எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, June 07, 2006

என்னை பாதித்த ஒரு சம்பவம்

ஒரு சாதாரண விஷயம் என் மனதை எப்படி பாதித்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதை ஒரு விபத்து என்று சொல்ல முடியாது, திட்டமிட்ட கொலை என்றும் சொல்ல முடியாது. விதி என்று கூட வைத்து கொள்ளலாம். எந்த ஒரு உயிரின் மீதும் அதிக நேசம் கொள்ளும்போது அதனை பிரிந்தால் ஏற்படும் வலி நெஞ்சை விட்டு விலகாது. அதை சொல்லுவதுதான் இந்த சம்பவம். மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றலாம் ஆனால் இது என்னை அறியச்செய்தது. நீ இத்தனை கேவலமானவனா இல்லை இத்தனை கோபக்காரனா என்பதை தெரியப்படுத்தியது.

ஒவ்வொரு மனிதருக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒரு செல்லப்பிராணி மீது அதிக பற்றுதல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் பூனை என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த பெண்ணிற்கும் பூனை பிடிக்கும் எனபதாலோ என்னவோ தெரியவில்லை. என் வீட்டில் பொதுவாகவே எந்த ஒரு செல்ல பிராணிக்கும் இடமில்லை. ஏன் என்றால் அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மா ஒரு நாய் வளர்க்கலாம்மா அப்படினு சொன்னால் போடா நாய் வளக்கரானாம் நாய் ஒழுங்கா படிக்கிற வேலைய பாருடா என்பார். எல்லார் வீடுகளிலும் நடக்கும் கதைதான் இது என்றாலும் சிலர் வீட்டில் அடம்பிடித்து வாங்கி வந்து வளர்ப்பார்கள் ஆனால் என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை அப்படியே மறந்து விட்டேன். ஆனால் விதி எலியாக மாறி வந்து வீட்டிற்கு தொல்லை கொடுத்தது.

வேறு வழியில்லாமல் வீட்டில் பூனை வளர்ப்பது பற்றி ஒரு சின்ன ஆலோசனை கூட்டம் போட்டு முடிவெடுத்து விட்டார்கள். நான் சொன்னென், அம்மா புதுசா ஒரு மருந்து கண்டுபிடிசிருக்காங்க அதை வாங்கி வந்து எலிக்கு வச்சோம்னா எலி அதை சாப்பிட்டுட்டு எலி வெளில போய் செத்துடுமாம் என்றேன். அதைதாண்டா பக்கத்து வீட்டுலயும் வச்சாங்க எலி செத்துச்சுதான் ஆனால் அது வீட்டுகுள்ளயே ஏதோ ஒரு இண்டு இடுக்குல போய் செத்து போய் வீடே நாறிபோச்சு என்றாள். அம்மா இவண் சொல்றதெல்லாம் கேக்காதம்மா, நாளைக்கு எங்கயாவது ஒரு பூனையை தேடிப்பிடிச்சி எடுத்துகிட்டு வரேன் என்று குரல் கொடுத்தான் என் தம்பி.
ஆக ஒருமனதா முடிவு செஞ்சாச்சி பூனை வளர்க்கலாம் என்று. அப்போது நான் கேட்டேன் அம்மாவிடம் ஏம்மா உனக்கு பூனை பிடிக்கலனு அதுக்கு அம்மா சொன்ன் ரெண்டு விளக்கம் தந்தாங்க ஒன்று அதோட திருட்டுபுத்தி, ரெண்டாவது அது எங்கயாவது ஒரு மறைவான இடமா பாத்துதான் முக்கியமா அரிசி பானக்குள்ளயோ இல்ல துணி வைக்கிற இடத்திலதான் பேண்டு வைக்கும். இரண்டாவது, ஒரு வீட்டின் எஜமானன் தூங்கிய பிறகு தூங்குமாம் நாய், ஆனால் பூனை எப்போது எல்லாரும் தூங்குவார்கள் என்று காத்திருந்து சமையலறையில் நுழைந்து பாலை திருடி குடிக்கும். ஏம்மா நாய்க்கு ஒரு தட்டு வைக்கிற மாதிரி அதுக்கும் ஒரு தாடு வச்சிட்டா அது ஏன் திருடி குடிக்குது, நீ எப்படி செஞ்சாலும் அதோட குணத்தை மாற்றவே முடியாது என்றாள் அம்மா.

மறுநாளே ஒரு பூனை குட்டியோட வந்துட்டான் என் தம்பி. வெள்ளையும் மஞ்சலும் கலந்த ஒரு பொன்னிறமான கலர். பச்சை கலர் கண்கள். கூரான பற்களுடன் கூடிய கூர்மையான காதுகள். அம்மாவிடம் காட்டினான் ஒரு தணிக்கை குழு அதிகாரியின் பார்வையோடு அதன் வாலை தூக்கி பார்த்தாள் இதை எங்க பிடிச்சிட்டு வந்தியோ அங்கயே கொண்டு போய் விட்டுடு, ஏம்மா என்றான் தம்பி ஏன்னா இது பொட்டை பூனைடா இது நாலு குட்டி போடும் இதெல்லாம் வேலைக்காகாது விட்டுடுனா விட்டுடு. இவ்ளோ பெரிய வீட்ல சின்ன பூனைக்கா இடமில்லைனு அப்பா சொன்னதால பிரச்சினை அதோட முடிஞ்சது.

எல்லாவற்றையும் மிரண்ட படி பார்த்த பார்த்துகொண்டிருந்தது. அதை மெதுவா தூக்கி பார்த்தேன் ரொம்ப பயத்தோட இருந்தது கொஞம் பயத்தை தெளிவிக்க தடவிக்குடுத்தபடியே நானும் உறங்கி போனேன். வழக்கமா வீட்ல காலை மாலை இருவேலையும் டீ போடுவாங்க அப்போ எல்லாம் அதற்கும் கொஞ்சம் குடுப்பேன் இதே மாதிரி எதுவானாலும் அதுக்கும் கொஞ்சம் குடுப்பேன், இப்படியே அதுக்கு குடுத்து பழக்கினா அது எலிய போய் பிடிக்காது எலிதான் அதை பிடிச்சிட்டு போகபோகுது என்றாள் அம்மா.

வந்த கொஞ்ச நாள்ளயே எலியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்தது நல்ல பூனைதான் என்றாள் அம்மா. எனக்கு என்னவோ அது எலிதின்றது பிடிக்கவே இல்லை. இத்தனை அழகும் நளினமும் மென்மையும் கொண்ட பூனை ஒரு கொலை வெறியோட விரட்டி சென்று அதை வாயில கவ்விகிட்டு வாசல் வழியா வெளியேறும்போது அந்த அழகு காணாமல் போகும். அந்த சமயத்தில என்னை யாரும் தடுக்க வேணாம் என்கிற மாதிரி அதோட கண்களில் ஒரு எச்சரிக்கை கலந்திருக்கும்.

என்மீதுதான் அது ரொம்ப பாசம் கொன்டிருப்பதாக எல்லாரும் சொல்வார்கள். உண்மைதானே யார்மீதும் உண்மையான பாசம் காட்டும்போதும் அதே போல தான் நம்மிடமும் பழகுவார்கள். நான் கல்லூரி விட்டு வரும்போது எனக்காகவே காத்திருந்தது போல ஓடி வந்து என் காலை சுற்றும். அதன் வால் என் காலை சுற்றி ஒரு பாம்பை போல படர்ந்து செல்வதை மிகவும் ரசிப்பேன். தாயை பற்றி தந்தையிடம் புகார் சொல்ல அழுது கொண்டே ஓடி வரும் குழந்தை போல இருக்கும் அதன் கண்கலில் என்னை 8 மணி நேரம் பிரிந்திருந்த சோகம் மின்னி மறையும். நானும் அதற்கு பதில் கூறுவது போல ஆதரவாக அதன் முதுகில் தடவி கொடுப்பேன். வெளியில் கிளம்ப தயாரானதும் போகாதே என்பது போல அது பார்க்கும். அதற்காகவே சில நாட்கள் வெளியில் செல்லாமல் இருந்ததுண்டு.

அன்று கல்லூரியில் ஒரு சின்ன பிரச்சினை. வாத்தியாருக்கும் எனக்கும்தான். அதை மனதில் நினைத்து கொண்டே வந்ததால் கோபம் தணியவேயில்லை. விலங்குகளுக்கு மட்டும் மனிதர்களின் மனம் அறியும் திறமை இருந்திருந்தால் அன்று என் பூனை மெல்ல பின் வாங்கி போயிருக்கும் நம் எஜமானன் சற்று கோபமாயிருக்கிறான் என்று. ஆனால் தெரியாதே. வழக்கம்போல ஓடி வந்து என் காலை உரசி நடந்தது. வாடிக்கையான என் புன்னகை அதன் மீது படியவில்லையே என்ற காரணத்தினால் அது மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிகொண்டது. மெல்ல நான் விலகினாலும் அது விடுவதாக இல்லை. தன்னை புறக்கணிக்கிறான் என்பதை தாங்க முடியாத அது ஒரு வேகத்துடன் வந்து என் காலை அதன் கூரான நகத்தால் பிறாண்டியது.

ஏதோ ஒரு வேகத்துடன் அதை காலால் தள்ளி விட்டேன். சின்ன பூனைதானே அது எகிறி போய் சுவற்றில் அடித்து கீழே விழுந்தது. சட்டென நான் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை. நிதானிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அருகில் சென்று பார்த்தேன். தலை நேராக போய் சுவற்றில் மோதியிருந்தது, காதில் இருந்து ரத்தம் வழிவது தெரிந்தது, சுவற்றிலும் சிறிது தெரித்திருந்தது. கால்கள் வலிப்பு வந்ததை போல இழுத்ததுக்கொண்டே இருந்தது சற்று நேரத்தில் அதுவும் மெல்ல நின்றது. அந்த நேரத்தில் என்னில் ஏற்பட்ட மாற்றம் குற்ற உணர்வு அதற்கு முன் ஏற்பட்டதேயில்லை. ஒரு பாவமும் அறியாத சிறு பிராணியை. அதற்கு பின்பும் கூட. என் நேரம் யாரும் வீட்டில் இருக்கவில்லை. அதை அப்புறப்படுத்த மனமில்லாமல் வெறித்து பார்த்துகொண்டிருந்தேன். பழைய துணி ஒன்றை எடுத்து சுவற்றில் தெறித்திருந்த ரத்ததை துடைத்தேன். அதே துணியால் அள்ளி எடுத்து உடலை மறைத்து சுற்றினேன். யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் பாழடைந்த கிணற்றில் வீசினேன். யாருமே தேடவில்லை.

ரெண்டு மூணு நாள் கழிச்சி அம்மா கேட்டாங்க எங்கடா பூனையை காணும்னு தெரியலனு பொய் சொன்னேன். பூனையும் போச்சு எலியும் போச்சு என்று அம்மா நிம்மதி ஆனாங்க. நான் வேணா இன்னொரு குட்டி வாங்கிட்டு வரேன்னு சொன்னான் தம்பி. என்னையும் அறியாமல் வேகமா சொன்னேன் வேணாம் இன்னொரு பூனை வேணாம். எல்லாரும் ஆச்சரியமா பாக்கறாங்க என்னடா இது எந்த நேரமும் பூனையொட விளாடிகிட்டெ இருப்பான் இப்பொ வேணாம்னு சொல்றானே. என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். அந்த சம்பவத்திற்குப்பின் எந்த பூனையை பார்த்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சிதான் தோன்றுகிறது. சில நிகழ்வுகள் நம் நெஞ்சில் உறுத்தலாகவே தங்கி விடும் அது போலவே இது என் வாழ் நாளில் மறக்க முடியாத விஷயம். அன்று முதலே நான் யாரிடமும் கோபம் கொள்வதில்லை.


கதிர்

17 comments:

Anonymous said...

அன்பின் கதிர்,
துபாயிலிருந்து இன்னுமொரு பதிவாளர்.
வாழ்க வளமுடன்!! நிறைய எழுதுங்க. நிறைவா எழுதுங்க!
நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

கதிர் said...

நன்றி ஆசிப்

முதல் பின்னூட்டமிட்டதற்கு இந்த தம்பி நன்றியை தெரிவித்துகொள்கிறான்.
நிறையவும் நிறைவாகவும் எழுத முயற்சி செய்றேன்.

**L* said...

தம்பி நன்றாக எழுதி உள்ளீர்.. வாழ்த்துக்கள்

http://agnisiragu.blogspot.com/

Unknown said...

நன்றாக எழுதியிருக்கிறீர்.

எனக்கும் பூனைகள் என்றால் பிடிக்காது. ஒரு முறை, பிடிக்காத பூனைக்குட்டியை எங்காவது விட்டுவிடலாம் என எடுத்துச்சென்று அதன் கையால் என கை முழுவதும் பிராண்டப்பட்டேன். அப்போது கூட வழியில் பார்த்தவர்கள் எல்லாம், நான் தான் அதைக்கொடுமை படுத்துவதாக சொன்னார்கள். வாயில்லாத ஜீவன் என!

உங்கள் தவற்றை ஒத்துக்கொள்ளும் பண்பு பாராட்டக்கூடியது (தவறு தான் எனினும்!).

கார்த்திக் பிரபு said...

hi welcome ..write more..nalla eludthunga ..ungalai pol pudhiyavargalluku ennai pol oru pudhiyvvar than pinootamiduvaargal..so thalandhu vidatheergal..tamilil type pann iyala villai mannika..appdiye namma blog pakkam vandhu parungu..ungal karuthhkalluku kathirukkirane..varane bye

கதிர் said...

நன்றி கார்த்திக். உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டம் எனக்கு மேலும் உற்ச்சாகத்தை தருகிறது. தொடர்ந்து எழுதவே நினைக்கிறேன். அப்படியே உங்க பின்னூட்ட கவலையும் தீர்த்து வைக்கிறேன்

என்றும் அன்புடன்
தம்பி

நெல்லை சிவா said...

நல்லா எழுதியிருக்கீங்க. பூனையின் சம்பவம், படித்த போதே வலித்தது. உங்களின் வலி அதிகமாகவே இருக்கும். உணரமுடிகிறது.

ஏன் ப்லாக்கர் மட்டுமே பின்னூட்டமிட அனுமதிக்கீறீர்கள், எல்லோரையும் அனுமதியுங்கள். மட்டுறுத்தல் பயன்படுத்துவதாக இருந்தால் எல்லோரையும் அனுமதிக்கலாமே!

பின்னூட்டம் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து எழுதுங்கள். வரவுக்கு வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

வணக்கம் தம்பி!

உங்கள் எழுத்து நடையைப்பார்த்தால் புதியவர் போல் இல்லமல் ஒரு பக்குவம் இருக்கிறதே அப்புறம் என்ன ,தொடர்ந்து எழுது ஜமாய்ங்க. கவிதையும் நல்லா வருது. மேலும் பல பதிவுகள் இட்டு முத்திரைப்பதிக்க வாழ்த்துகள்!

கதிர் said...

நன்றி வவ்வால்

இதுதான் முதல் வருகை என்று நினைக்கிறேன். தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாத்தை தருகிறது.

தம்பி

கதிர் said...

நன்றி நெல்லை சிவா

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வலைப்பதிவிற்கு தற்போதுதான் அறிமுகம் என்பதால் சற்று அவகாசம் எடுத்துக்கொள்கிறேன். மேலும் உபயோகமான குறிப்புகள் (வலைப்பதிவு சம்பந்தமான)இருந்தால் தனிமின்னஞ்சலில் அனுப்பவும்.

தம்பி

சத்தியா said...

ம்... பாவம் அந்த வாயில்லாத ஜீவன். நீங்கள் தெரிந்து செய்த பிழை இல்லாவிடிலும்... வாசிக்கும் போது
மனது வலித்தது. நீங்களும் கூட நன்றாக நொந்து இருக்கின்றீர்கள் என்பதும் உங்கள் எழுத்தில் காண முடிந்தது.

பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

Costal Demon said...

இது ஒரு கதையாக இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது...

Anonymous said...

மிகவும் கவலையாக இருந்தது. பாவம் அந்த வாயில்லாப்பிராணி.

ராசுக்குட்டி said...

தம்பி நல்ல தெளிவான நடை...

கோபத்தை கை விட்டீர்களே எத்தனை பேரால் முடியக் கூடிய காரியம் அது!

MyFriend said...

தம்பிண்ணே, எழுத்து நடை சூப்பர். ஒரு பிராணியின் மேலேயே இவ்வளவு அன்பும் பாசமும் வச்சிருக்கீங்களே.. உங்களுள் உள்ள ஈரமனசு புரியுது. :-)

கதிர் said...

இந்த பதிவை இன்றைய சூழ்நிலைக்கும், என்னுடைய எழுத்து முதிர்ச்சிக்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது சுத்த பேத்தலா இருக்கு. சாதாரண விஷயத்தை ரொம்ப பில்டப் கொடுத்து எழுதிட்ட மாதிரி ஒரு பீலிங். :)

பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவை கிண்டி கிளறி தமிழ்மண முகப்பில் தோன்ற வைத்த மை ப்ரெண்டை என்ன செய்வது? :((

Tigercat said...

எனக்கும் நீங்க சொன்னது ஒரு கதை யா இருக்ககூடாதாணு தோணுது.bcoz i love cat எனக்கு பூனா குட்டி நா உயிர் .my small request ninga theriama panalum thapu thaputhan athuku parigarama ninga lot of poonakuti valathurathuthan sari nu thonuthu enaku .ninga panathu vaai illatha jeevan nalamarachutinga thairiama commend kuduthurkinga .itha vida vai illatha jeevana rasinga inum anbu seluthunga kandipa athu moolama death aana poonaikuti ungala manuchudum.athu kadaisivaraikum ungamela pasathodathan irunthuchu k