எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, May 05, 2008

ஞானக்கூத்து - மா.அரங்கநாதன்

அந்த பழைய புத்தக கடை பெண்கள் பள்ளிக்கும் காய்கறி மார்கெட்டுக்கும்
பின்புறம் இருந்தது. காய்கறிகளின் அழுகின வாடை. சுவருக்கு அந்தப்பக்கம்
பள்ளிப் பெண்களின் மனன கோஷம். புத்தக கடையை வெளியிருந்து பார்ப்பவர்
காயலான் கடை என்று சொல்லத்தகுந்த தோற்றம். அந்த வழியாக நடந்து
கடக்கும்போது உள்ளே நுழைந்து பார்க்க தோன்றியது. குறிப்பிட்ட சில
எழுத்தாளர்களின் பெயர் சொல்லி அவர்கள் எழுதிய புத்தகம் எதாவது இருக்குமா
என்று கேட்டேன். அவரோ யார் எழுதினது என்ற விவரமெல்லாம் தெரியாதுங்க.
ஆனால் எதோ சிலது இருக்கும் நீங்களே தேடி பாருங்க, கிடைச்சு பிடிச்சிருந்தா
எடுத்துகிட்டு போங்க என்றார்.

சுந்தர ராமசாமியின் "மேல்பார்வை" சிறுகதை ஒன்று உருப்படியாக கிடைத்தது.
ஓஷோ புத்தகம் ஒன்று (இன்னமும் பிரிக்கவில்லை) இரண்டு மூன்று கவிதை
புத்தகங்கள். பிரபலமே இல்லாத சிலரின் கவிதைகள். புகழ் என்ற வட்டம்
இருந்திருந்தாலோ, அல்லது பிரபலாமன ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தால் புகழ்பெற்றிருக்கலாம் அவை. எங்கு பார்த்தாலும் மண்மலர், யவனராணிகளும்
இருந்தது. சாண்டில்யன் வாங்கிக்குங்க சார் அதான் "பாஸ்ட் மூவிங்" என்றார்.
அது இல்லன்னா இது எடுங்க என்று ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை காட்டினார்.
அது ஒரு மலைபோல் குவிந்திருந்தது. எவரும் படித்தவுடன் இங்கு வந்து போட்டுவிடுவார்களோ என்று கூட சந்தேகம் வந்தது.

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச்சிறுகதைகள் ஒன்றை வாங்கினேன். எல்லாம்
முடிந்து காசு கொடுத்து புறப்படும்போது வாங்குபவர்களை தெம்பூட்டும் விதமாக
ஒரு புத்தகத்தை இனாமாக கொடுத்தார். "யாருமே வாங்கல சார் ரொம்ப நாளா
இருக்குது". அதுதான் மா.அரங்காநாதன் அவர்கள் எழுதிய ஞானக்கூத்து என்ற
சிறுகதை தொகுப்பு.

முன்பே கதாவிலாசத்தில் மா.அரங்கநாதனைப் பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே
படித்திருந்தேன். எங்கு கிடைக்கலாம் இவை என்று யோசனையில் அவற்றை
வாங்கும் முயற்சியில் மட்டும் இருந்தேன். மேற்கொண்டு எதையும் செய்யவில்லை.

அப்புத்தகத்தின் முதல் பக்கங்கள் சில இல்லாததினால் அதை நாவல் என்று எண்ணியே
வாசிக்க ஆரம்பித்தேன்.வரிசை எண்களையும் அத்தியாயம் என்று நினைத்தேன்.
ஒவ்வொரு சிறுகதையிலும் பிரதான பாத்திரமாக முத்துக்கருப்பன் என்பவர் இருந்தார்.
ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாது இருந்தது. இணையத்தில் மறுபடியும்
அரங்கநாதனைப் பற்றிய கதாவிலாசத்தை வாசித்தபோது சிறுகதை தொகுப்பு என்று
குறிப்பிட்டிருந்தது. ஒரே பெயர் அனைத்து சிறுகதையிலும் வந்தாலும் அனைத்தும்
தனித்துவம் கொண்ட சிறுகதைகள்.

அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர். மிக நுண்ணிய அவதானிப்புகளை தமிழ்ச்
சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலேயே எழுதியவர். இப்போது வாசிக்கும்போது கூட
பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நகரத்தின் இயல்பை பிரதிபலிப்பதாகட்டும்
கிராமத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகட்டும் என்று எல்லாமும் காட்சிப்படுத்த
முடிகிறது.

நீங்கள் எங்காவது வழிதெரியாத இடத்தில் சிக்கி தடுமாறி இருக்கிறீர்களா? ஆரம்ப
இடத்திலே கடைசியாக வந்து சேர்ந்து இருக்கிறீர்களா. அப்போது உங்கள் மனநிலை
என்னவாக இருக்கும். நகரத்து நெரிசலில், அனைத்து தெருக்களும் ஒன்று போலவே
காட்சியளிக்கும் குழப்பநிலையின்போது உங்கள் உணர்ச்சிகள் என்னவாக இருக்கும்.

ஒருமுறை அய்யனார் என் அறைக்கு வர வழிகேட்டார். அதற்கு முந்தின தினம் கூட்
வந்திருந்தார். இன்று வழிமறந்து விட்டது போலும். ஐந்துக்கும் அதிகமான முறை
செல்பேசியில் அழைத்து வழிகேட்டு சரியாக தவறான பாதையில் சென்று எங்கோ
சென்றுவிட்டார். மறுபடியும் அழைத்து "என்னை எப்படியாச்சும் இந்த குழப்பத்துல
இருந்து காப்பாத்துடா" என்று கதறி அழுவாத குறை. கருணையற்ற கோடையில்
வழிதெரியாது நிற்பவருக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. நானே நேரில்
சென்று அழைத்து வந்தேன். நகரங்களின் அமைப்பு அப்படி. தினமும் சென்று
வந்தாலேயொழிய வேறு வழி இல்லை.

ஞானக்கூத்து நூலின் முதல் சிறுகதை இப்படிதான் ஆரம்பிக்கிறது. பிரம்மாண்டமான
நகரத்தின் எதோ ஓர் மூலையில் அபூர்வமான திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதாக
அறிந்து அதைக் காண புறப்படுகிறான் முத்துக்கருப்பன். செல்லும்போது பாதை
குறித்த குழப்பம். அவரவர் ஒரு வழி சொல்கிறார்கள். மிகுந்த சிரமத்துக்கிடையில்
திரை அரங்கினை அடைகிறான். சொற்பத்திலும் சொற்பமான பேர் ரசிக்கிறார்கள்.
படம் முடிந்து ரயில்நிலையம் செல்லும்போதும் குழப்பம். மறுபடியும் வழிகேட்டு
வழிகேட்டு நடக்கிறான். இறுதியாக தண்டவாளத்தை காண்கிறான். தண்டவாளத்தை
தொடர்ந்தபடி செல்கிறான். பேரிரைச்சலுடன் ரயில் வருகிறது பயந்து பின்வாங்கி
பக்கத்து தெருவில் நுழைகிறான். திரும்பவும் வழிதவறுகிறது, இருட்டு, ஆள்
இல்லாத நீண்ட தெருக்கள். தூரத்து சோடியம் விளக்கை நோக்கி கால்கள்
விரைகின்றன. நெருங்குகையில் சற்றுமுன் பார்த்த அதே திரை அரங்கின் வாசலில்
அவன் நிற்கிறான்.

மற்றொரு சிறுகதையான எலி என்ற சிறுகதையை அடக்குமுறையில்தான் வன்முறை
பிறக்கிறது என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இக்கதையும்
முத்துக்கருப்பனை சுற்றியே வரும். உயிர்களை துன்புறுத்துவதற்கு எதிரானவரான
முத்துக்கருப்பன் சிற்றறிவுடைய உயிரினங்களை கூட கொல்லத்துணிபவர் அல்ல
அவருடைய மனைவியும் மகளும்தான் வீட்டில் அதம் பண்ணும் எலிகளை
படீரென்று கொல்லும் நேரத்தில் வெளியில் நிற்பார். தன் நண்பனுடைய நிறுவனத்தில்
மகளுக்கான நேர்முக அழைப்புக்கு இவரும் வரவேண்டுமென மகள் சொல்கிறாள்.
அரைமனதுடன் செல்கிறார். அலுவலகத்தின் உள்ளே
"கொல்"
"இன்றே கொல்"
"விடாதே"

எலி பாஷாணம் முதலான பொருள்களை தயாரிக்கும் நிறுவனம் அது.

என்ற வாசகங்கள் இருக்கிறது. தன் தந்தையின் உதவி கிடைக்காது என்பதை அவளே
புரிந்துகொள்கிறாள். மவுனமாக மு.க வெளியேறுகிறார். தூரத்தில் பிரம்மாண்டமான
பிள்ளையாருடன் கூட்டமாக மக்கள் கூச்சலிட்டபடி வருகிறார்கள். பிள்ளையாரின்
காலுக்கருகில் பெரியதொரு எலி எதையோ தின்கிறது. அவருக்கு பின்பக்கம் ஒரு
அழகிய முகம்மதியர் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கும் கூட்டமாக சிலர்.

அக்கூட்டத்தில் அவரும் சிக்கினார். இப்படியாக முடிகிறது.

அடக்குமுறைக்கு எதிராகத்தான் வன்முறை பிறந்திருக்க வேண்டும்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். ரயிலில் செல்லும்போது
ஜன்னலினூடே மலையை ரசிப்பது, குழந்தை அழும் சத்தம், ஆங்கில புத்தகத்துடன்
ஏளனமாக மற்றவரை பார்ப்பவர், தயிர்சாத பொட்டலம், சூழ்நிலையை இத்தனை
நுண்ணிப்பாக கதையில் குறிப்பிடுவதுதான் வாசகரை ஆர்வத்துடன் வாசிக்க
செய்யும். வெறுமையான வார்த்தைகளை நிறைத்து புனையப்படும் கதைகளுக்கு
மத்தியில் உணர்வுகளை எழுத்தாக்குவது சாதனைதான்.

ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது போலவே ஏடு தொடங்குதல் குறித்த கதை
என் தலைமுறையில் கூட இல்லை. இப்படி நிறைய விஷயங்களை தொலைத்து
விட்டுத்தான் இந்த நிலையை நாம் அடைந்திருக்கிறோம்.

வெகுஜன வாசகர் மத்தியில் அறியப்படாத படைப்பாளியாக இருப்பினும் இலக்கிய
வட்டத்தில் அறிமுகம் தேவைப்படாதவர் அரங்கநாதன். "முன்றில்" என்ற
இலக்கிய இதழின் ஆசிரியராக எல்லாராலும் அறியப்பட்டவர். இவரின் பல்வேறு
படைப்புகள் தேடிப்பார்த்தாலும் கிடைக்குமா என்று தேரியவில்லை. சில
எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே முதல் வாசிப்பிலேயே அவரின் பிற
படைப்புகளையும் படிக்கவேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணமே இவரின்
படைப்புகளை வாசிக்கும்போதும்.

பறளியாற்று மாந்தர், காளியூட்டு என்ற நாவலும், காடன் மலை, வீடுபேறு,
ஞானக்கூத்து, என்ற சிறுகதை தொகுப்புகளும், பொருளின் பொருள் கவிதை
என்ற உரைநடை கவிதையும் படைத்திருக்கிறார்.

The old man and sea ஆங்கில நாவலை தமிழில் "கிழவனும் கடலும்" என்று
மொழிபெயர்த்த எம்.எஸ் என்று எல்லாராலும் அறியப்படும் எம்.சிவசுப்ரமணியம்
என்பவரின் சகோதரர் மா.அரங்கநாதன்.

5 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குறிப்பிடும்படியான பல சிறுகதைகளை எழுதியுள்ளவர் மா அரங்கநாதன். நல்ல அறிமுகத்திற்கு, நன்றி.

கோபிநாத் said...

உள்ளேன் சார் ;)

Gopi said...

தம்பி தங்கள் பதிவை பார்த்து தான் புயலிலே ஒரு தோணி நாவலை வாங்கினேன், ஆனால் முதலில் படித்து கடலுக்கு அப்பால், Alistair Cambell போல் ஆரம்பித்தாலும் தனக்கு எனற ஒரு அருமையான நடையை கையான்டுள்ளார் ப சிங்காரம் அவர்கள், மிகவும் நுட்பமான கண்ணோட்டத்தோடு அந்த கால மலயாவை நம் கண் முன் கொண்டு வந்துள்ளார். அவர் மேலும் பல கதைகள் எழுதாதது நம் துரதிர்ஷ்டமே.

ரிஷி.
http://tamilkirukal.blogspot.com

Anonymous said...

அறிமுகத்திற்கு நன்றி.
....
மா.அரங்கநாதன், எம்.எஸ்சின் சகோதரர் என்பது எனக்குப் புதிய செய்தி.

கதிர் said...

நன்றி சுந்தர், கோபி,ரிஷி, DJ