எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, May 29, 2007

VCC - 606207

சந்தேகமே வேணாங்க தலைப்புல இருக்கறது கிரிக்கெட்டு கிளப்பு பேருதான். வெங்கட்டாம்பேட்டை (ரோடு) கிரிக்கெட் கிளப் (VCC). மொதல்ல எங்க ஊரு கச்சிராப்பாளையம் கிரிக்கெட் கிளப்புன்னு வைக்கறதாதான் இருந்துச்சி ஆனா பாருங்க
வேற சில வெட்டி ஆபிசருங்க அதே பேர வச்சிட்டானுங்க அதனால VCC ன்னு
வச்சாச்சி இந்த பேரும் நாங்களா வச்சிக்கல தானா வந்துச்சி (இது என்ன பெருமையா?)
எங்க ஊர்ல இருக்கற மொத்தம் பத்து தெருவுக்கு எட்டு டீம் இருக்கும் இதுல
எல்லாரும் KCC ன்னு வச்சிகிட்டா டோர்னமெண்ட்ல கொழப்பம் வந்துடும். ஒருமுறை
வந்துச்சி டேய் இவனுங்க வெங்கட்டாம்பேட்டை தெருப்பசங்கடான்னு எவனோ
ஒருத்தன் சொல்ல எவனோ ஒருத்தன் எழுத அதுவே நிலைச்சி போச்சு.

அண்ணே வெங்கட்டாம்பேட்டைன்னு பக்கத்து குக்கிராமத்து பேர நம்ம டீமுக்கு
ஏன் வச்சிங்க ரொம்ப கேவலமா இருக்கு அதுவுமில்லாம அந்த ஊர் பசங்க
எங்கனாச்சும் ரப்பர் பந்துல விளாண்டு தோத்துட்டு வந்தா கூட நாமதான்
தோத்தோம்னு பேசிக்கறானுங்க அதனால அடுத்த போட்டி வர்றதுக்குள்ள
பேர் வச்சே ஆகணும்னு அடம்பிடிச்சானுங்க.

நாம பேர எவனுமே கேள்விப்பட்டுருக்க கூடாது ஆனா பயங்கர அர்த்தமுள்ளதா
வைக்கணும்னு யோசிச்சி யோசிச்சி வச்சதுல மூளை காய்ஞ்சதுதான் மிச்சம்.
ஏதேச்சையா ஸ்டார் மூவீஸ் பாக்கும்போது டெஸ்பெரடோ (Desperado )ன்னு
ஒரு படம் ஓடுச்சி ஆக்ஷன் படம் அட சூப்பரா இருக்குதேன்னு இந்த வார்த்தைக்கு
பாக்கறவன்கிட்டலாம் அர்த்தம் கேட்டேன் எவனுக்கும் தெரில. நம்ம சொக்கன்கிட்ட
கேப்பம்னு அவன்கிட்ட கேட்டா நாதாறி தெரியாததை தெரியாதுன்னு சொல்லவே
கூச்சப்படற நல்ல பய. அட அதுவாடா... அப்படின்னா பயங்கரமான மிருகம்
டைனோசர் மாதிரி ஆனா அது இப்ப அழிஞ்சி போச்சிடானு ஒரு பீலா விட்டான்.
நானும் நல்லாதான் இருக்குன்னு அந்த பேரையே வச்சிட்டேன்.

DCC (Desperado Cricket Club) இனிதே உதயமாகியது.

இப்பதாங்க ஒரு சிக்கல். இந்த பேர எந்த நாயுமே ஒழுங்க சொல்ல மாட்டீகிதுங்க

தாஸ்பார்டா
டாஸ்போடட்டா
டொஸ்பொராட்டா

கொஞ்சம் தேய்ஞ்சி போய் புரோட்டான்னு சொல்ல ஆரம்பிச்சானுங்க.

அண்ணே நாம அங்கங்க போய் தோத்துட்டு வரும்போதுல்லாம் பரோட்டா டீம்
கொத்து பரோட்டோ ஆகிடுச்சிடோய்னு கிண்டல் பண்றானுங்க வேற பேர்
வைக்கணும். வாய்ல நொழையாத இங்கிலிசு பேரெல்லாம் இருக்ககூடாது நல்ல
பேரா அழகா வைக்கணும்னு ஒருத்தன் அழாத குறையா வேண்டிகிட்டான்.

டேய் அடிக்கடி டீம் பேர மாத்தினா நல்லா இருக்காதுடா பாக்கறவனுங்க
பேர் கூட வைக்க தெரிலன்னு கிண்டல் பண்ணுவானுங்க.

இப்ப மட்டும் என்ன வாழுதாம். பேர மாத்துங்க இல்லாட்டி நான் கெஸ்ட்
ப்ளேயரா பக்கத்து தெரு டைகர் டீமுகு போயிடுவோம்னு மிரட்டிய பிறகு
பழைய பேரான வெங்கட்டாம்பேட்டை கிரிக்கெட் கிளப்புன்னு வச்சாச்சி.

ஆரம்பத்துல எந்த ஒரு நோக்கமும் இல்லாம சாயந்திரம், ஞாயிறுகள்ல பொழுது
போகணுங்கறதுக்காக விளையாட ஆரம்பிச்சது, பிறகு ஆள் அதிகம் சேந்து போனா
ரெண்டு டீமா பிரிச்சி விளையாடறது. அப்படி விளையாடும்போதுதான் பக்கத்து
ஊர்காரனுங்க பெட் மேட்ச் விளையாட வாங்கன்னு கூப்பிட, போனா செம அடி
குடுத்து அனுப்பனானுங்க. அப்படியே அடி வாங்கி அங்கங்க செயிச்சி நாமளும்
ஒரு டீம்னு ஆகிப்போச்சி. எங்க டோர்னமெண்ட் நடந்தாலும் நமக்கு ஒரு கடுதாசி
குடுத்து விடுவாங்க. தோ பார்றா நம்மளையும் ஒரு டீம்னு கூப்பிடறானுங்க
பத்திரிக்கைல பேரெல்லாம் போடறானுங்கன்னு ஊர் ஊரா போய் விளையாடினோம்.
மொத்தமா இருவது இருவத்தஞ்சு டோர்னமெண்ட் விளையாடியிருப்போம் ஆனா
ஒரே ஊர்ல மட்டும்தான் முதல் பரிசு வாங்கினோம்.

மொத மொதல்ல கிரிக்கெட் மட்டைய பிடிச்ச இடமே ரொம்ப வசதியான இடம்
நாலு பக்கமும் தடுப்புச்சுவர் வச்சிருக்க நெல்லு காய வைக்கிற களம். எங்க வீட்டு
பக்கத்துலயே இருந்ததால ரொம்ப வசதி. வெப்பன்ஸ்(பேட், ஸ்டிக்) எல்லாம் எங்க வீட்டு
மாட்டு கொட்டாய் ஓரமா இருக்கும் யார்வேணா எப்ப வேணா வந்து எடுத்துக்கலாம்
ஆனா பேட்டும் பந்தும் என்கிட்டதான் இருக்கும்.

அந்த நெல்லு காயவைக்கிற களம் எங்க ஊரு நாட்டாமைக்கு சொந்தமான இடம்.
அண்ணன் தம்பிக்குள்ள சண்டையா இருந்ததினால யார் மில் நடத்துறதுன்னி சண்டை
வந்து எவனுமே நடத்தாம நாங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம்.
கட்டாந்தரையா இருக்கறதுனால கார்க் பால் அடிக்கடி ஒடஞ்சு போகவே ஏரிக்கு மாறியது
எங்க மைதானம்.

பரந்து விரிஞ்ச ஏரி. நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)
அவ்ளோ தூரமெல்லாம் போக முடியாது நீயே போய் எடுத்து வந்தா அடுத்த பால்
போடுவேன். அடுத்த முறை ரொம்ப தூரம் போச்சின்னா அடிச்சவனே போய
எடுத்துக்கணும்னு அவசர ரூல் போட்டானுங்க. இப்படி பள்ளத்துல விழுந்தா அவுட்டு
கம்பத்த தாண்டி தூக்கி அடிச்சா அவுட்டுன்னு மேட்சுக்கு மேட்ச் விதிகள் மாறும்.
திடீர்னு அவுட்டாகிட்டோம்னா "டேய் போன மேட்சுல வச்ச ரூல்ஸ் அது, ஆட்டம்
ஆரம்பிக்கும்போதே அந்த ரூல்ச தூக்கியாச்சி தெரியாதா உனக்குன்னு ஏமாத்தலாம்.

வெளியூர் டோர்னமெண்ட் ஆடபபோனோம்னா மேக்சிமம் ஜெயிக்கணும்னு வெறியோட
விளையாடுவேன். கிரவுண்ட்ல கன்னாபின்னான்னு கோவம் வரும். சொந்த தம்பியா
இருந்தாலும் திட்டுவேன். எதிரணியெல்லாம் எனக்கு எதிரி அணியே இல்ல டீமுக்குள்ளயே
ஒரு எதிரி இருக்கான் அவந்தான் எந்தம்பி. கேட்ச் மிஸ் பண்ணிட்டான்னு திட்டுனோம்னா
உடனே கிரவுண்ட்லருந்து கிளம்பிடுவான் சரி அவன் மட்டும் போனா பரவாயில்ல வேற
ஆள போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஆனா இவரோட ஆதரவாளர்கள்னு நாலு
பேர கூட்டிட்டு போவாரு. அடுத்தமுறை திட்டமாட்டேன்னு சொன்னாத்தான் போராட்டத்த
வாபஸ் வாங்குவாரு.

சங்கராபுரத்துல பைனல்ல ஜெயிச்சி கப்பு வாங்கினது ஒருமுறைதான் எங்கள் அணி
முதல் பரிசு வாங்கியது. அதுக்கப்புறம் எங்க போனாலும் நாலாவதோ மூணாவதோ
உறுதி.

எல்லாருக்கும் சொந்த பேரு இருந்தாலும் கிரவுண்டுன்னு வந்துட்டா எவனுக்கும் ஒரு
பட்டப்பேரு வச்சே ஆகணும். பேட் மாதிரி கிரிக்கெட் விளாட அது ரொம்ப
அவசியம். அதனால அப்படியே கீழ குடுக்கறேன்.

கதிர் (நாந்தாங்க கேப்டன்)

சளி எ ஞானம் (கிரவுண்ட்ல எச்ச துப்பிகிட்டே இருப்பான் அதனால சளி)

கொப்பர எ சுப்பிரமணி (பீல்டிங் புலி)

சொக்கன் எ அசோக் (எங்கள் அணி வேகப்பந்துப்புயல்)

பீலாக்காடு எ மாதவன் (வாய்திறந்தாவே பொய்தான் அதனால இந்த அடைமொழி)

ஸ்லாட்டர் சக்தி (ஆஸி ப்ளேயர் ஒருத்தன் பேரு எதுகையா வருதுன்னு சேத்துகிட்டான்)

சோனி எ கவி (டீம்ல எனக்கு ஒரே எதிரி இவந்தான். சொந்த தம்பி வேற!!)

சொங்கி எ மணிவண்ணன் (இந்திய அணிக்கு ஏத்த பய)

ஏக்கே எ சரவணன் (பாதி மேட்சுல காணாம போயிடுவான்)

வெங்கலக்குண்டான் எ வெங்கடேசன் (குண்டானுக்குள்ள கோலிகுண்ட போட்டு உருட்டினா
என்ன சத்தம் வருமோ அதே மாதிரி பேசுவான், ஒண்ணுமே புரியாது)

மாண்டி எ ராஜேந்திரன் (இந்த பேர்எப்படி வந்துச்சின்னே தெரில, இவனுக்கு கட்டை
விரல் கிடையாது,நகங்கடிக்கிற பழக்கம் இவனுக்கு ஜாஸ்தி உணர்ச்சிவசப்பட்டு கடிச்சி
கடிச்சி கட்டை விரல் காணாமப்போயி மொழுக்குனு இருக்கு விரல் இருந்த ஏரியா.
இதனாலேயே கேட்ச் அடிக்கடி மிஸ் பண்ணுவான்)

இதத்தவிர சப்ஸ்டிடூட்னு ஒரு மூணு நாலு பேர் இருப்பானுங்க, பஸ்ல போக காசு
இல்லன்னா மட்டும் மாட்டு வண்டி வச்சிருக்க கோவிந்தன கூப்பிட்டுக்குவோம்
அப்பதான அவன் மாட்டு வண்டில ஓசில போக முடியும்.

விட்டா நான் மங்களம் போடாமா மங்களம் பாடிட்டு இருப்பேன். இத்தோட
முடிச்சிக்கிறேன்.

Thursday, May 24, 2007

அன்பு மலர்களே...

அந்தச் சிறிய பேருந்தில் ஒரு வரிசைக்கு ஐந்து உட்காரும் வசதி உள்ளது
மொத்தம் ஏழு வரிசை எல்லா இருக்கையிலும் ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
வண்டி கிளம்பி அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இரைச்சலான
நகரத்தை விட்டு வெளியே வந்ததாலோ என்னவோ பலர் தூக்கத்தை துணைக்கிழுத்திருந்தார்கள் சிலர் இழுக்க முயற்சி செய்து தோற்றவர்களாக
திரைச்சீலையை விலக்கி இருட்டு வெளியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலோரின் முகங்கள் நாளை பத்தோ முதல் திரும்ப ஆறுநாட்கள் வெயிலில் பன்னிரண்டு மணிநேர முதுகொடிக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற மலைப்பு
கலந்த சலிப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமைதியான பேருந்தில் திடீரென்று ஒருத்தர் போன்ல பேசறார்.

ஹல்ல்லோ... ஹல்லோ நாந்தாம்மா பைசல் பேசறேன். நல்லாருக்கிங்களா

ஆங் ஆங்

நான் நல்லா இருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை லீவு அதான் மச்சான பாத்துட்டு
வர துபாய் போயிருந்தேன். இப்ப துபாயிலருந்து அபுதாபி போயிட்டு இருக்கேன்.

ஜமீலா... ஜமீலா

நான் பேசறது கேக்குதா உனக்கு?

.....

ஆனா எனக்கு சரியா கேக்க மாட்டேங்குது. ஒரு நிமிசம் இரு நான் லவுடு ஸ்பிக்கர்ல போட்டுக்கறேன்.

ஆங் இப்ப சொல்லு.

............

என்னம்மா பண்றது போன மாசம் அர்ஜண்டுனு சொன்ன அதனால ரெண்டாயிரம் அனுப்பினேன். இந்தமாசம் இன்னும் சம்பளமே வரல. அந்த மலையாளிகிட்ட சம்பளம் கேட்டேன் மொத மாச சம்பளம் குடுக்கமாட்டோம் கம்பேனிலதான் இருக்கும்னு சொல்லிட்டான். பார்ட் டயம் பாத்துதான் அனுப்பினேன்.
அது கெடக்கட்டும் இஸ்கூல்ல சேத்துட்டியா புள்ளைய.

.............

இன்னும் நோட்டு பொஸ்தகம் வாங்கணுமா?

.....................

அட்மிசனுக்கே ரெண்டாயிரம் ரூவாயா?

....................


சரிம்மா அடுத்த மாசம் அனுப்பறேன். கொஞ்சம் செலவானாலும் புள்ளய படிக்க வைக்கணும்ல.

அப்புறம் நர்கீசுக்கு எப்படியிருக்கு?

........

என்னது பொறந்துடுச்சா?

.......

என்ன கொழந்த?

.....

பொம்பள கொழந்தையா? நல்லது.

சரிம்மா ரொம்ப நேரம் பேசறேன் அப்புறம் மிஸ்ஸுடு கால் குடுக்க காசு இல்லாம
போயிடும். வச்சிரவா?

...........

ஆமாம்மா

இப்பவே மாசத்துக்கு நாலு கார்டு போடறேன். அதுக்கு நூறு திராம்சு போச்சுதுன்னா
பொறவு சாப்பாடு, ரூம் வாடவ சேத்து மாசம் அய்ன்னூறு ஆகுது.

வச்சிரவா....

புள்ளைய நல்லா பாத்துக்கோ....

வச்சிர்றேன்.

வச்சிர்றேன்.

____________________
பஸ்ல இருந்தவங்க பாதிப்பேரு எழுந்து அக்னிப்பார்வை பாக்கறாங்க அவர.
ஊருக்கு போன் பேசினதுக்கு அப்புறம் ரெண்டு பேர ஜெயிச்ச மாதிரி ஒரு தெனாவட்டு
வந்து உக்காந்திருச்சு முகத்துல.

ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையுடனும் போன் உரையாடலின் தொனி மாறி
சில விஷயங்களை பேச ஆரம்பித்ததும் எனக்குள் இருந்த பரிதாபக்காரன் எழுந்து
உக்கார்ந்து அழ ஆரம்பித்தான். எல்லாத்தையும் நான் பாத்துகிட்டுதான் இருந்தேன்.

மறுபடி அமைதி கவ்வ தொடங்கிய நேரம்...

அண்ணே உங்கள பாத்தா தமிழ்காரரு மாதிரி தெரியுது, தழிழாண்ணே?

ஆமாங்க.

நானே உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்.

இதுதான் நான் அபுதாபிக்கு ரெண்டாவது முறையா வரேன். முசாப்பா ஏரியா
வந்துதுன்னா கொஞ்சம் சொல்லுங்க நான் அங்கதான் இறங்கணும்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

எனக்கு தெரியும்ணே நான் சொல்றேன். கவலபடாதிங்க.

நீங்க உரக்க போன் பேசிகிட்டு இருக்கும்போது தோ அங்க உக்காந்திருக்கானே அந்த பாக்கிஸ்தானி பாகல் ஆத்மினு உங்கள சொன்னானே..

அட அவனுங்க கடக்குறானுங்க குளிக்காதவனுங்க. வாரத்துக்கு ஒரு முறைவீட்டுக்கு பேசறேன் ஒழுங்கா பேசவேணாமா இவனுங்களுக்கு பயந்துகிட்டு குசுகுசுன்னு பேசினா இன்னும் அஞ்சு நிமிசம் எச்சா ஆகி பில்லு கூடிப்போயிரும்ணே!

முசாப்பாவுல எங்க போகணும். அங்க லேபர் கேம்ப்ல எனக்கு அங்க கம்பெனி அக்காமடேஷன் அங்கதான் போயிட்டுருக்கேன்.

என்னா வேலை?

கம்பியூட்டர்ல வேலங்க..

ஓகோ

நல்ல கம்பேனியா, நல்ல வேலையான்னு விசாரிச்சிட்டு வாந்திகல்ல? ஏன்னா என்னை மாதிரி கஷ்டபடவேணாம்ல.

நான் பாருங்க ஊர்லயே மாசம் எட்டாயிரம் சம்பளட்துக்கு வேல செஞ்சிட்டு
இருந்தேன். பக்கத்து வீட்டு கருவாயன் ரிட்டர்ன்ட் வரும்போது நாலு காணி வாங்கிப்போட்டான். அட நாலு காணி வேணாம் புள்ளய நல்லா படிக்க
வைப்போம்னு வந்தேன். ஏ.சி ரிப்பேர் வேலை செய்றேங்க.மாசம் நானூரு
அய்னூறுதாங்க மிஞ்சுது. அதான் வந்த கடனை அடைச்சிட்டு ஊருக்கு போகலாம்னு
முடிவு பண்ணிட்டேன். அடுத்த வருசம் ஏப்ரல் வந்துச்சின்னா ஒரு வருசம் முடியிது, அப்படியே ஊருக்கு போக வேண்டியதுதான். நான் தூக்கற ஏ.சி என்னை விட ஒரு
கிலோ சாஸ்தியா இருகுங்க. வேற வேலையும் தரமாட்டேங்கறானுங்க.

என்னை பேச விடாமல் அவரே பேசிக்கொண்டிருந்தார்.

உங்க பக்கத்து வீட்டு கருவாயன் மாதிரி நீங்களும் ஊருக்குள்ள பந்தா காமிக்காதிங்க
அப்புறம் உங்கல பாத்து இன்னும் நாலு பேரு கிளம்புவாங்க.

அட ஆமாங்க இங்க அந்த கருவாயன் எவ்ளோ கஷ்டபட்டு வேலை செய்றான்னு
பாத்தேன். அந்தளவுக்கு செய்ய நம்மகிட்ட தெம்பு இல்லிங்க இல்லன்னா நானும்
செய்வேன்.

என்னது பந்தாவா?

இல்லைங்க வேலை செஞ்சு சம்பாதிக்கரத சொன்னேன். இன்னும் பத்து நிமிசத்துல
முசாப்பா வந்துடும் இறங்குங்க. அண்ணே உங்க டெலிபோன் நம்பர் குடுங்க நான்
பேசறேன்.

மொபைல்தாங்க இருக்கு என்கிட்ட.

அட அதத்தாங்க சொன்னேன் நானு.

சொன்னேன்.

ரூமுக்கு வழி தெரியுங்களா?

தெரியாது ஆனா போயிடுவேன். டாக்சிக்காரன்கிட்ட சொன்னா விட்டுடுவான்ல. அது
போதும்.

சரிண்ணே பத்கிரமா போனதும் போன் பண்ணுங்க. அப்படி இல்லன்னா நான் அபுதாபி போனதும் போன் பண்றேன்.

சரிங்கண்ணே .

வர்றேங்க பைசல். வர்ற வெள்ளிக்கிழமை முடிஞ்சா வரேன் வந்து போன் பண்றேன்.

சரிங்கண்ணே.

உங்க பேர் சொல்லவேல்லயே!

கதிர்.

வாங்க கதிரண்ணே!

என்னிலும் பத்து வயது மூத்தவர் வார்த்தைக்கு வார்த்தை அண்ணே என்று அழைத்து கூச்சத்தை வரவழைத்தது.

அறையில் நுழையும்போது மணி பதினொண்ணு. ஒரு மிஸ்ஸுடு கால்.

யார்னு பாத்தா நம்ம பஸ்ல பார்த்தா ஆள்.

டாக்சி பிடித்து பாக்கிஸ்தானிகிட்ட தத்துபித்து இந்தி பேசி ரூமுக்குள்ள வர்றதுக்குள்ள
மறந்து போயிட்டேன். மெல்லியதாக ஒரு குற்ற உணர்ச்சி தாக்கியது.

கதிரண்ணே ரூம் போய்ட்டிங்களா?

நல்லபடியா வந்து சேந்துட்டேங்க, நீங்க எப்படி?

நல்லபடியா நானும் ரூம் வந்துட்டேங்க. நேரம் ஆச்சி நான் மறுபடியும் நாளைக்கு
மிஸ்ஸிடு கால் குடுக்கறேங்க. வச்சிர்றேன்.

சரிங்க பைசல். நாளைக்கு பாக்கலாம்ங்க!(நாளைக்கு பாக்க வாய்ப்பு இல்லன்னாலும்
இப்படி சொல்லி சொல்லி பழக்கமாகிடுச்சி :)) )

ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த இந்த நபர் இந்த ஒரு வாரமா தினமும்
சாயந்திரத்துல போன் பண்ணி நலம் விசாரிக்கிறார். நினைச்சி பார்க்கவே ரொம்ப
ஆச்சரியமா இருக்கு.

நாளைக்கு வெள்ளிக்கிழமை அபுதாபி போகணும்.

*******************

சிலபல காரணங்களால கடந்த ஒரு மாதமா பதிவு போடமுடியாம போச்சி.
கோடானு கோடி வாசகர்கள ஏமாத்தறதா குற்ற உணர்ச்சி தாக்கினதுனால
பெரும் முயற்சி எடுத்து இந்த பதிவை போடறேன். நம்ம கோபி ஊருக்கு
போறான்றத ஒரு தட்டி வச்சி அறிவிக்க முடியாத அபாக்கியசாலியாகிட்டேன்.
மன்னிச்சிடு கோபி அன்னான் சாரி அண்ணன்.

அட பின்னூட்டம் கூட போடமுடிலங்க. நல்ல நல்ல பதிவுகள் விட்டுப்போயிருக்கும்.
சரி பரவால்ல நான் வரலண்ணா என்ன குடி முழுகி போயிடும். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப கடந்த வாரம் சந்திச்ச ஒரு நபர பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணி எழுதியிருக்கேன்.


வரேங்க _/\_

Friday, May 04, 2007

நான் துபாய்காரன் இல்லிங்கோ!

நண்பர் ஒருத்தர் இரண்டு மாத விடுப்பில் நாடு சென்று வந்தார். வந்த நாள் முதல்
முகம் சோகமாக இருக்கவே என்னங்க ஆச்சு இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்கிங்கன்னு
கேட்டேன்.

அட ரெண்டு மாசம் ஊர்ல இருந்தேன் கல்யாணம் பண்ணிட்டு வந்தா கம்பெனில
பேமிலி ஸ்டேட்டஸ் குடுப்பாங்க அப்படின்னு நினைச்சேன்.

"சரி அதுல என்ன பிரச்சினை"?

அட போப்பா அங்கதான் பெரிய பிரச்சினையே இருக்கு. நான் என்னவோ துபாய்
ரிட்டர்ன்னு சொன்னா பொண்ணு தர நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு
பாத்தேன் ஆனா ஒரு பய கூட தரமாட்டேங்குறான். இந்த வடிவேலு, சினிமாகாரனுங்க
எல்லாம் சேந்து இந்த ஊர ஒரு காமெடிதேசமா மாத்திட்டானுங்க. எங்க வேல
செய்றன்னு எவனாச்சும் கேட்டா துபாய்லன்னு சொன்ன உடனே மெகா ஜோக்க
கேட்டவன் மாதிரி சிரிக்கறானுங்க.

என்னங்க சொல்றிங்க?

அட ஆமாப்பா ஒரு வீட்டுக்கு பொண்ணு பாக்க போயிருந்தேன். ஜாதகம் எல்லாம்
ஓரளவுக்கு பொருந்தி வந்து பொண்ணும் பிடிச்சிருந்தது. மத்த விஷயங்கள பத்தி
பேச ஆரம்பிச்சோம் பேச்சு வாக்குல கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்துல பொண்ணு
இங்க வந்துறணும்னு சொன்னேன். அப்பதான் நான் துபாய்ல வேல பாக்குறேன்னு
அவங்களுக்கு தெரியும் போலருக்கு உடனே உங்களுக்கெல்லாம் பொண்ணு தர
முடியாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிட்டானுங்க. அமெரிக்கா, ஐரோப்பா
மாதிரி ஏதாச்சும் ஒன்னுல இருந்தா சொல்லுங்க யோசிக்கலாம்னு வேற சொன்னான்.

அடப்பாவமே!

இப்பவே அரை மண்டையாச்சு அடுத்த முறை போகும்போது கணிசமான முடி
இந்த மண்ணுக்கு காணிக்கையாகிடும் அப்புறம் எவனும் பொண்ணு தர மாட்டான்.
முத்துன கத்திரிக்கான்னு எவனாச்சும் சொல்லிடுவானோன்னு பயமாருக்குப்பா.

நான் வேணா ஒரு ஐடியா தரட்டுங்களா?

சொல்லு...

பேசாம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கோங்க.

அடபோப்பா நீ வேற வெந்த புண்ணுல முள்கரண்டிய விட்டு நோண்டுற. அந்த
கருமம் எல்லாம் வந்தா நான் ஏன் வீடு வீடா போய் பொண்ணு தேடறேன்.

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. பேசாம ஊருக்கு போய் நல்ல வேலையா பாத்து
செட்டில் ஆகிடுங்க.

நானும் அதை யோசிச்சேன். நான் பாக்குற வேலைக்கு மிஞ்சி மிஞ்சி போனா நாலு
L தான் தருவானுங்க அப்புறம் இங்க வாழ்ந்த சுகவாழ்க்கை அங்க கிடைக்காது.
உள்ளதும் போச்சுடா நொள்ளன்னு முட்டிக்கணும்.

"உன் வாழ்க்கை உன் கையில்"

இப்படி ஒரு ஆபத்து இருக்குன்னு தெரியாம நான் வேற ஊரெல்லாம் தமுக்கு
அடிச்சிட்டனே. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடல நான் துபாய்காரன்
இல்லிங்கோன்னு ஒரு பதிவு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்.

ஆகவே மக்களே...

இந்த மாசத்துலருந்து நான் துபாய்வாசி இல்ல, அபுதாபிவாசி :)

இந்த மாதம் தாயகம் செல்ல இருக்கும் ஷார்ஜாவாசி அஞ்சா நெஞ்சன் கோபி
அவர்களுக்கு மேற்சொன்ன விபத்து நடக்காமலிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Tuesday, May 01, 2007

ஒண்ணுமே புரிலங்க

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"

3."இதெல்லாம் என்ன பெருமையா?? கடமை... ஒவ்வொருத்தனோட கடமை..."

4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு"

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்"

6."மேல மூணு, கீழ மூணு... சும்மா பூ மாதிரி பிரியும்"

7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"


8."ராசப்பா ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் விமானம் போலே இருக்கிறாய்"

9."எங்கப்பா நல்லா வாழ்ந்த காலத்திலயே பேராவூரணி கோயில்ல
பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேரு வச்சிருக்காரு எம்பேரு
ஒண்ணும் ஒலக்கு இல்ல குயிலு"


10."வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது. உன்
கண்ணுல அந்த பயத்தை பாத்துட்டேன்"


பத்துநாளா வேலையே இல்லிங்க அதான் பிசியாகிட்டேன். நான் வராம இருந்ததுனால
தமிழ்மணத்துல நல்ல மாற்றங்கள் கொண்டாந்துட்டாங்க அதுக்காக அவங்களுக்கு முதல்
நன்றிகள்.

என்னடா அதெல்லாம் டயலாக்குன்னு கேக்காதிங்க அதெல்லாம் நான் சொல்லல
சினிமால பெரிய பெரிய ஆளுங்க சொன்னது அதெல்லாம் யார் சொன்னாங்கன்னு
சொல்லுங்கன்னு கட்டாயப்படுத்தல தெரிஞ்சா சொல்லீட்டு போங்க. ஏன் இப்படி
சொல்றேன்னா மக்களுக்கு நான் இங்க ஒருத்தன் இருக்கேன்றதே மறந்து போயிடுது
அப்பப்ப இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு என்னோட இருப்பை ஊர்ஜிதபடுத்திக்
கொள்கிறேன் அம்புட்டுதான்.

நம்ம கைப்பு(தல) சீக்கிரமா தலை தீபாவளி கொண்டாட வாழ்த்தும் அன்புத்தம்பி.