எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 31, 2006

கனவு இல்லம்! - வாலிப வயசு - 3

ஏண்டா உன்னால ஒரு பிரயோஜனம் உண்டா
இந்த வீட்டுக்கு?

எனக்கு தண்டசெலவு வைக்கறதுன்னு கங்கனம்
கட்டிகிட்டு திரியற!

போன மாசம் இப்படிதான் ஏதோ குருவி சுடணும்
காக்கா சுடணுன்னுட்டு துப்பாக்கி ஆர்டர் செஞ்சு
வாங்கினே. ஆனா அந்த துப்பாக்கிய வச்சி ஒரு
ஈ, எறும்ப கூட கொல்ல முடியாது போலருக்கு.
அந்த தண்டமான துப்பாக்கிக்கு 250 ரூவா அழுதேன்.

இப்ப என்னடான்னா உன் பேருக்கு எங்கருந்தோ
புதிய எற்பாடு, பிரசங்க அழைப்பு, கர்த்தர் அழைக்கிறார்னு
லட்டர் வருது. உம்மனசுல என்னதான் நெனச்சிகிட்டு
இருக்க?

இனிமே நீ விஜயகாந்து, ரஜினிகாந்து படம் பாத்துட்டு
அதுல வர்ற துப்பாக்கி வேணும் தோட்டா வேணும்னு
சொன்னே. இன்னும் ரெண்டு மாடு வாங்கி அத
மேய்க்கற வேலை குடுத்துருவேன் ஜாக்கிரதை.

நல்லா சொல்லுங்க அவனுக்கு.

சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் கரும்பு காட்டு
பக்கமா போயி இந்த மாட்டுக்கு புல்லு அறுத்துகிட்டு
வாடான்னு சொன்னா என்ன கேக்கறான் தெரியுமா?

என்ன கேக்கறான்?

வயசுப்பையன போயி புல்லு அறுத்துகிட்டு வா,
வைக்க புடுங்கிட்டு வான்னு சொல்ற, நாலு பேரு
என்னய பாத்தா என்ன நினைப்பான்னு என்னயே
எதிகேள்வி கேக்கறான்ங்க?

சரியான நேரத்தில இந்த மாதிரி கொஞ்சம் திரிய
கொளுத்தி போடலன்னா தூக்கமே வராது இந்த
அம்மாவுக்கு.

ஏண்டா புல்லு கட்டு அறுத்துகிட்டு வர்றதுல என்னடா
ஒங் கவுரவம் போயிட போகுது?

குபேரன் வூட்டு புள்ள கூட சாயந்திரம் ஸ்கூல விட்டு
வந்ததும் வீட்டு வேலை கொஞ்சம் செய்யறான்.

அங்க ஏன் போறிங்க?..

அந்த அயிலு நாய்க்கரு மொவன் இருக்கானே அவன்
சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் நாலு மாட்டுக்கு
தேவையான புல்லை அவனே அறுத்துகிட்டு வரானாம்.

ஏம்மா அவங்க அப்பாவுக்கு எட்டு ஏக்கரா நெலம்
இருக்கு சின்ன வயசில இருந்தே வயலுக்கு போறான்
வரான் அதுனால அவனுக்கு ஈசியா இருக்குது. எனக்கு
கரும்பு காட்டுகுள்ள போனாவே உடம்பெல்லாம்
சொண புடுங்குது, அரிக்குதேன்னு சொறிஞ்சா தடிப்பு
தடிப்பா ஆயிடுது.

இதெல்லாம் நல்லா வெவரமா பேசு!

என்னய என்ன வேணா செய்ய சொல்லு ஆனா இந்த
மாட்ட புடிச்சி கட்டு, புல்லு புடிங்கி போடு, தவிடு
தண்ணி காமி இதெல்லாம் சொல்லாத.

இனிமேல் இந்த வீட்டுல உம்பேருக்கு லட்டரே
வரக்கூடாது.

சரி.

மேல சொன்னதெல்லாம் என்னன்னே புரியலயா? அது
ஒரு வியாதிங்க, என்ன வியாதின்னு கேக்கறிங்களா?

பள்ளிக்கூட பொஸ்தகத்தை தவிர எல்லா பொஸ்தகமும்
படிக்கற வியாதிங்க. மர்மநாவல், பாக்கெட்நாவல்,
மாயாவி காமிக்ஸ், அதில வர்ற துப்பாக்கி. இதெல்லாம்
பாத்துட்டு அது மாதிரியே ஆகணும்னு ஒரு வெறி.
ஏதேச்சையா ஒரு காமிகஸ் புக் படிக்கும்போது
உங்களுக்கு வேட்டையாட விருப்பமா?, தாக்க வரும்
விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த மாதிரி
ஒரு விளம்பரம். இந்த விலாசத்துக்கு ஒரு கார்டு
போட்டிங்கன்னா உங்க வீடு தேடி துப்பாக்கியும்
சுடறதுக்கு எலவசமாக ஆறு தோட்டாவும் அனுப்பி
வைப்போம், மேலும் உங்களுக்கு தோட்டாக்கள்
வேணும்னா ஆர்டர் செய்யலாம். உங்களுக்கு
திருப்தியில்லன்னா துப்பாக்கிய திருப்பி அனுப்பலாம்
பணமும் திருப்பி கொடுத்துருவோம்னு ஒரு வரி.

ஆஹா சூப்பரு. துப்பாக்கிய வாங்கிடவேண்டியதுதான்னு
நாலணாவுக்கு போஸ்ட்கார்டு வாங்கி அந்த விலாசத்துக்கு
எனக்கு அர்ஜெண்டா துப்பாக்கி வேணும்னு எழுதி போட்டு
காத்திருந்தேன்.

ஒரு வாரம் கழிச்சி.

வழக்கமா எனக்கு வரும் கடிதங்கள் சும்மா இந்த பேனா
நண்பர்கள் மாதிரி ஒரு போஸ்கார்டோட முடிஞ்சுரும்.
இந்த முறை கொஞ்சம் பெரிய பார்சல் மரப்பெட்டில
சுத்தி வந்திருக்கு. இதெயெல்லாம் சின்னப்பையன்
என்கிட்ட கொடுக்க கூடாதுன்னு போஸ்ட்மேன் அண்ணன்
நேரா எங்கப்பாகிட்டயே கொண்டு போயி கொடுத்து
250 ரூவா பணமும் கொடுங்கன்னு கேட்டுருக்காரு.

போனா போகுதுன்னு இவனுக்கு அப்பப்ப காமிக்ஸுக்கு
அஞ்சு பத்துன்னு அழுவுணா இப்படி ஒரேயடியா வேட்டு
வச்சிட்டானேன்னு பயங்கர கோவத்தோட வீட்டுக்கு
வந்து காட்டு கத்து கத்துறாரு.

அரை நாள் பட்டினி கிடந்து அக்காவும் அண்ணனும்
ஆதரவுக்கரம் நீட்டினதுல ஒருவழியா 250 அம்பது ரூவாய
தேத்தி மறுநாள் போஸ்ட் ஆபிசுக்கு ஓடிப்போயி பார்சல
வாங்கி வந்து பிரிச்சேன். உள்ளுக்கு பாத்தா ஒரு கருப்பு
கலர்ல ரிவால்வரு.

தீவாளி துப்பாக்கியில சுட்டா சத்தமாவது வரும்.
இத பாக்கறதுக்கு நிஜதுப்பாக்கி மாதிரியே இருந்தாலும்
அத வச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு அடுத்த
அரை மணி நேரத்தில தெரிஞ்சி போச்சி.

அடுத்து!

சுவிஷேஷ கூட்டத்திற்கு அழைப்புன்னு ஒரு விளம்பரம்
அதுக்கு ஒரு கடுதாசி போட்டேன். அவங்க என்னடான்னா
திருச்சி சோமரசம்பேட்டைலருந்து வாரம் ஒரு புஸ்தகம்
அனுப்பிகிட்டே இருந்தாங்க. கிறிஸ்துவ பிரச்சார
புத்தகங்கள் வீட்டுக்கு வர ஆரம்பிச்ச உடனே வீட்டுல
பீதியாயிட்டாங்க. எதுனா பொண்ணு பின்னாடி சுத்திகிட்டு
மதம் மாறிடுவானோன்னு. நமக்கு எங்க அந்த அளவுக்கு
திறமை இருக்கு. தெரியாம எழுதி போட்டுட்டேன்.
இனிமேல அந்த மாதிரி கடுதாசியெல்லாம் எழுதி போட
மாட்டேன்னு சொன்ன அப்புறம்தான் வீட்டுக்குள்ளவே
விட்டாங்க.

இந்த மாதிரி வேலையெல்லாம் வெவரமா செஞ்ச நான்
எங்கப்பா கிட்ட நல்ல பேர் எடுக்க ஒரு நல்ல சான்ஸ்
எடுக்கணும்னு நெனச்சி ஆர்வக்கோளாருல நான்
ஒண்ணு செய்யபோக அது ஒண்ணு ஆகிப்போச்சி.
என்னய நம்பி 5 ரூவா காசு (ஸ்டாம்புக்கு) குடுத்து
குங்குமம் கனவு இல்லம் கூப்பனையும் குடுத்து
போஸ்ட் பண்ணிட்டு வரசொன்னாரு.

நானும் குடுத்த காச வெட்டிசெலவு செய்யாம ஸ்டாம்ப்
வாங்கி அட்ரஸ் எழுதி அனுப்பிட்டேன்.

மறுநாள் ஸ்கூல விட்டு வந்தா பயங்கர திட்டு!
இதுவரைக்கும் அப்படி ஒரு வசைய வாங்கினதே இல்ல.

அத ஏன் கேக்கறிங்க!

From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி. ஏதோ குங்குமம்
ஆபிசுல இருந்ததுதான் லட்டர் வந்திடுச்சோன்னு ஆர்வமா
பாத்துருக்காங்க நான் எழுதினதே திரும்பி வந்திடுச்சுல்ல
அந்த கோவத்தை அன்னிக்கு காட்டு காட்டுன்னு
காட்டிட்டாங்க!

Friday, October 20, 2006

நரகாசுரன் - நினைவுநாள் - தீபாவளி

வலைப்பதிவாளர்களுக்கும் எனது வலைப்பதிவினை
தொடர்ந்து படிக்கும்(?) வாசகர்களுக்கும் வலைப்பதிவு
உலகினை சுவராசியமாகவும், கலவர பூமியாகவும்
மாற்றும் வல்லமை படைத்த அன்பு அனானிகளுக்கும்
தம்பியின் இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லாம் ஊர்ல உள்ள
மக்களுக்குத்தான். என்னய மாதிரி பொழைக்க
வந்த ஊர்ல இருக்கற மக்களுக்கு தீபாவளி
என்பது மற்றுமோர் நாளே.

Image Hosted by ImageShack.us
பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்

ஒரு தீக்குச்சி கூட கொளுத்த முடியாத தீபாவளி
ஒரு தீபாவளியா? ஏதோ நம்மளால முடிஞ்சது
ஒரு ரூவாய்க்கு லைட்டர் ஒண்ணு வாங்கி
கேஸ் தீர்ந்து போகற வரைக்கும் கொளுத்திகிட்டே
தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.

கொஞ்சமா கொசுவர்த்தி சுத்திக்கட்டுமா?

தீபாவளியன்னிக்கு பெரிய இம்சையே அன்னிக்கு
எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்னு வீட்ல கட்டாய
"படுத்து"வாங்க. கண்ணுல, காதுல மூக்குல
எண்ணெய வழிய விட்டு முழி பிதுங்கி போயி
உக்காந்திருக்கணும். அடுத்து 'புலி மார்க்' சீயக்காய்
தூள ஒரு கிண்ணியில போட்டு அதில கொஞ்சம்
சுடுகஞ்சிய ஊத்தி குழப்பி அடிச்சி வச்சிருப்பாங்க.
குளிக்கும்போது தலைல அந்த கொழம்ப போட்டு
அரக்கி எடுப்பாங்க அந்த நேரத்தில கண்ணு எரியும்
பாருங்க ஏண்டா இந்த தீபாவளி வந்து தொலைக்குதுன்னு
தோணும்.

இந்த குளியல் படலும் முடிஞ்சிருச்சுன்னா ஒரு பெரிய
தலவலி முடிஞ்சிருச்சின்னு அர்த்தம். அடுத்த தலவலி
சாப்பாடு. வித விதமா செஞ்சிருப்பாங்க. உப்பு ஒரப்பு
பாக்கறதிலருந்து சட்டிய கவுத்து புல் கட்டு அடிச்சுட்டு
பார்த்தா எந்திரிச்சு நிக்கவே முடியாது.

நம்ம ஊருப்பக்கம் எல்லாம் இந்த குயில்மார்க், மயில்
மார்க், தவுசண்ட் வாலா, மும்பை வாலா, தாடி வாலா
இதையெல்லாம் வாங்கி காச கரியாக்க மாட்டானுங்க.
நூறு ரூபாய்க்கு நாட்டு வெடினு கேட்டா அஞ்சு கட்டு
தருவானுங்க. ஒரு கட்டுக்கு அம்பது. ஒண்ணு பத்த
வெச்சி வெடிச்சோம்னா பக்கத்து ஊருக்கே கேக்கும்
நல்லா கேக்கறவனுக்கும் காது கொஞ்ச நேரம்
கொய்ங்ங்தான்.

மச்சான் பத்த வச்சிட்டேன் உங்க ஊர்ல தெளிவா
சத்தம் கேக்குதான்னு பாரு, இல்லன்னா வெடிய
ரிட்டர்ன் பண்ணிருவோம்னு போன்ல லந்து பண்ற
பார்ட்டிகளும் இருக்கு.

தீவாலியன்னி என்ன ஒரே சந்தோஷம்னா சின்ன
வயசில ஒண்ணு மண்ணா படிச்ச பிகருங்க
பெரிய படிப்புக்கு வெளியூர், வெளி மாநிலம்
போயிருக்கும். அன்னிக்கு மட்டும் மத்தாப்பு
கொளுத்திக்கிட்டு வெளிய வந்து எங்கள மாதிரி
பசங்களுக்கு திவ்ய தரிசனம் தருவாங்க.

இப்ப அதுவும் பீஸ் போச்சு.

நண்பர்களே தீபாவளிய நல்லா கொண்டாடுங்க.

Wednesday, October 18, 2006

வெட்டிப்பயலின் பார்வைக்கு!!!

கொஞ்ச நேரத்திக்கு முன்ன வெட்டிப்பயலின்
கவிதை, கவுத, கவுஜ ன்ற பதிவில கவிதைகள்னா
ஒண்ணுமே புரியலன்னு பதிவிட்டிருந்தாரு.
கவிதைகளோடு அதுக்கு தங்கச்சியான ஹைக்கூவையும்
சேத்துக்கணும். ஏன்னா அதுவும் எனக்கு புரியல. முதலில்
ஹைக்கூ ஹைக்கூன்னு சொல்றாங்களே அதுக்கு
அர்த்தம் என்னான்னு எல்லாம் எனக்கு
தெரியாது. ஆனா அந்த மாதிரி கவிதைகள கொஞ்சமே
பார்த்திருக்கறதினால, ஒரு முயற்சியா நாலு
வார்த்தைகள ஒன்றன்கீழ் ஒன்றாக போட்டு
அதை ஹைக்கூன்னு நானே பேரு வச்சிக்கிட்டேன்.
இந்த கவிதை எழுத இலக்கணம் தேவையா
இல்லையா, ஒரு கவிதை எந்த மாதிரி இருக்கணும்
அதெல்லாம் தெரியாமலே இவ்ளோ நாளா
கவிதைன்ற பேர்ல உங்களையெல்லாம் சிரமப்பட
வச்சிட்டேன்.

பெரியார்

தெரியாமல் கால்
பட்டுவிட்டதெனத்
தொட்டுத் துதித்தான்
பெரியார் புத்தகத்தை

வாத்தியார்

செலவினம் கற்றுத்
தந்த கணக்கு வாத்தி
மாத இறுதிகளில்
வட்டிக்கடை வாசலில்

விடுதலை

சித்திரை பிறந்தால்
ஏழரையிலிருந்து விடுதலை
என்றது கூண்டுக்குள்
சிறையிருந்த சோதிடனின்
கிளி.

என் வீட்டு நிலா

என் வீட்டுத் தண்ணீர்
தொட்டியில் தினமும்
கலைக்கிறேன் பாட்டியின்
வடை சுடும் படலத்தை.

விற்பனைக்கு

பத்துப் பாத்திரம்
தேய்ப்பவளின் எட்டுப்
பாத்திரங்கள் "சேட்"
வசம் தயாராக
விற்பனைக்கு.

இதெல்லாம் எந்த வகையில சேத்தின்னு
சொல்லுங்க.

Tuesday, October 17, 2006

தெருக்கூத்து - ஒரு அற்புதமான கலை

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பிறந்து
வளர்ந்தவர்கள் கண்டிப்பாக தெருக்கூத்து
பார்த்திருப்பீர்கள். திருவிழா காலங்களில்
இடம்பெறும் இந்த கலை இப்போது அழிந்துவரும்
கலையாக இருக்கிறது. சினிமா, நாளிதழ்
போன்ற பெரிய ஊடகங்கள் வரும் முன்பு
மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்த இந்த கலை
இப்போது எங்கே என்பது தேட வேண்டியுள்ளது
வேதனையான உண்மை.எனது சித்தப்பா, மாமா
தாத்தாக்கள் வாழ்ந்து வரும் ஊரில் திருவிழா
நடைபெறும் காலங்களில் மூத்த மாப்பிள்ளையான
எனது அப்பாவிற்கு பத்திரிக்கைகள் அனுப்புவது
வழக்கம். மஞ்சள் நிறத்தில் பத்திரிக்கை மிகப்பெரிய
அளவில் இருக்கும். சம்பிராதாயமாக நேரில்
வந்து திருவிழாவிற்கு அழைப்பர். பெரும்பாலும்
அந்த விழாக்களுக்கு என்னையும் எனது,அம்மாவோ
அண்ணனோ, தம்பியோ, உடன் அனுப்புவார்கள்.

நான் முதலில் அந்த பத்திரிக்கையில் பார்ப்பது
நிகழ்ச்சி நிரலைத்தான். என்றைக்கு தெருக்கூத்து
நடைபெறுகிறது என்பதையே முதலில் பார்ப்பேன்
அதற்கேற்ற மாதிரி பயணத்தை வைத்து கொள்ள
அப்பாவிடம் நச்சரிப்பேன். ஊர் ஊராக போய்
இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை மட்டுமே பார்ப்பதில்
அலாதி பிரியம் எனக்கு. இதில் இன்னொரு வசதி
என்னவென்றால் நெருங்கிய உறவினர்களை சந்திக்கும்
வாய்ப்பு. அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டி
போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம். பள்ளிக்கூட
இம்சையிலிருந்து ரெண்டு நாள் தப்பிக்கலாம். இப்படி
நிறைய இருக்கிறது.

இப்போது நடக்கும் திருவிழாக்களில் சினிமாவின்
இரண்டாம்தர ஆட்டக்காரி, ஆட்டக்காரர்களை
வைத்து இசைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசத்தை
அரங்கேற்றுகிறார்கள். ஆர்கெஸ்ட்ராவாம் இதுக்கு பேரு.
எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனக்கு தெருக்கூத்தை பிடித்த சம்பவம் கொஞ்சம்
சுவாரசியமானது. அப்போது எங்கள் ஊர் பக்கத்தில்
ஒரு தெருக்கூத்து கலைஞர் இருந்தார். எனது சிறிய
வயதில் இவரை தினமும் பார்ப்பேன். எங்கள் வீட்டு
வழியாகதான் தினமும் ஊருக்குள் பொருள் வாங்கவோ
விற்கவோ போக வர வழி. அந்த கலைஞர்
போகும்போதும் வரும்போதும் நான்கைந்து சிறுவர்கள்
அவர் பின்னாலே நக்கலடித்துக்கொண்டு போவோம்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்ய மாட்டார்
அவர். கல் விடுவது, அவரின் நீளமான கூந்தலை பிடிச்சு
இழுத்து விட்டு ஓடுவது. இப்படி செய்வோம். அவரும்
வெறுப்பா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவார்.
வித்யாசமா ஒரு ஆள் தெருக்குள்ள நுழைஞ்சாவே
நாய்கள் குரைக்குமே அந்த மாதிரிதான் அவர்
தெருக்குள்ள நடந்து போகும்போது. அப்போதெல்லாம்
அவரை பத்தி ஒண்ணுமே தெரியாது. பின்னாளில்
அவரால்தான் எனக்கு தெருக்கூத்தின் மீது காதலே
வந்தது. நீளமான கூந்தல், உதட்டோரமாக எப்போதும்
வழியும் வெற்றிலை குதப்பல், நெற்றியில் குங்குமம்,
நீளமான வெள்ளை வண்ண ஜிப்பா, அதுக்கு நேர் எதிரா
கீழ லுங்கி கட்டியிருப்பார். சுலபத்தில் ஆணா, பெண்ணா
என்று கண்டேபிடிக்க முடியாதபடி இருக்கும் அவரின்
தோற்றம். இதுவே கொலவாரிகள் அவரை கிண்டலடிக்க
முதற்காரனம்.

ஏதேச்சையாக அவர் நடித்த தெருக்கூத்தினை காணும்
வாய்ப்பு கிட்ட அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ச்சே
இவ்வளவு அற்புதமான மனிதரை இவ்வளவு நாளா
ரொம்ப காயப்படுத்திட்டோமேன்னு நினைச்சேன். என்ன
ஒரு கம்பீரமான குரல், அரை மணி நேர பாடலெல்லாம்
அட்டகாசமாக பாடிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும்
மைக்கு கூட இல்லை. விடிய விடிய நடக்கும் இந்த
தெருக்கூத்து. ஆண்களே பெண்வேடம் போட்டார்கள்
அதையும் உற்று நோக்கினால்தான் தெரியும். இதயே
வேடிக்கை பார்க்க பெருசுங்க கூட்டம் பெரிய அலப்பறை
பண்ணிகிட்டு இருந்தாங்க. பலவேடங்களில் கலக்கினார்
அவர். இதே மாதிரிதான் சினிமாவில நடிக்கிறாங்க
அவங்களுக்கு கிடைக்கிற புகழ் இவங்களுக்கு ஏன்
கிடைக்கல என்பது போன்ற சந்தேகங்கள் வந்தது.
கள் குடிப்பது, கூத்தியாள் வச்சிக்கிறது, திருடறது,
போன்ற தவறுகளை மிக நையாண்டியாக எடுத்து
சொல்வார்கள். புலிகேசி படத்தில் கப்ஸி, அக்காமாலா
போன்றவைகளை கலாய்த்தது போல. சில இடங்களில்
"இரட்டை அர்த்த" வசனங்கள் இருந்தாலும்
முகத்தை சுளிக்க வைக்காது. பின்னாளில் அவரை
கண்டால் நக்கல் எதுவும் செய்வதில்லை. ஒரு
புன்னகையோடு நின்று விடுவேன்.

Image Hosted by ImageShack.us

இவ்வளவு சுவாரசியமான ஒரு கலையை இப்போது
கிராமங்களில் கூட காண்பது அரிதாக இருக்கிறது.
இப்போது. இந்த சமயத்தில தற்போது ஒளிநாடா
வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக்
கொண்டிருக்கும் வெயில் படத்தில பட்டி பேச்சியாத்தா
என்ற பாடல் தெருக்கூத்தினை ஞாபகப்படுத்துவது போல
அமைந்திருந்தது. அதை கேட்ட மாத்திரத்தில் பழைய
நினைவுகள் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
வழக்கமான கிராமியப்பாடல்களுக்கு மாணிக்க
விநாயகத்தயே நாடாமல் அந்த கிராமிய கலைஞர்களை
கொண்டே பாட வைத்திருப்பதாலேயே பெரிய
அளவுக்கு வெற்றி பெற காரணம் என்பது என் கருத்து.
இந்த பாடலாலேயே படத்தையும் பார்க்க வேண்டும்
என்று ஆவலாக இருக்கிறது.

நீங்களும் கேளுங்க இங்கே

ஷங்கர் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு
வெற்றிப்படங்கள் காதல், புலிகேசி மூன்றாவதாக
வெயில். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Monday, October 16, 2006

செத்து செத்து விளையாடலாமா?

Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

Friday, October 13, 2006

சனநாயகம் பொய், பணநாயகமே மெய்

Image Hosted by ImageShack.us

1300 கிராம்ல ஒரு கிராம் அளவுக்காச்சும் மனிதம்
என்ற உணர்வு இருந்தால் இதுபோல நடந்துகொள்ள
தோணுமா?

Image Hosted by ImageShack.us

"ஓட்டுபொட்டில ஓட்டு போடுங்கன்னா தெருவில போடறாங்க"

Image Hosted by ImageShack.us

"74 சதவீதம் ஓட்டுபதிவு எல்லாம் அதிகம்தான்"

Image Hosted by ImageShack.us

கொசுறு
"நடக்கும் என்பார் நடக்காது "
நடக்காதென்பார் நடந்துவிடும்"

இந்த தேர்தலும் நிரூபித்துவிட்டது. பணநாயகமே
சனநாயகமென்பதை. யார் ஆட்சிக்கு வந்தாலும்
அரசியல்வாதிகள் எங்களின் குணம் இதுவே.
இதுக்காக நீங்க ஓட்டு போடாம இருந்து விட
வேண்டாம்.

Wednesday, October 04, 2006

லஹே ரஹோ முன்னாபாய் - என்ன சொல்கிறார்?

Image Hosted by ImageShack.us

விமர்சனம் எழுதற அளவுக்கு நமக்கு விஷயஞானம்
கிடையாது ஏன்னா நான் பார்த்த முதல் இந்தி படம்
என்பதால்தான். முன்னாபாய் M.B.B.S படத்தின் பெயரில்
பாதியை மட்டுமே லஹேரஹோ வுக்காக எடுத்து
இருக்கிறார்கள். மற்றபடி இதற்கும் முந்தைய பாகத்திற்கும்
துளியும் சம்பந்தமில்லை. படம் முழுக்க காந்திய
சிந்தனைகளை தெளித்திருக்கிறார்கள்.

Image Hosted by ImageShack.us

காமெடி படங்களில் ஹீரோவுக்கு துணையாக ஒரு
கேரக்டர் இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை
இந்த படம் ஒத்திருந்தாலும் கொஞ்சம் வித்யாசம்
இருப்பதை உணர முடிகிறது. சஞ்சய்தத் ஒரு ரவுடி
ஆள் அசாத்திய உயரத்துடனும் வடநாட்டு லாரி
டிரைவரை நினைவுபடுத்துகிறார். ஆரம்ப காட்சியே
தூள். ரேடியோவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கதாநாயகி ஒரு ரேடியோ ஜாக்கி அந்த குரலை
கேட்டே மயங்கி விடுகிறார் சஞ்சய். அவளை
எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலில்
இருக்கிறார். இந்த படத்தில் குறிப்பிடவேண்டிய
கதாபாத்திரங்கள் காந்தியாக நடித்திருக்கும்
பெரியவரும் சஞ்சயின் தம்பியாக நடித்திருக்கும்
அர்ஷத் வார்ஸியும் மனுசனுக்கு காமெடி
சூப்பரா வருது.

Image Hosted by ImageShack.us

குட்மாஆஆஆர்னிங் மும்பை என்று குயில் கூவி
மும்பையை எழுப்புகிறது அந்த குயில்தான் வித்யா
பாலன். சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது.
காந்தி பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்
சொல்பவர்கள் வித்யா பாலனுடன் ரேடியோவில்
பேசலாம் இதுதான் போட்டி இதற்காக நான்கு
பேராசிரியர்களை கடத்தி வந்து விடுகிறார் சஞ்சய்
பத்து பேர் சஞ்சய்யுடன் இருந்து ரேடியோவுக்கு
போன் போட்ட வண்ணம் இருக்காங்க யாருக்கு
முதலில் லைன் கிடைத்தாலும் சஞ்சயிடம் கொடுத்து
பேராசிரியர்களின் உதவியுடன் கேள்விகளுக்கு
சரியான விடை சொல்கிறார்.

Image Hosted by ImageShack.us

காந்தியை பற்றி லெக்சர் கொடுக்க வேண்டி
மூன்று நாள் கண்விழித்து அவரை பற்றி படிக்கிறார்.
சஞ்சய் கண்ணுக்கு மட்டும் காட்சி தருகிறார் காந்தி.
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நேயர்களின் பிரச்சினை
களுக்கு நேரடியாக காந்தியின் உதவியுடன் தீர்வு
சொல்கிறார் அந்த காட்சிகள் மிக உணர்ச்சிகரமாக
இருக்கீறது. இவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி
ரேட்டிங்கில் உயர வித்யா பாலனுக்கு கல்தா
கொடுத்துவிட்டு சஞ்சயை நிகழ்ச்சி நடந்த வைக்கிறது
ரேடியோ நிர்வாகம்.

Image Hosted by ImageShack.us

இதற்கு நடுவில் கதாநாயகியின் வீடு சஞ்சய்க்கு தெரியாமல்
காலி செய்யப்படுகிறது. வில்லன் தந்திரமாக எல்லாரையும்
வெளியூருக்கு அனுப்பிவிட்டு வீட்டை காலி செய்ய பழி
சஞ்சய் மீது வருகிறது. இவையெல்லாவற்றையும் சரி
செய்து காதலியுடன் இணைகிறாரா என்பதுதான் கதை.
இதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Image Hosted by ImageShack.us

மன்னிப்பு தமிழ்ல வேணா கேப்டனுக்கு பிடிக்காத
வார்த்தையா இருக்கலாம் ஆனால் காந்திக்கு
மிகப்பிடித்த வார்த்தை. தவறு செய்து விட்டால்
தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார்.
ஒரு சீனில் சஞ்சய் அர்ஷத்தை கை நீட்டி அடித்து
விட அதற்காக காந்தி மன்னிப்பு கேட்க சொல்லும்
காட்சியில் தியேட்டரில் இருந்த அத்தனை முகங்களிலும்
கண்ணீர் வழிந்தது. பக்கத்தில இருந்த சேட்டு வீட்டு
மாமி குலுங்கி குலுங்கி அழுவுது. நமக்கு அரை குறையா
புரிஞ்சாலும் சோகத்தை மறைக்க முடியவில்லை.

Image Hosted by ImageShack.us

சஞ்சயின் கண்களுக்கு மட்டுமே தெரியும் காந்தி.
உன் கண்ணுக்கு தெரிகிறாரா என்று அர்ஷத்தை பார்த்து
கேட்கிறார் சஞ்சய். ஓ தெரியராறே, ஹாய் பப்பு என்று
கை கொடுக்க போவது காமெடியின் உச்சம்.

அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசிப்பவர்
தினமும் என் வீட்டு வாசலிஃல் பான் மென்று துப்புகிறார்
என்ன செய்வது என்று ஒரு நேயர் கேட்கிறார். அதற்கு
காந்தி தினமும் அவர் செல்லும்போது சிரிப்புடன் ஒரு
வணக்கத்தை வைத்துவிட்டு அவர் துப்பிவிட்டு போன
கறையை துடையுங்கள். இதே போலவே அவரும்
செய்கிறார் மூன்றாவது நாளில் எச்சில் துப்புபவர்
திருந்தி விடுவார். அகிம்சையின் வலிமையை அந்த
இடத்தில் உணர முடிகிறது.

நாட்டில் அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தை
நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அதுதான் அகிம்சை.

மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு
நடிகர் என்பது மட்டும் நான் கேள்விப்படாதிருந்தால்
படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

இந்த பதிவு விமர்சன பதிவு என்று நினைத்து வந்தவர்களிடம்
மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, October 01, 2006

ஒரு மூன்றெழுத்து வார்த்தை.

நண்பர்களே ஒரு மூன்றெழுத்து வார்த்தை
உலகம் முழுவது சுற்றி வருகிறது. அந்த
வார்த்தைகளை பற்றி நான் அறிந்ததை
சொல்லுகிறேன். நிச்சயமாக இது ஒரு
கவிதையாக இருக்காது அப்படி ஜல்லியடிக்கவும்
விரும்பவில்லை . உணர்வுகள் என்று சொல்லலாம்.
என் பார்வையை இங்கு பதிகிறேன். எப்படி
இருக்கிறது என்று சொல்லுங்கள்.

காதல் வயப்பட்டவனின் தனிமை நீளும் என்று
சொல்வார்கள் என் தனிமையை சோதிக்கவே காடு
நோக்கி சென்றேன். அவள் ஒற்றைப்பார்வையின் நீளம்
தெரிந்தது. அது என்னை கூட்டிச்சென்ற தூரமும்
தெரிந்தது, கூடவே அவள் என்னுடன் பயணிப்பாளா?
என்ற சந்தேகமும்.

Image Hosted by ImageShack.us

என்னுள்ளே தோன்றும் எண்ணங்களை அசை போடவும்
அதனை இனிமையானதாக மாற்றவும் இந்த தனிமை
பேருதவி செய்யும் என்ற எண்ணம்.

ஏன் இந்த தற்காலிக சந்தோஷத்திற்காக மனம்
எங்குகிறதென்பது இன்றுவரை விளங்கவில்லை.
படைப்பின் ரகசியமா?
அவள் பார்வையின் சூட்சுமமா?

தூறல் விட்டிருந்த இளமாலை நேரம். ஒரு
பார்வையற்றவனும் ரசிக்க உகந்த தருணம்.
இதற்கு முன் இந்த பரவச நிலையை நான்
எய்ததில்லை. எல்லாம் அந்த மூன்றெழுத்து
செய்யும் மாயம்.

அதோ அந்த இலையில் இருந்து விழும் கடைசி
சொட்டு மழை நீரை இதற்கு முன் பலமுறை
கண்டிருந்தாலும் இன்று ரசிப்பதுபோல முன்பு
ரசித்ததில்லை.

அரவமில்லாத காட்டில் உதட்டோரமாக இளநகையுடன்
சுற்றும் என்னை விநோதமாக நோக்கும் ஆடு மேய்க்கும்
இடைச்சிறுவர்கள்.

என் மேல் சேற்றை வாரியிறைத்துச் செல்லும் பேருந்தை
புன்னகயுடன் பார்க்கிறேன்.

மோன நிலையில் நான் இல்லாதிருந்தால் பேருந்தின்
கண்ணாடியை பதம் பார்த்திருக்கும் எனது கைகள்.

வியப்பாகவே உள்ளது இந்த மாற்றங்கள்.

எனக்கு அருகிலே சில மேகங்கள் கடக்கிறது
பல ஊர்கள் பல நாடுகள் பார்த்திருப்பாய்
இப்போது எங்கு உன் பயணம்?
என்னையும் கூட்டிப்போயேன் உன்னுடன்!

அம்மையிடமும், அப்பையிடமும், உடன் பிறந்தவர்களுடனும்,
நண்பர்களுடனும் உணர முடியா ஒரு நேசம் உன்னுடன்.

அதற்கு பெயர் என்ன?

உலகப் பொதுமொழியான காதல் என்று சொல்ல
விருப்பமில்லை. பூர்வஜென்ம தொடர்பு என்று
மழுப்பவில்லை.

காதல் என்று எதனை சொல்வது?

காவியங்களில் வருவதையா? படங்களில் சொல்வதையா?
எதன் மீதும் நம்பிக்கையில்லை எனக்கு. அது சொல்லும்
காதல்களிலும் பற்றில்லையெனக்கு.

நான் அடைந்த மாற்றங்களை நீயும் உணர்ந்தாலொழிய
இதற்கு விடையில்லை.

அதை நீ உணரும்முன் உன்னிடம் சொல்லப்
போவதுமில்லை. உணர்ந்த பின்னே சொல்ல
அவசியமிருக்காது.

ஒரே புள்ளியில் நாம்.

காதல் என்று எதனை சொல்லுவது?

திரும்ப இந்த கேள்வி என்னை துளைக்காது.

உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.

காதல் என்பது எதுவுமில்லை.

உணர்வுகளே வாழ்க்கை.