எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, March 16, 2007

புயலிலே ஒரு தோணி

பெரிய கட்டடத்தின் மாடிப்படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத்
துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன் தூய வெள்ளாடை உடுத்திய கருத்து
வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக்கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது.
சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கடகடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில்
ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிகொண்டிருந்தன. கரடுமுரடான
ஓசை, எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை.
"திரும்பி போய்விடலாம்". அவரை இன்னொருக்கா பார்க்கலாம்" மனதின்
ஊசலாட்டத்தையும் மீறி பெரியவரிடம் கேட்டேன். "ஐயா... வணக்கம்.. இங்க
சிங்காரங்கறது யாருங்க?"

"நான்தான். உட்காருங்க" மூக்கைத் தடவிக்கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான
இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்கு தள்ளி
என்னை உற்றுப்பார்த்தார்.

"நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு நாவல்
களையும் படிச்சிருக்கேன்."

"அப்படியா??" வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ
சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை.

அவரது நாவல்களை பற்றிய எனது அபிப்ராயங்களை கூறினேன். தமிழில் மிகவும்
முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படி பாராட்டினேன்.

"நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர்
வந்து நாவல்களை பற்றிப் பேசிவிட்டு போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி
பிரகாஷ்ங்கறவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில
பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி.ராஜ
நாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலை பாராட்டிக் கடிதம் எழுதி
இருந்தார்... இவங்களை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? எதுவும் பெரிசா
எழுதியிருக்காங்களா?"

"நீங்கா சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறு
பத்திரிக்கைச் சூழலில் முக்கியமானவர்கள்" என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தை பார்த்தார் அப்படிங்களா... கி.ராஜ
நாராயணன் மூலம் எனது நாவலை கேள்விப்பட்ட சிட்டி, சிவபாதசுந்தரம்னு ரெண்டு
பேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வா பேசினார்கள். சென்னை கொண்டு
போய் Orijinal Version-க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த
ஒரே பிரதியையும் வாங்கிட்டு போனாங்க. பல வருஷாமாச்சு. இன்னம் ஒரு பதிலயும்
காணாம்" எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களை சொன்னார்." புயலிலே ஒரு
தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கு யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க...
இங்க சீரியசா படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ
விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் இந்த உலகத்தில எங்க
இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையா பார்க்க மாட்டாங்க
அப்படி பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கி தமிழ்ல ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்..
பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப் பத்தி ஒரு இடம் வருது
அது நாங்க யுத்த நேரத்தில இந்தோனேஷியாவிலருந்து மலேயாவுக்கு சரக்குகளோட
போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடல்ல வீசினோம் நாவல் எழுதறப்ப
தோணுன சந்தேகங்களை கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போனோம்
வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேன்னு
சொல்லிட்டாங்க அது எதுக்கு.. வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து
தங்கினா போது, நம்ம வாழ்க்கைய வச்சு ஒரு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை
டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணு சீட்டு
போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கறவன், கூவி ஏலம் போடறவன்,
பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பல
சரக்குக்கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம்
தெரியுமா? உண்மையாச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு
விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையா பார்த்து எழுதற வழக்கம் நம்ம ஆளு
களுக்கு கிடையாது."

"நீங்க எப்ப மலேசியா போனீங்க?"

"எனக்கு இன்னிக்கு அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன்.
வட்டிக்கடையில வேலை பார்த்தேன். அப்ப இரண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து இல்ல.இந்தியாவிலிருந்து எந்த
தமிழ்பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரரியில ஹெமிங்வே,தல்ஸ்தோய், பாக்னர்,செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி.. இப்படி பலரையும்
படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட "ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்" நாவல்தான்
எனக்கு ரொம்ப பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்துல திருப்புமுனைன்னு
நினைக்கிறேன். தல்ஸ்தோவின் அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டீக்ஸ் "வார் அண்ட் பீஸ்" தான் சிறந்ததுன்னு சொல்றான்ங்க."

"தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கிங்க?"

"என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவில இருக்கிறப்ப 'மணிக்கொடி'
பத்திரிக்கை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன்,மௌனி கதைகள் படிச்சிருக்கேன்ன்.
அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கு வரைக்கும் தமிழ்ல நாவல்கள்
வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான் இப்பதான் சுஜாதா, சிவசங்கரின்னு கதைகள
எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம் கூட
வாசிக்க முடியவில்லை"

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச்
சொன்னேன்" அவங்க எழுதியதை படிக்கவில்லை" என்றார்.

"யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதினது நீங்கதான்.
நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்திங்களா?"

"இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க.ஆர்மியில பெரிய
பதவியில் சிலர் இருந்தாங்க. அங்க பினாங்கில காபி,டீ கடைகள் ஐரோப்பிய
மாதிரியில இருக்கும். அதை கிளப்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை
காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம்
பத்தின பல சமாச்சாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து
நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாக போயிருந்தேன். நாவல்னா என்ன?
கற்பனையில எழுதறதுதானே1 அப்ப்படியேவா எழுதணும்? நாம் கேள்விப்பட்ட
விஷயங்கள். அனுப்வங்களைட் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதா
பாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல
வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்."

"நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்தில... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி
தோணுச்சு."

"தமிழ்ல - தாய்மொழில -எழுதினாத்தான் உணர்ச்சிப்பூர்வமா நாம நினைக்கிறத
சொல்ல முடியும்னு எழுதினேன்."

"திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்திங்க?"

"சுதந்திரம் கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே "தினத்தந்தியி"ல வேலைக்குச்
சேர்ந்தேன் அப்பயிலருந்து மதுரையிலதான் இருக்கேன்."

"முதல் நாவலை எப்ப எழுதினீங்க?"

"1950இல் 'கடலுக்கு அப்பால்' நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல
பிரசுரகர்த்தர்களை கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல
தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல்
போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த
ஒருத்தர் தனிப்பட எனக்கு கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த
நாவலை என்னிடம் இருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப்போனார், கடைசீல 'கலைமகள்' பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்ப்பினார்.
அதுக்கு முதல்பரிசு கிடைத்தது. நாவலும் 1959இல் பிரசுரமாச்சு."

"புயலிலே ஒரு தோணி?"

"அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962-வாக்கில
எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடன் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல
சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972இல்
வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு."

"நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?"

"ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக்குறிக்குள்
போடலைக்கிறதுக்காக 'கண்ணதாசன்' பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க
என்பதுகூட புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு
எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவட்டாகச் சொல்லணும். தமிழ்ல dash-க்கும்
hyphen-க்கும் வீத்தியாசமே பலருக்கு புரியல."

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லி
விட்டுசற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத்தொடங்கினார்.

"அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும். எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப்
புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம்
வாசிக்கிற யாருக்கும் தெளிவா புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர்,
வெளிநாட்டுச்சூழல் சம்பந்தப்பட்டா விஷயங்கள் - தமிழ் ஆளுகளுக்கு புதிசு என்றாலும்
நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை." அவரது குரலில்
நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

"குடிங்க" காபி கிளாசை என்னை நோக்கி நகர்த்தினார் பணியாளரிடம் சிகரெட்டை
வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாசை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரெ மூச்சில் கிளாசை காலிசெய்தார்.

"நீங்க தொடர்ந்து எழுதலியே..."

"அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக
யாருமில்லை, இப்ப அந்த மனநிலை இல்ல... எழுதவும் முடியாது."

"புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே...
உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?"

"அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்ல. 1947 லிருந்து மதுரை Y.M.C.A யில தங்கி
இருக்கேன். முந்தி பக்கத்து அறையில் தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார்.
அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராஹ்டியை வைத்து நானே படிச்சேன்.
அவ்வளவுதான் ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல
பார்த்திங்களா? எதைப்பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? South Indian Trees
என்று ஆயிரம் பக்கத்தில புத்தகம் போடறான். அதையும் வாங்கி படிக்க ஆளுக
இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல.
என்னோட முதல் நாவல்ல் கடலுக்கு அப்பால்... நல்ல ரொம்ப சொல்ல முடியாது
ஆனா கடலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு? எந்த Responseம்
இல்ல." மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். " அந்த நாவலில் செட்டிம்மார்பற்றி
வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது
மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க."

"உங்க குடும்பம்..."

"நான் ஒரு Widower."

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. சூழல் இறுகியது. அவரே
தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

"மலேயாவில் மனைவொயோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும்
இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம்
பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்கு போயிடலாம்னு
ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேன்... ஆனால் போகலை."

"அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கிங்க?"

"என்ன தனிமை!" கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். "உண்மையாய் பார்த்தால்
எல்லாரும் தனிமையில்தான் இருக்கோம்."

"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?"

"அதெல்லாமில்ல. கோயிலுக்கு போவதுமில்லை. சாமி கும்பிடறதும் இல்லை"

இடையில் பத்திரைக்கைச் செய்தி கொடுக்க வந்தவரிடம் News Editorஐப் பாருங்க
என்று கூறி பத்திரிக்கை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே
பார்த்துக்கொண்டிருந்தேன்.

"உங்க சொந்த ஊரு?"

"எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம்.
எங்க அப்பா காலத்திலயே சிங்கணம்புரிக்குப் போயிட்டோம்."

"உங்க சொந்தக்காரங்க..."

"சிங்கணம்புரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது..."

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான
நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். " அதெல்லாம் எதுக்கு...? வேணாம்" கைகளை
ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம்
முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று
வலியுறுத்தினேன் "தயவுசெய்து வேண்டாம்" என்று அழுத்தமாக மறுத்துவிட்டார்.
சற்றுநேரம் இருவருக்கும் இடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது?
திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

"சரி அப்ப வர்ரேன்"

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி "வாங்க" என்றார்
தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சட்த இயந்திரங்களிண் பலமான
ஓசை உறைத்தது. வெயில் கண்களைக் கூசசெய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால்
ப.சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் சிறந்த
நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான்
கூறியபோது ஒருவிதமான கூச்சத்துடன் "அதெல்லாம் இல்லிங்க. நான் என்னமோ
எழுதினேன்" என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப.சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும்.
ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே
வந்தேன். வெளியே காற்று புழுதியுடன் வலுவாக வீசிக்கொண்டிருந்தது.

ந.முருகேசபாண்டியன்
மதுரை
10.9.1984
---------------------------------------------------------------------

பொதுவா நாவல்களை வாசிக்கும்போது எழுத்தாளரின் பெயரை வாசித்துவிட்டு
நேரடியாக கதைக்கு சென்று விடுவது வழக்கம். அட்டைக்கு அடுத்து இருக்கும்
பதிப்பகத்தின் பெயர்களையோ, எத்தனையாவது பதிப்பு என்றோ ஒருநாளும்
பார்த்தது இல்லை. முக்கியமாக இந்த "முன்னுரை, முகவுரை,பதிப்புரை,கடுப்புரை
நெடுப்புரை", இதெல்லாம் பார்க்க விரும்பியதே இல்லை. அதில் கதையின்
போக்கும் கதையின் கருவையும் சொல்லிவிடுவதால் வாசிக்கையில்
சுவாரசியமில்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே வாசிப்பதில்லை.
ஆனால் முதல்முறையாக புயலிலே ஒரு தோணி என்ற நாவலின் முன்னுரை
(முன்னுரை என்று சொல்வதைவிட நாவலாசிரியரின் பேட்டி என்று சொல்லலாம்)
வாசிக்கும்போதுஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. கதையை
வாசிக்கும்போதும் அதே.

கதையின் களமும், இடத்தின் பெயர்களும் புரியவில்லை என்றாலும் வாசிக்கும்
போது கதையின் போக்கில் நாமும் பயணம் செய்ய முடிகிறது. இன்னும்
முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. நாவல் சற்று பெரியதாகவும் இடத்தின்
பெயர்களும், கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்நியப்படுவதால் வேகமாக
வாசிப்பதில் சிரமம் இருக்கிற்றது. முழுவதுமாக வாசித்து பின்பு எழுதவேண்டும்.

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் என்ற இருநாவல்களின்
தொகுப்பு. எழுதியவர் ப.சிங்காரம் விலை ரூ.180

நூலை வாசிக்க கொடுத்ததற்காக என் பெயரை கண்டிப்பாக போடவேண்டும் என்று
நண்பர் முத்துக்குமரன் எதுவும் சொல்லவில்லை. :))

17 comments:

ramachandranusha(உஷா) said...

தம்பி, நட்சத்திர வாரத்தில் அருமையான பதிவுப் போட்டு இருக்கிறீர்கள். நான் தேடிக் கொண்டு இருக்கும் புத்தகம் இது.
அப்படியே பதிப்பகத்தின் பெயரையும், முத்துக்குமரன் எங்கு வாங்கினார் என்பதையும் போட்டு விடுங்கள்.
நீங்கள் சொன்ன அதே விஷயங்கள், இணைய அறிமுகத்துக்கு முன்னால் எழுத்தாளர் பெயர் பார்ப்பதோடு சரி, முன்னுரை ஏதோ படிப்பேன். புயலில் ஒரு தோணி- சென்னை மத்திய நூலகத்தில் இருந்து எடுத்து படித்த நினைவு மட்டும் இருக்கிறது.

கதிர் said...

வாங்க உஷாக்கா!

அப்ப மத்த பதிவெல்லாம் மொக்கையா?
:)))


வாசிபப்வரின் ஊகத்திற்கு கதையை நகர்த்தாமல் இருப்பது படிப்பதற்கு சவாலாக இருக்கிறது. வழக்கமான வார்த்தைகள் இல்லை. அதுவே என்னை படிக்க தூண்டியது.

ஏதெச்சையா பேசிகிட்டு இருக்கும்போது முத்துவிடம் கேட்டேன் ஏதாவது புத்தகம் இருந்தா குடுங்க படிக்கலாம்னு அவர்தான் கொடுத்தார். மதுரை புத்தக கண்காட்சில வாங்கினதா சொன்னார். கீழே பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி கொடுத்துள்ளேன்.

தமிழினி பதிப்பகம்
67, பீட்டர்ஸ் சாலை
ராயப்பேட்டை
சென்னை - 14
விலை ரூ.180

நன்றி.

அபி அப்பா said...

தம்பி! முடிந்தால் எனக்கு அந்த 'புயலிலே ஒரு தோணி' தரவும். அந்த சிங்காரம் இப்பவும் மதுரையிலேதான் இருக்கிராரா? "கடலுக்கு அப்பால்" முத்துகுமரனிடம் இருக்கிறதா?

உங்கள் நட்சத்திர பதிவிலே இது தான் சூப்பர் ஸ்டார் பதிவு!

சென்ஷி said...

//உங்கள் நட்சத்திர பதிவிலே இது தான் சூப்பர் ஸ்டார் பதிவு! //

அபி அப்பா சொன்னதுதான் ரிப்பீட்டே..

இந்த முன்னுரைக்காகவே அந்த நாவலை படிக்க தோன்றுகிறது.

சென்ஷி

முத்துகுமரன் said...

எழுத்தாளர் சிங்காரம் மறைந்து ஆண்டுகள் ஆகின்றன. தமிழினி பதிப்பகத்தின் இந்த புத்தகம் அவரின் இரு நாவல்களையும் உள்ளடக்கிய மொத்தத் தொகுதி. புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் ஆகிய இரண்டு நாவலுமே இந்த தொகுப்பில் இருக்கின்றது. சென்னையில் அநேகமாக எல்லா புத்தககடைகளிலும் கிடைக்கக்கூடும்.

கதிர் said...

//தம்பி! முடிந்தால் எனக்கு அந்த 'புயலிலே ஒரு தோணி' தரவும். அந்த சிங்காரம் இப்பவும் மதுரையிலேதான் இருக்கிராரா? "கடலுக்கு அப்பால்" முத்துகுமரனிடம் இருக்கிறதா?

உங்கள் நட்சத்திர பதிவிலே இது தான் சூப்பர் ஸ்டார் பதிவு! //

வாங்க அபி அப்பா!

இதயம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 97ம் வருடம் டிசம்பர் மாத இறுதியில் தீவிர வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் இறந்தார். அவர் தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்தாராம்.

உபதகவல்:

அவர் தனது வாழ்நாள் சேமிப்பான ஏழு லட்சத்தை சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் செலவழிக்க திட்டமிட்டு இராமகிருஷ்ணா அமைப்பு நடத்தும் சேவை மையங்கள், அனாதை இல்லங்கள் பற்றி விசாரித்து அவற்றுக்கு உதவுவது பற்றி யோசிக்கும்வேளையில் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் மதுரை நாடார் மகாஜன சங்கம் அமைப்பை ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் "உதவித்தொகை" பற்றிக் கேள்விப்பட்டு, அது குறித்து அவரே நேரில் சென்று விசாரித்து தனது சேமிப்புத்தொகையை அந்நிறுவனத்திற்கு வழங்கினார். அவரது பெயரில் அறக்கட்டளை, அவரது புகைப்படம் திறப்பு போன்றவை கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.

வருகைக்கு நன்றி அபி அப்பா.

கதிர் said...

//அபி அப்பா சொன்னதுதான் ரிப்பீட்டே..

இந்த முன்னுரைக்காகவே அந்த நாவலை படிக்க தோன்றுகிறது.

சென்ஷி //

வாங்க சென்ஷி...

வாசிக்கக் கிடைத்தால் கண்டிப்பாக வாசித்து பாருங்கள். புதிய அனுபவம் கிடைக்கும்.

நன்றி.

கோபிநாத் said...

அருமையான பதிவு தம்பி...உங்கள் ஸ்டார் பதிவுகளில் இது ஒரு வித்தியாசமான பதிவு.

முழுவதுமாக படித்தவுடன் அந்த நாவலைப் பற்றி உங்கள் விமர்சனத்தை மறக்காமல் எழுதுங்கள்.

கப்பி | Kappi said...

நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி தம்பி!

Ayyanar Viswanath said...

நல்லதொரு அறிமுகத்திற்க்கு நன்றி தம்பி
இரண்டு நாவல்களையும் படித்து முடித்ததும் ஏற்படும் அசாதாரண உண்ர்ச்சி தமிழின் வேறெந்த நாவலாலும் தரமுடியாத ஒன்று.பாண்டியன் திரு.சிங்காரமாகவும் இருக்ககூடுமோ என்ற ஐயப்பாடுகளும் எனக்கெழுந்தன.

மஞ்சூர் ராசா said...

தம்பி, முத்தமிழிலும் இந்த பதிவைப்பற்றி படித்து பின்னூட்டம் இட்டுள்ளேன்.

சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தப்போது சொன்னார் பா.சிங்காரத்தின் நாவல்களை படிக்க சொல்லி. இன்னும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
எப்படியும் இந்த முறை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நட்சத்திரவாரத்தின் முதன்மை பதிப்புக்கு மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள்.

லொடுக்கு said...

உலகக் கோப்பை ஸ்பெலஷாக மகேந்திர சிங் தோணி பற்றி பதிவிட்டு கலக்கியுள்ளீர்கள். :)

கதிர் said...

//அருமையான பதிவு தம்பி...உங்கள் ஸ்டார் பதிவுகளில் இது ஒரு வித்தியாசமான பதிவு.//

நன்றிங்க கோபி.

//முழுவதுமாக படித்தவுடன் அந்த நாவலைப் பற்றி உங்கள் விமர்சனத்தை மறக்காமல் எழுதுங்கள்.//

கண்டிப்பா எழுதறேன்.

நன்றி

கதிர் said...

//நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி தம்பி! //

நன்றி கப்பி!

கதிர் said...

//நல்லதொரு அறிமுகத்திற்க்கு நன்றி தம்பி
இரண்டு நாவல்களையும் படித்து முடித்ததும் ஏற்படும் அசாதாரண உண்ர்ச்சி தமிழின் வேறெந்த நாவலாலும் தரமுடியாத ஒன்று.பாண்டியன் திரு.சிங்காரமாகவும் இருக்ககூடுமோ என்ற ஐயப்பாடுகளும் எனக்கெழுந்தன. //

வாங்க அய்யனார்!

எனக்கும் முதல் நான்கு அத்தியாங்கள் படித்தவுடனே அந்த ஐயம் வந்தது. அவரின் பேட்டியை படித்து பின் கதையை வாசசிக்கும்போது கண்டிப்பா அந்த எண்ணம் வருவதை தவிர்க்கவியலவில்லை. முழுதாக வாசித்து விட்டு பிறகு எனது கருத்தை சொல்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யனார்.

கதிர் said...

//தம்பி, முத்தமிழிலும் இந்த பதிவைப்பற்றி படித்து பின்னூட்டம் இட்டுள்ளேன்.//

அங்கும் வாசித்தேன் சுந்தர் அண்ணா.

//சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தப்போது சொன்னார் பா.சிங்காரத்தின் நாவல்களை படிக்க சொல்லி. இன்னும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
எப்படியும் இந்த முறை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

நல்ல கதைகளை தேடிப்பிடித்து வாசிக்கும் நண்பர்கள் எனைவருமே புயலிலே ஒரு தோணி பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பேரை காலங்கடந்தும் சென்றடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்களுக்கும் கிடைக்கும் வாசியுங்கள்.

//நட்சத்திரவாரத்தின் முதன்மை பதிப்புக்கு மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள். //

நன்றி மஞ்சூர் அண்ணா!

கதிர் said...

//உலகக் கோப்பை ஸ்பெலஷாக மகேந்திர சிங் தோணி பற்றி பதிவிட்டு கலக்கியுள்ளீர்கள். :) //

நல்ல டைமிங் !