எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, November 24, 2007

சூர்யா, முருகதாஸ், அனு மற்றும் நான்.

அனுஹாசனை மிகவும் பிடித்து விட்டதால் காபி வித் அனு நிகழ்ச்சியை ஒன்று
விடாமல் தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. இந்த வாரம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக
சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் வந்திருந்தார்கள். எங்கள் ஊர்க்காரரான
முருகதாஸ் என்ன பேச போகிறார் எப்படி பேச போகிறார் என்ற ஆர்வம்.
ஆனால் கொஞ்சமாக பேசினார் நிகழ்ச்சி முழுக்க சூர்யாவே பேசினார். பொதுவாக தொலைக்காட்சி பேட்டிகளில் கழுத்தை சொறிந்து, முடியை கோதிவிட்டு பார்ப்பவர்களை எரிச்சலூட்டும் நடிக, நடிகையர் மத்தியில் சூர்யா ரொம்ப அமைதியாக கேள்விகளுக்கு கோர்வையாகவும் கலகலப்பாகவும் பேசினார். அனுவிடம் பேசினாலே எல்லாரும்
மிகவும் சந்தோஷமாக பேசுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு. முன்பே
சொன்னது போல அந்த தோழமையான அணுகுமுறை காரணமாக இருக்கலாம்.

பேட்டியின் இடையில் கார்த்திக்குடனான சிறுவயது சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
சின்ன வயசில அவனை போட்டு அடிச்சிகிட்டே இருப்பேன். ராத்திரில வேஷம்
போட்டுகிட்டு அவனை பயமுறுத்துவேன். அவனும் பயந்திடுவான். அவனை அடிக்காத
நாளே இருக்காது. ஒருமுறை அவன் அமெரிக்கா போனபோதுதான் அவனில்லாத
மாதிரி பீல் பண்ணேன். அப்ப யோசிச்சு பாத்தபோது ஒரு அண்ணனா உனக்கு
ஒண்ணுமே பண்ணதில்ல. உன்ன தட்டி தட்டி வச்சிட்டேன். ஒரு கான்பிடண்ட்
இல்லாம பண்ணிட்டனேன்னு பீல் பண்ணி ஒரு மெயில் அனுப்பினதாகவும். உடனே
தம்பி கார்த்தி அண்ணன்னா அப்படிதான் இருக்கணும், உன்ன மாதிரி ஆவனும்னுதான்
எனக்கு ரொம்ப ஆசை. நிறைய விஷயங்கள்ல உன்னதான் பாலோ பண்ணுவேன்.
உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்னேன்னு பதில அனுப்ப ஒரே செண்டிமெண்டா
ஆகிட்டாரு.

அப்பதான் நம்ம அனு முக்கியமான விஷயத்த சொன்னாங்க. நம்ம குடும்பங்கள்ல
சகோதர சகோதரிகளிடம் ஒரு இணக்கமான சூழ்நிலை இல்லவே இல்லை. சின்ன
சின்ன விஷயத்துக்கு பாராட்டற குணம் கிடையாது. தம்பிகள எப்பவுமே எதிரியாக
பார்க்கிற குணம் இந்த மாதிரியே வளர்ந்துட்டோம்னு. அப்ப யோசிச்சி பாக்காமலே
அனு சொன்னது சத்தியமான உண்மைன்னு எனக்கும் விளங்குச்சு. ஏன்னா சின்ன
வயசில நானும் அப்படிதான்.

நீங்களும் பார்த்திருப்பிங்க பேப்பர்ல வரப்பு தகராருல அண்ணன் தம்பி
சண்டைலருந்து இப்ப அம்பானி சகோதரர்கள் சண்டை வரைக்கும். அப்படியே
நானும் என்னோட பால்ய வயசுக்கு போய் யோசிச்சு பாத்தேன். ரொம்ப
கேவலமா என்னோட சொந்த அண்ணன் தம்பிகுள்ளயே கொலவெறில
சண்டை போட்டுருக்கேன்.

எனக்கும் என்னோட தம்பிக்கும் சண்டை வராத நாளே இருக்காது. நான் ஒரு
தெருல விளையாடியா அவன் அடுத்த தெருவிலதான் விளையாடனும். வீட்டுல
கொடுக்கற தீனில என்னை விட அளவுல கொஞ்சம் கம்மியாச்சின்னா அதுக்கும்
சண்டை. ஒருமுறை கோலிகுண்டு விளையாடும்போது ஒரு பிரச்சினை. விளாடிட்டு
இருக்கும் போது பேந்தால இருந்த குண்டையெல்லாம் தூக்கி முள்ளுத்தோப்புல
வீசீட்டு ஓடிட்டான். வந்த கொலவெறில ஒரு கல்ல எடுத்து அடிச்சேன் அவனை
பார்த்து என் கெட்ட நேரம் நேரா மண்டைல அடிச்சது, அடிச்ச வேகத்துல மண்டை
ஓட்டையே போட்டுகிச்சு சொம்புல ஊத்தற அளவுக்கு ரத்தம் தெருவெல்லாம்.
சும்மாவே ஓவர் சீன் விடுவான் ரத்தத்த பாத்தவுடனே அய்யோ அம்மான்னு
அலறிட்டான். எனக்கு டவுசர் கிழிஞ்சிடுச்சி ஆஹா இன்னிக்கு மாட்டிகிட்டம்டா
சாமி. அங்கருந்து எஸ்கேப் ஆகிட்டேன். அவன நாலஞ்சு பேர் ஆஸ்பத்திரி
தூக்கிட்டு போய் மண்டைல ரெண்டு மூணு தையல் போட்டுகிட்டு வந்தாங்க.

வீட்டுக்கு போனா பொதுமாத்து விழும்னு எனக்கு தெரியும், போகவும் தைரியம்
இல்ல, ராத்திரி வரைக்கும் போகவேயில்ல. பத்து மணிக்கு மேல தூக்கம், குளிர்னு
மாறி மாறி இம்சை பண்ண மெதுவா வீட்டுக்கு போனேன். எங்கப்பா எனக்காக
வாசல்லயே காத்திருக்கார். பக்கத்துலயே தலைல மப்ளர் கட்டின மாதிரி வெள்ளையா
கட்டு. என்னை பாத்தவுடனே தம்பி அழுவ ஆரம்பிச்சிட்டான். எங்க வீட்டுக்கு
முன்னாடி ஒரு நொனா மரம் இருந்துச்சு அதுக்கு பின்னாடி நின்னுகிட்டே
இருந்தேன். ஏண்டா அடிச்ச எதுக்கு அடிச்சேன்னுலாம் கேக்கல். வாசல்லயே
முட்டி போட வச்சிட்டு கதவ சாத்திகிட்டார் அப்பா. ரெண்டு நாளுக்கு அவனுக்கு
சாப்பாடு போடாதன்னு அம்மாகிட்ட சொல்லிட்டார்.

தம்பிக்கு ஏகப்பட்ட மரியாதை, பாலுதான் பழம்தான் என்னை வெறுப்பேத்திகிட்டே
சாப்பிடுவார். அப்பப்ப கிச்சனுக்கு போய் திருட்டுதனமா பொட்டுகடல தேங்காயும்
எடுத்து சாப்பிட்டுக்கறது. இந்தமாதிரி எப்பவுமே அவனை அடிச்சி அடக்கி
வைக்கறதே என்னோட வேலை. ஆத்துக்கு குளிக்க போனா தண்ணிக்குள்ள
புடிச்சி அமுக்கறது, டவுசர தூக்கி ஆத்துல போடறது, கிணத்துக்கு குளிக்க
போனா அங்கயும் அவனுக்கு ஆப்பு வைக்கிறதுன்னு அவனுக்கும் எனக்கும்
ஆகவே ஆகாது.

ராத்திரி சாப்பிட்ட உடனே அப்பா ஒரு தம் அடிப்பார். அப்ப வெளித்திண்ணைல
இருந்து ஒரு சத்தம் கேட்கும். "டேய் தீப்பெட்டி எடுத்துகிட்டு வாடா"ன்னு. சடார்னு
ஓடிப்போய் தீப்பெட்டி எடுத்துகிட்டு ஓடிப்போய் குடுப்பேன். தம்பியும் தேடி
எடுத்துகிட்டு வருவான். நான் முந்திகிட்டேன்னா அவ்ளோதான் அப்பாவ
சிகரெட் பத்த வைக்கவே விட மாட்டான். நான் குடுத்த தீப்பெட்டிய அப்பாகிட்டருந்து
பிடுங்கி வீட்டுக்குள்ள ஓடி நான் எடுத்த இடத்துலயே அத திரும்ப வச்சி மறுபடியும்
எடுத்துகிட்டு வந்து கொடுப்பான். அதாவது அவர்தான் அந்த வேலைய செஞ்ச
மாதிரி இருக்கணுமாம். நான் வளர்ந்து சிகரெட்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சதும்
வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக்கறது, என்னைய கடைக்கி அனுப்பறது எல்லாத்தையும்
நிறுத்திட்டார். அவரோட கண்ணியமா இருந்தாலும் அதனால எனக்கு ரொம்ப
வருத்தம்.

நான், தம்பி, அண்ணன், அக்கா எல்லாரும் ஒரே பள்ளியில படிச்சதால அங்க
என்ன நடந்தாலும் உடனே வீட்டுல போட்டுகுடுத்துடுவான் தம்பி. உடனே வீட்டுல
பரேடு நடக்கும். ஒருநாள் ஸ்கூல் லேட்டாயிடுச்சி எங்கண்ணன் சைக்கிள்ல
போனாரு, என்னையும் கூட்டிகிட்டு போன்னா ரொம்ப லேட் ஆயிடுச்சின்னு
சொன்னேன். நடுந்து வாடான்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்ப நான்
ஏழாவது அண்ணன் ப்ளஸ் டூ. ஸ்கூல ரீச் ஆகற நேரத்துல ப்ரேயர் முடிஞ்சி
பீ.டீ வாத்தியார் தடியோட வெளில லேட்டா வந்த பசங்கள அடிக்க ரெடியா
நின்னுட்டு இருக்கார். அவருக்கு பசங்கள அடிக்கறத தவிர வேற எதுவும்
தெரியாது. ரெண்டு கைலயும் நாலு அடி. பிஞ்சு கை கன்னி போச்சு. தூரத்துல
எங்கண்ணன் சைக்கிள்ல நாலுபேரோட சிரிச்சிகிட்டே போகுது. எனக்கு
கோவம் கோவமா வந்துச்சு அண்ணன் மேல. அதுலருந்து ஒரு நாலு வருஷம்
பக்கமா ஒரே வீட்டுல இருந்தும் எங்கண்ணன் கூட பேசவேல்ல. முகத்தை
பாக்ககூட இல்ல. என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன். என்னோட அக்கா கூடயும் பேசாம ரெண்டு வருசம்
இருந்திருக்கேன்.

சாயந்திரம் ஆறுமணில இருந்து ஒம்பது மணிவரையும் எல்லாரும் வீட்டுல
கட்டாயமா படிக்கணும். அந்த நேரத்துல டீவிய போட்டு பாத்தோம்னா
யாராவது ஒருத்தர் அப்பாகிட்ட போட்டு கொடுத்துட்டாங்கன்னா ஒருவேளை
சாப்பாடு கட் ஆகிடும். ஒருமுறை அக்கா போட்டுகொடுத்துட்டதால வெறில
கூரான காம்பஸ்ல கோழி இறகு கட்டி மரத்துல குத்தி விளையாடறதுக்காக
வச்சிருந்தத காம்பசை அக்கா மேல வீசினேன் (5000 விளம்பரம்). கால்ல குத்தி
கொட கொடன்னு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அப்ப தண்டனையா ரெண்டு
கைலயும் ரெண்டு செங்கல்ல வச்சி வெளில முட்டி போட வச்சிட்டாங்க. இந்த
மாதிரி தண்டனை நான் வாங்கும்போது தம்பிதான் சூபர்வைசிங் பண்ணுவான்.
சும்மா சொல்லக்கூடாது கொஞ்சம் ஆடுச்சின்னாலும் "அப்பா கல்ல கீழ
போட்டுட்டான்பான்னு அலறுவான். உடனே அப்பா வெளில வந்து ஒழுங்கா முட்டி போடறானான்னு
பாக்க வந்திடுவார்.

வீட்டுல அண்ணன தவிர யாரும் யாரையும் மரியாதையா கூப்பிடறதுல்ல.
ஸ்கூல்ல அக்கா ப்ரெண்சோட உக்காந்துட்டு இருக்கும்போது பேர சொல்லி
கூப்பிடுவேன். அவங்களுக்கு அது அவமானமா போயி புகார் பண்ணிட்டாங்க.
ஒருநாள் எல்லாத்தையும் அசெம்பிள் பண்ண சொல்லி. இனிமே நீ அக்காவ
பேர் சொல்லி கூப்பிட கூடாது, அக்கான்னுதான் கூப்பிடணும். என் தம்பிய
பார்த்து இனிமே நீ கதிரவனையும் அண்ணான்னுதான் கூப்பிடணும்னு சட்டம்
போட்டாங்க. அதுலருந்து ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கறதையே குறைக்க
ஆரம்பிச்சாச்சி. இதுவரைக்கும் நானும் அக்காவ அக்கான்னு கூப்பிட்டதில்ல
தம்பியும் என்னை அண்ணன்னு கூப்பிட்டதில்ல.

இதெல்லாம் சின்ன வயசுல மட்டும்தான் வளர வளர பாசம் அதிகமாகிடுச்சி.
அதுகூட ஒரு பிரிவுல வந்ததுதான். ஒரு முழுப்பரிட்சை விடுமுறைல என்னை
சென்னைல இருக்கற மாமா வீட்டுல கொண்டு போய் விட்டாங்க. முழுசா
பத்தே பத்து நாள்ல என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்க மாமான்னு
ஓன்னு அழுதிட்டேன். என்னால தம்பி, அக்கா, நண்பர்கள், வீடு, அம்மா
யாரையும் பிரிஞ்சி இருக்க முடில. என்னடா பையன் நீன்னு மாமாவும்
வீட்டுல கொண்டு வந்து விட்டார். பத்து நாளுக்கப்புறம் வீட்டையும்
எல்லாரையும் பாத்ததுல வாசல்ல நின்னுட்டே அழுதுட்டேன். ஓடிப்போய்
அம்மாகிட்ட உக்காந்து அழுதுகிட்டே நான் இனிமேல் எங்கயும் போக
மாட்டேன்னு விசும்பிகிட்டே சொல்றேன். அப்பதான் வீட்டுல இருந்த
எல்லார் மேலயும் பாசம் அதிகமாச்சு. தம்பி தோள்மேல கைபோட்டுகிட்டே
கிரிக்கெட் விளையாட போனேன். அந்த வயசுல பத்துநாள் பிரிவு என்னால
தாங்கிக்க முடியாத ஓண்ணா இருந்துச்சு.

இதுவே வயசு ஆக ஆக எல்லாமே மாறிடுச்சி. சண்டை போட நேரமில்ல
இப்ப சின்ன வயசுல சண்டை போட்டதெல்லாம் நினைச்சு பார்த்தா ரொம்ப
கேவலமாவும் சிரிப்பாவும் இருக்கு.

கொஞ்சம் ஓவரா கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டில
மட்டும் அந்த வயசுல நான் பார்த்த என்னோட நண்பர்கள் வீட்டுலயும்
தினமும் இதே சண்டைங்கதான். ஏன் இந்த மாதிரி யோசிச்சா பெற்றோர்கள்
சரியா பாசத்தை ஊட்டி வளர்க்கறதில்லயா? கடைக்குட்டி மேல ரொம்ப
பாசம் காட்டறதுனால வர்ற கோபமா, அல்லது தனக்கு வீட்டுல அதிக
முக்கியத்துவம் கொடுக்கறதினால வர்றதா இருக்குமான்னு யோசிச்சு
பார்த்தா ஒண்ணுமே புரியலை.

எது எப்படியோ இனி வளரும் தலைமுறையாச்சும் அதிக பாசத்தோட
சண்டை போடாமல். தம்பி, தங்கச்சிகளுக்கு அண்ணன் அக்காக்கள்
ஒரு வழிகாட்டி மாதிரி வளர்ற சூழ்நிலை வரணும்.

ஒரு பத்து பதிவுக்கு ஒரு கொசுவத்தி சுத்திக்கறனே. நானும் சுத்தி
ரொம்ப நாள் ஆச்சு. அதான் கொலவெறில சுத்திட்டேன். நீங்களும்
உங்க தம்பி, தங்கச்சி, அண்ணன்கள்ல காட்டுன வீர தீர பராக்கிரமத்த
இங்க பகிர்ந்துக்கலாம். அப்பதான் நான் மட்டும்தான் இந்த மாதிரியா
இல்ல எல்லாருமே சின்ன வயசில இப்படிதானான்னு தெரியும். :)

இந்த மாதிரி சிறுவயது சின்னத்தனமான விஷயங்கள ஞாபகபடுத்தினதுக்காக
சூர்யாவுக்கும் அனுவுக்கும் என்னோட செல்லமான கண்டனங்கள்.

Wednesday, November 21, 2007

அளம்

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை
நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப
உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின்
உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி
அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு
எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது
போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம்.
தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன்.
எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின்
வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள்
இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது
போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை
குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத
வார்த்தை இது.

"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு
அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.
இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப்
பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது
மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும்
எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான்
"அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம்
பதிப்பாக வெளிவந்திருக்கிறது,

சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது
மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப்
படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள்
அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி.
அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான
வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின்
முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி,
சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன.
"ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும்
வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன்.
அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான
வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி
தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை
உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால்
வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான்
இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில்
கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை
எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல்
போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா
ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய
செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை
உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து
வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று
ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும்
கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள்
கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின்
கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில்
துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது
போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும்
இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட
வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும்
ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின்
மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள்.
இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு
வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால்
கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும்
பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற
வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி
அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது
போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக
ஒருமுறை வாசிக்கலாம்.

நூலின் பெயர்: அளம்
ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி
மருதா பதிப்பகம்
விலை இந்திய ரூபாய் 100.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி
அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

Monday, November 19, 2007

அலெக்ஸ்

அலெக்ஸ் இலங்கைத்தமிழர், தமிழை விட சிங்களம் நன்றாக பேசக்கூடியவர்.
தமிழையும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்தான் ஆனால் கடந்த ஒன்றரை
வருடமாக தமிழை பேச அதிக வாய்ப்பு இல்லாததால் பல வார்த்தைகளை
மறந்து விட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை பேசும்போது காற்றில் துழாவி
வார்த்தைகளை வரவழைக்கிறார் அவை வராதபோது தோற்றுப்போன
குழந்தையின் முகத்தினை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம்.

அலெக்ஸ் நாம் பார்க்கும் உலகத்திலிருந்து விலகி நிற்பவர். அவர் உலகத்தில்
அவரும் அவர் பூனை மட்டுமே பெரும்பாலான நேரத்தினை நிறைத்துக்
கொள்கின்றன. அதற்கு மேல் அவருக்கும் செய்வதற்கு ஒன்றுமில்லை.
எனக்கு அலெக்ஸை இப்போது மூன்று நாட்களாகத்தான் தெரியும். என் வருகை
அவரை மிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. வண்டியை விட்டு இறங்கியதும்
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அளவிட முடியாததாக இருந்தது. மிக
உணர்ச்சிவசப்படுகின்ற ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

அலெக்ஸ் நகரத்திலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கிறார். அல் அய்னின்
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றோமானால்
ஒரு காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த பாக்டரியை நீங்கள் காணலாம். அந்த
பாக்டரியின் எடுக்கமுடியாத எச்சங்களாக ஒரு சில இயந்திரங்களும் சில பொருட்களும்
இருக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் வாட்ச்மேன் பொறுப்பில்தான் அலெக்ஸ்
இருக்கிறார். மாதத்தின் ஐந்தாவது நாளில் சம்பளமும் அதற்கடுத்த நாள் நகரத்திற்கு
சென்று வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு அம்மாத சாப்பாட்டு தேவைக்கான பொருட்களை
வாங்கி வருவார் அந்த ஒருநாள் நகரப்பிரவேசம்.

சுற்றிலும் மொட்டை பாலைவனம். நாளுக்கு நாள் தோன்றி மறையும் மணல் மேடுகள்.
மணலிலேயே இரண்டு மைல் நடந்தால் பந்தயத்திற்கான ஒட்டகங்களை தயார்படுத்தும்
பண்ணை. அங்கு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். தான் இறந்த செய்தி கூட உலகிற்கு
தெரிய ஒரு மாத காலமாகலாம். இதற்கு நடுவிலே அந்த இடத்தில் கடந்த ஒன்றரை
வருடமாக பணியில் இருக்கிறாராம்.

வந்திறங்கியதும் இந்த இடத்தில்தான் நாம் நாலைந்து நாட்கள் தங்க வேண்டும் என்று
நினைக்கும்போதே வயிற்றை கலக்கியது. வெளி உலக தொடர்புகள் அறவே அற்ற
இடம் நினைத்துப்பார்க்கவே கொடுமையாக இருந்தது. என்ன சமைக்கலாம் என்று
கேட்டார். ஏதாச்சும் செய்ங்க என்றேன்.

மாலை நெருங்கி விட்டிருந்தது. அந்த இரவில் பாலைவன் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக
இருந்தது. இதமான குளிர், நிலா வெளிச்சம் மணல் குன்றுகள் எல்லாமே அழகுதான்
என்றாவது ஒருநாள் காணவேண்டிய அழகு அவை. தினமும் அங்கே இருந்தால்
அழகும் சீக்கிரம் சலித்துவிடும்.

அலெக்ஸ் கிட்டத்தட்ட உங்க வாழ்க்கை மாதிரியே ஆங்கிலத்துல ஒரு படம் வந்திருக்கு
தெரியுமா? பார்த்திருக்கிங்களா? என்றேன்.

கடைசியா பார்த்த படம் கில்லி என்று சொன்னார்.

" சிரித்துக்கொண்டே "கேஸ்ட் அவே" னு ஒரு படம் அந்த படம் முக்காவாசி ஒரே
கேரக்டர் ஒரு தீவுல மாட்டிக்கறதுதான். அது விபத்து இது வாழ்க்கை அவ்வளவுதான் வித்தியாசம்".

தனியா என்னதான் பண்ணுவிங்க?

இங்க என்ன வேலை இருக்கு பெருசா செய்யறதுக்கு? என்னை பாத்துக்கறதே
பெரிய வேலையா இருக்கு இதுல என்னங்க அதுவுமில்லாம சொல்லிக்கற மாதிரி
ஒருவேலையும் இல்ல அதான் உண்மை. அதான் நீங்க பாக்கறிங்கல்ல. எந்த நேரமும்
யாராச்சும் போன் பண்ணிகிட்டே இருப்பாங்க. அவங்க கூட பேசிட்டே இருப்பேன்,
அப்போதுதான் கவனித்தேன் அவர் போனில் கிட்டத்தட்ட அரைமணி நேரம்
பேசிவிட்டு வைக்கும்போது மறக்காமல் முத்தம் வைப்பதை.

யாருங்க அதெல்லாம்?

தெரிலங்க. ப்ரெண்ட் ஒருத்தன் ஒருநாள் ஒரு பொண்ணோட நம்பர் தந்தான்.
அதுக்கு போன் பண்ணி பேசினேன். மனசுக்கு இதமா இருந்துச்சு. அப்படி அதிலருந்து இன்னொண்ணு அதுகூட இன்னொண்ணுன்னு கிட்டத்தட்ட பத்து பதினஞ்சு
பொம்பளைங்க நம்பர் இருக்கு ஒண்ணு மாத்தி ஒருத்தரா போன் பண்ணிகிட்டே
இருப்பாங்க. ஜாலியா பேசிட்டு இருப்பேன் நேரமும் போறது தெரியாது. எல்லாருமே
அரபி வீட்டுல வேலை செய்றவங்க. யாரையும் நேர்ல பாத்தது கிடையாது.
அவங்களுக்கு தேவை அன்பான பேச்சுதான். எனக்கும் அதுதான் தேவையா இருக்குது.

இதுக்கு முன்னாடி இங்க யாரு வேலை பார்த்தது?

"அது ஒரு சோகமான கதைங்க சொன்னா கேவலம் இங்க இந்த மாதிரிலாம் நடக்கறத
பாக்கும்போது கடவுள் இருக்காரான்னு சந்தேகமா இருக்குங்க."

அப்படி என்ன நடந்தது?

எனக்கு முன்னாடி இங்க ஒரு நேபாளி வேலை பாத்தாங்க. பாக்கறதுக்கு ஆள்
லட்சணமா கைக்கு அடக்கமா செக்கச்செவுப்பேன்னு இருப்பான். இங்க பட்டான்னு
சொல்ற பாகிஸ்தானி ஆளுங்க பக்கத்துல இருக்கற தோட்டத்துல வேலை
பாக்கறானுங்க. இந்த பையன் இங்க தனியா இருக்கறத பாத்துட்டு நாலஞ்சு பேரா
வந்து வண்டில அள்ளி போட்டுகிட்டு போய் ரெண்டு நாள் கழிச்சிதான் கொண்டு
வந்து விட்டானுங்க.

"தூக்கிட்டு போய் என்ன பண்ணாங்க?"

என்னங்க கேள்வி இது? ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கரை மாதிரி
பொம்பளைங்களயே பாக்காத அவனுவளுக்கு இவந்தான் பொம்பளை மாதிரி
தெரிஞ்சிருக்கான் போலருக்கு. பாவம் இவன் ஆபிஸ்லயும் சொல்லமுடியாம
வெளிலயும் சொல்ல முடியாம அவஸ்தைபட்டிருக்கான். அவனுங்க அடிக்கடி
வந்து தூக்கிட்டு போறதும் ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்து விடறதுமா
இருக்கவே இவன் பொறுக்க முடியாம மெயின் ஆபிஸ்க்கு போய் ட்ரான்ஸ்பர்
கேட்டுருக்கான் வேலைல சேர்ந்தே ரெண்டு மாசம்தான் ஆகுது அதெல்லாம் மாத்த
முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

இங்க வந்து இதோ பக்கத்து ரூம்லதான் தூக்கு மாட்டிகிட்டான் என்று சொல்லி
அலெக்ஸ் சிரித்தார். நான் ஆள் பாக்கறதுக்கு கருப்பா கட்டையா இருக்கறேனா
அதனால பட்டானிங்க வந்து பாத்துட்டு இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு
போயிட்டாங்க. மறுபடியும் அதே சிரிப்பு.

இந்த மாதிரி இடத்தில அவனுங்கதாங்க சரி. நம்மளால எல்லாம் வேலை பாக்க
முடியாது ஏதோ காலக்கொடுமை இங்கலாம் வேலை பாக்க வேண்டியதா இருக்கு.

இப்படி ஒரு மேட்டர சொல்லு நம்மள தூங்கவிடாம பண்ணிட்டிங்களே அலெக்ஸ்.

தூக்கம் வரலன்னா இந்த ஆல்பத்த பாருங்க. இவர்தான் எங்க அப்பா சாகும்போது
எடுத்த போட்டோ. இது என்னோட மனைவி, அந்த சின்ன பொடியன் என்னோட
பையன்.

இது என்னோட பொண்ணுங்க. பசங்கள எல்லாம் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைச்சிகிட்டு
இருக்கேன். அதுக்கேதான் மாசா மாசம் கனமா செலவாகுது.

Friday, November 02, 2007

நான் லீனியர் கனவுகள்.



வேகவேகமாய் ஓடிப்போய் கந்தசாமியண்ணன் மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டேன்.

"நாளைக்குதாம்பா ஊர்போய் சேரமுடியும் நீ பஸ்ல போயிக்கோ"

வீட்டுல இருக்க பிடிக்கல அதான் இன்னிக்கே கிளம்பிட்டேன். அங்க இருந்தாலும்
பசங்களோட ஜாலியா இருக்கலாம்னுதான் அப்படியே உங்க வண்டியில போனா
பொழுதுபோக்கா இருக்கும் ஒரு டூர் போனமாதிரியும் இருக்குமேன்னுதான் ஏறிகிட்டேன்.
கந்தசாமியண்ணன் தங்கச்சி கல்யாணத்துக்கு சீதனமா கொடுக்கபோறதா சொன்ன
மாட்டுவண்டியதான் ஓட்டிகிட்டு போறார் அவர்கூடவே இப்ப போயிட்டு இருக்கேன்.

சாயங்காலம்தாம்பா போய் சேரமுடியும் அதுவுமில்லாம வண்டில உன்னால்லாம்
வரமுடியாது சொன்னா கேளு.

"கயித்த குடுங்க பீடிய பத்தவச்சிகிட்டு பின்னாடி உக்காருங்க. வண்டி நான் ஓட்டறேன்"

"மாடு மெரளும் ஊர்தாண்டின பொறவு நீ ஓட்டு"

சரி.

அண்ணே போற வழில எங்கக்கா வீட்டுக்கு போவணும்னே லைட்டா வண்டிய
திருப்புனீங்கன்னா ஒரு எட்டு பாத்துட்டு வந்திருவேன்.

காலேஜி படிக்கற பையன் மாட்டுவண்டில ஏறிப்போறத இப்பதான் பாக்கறேன்.
அவனவன் பிகர தூக்கிட்டு மலைக்கு பின்னாடி போயிட்டு இருக்கான் நீ
என்னடான்னா மாட்டுவண்டி ஓட்டணுன்ற.

ஒரு பீடி குடுங்க.

இதுவேறயா? துண்டுல மடிச்சி வச்சிருக்கேன் பாரு எடுத்துக்க.

ம்

உங்க மாமா வர்றாரு பீடிய கீழ போட்றா!

சரிண்ணே!

மாப்ள வீட்டுக்கு வந்துட்டு போறது...

போறவழிதான் மாமா, பாத்துட்டு போறேன்.

டைம் ஆச்சு நான் ஆபிஸ் போறேன்.

சரிங்க மாமா.

பையனுக்கு கிறுக்கு புடிச்சிகிச்சுன்னு நினைக்கிறேன். நூறு மைல் இருக்கும் மாட்டு
வண்டில போறானாம். முட்டாப்பய. என்று நினைத்தபடியே கலவரமான முகத்துடன்
ஆக்சிலேட்டரை அழுத்தினார்.

வேலு ஒம்மாமன் மொகத்தை பாத்தியா!

பாத்தேன் பாத்தேன். அவங்களுக்கெல்லாம் இது புரியாது நீங்க போங்கண்ணே!

சாமியண்ணன் ஊர்க்கதை பேசிகிட்டே வண்டிய ஓட்டிகிட்டு வந்தார். அவர்
சொல்றது ஒண்ணு கூட நம்பற மாதிரி இல்ல. ஊர்ல உள்ள சரிபாதி பொம்பளைங்க
நடத்தை சரியில்லன்னு சொல்றாரு. பகல்லதாண்டா அவளுங்க பத்தினி வேசம்
போடறாளுங்க உனக்கு விவரம் பத்தாது. உங்கிட்ட இத பத்தி பேசறதே தப்பு
வா வந்து வண்டிய ஓட்டு நான் பின்னாடி படுத்துக்கறேன்.

ரெண்டு ஊர்தாண்டி அக்கா வீடு வந்தது.

என்னக்கா பசங்க எல்லாம் அதுக்குள்ள ஸ்கூல் போயிட்டாங்களா?

இப்பதான் வண்டியேத்தி அனுப்பினேன். நீ வரன்னு சொல்லியிருந்தா நிறுத்தி
வச்சிருந்துருப்பேன்.

வண்டில வந்தியா இல்ல பஸ்ல வந்தியா?

வண்டிலதான் வந்தேன். ஆனா மாட்டு வண்டி என்று சொல்லி சிரித்தேன்.

உனக்கு வர வர பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். அதான் இப்படி
நடந்துக்கற. இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல லீவ் அதுக்குள்ள என்ன
அவசரம்?

போர் அடிக்குதுக்கா அதான் சாமியண்ணன் கூடவே வண்டில கெளம்பிட்டேன்.

சரி நான் வரேங்கா...

காசு வேணுமா?

இல்ல.

என்னடா போனவேகத்துல வந்துட்ட?

இல்லண்ணே பசங்கலாம் ஸ்கூல் போயிட்டாங்களாம். அதுவுமில்லாம உங்களுக்கும்
நேரமாகுதுல்ல அதான்.

சரி கெளம்பலாம்.

அடுத்ததாக முத்து ஒயின்சில் வண்டியை நிறுத்தி மாட்டுக்கும் எங்களுக்கும் தண்ணி
காட்டிக் கொண்டோம்.

டேய் ஊமக்குசும்பன் மாதிரி இருந்துகிட்டு எல்லா வேலையும் செய்யிற இன்னும்
என்னென்ன பழக்கமெல்லாம் இருக்குதோ தெரில.

மையமாக சிரித்தேன்.

ஒரு கட்டத்துக்குமேல் பயணம் மிகுந்த வேதனையை தந்தது. குண்டும் குழியுமான
ரோட்டில் வண்டியும் குலுங்கி உடலையும் குலுக்கி பாகங்களை இடம்மாற
செய்தது.

நீ வேணா பஸ்ல ஏறி போயிக்கோ. நான் வண்டில வர்றேன் சாமியண்ணன்
சொன்னார்.

இல்லண்ணே இன்னும் கொஞ்ச தூரம்தான், போயிறலாம்.

விடாப்பிடியாக பஸ் ஏற்றி விட்டார்.

அண்ணாச்சி கடையில் இறங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். அவர்
ஆச்சரியமாக பார்த்தார்.

ஹாஸ்டலில் எவருமே இல்லை. வெறிச்சொடி இருந்தது. எவருமே இல்லாத
விடுதியை பார்ப்பது இதுவே முதல் முறை. ஒருவிதத்தில் கலக்கமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது. உடல் அசதி வேறு படுத்தி எடுத்தது. அறையினுள்
நுழைந்து தாழிட்டுக் கொண்டேன்.

கனவுகளை மீட்டு அதை பத்திரப்படுத்துவது எப்படி என்று அவள்தான் கற்றுத்தந்தாள்.
முன்பெல்லாம் படுக்கையிலிருந்து எழுந்ததும் மசமசப்பான கனவுகள் என்னை விட்டு
தூரத்தில் செல்வது போலவும் அதை நான் துரத்தியபடியும் சென்று தோற்றுப்போய்
இறுதியில் மறுபடியும் உறங்கிவிடுவது போலவும் திரும்ப கண்விழிக்கும்போது அவள்
வந்து சொல்வாள் இதுபோலதான் தினமும் கனவுகளை மறந்துகொண்டிறேன் என்று.

ஒருசிலயோசனைகள் அன்று கூறத்துவங்கினாள் ஒவ்வொருமுறை கனவுகாணும்போது
அங்கு காண்பவர்களிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இரு விடியும்போது
ஏதோ ஒருகேள்வியில் துவங்கி மொத்தத்தையும் ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்
என்று கூறினாள். எதற்கு நான் கேள்வி கேட்கவேண்டும் என்றும் எதற்கு நான் மீண்டும்
எல்லாவற்றையும் ஞாபகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு
அவள் சொன்னாள். நீ தினமும் கனவுகளை நினைவிற்கு கொண்டு வர தவித்துக்
கொண்டிருப்பதை பார்த்துதான் உதவ வந்தேன்.

அவள் குரல் எனக்கு மிக பரிச்சியமானதாக இருந்தது. எங்கோ எப்போதோ
மிக நெருக்கத்தில் கேட்டிருக்கிறேன். மறக்க முடியாததாக இருக்கிறது. நான்
கேட்டேன் நீ என்னோடு இதற்கு முன்பு பேசியிருக்கிறாயா என்று. அதற்கு
அவள் சொன்னாள் உன்னோடு உறங்கியே இருக்கிறேன் நாம் இருவரும்
மிக நெருக்கமான தோழர்கள் எனவும் நாமிருவரும் பள்ளித்தோழர்கள்
என்றாள். அதற்கு மேலும் நமக்குள் ஒரு உறவுண்டு.

என்னால் ஒரு அவள் குரலைத் தவிர வேறெதுவும் நினைவில்லை. எப்படி
யோசித்து பார்த்தாலும் நினைவை மீட்க முடியவில்லை.

என் குழப்பமான முகத்தை பார்த்து அவள் சிரிக்க ஆரம்பித்தாள். அப்படி
சிரித்தது எனக்கு எரிச்சலை தந்ததாக அவள் எண்ணியிருக்கக் கூடும்.
சிரிப்பை நிறுத்திவிட்டு பேச்சினை தொடர்ந்தாள்.

நீ யார்னு கொஞ்சம் சொல்லேன்.

என்னடா என்னை மறந்துட்டியா? நான் சொல்லமாட்டேன் நீயா கண்டுபிடி.

எப்படி நான் கண்டுபிடிப்பேன்? குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.
ஆனா சரியா தெரில.

ப்ளீஸ் நீயே சொல்லேன்.

சரி. ஒரு தீபாவளி அன்னிக்கு முதல்நாள் நீ என்னோட கைல மருதாணி வச்சி
விட்ட, வச்சி முடிச்ச பிறகு என்னோட உதட்டுல முத்தமிட்டாய்..
நான் மருதானி கையாலே உன்னோட முகத்துல அறைஞ்சேன். உன்னோட
முகமெல்லாம் மருதாணி அப்பிகிச்சு. இப்பவாச்சும் ஞாபகம் வருதா?

சுகந்தி....

என்னால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே
தெரியவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பு எட்டாவதோ ஒம்பதாவதோ இருக்கலாம்
ஒரே தெரு,ஒரே வீட்டின் மாடியில் அவள். ஒரே வகுப்பு. எல்லாம் ஒன்றுதான்.

தோழன், தோழி, காதலி, நண்பன் எல்லாமாக சேர்ந்து ஆண்டவன் எனக்கு
கொடுத்ததுதான் சுகந்தி.

பால்ய காலத்துக் காதல். என் முதலும் கடைசியுமான ஒரே காதலி.

பலவாறு சிந்தனைகள் ஓடியது கூடவே அழுகையும் வந்தது.

மவுனத்தை அவளே கலைத்தாள்.

ஏண்டா பேசமாட்டேங்கற? என் மேல கோவமா?

கிட்டே நெருங்கி வந்து என் கண்ணீரை துடைத்தாள். அவள் மேல் இதுவரை
உணர்ந்தரியாத ஒரு வாசனை வீச்யது அது என் அறை முழுக்க பரவி
சுகந்தமளித்தது.... சுகந்தி...

சுகந்தி உன்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேக்கணும் ரொம்பநாளா நினைச்சுகிட்டே
இருந்தேன். கேக்கட்டுமா?

என்கிட்ட ஏன் நாடக்கதனமா பேசற? தாராளமா கேளு.

ஏன் சுகந்தி நீ செத்து போன? அதுவும் உடம்புல மண்ணென்னை ஊத்திகிட்டு
உடம்பெல்லாம் கரியாகி... ச்சே நீ அப்படி செத்துருக்கவேணாம் சுகந்தி
உன்ன வாழையிலைல வச்சு பாக்கும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா?
அழுகை கேவலாக மாறி நிறுத்த முடியாத அளவுக்கு வந்துவிட்டது.

அவளும் மெல்லியதாக விசும்பினாள்.

ஏன் சுகந்தி நீ செத்துப்போன?

நான் காரணம் சொன்னா நீ தாங்க மாட்ட...

பரவால்ல சொல்லு.

ஒருநாள் எங்க வீட்டு கதவை திறந்து உள்ளே போனபோது உங்கப்பாவும்
எங்கம்மாவும் ஒரே கட்டில்ல... அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரிலடா... அதுக்குபிறகு அம்மா என்னை
அடிச்சிட்டே இருந்தா. எனக்கு வாழவே பிடிக்கலடா வேற வழியும் தெரில
அதான் செத்துபோயிட்டேன்.

உடம்பெல்லாம் வியர்த்து ஊற்றியது உடைகள் ஈரமாகி விட்டது. நான்கு பேர்
என்னை வெள்ளைத்துணியில் சுருட்டி குழிக்குள் இறக்கியது போல இருந்தது.

எல்லாம் கலைந்து எழுந்தபோது இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலவும்
என் அறை அந்தரத்தில் தொங்குவது போலவும் உணர்ந்தேன்.

எழுந்து சென்று ப்ரிட்ஜை திறந்து சில்லென்ற தண்ணீரை குடித்தேன்.

சத்தம் கேட்டு அம்மா விழித்துக்கொண்டாள். தலைமுடியை அள்ளி முடிச்சு
போட்டவாறே சுவற்றில் சுவிட்சை தேடி அழுத்தினாள்.

என் முகத்தை பார்த்ததும் கலவரமானாள். பேசாமல் சென்று படுக்கையில்
மீண்டும் விழுந்தேன்.

சாமியறையில் இருந்து விபூதியை அள்ளிவந்து நெற்றியில் பூசிவிட்டுச் சென்றாள்.

ஜன்னலின் வழியாக இரண்டு மூன்று கேள்விகள் சென்று கொண்டிருந்தன. ஏனோ
அவற்றை பின் தொடர்ந்து சென்று முழுக்கனவையும் நினைவுக்கு கொண்டு வர
முயற்சிக்க தோன்றவேயில்லை.