எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, February 10, 2016

வெல்லிங்டன் - சில குறிப்புகள்.

வெல்லிங்டன்


“கரிய அலைபுரளும் சுருள் கூந்தல் கொண்டவள்; பூரண
நிலவின் வதனம் கொண்டவள்; முடிவில்லா ஓரப்
பார்வைகள் கொண்டவள்; அலங்கரித்த மெல்லுடல்
கொண்ட கணிகை. அவளே இந்த இரட்டை பயநாடு.”

நீலகிரி மலைப்பகுதியைப் பற்றி கி.பி 12ஆம் நூற்றாண்டில்
கன்னட மொழியில் எழுதப்பட்ட குறிப்பு.



கவிஞராக அறியப்பட்டவர் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களுக்காக
பேசப்பட்டவர். பல கட்டுரைகள் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியவருமான சுகுமாரனின் முதல் நாவல் வெல்லிங்டன். இவருடைய தனிமையின் வழி எனக்கு மிகப்பிடித்தமான கட்டுரை நூல்களில் ஒன்று. அது ஒன்றுதான் இதை வாசிக்க எனை ஈர்த்தது என்று சொல்லலாம்.


இதை நாவல் என்று சொல்வதை விட நினைவோடை என்று சொல்லலாம்.
நாவலின் ஆரம்ப சில அத்தியாயங்கள் நீலகிரி மாவட்டத்தை உருவாக்கியரான ஜான் சல்லிவனின் பார்வையில் ஆரம்பிக்கிறது. வெள்ளையர்கள் ஆண்ட பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கதை துவங்குகிறது. கோவை மாவட்ட ஆட்சியரான ஜான் சல்லிவன் கவர்னர் சர் தாமஸ் மன்றோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

இந்த மலைப்பிரதேசத்தை பணம் விளையும் பிரதேசமாக மாறச்செய்யும் திட்டத்தை மாட்சிமை தாங்கிய கவர்னர் அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் ஜான் சல்லிவன் எம்.சி.எஸ் சமர்ப்பிக்கிறார். மலைச்சரிவுகளில் ஜீவிதம் நடத்தும் படகர்களும், தோடர்களும் மலபாரிலிருந்து வந்து குடியேறியிருக்கும் மலையாளத்தார்களும் மைசூரிலிருந்து வந்த கன்னடிகர்களும் சமவெளியிலிருந்து
புகையிலை கடத்தல் நிமித்தம் மலையேறி ஸ்திர ஜீவிதமாயிருக்கும் கவுண்டர்களும் பறையர்களும் செய்யும் பாரம்பரிய விவசாயத்தை ஐரோப்பிய முறைக்கு மாற்றலாம். ஐரோப்பிய பூகண்டத்தில் பயிராகும் தாவரங்கள் சகலமும் இந்த மலைத்தொடரில் முளைக்கும். கவர்னர் அவர்களே இங்குள்ள சீதோஷ்ணத்தை சுவிட்சர்லாந்து வெப்பமானியை கொண்டு அளந்தால் இரண்டுமே துள்ளியமானதாக இருக்கக் காண்பீர்கள். மலைச்சரிவுகளில் தேயிலை விளைவதற்கான சாத்தியங்களைக் காண முடிகிறது. இவையெல்லாம் திட்டங்கள். மலையில் பாதைகளை உண்டுபண்ணும் முஸ்தீபுக்காக ஜில்லா நிர்வாகத்தின் சேவையிலுள்ள இருவரை நியமிக்கிறேன். இருவரும் இந்த பணிநிமித்தம் மலைப்பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கவர்னர் அவர்களைக் கோருகிறேன். திட்டமிட்டபடி இவர்களின் சரிவே  பூர்த்தியாகுமானால் நமது கஜானாவில் அதிருஷ்ட தேவதை வாசம் செய்யத்தயங்கமாட்டாள்.

இவ்வாறு கடிதம் நீள்கிறது. மலைப்பாதை அமைக்க சர்வே எடுக்க என நிதி
கோருகிறார். அனுமதிக்கப்படுகிறது. சப்கலெக்டர் ஜே.சி விஷ், கிண்டர்ஸ்லே
ஆகியவர்களின் மேற்பார்வையில் மலைப்பாதை அமைக்கிறார்கள். மிரட்சியுடன் படகர்களும் தோடர்களும் வெள்ளையர்களின் வருகையை பார்க்கிறார்கள். மெல்ல மெல்ல அவர்கள் புழங்கிய இடங்கள் பறிக்கப்பட்டு இடம்பெயர வைக்கப்படுகிறார்கள்.



இன்று நாம் காணும் ஊட்டியும், நீலகிரியும் ஒரு வெள்ளைக்கார கலெக்டரின்
கனவிலிருந்து உதயமானதுதான்.

நாவலை சுவாரசியமாக நகர்த்திச் செல்வதாக  கருதுவது நாவலின்
இடையிடையே வரும் பழங்குடி இனத்தின் பூர்வ கதைகளைத்தான்.
சமவெளி மனிதர்கள் நுழைந்திராத காலத்தில் மலையின் பூர்வ
குடிகளிடையே நிலவி வந்த நம்பிகைகள், மற்றும் செவி வழிக்
கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக புனையப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு கதை.

பழங்குடி இனப்பெண்ணொருத்தி. தேவதை போன்றவள், வனமோகினி
போல காடெங்கும் சுற்றித்திரிபவள், குறும்புக்காரி காற்றைப்போல
சுழன்று வருபவளிடம் ஒருநாள் அவளின் தகப்பன் சொல்கிறன்.
அக்காவுக்கு திருமணமாகி இத்தன வருஷம் குழந்தை கைகூடல.
அதனால நீ வயசுக்கு வந்ததும் மாமனுக்கு இரண்டாம்தாரமா
நீ போகணும், வாரிசு உண்டாக்கனும் என்று சொல்லப்படுகிறது.
அந்த செய்தியை கேட்ட நொடியில் இருந்து தனது குறும்புகள்
அத்தனையும் தொலைக்கிறாள். வயசுக்கே வரக்கூடாது என்று
கூட வேண்டிக்கொள்கிறாள். தன் வயதொத்த பெண்களுடன் காட்டிற்கு
சுள்ளி பொறுக்க செல்லும் ஒருநாளில் அவளின் பெண்மை மலர்ந்து விடுகிறது. புரிந்துகொள்ளும் அவள் கூட்டத்திலிருந்து நழுவி அடர்ந்த காட்டுக்குள் செல்கிறாள். விறகுகளை பாரமாக அடுக்கி அதில் சிதை மூட்டுகிறாள். வனதேவதையை நோக்கி அவள் வேண்டுதல் நீள்கிறது. பரிசுத்தமான என்னை எடுத்துக்கொண்டு என் அக்காவின் வயிற்றில் வாரிசை
உண்டாக்கு என்று வேண்டியபடி சிதையில் இறங்குகிறாள்.
ஊர் திரும்பிய தோழிகள் இவளைக்காணாது திகைக்கின்றனர்.
வெகுதொலைவில் காட்டின் பகுதியொன்றிலிருந்து வானை நோக்கி
கரும்புகை கிளம்புவதை காண்கிறார்கள். அவளின் அக்கா வயிற்றில்
கரு உண்டாகிறது. இது ஒரு செவி வழிக்கதை இதுபோல
பல கிளைக்கதைகள் நாவலின் முதல் சில அத்தியாங்களில் அங்கக்கே
வாசிக்க கிடைக்கிறது.

இன்னொரு செவி வழிக்கதை ஒன்று. நான்கைந்து சகோதரர்களுக்கு கடைசியாக ஒரு தங்கை. பேரழகிலும் பேரழகு. அத்தனை அண்ணன்களும் அவளைத்தாங்குகிறார்கள். மலையின் ஓரிடத்தில் பயிர் செய்து மாடு கன்றுகளோடு வாழ்கிறார்கள். காட்டுக்கு வேட்டையாட வரும் ராஜா அவள் அழகில் மயங்கிவிடுகிறார். தன் அந்தப்புரத்தில் அவளையும் சேர்த்து விட நினைத்து தன் ஆட்களை அனுப்பி அவளை வரச்சொல்கிறார். வீரர்களும் அவளின் அண்ணன்களிடம் இதைச் சொல்கின்றனர். நாளை மாலை குளித்து முடித்து பட்டாடை அணிவித்து தயாராக இருக்கும்படி சொல்லிச்செல்கின்றனர். ராஜாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. துன்பத்திற்குள்ளாகும் அண்ணன்கள் அனைவரும் இரவோடு இரவாக கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு கண்காணாத மலையின் இன்னொரு பக்கத்திற்கு செல்கின்றனர். பல மைல் தூரம் கடந்து வந்த பின்புதான் தெரிகிறது தொட்டிலில் தூங்கிய குழந்தையை எடுக்க மறந்துவிட்டோன் என்று. ஒருவாரு சமாதானம் சொல்லி கிளம்பி புது இடம் சென்று அங்கு ஒரு குடியிருப்பை உருவாக்குகிறார்கள். இப்படித்தான் இனக்குழுக்களுக்கு பயந்து ஒளிந்து சென்று வெவ்வேறு இடங்களில் மக்கள் குடியிருப்பை உண்டாக்கியிருக்கின்றனர் என்பதை நாவலாசிரியர் சொல்கிறார்.


முதல் நான்கைந்து அத்தியாயங்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வெல்லிங்டன் ஊட்டி உருவான விதங்களை விவரித்து செல்லும் நாவல் பின்பு ஊசி என்கிற பாபுவின் பார்வையில் நீண்டு சென்று முடிகிறது. மக்கள் குடியேற்றத்துக்கு பின்னான வெல்லிங்டன் நகரையும் அதில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் பாபுவின் வழியாக சொல்லப்படுகிறது.

வெல்லிங்டன் ஏகாம்பரம் பிள்ளைத்தெரு இங்குதான் கதை நிகழ்கிறது.
அங்குதான் பாபு வாழ்கிறான். போலவே நாவலாசிரியர் சுகுமாரனும்
இதே இடத்தில்தான் தனது இளம்பிராயத்தை கழித்திருக்கிறார். நாவலை
தனது அனுபவத்தினூடே வரலாற்றுத்தகவல்களை வைத்து புனைவு
எழுதப்பட்டிருக்கிறது.

வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னை ஊசி என்கிற பாபுவாக உணர அனேக இடங்கள் உள்ளன. பாசாங்கில்லாத அந்தப்பருவத்தின் நினைவுகள் பல அனைவருக்கும் உண்டு. அந்த தெருவுக்கே செல்லப்பிள்ளையாக
பாபு வளர்கிறான். விமலாம்மாவுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளை அவன்.
தன்னை அம்மா என்று அழைக்காமல் அத்தை என்று அழைக்கிறானே என்று
உள்ளூர அவளுக்கு வருத்தம். 

தன்னிடம் ஒட்டுதல் இல்லை என்பதால் அவனை அக்தர் சாயபு தர்காவுக்கு அழைத்துச்செல்கிறாள். கண்ணீரோடு பாயிடம் முறையிடுகிறாள்.
“என்னோட தம்பி பையன் பாய். பொறந்து ஒரு வருசத்துல தூக்கியாந்துட்டேன். நாங்க ரெண்டு பேருதான தொணையாருக்கட்டும்னு இங்கயே படிக்க வைக்கிறோம். இவங்க மாமாவுக்கு இவன்னா உசுரு,  ஒரு கொறையும் வைக்கிறதுல்ல, எல்லாமே பாத்து பாத்துதான் பண்றேன். கக்கூசுக்கு போனா குண்டி களுவி உடறதுலேருந்து காய்ச்சலானா பக்கத்துலேர்ந்து பாத்துக்கறது வரைக்கும் பாத்து பண்றேன். ஆனா எங்ககிட்ட கொஞ்சங்கூட ஒட்டுதல் இல்ல பாய். ரெண்டு நாளக்கி லீவ் விட்டா கூட அம்மாவ பாக்கனும்னு ஓடறதுலயே இருக்கான். எங்க கூடவே நீங்கதான் எதாவது வழி பண்ணனும் பாய் என்று அழுதபடியே சொல்கிறாள். அவனுக்கு இதுகுறித்து உள்ளூர வருத்தம் இருந்தாலும் விமலாம்மாவை அம்மா என்று அழைப்பதில் ஆரம்பத்தில் இருந்தே புரிந்துகொள்ள இயலாத சிக்கல் இருந்தது. பாய் சாம்பிராணியை அள்ளிப்போட்டபடி எல்லாம் சரியாயிடும் அக்தர் சாயபு பெயரைச்சொல்லி தாயத்து கட்டி அனுப்புகிறார்.

நானும் கூட அப்படியே அண்ணனை இதுவரை பெயரோடு அண்ணா என்று சொல்லியே அழைத்திருக்கிறேன். எத்தனையோ பேர் வற்புறுத்தியும் அக்காவை பெயர் சொல்லியே அழைத்திருக்கிறேன். அண்ணா, அக்கா என்றோ அழைத்து பழகவேயில்லை. எத்தனை முறை அடித்து உதைத்து பார்த்து விட்டு விட்டார்கள். இந்தபகுதியை வாசித்ததும் பழைய நினைவுகள் மீண்டு கண் முன்னே விரிந்தது.

சகுந்தலாவை சக்குக்கா என்றுதான் அழைப்பான் பாபு. பக்கத்து வீடு மிகப்பிடித்தமான அக்கா அவள். எங்கு சென்றாலும் தன்னை துணைக்கு அழைத்துச் செல்பவள். தனியாக சென்றால் கோபித்துக் கொள்வான். சிறுவயதிலிரிந்தே அப்படித்தான். சற்று வளர்ந்தும் கூட தன்னை இன்னும் சிறுவனாகவே அவள் பாவிப்பாள். ஒரு கட்டத்தில் வளர்ந்துவிட்ட தன் முன்னே ஆடை மாற்றுகிறாள். ஆடையே இல்லாமல் ஒரு பெண்ணை பார்க்கிறான். “சக்குக்கா நீ இப்போ பாக்குறதுக்கு கிரவுண்டு மாரியம்மன் கோயில் சிலையாட்டம் இருக்க” என்கிறான். பொய்க்கோபத்துடன்
அவனை அவள் இறுக்கிக் கட்டிக்கொள்கிறாள்.

நாவல் வாசித்ததை ஒரு குறிப்பாக எழுதிவிட வேண்டும் என்று எழுத
அமர்ந்தால் ஒன்றுமே எழுத மறுக்கிறது. இத்தனை பக்கங்கள்
வாசித்தபின் நான்கு வரிகூட எப்படி எழுதவரவில்லை என்று என்னை
நானே கடிந்துகொள்கிறேன்.

சித்தா என்கிற லட்சுமண தாத்தா, ராமசாமி தாத்தா, பெரிய டீச்சர், சரஸ்வதி டீச்சர், கவுரியேச்சி, ராஜு, நஜீர், நந்தகோபால், பெத்துசாமி நாயுடு, மம்மது, ஜானம்மா, தேவகி அம்மாயி, மீரான் பாய், நஞ்சே கவுடர் என்கிற சிரில், ரெஜினா, எபிநேசர், சுசி என ஏராளமான உயிரோட்டமான பாத்திரங்கள் உள்ளது. பனியினூடாக இம்மனிதர்கள் உலவுவது போலவும் அவர்களுடன் நாமும் பயணிப்பது போலவும்தான் நாவல் நகர்கிறது. வாசிக்கும் நேரத்தில் நீங்களே வெல்லிங்டனில் வசிப்பது போலவே உணர்வீர்கள். அம்மனிதர்களுடன் வாழ்ந்துவிடலாம் என்று தோன்றும் அவ்வளவுதான். அமைதியான நேரத்தில் இப்புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் தவற விடாதீர்கள்.