திருக்க மாட்டேன். தீர
சாகசத்தை செய்ததைப் போல உன் சித்தப்பன் குடும்பத்தையே அழைத்து
எங்களை காண்பித்தான். அப்போதாவது சொல்லியிருக்கலாம் என்னை உனக்கு
தெரியும் என்பதை. அன்றுதான் கவிதா உன் மீது எனக்கு உச்சகட்டமாக
வெறுப்பு வந்தது ஆனால் நேரில் உன் முகம் காண்கையில் காதலைத்தவிர
வேறெதுவும் வரவில்லை.

ஐந்து முடித்து ஆறு செல்லும்போது நீ ஹாஸ்டலில் சென்று படிப்பதாக நண்பர்கள்
மூலம் அறிந்தேன். இப்போது என்ன செய்கிறாய் கவிதா? எனக்குத் தெரியும்
உனக்கு நல்ல கணவனை உங்கள் அப்பா வாங்கித் தந்திருப்பார். அனேகமாக
நீ வெளிநாட்டில் கூட இருக்கலாம். இக்கடிதம் உனக்கு வர வாய்ப்பில்லை ஆகவே
எந்த குற்ற உணர்வுமில்லாமல் அபஸ்வர குரலுடன் கூடிய உன் குரலுடன் மிதமான
ஷவர் குளியலில் சந்தோஷமாயிறு கவிதா. உன் கணவன் வெளியே சனியன்
என்று மனதுக்குள் வைது கொண்டிருப்பான்.

அழகான சுகந்திக்கு

உன் தீர்க்கமான கண்களுக்கு இணையாக உலகில் எந்தக் கண்களுமே இருக்க
வாய்ப்பில்லை சுகந்தி. ஆச்சரியமாக இருக்கும் உனக்கு. நான் எப்போது உன்னை
காதலித்தேன் என்று. அதற்கு முன்பாக உன்னிடம் சில மன்னிப்புகள் கேட்க
வேண்டும் சுகந்தி. ஆம் நீ குளித்துக் கொண்டிருக்கும்போது நான் உன்னை
முழுநிர்வாணமாக பார்த்துவிட்டேன். ஆனால் அதை நீ அறியவில்லை. ஒரு
பெண்ணை அதற்கு முன் நிர்வாணமாக கண்டதில்லை என்பதால் அன்று முழுவதும்
ஒருவிதமான குற்றவுணர்வுடன் கூடிய மனநோய்க்கு ஆளானேன். என்னை எனக்கு
பிடிக்காமல் போனது. நாயக்கர் வீட்டு தோட்டத்திற்கு நீ தினமும் செம்பருத்திப்பூ
பறிக்க வருவாய். அதற்கு முன்னரே நான் அங்கு சென்று உனக்காக காத்திருப்பேன்.
எவரையும் உனக்கு முன் பூப்பறிக்க விடவும் மாட்டேன். பள்ளிச்சீருடையுடன்
நீ தூரத்தில் வரும்போதே தென்னையின் பின் ஒளிந்து விடுவேன். ஒற்றைச்
செம்பருத்தியை ஏன் சுகந்தி உனக்கு பிடிக்கவில்லை. அடுக்கு செம்பருத்தியை
விட அதுதான் அழகாக இருக்கும். அடுக்கு செம்பருத்தி ஒருவிதமான ஒழுங்கு
இல்லாமல் இருக்கும். அதை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இதையும் உன்னிடம்
ஒருமுறை சொல்லியே இருக்கிறேன்.

வெகுநாட்கள் கழித்துதான் நீ என்னைவிட ஒருவயது மூத்தவள் என்று அறிந்தேன்.
எப்படி எனக்கு முன் நீ பிறந்தாய் சுகந்தி. இப்போதுதான் வயதுக்கும் காதலுக்கும்
சம்பந்தமில்லை என்று அறிந்தேன். இப்போது என்னை ஏற்றுக்கொள்வாயா சுகந்தி?
உன் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து உன்னை வரவேற்கிறேன்.

அன்புள்ள தேவிக்கு

கொஞ்சம் விவரம் தெரிந்த பின்பு நான் சந்தித்த முதல் பெண் நீதான். ஆச்சாரமான
அய்யர் வீட்டு பெண்ணான உன்னை காதலிப்பதாக நண்பர்களிடம் பெருமிதமாக
சொன்னதை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். உன்னிடம் பேச எனக்கு
நிறைய வாய்ப்புகள் இருந்தும் எனக்கு அதிக தயக்கம் உண்டு. காரணம் நீ
மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி. நான் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவன்.
தும்பைப்பூ நிறத்தில் நீ வெண்ணிற ஆடைகளுடன் பள்ளிக்கு புறப்பட நானோ
என் துருப்பிடித்த சைக்கிள் கிரீஸ் கரை தொய்த்த பேண்ட் அணிந்து செல்வேன்.
ஆனால் இந்த பாரபட்சமெல்லாம் துடைத்து எறியும் விதமாக உன் அன்பு என்னை
மாற்றியிருந்தது. நீ மொட்டை மாடியில் நின்று காட்டிய சைகைகளுக்கு இன்றுவரை
எனக்கு அர்த்தம் புரிந்ததே இல்லை. ஆனாலும் அதை ரசித்துக் கொண்டிருப்பேன்.
பதினொன்றாம் வகுப்பு விடுமுறை நாட்களில் நமக்குள் நெருக்கம் அதிகமானது.
உனக்கு சைக்கிள் ஓட்ட கத்துகொடுத்ததை இன்றுவரை பாக்கியமாக கருதுகிறேன்.
வாடகை சைக்கிள் எடுக்க அம்மாவின் சேமிப்பில் இருந்து நிறைய திருடி இருக்கிறேன்.
ஆனால் அதெல்லாம் ஒரு திருட்டே அல்ல.

புத்திசாலிப்பெண்ணான நீ ஒரே வாரத்தில் நன்றாக ஓட்ட பழகினாய். நாம் முத்தமிடும்
அளவுக்கு நெருங்கினோம். உன்னிடமிருந்து வரும் பாண்ட்ஸ் பவுடரின் வாசனைக்கு
நான் அடிமை தெரியுமா? அதற்க்காகவே மிகவும் நெருங்கி அமர்ந்து பேசுவேன்.
இப்போது என்ன பவுடர் உபயோகிக்கிறாய்?

உன் அக்கா உன்போல அறிவானவள் அல்ல. அவளுக்கு அப்படி என்ன அரிப்பு?
ஆச்சாரத்தை கெடுப்பது போல எவனுடனோ ஓடிவிட்டாள். அவள் எவனுடனோ
ஓடியிராவிட்டால் நான் உன்னுடன் எங்காவது ஓடியிருப்பேன். அவள் திரும்பி
வந்துவிட்டாளா? வந்தால் ஒரு பளார் அறையுடன் என் நன்றியைச் சொல்.
அதற்கு முன் இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்றாவது சொல்.


அன்புள்ள தேன்மொழி.

உன்போல கருணையுள்ளவள் என் தாய் மட்டுமே. என் காதலிகள் வரிசையில் நீ
இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? உன் அழகு குறித்து
நம் பள்ளியே கேலி செய்தது உன்னை தினமும் அழச்செய்திருக்கும். ஆனால்
அபாரமான உன் படிப்பறிவைக் கண்டு தலைமையாசிரியரே பாராட்டியிருப்பதை
நம் பள்ளி அறியும். என்மேல் ஏன் தேன்மொழி உனக்கு அவ்வளவு பிரியம்?
நான் விடை தேடிக்கொண்டிருக்கும் கேள்விகள் முதன்மையானது இதுதான்.
எனக்காக வீட்டுப்பாடங்களை என் நோட்டுபுத்தகத்தில் எழுதுவாய். எனக்குப்
பதிலாக ஆசிரியரின் கேள்விக்கு விடையளிப்பாய். அறிவியல் கூடத்தில்,
கணக்கு சொல்லித்தருவதில், படிப்பதில் ஆர்வத்தை அதிகரிக்க வைத்ததில்
நீ என்மீது காட்டிய அக்கறை அளவிட முடியாதது. அத்தனை பேர் இருக்க நீ
என்மீது மட்டும் ஏன் அதிகபட்ச அன்பு செலுத்தினாய்?

உன்னை கருவாச்சி என்று பலர்முன் அழைத்தபோது கார்த்திக்குடன் சண்டையிட்டேன்
மறுநாள் வகுப்பரையில் நீ என்னை கண்கள் பனிக்க பார்த்தாயே அதையே என்மீது
உன் அளவில்லாத அன்பின் பதிலாக ஏற்றுக்கொள்ளட்டுமா? எதுவாயினும் நான்
என் காதலை உன்னிடம் சொல்லாததில் கூட ஒரு சுயநலம் இருக்கிறது. கார்த்திக்
பலர் முன்னிலையில் சொன்னான். நான் உன்னிடம் சொல்லவில்லை. ஆனால்
உன்மீது தாய்மையுடன் உள்ள என் காதலை நீ அறியமாட்டாய். என் காதலை
தெரிவிக்கும் அக்கணத்தில் பரிதாபத்தில் விளைந்ததாக நீயும் புனிதமான நம் நட்புடன்
கூடிய காதலை நானும் எங்கு சென்று மீட்போம்?. அதனால்தான் நான் உன்னிடம்
என் காதலை தெரிவிக்கவேயில்லை. ஆனால் இன்றுவரை உன்னை நினைக்கும்போது
மனதுக்குள் நிறைவாக இருக்கிறது தெரியுமா தேன்மொழி?

உனக்கு இன்னும் திருமணம் ஆகாதது தெரிந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்
அதற்காக மன்னித்து விடு தோழி. இன்னமும் நான் உன் நினைவிலிருந்தால் நம்
அடுத்த சந்திப்பில் என் காதலை தெரிவிப்பேன் காத்திரு தோழி. நாமிருவரும்
இக்கடிதத்தை ஒருசேர வாசிப்போம்.

அன்புள்ள அமுதா

உன் குரலைப்போன்று இனிமையான குரல் இந்த உலகில் நடிகைகளுக்குத்தான்
இருக்கிறது. உன் தங்கை நலமா? நினைவிருக்கிறதா அமுதா?

ஒருநாள் அடைமழை... தெருவில் எவருமில்லை. நீயும் உன் தங்கையும் மிக
சிரமத்துடன் ஒரு குடைக்குள் முழுதாக நனைந்தபடி வந்தீர்கள். ஒரே நேரத்தில்
ஒரு நிலவையும் ஒரு குட்டி நட்சத்திரத்தையும் மின்னல் கீற்றின் நடுவே பார்த்தது
போல இருந்தது. அதுமுதல் உன்மீது பைத்தியம் ஆனேன். நீயும் நானும் ஒரே
கல்லூரியில் படித்தது இன்னும் எனக்கு வலுசேர்த்தது. அழுத்தமாக உன்மீது
நான் பார்வையை பதியவிடுவதால் நீ என்மீது எரிச்சல் அடைந்து "உனக்கு என்ன
வேணும்னு" என்னிடம் கேட்டாய் நினைவிருக்கிறதா? அதுதான் நமக்குள் நடந்த
முதல் சம்பாஷணை. அன்றுமுதல் நாம் தினந்தோறும் பேசுவதை ஒரு வேதமாக
எடுத்துக்கொண்டோம். விடுமுறை நாட்களில்கூட நாம் தொலைபேசியும் பேசுவோம்.

குழந்தையைப்போல
பூனையின் பாதத்தைப் போல
மானின் விழியுயர்த்தல் போல
எப்படி அமுதா உன்னால் இவ்வளவு அழகாக ஏற்ற இறக்கங்களுடன் கொஞ்சிப்பேச
முடிகிறது?

பெண்களுடன் அதிகமாக பேசியதை கணக்கெடுத்தால் என் வாழ்க்கையில் உன்னிடம்
மட்டுமே அதிகம் பேசியிருப்பேன். நிறைய சந்தோஷமாக இருந்ததாலோ என்னவோ
திடிரென பயங்கர விவாதத்துடன் நாம் பிரிந்தோம். அழுக்குகளை நான் மறந்து
அச்சடித்த பிரிக்கடிதத்தை கொடுத்தபோதும் நீ ஏற்கவில்லை. உனக்காக என்
நேத்திரங்கள் தினமும் கசிந்தது உனக்கு தெரியாது. அதைத் துடைக்கத்தான்
ஜெயலஷ்மி வந்தால். ஆனால் அவளை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தெரியுமா?
அதையும் நீ தவறாகவே புரிந்துகொண்டாய். அவளுக்கு பாசாங்குகள் நிறைந்த
கண்கள் அதை நீ கவனித்திருக்கிறாயா அமுதா? வாய்ப்பில்லை.

முடிந்தது முடிந்தது. வாழ்வில் நான் காதலை முழுமையான அர்த்தத்துடன் புரிந்து
காதலித்தது உன்னுடன் மட்டுமே. உன் தங்கை இப்போது உன்னுடன் அழகாக
இருப்பாள் என்று நினைக்கிறேன். இதையும் தவறாக புரிந்துகொள்ளாதே.

சாந்தி, குறலி, ரம்யா, ஷோபா, நஸீமா, சுஹாசினி, ஷேனாஸ், உஷா
மற்றுமொறு சாந்தி,

உங்களை காதலிக்காதது குறித்து வருந்துகிறேன்.

கடிதத்தை எழுதி முடிக்கையில் உதட்டை விட்டு பிரிக்காது ஒரு சிகரெட்டை ஊதி
விடவேண்டும் என்ற சந்தோஷம். விசில் அடித்தபடி எழுந்து வெளியே சென்றேன்.
அங்கொரு நட்சத்திரம் என்னைப்பார்த்து கண்சிமிட்டியது. ஆண்டாண்டு காலமாக
அப்படிதான் ஒளிர்ந்து வருகிறது. நாம்தான் தவறாக அர்த்தம் கொள்கிறோம்.
ஒருதலைக் காதலைப்போல.

12 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//கடிதங்கள் எப்போதுமே நேரில் பேச முடியாத வார்த்தைகளால் நிரம்பிருக்கின்றன.
எந்த காலத்திலும் திருப்பி வாங்கிக்கொள்ள முடியாதவை அவை. தொலைபேசி
உரையாடலைப்போல் அல்லாத அவற்றின் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு.//

Nice!

கப்பி | Kappi said...

:)

excellent!

கோபிநாத் said...

நல்லா இருக்கு..;)

சுரேகா.. said...

ஆஹா, அற்புதம் ! லெவல் எங்கயோ போய்க்கிட்டிருக்கு! கடித தினம் வந்தப்ப நானும் ஏதாவது எழுதலாமேன்னு யோசிச்சேன். ஆனா உங்க அளவுக்கு எழுத முடியாது. ரொம்ப சூப்பர்!

கதிர் said...

நன்றி மதி.
இந்த கடிதத்தை எழுத காரணமானவர் புதுவிசை லஷ்மி சரவணக்குமார்.
அந்த பதிவை பார்த்ததினால் வந்த பாதிப்பில் உருவானது இந்த சிறுகதை.

கப்பி,
http://www.keetru.com/visai/jan08/lakshmi_saravanakumar.php
இது என்னுடையதை விட அருமையான பதிவு.

நன்றி கோபி

சுந்தர்
சத்தியமா கடித தினம் வந்து போனது எனக்கு தெரியாதுங்க சுந்தர். எதோ எழுதினா இப்படியெல்லாமா சொல்றது?

ஆயில்யன் said...

//அங்கொரு நட்சத்திரம் என்னைப்பார்த்து கண்சிமிட்டியது. ஆண்டாண்டு காலமாக
அப்படிதான் ஒளிர்ந்து வருகிறது. நாம்தான் தவறாக அர்த்தம் கொள்கிறோம்.
ஒருதலைக் காதலைப்போல.//

நல்லா இருக்கு :)

Unknown said...

அளவிள்ளாத அன்பின் பதிலாக ஏற்றுக்கொள்ளட்டுமா? (அளவில்லாத என வரவேண்டும்)
கடிதங்கள் நன்றாக இருக்கின்றன
சுவையாகவும் தரமாகவும் எழுதுகிறாய். வாழ்த்துக்கள்

கதிர் said...

நன்றி ஆயில்யன்

சுந்தர்

பிழை திருத்தியாச்சு. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

Anonymous said...

Excellent content… very impressive.

இலவசக்கொத்தனார் said...

தம்பி, நீ காலி!!!!

//அழகான சுகந்திக்கு

உன் தீர்க்கமான கண்களுக்கு இணையாக உலகில் எந்தக் கண்களுமே இருக்க
வாய்ப்பில்லை சுகந்தி. ஆச்சரியமாக இருக்கும் உனக்கு. நான் எப்போது உன்னை
காதலித்தேன் என்று. அதற்கு முன்பாக உன்னிடம் சில மன்னிப்புகள் கேட்க
வேண்டும் கவிதா.//

கதிர் said...

நன்றி முத்து.

இலவச அண்ணாச்சி

அது வேற ஒண்ணுமில்ல வைரஸ் பிரச்சினைதான். சரி பண்ணியாச்சுங்க கொத்ஸ்.

ஆனாலும் உங்களுக்கு கழுகு கண்ணு. :)

கண்டுபிடிச்சு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

J J Reegan said...

//அங்கொரு நட்சத்திரம் என்னைப்பார்த்து கண்சிமிட்டியது. ஆண்டாண்டு காலமாக
அப்படிதான் ஒளிர்ந்து வருகிறது. நாம்தான் தவறாக அர்த்தம் கொள்கிறோம்.
ஒருதலைக் காதலைப்போல.//

Execellet...