எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 21, 2011

லெம்பு ரோடு கறுப்பு ரோஜா


சும்மா திகு திகுன்னு நமீதா உசரத்துக்கு இருப்பா மாப்ள
மாநிறந்தான் ஆனா அவ்ளோ அழகு
Black roseனு எழுதிருக்க கறுப்பு கார்லதான் வருவா
லெம்பு ரோட்லதான் எப்பவுமே பார்க் பண்ணியிருக்கும்
26 வயசுக்கு மேல இருக்கறவன ரிஜக்ட் பண்ணிடறாளாம்
ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான் என்று ரோபோ பாரில்
அமர்ந்தபடி 3 1/2 வெள்ளி பியரை அருந்திக்கொண்டிருந்த
20 வெள்ளி சம்பளக்காரனும் சும்மா அமர்ந்திருந்த
18 வெள்ளி சம்பளக்காரனும் பெருமூச்சொன்றை
விட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். அம்மூச்சின்
சிறு துகளொன்று சற்று தள்ளி ஏதோ ஒரு
அறையில் ஒப்பனையிலிருந்த கறுப்பு நமீதாவின்
அருகிலே செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன்
திரும்பிக்கொண்டிருந்தது.

Tuesday, January 11, 2011

19 டி.எம் சாரோனிலிருந்து

10, டவுனிங் தெரு எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானது 19 டி எம் சாரோன். இலக்கிய பரிச்சயம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த ஒரு முகவரி 19 டி.எம் சாரோன். அமீரகத்தில் பத்துக்கு பத்து அறையில் தனியனாக வசித்தபோது எனக்கு நாஞ்சில் நாடனும் முத்துலிங்கமும் அறிமுகமானார்கள். சதுரங்க குதிரை வாசித்த அந்த இரவு அடங்காத அழுகையாய் வெடித்து தனக்குள்ளே முடங்கிப்போனது. ஒரு நாவலின் மூலமாக இவ்வளவு மனவெழுச்சிகள் வாழ்வில் முன் கண்டிராதவை. பின்பு நாஞ்சில் நாடனின் அனைத்து நூல்களையும் தேடிக்கண்டடைந்து வாசித்து தீர்த்தது நினைவிலிருக்கிறது.

பின்பு ஒரு கல்வீட்டின் திறப்புவிழாவின் போது அறிமுகமாகி அவரின் ”நட்சத்திரங்கள் ஒளிந்து
கொள்ளும் கருவறை” வாசித்தபின் உறக்கமில்லாத ஒரு இரவை உண்டாக்கினார்.
ஏழுமலை ஜமா, சத்ரு, ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள் என்று அவர்
அறிமுகப்படுத்திய செந்தழல் மண்ணின் வெப்பம் வாசித்த அந்த இரவில் அறை வெப்பமாவதை உணர முடிந்தது. பிறகு அவரின் பிற படைப்புகளை தேடி வாசிக்க தேடினால் இப்போது கைகளின் 19 டி.எம் சாரோன் தவழ்கிறது இரண்டுக்கும் இடையில் சிலவருட இடைவெளிகள். இதில் தான் சந்த்தித்த கலைஞர்கள், நேசிப்பவர்கள், ஆன்மீகத்தேடல், குழந்தைகள் உலகம், யோகிராம் சுரத்குமாருடனான சந்திப்புகள், சமூகம், மார்க்சிய தேடல்கள் என விரிகிறது.



எப்படிப்பார்த்தாலும் இந்த கட்டுரைத்தொகுப்பைப் பற்றிய அறிமுகமாக இந்த எழுத்து அமையவேண்டும் என்ற என் முனைப்பு இரண்டாவது வரி தட்டச்சு செய்யும்போது காணாமல் போகிறது, மாறாக பவாவும் அந்த குடும்பமும் கண் முன்னே வந்துவிடுகிறது. வருவதை எழுதுவோம் என்றே எழுதுகிறேன்.

கவிதைகளை மைக் பிடித்து மேடையில் வாசிக்கும் சில கவியரங்கங்களை தொலைக்காட்சியிலும் நேரிலுமாக சில முறை கண்டு/கேட்டு கவிதைகளின் மேல் வெறுப்புற்றிருந்தேன். கவிதைகள் ஆசுவாசமாக மனதுக்குள் வாசிக்க மட்டுமே படைக்கப்படுபவை எனவும், நாதசுரத்தை வாசிக்கபோகும் முன் சீவாளியை பீப்பீ என ஒத்திகை பார்ப்பதுபோல் மைக் பிடித்து தட்டி, குரலெழுப்பி வரிகளை இரண்டிரண்டு
முறை வாசிப்பது மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணுவது என்பது என் எண்ணம்.

ஒருநாள் பகல்பொழுதில் பவாவின் கல்வீட்டின் மையத்தில் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சினிடையே தான் ஒரு கவிதை சொல்லவிரும்புவதாக பவா சொன்னார் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றை அவரின் கணீரென்ற குரலால் சொன்னார். கவிதை முழுக்க நினைவிலில்லை என்றாலும் கேட்டதை வைத்து கீழே தருகிறேன். பேருந்தில் ஏறி வாய்ப்பாடு, வரைபடம் போன்றவற்றை விற்கும் சிறுவனைப்பற்றியது,

உயிரெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள்
வாய்ப்பாடு
ஆனா ஆவன்னா
உலக நாடுகள் அவற்றின் தலைநகரங்கள்
இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள்
STD ISD கோட் நம்பர்கள்
உலக மேப்
இந்தியா மேப்
இப்படி எல்லா தகவல்களும் அடங்கிய இந்த புத்தகத்தின் விலை பத்தே பத்து ரூபாய்
வாங்கிக்குங்க சார் வாங்கிக்கு சார் என்று கூவியபடி வருகிறான். எவருமே
வாங்கவில்லை. இறங்கப்போகும் முன் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு அம்பது காசு
இருந்தா குடுங்கண்ணா என்று இறைஞ்சுவதாக முடியும்.

கேட்டு முடித்தபின் அனைவரும் சாப்பிட்டு முடித்த தட்டத்தை அப்படியே கையில் பிடித்தவாறு செய்வதறியாது அமர்ந்திருந்தோம்.யாரும் பார்க்காதவண்ணம் என் கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்தேன். கவிதை மிக சாதாரணமானதுதான். ஆனால் வரிகளுக்கேற்ற தாள லயத்துடனும் சோகத்துடன் அவர் முடித்த கடைசி வார்த்தையும் அதிர்ச்சியுற வைத்தது. என் கூற்றுப்படியே மிக ஆசுவாசமாக அந்தக்கவிதையை நான் வாசித்திருந்தால் கூட அவ்வளவு சுத்தமாக உள்ளிறங்கியிருக்காது. சிலருக்குத்தான் அந்த வசீகரமான குரல் கிடைக்கும். இதை தட்டச்சு செய்யும்போது கூட அவரின்
அந்த வாஞ்சையான குரல் என்னை கலங்கச்செய்கிறது.

கடந்த வருட புத்தக வெளியீட்டு விழாவின்போது 19 டி.எம் சாரோனிலேயே சில வாரங்கள்
தங்கி என்னாலான சிறு பங்களிப்பை தரமுடிந்தது மிகுந்த சந்தோஷத்தை தந்தது. ஆனால்
இந்த வருடம் என்னால் பங்குகொள்ள முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கடந்த
வருடம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என சாரோனின் மொட்டை மாடியில் பிழை திருத்தவும்
தட்டச்சு செய்யவும், பேச்சுமாக கழிந்தது. இந்த வருடம் அவை எல்லாவற்றையும் இழந்து
விட்டிருக்கிறேன். வம்சிக்காகவும் மானசிக்காவுமாவது சென்றிருக்கலாம். அவர்கள் மன்னிப்பார்களாக.

கடந்த வருடம் புத்தக சந்தையில் வேலுசரவணனின் தங்கராணி என்ற சிறுவர் நாடகத்துக்கான படங்களை வரைந்து தருவதாக சொன்ன நண்பர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. எனது ஊரில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார்.
பிரபலங்களை மட்டுமே கார்டூனாக கண்ட எனக்கு என் ஊர் மனிதர்களையும், நண்பர்களையும் கார்டூன் வடிவில் அவர் கடையில் வரைந்து வைத்திருந்தது
கண்டு திகைப்புற்றேன். சிறுவர் கதைக்கான சிறந்த படங்களை அவர் வரைய முடியும்
என்று எனக்குத்தோன்ற பவாவிடம் கேட்டேன் சனிக்கிழமை இரவு இருக்கும். பவா உடனே அவரை முடிந்தால் வரசொல்லுங்கள் நேரமின்மை ஒரு காரணம். நண்பர் துரை எழிலனுக்கு
அங்கிருந்தே தொலைபேசினேன். விஷயத்தை சொன்னதும் அரை மணி நேரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்கு பேருந்து ஏறினார். நள்ளிரவு வந்து சேர்ந்தார் குளிர்ந்த அந்த இரவில் அவரை அழைத்து வந்து சூடாக வாசித்து ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் எந்தவித
வரையும் உபகரணங்களும் இன்றி சாதாரண பேனாவினால் கோட்டோவியமாக வரைத்து தந்தார். அன்பினால் நிறைந்த அந்த குடும்பத்தின் சூழலில் இருந்து வெளியேற மனமின்றி எங்களுடனே தங்கி பிழை திருத்துவது, தட்டச்சு செய்வது, வாசிப்பது
நிலத்திற்கு சென்று வருவது என்று இரண்டொரு நாள் இருந்தார்.

கிளம்பிப்போகும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு வாசல்படி தாண்டி வெளியே வந்து பார்த்தவர் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார். வீட்டுன் வாயிலின் முன் அக்குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை நின்று வழியனுப்ப நின்றிருந்தனர். சென்றவர் அப்படியே நின்றுவிட்டார் மறுபடியும் வந்து அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றார். பிறகு தொலைபேசியில் இப்படி சொன்னார். நான் நெறய தெரியாதவங்க வீட்டுக்கு போயிருக்கேன் அதிகபட்சமா பாத்து பத்திரமா போப்பான்னுதான் சொல்வாங்க ஆனா யாரு யெவருன்னே தெரியாத எனக்கு ரெண்டொரு படம் வரைஞ்சு குடுத்ததுக்காக மொத்த குடும்பமுமே வழியனுப்ப வாசல்
வரைக்கும் வந்ததுமே எனக்கு ஒண்ணுமே புரியலய்யா அப்படியே கண்ணு கலங்கிருச்சு. உன் மேல எனக்கு முன்னாடி எந்த விதமான அபிப்ராயமும் இருந்ததில்ல ஒரு நண்பனா உன்ன தெரியும். ஆனா உனக்கு வாசிப்பு ஆர்வமும் எழுத்து ஆர்வமும் இருக்கும் இப்படி ஒரு குடும்பம் நட்பா இருக்கும்னு நெனச்சே பாக்கலய்யா. ரொம்ப பெருமயா இருக்கு கதிருன்னு
சொன்னார். எனக்கும் கூட!

19 டி.எம் சாரோனின் அறிமுகமாக எழுத எண்ணி அம்முகவரியுடனான நட்பை பகிரும் விதமாக இது அமைந்துவிட்டது. அம்முகவரிக்கும் இந்த எளிய வாசகனின் அறிமுகம் தேவையில்லாது என்பதுவும் கூட. ஒரு நல்ல கட்டுரையாளனைப்
பெறுவதற்காக ஒரு அற்புதமான நாவலாசிரியனை இந்த எழுத்துலகம் இழந்து விட்டது என்று நாஞ்சில் நாடனைப் பற்றி சொல்வார்கள். அதுபோல பவாவுக்கு ஏற்பட வேண்டாம் என்பது என் எண்ணம். மேலும் பிரத்யேகமாக நான் அவரிடம் கேட்டுக்கொள்ள ஒன்று இருக்கிறது. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறையின் அனைத்து கதைகளையும்
பவாவின் குரலால் ஒலி வடிவம் பெற்று ஒலித்தகடாக(சரியான பதம்தானா?!) வரவேண்டும் என்பது ஆசை.

புத்தக சந்தையில் கடை எண் 157, 158 ஆகியவை வம்சிக்கு. வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் அந்த எளிய மனிதனை அங்கு சந்திக்கலாம். இதமாக கைகுலுக்கலாம். அந்த குலுக்கலில்
ஆத்மார்த்த நண்பனின் பற்றுதல் இருக்கும்.

நூலின் பெயர்: 19 டி.எம் சாரோனிலிருந்து
விலை: 80 ரூபாய்.