எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, November 30, 2006

கார்த்திகை, மார்கழி மாத நினைவுகள்!

இந்த கார்த்திகை மாசம்னாவே கொஞ்சம் அதிகமான உற்சாகம் இருக்கும் ஏன்னா
நம்ம ஊரு கூட ஊட்டி லெவலுக்கு மாறிடும். காலையில் வாசல் தெளிக்குற பொம்பளைங்கள்ல இருந்து ,பால்கேன் தூக்கிட்டு போற ஆம்பளைங்க வரைக்கும்
இந்த ரெண்டு மாசத்துக்கு வித்யாசமா ஸ்வெட்டர், மங்கி குல்லா எல்லாம்
போட்டுகிட்டு வித்தியாசமா இருப்பாங்க! பார்க்கவே படு வித்தியாசமா இருப்பாங்க
சில தாய்க்குலங்கள் காலையில குளிரும்னு புத்திசாலித்தனமா ராவிலயே சாணி
தெளிச்சிட்டு காலம்பற சொகமா தூங்குவாங்க. ரொம்ப குளிருதேன்னு பாதிநாளு
குளிக்கற பழக்கமே இல்ல நம்மளுக்கு அந்தளவுக்கு சோம்பேறி இதுல நாள்
முழுக்க வீட்டு வேலை செய்யிற தாய்க்குலங்கள எதுக்குடா வம்புக்கு
இழுக்குறன்னு கேக்காதிங்க நான் சொல்றது ஸ்கூல், காலேஜ் படிக்குற
புள்ளைங்கள.

சென்னை மாதிரி சிட்டில பொறந்து வளர்ந்திருந்தேன்னா இந்த மாசத்துல கார்த்திக்
பைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்னு கச்சேரிக்கு போகலாம். வெத்தல
பொட்டில தாளம் போட்டு ரசிக்கிற கூட்டத்துக்கு நடுவில உக்காந்துகிட்டு நாமளும்
புரிஞ்சா மாதிரியே தாளம் போடலாம். என்னா செய்யிறது நம்ம ஊரு பட்டிக்காடா
போச்சு கோயில் ஸ்பீக்கர்ல போடற பாட்டுகள்தான் நம்மளுக்கு கச்சேரி, பஜனை
எல்லாமே.

பிடிக்குதோ பிடிக்கலையோ காலையில கார்த்திகை மாசத்து ஐய்யப்பன்
பாடல்களும்,மார்கழி மாசத்துல பெருமாள் கோயில்ல திருவிளையாடல் புகழ்
தருமியும் நம்ம தூக்கத்தை பதம் பாத்துருவாங்க. ஒருவிதத்துல அதுவும்
நல்லதுதான் காலையில அந்த குளிர்லயும் காலையில எழுத்திரிக்கறது கஷ்டமா
இருந்தாலும் உடம்புக்கு நல்லதாமே. பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு எவன் வீட்டு வைக்கபோரை இழுத்துகிட்டு வந்து பத்த வெச்சி குளிர் காயுற சுகம் காசு
குடுத்தாலும் கிடைக்காது. நெருப்ப பத்த வெச்சி சுத்திரும் உக்காந்துகிட்டு கையி,
காலு, அப்புறம் திரும்பி உக்காந்துகிட்ட காயிறது அடடா என்னா சொகம். குறிப்பா ரோட்டோரத்துல பத்த வெச்சோம்னா கொஞ்ச நேரத்துலயே நிறைய ஆளுங்க
சேர்ந்துருவாங்க அதுனால ஜாக்கிரதையா ஒதுக்குபுறமான இடத்துக்கு போயிடணும்.

இந்த குளிர் காலத்துல ஒரு வசதி என்னன்னா தம்மடிக்காத ஆளுகளுக்கு கூட
வாய்லருந்து புகை வரும். இதை வயதுக்கு மீறிய வளர்ச்சியுடைய வாலிபர்கள
சரியா பயன்படுத்தி அங்கனயே ஒரு தம்ம பத்த வெச்சி அடிப்பாங்க. அங்கருந்து
அப்படியே கும்பலா பசங்க ஒண்ணு சேர்ந்து ஆத்து பக்கமா குளிக்க போவோம்.
ஆத்துல தண்ணி பயங்கர சில்லுன்னு இருக்கும். லேசா தொட்டு பாத்துட்டு
குளிக்கலாமா? வேணாமான்னு அஞ்சு பத்து நிமிஷம் யோசிக்க வெச்சிடும் அந்த
அளவுக்கு சில்தண்ணியா ஓடும் இப்படி யோசிச்சுட்டு இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே வரமாட்டாங்க
ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்.

இருக்கறதுலயே ஜாலியான மாசம் மார்கழி மாசம்தான். ஏன்னு கேக்கறிங்களா? இந்த
மாசத்துல பாதி நாள் விடுமுறையா போயிடும் புது வருஷம் வேற வரும்,
அடுத்ததா பொங்கலும் வரும் ஒரே ஜாலிதான். இந்த மாசத்துலதான் பெரிய பெரிய கோலமெல்லாம் போட்டு வாசல்ல காலே வைக்க முடியாதபடி பண்ணுவாங்க.
கோலத்துக்கு நடுவில ஒரு பூவும் வைப்பாங்க. இதுக்காகவே காலையில எழுந்திரிச்சி குமரிகள் கோலம் போடுற ஏரியாவா பார்த்து நம்ம (கி)ராமராஜன் பாட்டு பாடி
லொல்லு பண்றது.

வாசலிலே பூசணிப்பூ
வச்சுப்புட்டா...
வச்சுப்புட்டா...
நேசத்திலே எம்மனச
தச்சுப்புட்டா...
தச்சுப்புட்டா...

ஒரு முறை எதுக்கும்மா இந்த மாதிரி கோலத்துக்கு நடுவில பூ வைக்கற
பழக்கம்னு கேட்டு வெச்சேன். உனக்கு தேவையில்லாத கேள்விடா இதுன்னு
சொல்லிட்டாங்க (தெரிஞ்சவங்க சொல்லலாம்) வந்தது கோவம். இனிமேல்
யாருவீட்டுலயும் இந்த பூ வைக்க கூடாதுன்னு, குப்பமேடு, வயக்காடு,
கரும்புதோட்டம்னு எல்லா இடத்திலயும் போயி இருக்குற பூ, மொட்டு
எல்லாத்தையும் பிச்சி எறிஞ்சிட்டு வத்துட்டோம். இது தெரிஞ்சி எங்க தெரு
தாய்க்குலங்கள் எங்க நாலு பேரு மேல நடவடிக்கை எடுத்தது தனிக்கதை.

பொதுவா மார்கழி மாசத்துல கோயில் எல்லாமே பிசியா இருக்கும். நம்ம ஊரு
சின்ன ஊரா போயிட்டதால சில பஜனைப்பாடல்கள ஒலிபெருக்கில போட்டுட்டு
பூசாரி தூங்க போயிடுவாரு ஊருமக்கள்ஸ் எல்லாம் காலையிலே முழிச்சிக்கிட்டும்ன்ற
நல்ல எண்ணம்தான். ஒரு காலத்தில திருவிளையாடல் படத்துல வரும் வசனங்கள் எல்லாமே அத்துப்படி ஏன்னா பெருமாள் கோயில் பூசாரிக்கு அந்த படம் ஒண்ணுதான் பக்திப்படமா போயிடுச்சி. ஒரு கதை வசனம் கேசட்டை வச்சே ஊரை எழுப்பி
விடறதுல கில்லாடி அவரு. முக்கியமா சிவாஜிக்கும் தருமிக்கும் நடக்குற அந்த
கேள்வி கேட்டு பதில் சொல்ற இடத்துல காதை கூர்மையா வெச்சிக்கிட்டு பசங்க நாங்க எல்லாம் கேப்போம். அப்படியே அந்த வசனத்தை உல்டா பண்ணி வகுப்பறையில
காமெடி பண்ணுவோம்.

இந்த கார்த்திகை மாசத்துல அரைகுறையா நடக்குற ஒரு நல்ல விஷயம் என்னன்னு
கேட்டீங்கன்னா மாலை போடுறதுதான். ஊருல இருக்குற பாதி அயோக்கியனுங்க
இந்த மாலை போட்டுருக்குற நாட்களில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க.
சிலர் மாலையும் போட்டுகிட்டு எல்லா வேலையும் செய்வாங்க, செய்யறதையும்
செஞ்சிட்டு மைக்ல " அறிந்தும் அறியாமலும்" னு ஒரு பாட்டு பாடி பாவத்தை
தொடச்சி போடற ஆளுங்கள நிறைய பேரை பாத்திருக்கேன். ஒரு மண்டலம் மாலை போடணும்னு ஒரு விதி இருந்தாலும் கோயிலுக்கு போகறதுக்கு முந்தி ஒரு
வாரத்துல நானும் மாலை போட்டேன்னு போடறது ஒரு விளம்பரமாவே
ஆகிப்போனது எனக்கெல்லாம் வருத்தமே. ஏன்னா மாலை போட ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பாரு கூட நாப்பது நாள் விரதமிருந்துதான் மலைக்கு போவாரு.

"ஏஞ்சாமி மாலைய கழட்டற மாதிரி யோசனை எதுவும் இல்லையா?" ன்னு போன
வருசம் எங்கய்யன பாத்து ஒருத்தன் கேள்வியே கேட்டுபுட்டான். எங்க ஊருப்பக்கம் பள்ளிக்கூட பசங்க மாலை போடறதுல ஒரு போட்டியே இருக்கும் ஏன்னா அந்த ஒரு மாசத்துக்கு வாத்தியார் கூட மாணவனை பவ்யமா சாமின்னுதான் கூப்பிடணும். அதுவுமில்லாம வீட்டுப்பாடம், தேர்வுல கம்மி மார்க், ஓவர்டைம் மாதிரி ஸ்கூல்
டியூஷன் இந்த மாதிரி சில பல இம்சைகள் அந்த தற்காலிக சாமிகளுக்கு இல்லை.
கொஞ்சம் முயற்சி பண்ணி ரிஸ்க் எடுத்தோம்னா மதியம் சீக்கிரமே வீட்டுக்கு
போயிடலாம். இத்தனை சலுகைகள எடுத்தாலும் மலைக்கு போயிட்டு திரும்பினதும் "ஆசாமி"யா ஆகிடறதால சேர்த்து வெச்சி வாத்தியாருங்க குடுக்குற ஆப்புகள
தாங்கிக்குற சக்தி இருக்கணும்.

இப்பவே கொஞ்சம் ஓவரா சுத்திட்டனோ, சரி பாகம் ரெண்டுன்னு அடுத்த பதிவில போட்டுறலாம்

கட்டக்கடேசியா ஒண்ணே ஒண்ணு.

செல்லமே படத்தில ஒரு காமெடி சீன். விவேக் மற்றும் விஷால் டீம் கிரிஷ்
கர்னாட் வீட்டுல ரெய்டு போவாங்க போயி கதவை தட்டுவாங்க. வேலைக்கார
ஆள் கதவை தொறந்து பதில் சொல்வாரு.

வே.கா: அய்யா பூஜையில இருக்கார்

விவேக்: இது மார்கழி மாசம், அய்யா பஜனைல இருந்தாலும் பாத்துட்டுதான் போவோம்.

Wednesday, November 22, 2006

ஹுர்ர்ர்ர்ர் ஹ்ர்ர்ர்ர்ர்ர்

குமரவேலு கொஞ்சம் எந்திரிப்பா!

ஒரு பத்து நிமிஷம் கேப்பு விட்டியன்னா நாங்க கண்ண அசந்துடுவோம். அப்பால நீ எப்டி வேணா விட்டுக்க.

இதெல்லாம் அவரு காதுல விழாதுங்க செந்தில் சார். கொஞ்சம் உலுக்கினாப்புல எழுப்புங்க அப்போதான் எந்திரிப்பாரு.

தினம் தினம் இவனோட பெரிய ரோதனையா போச்சே.

இவங்கூட மாரடிக்கணும்னு எழுதி வெச்சிருக்கு போல. என்னத்த செய்யிறது. பத்து மாசமா ராவுல தூக்கம் வராம கஷ்டபடுறது எனக்குதான் தெரியும். நான் வேல செய்யிற கம்பெனிலதான் இவனும் வேல செய்யிறான். ஆனா இவனுக்கு மட்டும் எங்கருந்து இந்த அளவுக்கு
சவுண்டா தூக்கம் வருதுன்னு தெரியல.

படார்னு கதவ தொறந்துகிட்டு விஜயகாந்து மாதிரி வீங்கி போன மொகத்தோட ஒருத்தர் வந்து சோபாவில உக்காந்திருக்காரு.

கண்ணுல பாதி தூக்கம் அப்படியே இருக்குது, விட்டா "ஓ" ன்னு அழுதுடுவாரு போலருக்கு.

நமக்கும் தூக்கம் வரல. கொஞ்சம் கிண்டித்தான் பாப்போமே.

என்னங்க ஆச்சு?

அட அத ஏன் கேக்குறிங்க சார்! பக்கத்து ப்ளாட்டுகாரனெல்லாம் ராவில என்னயா இந்த சத்தம் வருதுன்னு திட்டிட்டு போறான். அவனுக்கே அந்த மாதிரி தொந்தரவா இருக்குதுன்னா பக்கத்து கட்டில்ல இருக்குற எனக்கு எப்படி இருக்கும்?

கொஞ்சம் டிஸ்டர்பாதான் இருக்கும். கடுமையா வேல செஞ்சா இந்த மாதிரி வர்றது சகஜந்தான விட்டுத்தள்ளுங்க சார்.

ப்ரிட்டிஷ்காரனுக்கு வேல செய்ய தெரியாது ஆனா வேலைய எப்படி அடுத்தவங்கிட்டருந்து வாங்கணும்னு தெளிவா தெரிஞ்சவன் அவன் ஒருத்தந்தான் இந்த உலகத்தில. அந்த மாதிரி கம்பெனில வேல செய்யிறோம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரிதான் வேல. ஞாயமா பாத்தா
நானும் தூங்கணுமா இல்லயா? கொஞ்சங்கூட கூச்ச நாச்சமே இல்லாம இப்படி பண்ணா கடுப்பா ஆகுமா ஆகாதா?

அவர பாத்தாலும் பாவமாதாங்க இருக்கு, என்ன தெரிஞ்சேவா விடறாரு?

இப்படிதாங்க பாவம் பார்த்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.

அவரு மேல எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு படிக்கிற உங்களுக்கு இந்த சமயத்துல சொன்னாதான் கரெக்டா இருக்கும்.

நானும் அவங்களும் ஒரே ப்ளாட்டுலதான் தங்கி இருக்கோம் ஒரு ப்ரிட்டிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை செய்றாங்க. தூங்கினாதான் அவரு சவுண்டு பார்ட்டி முழுச்சிட்டிருந்தார்னா
சாந்தமான பார்ட்டி. தரையே அதிராத மாதிரி ஒரு நடை.

முகத்தை பாத்திங்கன்னா "அடப்பாவிகளா இந்த பச்ச புள்ள மேலயா இந்த பழிய சுமத்தறிங்க. இந்த பாவம் உங்கள சும்மா விடாதுடான்னு சொல்ல வெக்கிற அப்பாவி முகம்.

கிச்சன்ல பாத்திரம் வெளக்கும்போது கூட பாத்திரத்துக்கு வலிக்குமேன்னு பதவிசா தேய்க்குற பகுமானம்.

வெள்ளிக்கிழமைல துணிய தொவச்சி, காய வெச்சி, இஸ்திரி போட்டு பொறுப்பா வெச்சிப்பாரு.

ஆக்க பொறுத்தவன் ஆறவும் பொறுக்கனும்னு சொல்ற பழமொழிக்கேத்த மாதிரி சாப்பாடு செஞ்சவுடனே அவரோட மத்த ரெண்டு ரூம் மேட்ஸ் மாதிரி இல்லாம. பொறுமையா
நிதானமா சாப்பிட்டு தட்ட கழுவி சத்தமில்லாம வெப்பாரு.

கொஞ்சம் நேரம் எதுனா பேசிட்டு சிட்னி ஷெல்டன்ல ஒரு மணி நேரம் மூழ்கி முத்தெடுப்பாரு. எனக்கும் ஒரு டவுட்டு குமுதம், ஆனந்தவிகடன் படிக்கறச்சயே ரெண்டு கொட்டாவி வந்து ஆள இழுத்துகிட்டு போயிடுது. இந்த ஆளு மெய்யாவே படிக்கிறானா இல்ல படிக்கிற மாதிரி
பந்தா காமிக்கிறானான்னு.

ச்சேச்சே அப்படில்லாம் இருக்காது. விகடன்ல படிச்ச மொக்க ஜோக்கையே நாலு பேருகிட்ட சொல்லி சிரிக்கலன்னா நமக்கு தூக்கம் வராது. இந்தாளு இங்கிலிசு புக்கெல்லாம் படிக்கிறாரு ஆனா அத பத்தி நம்மகிட்ட மூச்சே விடறதில்ல.

ஒருவேள நம்மள ஞான்சூன்யம்னு நினைச்சிருப்பாரோ? அப்படியேதான் இருக்கட்டும். கேக்காம இருக்கற வரைக்கும் நல்லதுடா சாமி.

இப்படிப்பட்ட அனேக அருமையான விஷயங்கள் உள்ள ஒரு ஆள் தூங்கும்போது கன்னா பின்னா ன்னு விடற குறட்டை சத்தத்தால அவரோட இமேஜே டேமேஜ் ஆகிப் போச்சி. இவர்தான் அந்த குறட்டைக்கு சொந்தக்காரர்னு எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்.

இன்னும் ரெண்டு மாசத்துல ஊருக்கு போறார். வரும்போது மரியாதையா ஆபரேஷன் செஞ்சிகிட்டு வாய்யான்னு சொல்லி வெச்சிருக்கேன். அதுவரைக்கும் இதோ இந்த "பஞ்சு"தான் துணை சொல்லிட்டு ரெண்டு "இஞ்ச்"க்கு ரெண்டு காதுல இருந்தும் "பஞ்சு" எடுத்து போட்டாரு. இதையும் தாண்டி வருதேன்னு தாங்க எனக்கு கடுங்கோவமா இருக்கு அப்படின்னார்.

இப்படியே நாம் பேசிகிட்டு இருந்தோம்னா வேலைக்காகாது. போயி அவரை கொஞ்சம் "கேப்பு" விடச்சொல்லிட்டு தூங்கற வழிய பாருங்க சார்.

ஒரு நிமிஷம் செந்தில் சார்....

நான் தூங்கும்போது எதுனா கொறட்ட விடறேனா சார்?

"லைட்டா"

என்னாதிது வடிவேலு மாதிரி சொல்லிட்டு போறாருன்னு ஒரே கவலையா போச்சு எனக்கு. இத லைட்டா இருக்கும்போதே கட் பண்ணிறனும். இல்லைனா நம்மள வாட்ச் பண்ணி வேற
யாராச்சும் ஒரு பதிவ போட்டு இதே மாதிரி கலாய்ச்சிடுவாங்க.

விக்கி பசங்களா... ம்கூம் விக்கி பெரியவங்களா!!

எல்லாமே பெரிய பெரிய "தல"ங்க பேரு மட்டும் பசங்கன்னு
வெச்சிகிட்டாங்க.

இப்ப நமக்கு இதுவா முக்கியம். கொறட்டைய தடுப்பது எப்படி?
மூக்கையும், வாயையும் பொத்திகிட்டா வராதுன்னு யாரும் சொல்லிறாதீங்க.

நிஜமாவே கேக்குறேன். இதனால பாதிக்கப்பட்டவன் என்பதாலயும், யாரும் என்னால பாதிக்கப்படக்கூடாதுன்னு ஒரு அக்கறையிலயும் கேட்கிறேன்.

Friday, November 10, 2006

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு - 4

இந்த பதிவு எங்க ஊரு போலி டாக்டருங்கள பத்தி.

தலைப்ப பார்த்துட்டு எல்லாரும் வரணும்னோ ஒரு விளம்பரமோ கிடையாதுங்க. உண்மையிலயே இந்த மாதிரி சம்பவம் நடந்ததுங்க அதுவுமில்லாம கிராமங்கள் எல்லாத்திலயும் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் இருந்தாலும் ரெண்டு மூணு கம்பவுண்டர் டாக்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. மக்களும் அங்க போக வரத்தான் செய்யுறாங்க. அப்படி வேற வழியே இல்லாம நாங்க ஒரு போலி டாக்டர்கிட்ட போயி வைத்தியம் பாத்துகிட்டது ஒரு மறக்க முடியாத சம்பவம்.

பொதுவா இந்த மாதிரி டாக்டருங்களுக்கு வருமானமே ஒரிஜினல் டாக்டருங்ககிட்ட போக வழியில்லாம சீப்பா இங்க முடிச்சிக்கலாம்னு. இந்த மாதிரி டாக்டர்கள் முக்கால்வாசிப்பேரு ஹோமியோபதி என்று சொல்லப்படுகிற டாக்டருங்க. இவங்கள்லயும் ஒரிஜினல், போலிகள் இருக்காங்க. அதை ஈசியா கண்டுபிடிக்கலாம். எப்படின்னு கேக்கறிங்களா? போலி டாக்டர் கைதுன்னு செய்தி வந்தாலோ, போலி டாக்டர்கள தொடந்து கைது பண்ணிட்டு வராங்கன்னு டீவில செய்தி வந்தாவே போதும் இவங்க வெளில தொங்கிட்டு இருக்கற போர்டு, விளம்பர தட்டி எல்லாத்தையும் கமுக்கமா கழட்டி வீட்டுக்குள்ள வச்சிக்குவாங்க. கொஞ்ச நாள் அடக்க ஒடுக்கமா இருந்துட்டு சத்தம் ஓய்ஞ்ச பிறகு மறுபடியும் போர்டு போட்டு கல்லாவ தொறந்துடுவாங்க!

காதல் தோல்வி, கடன் தொல்லை, தீராத வியாதிக்காரங்க மருந்து குடிச்சிட்டாங்கன்னா அவங்கள இந்த மாதிரி டாக்டரு கிட்டதான் கூட்டிட்டு வருவாங்க. இவரும் என்ன மாயம் செய்வாரோ தெரியாது தொன்னூறு சதவீதம் உயிர் போகாதபடி பாத்து ஆள தேத்தி அனுப்புவாரு. இந்த டாக்டருக்கே டிமிக்கி குடுக்குற மாதிரி சில ஆளுங்க பூச்சி மருந்த ஒடச்சி வாயில ஊத்தாம காதுல ஊத்திக்கிற ஆளுங்க இருக்காங்க அந்த மாதிரி கேசுங்ககளுக்கு வேற வழியே இல்ல நேரா கபாலமோட்சம்தான் அவங்களுக்கு. எனக்கு இதுதான் புரிய மாட்டேங்குது காதல் தோல்வின்னாவே நேரா தற்கொலைதானா? அடுத்ததா ஒண்ணு தேடினா என்ன? இல்ல தேடாமலே விட்டாதான் என்ன?

அட! மேட்டர் வேற மாதிரி போயிகிட்டு இருக்கு!

பேக் டூ த பாயிண்ட்.

ஒரு நாள் ஆடிப் பதினெட்டுன்னு நினைக்கிறேன். ஒரு நாலஞ்சி வெட்டிப்பசங்க ஒண்ணு சேர்ந்துகிட்டு பக்கத்துல இருக்குற மலைக்கு ஜாலியா பைக்குல ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்ணு ப்ளான் போட்டு கிளம்பியாச்சு.

வரும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிச்சுது. எங்க குரூப்புல ஒருத்தன் மட்டும் மிஸ்ஸிங். எங்க எங்கன்னு தேடினா அவரு "காய்ச்சற" இடத்துக்கே போயி "சர்பத்" சாப்பிட்டுட்டு வந்திருக்காரு. உனக்கு எப்படி தெரியும் இங்க காய்ச்சுறாங்கன்னு கேட்டேன்?

அங்க லேசா புகை வந்தது அதான் என்ன புகைன்னு பாக்கலாமின்னு போனேன். அப்படியே உப்பு இருக்கான்னு பாக்க சொன்னாங்க அதான் பாத்தேன்.

ஏண்டா நாய உப்பு ஒரப்பு பாக்கறதுக்கு அது என்ன கோழி குருமாவா?

இங்க ஏற்கனவே அனுபவம் இருக்கு இல்லன்னா எப்படி உனக்கு அந்த இடம் தெரியும்?

இல்லடா சும்மா போனேன் குடுத்தானுங்க டேஸ்ட்பாத்தேன் அவ்ளோதான். பின்னாடி உக்காரு போலாம்.

வேணாம்டா செல்லம் நீ போதையில இருக்கறதினால பாதையில ஓட்ட மாட்ட அதுவுமில்லாம இது சாதாரண ரோடு கிடையாது மலைப்பாதை. எத்தனை முறைசொன்னாலும் கேக்கல கவுரவக்கொறச்சலா போயிடும்னு அவரே ஓட்டினாரு. அவன நம்பி யாரும் பின்னாடி உக்காரலை.

நினைச்சா மாதிரியே ரெண்டாவது பெண்டுல "குன்று முட்டிய குருவி" மாதிரி விழுந்து கிடந்தாரு பாதைக்கு இந்த பக்கம் விழுந்ததால ஆளு இருக்கான் அந்த பக்கம் போயிருந்தா எலும்பு கூட கிடைச்சிருக்காது.முட்டி மட்டும் கொஞ்சமா கிழிஞ்சி போயிருந்தது. கொறஞ்சது நாலு தையலாவது போட்டாகணும். ஒரு கர்ச்சிப் போட்டு கட்டி பின்னாடி உக்கார வச்சோம்.

ஒழுங்கா சொன்ன பேச்ச கேட்டுருந்தா இப்படி ஆகியிருக்காது சரி தொலஞ்சு போகுது விடுன்னு மலைய விட்டு கீழ இறங்குனா ஒரு ஆஸ்பத்திரி கூட இல்ல. கடைசில ஒரே ஒரு ஆஸ்பத்திரி திறந்து இருந்தது தினம் தினம் நாங்க நக்கல் அடிக்குற அந்த கம்பவுண்டர்தான் டாக்டர் வேஷத்துல இருந்தாரு.

ஆபத்துக்கு பாவமில்ல இவருகிட்டயே தையல்போட்டுகிட்டு போலாமின்னு போனோம். மாட்டுக்கு கோணி ஊசில குத்தறமாதிரி நாலு தையல் போட்டாரு.

சார் டேப்ளட் எதுவும் தேவையில்லயா? செப்டிக் ஆச்சின்னா பிரச்சினைதானன்னு அறிவாளித்தனமா ஒருத்தன் கேட்க அவரும் கீழ இருக்கற மாதிரி ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பருல எழுதினாரு.

"புண்ணுக்கு மருந்து கொடுத்து அனுப்பவும்"

இதப்போயி மருந்து கடையில கொடுத்தேன்னா மானமே போயிடும்!

நீங்களே சொல்லுங்க அவர் டாக்டர்தானா?

Sunday, November 05, 2006

என் நண்பனுடன் ஒரு நாள்.

சென்ற வார விடுமறை நாளில் என் பள்ளித்தோழனின்
அறைக்கு சென்றிருந்தேன். பத்தாம் வகுப்போடு
நின்றுவிட்டதுடன் விவசாயத்தை கவனித்துக்
கொண்டிருந்தவனை இங்கே பார்சல் பண்ணிட்டாங்க.
கொத்தனாராக வேலை பார்க்கிறான். மிக நீண்ட
நாட்களாக அழைத்துக் கொண்டே இருந்தான்.இங்க
வாடா மாப்ள,என் ரூமுக்கு எல்லாம் வரமாட்டியான்னு.
அதனால ஒரு விடுமுறை நாளை அவனுக்காக ஒதுக்கி
அவங்கூடவே இருந்தேன். அது ஒரு கேம்ப் நூத்துக்கனக்கான
நபர்கள் ஒரு வளாகத்திற்கும் தங்கியிருந்தார்கள் ஒரே
கம்பெனியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மாநிலத்தவர்கள்,
நாட்டவர்கள் வித்யாசமான நாளாகவும் அதே சமயம்
அவர்களின் கொடுமையான வாழ்க்கையையும் பார்த்தேன்.

நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் அவர்களின்
விடுதி. பேரமைதியாக இருந்தது ரொம்ப நேரம்
நானும் அவனும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அவன் பேச நான் கேட்க நேரம் போனதே தெரியலை.
எல்லாம் பேசி முடிக்கையில் எனக்குள்ளே ஒரு சோகம்.
அங்க நான் பார்த்தது அவனுடன் பேசியது எல்லாம்
சேர்ந்து கவிதையா எழுதுன்னு ஒருத்தன் உள்ள இருந்து
இம்சை பண்ணதினால உங்களுக்கு இந்த அவஸ்தைய
படிக்கணும்னு எழுதி இருக்கு. எழுதி முடிச்சிட்டு
என்ன தலைப்பு வைக்கலாம்ணு யோசிச்சேன் ஒண்ணும்
புரியல. அதனால வாசிக்கிற நீங்களே இதுக்கு
ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்க.

பாலையும் கடலாகும் (கண்ணீரால்)

கனவுகளுடனே வந்தோம் அதே
கனவுகளுடனே செல்கிறோம்
திரும்ப எங்களை இங்கனுப்ப ஒரு
காரணம் காத்திருப்பதை அறியாமல்.

தங்கையின் திருமணத்தை முடித்து
தனக்கான வழிதேடும்போது அம்மாவின்
மரணம் மறுபடியும் இங்கனுப்பும்.

வீட்டுத் திருமணங்களை வீடியோவில் மட்டுமே
பார்க்கும் பாக்கியமும், முதல் குழந்தையின்
அழுகையை தந்திக்கம்பியில் மட்டுமே கேட்கும்
அவலமும் எங்கள் வரம்.

பின்னிரவு விசும்பல்கள் பெருமூச்சோடு மடியும்
பின்வரும் காலங்கள் சுகம் மேலிட்டதாய் அமையும்
என்ற சுயதேற்றுதலை தினமும் சந்திக்கிறேன்.

என் போன்றவர்களின் கண்களில் எதை தேடுகிறேன்?
எதை காணுகின்றேன்?

முற்பருவ இளைஞன் முகத்தில் பருக்களோடு
காதலியை பிரிந்த வலியும்.

இரண்டு மாத விடுமுறைத்தழுவலின் மிச்சமும்
முறுவலின் சொச்சமுமாக அதிகாலை நித்திரையில்
தலையணையையணைக்கும் பக்கத்து
படுக்கைக்காரர்.

வாரயிறுதியில் நகரத்தில் "சுகங்கண்டு" திரும்பும்
இலவசமாக அறிவுரைகளை தெளித்த
அறைப்பெரியவரின் கண்களில் தெரியும் காமம்.

வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...

இன்றைய வேலையிறுதியின் கோடியில் முதுகறுக்கும்
வெய்யிலில்....

துணி வெளுக்கும்போது உடையில் தெரியும்
உப்புக் கோடுகளில்...

கழிவரைக்கு காத்திருக்கும்போது அவசரத்தில் பிடறி
மயிர் சிலிர்க்கையில்

எங்கும்....

எங்கும்...

எங்கும்...



என்றாலும்.

விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.

நாங்களும் வாழ்கிறோம்.