எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, August 30, 2006

தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

சென்னைல ஒரு மூணு மாசம் தங்க வேண்டி
வந்தது. ப்ராஜெக்ட் செய்ய வேண்டி தாம்பரத்தில
நண்பர்களோட தங்கினேன். கோடம்பாக்கத்துக்கும்
தாம்பரத்துக்கும் தினமும் ட்ரெயின்ல போய் வந்து
கொண்டிருந்தேன். காலையில மெட்ராஸ் க்றிஸ்டியன்
காலேஜ் வாசல்ல கொஞ்சம் ஜொள்ள சிந்திட்டு.
ட்ரெயின புடிச்சு அங்க மீனாட்சி வாசல்ல மீதிய
சிந்தறதுதான் தினமும் வேலையே. இதுக்கு கூடவே
நாலு பேர் கூட்டு. ரவுசுக்கு கேக்கவே வேணாம்
ஒரே கும்மாளமா போயிகிட்டு இருந்தது.

வீட்ல இருந்து கொண்டு வந்த காசை எங்கன
ஒளிச்சு வச்சாலும் சிரமப்படாம கண்டுபிடிச்சுடற
அருமையான நண்பர்கள். நம்மளுக்கு ஒளிச்சு வச்சி
பழக்கமில்ல, அவனுங்களுக்கு ஒளிச்சு வைக்கறத
கண்டுபிடிக்கறதில கஷ்டமில்ல. பர்சுல காசு
இல்லன்னா கடுப்புல தூக்கி எறிஞ்சிடுவானுங்க
அப்படி ஒரு பாசக்கார பயலுங்க. வழக்கமா
ட்ரெயின் பாஸ் பர்ஸுல வைக்கிறதுதான் வழக்கம்.
நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தன் காசு வைக்கிற
எடத்தில கண்டதை வச்சிருக்கான்னு சில்லறை
இல்லாத கடுப்பில தூக்கி எறிஞ்சிடுச்சி அதை தேடி
கண்டுபிடிச்சி பின்னாடி சொருவிகிட்டு நானும்
கிளம்பிட்டேன்.

இந்த ட்ரெயின்ல செக்கர் வந்துட்டான்னா சுலபமா
கண்டுபிடிச்சிடலாம் எப்படின்னா, டிக்கெட் எடுக்காத
வித்தவுட்டுங்க கதவோரமாவே நிப்பானுங்க எந்த
நேரத்திலும் எஸ்கேப் ஆகறதுக்கு. வாரத்துக்கு
மூணு நாள் செக்கர் வந்தாலும் இவனுங்க அஞ்சவே
மாட்டானுங்க. ஒருநாள் மீனம்பாக்கத்தில நிறுத்தும்
போது செக்கர் வந்துட்டாடு, வாசப்பக்கம் நின்னுகிட்டு
இருந்ததுல ஒரு மூணு தெறிச்சு ஓடினானுங்க, அதில
ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!

நமக்கு ஒண்ணாம் க்ளாசில இருந்து பின்னால உக்காந்து
பழக்கம் அந்த பாசத்தில பின்னாடி இருந்தேன்.
வரிசையா செக் பண்ணிகிட்டு நம்மகிட்ட வந்தாரு
டிக்கெட் எடுக்காதவனை விட்டுடுங்க, டிக்கெட்
எடுக்கறாம்பாரு அவனை புடிச்சி நோண்டுங்கன்னு
முனகிக்கிட்டே பர்ஸை பிரிச்சா பக்குன்னு ஆயிடுச்சி
உள்ளாற அது இல்ல. நெலவரம் கலவரம் ஆகறதுக்குள்ள
எப்படியும் இவங்கிட்டருந்து தப்ப முடியாது நந்தி
மாதிரி நிக்கறான். பாக்கெட்லயும் பத்து ரூபாய்க்கு மேல
ஒரு பைசா கூட இல்ல. அசடு வழியுது முகத்தில,
சாரி சார் பாஸ் கொண்டு வர மறந்திட்டேன் நாளைக்கு
எடுத்திகிட்டு வரேன்னு சொன்னேன்.

அவ்வளவு கேவலமான லுக்கு இதுவரைக்கும்
யாரும் என்கிட்ட காட்டல. எத்தன பேருடா கிளம்பி
இருக்கீங்க?எல்லாரும் என்னையே பாக்கறானுங்க
ரொம்ப அசிங்கமா போயிடுச்சி.

நீட்டா ட்ரெஸ் மட்டும் போடத்தெரியுதுல்ல
டிக்கெட் எடுக்கணும்னு அறிவு வேணாம்?
எவ்வள்வு சொல்லியும் கேக்காம ப்ளாட்பாரத்துக்கு
கூட்டி வந்துட்டாரு அந்த ஹமாம் சோப்பு.

டிக்கெட் எடுக்கலன்னா 75 ரூபா அபராதம்
தெரியும்ல. தெரியாது சார் எங்கிட்ட அவ்ளோ
காசு இல்ல. சரி எவ்வளவு வச்சிருக்க?
12 ரூபா இருக்கு சார். அப்போ 15 நாள்
ஜெயில்ல இருக்க வேண்டியதுதான். சார் சார்
வேணாம் சார் அபராதமே கட்டறேன். சாயந்திரம்
ரூம்ல இருந்து எடுத்துகிட்டு வந்து கட்டறேன்.
அதுவரைக்கும் இந்த வாட்சை வச்சிக்குங்கன்னு
அவர் கைல குடுத்தேன். உடனே அபராதத்துக்கான
ரசீதை எழுதி கூடவே அவர் பெயர், சர்வீஸ் நம்பர்.
கொடுத்தார். வாட்சை திருப்பணும்ல அதுக்குதான்.
தம்பி இன்னிக்கு பூரா எத்தனை முறை வேணாலும்
இந்த ரயில்ல போய் வரலாம்னு சொன்னாரு.

மனசனுக்கு எவ்வளவு நக்கல் பாருங்க. மூடு
அவுட்டாயி ப்ளாட்பாரத்து பெஞ்ச்ல உக்கார்ந்தேன்.
எனக்காகவே காத்திட்டிருந்தா மாதிரி ஒருத்தன்
பின் பெஞ்சுலருந்து எழுந்து உக்காந்தான்.

என்னா சார் என்ன மாதிரிதானா நீயும்னு கேட்டுகிட்டெ
பக்கத்தில வந்தான். நான் செஞ்சது இருக்கட்டும் நீ
என்னடா செஞ்சே அத சொல்லு முதல்ல.

ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?

இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.

ம்ஹூம் இவங்கிட்ட எல்லாம் அசிங்கப்படணும்னு
எழுதி இருக்கு போல.

ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.

Monday, August 28, 2006

வெற்றி பெற்றவர்களுக்கு...

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களுக்கு
எனது ஊக்கங்கள். என்னுடைய படைப்பையும் முதல்
பத்து இடங்களில் இடம்பெற்றிருந்ததே எனக்கு
வியப்பாக இருக்கிறது. மிகச்சிறந்த படைப்புகளும்
பின்னுக்கு சென்றிருந்ததையும் உணர முடிகிறது.
தோல்வி ஒன்றும் புதிதில்லை என்பதால் சகஜமாக
எடுத்துக்கொண்டேன். சமீபமாகத்தான் நான்
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்தேன். இந்த சில
மாதங்களிலேயே நான் பெற்ற நண்பர்கள் ஏராளம்.
இதையே பெருமையாகவும் நினைத்துக் கொள்கிறேன்.
அடுத்த மாத தேன்கூடு போட்டிக்கு எழுத தயாராக
இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Wednesday, August 16, 2006

2. யார் இவர்?

சென்ற பதிவில் யார் இவர்? என்று ஒரு
பதிவு எழுதி இருந்தேன் அதன் தொடர்ச்சி....


இவர் எல்லா அரசியல் தலைவர்களும் பழக்கம்
என்றாலும் மிக மிக நெருக்கமானவர் அண்ணா!
அறிஞர் முதல்வரானதும் சென்னையில் உலக தமிழ்
மாநாடு நடத்தப்பட்டது. தமிழறிஞர்கள் பலருக்கும்
கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது! தேவாரம்
பாடிய திருநாவுக்கரசருக்கு மட்டும் இல்லை!
கொதித்துப் போனார் இவர். அண்ணாவிடம்
சென்று, என்ன? அப்பர் பெருமான் தமிழ் வளர்க்க
வில்லையா? அவருக்கு ஏன் சிலையில்லை?" என
எகிறினார். அதற்கு அண்ணா புன்சிரிப்புடன்,
"மரியாதைக்குரிய கவிஞர்களுக்கு மட்டும்தான்
கடற்கரையில் சிலை வைக்க முடிவெடுத்தோம்!
அதனால்தான் அப்படி" என்றார். இவர், கண்கள்
சிவக்க "என்ன? அப்படியானால் அப்பர் பெருமான்
மரியாதைக்குரியவர் இல்லையா?"

"இல்லை... அவர் வழிபாட்டுக்குரியவர்! அவருக்கு
கோயிலில் சிலை வைப்பதுதான் சரியானது"
அண்ணா அமைதியாக சொல்ல, இவர் நெக்குருகிப்
போனார். கண்களில் சுலபக்குளம்! அண்ணாவை
ஆரத்தழுவிக்கொண்டார்! பெரியாரின் சீடரான
அண்ணாவிடம் இத்தகைய தமிழ் பக்தியுடன்
தெய்வீக பக்தியும் எதிபார்த்திருக்கவே இல்லை
அவர்! 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்'
என்று அண்ணா பேச காரணமும் இவர்தான்.

இந்திரா பிரதமரானதும் கிராமங்களை வங்கிகள்
தத்தெடுக்கும் முறையை புகுத்தி கிராமங்களுக்கு
செழிப்பு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
அவரை இதற்கு தூண்டியது இவரின் நிர்வாக
முறைதான்! இவரின் ஊரிலும், அருகில் உள்ள
கிராமங்களில் உள்ள அத்தனை குடும்பங்களும்
தன்னிறைவு அடையும் வண்ணம் பாரததிலேயே
முன் மாதிரி கிராமங்களை ஏற்படுத்தினவர் இவர்.
பெரிய அதிகாரிகளும், பல மாநிலங்களில் இருந்து
வந்தும் பார்த்துவிட்டு இவரின் நிர்வாகத்தை
மெச்சியிருக்கிறார்கள்.

பட்டிமன்றங்களின் நாயகன் என்றால் அது இவர்தான்!
விடுதலை விரும்பி, தா.பாண்டியன், மாயண்டி பாரதி,
போன்ற கடவுள் மறுப்பு பேச்சாளர்களையும் கோயில்
மேடைகளுக்கு கூட்டி வந்தவர். அதுமட்டுமா? ஆத்திக
ஜனங்களிடம் கைதட்டலும் வாங்கி தந்தவர். பட்டி
மன்ற தலைப்புகளையும் "அவள் பத்தினியா இவள்
பத்தினியா" என்பதிலிருந்து மாற்றி சமூக சீர்திருத்த
கருத்துக்களை கருப்பொருளாக எடுத்துக்கொண்ட
பொதுவுடமைவாதி சாமியார்.

எமர்ஜென்சி நேரம்! இவரை மிசாவில் கைது செய்வதா
வேண்டாமா என்ற குழப்பத்தில் மத்திய அரசு
அதிகாரிகள்! எதிகட்சிகாரர்கள் எல்லாம் கைது
செய்யப்பட்டு சிறையில்! இவரோ தனது தூள் பரத்தும்
பட்டிமன்றங்களை மூலை முடுக்கெல்லாம் நடத்திக்
கொண்டிருக்கிறார்! ஆன்மீக அன்பர்களும்,
பக்தர்களும் கூட "நிலைமை சரியில்லை" பேச
வேண்டாமே என்றனர். ஆனால் இவரோ கேட்கவில்லை
இவரின் சொற்பொழிவென்றால் கூட்டமும் ஏறுக்கு
மாறாய் வழக்கத்தை விட நாலு மடங்காய் குவிகிறது
ரகசிய போலீசும் ஏகமாய் குவிக்கப்பட்டு கண்
காணிக்கப்படுகிறது. மதுரையில், நேரு ஆலால
சுந்தர கோயிலில் பட்டிமன்றம்! சிக்கலாக பேசினால்
மேடையில் வைத்தே கைது செய்யலாம் என்று
என்று காத்திருந்தார் டி.எஸ்.பி. கோயில்
நிர்வாகிகள் முகத்தில் பீதி!. இவர் பேச எழுகிறார்!

"மனிதன் தூங்க செல்லும்போதுதான் அன்று
நடந்ததை எல்லாம் யோசிக்கிறான்! பட்டிமன்றங்களை
இரவில் நடத்துவதே அதற்கு தான்... படுக்கைக்கு
செல்வதற்கு சமீபத்தில் கேட்ட பேச்சு அதுதான்
என்பதால் சிந்தனையளவில் பாதிப்படைவான்!
யோசிப்பான்... தெளிவு காண்பான் என்பதற்காக
தான்... பட்டி மன்றங்களை இரவில் நடத்துவது!

ஓகோ ... இவ்வளவு அபாயம் உள்ளதோ இதிலே?
என்று சுதாரித்து பட்டிமன்றம் தேவையா என்றே
கூட பட்டிமன்றங்கள் நடக்கலாம் எதிர்" காலத்தில்
என்று பேச சூட்சுமமான கூட்டம் புரிந்து கொண்டு
விண்ணதிர கைதட்டுகிறது! கலவரமான கோயில்
நிர்வாகிகள் அவசரமாக திரும்பி டி.எஸ்.பி.யின்
ரியாக்ஷன் என்ன என்று கவனிக்கிறார்கள்,
தன்னை மறந்து அவரும் கைதட்டி கொண்டு
இருக்கிறார்.

அவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள்.
1994ல் வெளிவந்த ஒரு இதழில் படித்த
செய்தி. இப்போதுள்ள சாமியார்களுக்கும்
அடிகளாருக்கும் இருக்கும் இடைவெளியை
நினைத்து பார்த்து வியந்தேன்.மேலும்
இவரின் எளிமை என் மனதை கவரவே
பதிவாய் போட்டுவிட்டேன்.

Tuesday, August 15, 2006

1. யார் இவர்?

இவரை பற்றிய சுவையான தகவல் கீழே. ஆனால் யார்
என்று குறிப்பிடவில்லை. நீங்களே கண்டுபிடியுங்கள்,
அப்போதுதான்சுவாரசியமாக இருக்கும்.

முதன் முதலாக மேல்சபை உறுப்பினரான ஆன்மீகவாதி
இவர்தான். இவரை தேர்ந்தெடுத்தவர்களோ 'தெய்வம்
இல்லை' என்று முழங்குபவர்கள்! இவரோ பழுத்த
ஆத்திகர். 'ஓநாயின் பசியும் தீரவேண்டும்... ஆடும்
உயிரோடிருக்க வேண்டும்' என்கிற எசகு பிசகான
கொள்கையை வாழ்க்கையின் கடைசி விளிம்பு வரை
கடை பிடித்தவர். ஆத்திகர், நாத்திகர் என்ற இரு
துருவங்களுக்கும் வேண்டியவராக இருந்த ஒரே நபர்
இவர்தான்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடன் பொது
உடைமை மாநாட்டு மேடையில் காலையில் பேசினார்.
அதே தினம் மாலையில் பெரியார், அண்ணா கலந்து
கொண்ட வகுப்புரிமை பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு
கொண்டார். இரவு கோயில் திருவிழா ஒன்றில்
காமராஜ் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு
நிகழ்த்தினார். மூன்றும் ஒரே தினத்தில் நடந்தது!.
ஜிவா, அண்ணா, காமராஜ் மூன்று பேரும் மூன்று
வெவ்வேறு களன்களின் தளபதிகள்! மூன்று பேருக்குமே
வேண்டியவராக இருந்த ஒரே நபர் இவர்தான்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் குதித்த போது
மாநிலமே ஸ்தம்பித்தது. 'அரசியலில் இவரா' என்று
தேசம் முழுக்க கேள்விக்குறி...! மொழியை காப்பதற்காக
துறவை கூட துறக்க சித்தமாயிருந்த இவரை பார்த்து
ஆச்சரியபடாதவர்கள் இல்லை சொல்லப்போனால், இவர்
கலந்து கொண்டதால்தான் அந்த போராட்டத்திற்கே ஒரு
வெகுஜன அங்கீகாரம் கிடைத்தது! அதுவரைக்கும்
மொழிப்போராட்டம் என்னவோ ஆத்திகர்களுக்கு
சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற மாயையை
உடைத்தார். சமயவாதிகள் முணுமுணுத்தபோது
"அப்பரும் அருணகிரிநாதரும் போற்றி பாடின
தமிழுக்காக தான் நாமும் போராடுகிறோம். அந்த
மொழிக்கு ஆபத்து வரும்போது நம்மை விட போராடுகிற
உரிமை யாருக்கு உண்டு?" என்று கேட்டு அவர்களது
வாயை அடைத்தார்.

ஆன்மீக மேடைகளில் சுலோகங்களும், தேவாரமும்,
திவ்ய பிரபந்தமும் பாடப்படுவது தான் வழக்கம்! முதன்
முறையாக அதனை மாற்றி பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரத்தையும், கண்ணதாசனையும், ஸ்டாலினையும்,
லெனினையும் மேற்கோள் காட்டினது இவர்தான்! இந்த
அதிரடி செயலை பார்த்ததும் பழமைவாதிகளுக்கு
மூச்சடைத்தது. இவருக்கு எதிர்ப்போ எதிர்ப்பு. ஆனால்
இவர் அசைந்து கொடுக்கவில்லை.

மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட இவரை கைது
செய்ய அரசு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்
ராஜேந்திரன் கலங்கி போனார். தினசரி தான் வணங்கி
விட்டு வரும் மாமனிதரை கைது செய்வதா? மறுத்து
விட, கோபமான காங்கிரஸ் அவரை வேறு ஊருக்கு
மாற்றியது! புதிதாய் வந்த ஆட்சியரும் இவரை கைது
செய்ய தயங்கினார். கிராம மக்களையும் மீறி இவர் மீது
நிழல் கூட பட முடியாதே! நிலைமையை உணர்ந்த இவர்
தானாக போய் சென்று நீதிமன்றத்தில் சரணடைந்து
ரூ 350 அபராதம் கட்டினார். அண்ணா முதல்வரானதும்
அந்த தொகை திருப்பி தரப்பட்டது.

நாளை தொடரும்...

Friday, August 11, 2006

களத்து வீடு - தேன்கூடு சிறுகதை போட்டிக்காக...

களத்து வீடு - தேன்கூடு மற்றும் தமிழோவியம் இணைந்து நடத்தும் சிறுகதை போட்டிக்கான எனது படைப்பு.


டேய் களம் எவ்வவளவு பெருசா இருக்கு ஏண்டா இவ்வளவு சின்னதா ரவுண்ட் அடிக்கிற?

அப்பா என்ன சொன்னாரு, ரெண்டு களத்தை சேத்தாப்பல
முழுசா 10 ரவுண்ட் அடிச்சுஅம்பது தண்டால் எடுக்கணும்னு சொன்னாருல்ல.

எனக்கு எழரை வெளிய இல்லடா வீட்டுக்குள்ளயே என் தம்பியா வந்து
பொறந்து இருக்கு, என்று நினைத்தபடியே ரவுண்டை பெரிதாக்கி ஓடினேன்.

எல்லாம் என் தப்பு ஸ்கூல கட் அடிச்சிட்டு பசங்களேட அருவில குளிச்சுட்டு
வந்ததுக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும். மேக்கொண்டு ட்யூசன் பீஸையும்
புஸ்வானம் பண்ணா சும்மா விடுவாங்களா?

மொத்தம அஞ்சு பேர் கிளம்பி இருக்கானுங்க சார், பைய பின்னாடி இருக்கற கடையில
பொட்டி கடையில பொட்டுட்டு போயிருக்கானுங்க. சாதாரணமா அந்த அருவில குளிக்கவே
பயப்படுவாங்க, இவனுங்க ஒரு நாள் முழுக்க கூத்தடிச்சுருக்காங்க, இதுல பீடிபழக்கம் வேற.

இதெப்படி தெரிஞ்சுது? நம்ம கும்பல்லயே எவனோ எட்டப்பனுக்கு சொந்தக்காரன் இருக்கான்.

கெமிஸ்ட்ரி டீச்சர் நல்லாவே புகைய போட்டாங்க, அப்பா எள்ளும் கொள்ளும் வெடிக்கற
மாதிரி மொறைக்கறாரு.

ச்சே, நம்ம நேரம் ரத்தினம் சார் இன்னிக்கு லீவு, அவர் இருந்தாருன்னா இந்த சின்ன
விஷயத்துக்கு பூதக்கண்ணாடி போட விட மாட்டாரு. இந்த கொசு என்னடான்னா புகை மேல
புகையா போட்டு கலங்கடிக்குது.

அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?, உலகத்தில இல்லாத தப்பு, ஒருநாள் கட் அடிச்சது தப்பா?
இதுக்கு போய் இவ்ளோ பில்டப் தேவையில்லயே என்று நினத்தபடியே தலையை நிமிர்த்தி
கொசுவை பார்த்தேன். இப்பவோ அப்பவோ மூக்குலருந்து சரிஞ்சி விழுந்துடுற மாதிரி ஒரு
கண்ணாடி, ஒட்டாத கலர்ல. அதை பாக்க பிடிக்காம தலையை திருப்பினா காந்தி தாத்தா
நக்கலா சிரிக்கற மாதிரியே இருக்கு,

செஞ்சது தப்புதாண்டா அப்படின்னா ஹெட்மாஸ்டர் ரூம் முன்னால முட்டி போடுங்கடான்னா
போட மாட்டேங்குறானுங்க, இந்த வயசுலயே கவுரவம் பாக்குதுங்க.

நான் முட்டி போடலாம்னுதான் டீச்சர் சொன்னேன், இவந்தான் வேணாண்டா நம்ம க்ளாஸ்
பொண்ணுங்க வந்து போற இடம், அசிங்கமா இருக்கும்னு , ஆவறது ஆகட்டும்
பாத்துக்கலாம்னு சொன்னான்.

முருகன் அப்ரூவரா மாறிட்டான்.

அடப்பாவி, இப்படியாடா போட்டு குடுப்பே நீ. துரோகி.

இந்த ஒரு முறை மன்னிச்சுருங்க மேடம், இனிமேல் ஒழுங்கா இருப்பான். அப்பா
கெஞ்சினார்.

அப்படி என்னடா தப்பு செஞ்சே, அப்பா இவ்ளோ கோவமா இருக்காரு, அம்மா கேட்டாங்க.
எனக்கு சொல்ற வேலையே வைக்காம தம்பியே ரொம்ப சந்தோஷத்தோட விலாவாரியா
சொல்லிட்டான்.

நீ செஞ்ச தப்புக்கு என்ன செய்யலாம்?, நீயே சொல்லு. அப்பா கேட்டாரு,

இனிமேல ஸ்கூல் கட் அடிக்காம ஒழுங்கா படிச்சு மொத மார்க் வாங்கறேம்பா.

இதையே எப்பவுமே சொல்ற.

ஒழுக்கத்தை முதலில் கத்துக்க., பின்னாடியே எல்லாம் வரும். அதனால நாளைல இருந்து
காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சி, களத்தை பத்து ரவுண்ட் அடிச்சுட்டு அம்பது தண்டால்
அடி. இதையாவது ஒழுங்கா செய்றியா பாப்போம்.

இதுக்கு ரெண்டு அடிச்சுருக்கலாம், பத்தாததுக்கு இவண் எனக்கு சூப்பர்வைசரா? என்று
தம்பிய பாத்தா, அவன் முகத்தில அப்படியொரு சந்தோஷம்.

டேய் கவி அவன் சரியா செய்யறானன்னு பாத்து என்கிட்ட சொல்லணும் புரியுதா?

சரிப்பா.

ரெண்டு கும்பகர்ணனையும் அஞ்சு மணிக்கே எந்திருக்க வைக்கணும்னு அப்பாவோட ப்ளான்,
ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்ச சந்தோஷம் அவருக்கு, இந்த மாங்கா அது தெரியாம
நமுட்டு சிரிப்போட பாக்குது.

அந்த தண்டனைதான் இப்போ நடக்குது இவனோட காவலுடன்.

என்னடா குமாரு, அஞ்சு மணிக்கே எந்திரிச்சி எக்ஸர்சைஸ் பண்றே? பால் கேன் உடன்
சைக்கிளை தள்ளியபடி வந்தான் செல்வம்.

போடா போய் பால சொசைட்டில ஊத்திட்டு வேலைய பாருடா, வந்துட்டான் வேதனைய கிளப்ப.

அது ஒண்ணும் இல்ல செலவண்ணே என்று விலாவாரியா விளக்கம் கொடுக்கறாரு சூப்பர்வைசரு.

நீ ஒருத்தன் போதுண்டா எனக்கு. இது எதிலயும் காதில வாங்காத மாதிரி என் ஓட்டத்தை
தீவிரப்படுத்தினேன்.

அட இந்த கிளி இவ்ளோ நாளா வீட்டுக்கு பின்னால இருக்குதா, நான் தினமும் பாக்குற கிளி
பட்டு போன தென்னை மரத்தில இருந்து சிறகை விறிச்சு கீச்சு கீச்சு னு சத்தமெழுப்பியபடி
பறந்தது.

பயலுக்கு புத்தி வந்துருச்சா, பல்லு குச்சியோட நாடாரு நக்கலா பார்த்தபடி போறாரு.

சரியா எண்ணுனியா, பத்து முடிஞ்சுடுச்சி தெரியும்ல, தண்டாலுக்கு தயாரானேன்.

கிழக்கிலிருந்து கதிரவன் தலையை நீட்ட எத்தனித்தான். செந்நிற வானத்திலருந்து சூரியன்
மெல்ல மெல்ல வெளிவரும் அற்புதக்காட்சி. தினமும் இப்படிதான் வரும்போல. எவ்ளோ
அழகா இருக்கு, தினமும் பார்க்கணும் மனதி குறித்து கொண்டேன்.

நெல்லை அரை அரை மூட்டையா கட்டி சைக்கிளில் வைத்து தள்ளியபடி வந்தார் ஒரு
முதியவர். நெல் உலர வைக்க காலையிலேயே இப்படி நிறைய பேர் வருவாங்க.

தாத்தா இப்படி கொடுங்க நான் தூக்கிட்டு போறேன் என்று அவரிடமிருந்து வாங்கி
களத்தின் நடுவே கொட்டி, சாக்கை உத்றி அவரிடம் கொடுத்தேன். மொத்தம்
பத்து அரை மூட்டை.

ரொம்ப நன்றி தம்பி.

ஏன் தாத்தா உங்க பசங்க யாரும் இல்லையா?, வயசான காலத்தில ஏன் இப்படி
கஷ்டபடுறிங்க.

பதிலேதும் சொல்லாமல், சிரித்து கொண்டே போய்விட்டார்.

அடடா இன்னிக்கு பொழுது எவ்வளவு அழகா விடிஞ்சு இருக்கு!. அழகிய கிளியின் சத்தம்,
ரம்மியமான காலை இளந்தென்றல், மெல்ல குளிரை விலக்கும்படி கிழக்கிலிருந்து சூரியன்
வெளிவந்த காட்சி, வயோதிகருக்கு செய்த உதவி, அவரின் நன்றி.

அப்பா நமக்கு நல்லதுதான் செஞ்சு இருக்காரு. நாமதான் அவர் எது சொன்னாலும்
தப்பாவே எடுத்துக்கறோம் போல இருக்கு.

குளித்து முடித்து உடை மாற்றினேன். அப்பா சாப்பிட்டு போயிட்டாராம்மா?
இப்போதான் போறாரு கண்ணு. அம்மா இப்படிதான் அழைப்பாள்.

என்ன சாப்பாடு?, இட்லிடா கண்ணு. என்னான்னு தெரியலனா பயங்கரமா பசிக்குது.

பள்ளி விட்டு மாலை வீடு திரும்பினேன்.

களத்தில் காயவைத்த நெல்லை வாரிக்கொண்டிருந்தார் தாத்தா. கூடவே ஒரு கிழவி
மனைவியாக இருக்க வெண்டும்.

இந்த தண்ணிய கொண்டுபோய் அவர்கிட்ட கொடு காலையிலருந்து ரொம்ப கஷ்டபடறாரு.
அம்மா தண்ணி சொம்பை கொடுத்தாள்.

அந்த கிழவிய கூப்பிட்டு குடும்மா, பாவம்டா கொண்டு போய் கொடுடா.

கொடுத்தேன்.

என்னமோ தெரியலை அவரை பார்த்தவுடனே மனசுக்கு சினேகமா மனசுக்கு சினேகமா
வந்துட்டாரு. அப்படி ஒரு நிதானம். ஒவ்வொரு வேலையும் மிக நேர்த்தியா செய்யறது
அவர் உடம்பை பார்த்தா வாலிபத்துல நல்ல உடற்கட்டோட இருந்துருப்பருன்னு
தெரிந்தது.

அவர் சாக்கை விரித்து பிடிக்க முறத்தால் நெல்லை வாரி சாக்கில் கொட்டினேன்.
சிதறிய நெல்மணிகளை துடைப்பத்தால் பெருக்கி கூட்டினாள் கிழவி.

சணலை கோணி ஊசியில் சொருகி அழகாக பின்னலிட்டபடி மூட்டையாக கட்டினார்.
இவ்ளோ நேரம் கிழவனும் கிழவியும் ஒரு வார்த்தை கூட பேசலியே ஏன்?, மனதிற்குள்
ஒரு கேள்வி எழுந்தது. சண்டையா இருக்குமோ, இருக்கும் இருக்கும், நம்ம ஊருல
புருசம் பொண்டாட்டி சண்டைக்கா பஞ்சம்.

உங்கம்மா மாதிரியே தங்கமான குணம்பா உனக்கும், வாழ்த்திவிட்டு சொம்பில் இருந்த
தண்ணீரை குடித்தார்.

தம்பி, நாளைக்கு உன்னோட உதவி தேவைப்படாதுப்பா, கட்டை வண்டிக்கு சொல்லிட்டேன்
இங்கிருந்து அப்படியே வண்டில ஏத்தி நேரா மில்லுல கொண்டு போய் அரைச்சு வீட்டுக்கு
கொண்டு போயிடுவேன். காவலுக்கு நான் இங்கதான் படுத்துக்குவேன்.

வரேன் தாத்தா, சொம்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன்.

ஏம்மா, கிழவன் கிழவிக்குள்ள சண்டையா?, ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லயே
அம்மாவிடம் கேட்டேன்.

கண்ணு நீ நினைக்கற மாதிரி அவங்க ரெண்டு பேரும் புருசன், பொஞ்சாதி இல்ல.

பின்ன என்ன உறவு?

அது அவரோட தங்கச்சி முறை வேணும், என்னது தங்கச்சியா? ஆச்சரியம் மேலிட
கேட்டேன். ஆமா அவங்களுக்கு பசங்க இல்லயா?

பிள்ளையே இல்ல.

கிழவிக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் குழந்தையே இல்ல, தங்கச்சிக்கு குழந்தை
பிறக்கலியே நாம எப்படி கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கறதுன்னு கல்ய்யானமே
பண்ணிக்கலை. இந்த நேரம் பாத்து கிழவியோட புருசன் வேற ஒருத்தியோட ஓடிப்
போயிட்டான். தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு இவரும் கல்யாணமே
பண்ணிக்கலை. அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கு கிழவிய கண் கலங்காம
பாத்துக்கறாரு .

இந்த காலத்தில இப்படியெல்லாம் இருக்கா, கிழவன் என் மனசுல பெரிய அளவுல
இடம்பிடிக்கறார்.

வயசாயிடுச்சு இல்ல அதான் அவ்வளவா பேசிக்கறது இல்ல.

நம்ம சேகரண்ணன் இருக்காரே, மொத கல்யாணத்தில குழந்தை பிறக்கல, இதுல
ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்தாரு, அதிலயும் பொறக்கல,
தினமும் சுதாக்காவுக்கு அடி, உதைதான். பாவம் அந்தக்கா. எதையும்
வெளிக்காட்டிக்காம இருப்பாங்க.

இந்த காலத்திலயே இப்படின்னா, அந்த காலத்தில எப்படி இருந்திருக்கும். கிழவிய
எத்தனை பேர் மலடின்னு சொல்லி இருப்பாங்க. கொஞ்சமும் மனசை தளர விடாம
எப்படி பாத்துட்டு இருந்திருக்கார் இந்த தாத்தா.

எப்படிம்மா இது?

அதான் கண்ணு ரத்த பாசம்ணு சொல்றது, உறவு, சொந்தம், பந்தம். எல்லாம்
இருந்துட்டா வாழ்க்கையில கஷ்டம் வந்தாலும் சீக்கிறம் விலகிடும். அந்த
சமயத்தில அவங்க கொடுக்கற ஆறுதல் தான் வாழ்க்கையின் பலமே.

மிகப்பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறார் பெயர் தெரியாத அந்த கிழவன்.
யாரால் முடியும்?, தங்கச்சிகாக தன் வாழ்க்கையே தியாகம் பண்ண யாராவது
நினைச்சாவது பார்ப்பார்களா?.

இவர் முன்னாடி சேகரண்ணன் எல்லாம் ஒரு புழு மாதிரிதான்.

இரவு சாப்பாடு முடித்துவிட்டு தாத்தாவுன் நிறைய பேச வேண்டும். மனதில்
குறித்துக்கொண்டேன். நிறைய கேள்விகள் கேட்கணும்.

அவரும் இரவு உணவை முடித்து விட்டு கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.
கிழவி சாப்பாடு கொடுத்து விட்டு அப்போதுதான் நகர்ந்திருந்தாள்.

நிலவொளியில், களத்தின் நடுவே நானும், தாத்தாவும்.

ஏன் தாத்தா கல்யாணமே பண்ணிக்கலை?

மவுனம்.

மறுபடியும் கேட்டேன்.

பிடிக்கல தம்பி. மேலே கேட்பதை அவரும் விரும்பவில்லை, நானும் கேட்கவில்லை.
பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன்.

அவரின் இளமைக்காலங்கள் பற்றி நிறைய பேசினார். சுவாரசியமான
கேட்டுகொண்டு இருந்தேன். மாடு பிடிக்கறது, விவசாயம், வெள்ளைக்காரன்
இளமைக்குறும்புகள்னு நிறைய பேசினார்.

கேட்டுகொண்டு அவருடனே உறங்கிப்போனேன். அம்மாவிடம் சொல்லி,
கையையும் காலையும் புடிச்சி தூக்கிட்டே போய் வீட்டில் படுக்க வைத்தார்கள்.

இரு வாரங்களுக்கு பிறகு,

முழு ஆண்டு தேர்வு வெறு நெருங்கியது, கிட்டத்தட்ட கிழவனை மறந்திருந்தேன்.

"சட்டி சுட்டதடா கை விட்டதடா", எங்கயோ ரிக்கார்ட் பாடியது.

யாரும்மா மண்டைய போட்டது, ஆனா ஊனா மைக்செட்டை, வச்சி ஒப்பாரி போட்டு
இந்த மாதிரி பாட்டை வேற போட்டு இருக்கறவங்களை சாகடிபாங்களே.

சலித்துக்கொண்டேன்.

அப்படியெல்லம் சொல்லாத கண்ணு,

நெல்லு காய வச்சாங்களே

ஆமா

அந்த கிழவிதான் செத்து போச்சு, நெஞ்சு வலியாம், நல்ல சாவுதான். இழுத்துகிட்டு
கஷ்டப்படாம பொட்டுனு போறது.

என்னமா சொல்ற?

ஓட்டமாய் ஓடினேன். வாசலில் நெருப்பு மூட்டியிருந்தார்கள். சாவு வீட்டிற்கான
எந்த அறிகுறியும் இல்லை, ஓவென்ற அழுகை இல்லை, எரிச்சலுற வைக்கும்
ஒப்பாரி இல்லை.

தாத்தாவை தேடினேன்.

திண்ணையின் ஓரமாய் தோளில் துண்டை போட்டபடி அமர்ந்திருந்தார்.
அவரிடம் அழுகை இல்லை.

நான் பார்த்தேன்.

அவரின் கண்ணிலிருந்து சலனமில்லாமல் இரண்டு துளி கண்ணீர் விழுந்தது.
என்னிலிருந்தும்.

என்னால் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமா?, தோன்றவில்லை.

"இனிமேல் உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லையே கிழவனுக்கு".

.........................................................................................................................

ஒரு விளையாட்டு பையனின் பார்வையில் உறவுகள் எப்படி இருக்கும்னு
கருவா நினைச்சு எழுதினேன்.

எழுதின பிறகு சுருக்கணும்னு மனசு வரலை அதனாலாதான் எதையும்
எடுக்காமல் எழுதியதை அப்படியே பதிவிலிட்டு விட்டேன்.

பொறுமையாக படித்ததுக்கு நன்றி.

உங்கள் கருத்திற்காக காத்திருக்கிறேன்....

போட்டியில் பங்கு பெறும் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
தம்பி

Thursday, August 10, 2006

என்ன செய்ய?

மருந்தடி நீ எனக்கு

மருந்துகள் தேவையில்லை
ஆகாரமும் அவசியமில்லை
எனக்கான நிவாரணிகளும்
கண்டறியவில்லை, அறியவும்
முற்படவுமில்லை
எனக்குள்ளே இருப்பது எப்படி பிறர்
அறியமுடியும்?
என்றெண்ணியே இருந்தேன்
தெரிந்த பின்னும் களையவில்லை
எனக்கு தெரியும்
உன் வருகைக்கான நறுமணமே
எனக்கான மருந்தென்று

சிறந்தது

சிறந்ததை விட சிறப்பானது
இருக்குமென்று சொல்வார்கள்
அது பொய்தானென்று
வாதம் செய்வேன்
உன்னை பார்த்ததனால்!

மழை

மழையை ரசித்துக்கொண்டிருந்தேன்
நீ வந்தாய்.
அட இவ்வளவுதானா மழை?



ரொம்ப நாள் சும்மா இருந்தா தூர்தர்ஷன்ல பேர் வந்துடுமோன்னு
ஒரு பயம் அதனாலதான் இந்த பதிவுக்கயமை(வேறெப்படி சொல்றது)

இதையும் கவிதை என்று சொல்பவர்களுக்கு என் நன்றிகள்.
அவர்களுக்கு என் விசுவாசம் (பின்னூட்டம்) கண்டிப்பாக
உண்டுங்கோவ்


போட்டிக்கு கதை எழுதற ரோசனைல இருக்கறேன்
(இன்னோரு சோதனை உங்களுக்கு)

இப்போதைக்கு அப்பீட்டு.