எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 26, 2008

மொக்கை குறிப்புகள்

தொடர்ச்சியாக வீட்டிலிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சில இடங்கள், பல
முகங்களில் பழையதை தேடி தினமும் தோற்றுப்போகிறேன். எல்லாமே மாறி
விட்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்கள் அடர்மழையும் தேநீருமாக ரம்மியமாக
இருந்தது, கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிர். மழையானாலும் குளிரானாலும்
நம் பழக்க வழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்வதே இல்லை. இதுபோன்ற எதிர்
குணங்களால் உடல்நிலையில் பருத்த மாற்றம்.

சிலம்பாட்டம், சேவல், தெனாவட்டு, காதலில் விழுந்தேன் என்று அனைத்துப் புதிய
திரைப்படங்களுக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயமாக மாலைகளில் இழுத்துச்சென்றார்கள்
நான்கு அற்புதமான மாலைகள் வீணாகிய வருத்தமில்லை என்றாலும் இதுபோன்ற
படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்
என்று தோன்றியது. சொன்னதையே திரும்பச்சொல்லும் கற்பனை வறட்சி மிக்க
இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சி சீரியல்களை
பார்க்கலாம். குறிப்பாக சிலம்பாட்டம் படம் பார்க்கையில் நெரிசல் மிக்க பேருந்து
நிலையத்தின் கழுவாத கழிவறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

பொம்மலாட்டம் பார்க்க நேரத்திற்கு கிளம்பியும் அரங்கம் சென்றடைய தாமதம்.
டிக்கெட் கிழிப்பவரிடம் "உக்காரதுக்கு இடம் இருக்குங்களா அண்ணே" என்றேன்.
அவர் "படுத்துகிட்டே பாக்கலாம் சார்" என்றார். மொத்தக்குத்துகளையும் வைத்து
அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பாதி சொக்கியது. இரண்டாம்
பாதியில் இமயத்தின் புலிப்பாய்ச்சல். படம் பார்க்கையில் இமயமே அவரைப்பற்றிப்
படமெடுக்க எதற்கு நானாபடேகர் என்று மனம் நினைத்தது ஆனால் முடிக்கையில்
அவரைப்பற்றி கொஞ்சமாகவும் மற்றும் சுதந்திரமான, நேர்த்தியான படைப்பாளியின்
நிலையை தெளிவாக விளக்குகிறது. இந்தப்படத்திலும் அர்ஜுன் வெளிநாட்டுக்கு
சென்று ஹீரோயினின் குண்டியை தடவுகிறார். விலுக் விலுக்கென்று ஆடுகிறார்.

இதுபோன்ற வெளிநாட்டு பாடல்காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் மனது மிகுந்த
அசௌகரியமாக உணர்கிறது. எதற்கு இந்த கோமாளி நடனங்கள்? இவர்கள்
இப்படி ஆடுவதைத்தான் மக்கள் ரசிக்கிறார்களா? அர்ஜுன், சிம்பு போன்றவர்கள்
நாயகியிடம் செய்யும் சில்மிஷங்களுக்குப் பதிலாக புணர்ச்சியே செய்துவிடலாம்.

நண்பர்களிடமிருந்தும், சொந்தமாகவும் இருபது நகைச்சுவை டிவிடிக்கள், இருபது
சினிமா நடிகர்கள், நடிகைகளின் சினிமா ஆடல், பாடல்கள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளது. இருபத்தி நான்குமணி நேர நகைச்சுவைச்சேனலும், பாடல் ஒலிபரப்பும் சேனலும்
ஆரம்பிக்கும் எண்ணம்கூட உள்ளது. கெக்கே பிக்கே என்று பேசி பாடல் ஒலிபரப்பலாம்.
அருக்கானி பிகர்கள் நிறையவும் உள்ள ஊர் என்பதால் நிறைய விளம்பரங்கள் வரலாம்.
நிறையக் கேணையர்கள் போன் செய்து விருப்பப் பாடலைக் கேட்பார்கள். அதைத் தன்
நண்பர்களுக்கு "டெடிகேட்" செய்து பரவசப்பட்டுக்கொள்வார்கள். இதெல்லாம் கூட
கொடுமையில்லை அடங்காத நிஷா ஆடிய ஆட்டத்தில் தமிழகமே துண்டாகிக்கிடந்த
காலையில் சன் மியூசிக்கில் ஒரு ஜந்து "happy Rainy day" என்று மெசெஜ்
அனுப்புகிறது அதையும் சேனல் வெளியிட்டு வாழ்த்துகிறது. உண்மையிலேயே
யாராவது அனுப்புகிறார்களா அல்லது சேனலே இப்படியா.... ரொம்ப ஆராய்ஞ்சிட்டெ
போனால் பெரிய அரசியல் தலைவர்களின் மகன்களின் குசுநாத்தம் அடிக்கிறது.
அதற்க்குப் பாடலையே பார்த்துவிடலாம்.

"திருவண்ணாமலை படம் பார்த்தவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேரரசு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தார்." அதில் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி.

அ.ர: "சார் உங்க அடுத்த படம் எப்ப சார்?

பே: என்னோட அடுத்த படம் திருத்தணி. திருவண்ணாமலை ஆக்சன் ஜோதின்னா, திருத்தனி
ஆக்சன் அவதாரம்.

அ.ர: "ஏன் சார் தொடர்ந்து ஆக்சன் படமே எடுக்கறிங்க?

"மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்
தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்.

பேரரசு ஆக்சன், ஜேகே ரித்திஸ் ஆக்சன், விஜயகாந்த் ஆக்சன், ரஜினி ஆக்சன், விஜய்
அஜித், சொம்பு, என்று ஒரே ஆக்சன் அதிரடிகளால் கோடம்பாக்கம் நிரம்பி இருக்கிறது.

இப்படியெல்லாம் பார்க்கப்போய் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி
இருப்பதால் டிஸ்கவரியையும், நேஷனல் சேனலையும் பார்க்கிறேன். "நாலு புலி சேர்ந்து
ஒரு காட்டெருமைய உயிரோட கடிச்சி திங்குறத பாக்குறியே அப்டினா உனக்கு எவ்ளோ
கல்நெஞ்சமா இருக்கும்டா" என்று பெற்ற தாய் திட்டுகிறார்.

இணைய இணைப்பு கிடைப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டபடியால் வலை உலகில்
என் ஐம்பது நாள் இல்லாமல் போய்விட்டது(:))). இத்தனை நாட்களுக்குப் பிறகு
ரீடரைத்திருந்தால் ஆயிரத்தி சொச்சம். ஜெயமோகன் இருப்பதிலேயே டாப். 72 பதிவுகள்.
சும்மாவா சூறாவலி என்று சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவையையும் கெட்டி
அட்டையில் பதிப்பித்துவிடுவார் அப்போது படித்துவிடலாம் என்று அனைத்தையும்
படித்துவிட்டதாக காண்பிக்கும்படி ரீடரார் இடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் நண்பர்கள்
பரிந்துரைத்த மத்தகம் குறுநாவலை மட்டும் மென்நூலாக மாற்றிக்கொண்டேன்.
அதை வாசிக்க ஒரு நல்ல பொழுது வாய்க்கும் அதுவரை பொறுத்திருக்கலாம்.
இரண்டாவதாக R.P.ராஜநாயகத்தின் சுருக்கமான 60 பதிவுகள் நிச்சயமாக அனைத்தையும்
படித்தேன்.

அமீரகத்தில் வேலையின்போது நிறைய உபரி நேரம் சும்மா இருக்காமல் எதையோ எழுதி
கிழித்துக்கொண்டிருந்தேன். ஊரில் சும்மா இருக்கும்போது நேரமே கிடைப்பதில்லை.
நான்குபுறமும் நண்பர்களின் அழைப்பு என சென்றுவிடுகிறது. ஆனால் இன்னும் ஒரு
பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)

கள்ளக்குறிச்சி நகர வீதிகளில் பதிமூன்று நாய்கள் ஒன்றாகவே சுற்றுகின்றன. அவை
பிரிவதே இல்லை. பரபரப்பான வீதியில் மனிதக்கூட்டங்களுக்கு நடுவே நுழைந்து
செல்கின்றன. திடீரென்று அவை அனைத்தும் திசைக்கொன்றாக பார்க்கின்றன.
நிற்கும் திசையில் பார்வையை கூர்மையாக கவனிக்கின்றன. எதோ ஒரு தாக்குதலுக்கு
வியூகம் அமைப்பது போல. ஆனால் அடுத்த நொடியும் கிளம்பி விடுகின்றன.
யாருக்கும் தொந்தரவு தருவதில்லை. "அதிகம் விற்பனையாகும்" நாளிதழ்களிலும்
செய்தி வெளியிட்டிருக்கின்றன. நானும் இரண்டு முறை அந்தக்காட்சியை பார்த்தேன்.
ஒன்றையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இரண்டு முறையும் எண்ணிக்கையை
சரிபார்த்தேன். சரியாக பதிமூன்று நாய்கள். அமைதி ஊர்வலம் போல செல்கிறது
வருகிறது, திடிரென நிற்கிறது பிறகு செல்கிறது.

நாய்களுக்கு உள்ள பொதுவான குணம் "எங்க ஏரியா உள்ள வராதே" என்பதுதான்.
அதையும் மீறி இவை பதிமூன்றும் நட்புகொள்ள எது காரணமாக இருக்கும்?
இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் சுவையான சம்பவம் எதாவது ஒன்று இருக்கலாம்.

Thursday, December 18, 2008

இரவின் இசை


இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின் நள்ளிரவு சப்தங்களை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத
சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை
உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்
கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய
ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.
உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு
வண்டுகளின் ரீங்காரம் என
எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.
விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.

Saturday, November 01, 2008

நெடிதுயர்ந்த பனையின் நிழல்


நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்
கதிரவனின் நகர்விற்கேற்ப
நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ
தற்காலிகமென்றோ வரையிடமுடியாத
தனிமை. தனிமை சுகிக்கும் கணங்களாக
நான் குறிப்பிடுபவையாவன சிலது கேள்.
தொட்டாற்சிணுங்கி தொடு பின் தழை
விரியும் கணங்கள் காத்திரு.
அடர்மழை காண் அதன் கடைசித்துளி
ஓசை உற்று கேள்.
அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி
செய், உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.
சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்
ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்.
நிலைக்கண்ணாடி முன் உடல் வருடி
முழுநிர்வாணம் ரசி, காற்றுப்புக அனுமதி கொடு.
இவையாவும் நாளுக்கொன்றாய் உரு மாறும்
நிலாவாகவும்
அது தரும் தற்காலிக குளிர்மை போலவும்
சுகிக்கவில்லையெனில் எப்போதாவது ஒன்றின்
மற்றொன்று தொடர்ச்சியாய் நடக்கும்
விசேஷ கணத்திற்காய் காத்திரு.

மொக்கை குறிப்புகள்


தீபாவளி கொண்டாட்டத்திற்கு நண்பர் அழைத்திருந்தார். கடந்த மூணு வருடங்களாக
எந்த பண்டிகையையும் பார்க்கவே இல்லை. மாறுதலுக்காக சென்று வரலாம் என்று
சென்றேன். நல்ல சாப்பாடு போடுவார்கள் என்ற என் எண்ணம் பொய்யாகவில்லை
ஆனால் எல்லாரும் கூடி ஆளுக்கொரு பாட்டு பாடவேண்டும் என்று பீதி கிளப்பினர்.
பாடத்தெரியாதவனை பாடச்சொல்வது வன்முறையாகும் என்று சொன்னால் அடிக்க
வருவார்கள். கரோக்கியை ஒலிக்கவிட்டு திரையில் பாடல் வரிகள் தெரிய
அதைத்தொடர்ந்து பாடும் ஒரு விளையாட்டு. எல்லாரும் கட்டாயம் ஒருபாடலாவது பாடவேண்டும் என்றார்கள். முன்ன பின்ன மைக் பிடித்ததில்லை அதுவுமல்லாமல்
ஒரு முழுப்பாடலையும் தவறு இல்லாமல் பாடினால் அதற்கு மதிப்பெண் திரையில் தெரிகிறது. அதுதான் பெரிய சிக்கலே. என் முறை வந்தது. நான் பாட ரெடி ஆனா
எனக்கு முழுசா தெரிஞ்சது ஒரு பாட்டுதான் அந்த பாட்டு இருந்தா பாடுவேன் இல்லனா முடியாது என்றேன். எல்லாரும் ஆர்வமாக என்ன பாட்டு சொல்லு என்றார்கள்.


"தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்" இந்த பாட்டு இருக்குதா?
இருந்ததுன்னா அய்யா ரெடி... கடைசியில் அந்த பாட்டு இல்லையென்பதால் க்ரேட்
எஸ்கேப். எல்லாரும் சென்றபிறகு மறுநாள் தனியாக முயற்சி செய்து பார்த்தேன்.
இசையோடு கூடி பாடுவது எவ்வளவு சிரமம் என்று தெரிந்தது. என் குரல் எனக்கே
கன்றாவியாக இருந்தது. நல்லவேளை பாடாமல் எல்லாரையும் காப்பாற்றி விட்டேன்.

பொதுவாக பத்துபேர் சுற்றிலும் இருக்கும்போது உரக்கப் பேசுவதே எனக்கு கைவராத
விஷயம். பாடவேண்டும் என்றால் கேவலமாக வழிவேன். கல்லூரி படிக்கையில்
இதேபோல சம்பவங்கள் நடந்ததுண்டு பெரும்பாலும் அந்நேரங்களில் எப்படியாவது
தப்பித்துவிடுவேன். அக்கணத்தை சந்தோஷமாக்கவே பாடுகிறோம் கச்சேரிக்காக
அல்ல எனினும் இந்த கூச்சசுபாவத்தை மாற்றவே முயற்சிக்கவில்லை. ஒருசிலர்
மட்டுமே எந்தவித கூச்சமும் இன்றி "நாலு பேர்" கவலை இல்லாமல் பாடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நண்பன் எழிலரசன். கூட்டத்திலே கோயில் புறா, நான் ஏரிக்கரை
மேலிருந்து போன்ற பாடல்களை எப்பொழுதும் விருப்பமுடனும் உணர்ச்சியுடனும்
பாடுவான். நல்ல குரல்வளமும் கூட. எப்பொழுது பாடச்சொன்னாலும் உடனே
எழுந்து பாடுவான். என்னை வலுக்கட்டாயமாக பாடச்சொன்னபோது 7ஜி ரெயின்போ
காலனி "ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா" என்பது போல ஒரு பாடலைப் பாடினேன். எல்லாரும் சிரிப்பை நிறுத்த சில நிமிடங்கள் பிடித்தது. அன்று முதல் "நாலு பேர்"
முன் பாடுவது போல வாயைக்கூட அசைக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.

தீபாவளி விருந்தின்போது ஒரு பெண் சளைக்காமல் இந்தி, தமிழ், கன்னடம் என்று
மாறி மாறி பாடினார். குரல் மோசமில்லை என்றாலும் முயற்சிக்காக பாராட்டாமல்
இருக்கவே முடியவில்லை. கல்லூரியில் கூட ரம்யா என்ற நண்பி இதேபோல
நானாவிதக் கூச்சங்களை தவிர்த்துவிட்டு அடிக்குரலிலிருந்து உணர்ச்சிகரமாக
பாடுவார். நடுவில் இசைக்கோர்வைகளைக் கூட எழுப்புவார். அந்த இடத்தில்
இருப்பதே அசூயையாக நான் உணர்வேன். இப்பொழுது நினைத்தால் தவறு என
படுகிறது. பிறகு தொலைக்காட்சிகளில் நேயர் விருப்பப்பாடல்களை வழங்கினார்.
உற்சாகமான அதே பங்கேற்பு. பின்னாளில் தமிழின் பெரிய இயக்குனர் ஒருவரை
மணந்து சென்றுவிட்டார். சென்றவாரம் அவரின் புகைப்படம் குங்குமம் இதழில்
வந்திருந்தது. கணவரை அணைத்து உற்சாகமான அதே சிரிப்புடன்.

முதல் முதலாக வீட்டை விட்டு வெகுதொலைவில் தங்கி படிக்கவேண்டிய நேரம்
தனித்த அறை, விடுதி, வார்டன், அதிகாலைக்குளி,யல் வரிசையாக உட்கார்ந்து
நேரத்திற்கு சாப்பிடவேண்டும் போன்ற விதிமுறைகள் தற்கொலை எண்ணத்தை
தூண்டியது. பக்கத்து அறையில் காமராஜ் என்ற MCA படிக்கும் அண்ணன் இருந்தார்.
அவர் கல்லூரியிலே மிகவும் பிரபலம். எந்த நேரமும் பாடிக்கொண்டே இருப்பார்
அற்புதமான குரல்வளம் அவருக்கு. தொடர்ந்து மூன்று வருடங்களாக கல்லூரி
ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றவர். தினம் இரவு உணவு முடிந்ததும்
மொட்டைமாடியில் எல்லாரும் கூடுவோம் காமராஜ் பாட எல்லாரும் அமைதியாக
கேட்டுக்கொண்டிருப்போம். தேர்ந்தெடுத்த பாடல்களை அழகான குரல்கொண்டு
பாடும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம். "செவ்வானம் வெட்கம் கொண்டது
யாராலே" அவரின் விருப்பப்பாடல். இந்தப்பாடலை எப்பொழுது கேட்டாலும்
அவரின் நினைவுதான் வருகிறது.
---

A Wednesday படத்தைப்பற்றி நிறைய பதிவுகள். பரிந்துரைத்த படம் வேறு பக்கத்து
திரையரங்கில் ஓடுகிறது பார்க்கலாம் என்று சென்றால் படத்தை தூக்கி விட்டார்கள்.
ஏகன் ஓடிக்கொண்டிருக்கிறது பார்க்கலாம்தான். பார்த்தபின் வரும் எரிச்சலை என்ன
செய்வது. மேலும் படம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்கவேண்டும்.
இதெல்லாம் வேலைக்காவாது வாடா போலாம் என்று கூப்பிட்டால் நண்பன் நயன்
போட்டோவை சைடிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

சரி மச்சி இந்த வெங்காயப்படத்துக்கெல்லாம் எவனும் வரமாட்டான் அதனால டிக்கெட்
அப்புறம் வாங்கிக்கலாம் இப்ப ஊர் சுத்தலாம் வா என்று கூட்டிப்போனேன்.

சரியாக 10.20 க்கு செல்லும்போது இரண்டே இரண்டு டிக்கெட் இருந்தது. அதுவும்
முன்வரிசையின் முதல் இரண்டு சீட். நண்பனைப் பார்த்தேன்."நீ எதத்தாண்டா
உருப்படியா செஞ்சிருக்க" சரி எடுத்து தொலை. இவ்வளவு நேரம் தேவுடு
காத்ததுக்கு இதுவும் இல்லன்னா அசிங்கமா போவும் என்றான். டிக்கெட் வாங்கி
உள்ளே சென்றால் ஒரே "தலை" முழக்கம்.

நயன் தாராவின் நடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.அவரின்
அடுத்தப்படத்தில் மேல்கச்சையை கழட்டி விடுவார் என்றே நம்புகிறேன். ஏனென்றால்
திரைக்கு சமீபத்தில் அமர்ந்து பார்க்கும்போது எல்லாமே "பிரம்மாண்டாமாக" தெரிந்தது
மேலே முட்டிவிடுமோ என்ற அச்சமும் கூடவே.

புல் மப்பில் வந்திருந்த பின்னிருக்கை பிதாமகன் ஒருவர் வாந்தியே எடுத்துவிட்டார்.

நாசருக்கு இன்னும் எத்தனை படத்தில் போலிஸ்கார மகனின் போலீஸ்கார அப்பாவாக
நடிக்கும் வாய்ப்பு ஏற்படுமோ தெரியவில்லை.

எப்படியோ படம் முடிந்து வெளியே வரும்போது வெளியில் அடுத்தகாட்சி காண
பெரும் கூட்டம் காத்திருந்தது. "உங்களயெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு"
என்று வடிவேலு பாணியில் எவரோ சொல்ல மொத்தக்கூட்டமும் சிரித்தது.
---

கோடை முடிந்து குளிர் எட்டிப்பார்க்கும் காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள்
அதிகாலை உறக்கத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலுவலகத்திற்கு நேரத்திற்கே
சென்றதால் வரும் பின்விளைவுகள் அறியாது சென்றுவிட்டேன். வரவேற்பறையில்
சீக்கிரமே வந்துவிட்ட தோழிகள் அரட்டை அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
நாக்கால் மூக்கைத்தொடும் விளையாட்டு இன்றைக்கு. பாரதிராஜா படம் பார்த்துவிட்டு
முயற்சித்திருக்கிறேன். மேலுதட்டுக்கு மேல் எட்டவேயில்லை. திடீரென்று நான்
உள்ளே நுழைந்ததும் என்னையும் தொடச்சொன்னார்கள்.

அழகழகான தட்டையான வெள்ளைப் பிலிப்பினோ மூக்குகள். தொட ஆசையாக இருந்தது
கிட்டே போய் தொட முயற்சிக்கையில் "உன் மூக்க தொடச்சொன்னேண்டா வெண்ணெ"
என்பது போல தள்ளிவிட்டுவிட்டனர்.

எப்படி என்பது போல பார்த்தேன். "இப்டிதான் என்றபடி நான்கு பேரும் ஒரு சேர நாக்க
மூக்க தொட்டனர்". எனக்கு நாக்க முக்க பாட்டு ஞாபகம் வந்தது. கூடவே பெண்களுக்கு
வாய் மட்டுமல்ல நாவும் நீளம் என்ற உண்மையும் புரிந்தது. இது அனைத்து தேசத்து
பெண்களும் பொருந்தும் என்பதுவும் தாமதமாக புரிந்தது.

Friday, October 17, 2008

ஜனனி


வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள்.
பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த
விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள்.
இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல்
போர் தொடுப்பதாக எண்ணம். போர் என்பது
ஒரே ஒரு அடி மட்டுமே. பொருட்களின் மீது
கம்பு பட்டெழும் வினோதமான ஒலியை
ரசித்தவாறு முன்னேறுகிறாள். ஜடப்பொருட்கள்
யாவும் அவள் முன் மண்டியிட்டன. எதிர்ப்புகள்
இல்லாத இப்போரில் குதூகலம் அடைந்திருந்தாள்.
ராணியைப் போன்ற தோரணையுடன் என்னருகே
வருகிறாள். துயிலிலாழ்ந்து மேலெழும் முதுகில்
அடித்தபோது அவ்வினோதமான ஒலி இல்லை.
ஏமாற்றமடைந்தவள் பலம் கொண்ட மட்டும் கம்பை
வீசுகிறாள். துயிலகன்ற கோபத்தில் என் விழிகள்
அவளைப் பார்க்கிறது. சற்றுமுன்னிருந்த மகிழ்ச்சியின்
வேர்களனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
இரு கீழிமையின் விளிம்புகளிலும் நீர்த்தேக்கம்.
எந்நேரமும் வெடித்துக்கிளம்பலாம்
என்ற அழுகை முகம். ஆதூரமாய் அணைக்கிறேன்
மார்பில் அவளின் இளஞ்சூடான கண்ணீர்த்துளிகள்.

Sunday, October 12, 2008

சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டு

எனது சுயபுராணத்துக்கு அவசியமில்லாமல் நேரடியாக பதில்களுக்கு தாவி விடுகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான்காம் வகுப்பு படிக்கும்போது முதல் முதல்ல சினிமா தியேட்டருக்கு
போனேன். ஆனால் நான் ட்யூசன் முடித்து வரும்முன்னரே சித்தப்பாவுடன்
அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் கிளம்பி விட்டார்கள். அடித்து பிடித்து வந்தால் எல்லாம் போய்விட்டார்கள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அரங்கம் நோக்கி
ஓடினேன். டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டார்கள். எப்படியாவது எனக்காக
வருவார்கள் என்று தியேட்டரின் பெரிய கேட் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
யாரும் வருவதாகவே தெரியவில்லை. என்னை திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாக
நினைத்து ஏமாற்றத்தில் அங்கேயே அழுதுகொண்டிருந்தேன். அழுகையின் உச்சமாக
கோபம் தலைக்கேறியதால் அங்கேயே படம் முடியும் வரை அமர்ந்திருக்க முடிவு
செய்து அப்படியே அமர்ந்திருந்தேன். தியேட்டரின் முன் மைதானம் போன்ற
தரையில் அமர்ந்திருந்தபோது பலரும் ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார்கள் வைராக்கியமாய் பதில் பேசாமல் அமர்ந்தே இருந்தேன். ஒருவர் மிட்டாய் வாங்கித்தந்து
யார் வீடுப்பா நீ என்று கேட்டார் அப்போதும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே
வந்தனர் அனைவரும். என்னைப்பார்த்து அக்கா, அண்ணா, தம்பி எல்லாரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு அழுகை தாங்கமுடியாமல் சித்தப்பாவைக்
கட்டிக்கொண்டு முகம் பொத்திக்கொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மறக்காமல்
அப்பாவிடம் வத்தி வைக்க அடுப்பூதும் ஊதாங்கோலால் எனக்கு தர்ம அடி
விழுந்தது. இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் அப்பா கரைந்துபோனார். அடுத்தவாரமே என்னை மட்டும் தர்மதுரை என்ற ரஜினி படத்துக்கு
அழைத்துக்கொண்டு போனார். அவரின் கரம் பிடித்தபடி சென்றது நன்றாக
நினைவிருக்கிறது. இடைவெளியின்போது தின்பண்டமெல்லாம் வாங்கித்தந்து
அசத்தினார். நான் முதலில் திரை அரங்கில்

சினிமா என்று பார்த்தது அதைத்தான். அப்பாவுடன் கடைசியாக பார்த்ததும் அது
ஒன்றுதான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதை அவர் விரும்புவதில்லை.

இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.

உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கவுதமியை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அபுதாபி வந்ததிலிருந்து அரங்கம் சென்று சினிமா பார்க்க அதிகம் வாய்ப்பு
கிடைக்கவில்லை. ஒருமுறை மலையாளி நண்பனை அழைத்துக்கொண்டு குசேலன் சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்ததும் என் மூஞ்சியில் காறி துப்பாத
குறையாக இனிமேல் என்னை தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டேன்னா உன்ன
கொலபண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொன்னான். அவனுக்கு
எப்படியாவது நல்ல படத்தைக்காண்பித்து விடவேண்டும் என்று எண்ணியதால்
தாம் தூம் படத்துக்கு கூட்டிக்கொண்டு போனேன். இந்தப்படத்தையும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக எனது கணினியில் பார்த்த தமிழ்ப்படம் விஜயகாந்த் நடித்த அரசாங்கம்.
நண்பன் ஒருவன் பயங்கர சோகத்தில் இருந்தான். அவனுக்கு சந்தோஷம் வரவேண்டி இந்தபடத்தை எடுத்து வந்தானாம். “வேட்டையாடு விளையாடு ஸ்டைல்ல
எடுத்திருக்காங்க” என்று கமெண்ட் வேறு சொன்னதாலும் வட்டை அறையிலேயே விட்டுவிட்டுச்சென்றதாலும் அதை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

வைதேகி காத்திருந்தால் முதல் அரசாங்கம் வரை விஜயகாந்தின் முறைப்பெண்கள் எல்லாரும் “கட்னா மாமனத்தான் கட்டிக்குவேன்” என்ற ஒரே வசனத்தைதான்
பேசுகிறார்கள். பளிங்கு போன்ற வெண்மையான நம்பியாருக்கு விஜயகாந்த்
பேரனாம். படத்தின் பெரும்பகுதி கனடாவில் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. விஜயகாந்த் எவ்வளவுதான் இண்டலிஜெண்டலியாக படம் எடுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்பதை என்னவென்று சொல்வது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மூன்றாம் பிறை. எவ்ளோ வயசான ஆளுங்க என்று ஸ்ரீதேவி சொல்லும்போதும்,
இறுதியில் கமலின் ஏமாற்றமும் மிகவும் தாக்கியது என்று சொல்லலாம்.

தவிர தேவர்மகன், சேது, பிதாமகன், சுப்ரமணியபுரம் போன்றவையின்
தாக்கம் அதிகம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

படம் பார்த்து சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் அவர் இறந்துபோனதில்
என்ன அரசியல் இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறிந்ததாக தெரியவில்லை.

ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி
அப்பா சொல்வார். நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை சில காட்சிகள்
மட்டும் பார்த்திருக்கிறேன் என்றாலும் சாவித்திரியை மிகவும் பிடிக்கும்.
அதேப்போல சந்திரபாபுவின் நகைச்சுவை மற்றும் பாடல்களும் மிகவும் பிடிக்கும். இருவருமே போதையின் பிடியில் சிக்கி அற்பாயுளில் இறந்து போனார்கள்.
இருவருமே சினிமாவிலும் சொந்தவாழ்விலும் நிறைய இழந்ததினால் தன்னை அழித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் இருவரைப் பற்றியும் ராமகிருஷ்ணன் விரிவாக
எழுதி இருக்கிறார். மனதை கரைய வைக்கும் வாழ்க்கை இருவருடையதும்.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கே தெரியவில்லை என்றாலும்
இதுதான் சட்டென்று மனதில் தோன்றியது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சாருவின் அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகம் படித்தேன். அதற்கு
முன்பு சினிமா தொடர்பாக வாசித்த நூல்கள் சுசி கணேசனின் வாக்கப்பட்ட பூமி,
சேரனின் டூரிங் டாக்கிஸ், ப்ரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை வாசித்திருக்கிறேன். வலைப்பூக்களில் பத்துக்கு எட்டு பதிவுகள் சினிமாவைப்பற்றிதான் வருகின்றன.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்சினிமா தவிர வேற இசை இருக்குதா என்ற கேள்விக்கு விடையெல்லாம்
தெரியாது. ஆனால் வீணையின் இசை மிகவும் பிடிக்கும். அடுத்ததாக சாக்சபோன்
பிடிக்கும். வீணையின் இசையில் கூட தமிழ்ப்பட பாடலின் வீணையிசை மட்டுமே பிடிக்கிறது. இளையராஜா மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.

" 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அதிகம் பார்ப்பதுண்டு. மிகவும் நெகிழ்வில் ஆழ்த்திய படங்களாக
டாமி லீ ஜோன்ஸின் three Buriels மற்றும் Clint Easteood ன் The Bridges of Madison county படமும். shawshank redumption, the way home, Spring Summer Autumn Winter சமீபத்தில் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே!

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


நேரடி மட்டுமல்ல மறைமுகத்தொடர்பு கூட இல்லை. எங்கள் ஊர் தியேட்டரில்
போஸ்டர் ஒட்டுகிற பணி செய்யும் தினகரன் என்பவர்தான் என் சினிமா நண்பர்.
அவருக்கு ஏராளமான சினிமாக்களைப் பற்றி தெரியும்.

கல்லூரி படிக்கும்போது இயக்குனராக வேண்டும் என்ற அசட்டு ஆசையெல்லாம்
இருந்தது. தமிழ்சினிமா மேம்பட பார்வையாளனாக மட்டுமே என்னால் செயல்பட
முடியும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாக இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கழிவரையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குமுதமோ ஆனந்த விகடனோ இல்லாமல்
உள்ளே செல்லவே முடியாத பழக்கம் எனக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பத்து இதழ்கள் மட்டுமே அங்கே நிரந்தரமாக இருக்கிறது. அதையேதான் படித்து வருகிறேன். பழையது, புதியது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. எனக்கு வேலை ஆகவேண்டும். பொழுதுபோக்குக்கு புதிய சினிமா மட்டும்தான் இருக்கிறதா என்ன?
இதுவரை வந்த படங்களையெல்லாம் பார்த்து விடவும் இல்லை. எனவே இந்த ஒரு வருடத்தில் பார்க்காத மற்ற திரைப்படங்களை பார்த்துவிட்டால் போகிறது. பொழுதுபோக்குபவனாக எனக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும் சினிமாவையே
நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் நிலைதான் யோசிக்க வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு மொக்கை போட என்னை அழைத்த பரத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த உங்களுக்கு நன்றிகள்.

நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்

ஆசிப் மீரான்
கோபிநாத்
கப்பி
சென்ஷி
ஜியா

Thursday, October 09, 2008

கண் நிறைக்கும் கனவுறக்கம்



வடக்கு வாரிக்கொண்டு போகும்
தெற்கு தேய்த்துக்கொண்டு போகும்
கிழக்கு கிழித்து விட்டுப் போகும்
மேற்கு மிதித்து விட்டாவது போகும்
உறங்குவதற்கு எதாவது ஒரு திசையை
தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும்.
முதலில் வடக்கு கிழக்காகத்தான் படுத்திருந்தேன்
நசுங்கிய "ட" வடிவில் உறங்குவதற்கு ஏற்றதாக இல்லை.
கிழக்கு தெற்காக முயற்சித்தபோது அதுவும் நசுங்கிய
"ட" என்ற வடிவிலே அமைந்துபோனது ஆச்சர்யம்.
ஒன்றிலிருந்து நூறு வரை உதடு குவித்ததில்
எண்களின் குழப்பம்...
மறுபடி மறுபடி முயற்சித்ததில் தோல்வி.
எட்டாவது முயற்சியில் நூறு சாத்தியமானது.
ஸ்ரீராமஜெயம்
அர்ஜுனா
இருட்டில் கண் அகல விரித்து எதையோ தேடுதல்
விருப்பப்பாடலை உரக்கப் பாடுதல்
பாட்டியின் மிதமான முதுகு தட்டல்
போன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது
உன் நினைவு தந்தது
கண் நிறைக்கும் கனவுறக்கம்.

முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்


Hi Malini
i am krishnan
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்...
இவ்ளோ அழக பாத்துருக்க மாட்டாங்க
and i am in love with you

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love

பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

பாடகர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி

இப்போதிருக்கும் நடிகர்களில் மாதவனுக்கு அடுத்து மிகவும் வசீகரமான
குரலுக்கு சொந்தக்காரர் சூர்யா. கவர்ச்சியும் கம்பீரமும் இளகும் தன்மையும் ஒருசேர
அமைந்ததுவிட்டது. வாரணம் ஆயிரம் படத்தின் "முன் தினம் பார்த்தேனே" பாடலின்
வரிகள் மேலே உள்ளவை. மணிரத்னத்திற்கு பிறகு காதல் காட்சிகளில் தேர்ந்த
ரசனையை வெளிப்படுத்துவது கௌதம் மேனன் மட்டுமே.

இந்தப்பாடலிலும் பெண்ணை மயக்க வைக்க கவிஞர்கள் பல நூற்றாண்டுகளாக, நிலா,
பெண், பூ, போன்றவை இருந்தாலும் சூர்யாவின் குரல், பிரசாந்தினியின் குரல்
மற்றும் தாமரையின் கவித்துவமான வரிகள்.

"துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே"

கண் திறந்தால் ஆல்ப்ஸ் மலை உச்சியிலோ அல்லது ஜெர்மனியின் ரோட்டோரங்களிலோ
இருபது முப்பது பேரை ஆட வைத்து பிரதானமாக நாயகன். நாயகிய அணைப்பது,
தடவுவது, முத்தமிடுவது, உரசுவது போன்றவை மட்டுமே உள்ளதுதான் பாடல்கள்.
நிஜவாழ்க்கையில் எந்தக் காதலரும் இப்படி செய்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனாலும்
கனவுப்பாட்டு இல்லாமல் 90 சத படமே இல்லை எனலாம். கூர்ந்து கவனித்தால்
உரையாடலுடனான பாடல்கள் பெரும்பாலானவர்களின் விருப்பப் பாடலாக அமைந்து
இருக்கிறது. "முன் தினம் பார்த்தேனே" கூட அந்த வகையில் சேர்க்கலாம். கீழே எனக்குப்
பிடித்த பாடல்கள்.

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச... நான் அடவுகட்டி ஆட்டம்போட ஆச
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு தெரியும்
ஆலங்குயில் பாடுகையில் ஆரிரரோ எலே லேலோ யாவும் இசை ஆகுமடா
கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி... நுமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி...

இந்தப்பாடல்களில் எல்லாம் பாடுவது போல. பேசவும் செய்வதால் நிஜத்திற்கு
அருகிலே என சொல்லலாம்

அபூர்வமா வர்ற இந்தப்பாடல்கள்ல கூட கமலின் மூன்று பாடல் இருக்கறது ஆச்சரியம்.

.

Tuesday, October 07, 2008

The Bridges of Madison County


clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையை
தோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்
அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்
வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்த
வயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ள
பெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால் எப்படிப்பட்ட
பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்/வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக
உணர்த்திய படம். படத்தில் நான் பெரிதும் ரசித்த, ஈஸ்ட்வுட்
பயன்படுத்திய ஒரு வசனம்.

ஒரு காதல் வெற்றியடையும்போது மறுகாதலுக்கான வழியை அது
அடைத்துவிடுகிறது. இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும்.

தான் இறந்தபிறகு தனது சொத்துக்கள் மற்றும் கடிதங்களை தனது இருபிள்ளைகளுக்கு
எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள் ப்ரென்சாசெ. மேலும் தனது அஸ்தியை
காதலனை சந்தித்த பாலத்தின் மேலிருந்து கீழே தூவவேண்டும் என்றும் அதற்கான
காரணத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். அந்தக்கடிதத்தை படிக்கிறாள் மகள்.
அதில் தான் கணவரில்லாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக
எழுதியிருக்கிறது. தன் தாய் வேறொருவனுடன் சோரம் போனதை படிக்க மறுத்து வெளியேறுகிறான் மகன். அவள் கடிதத்தை தொடர்கிறாள், நமக்கு கதை
காட்சிகளாக விரிகிறது.

அழகான குடும்பம், அன்பான கணவன், 16 மற்றும் 14 வயது நிரம்பிய ஆண்
மற்றும் பெண் பிள்ளைகள். அவளைத்தவிர்த்து மற்ற அனைவரும் கண்காட்சி
ஒன்றிற்காக நகரம் செல்கிறார்கள். எல்லாருக்கும் கையசைத்து விடைகொடுக்கிறாள்.
வீட்டின் முன் பரந்த பசும்புல்வெளி. தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது
அதுதான் ஈஸ்ட்வுட்.

ஈஸ்ட்வுட் ஒரு புகைப்படக்காரர். natioanal geographic ல் வேலை செய்கிறார்.
கதையில் வரும் கிராமத்தில் மரத்தாலான ஒரு பாலத்தை புகைப்படம் எடுக்க
வருகிறார். அந்தப்பாலம் முழுக்க மரத்தால் ஆனது. கிட்டத்தட்ட வேட்டையாடு
விளையாடு படத்தில் உயிரிலே எனது உயிரிலே பாடலில் வருவது போல அழகாக
இருக்கும். உலகம் முழுக்க சுற்றி புகைப்படம் எடுப்பது இவரின் வேலை அதுவே பொழுதுபோக்கு. புகைப்படம் எடுக்கப்போகும் இடத்தைப்பற்றி அப்பெண்மணியிடம்
வழி கேட்கிறார். வழிசொல்வதில் தடுமாற்றமிருப்பதால் தானே உடன் வந்து
காண்பிப்பதாக சொல்லி இருவரும் பாலத்தை நோக்கி செல்கிறார். போகும்போது
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தான் பிறந்தது இத்தாலியில் பிறந்ததாக சொல்கிறாள். உலகம் சுற்றும் புகைப்படக்காரனாகிய ராபர்ட்(ஈஸ்ட்வுட்) தான் அந்த
இடத்தை அறிவதாகவும் அது அழகாக இருந்தமையால் போகின்ற வழியை
தவிர்த்துவிட்டு ரயிலில் இருந்து அங்கே இறங்கி தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்,
அங்கே ஆரம்பிக்கிறது ஆச்சரியம். அதிலிருந்து படம் முழுக்க ஆச்சரியம்தான்.



புகைப்படம் எடுக்க சாத்தியமில்லாத நேரத்தினால் மறுநாள் எடுப்பதாக ராபர்ட் முடிவெடுக்கிறார். இரவு உணவிற்கு அழைக்கிறாள் அவள். சம்மதிக்கிறார் ராபர்ட். பேசுகிறார்கள். ஒருவரின் உலகம் மற்றொருவரின் உலகத்தைத் தாண்டி ஒரேமாதிரி பிரதிபலிக்கிறது. நிறைய பேசுகிறார்கள். படத்தில் முக்கியமாக சொல்லவேண்டிய
விஷயம் இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப வானொலியிலோ அல்லது மதுவிடுதியிலோ காட்சிக்கேற்ற பாடல் ஒலிக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல.

மதுவருந்தியபடி தனித்த வீட்டில் பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் மனஸ்தாபம் உண்டாகிறது. உண்மையில் அந்த வருத்தம் அவளின் கனவுகளை அவன்
பிரதிபலித்ததால் உண்டாவது. அதை ஏற்க மறுக்கிறாள். வெளியேறுகிறார் ராபர்ட்.
தன் தவறு உணர்கிறாள் அவள். மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பாலத்தில்
புகழ்பெற்ற நாவலின் பிரிவுறுத்தும் வரிகளை தாளில் எழுதி பதிக்கிறாள். மறுநாள்
புகைப்படம் எடுக்கவரும் ராபர்ட் கடிதத்தினை வாசிக்காமலே யார் எழுதியது என்று புரிந்துகொண்டு தொலைபேசுகிறார். சந்திக்க நிகழ்ச்சிகள் முடிவாகின்றன.
சந்திப்பிற்கு பிரத்தியேகமாக தன்னை தயார்படுத்திக்கொள்கிறாள் அவள்.

சந்திப்பின் முடிவில் உடல் கலக்கிறார்கள். இரண்டு நாட்கள் உலகம் மறந்த
வயது முதிர்ந்த காதலர்களின் பயணம். பிரிவுணர்த்தும் காலம் வருகிறது.
வாய்க்கப்பட்ட உலகம், தனக்கு உள்ள பொறுப்புகளைக் களைந்து தன் காலம்
கடந்த காதல் நிமித்தம் ராபர்ட்டோடு வெளியேற மறுத்து தத்தமது காதலை
நினைவில் வைத்து இருவரும் பிரிகிறார்கள்.

மறுநாள் முதல் இருவரும் தங்களின் வழக்கமான நாளை சந்திக்கிறார்கள்.
மிகுந்த மனவலியுடனே தன் அடுத்த நாளை எதிர்கொள்கிறாள் அவள்.

காலங்கள் கரைகின்றன. கணவன் மரணப்படுக்கையில் சொல்கிறார். நான் என்
வாழ்நாள் முழுவதும் உன்னைப் பெரிதும் நேசித்தேன். உனக்கு வேறு கனவுகள்
இருந்தது என்று எனக்குத்தெரியும் ஆனாலும் உன்னைப் அதனிலும் பெரிது நேசித்தேன்
என்று சொல்லி மறைகிறார்.

ராபர்ட் மற்றும் அவளின் உறவுகள், சந்திப்புகள் சாட்சியாக அந்தப்பாலம் மட்டுமே
இருக்கிறது மற்ற எந்த தொடர்புகளும் இல்லை. ராபர்ட் இறந்தபிறகு அவளுக்கு
ஒரு பார்சல் வருகிறது. ராபர்ட்டின் கடைசி ஆசையாக அவரின் உடைமைகள் என்று
கருதப்படுகிற கேமிரா மற்றும் கடிதங்கள் அவள் வசம் சேர்ப்பிக்கவும் அவரின் அஸ்தி
அந்த பாலத்தின்கீழ் ஓடும் ஓடையில் தூவ வேண்டும் என்பதே அவரின் இறுதி ஆசை.

கடிதத்தைப் படித்ததும் நெகிழ்கிறாள் அவள். இருவருமே தாங்கள் இறக்கும் வரை
தத்தமது காதலை யாரிடமும் சொல்லாமலே இறக்கிறார்கள் கடைசியாக தன் உயிலின்
மூலம் தனது அஸ்தியை அதே பாலத்தின் அடியில் தூவ வேண்டுமாய் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கும் அந்த கடித்தத்தின் மூலமே பிள்ளைகளுக்கு தெரிகிறது.

இந்த இடத்தில் அவளின் மகள் உடனே தன் கணவருக்கு தொலைபேசி தன்
இதே வீட்டில் வசிக்கப்போவதாகவும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்றும்
கண்ணீர்ப்பெருக்குடன் சொல்கிறாள். அவள் மகன் தன் மனைவியை உடனே
சென்று பார்க்கிறான். புதிதாக பார்ப்பதுபோல.

ராபர்ட் நான்கு நாட்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகம் ஒன்றை எழுதி
அத்துடன் அனுப்புகிறார். அவளுடன் கழித்த அந்த அற்புத நான்கு நாட்களைப்
பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. அந்த நூலின் முதல் பக்கத்தில் இருப்பது அவள்
எழுதி பாலத்தில் ஒட்டிய அந்த நான்கு வரி வாசகம். உண்மையில் இந்தக்
காட்சியில் சிலிர்த்துவிட்டது.

மேலோட்டமாய் பார்த்தால் ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணிடம்
படுத்துக் கொள்வதாய் தெரிந்தாலும் உடல் சுகம் தவிர்த்த ஏதோ ஒன்று உணர்ந்ததினால் மட்டுமே தன்னை பறிகொடுக்கிறாள். ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,
குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது
கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,
காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய
ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்
உணரவேண்டும்.

படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது இதுதான். இந்தப்படம் பார்க்கையில்
ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வைத்தந்தது. நம் சினிமாவைப் பொறுத்தவரை நாவலை படமாக்குவது என்பது நாவலுக்கு செய்யும் துரோகத்தைப்போன்றது.
(கிட்டத்தில் ரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு மட்டுமே). ஆனால் இது அப்படியல்ல. இணையத்தில் தேடியபோது இந்தக்கதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்
எழுதப்பட்ட பெரும் வெற்றியடைந்த நாவல். திரைப்படத்தின் பெயரிலேயே வெளி
வந்த நாவலை ஈஸ்ட்வுட் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இதே சாயலில் மலையாளத்தில் ஒரு படம் உள்ளது ஒரே கடல். முற்றிலும் இதேமாதிரி இல்லாவிட்டாலும் கருவின் அடிநாதம் பிறன்மனை கவர்தல், கவர்தல்னு
சொல்றதைவிட காதல் என்று சொல்லலாம் காதல் அன்பென்றால்.

Friday, September 26, 2008

சாரு, தாம்தூம், வசனங்கள்

சாருநிவேதிதா தனது குட்டிக்கதைகள் என்ற பெயரில் நல்ல நல்ல கதைகள் எழுதி
வருவது அனைவருக்கும்(?) தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குட்டிக்கதையில் துபாய்
பார்களில் ஆடும் பெண் ஒருவரைப்பற்றி எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட
என்னடா வெங்காயம் இருக்கிறது என்கிறீர்களா? அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து
இருக்கிறாராம்.

பொதுவா ரம்ஜான் மாசத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே அமீரகத்தில் உள்ள அனைத்து
பார்களும் மூடிடுவாங்க. ஒருமாசத்துக்கு தாகசாந்திக்கு தடா அதனால டிஸ்கோ பார்
பெண்கள் எல்லாம் பொட்டி கட்டிக்கொண்டு ஊருக்கு போய்விடுவார்கள் என்று அமீரக
குடிமக்கள் அனைவருக்கும் தெரியும்.

எனக்குத் தெரிந்தவரையில் ராஸலீலா நாவலை இங்கு ஆசிப் அண்ணாச்சி மட்டுமே
வைத்துள்ளார். அமீரகத்தில் அண்ணாச்சி இலக்கியப்புரட்சி செய்துவருவதாக வெளிவந்த
வதந்திகளை நம்பாமல் இருந்தேன். சாருவின் குட்டிக்கதையை படித்தவுடன் புரட்சியை
கண்டு நம்பாமல் இருக்கமுடியவில்லை. இந்தசெய்தி குறித்து அவரிடம் தகவல் கேட்க
தொலைபேசியபோது சிக்னல் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.


---



தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது
எனக்கு மனசு வலிக்கிறது. சப்பையாக இருந்தால் சப்பை பிகரா? நானும் படத்தை
இரண்டு முறை பார்த்தவகையில் அவர் கும் பிகர் என்று சொல்ல அத்தனை
தகுதியும் அவரிடம் இருக்கிறது. கிராமத்தில் இப்படி ஒரு வெளுத்த பெண்ணா என்று
கேட்கலாம். இப்போதெல்லாம் கிராமத்துப் பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் ஜீன்ஸ்
ஸ்லிவ்லெசுமாக சுற்றுகிறார்கள். கிராமத்துப் பெண் என்றால் இன்னமும் தாவணி
கட்டிக்கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியே தாவணி போட்டால்
பொருந்தவேயில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். அவரிடம் என்ன ஒரே
ஒருகுறை என்றால் நடிக்க தெரியவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
போஸ் வெங்கட்டையும், சேத்தனையும் அநியாயத்திற்கு வீணத்திருக்கிறார்கள்
பேசாமல் அவர்களுக்கு ரஷ்ய போலிஸ் இலாகாவில் ஆபிசர் உத்தியோகம்
கொடுத்திருக்கலாம்.

---

சில வசனங்கள் நான் ரசித்தது... என்ன படம் என்பதை நீங்களே கண்டுபிடித்து
சொல்லலாம்.

"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ
இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?

"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"
---

"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"

---

"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"

---

"நான் அடிச்சா நீ செத்துருவ"

---

"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"

---

"அடிச்சாதாண்டா எம்ஜியாரு, அடிவாங்குனா நம்பியாரு"

---

தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது

---

call me an asshole one more time... இந்த படத்தை பேரரசுவின் தூரத்து உறவினர்
எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :)

---

I will love you my whole life. you and no other, forever. மெல் கிப்சன் அண்ணாச்சி ஒன்னுமே போடாத ஒரு சூப்பர் பிகரிடம் இந்த டயலாக் அடிப்பார்.

---

That there are things in this world
not carved out of gray stone. That
there's a small place inside of us
they can never lock away, and that
place is called hope.
---

சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?

யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...
---

நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you
(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)

---

யாரோ லாபத்துக்கு யாரையோ கொல பண்றது ஒரு தொழிலு??
---



மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.
எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.

Wednesday, September 17, 2008

கோயில்களைப்பற்றி

கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்
ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்
மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை
முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய
பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்
சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்
எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்
பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள
கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்
மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே
காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.
எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை
அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை
என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்
பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.
கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்
செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.

அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத
குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.
அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்
இருக்கிறது.

தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை
செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது
குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி
கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்
வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்
ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்
இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக
கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா
சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்
மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக
பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல
பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று
ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.
நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு
குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்
ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து
கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்
கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்
போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று
ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு
குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்
அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை
அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்
போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும்.

அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்
மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை
போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்
உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்
கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்
அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்
கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்
கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான
தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.
எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே
இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்
சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்
வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.

எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்
வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு
கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான
விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு
தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.
அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம்.
இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்
குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்
பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்
முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து
வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்
அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த
இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்
அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது
அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்
வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா
தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது
அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து
இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம்.
முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல
தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது
அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,
ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான
பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்
முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்
வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்
வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்
தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்
கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்
தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.
ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து
இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்
முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்
கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட
இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது
போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை
அழைத்துச் செல்லும்.

எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.
அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை
முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்
குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.
சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்
பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்
வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி
சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.

கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்
செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது
எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.

புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு
மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்
என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது
கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்
ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்
என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை
தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.
அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று
அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்
வந்ததே இல்லை.

குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி
இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.
திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள
பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்
அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது
அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்
கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட
அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே
வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை
தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன்.

கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்
இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்
சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.

கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்
நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து
நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.

Monday, September 15, 2008

காரிருள் தேவதை


கோடிட்ட இப்பக்கங்களை தினம் தினம்
நிரப்ப யாதொரு அதிசயமும் நிகழ்ந்துவிடவில்லை.
நாட்குறிப்பில் இந்த சுவாரசியமற்ற நாட்களை
என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது.
ஒலிகள் எல்லாம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட
பேரமைதியான இரவு.
இருள்சூழ்ந்த அறையின் முழுவதும்
வண்ணங்கள் மறைந்துவிட்டிருந்தன.
பின்னிரவுப்பொழுதொன்றில் இருள் தேவதை
உள்ளிறங்கி வந்திருந்தாள்.
இருளுக்கு ராகம் இருப்பதை இன்றுதான்
கண்டுகொண்டேன். அவள்
பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி
இருளில் சுழன்றாடினாள்.
சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்
ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட
அவளின் நிறம் இப்போது காரிருள்.
விளக்கின் திடீர்ப்பிரவேசத்தில் கலைந்த அவள்
தன் கடைசி ராகத்தை என் முகத்திலெறிந்தபடி
வெளியேறினாள்.
உடலில் மைதுனத்திற்கு பின்னான அதிர்வுகள்.
அறைக்குள் வண்ணங்கள் ஒவ்வொன்றாக
மீண்டும் வரத்தொடங்கின.

Friday, September 12, 2008

Jaane tu ya jaane na, Bashu


கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை
ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்
ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த
மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்
ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான்.

Jaane tu ya Jaane na



இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி
இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்
தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான
இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி
திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட
ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.
ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே
இல்லாமல் அதற்கே சென்றேன்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.
அதிதி என்ற அழகுப் பிசாசு
ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்
ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி
ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா
ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா
ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்
அதிதியின் ஓவியத்தம்பி
கவ் பாய் சகோதரர்கள்
"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்
கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு

ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்
கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக
சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்
ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க
ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்
ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே
அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்
கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்
ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்
இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.
அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.


நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை
அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை
காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்
மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.
அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.

ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்
தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.
ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்
மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது
இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே
சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.

நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.
சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை
கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.

படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்
வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்
அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக
அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.

பாஷு (bashu)


ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்
இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்
போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே
இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான
வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்
பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்
தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.

பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்
இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்
குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து
பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு
எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக
இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.
உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.
பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.

மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு
ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்
அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்
மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.

ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி
கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது
மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி
கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்
பரிவுகொள்கிறாள்.

அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு
வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்
சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி
எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.

கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து
எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்
ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது
போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக
விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான
கவிதை போன்ற காட்சி.

அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல
கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.
வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து
கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை
விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.
இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்
பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.

இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக
வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்
பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து
வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த
தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.

இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்
கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்
வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.
அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.

பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான
படைப்பாளி.

Friday, August 29, 2008

நாற்புறமும் தனிமையின் நர்த்தனம்


நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறது
சிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்
பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்
நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.
தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.
அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்
தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்
சேமித்திருந்தேன்.
சுகந்தியுடனான சொற்கள் காலாவதியாகிவிட்டன
என்று முன்பொரு யுகத்தில் கனலில் இட்டேன்.
தேவி விடாப்பிடியாக அடம்பிடித்து சொற்களை
திரும்பப் பெற்றுக்கொண்டாள்.
முத்துலட்சுமி இறந்தபோது அவளுடனான சொற்களும்
எப்படியோ மாயமாகி விட்டிருந்தன.
சாந்தியுடன் சொற்பரிமாற்றமில்லை எனினும்
பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்
யுகமாயிரமாயிர சில்லறைச்சொற்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்.
இன்று நீ விட்டுச்சென்ற சொற்களை மயிலிறகு
பெட்டி ஒன்றில் அடைக்கையில் நிலம் அதிர
கீழே விழுந்தது ஒரு சொல்.
வெடித்துச் சிதறிய அறையின் நாற்புறமும்
தனிமையின் நர்த்தனம்.

Saturday, August 23, 2008

இது எங்க ஏரியா.... யாவரும் வரலாம்

கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்
அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது. இந்த போட்டோ எல்லாமே என்னோட காணாம
போன மொபைலில் எடுத்தது. ஜனவரியில் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்கள் இவையெல்லாம். ஒவ்வொரு புகைப்படம் பார்க்கும்போதும் ஒரு கவிதை, அல்லது
கதைக்கான "ஒளி" தெரியுதுன்னு ஒருத்தர் உசுப்பேத்தி விட்டதுனால இத எல்லாம்
பார்க்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு.



என் நண்பன் ஒருத்தனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதுக்காக நிச்சயதார்த்ததுக்கு போகும்போது அவங்க வீட்டு வாசல்ல எடுத்தது. ரோஜாப்பூ நல்லா இருந்ததுனால
டபால்னு கிளிக்கியாச்சு.



இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென். இந்த பேர் பக்கத்துவீட்டு ஜனனியும் நானும் ரொம்ப நேரம் ஆலோசனை
செஞ்சு வெச்சது. அவ "பூன.. பூன.. எங்க இருக்க நீ" ன்னு கேக்குற அழகே தனி.
வீட்டுல காலைலயே எல்லாரையும் எழுப்பிவிடும். அசந்து தூங்குற நேரம்
தலையணைக்கு பக்கத்துல வந்து படுத்துக்கும். அதனிடம் இருந்து கிளம்பி
வரும் சூடான காற்றுடன் சுவாசத்தின் க்ர்ர்ர் சத்தம் கேட்கும்போது லேசாக உணர
ஆரம்பிப்பேன். கண்களை மூடிக்கொண்டே அதனிடமிருந்து இணக்கமான ஒரு சப்தம்
வரும் அந்த சப்தம்தான் என்னை துயிலெழுப்பும் சப்தம். வீடுன்னா ஒரு பூனை இருந்தே
ஆகணும்னு தோன்ற எண்ணத்தை உருவாக்கிய பூனை இது.



எங்க ஊர்லருந்து மூணு கிலோமீட்டர் தள்ளி இந்த அணை இருக்கு இந்த மலைமேல
ஏரி மேல்பரிகத்துலருந்து பாத்தா சுத்துப்பட்டுல எல்லாமும் தெரியும். இந்த இருக்கற
அணைக்குப் பேரு கோமுகி அணை. (பேரே வித்தியாசமா இருக்குல்ல) இந்த
அணைக்கு கொஞ்சம் தள்ளி மூங்கில் மரத்தால் சூழ்ந்த நிறைய புற்றுக்கள் கொண்ட
ஒரு அம்மன் கோயில் இருக்கு. இங்கதான் கெடாவெட்டுலாம் நடக்கும். பச்சை
பசேல்னு சுத்திலும் மூங்கில் மரம் நடுவில ஒரு அம்மன் கோயில் அங்க தனியா
சாமி கும்பிட்டோம்னா ஏகாந்தமா இருக்கும். நான் பள்ளிக்கு பங்க் அடிச்சா இந்த
அணைக்குதான் போவோம். அப்படி போனா இந்த கோயிலுக்கு மறக்காம போவேன்.



மேகம் அருவிக்கு போறவழில ரோட்டுலருந்து எடுத்த புகைப்படம் இது. இந்த அருவில
உற்பத்தி ஆகுற தண்ணீரெல்லாம் சின்ன சின்ன ஓடையா மாறி ஒரு இடத்துல
சேர்ந்து ஆறா ஓடி கோமுகி அணையில சேரும். குறிப்பா ஆகஸ்ட் முதல் டிசம்பர்
வரை அணை முழுக்க தண்ணி இருக்கும். புகைப்படம் எடுக்கும்போது தண்ணி
குறைவாதான் இருந்தது.



இங்க உக்காந்திருக்கும் ஒருவரை பார்த்தால் எதோ ஒரு கிராமத்தான் பஸ்சுக்கு வெயிட்
பண்றான்னு நினைப்பிங்கதானே... ஆனா அது இல்ல. இவர் உட்கார்ந்திருக்கும் இடம்
வெள்ளிமலைக்கு செல்லும் பாதையில் இருக்கும் குண்டியாநத்தம் என்ற பேருந்து நிறுத்தம்.
கடந்த ஒருவாரமா இவர் இங்க காத்திருக்கார். எதுக்குன்னு கேக்கறிங்கள்ல... பெரிய
விஷயம் ஒன்றுமல்ல. நியாயவிலைக்கடையில் போடும் அரிசிக்காக காத்திருக்கிறார்.
அந்த லாரியானது எப்போது எப்படி கடந்துபோகும் என்றே தெரியாது. இப்படி
காத்திருந்து பார்த்தால்தான் அரிசி வாங்கமுடியும். வண்டி போவதை கவனிக்காவிட்டால்
அரிசி வாங்க முடியாது. இவர் கவனிச்சு அங்க இருக்கற சில வீடுகள்ல சொல்லி
பிறகு நாலஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கற இன்னொரு ஊருக்கு போய் வாங்கிட்டு
வரணும். இவர்கிட்டகொஞ்சநேரம் உக்காந்து பேசினதுல தெரிஞ்சது இது. ரொம்ப
அழகா சிரிச்சு பேசினார். என்னோட போட்டோ எடுக்கும் திறமையினால
"சேது எபெக்ட்" தெரியுது மத்தபடி நல்லா பேசினார்.



புளியம்பூ பாக்க அழகா இருக்கும். பறிச்சு தின்னா அதவிட நல்லா இருக்கும். அதையே
பூவிட்டபிறகு கொஞ்சநாள்ல பொறந்த கொழந்தையோட வெரல் மாதிரி சின்ன பிஞ்சா
இருக்கும் அதுல லேசா உப்பு கொஞ்ச பட்ட மொளகா வெச்சு அடிச்சோம்னா கும்முனு
இருக்கும். பொண்ணுங்க நெல்லிக்காவுக்கு அடுத்ததா புளியங்காதான் ரொம்ப புடிக்கும்
இப்பவும் நடராஜா ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ள பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற சீசன்
காய் இது. டீச்சருங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. போட்டோவில
இருக்கற மரத்துல இலைகளவிட காய் அதிகமா இருந்துச்சு. சின்னவயசுல கலெடுத்து
அடிச்சா காயம்பட்ட காய் விழும். இப்பலாம் நின்னுகிட்டே பறிச்சுடறமாதிரி இருக்கு
காலத்தின் வளர்ச்சி!



மூணு பைக்குல இந்த அருவிக்கு நான் என்னோட தம்பி அப்புறம் அவனோட கூட்டாளி
சிலபேர் போனோம். முதல்முதலா இந்த அருவிக்கு +1 படிக்கும்போது கட் அடிச்சுட்டு
வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அப்ப கட் அடிச்சபோது கூட வந்தவன் இப்பவும்
என்கூட அருவிக்கு வந்தது பலவிஷயங்கள ஞாபகப்படுத்த உதவியது. இந்த அருவிக்கு
போக பத்து வருசத்துக்கு முன்னாடி வழிகாட்டியா வந்த ஒரு சிறுவனை என் கண்கள்
தேடியது ஆனா அவன் பேர் தெரியாததுனால கிடைக்கலை. என்னோட முதல் பீடி
அங்குதான் புகைக்கப்பட்டது அதுவும் வழிகாட்டியா வந்த அந்த சின்ன பையன்கிட்ட
இருந்து ஆட்டை போட்டது. இந்த அருவிக்கு போகணும்னா குண்டியாநத்தத்தில்
இறங்கி இரண்டு மலைமுகடுகளை ஏறி இறங்கணும். கண்டிப்பா வழிகாட்டி ஒருத்தர்
இருக்கணும். இல்லாட்டி "மந்தையிலிருந்து பிரிந்த ஆடுதான்" கதி. ஆனாலும்
இங்க போகணும்னு முடிவெடுத்து திரும்பி வரும்போது வாயில் நுரை தள்ளிடுச்சி.
இருந்தாலும் அற்புதமான ஒரு சாகசப்பயணம் செய்த திருப்தி இருந்தது. அருவியை
பார்க்கும்போதே எனக்குப் பிடிச்ச ஒரு கவிதையையும் போடறேன்.

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
- விக்ரமாதித்யன்


அருவியை நேர்ல பார்க்கும்போது இந்த கவிதை கண்டிப்பா உங்களுக்கு நினைவுக்கு
வரும்.



சிரிச்சமுகமா கைலி கட்டிட்டு உக்காந்திருப்பவர் அருவிக்குப் போக வழிகாட்டினார்.
இரண்டு மலை ஏறி இறங்கியும் சோர்வடையாம போட்டோவுக்கு சூப்பரா போஸ்
குடுக்கறார். நாங்கதான் ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி ஆகிட்டோம். திரும்பற வழில
ஆட்டுப்பட்டில ஒரு ஆடு குட்டி போட்டுகிட்டு இருந்துச்சு. பிறந்து சிலமணி நேரம்
ஆனதும் அது தத்தி தத்தி எழுந்து நிக்க முயற்சி செஞ்ச காட்சி இருக்கே...
சாயந்திர வெயில் தங்க நிறத்துல தக.. தகன்னு மின்ன அந்த ஒளி புது ஆட்டுக்குட்டி
இளம் தோல்மேல பட்டுத்தெறிக்கும்போது ஒரு புதுவிதமான வண்ணம் தெரிஞ்சது
செம சூப்பரா இருந்துச்சு. ஒருத்தங்க வீட்டுல தண்ணி வாங்கி குடிச்சோம் அந்த வீட்டுல
ஒரு பன்னிக்குட்டி ரொம்ப அழகா இருந்தது. தூக்கி கொஞ்சலாம் போல...
பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாதாண்டா இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க.



பொதுவா எனக்கு வயசான ஆளுங்க கூட உக்காந்து பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்.
(அதனாலதான் ஆசிப் அண்ணாச்சிகூட உக்காந்து நிறைய பேசுவேன்)
இந்த போட்டோல இருக்க தாத்தாகூட என்னோட கடி தாங்காம அந்தப்பக்கம் திரும்பிக்
கொண்டார். ஒரு கெடாவெட்டு போகும்போது எடுத்த போட்டோ இது. அங்க உறுமி
மேளம் அடிக்க வந்தவர் இவர். அடி அடியென்று அடித்து ஓய்ந்தபோது நான் அவரிடம்
மொக்கை போட ஆரம்பித்தேன். கெடாவெட்டும் முன்பு அச்சாரமாக இரண்டு பேருக்கு
ஒரு மெக்டொவல் ஆஃப் பாட்டில் வீதம் வழங்கப்பட்டது. இதை உள்ளுக்கு இறக்கி
விட்டால் கறிவிருந்து அருமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமாராக இருக்கும்.



இங்க சாமி கும்பிடறாரே அவருடைய பேரனுக்குதான் காதுகுத்து. எங்கப்பா போக
வேண்டிய நிகழ்ச்சி இது. அவரை தள்ளிவிட்டு நான் போனேன். இந்தமாதிரி
தனியா காட்டுக்குள்ள காதுகுத்து, பொங்கல், கிடாவெட்டுன்னா நான் போகணும்னு
சின்ன வயசுல அடிம்பிடிப்பேன். இப்பவரைக்கும் அது மாறல. காதுகுத்துக்கு வந்த
ஒரே ஒரு சுடிதார் போட்ட பொண்ணு. நானும் என்னென்னமோ சேட்டை செஞ்சும்
அதுகூட திரும்பி பாக்கல. எதாவது ஏடாகூடமா ஆயிருந்தா ஆட்டு கழுத்துல
போடறதை என் கழுத்துல போட்டுருவாங்க பாசக்காரங்க.



இந்த முக்கு சந்துக்கு பேரு பேங்க் ஸ்டாப். இங்கன நாலு படிக்கட்டு இருக்கு அங்க
உக்காந்து டீ சாப்பிட்டுகிட்டே வெட்டிக்கதை பேசியிருக்கேன். அங்க ஒருநாள்
உக்காந்து பேசிட்டு இருக்கும்போது ஊர்மக்கள் எல்லாரும் ஆத்தோரமா இருக்கற
அம்மன் கோயிலுக்கு பொங்கல் வைக்கப்போனாங்க. அங்க முன்னாடி ரெண்டு
பசங்க செம ஆட்டம் போட்டாங்க. கூடவே ஆடணும்போல அந்த தவுலுகாரரும்
செம பின்னு பின்னிட்டார். so funny people னு நானும் விவேக் மாதிரி சொல்லி
போட்டோ எடுத்துட்டேன்.



கள்ளக்குறிச்சிலருந்து வேப்பூர் போறவழில விருகாவூர்ல இறங்கி அசகளத்தூர் என்ற
ஊருக்குப் பின்னாடி போகற ஒத்தயடிப்பாதையில் ஒருகிலோமீட்டர் தள்ளி போனோம்னா
இந்தக்கோயில் இருக்கு. இதுதான் எங்க குலதெய்வமாம். வேடப்பார்னு பேர். முன்னர்
இங்க வந்தபோது வெறும் பாறைய அடிக்கி வெச்சு நாலு வேல் குத்தி இருந்தாங்க.
இப்ப சின்னதா கோயில் கட்டி அய்யனார் சிலை, குதிரை, யானைன்னு கலர்புஃல்லா
மாத்திருக்காங்க. இன்னும் கண் வரையாத அய்யனார் சிலைய போட்டோ எடுக்க கூடாது
என்று பூசாரி சொன்னார். இந்த பூசாரி கோட்டர் பாட்டில் இல்லாம படையலே வைக்க
முடியாதுன்னு சொன்னவர்.

இப்படிலாம் கலர் கலரா போட்டோ எடுத்து அருமை பெருமையா வெச்சிருந்த ஒரு
போன் காணாம போச்சு. காணாம போன அன்னிக்கு இந்த கருங்காலி பூனையதான்
கடைசியா எடுத்தேன்.



குறிப்பு: நாள் குறிப்பிடாத இரண்டு புகைப்படங்கள் வேற ஒரு கேமரால எடுத்தது. அது
பேர் கூட என்னவோ canon lumix FX10 னு நினைக்கிறேன்.

Thursday, August 21, 2008

உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்

கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில்
பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாக
கொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரிய
கிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக் ஓட்டிச்சென்று நிதானம் தவறி வந்த வேகத்தில் தரை தேய்த்தபடி கிணற்றோரத்தில் வண்டியை நிறுத்தி உயிர்பிழைத்தவர்களும் உண்டு, தவறி விழுந்தவர்களும் உண்டு. எனவே அந்த முனை பிரசித்திபெற்றது மட்டுமல்லாது போதையில் வருபவர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது அம்முனை. அம்முனையை ஒட்டிய வீடுதான் கோபாலுக்கு கோபால் மிகச்சிறந்த குடிகாரன்.
குடித்தபிறகு யாரையாவது கொலைவெறியில் அடிப்பது அவனின் ஒருவகை
மனோவியாதி. பெரும்பாலும் வாயில்லாத ஜீவன்களை அடித்து சித்ரவதை செய்வான். அவன் மனைவியையும் ஒரு வாயில்லாத ஜீவன் என்று நினைத்து ஒருநாள்
மண்வெட்டியால் தலையை வெட்டிவிட்டான். தூக்கத்திலிருந்தவாறே கழுத்து
வெட்டப்பட்ட நிலையில் இறந்துபோனாள். வெட்டிய கணம் முதல் அவள்
சாவதற்கு மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டும். மண்வெட்டியானது கழுத்தை வெட்ட
சரியான ஆயுதமில்லை. கழுத்தின் பாதிவரை மட்டுமே அதன் கூர்மை செல்லுபடியானது போல கிணற்றை ஒட்டிய அவளின் தலை தொங்கிக் கொண்டிருந்தது. தலையின்
கணம் தலை எந்நேரமும் உடலிளிருந்து பிய்ந்து கிணற்றில் விழலாம் என்ற நிலையில்
அது தொங்கிக் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிகளில் இரத்தம் ஏற்ற அல்லது அவசர
சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மூக்கினுள் செல்லும் சிறிய குழாய் அமைப்பில் அக்கழுத்திலிருந்து நரம்புகள் அறுபட்டிருந்தன. அந்நரம்புகள் முனையில் ரத்தம் தொய்ந்திருந்தது.

மிகவும் கோரமான அந்தக்காட்சிகள் பார்க்கவே பயமாகவும் அறுவெறுப்பையும்
தருவதாக இருந்தாலும் அதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது.
அபூர்வமான படத்தின் "இன்றே இப்படம் கடைசி" காட்சியை பார்த்துவிடவேண்டும்
என்ற ஆவல் தோன்றுமே அப்படி. விட்டால் பிறகு இதுபோன்ற காட்சியை பார்க்க
முடியாது. அன்று நீல நிற சட்டை காக்கி ட்ரவுசரும் அணிந்திருந்தேன். இதெல்லாம்
பார்க்க கூடாது என்று அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள். பிறகு அந்த நீலநிற
சட்டை போடும்போதெல்லாம் குரூரமான அல்லது அவஸ்தையான புன்னகையுடன்
ஒரு சிரிப்பு வரும். அறியாத வயது அது. ஆனால் அதற்கடுத்த வருடமே இன்னொரு
கொடூரமான கொலையை நேரில் பார்க்க நேர்ந்தது. அப்போது அந்த உடலில் தலையே
இல்லை. மேலும் முன்பு பார்த்ததை விட இந்த அறுந்த முண்டத்தில் நிறைய குழாய்கள்
பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தன.

வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்த கணவன். ஆசையாக அணைத்தவனை மிளகாய்
கரைத்த தண்ணியை முகத்தில் ஊற்றி கொலைசெய்யப்பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட
நாளில் வேறொருவனுடன் உடலால் பழகிவிட்டதால் கணவனின் திடீர் வருகை
அவளுக்கு பிடிக்கவில்லை. பெண்களுக்கு ஆண்களைப் போல பலமில்லை. அவள்
வெட்டிய வேகம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு துல்லியமாக விழவில்லை. மாறாக
அதே அரிவாள்மனையாள் அவளின் கழுத்து அறுபட நேர்ந்தது. முன்பு
பார்த்தகொலைபோல நிதானமில்லாம வெட்டியது போல் அல்ல இந்தக்கொலை. நின்று நிதானமாக நேர்த்தியுடன் வெட்டியதுபோல இருந்தது. வாசல் படிக்கட்டில் சரிந்திருந்த
அந்த உடல் தலையே இல்லாமல் வினோதமாக இருந்தது.

பக்கத்தில் இருந்த நண்பர்கள் வாந்தியெடுத்தபடி விலகிப்போனார்கள். சிலநொடிகள்
ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே என் சட்டையின் நிறத்தைப் பார்த்தேன். நல்லவேளை
வெள்ளைச்சீருடை. இந்தக்கொலை அதிகாலையில் நிகழ்ந்திருக்கவேண்டும். நான்
பள்ளிக்கு செல்லும் சமயம் அந்த நிகழ்வின் மிச்சத்தைப் பார்த்தேன். கழுத்து அறுபட்ட நேரத்தில் எல்லாரும் உறங்கிகொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவளின் கணவன் அவளின் தலையை உரச்சாக்கு ஒன்றில் முடிச்சு போட்டு குறிஞ்சி
ஓட்டலில் பரோட்டா தட்டும் டேபிளின் மேல் வைத்துக் கதவை தட்டியிருக்கிறான்.
அவன் வெளிநாடு செல்லும்போது அங்குதான் காவல்நிலையம் இருந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் வழிசொல்ல ஆத்தோரத்தில் உள்ள புதிய காவல்நிலையத்திற்கு
சென்றதாக ஓட்டல் வைத்திருப்பவரின் மகன் பள்ளியில் பரபரப்பான தகவலின் சாட்சியை
விரிந்த கண்களுடன் பரப்பிக்கொண்டிருந்தான்.

இந்த இரண்டு கொலைகளுக்குப்பிறகு நான் கல்லூரி செல்லும் வரை வேறு எந்த
கொடூரமான கொலையையும் கண்டிருக்கவில்லை.

அப்போது பெரம்பலூரில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் அறையின் பக்கத்தில்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர்கள் இணத்திலேயே அதிகம் படித்தவர்.
கல்லூரிக்கு மூன்று மாதங்கள் சென்று பின் நின்றுவிட்டதாக சொன்னார். உறக்கம் வராத
சமயங்களில் அவரிடம் சென்று பேசுவேன். நான் குடியிருந்த வீட்டிற்கு எதிரிலே ஒரு
குடிசை போன்ற அமைப்பில் அவர் குடியிருந்தார். எப்பொழுதும் வெள்ளைச் சட்டை
அணிபவர் உள்ளுக்குள் சிவப்பு நிற பனியனின் நிறம் தெரியுமாறு அந்தச்சட்டை இருக்கும்.
அற்புதமான உடலமைப்பு அவருக்கு. தினமும் உடற்பயிற்சி செய்வார். அவருடன் பழக்கமானது விநோதமான சம்பவம். அவரின் வீட்டில் மின்சாரம் கிடையாது
தெருவிளக்கின் அடியில்தான் உட்கார்ந்து எதாவது எழுதிக்கொண்டிருப்பார். எப்போதாவது அந்தப்பக்கம் கடந்து செல்லும் நான் ஓர்நாள் அவரின் அருகில் சென்று என்ன எழுதுகிறார் என்று பார்த்தேன்.

ஓரங்கள் கிழிந்த நாற்பதுபக்க இரட்டை வரி நோட்டில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சிரித்தபடியே நோட்டை என்னிடம்
கொடுத்தார். படித்துப்பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. எப்போதோ காதலித்தபோது கவிதை எழுதியது பிறகு நான் கவிதை என்று வாசிப்பது வாரமலரின் கடைசிப்பக்க
காதல் கவிதைதான். ஆனால் அவரின் கவிதை அதுபோல இல்லாததால் எனக்குப்
புரியவேயில்லை. சூப்பரா இருக்குது என்று நோட்டை எடுத்து அவரிடமே கொடுத்தேன். தெருவிளக்கு கம்பத்தின் அடியில் ஒரு கல்லைப் போட்டு அமரிந்திருந்த அவரின்
பக்கத்தில் ஒரு நீண்ட கம்பு இருந்தது.

வரி வரியாக கருப்புக்கோடுகள் போட்ட வழவழப்பான கம்பு அது. நீண்ட உபயோகத்திற்கு
பிறகே வரும் வழுவழுப்பு அது. அதை எடுத்து தேவர்மகனில் கமல் கம்பின் அளவு
பார்ப்பது போல நெற்றிக்கு நேராக வைத்து பார்த்தேன். "கம்பு சுத்த தெரியுங்களா சார்"
என்று கேட்டார். என்னை முதல் முதலில் சார் என்று கூப்பிட்டவர் அவர்தான்.
தெரியாதுங்க சார் என்றேன். ஆச்சரியமாக பார்த்தார். பிறகு சட்டையைக் கழற்றி என்னிடமிருந்த கம்பை வாங்கி சுழற்ற ஆரம்பித்தார். தேவர்மகன் கமலை விட நன்றாக சுழன்று ஆடினார்.

பொதுவாக இரவுநேரத்தில் குழல்விளக்கின் வெளிச்சத்தில் குச்சியை வேகமாக
சுழற்றினால் நீலமும் மஞ்சளும் சிவப்பும் கலந்த கோடுகள் நொடிப்பொழுது வேகத்தில் குச்சியின் சுழற்சிக்கு ஏற்ற வேகத்தில் வரும். சிறிய வயதில் முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம் என்றால் அதை நினைவுகொள்ளுங்கள். அவர் சுழன்ற வேகத்தில் நீலமும்,
மஞ்சளும் சிவப்பும் நொடிப்பொழுதில் மின்னி மறைந்துகொண்டிருந்தன. யாருமில்லாத தெருவின் விளக்கு வெளிச்சத்தில் அந்த சிலம்பாட்டம் என் ஒருவனுக்காக நிகழ்ந்துகொண்டிருந்தது. அவரின் மேல் மிகுந்த பிரமிப்பு ஏற்படுத்திய இரவு அது.

எனக்கும் கம்பு சுற்ற கற்றுத்தரும்படி கெஞ்சினேன். "நான் பத்து வயசுலருந்து
சுத்தறேங்க இருவது வருசம் ஆச்சு. இன்னமும் எனக்கு சரியா சுத்த வரல. தினமும்
அரை மணி நேரமாவது சுத்தறேன். எடுத்த உடனே கத்துகிட்டு ப்ளாக்பெல்ட் வாங்க இது கராத்தே இல்லங்க. சின்ன வயசுலருந்து உடல் வளையணும் என்று சொன்னார். கராத்தேவிலும் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்று பின்னர்தான் தெரிந்தது. இருந்தாலும்
என் பிடிவாதம் காரணமாக எனக்கு சொல்லித்தர முன்வந்தார். படிப்பில் நான் எப்படியோ அதேபோல கம்புசுத்துவதிலும் என் திறமை இருந்தது. உங்களுக்கு வராது என்று அவரே விலகிக்கொண்டார்.

பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவோம். ஓட்டலுக்கு சாப்பிடப்போகும்போதுகூட
அழைப்பேன். குழந்தைகள விட்டுட்டு என்னால வரமுடியாது. அப்படியே இருந்தாலும்
அவங்கள விட்டுட்டு சாப்பிடறமேன்னு தோணும். அதனால வரமுடியாது என்பார்.
நாளுக்கு நாள் அவரின் மதிப்பு என்னில் அதிகமாகிப்போனது.

ஒருநாள் மருந்துக்கடையில் எதோ மருந்து வாங்கிக்கொண்டிருந்தேன். படிக்கட்டு அருகில்
ஒருவர் பைக்கை ஸ்டார் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒருவர்
புயல் வேகத்தில் வந்து அவரின் தலை வெட்டிவிட்டு சென்றார்.

சீற்றமாக வரும் குழாயில் தண்ணீரை அடைத்துப்பிடித்தால் நாலாபக்கமும் தண்ணீர்
வேகமாக சீறி அடிக்கும் பார்த்ததுண்டா? அதேபோல வெட்டப்பட்ட கழுத்திலிருந்து
ரத்தம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது. நொடிநேரத்தில் நிகழ்ந்துவிட்டது. முண்டா
பனியனை மேல் முடிச்சு போட்டு கண்களுக்கு சிறு இடைவெளிவிட்டு கீழே முடிந்து
விட்டதால் பார்ப்பதற்கு முகமூடி திருடன் போல் இருந்த ஒருவன் வெட்டிவிட்டு ஓடினான்.
கொலையுண்டவர் என்னிலிருந்து பத்தடி தூரம் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன்
ஓடியவனின் திசை பார்த்தேன். வெள்ளைச்சட்டை சட்டையை மீறி வெளித்தெரியும் நீல
நிற பனியன். எனக்குப் பழக்கமான, சீரான கட்டுடைய உடல்.

மறுநாள் செய்தித்தாளில் நக்கீரன் நிருபர் கொலை என்று இருந்தது. நேற்று கண்ட அதே
சம்பவம். பெரம்பலூர் போன்ற நகரத்தில் இதெல்லாம் சகஜம் என்று பேசிக்கொண்டார்கள்
நானும் இரண்டொரு மாதத்தில் மறந்தே போனேன். அந்த கம்பு சுற்றுபவரையும் காணவில்லை.

பின்பொருநாள் மருத்துவமனையில் இரத்தம் கொடுத்துவிட்டு வருகையில் அவரைச் சந்தித்தேன். அந்தக்கொலையை அவர்தான் செய்ததாக சொன்னார். விபத்தில்
சிக்கியதுபோல இருந்தார். அவரின் படுக்கைக்கு அருகில் நீண்ட கழியில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன். பதில் ஒன்றும் இல்லை. இரத்தவகை கேட்டேன். ஓ நெகட்டிவ் என்றார்.

என்னுடைய இரத்தவகையும் அதுதான். ஒருவேளை அது என்னுடைய ரத்தமாக கூட இருக்கலாம்.




இந்த மூன்று கொடூரமான சம்பவங்களுக்குப் பிறகு வேறு எந்த கொடூரமான
கொலைகளையும் பார்க்கவில்லை. ஆனால் நேற்று சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.

ஒவ்வொரு கொடூரமான கொலைகளுக்குப் பின்னாலும் துரோகம், தோல்வி, விசுவாசம், காதல், கள்ள உறவு, பழிக்குப்பழி என்ற எதோ ஒரு காரணம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.
நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.

Friday, August 15, 2008

கருணையற்ற கோடை

நீளமான இந்த கோடையில்
குறைந்தபட்சமான குளிர்ந்த காற்று போதும்
உனக்காக ஒரு கவிதையினை எழுதிவிடுவேன்.
கொஞ்சம் நீர்த்துளிகள் வானத்திலிருந்து.
அல்லது
பாசாங்குகள் அற்ற மழலையின் சிரிப்பு.
அல்லது
பழுத்த இலை ஒன்று மென்காற்றை கிழித்துக்
கீழிறங்கும் காட்சி.
அல்லது
கண்கள் மூடிய சவத்தின் மவுனம்.
அல்லது
எதிர் வீட்டுப் பூனையின் ஆச்சர்யமான தலையுயர்த்தல்.
அல்லது
தென்னையோலையின் கடைசித்துளி மழைநீர்
குளத்தில் வீழ்ந்தெழும் அந்நொடி.
அல்லது
முதல் முட்டை இட்ட கோழியின் ஆசுவாசமான
கெக் கெக் கெகே... சப்தம்.
அல்லது
விணையின் நரம்பில் நகங்கீறி குருதி
தெறிக்கும் உச்சம்
இக்கடும் கோடையினை மதியிலகற்றவும்
முகமறியா உனக்காக அபூர்வான சொற்களை
கோர்க்கவும் சிலவற்றை நினைவுகொள்கிறேன்
தோழி.

Thursday, August 14, 2008

கவ்வாலி இசை, உருவ ஒற்றுமை, காமிக்ஸ் உலகம்

சென்ற வாரத்தின் ஒருநாள் பணிநிமித்தமாக தொலைதூரம் செல்லவேண்டி இருந்தது.
அலுவலகத்தில் பாகிஸ்தானி ட்ரைவர்கள்தான் அதிகம். அப்படி ஒருநாள் செல்லும்போது
காரில் ஒரு பாடலை ஒலிபரப்பினார் பாக் நண்பர். பொதுவாக ஒரேமாதிரி இசைக்கும்
பாகிஸ்தானிய நாட்டுப்புற இசையை நான் விரும்புவதே இல்லை. என்ன செய்வது
வேறு வழியின்றி போடுப்பா கேக்கலாம் என்றேன். எதோ ஒரு பாட்டை போட்டார்
பயணம் முடிகிற வரை அந்த ஒரு பாட்டை மட்டுமே திருப்பி திருப்பி கேட்கும்படியான
குரல். ஹரிகரனைப் போல, எஸ்.பி.பி போல அத்தனை அருமையான குரல்
இல்லையென்றாலும் எதோ ஒன்று அந்த குரலில் இருந்து என்னை ஈர்த்தது.
பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் நுஸ்ரத் ஃபதே
அலிஃகான் என்று சொன்னார். குறித்துக்கொண்டேன்.

இந்த ஒருவாரத்தில் நூற்றுக்கும் அதிகமான முறை கேட்டிருப்பேன். ஒருவார்த்தையும்
புரியவில்லை, முற்றிலும் புதியதான இசை என்றாலும் என்ன பிடித்திருக்கிறது என்றே
தெரியவில்லை. மிக ஆழ்ந்து யோசித்ததில் அதில் எனக்குத் தெரிந்து சில நினைவுகளை
மீட்டெடுக்கிறது என்று கண்டுகொண்டேன். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில்
போடப்படும் கீர்த்தனை, சாமிப்பாடலின் ஏதோ ஒரு குரல் இந்தக்குரலுடன் ஒத்துப்
போவதாக உள்ளிருக்கும் நினைவு சொல்கிறது. இரண்டாவதாக பாடலில் கடைசியாக
உச்சக்கட்ட ஸ்தாயில் நுஸ்ரத்தின் குரல் எனக்கு மிக நெருக்கமான அதே மாதிரி
உச்சஸ்தாயியில் குரல் பிசிரடிக்குமாறு அமைந்திருந்தது. அது எம்.எஸ் விஸ்வநாதனின்
குரல். வசீகரம், ஆவேசம், உணர்வுகள், தொழுதல், தாளத்திலிருந்து வெளிச்செல்லும்
குரல் போன்ற பல வடிவங்களின் தொகுப்பாக இந்தப்பாடல் உள்ளது.



இவரைப்பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது வெங்கட் அருமையான
பதிவொன்றை எழுதியிருந்தார். பாடலை நிதானமாக கண்ணை மூடி ரசித்துப்பாருங்கள்.

விடியோ தெரியாதவர்கள் Tumhein dillagi bhool என்று youtube ல் தேடினால்
கிடைக்கும்.

***

தூக்கமிழந்து போகும் இரவுகளில் எல்லாம் சண்டைப் படங்களைப் பார்ப்பது வழக்கம்
(அதற்காக "சண்ட" படத்தைப் பார்க்கும் துணிவு இல்லை) கடந்தவாரத்தில் ஒருநாள்
அப்படி தூக்கமிழந்து போனது ஒரு இரவு. மெல் கிப்சனின் பேட்ரியாட் படத்தினைப்
பார்த்தேன். மெல் கிப்சனின் இப்போதையை முகத்தினைக் காணும்போதெல்லாம்
இதே முகத்தை வேறெங்கோ கண்டிருக்கிறேன் என்று தோன்றும். அப்படியே தீவிரமான
யோசனைக்குப் பிறகு இதேபோன்ற ஒரு முகம் அல்லது அதே போன்ற உடல்மொழியுடன்
கூடிய ஒரு நடிகர் எனக்கு ஞாபகம் வந்தார். பொதுவாகவே எனக்கு புதிதாக ஒரு முகத்தை
கண்டால் இதற்கு முன்பு இதே மாதிரி உள்ள ஒருவரோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வேன்.
ஆயிரத்தில் ஒன்றிரண்டு முகம் அதேபோல உண்டு. உதாரணத்திற்கு இந்த பதிவு
பார்த்தால் தெரியும்.



மெல்கிப்சனைப்போலவே உள்ள ஒரு முகமாக நான் நினைப்பது மறைந்த நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு. ஓரளவுக்கு முக ஒற்றுமை இரண்டு பேருக்கும் இருப்பதாக நான்
நம்புகிறேன். சினிமாவில் வருவதுபோல அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரி எல்லாம்
இருக்க மாட்டார்கள் எனினும் சில பாவனைகளின்போது, சிரிப்பின்போது ஒருநொடியில்
தோன்றுமே அதுதான் ஒற்றுமை. நிஜத்தில் பேட்ரியார் பார்க்கும்போது சந்திரபாபுதான்
நினைவுக்கு வந்தார். இதேபோல முக ஒற்றுமை மேலும் இரண்டு பேருக்கு இருக்கிறது
அவற்றை கீழே கொடுக்கிறேன். பெயரை நீங்களே கண்டுபிடியுங்கள்.



ஒண்ணுமே தெரில எங்கடா ஒத்துமை தெரியுதுன்னு கேட்டிங்கன்னா, படங்கள் ரெண்டு ரெண்டா தெரியுற நிலைக்கு வரவும். அப்பவும் தெரிலன்னா வுட்டுடுங்க.

***

மூன்றாவது ரவுண்டு முடிந்திருந்த நேரம். மல்லு நண்பன் குழறலாக ஆரம்பித்தான்.

"இதுவரைக்கும் அந்த ஒரே ஒரு விஷயத்தைத் தவிர அழுததே இல்ல தெரியுமா?"

"எந்தா விஷயம் சொல்லு மச்சி" (ரெண்டு பெக்கு உள்ள போச்சுன்னா உடனே ப்ளாஷ்பேக் போய் பெயிலியர் லவ்வ நெனச்சு ஒப்பாரி வெப்பானுங்களே)

எனக்கு காமிக்ஸ் புக்குன்னா ரொம்ப புடிக்கும் போபனும் மோளியும், பாலராமா,
பாலபூமி, பாலமங்களம், பூம்பாட்டு, முத்தஷி (பாட்டி கதைகள்) இந்தமாதிரி
ஒருநூறுக்கும் மேல சேத்து வெச்சிருந்தேன். "சின்ன வயசுல ஸ்கூலுக்கு அலுமினிய சூட்கேஸ்ல புக்கு எடுத்துட்டுபோவோம்ல" அதுலதான் காமிக்ஸ் அடுக்கி வெச்சு
என் ரூம்ல வச்சிருந்தேன்.

காமிக்ஸ்னா ரொம்ப இஷ்டமா மச்சி?...

ஆமாண்டா வளெர இஷ்டம்.

படிப்ப முடிச்சிட்டு நான் மும்பைக்கு போனேனா அங்க போனபிறகு ஆறுமாசத்துக்கு
ஒருமுறைதான் ஊருக்கு போவேன். எப்பப்ப போறேனா அப்பலாம் அந்த காமிக்ஸ்
பொட்டிய திறந்து படிப்பேன். அப்படியே பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வரும். நான்
ஊருக்குப் போக ஆர்வமா இருக்கறதும் இது ஒரு காரணம்.

"கேக்கறதுக்கே நல்லாருக்கே மேல சொல்லு மச்சி"

அப்படி ஒருமுறை ஊருக்கு போகும்போது என்னோட அறைல அந்த காமிக்ஸ் பொட்டிய
காணும். வீடெல்லாம் தேடினபோது கிடைக்கவேல்ல. நேசிக்கற பொருள் தொலஞ்சு
போனா எப்படி இருக்கும்? என்னோட பர்ஸ், மூணு மொபைல் காணாம போகும்போது
கூட எனக்கு பெருசா எந்த கவலையும் இல்ல. ஆனா இப்ப பொட்டிய காணும்னவுடனே
என்னால அழுகைய கட்டுப்படுத்தவே முடில.

அம்மாகிட்ட போய் கேட்டேன். ஒருமாதிரி தயக்கமான குரல்ல சொன்னா. இந்தமாதிரி
என்கிட்ட பேசினதேயில்ல. பாத்திரம் வாங்கறவங்கிட்ட போட்டு பாத்திரம் வாங்கிட்டதா
சொன்னா. அப்படியே தோட்டத்துக்கு ஓடிப்போயிட்டேன்.

பிறகு எந்தங்கச்சி வந்தா. "நான் காலேஜ் போயிருந்த சமயம் அம்மா இப்படி செஞ்சுட்டாங்க.
நான் கேள்விப்பட்டவுடனே அம்மாகிட்ட சொன்னேன். "இந்த புக்குலாம் கிட்டத்தட்ட அஞ்சு
வயசுலருந்து அண்ணன் சேகரிச்சுட்டு வரான்மா". இங்க வந்தா இதபடிக்காம இருக்க
மாட்டான். அடுத்தமுறை வரும்போது இத கண்டிப்பா தேடுவான் ஏன் இப்படி செஞ்சேனு
கேட்டேன்.

அம்மா பதறிட்டாங்க. உடனே இருஞ்சாலக்குடில இருக்க அத்தனை வேஸ்ட் பேப்பர்
கடைலயும் தேடினோம். கிட்டத்தட்ட ஒருவாரம் தேடியும் கிடைக்கல. அம்மா
இந்த காரியத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.

உடனே வீட்டுக்கு ஓடிப்போய் பாத்தேன். அம்மா அழுதுட்டு இருந்தாங்க. "தெரியாம
செஞ்சுட்டேன் என்ன மன்னிச்சிருடான்னு சொன்னா" புத்தகம் தொலைஞ்சு
போன வருத்தத்தோட அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டதும் என்னால அழுகைய
கட்டுப்படுத்த முடியவேல்ல. அந்த சம்பவத்துலருந்து அம்மா என் விஷயங்கள்ல
ரொம்ப கவனமா இருக்கபோதெல்லாம் காமிக்ஸ் பெட்டி தொலைஞ்சு போனதுதான்
ஞாபகம் வரும்.

"வுட்றா.. வுட்றா... இப்பலாம் ஆன்லைன்ல செமி போர்னோ காமிக்ஸ்லாம் வருது.
நாளைக்கு உன்னோட மெயிலுக்கு லிங்க்ஸ் அனுப்பி வைக்கிறேன். பாத்து எஞ்சாய்
பண்றா ஆனா "மிஸ்டு கால் குடுத்துடாத" (மிஸ்டு கால் ன் பதம் தெரியாதவர்கள்
தனியாக கேட்கவும்)

டேய் என்ன இருந்தாலும் அந்த பழைய காமிக்ஸ்ல வர்ற மாதிரி இருக்காதுடா

"ரப்சர் பண்ணாம கெளம்புடா" அவனவனுக்கு லவ் பெயிலியர் ஆச்சுன்னாதான் ஒப்பாரி
வெப்பானுங்க. இவன் என்னடான்ன கொத்து புஸ்தகம் (கொச்சுப் புஸ்தகம் இல்லிங்க)
காணாம போனதுக்கெல்லாம் சின்னபுள்ளயாட்டம் அழுதுகிட்டு.