எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, March 23, 2008

டம்போ டுபாம்பி கவிதைகள்-மொழிபெயர்ப்பு

நேற்று காலை கென்யாவின் தெற்குப் பகுதியில் இருந்து வெளியாகும் ஸ்வாஹிலி
தின இதழை படித்துக் கொண்டிருந்தேன். உலகின் மிக வேகமாக அழிந்து வரும்
மொழிகளில் ஒன்றாக இதை போக்குவரத்துறை அறிவித்திருக்கிறது. விசேஷம்
என்னவென்றால் அந்த தினசரியின் மூன்றாம் பக்கத்தில் கென்ய நாட்டின் கவிஞர்
"டம்போ டுபாம்பி" ஒரு அருமையான கவிதையை வெளியிட்டிருந்தார்.
பொதுவாகவே எனக்கு தெரிந்து காதல் கவிதைகளை கக்கா போகும்போது
படிப்பதுதான் வழக்கம். அது ஒரு மலமிலக்கியாக கூட சில சமயம் எண்ணி
இருக்கிறேன். ஆகவே அந்த புகழ்பெற்ற கவிஞரின் கவிதையை வலக்கையால்
தள்ளி அடுத்த பக்கத்தை புரட்டினேன். ஆனால் கவிதைக்கு நடுவில் இடம்
பெற்றிருந்த மதுப்புட்டியின் நிறம் இழுத்ததால் மீண்டும் இடக்கையால் தாளினை
திருப்பி அக்கவிதையை படித்தேன். இதை மொழிபெயர்க்க மிகுந்த சிரமம்
எடுத்தேன் என்று அப்பட்டமான பொய்யை நீங்கள் நம்பவேண்டும்.



தவம்போல மதுவருந்துதல்

ஒவ்வொரு விடியலிலும் முதல் காரியமாக தண்ணீர்
அருந்தும் பழக்கம் எனக்கிருந்தது.
ஒவ்வொரு முறை கக்கா போகும்போதும் சுருட்டு
வலிக்கும் பழக்கம் உற்சாகமானது.
மிகவும் உற்சாகமான சமயங்களில் சீழ்க்கை அடிக்கும்
என் மனநிலையை சிலர்தான் புரிந்துகொள்வர்.
நூலினை முனைமடிக்காது படிக்கும் பழக்கமும் மடிக்கும்
வழக்கம் உள்ளவரை வெறுக்கும் பழக்கமும் எனக்கிருந்தது.
பசிக்கும்போது உணவருந்துவது என் முக்கியமான
பழக்கங்களில் ஒன்று.
அழகிய பெண்களை கண்டால் ஒருகணம் அப்படியே
நிலைகுத்தும் என் பார்வையின் பழக்கத்தை
தவிர்க்க முயன்று தோற்றே வந்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுவதை விரும்பவும் அதை வாசிப்பதை
வெறுப்பதும் என் முக்கியமான பழக்கம்.
இப்படி சொல்லிக்கொண்டிருப்பதே என் பழக்கம்.
ஒவ்வொரு மாலையிலும் காப்பியுடன் சுருட்டு பிடிப்பது
அபிமான பழக்கங்களில் ஒன்று.
ஒவ்வொரு இரவிலும் கிடார் வாசிக்கும் பழக்கமும் பின்
மதுவருந்துவது கூட என் பழக்கங்களில் ஒன்றுதான்.

ஆஹா இவனல்லவா கவிஞன்...

Monday, March 10, 2008

பிராந்து - நாஞ்சில் நாடன்



பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை.
மொத்தம் பதினெட்டு சிறுகதைகள்.

"உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்
காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத
எனது சிறுகதைகள்" கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின்
எந்தவித தன்மிகை இல்லாத முன்னுரை மேலும் நம்மை ஈர்க்கிறது.

பிராந்து பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே பிடித்து விட்டிருக்கும் காலக்
குறுக்கு வெட்டை கவலையோடு கவனித்துக் கொண்டிருப்பவன் கலைஞன். சுழன்று
சுழன்று கோட்டம் விழுந்து விட்டது போலும் பூமியின் அச்சில். இயற்கையின்
செயற்பாடுகளில், இயற்கையை அண்டியும் போராடியும் வாழும் மனித மனங்களின்
வெளிப்பாடுகளில் இந்த கோட்டம் வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது.

"இனி மீட்சியே இல்லை எனத் தோன்றும்போது ஒப்பவும் மறுக்கிறது கலைஞனின்
மனம் நம்பிக்கை என்பதோ நம்பிக்கை இழப்பு என்பதோ கையிலிருக்கும் தீவட்டி
வெளிச்சத்தில் காண முயல்வதுதானா? என் தீவட்டி எப்போதும் என் மனத்தில்:
என் கரங்களில் அல்ல. அது எரிக்கும் ஒளி பாய்ச்சும். எண்ணையற்று கருகிப்
புகைந்தும் போகும்".

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தடம் பதித்து விட்டவனா
இல்லை தடம் தொலைத்து விட்டவனா என்பது புரிபடுவதில்லை பல சமயம்.
எல்லாத்தடங்களையும் அழித்துவிட்டுக் காடு செழிக்க வேண்டும் மறுபடியும்.
நம்பித் தொடர்ந்த தடங்களெல்லாம் தப்பாக தெரிகின்றன தற்போது.

- முன்னுரையிலிருந்து-

புனைவுகள் கற்பனைகள் என்ற வடிவங்கள் என்றுமே எழுத்தாளனின் மிகையுணர்ச்சி
மற்றும் கற்பனைத்திறனை சார்ந்து எழுதப்படுவது. வாசகனை ஈர்க்க வேண்டும்
என்ற யுக்தியுடன் எழுதப்படுபவை யாவும் எவரும் திறமை வளர்த்து எழுதலாம்.
ஆனால் உண்மையை/நிகழ்வை/வலியை எந்த வித மிகையும் இல்லாமல் பதிவிக்க
சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் நாஞ்சில் நாடனின் கதைகள் மிக
அபூர்வமானது.

சிறுகதைகள் சினிமா போல அல்ல. சினிமாவின் கதாநாயகர்கள் செய்யும் ஒரே
விதமான சாகசங்கள், காதல்கள், பாடல்கள் எதுவுமே இல்லாதது. எந்த
வித அலங்காரமுமில்லாது சம்பவத்தை பதிவித்தலே சிறுகதைகள். இப்போது
நிறைய சிறுகதைகள் வருகின்றன எல்லாவற்றையும் சிறுகதை என்று
ஒப்புக்கொள்ளமுடியாது. சினிமாவுக்கும் கதைக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் பாத்திரங்களோடு தன்னையோ, பிறரையோ இணைத்து பின் உள்வாங்குதல்.
உங்களால் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத தருணத்தில் அந்த சிறுகதை/சினிமா உங்களை நெருங்காமலே சென்று விடும். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்கள்
சாகசங்கள் ஏதுமற்ற சாதாரண வாழ்வியல் மனிதர்கள். அதிகார/அலங்காரங்கள்
அற்ற பாத்திரங்கள் அவருடையது. பிராந்து என்றால் மனம்பிறழ்ந்த/பாதித்தவர்களை குறிப்பிடும் வார்த்தை. இச்சிறுகதைத் தொகுப்பின் ஒரு சிறுகதையாக பிராந்து
என்னும் சிறுகதையும் உண்டு. அதுவே இத்தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்கிறார். நாஞ்சிலின் தலைப்புகள் மீது எனக்கு தனி காதல் உண்டு உதாரணமாக


"என்பிலதனை வெயில் காயும்"
"எட்டுத்திக்கும் மதயானை"
"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை"

"'நள்' என்று ஒலிக்கும் யாமம்"

எளிமையாகவும் அதே சமயம் வலிமையான அர்த்தம் கொண்ட தலைப்புகள். எட்டு
திக்கும் மதயானை தலைப்பிற்காக வெகுநாள் காத்திருந்தாராம். எதோ ஒருநாள்
அதிகாலை உறக்கத்தில் திடீரென்று உதயமானது என்று அவரே சிலாகித்திருக்கிறார்.

இதில் மனதை மிகவும் கலங்க வைத்த சிறுகதையாக "சாலப்பரிந்து" என்பதனை சொல்லலாம். படித்து முடித்த பின் சொல்லமுடியாத பாரம் வந்து தொற்றிக்
கொண்டது. எல்லாமே அனுபவத்திலும்/நேரிலும் கண்டதை எழுதும் நாஞ்சில்
சாலப்பரிந்து என்பதையும் எங்கோ கண்டு எழுதியிருந்தால் என்று தோன்றும்போதே
நெஞ்சை கனக்க செய்கிறது. கதையின் சுருக்கம் இதுதான் வயதான தாய் தனக்கும்
தன் குடும்பத்தினருக்கு உபயோகப் படாதபோது மகன், மருமகள் தன் மீது காட்டும்
உதாசீனம். ஒருகட்டத்திற்கு மேல் படுத்த படுக்கையாகி கிடக்கையில் இறந்து
விட்டாள் என்று கருதி ஊரெல்லாம் சொல்லப்போக அவள் இறவாமல் சீராக
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். "ஊரெல்லாம் செத்துட்டான்னு சொல்லியாச்சு
விடியறதுக்குள்ள மூச்சு அடங்கற மாதிரி தெரியல" பாத்ரூம்ல கொண்டு வச்சு
நாலு வாளி தண்ணி ஊத்துங்க சவம் அப்பவாச்சும் சாகுதான்னு பாக்கலாம்னு
மருமகள் சொல்கிறாள். மகனும் வேறு வழியின்றி காற்று போன பலூன் மாதிரி
இருக்கும் கிழவியை தூக்கி வந்து கழிவறையில் வைத்து தண்ணீர் ஊற்றுகிறான்.
"கிழவி சிரித்த மாதிரியே இறக்கிறாள்" இப்படி முடியும் கதையை யார்
படித்தாலும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு மனது அலைபாயும்.

வட்டார வழக்குகளில் மட்டும் எழுதி மொழியை சிதைப்பவர் என்ற குற்றச்சாட்டு
இவர் மீது உண்டு. அது மிகவும் தவறான குற்றச்சாட்டு வட்டார வழக்கிற்கும்
உருவம் உண்டு மொழியை சிதைப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கதையின்
தன்மைக்கு எது பொருந்துகிறது என்பதை படைப்பாளிதான் தேர்ந்தெடுக்கவேண்டும்
அந்த வகையில் தன் நிலைப்பாட்டின் மேல் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது.
இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் கூட சாதாரணமாக இருந்தாலும் அசாதாரண
தன்மை கொண்டவையாக இருக்கும்.

பேப்பர், பேனா, தபால் தலை, அஞ்சல் உறைக்கு கூட போதுமானதாக
இல்லாதவாறுதான் சிறுகதை படைப்பாளிக்கு சன்மானம் அளிக்கப்படும் சூழல்
நமது. உலகத்தரம் மிக்க படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில்
எத்தனையோ படைப்பாளிகளின் வாழ்க்கைத் தரம் இன்னமும் சிக்கலான
நிலையில்தான் இருக்கிறது. "நேர்காணல்" மற்றும் "காக்கைக்கு கூகை கூறியது"
போன்ற சிறுகதை எந்த மிகையுமில்லாமல் படைப்பட்டிருக்கிறது. நடப்பு
உலகத்தில் கூட உதாரணங்கள் கூறலாம் நல்லநாள் என்றில்லாமல் வேறு
எந்த நாளிலோ கூட நடிக,நடிகர்கள்,அரசியல்வாதி தவிர்த்து எந்த தொலைக்
காட்சியிலாவது எழுத்தாளனின் நேர்காணலை பார்த்திருக்கிறீர்களா? எந்த
எழுத்தாளனும் தொலைக்காட்சி நேர்காணலை எதிர்பார்த்து இல்லாவிட்டாலும்
குறைந்தபட்ச அங்கீகாரம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதுதான்
நேர்காணலின் கதை.

சில விஷயங்கள் மிகவும் சாதாரணமாகவும் சில நல்லெண்ண முயற்சிகள்
அபாயகரமான விளைவுகளையும் தரக்கூடும். பேருந்தை தவற விட்டு வருகையில்
சில திருடர்கள் தேங்காய் களவாடுவதை பார்க்கிறான். புகார் சொல்லபோனால்
கண்டும் காணாமல் இருக்க கடைசியில் திருடனே அவனை கூப்பிட்டு இளநீர்
வெட்டி தருகிறான்.

சாகித்ய அகாடமி விருதை புறந்தள்ளும் கும்பமுனி என்கிற எழுத்தாளரின் வேதனை.
இக்கதையில் வரும் எள்ளல் அசாத்தியமானது.

சுய மதிப்பீடுகளின் சாயம் இழந்த விட்ட மனிதர்களை காணச்சகியாமல் அரசு
வேலையை ராஜினாமா செய்த மந்திரமூர்த்திக்கு ஊர் வைத்த பெயர் "பிராந்து"

கதைகளின் ஊடாக இவர் தரும் நகைச்சுவை மிகுந்த சிரிப்பை வரவழைக்க கூடியது.
இவருக்கு மட்டுமே சாத்தியமான நுண்ணிய நகைச்சுவை உணர்வு. பொதுவாக
தென்பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளில் இவற்றை காணலாம். இவரின் பாதை
தனித்து தென்படும்.

வாலி, சுக்ரீவன், அங்கதன் வதைப்படலம் கதையில் கல்லூரியின் பாடத்திட்டதில்
உள்ள எழுத்தாளன் அப்பல்கலைக்கழகத்து உரையாற்ற அழைக்கப்படுகிறான். போக
வர ஆகும் செலவு அறுநூறு ஆனால் அங்கே சன்மானமாக தரப்படுவதோ கவரின்
உள் மடித்து வைத்த பத்து பத்து ரூபாய் நோட்டுகள். சம்பளமில்லாத விடுப்பில்
பயணம் சென்று வரும் சன்மானம் இதுதான். படைப்பாளியின் அனுமதியின்றி
பாடத்திட்டத்தில் சேர்த்த கதையை யாரோ ஒருவர் தெரியப்படுத்துவதன் மூலம்
தெரிந்துகொள்வது என இக்கதை தமிழ்ச்சுழலை நினைவுபடுத்துகிறது.

தொகுப்பில் உள்ள அனைத்து மிகத்தரமான சிறுகதைகள்.

விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 100
நன்றி Anyindian.com

ஸ்ருதி கமல்ஹாசன், சிம்பு, தருண்கோபி மற்றும் வேதிகா





ஒனிடா டீவி என்றாலே விளம்பரம் வித்தியாசமாக இருக்கும். சில வருடங்களுக்கு
முந்திய ஓனிடா டீவி விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வெள்ளைக்கார பெண்மணி
வாயை அகல விரித்து பெருங்குரலெடுத்து "ஓ..." வென்று கத்துவார் (பாடுவார்)
அப்போது அவருக்கு முன்னே "சரக்கடிக்க உபயோகப்படும்" மெல்லிய கண்ணாடி
தம்ளர் காட்டப்படும். வெ.பெண்மணி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது
கேமரா பின்னோக்கி நகரும். சோபாவில் உட்கார்ந்து கண்ணாடி தம்ளரை கையில்
பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பார். தொலைக்காட்சியில் அப்பெண் மேலும் உச்சஸ்தாயில் பாடும்
போது இவர் கையில் பிடித்திருக்கும் கண்ணாடி தம்ளர் படீரென உடையும்.
ஒனிடா தொலைக்காட்சியின் "ஒலித்திறன்" அப்படிப்பட்டது.

சமீபத்தில் ஸ்ருதி கமல்ஹாசனின் பேட்டியை பார்த்தபோது மேற்படி பெண்மணியின்
குரலுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை. பேட்டி கண்டவர் பெயர் ஞாபகம்
இல்லை (சீரியல்களின் பெண்களுக்கு அடுத்தபடியாக இவர்தான் அதிகம் கண்
கசக்கியவர்) "தென்பாண்டி சீமையிலே" பாடலை மேற்படி பெண்மணியின் குரலில்
அம்மணி பாட ஆரம்பிக்க அதிர்ந்து போனேன் நான். எவ்வளவு உணர்ச்சியான
பாடல இப்படி காமெடி பண்ணிட்டாங்களேன்னு ஆனால் அவங்க கீபோர்டு
வாசிச்சது அவ்வளவு அழகா இருந்தது. அவங்களும்தான்.

பாடலை பாடி முடிச்சதும் பேட்டி எடுத்தவர் சொல்றார். "அய்யோ இந்த பாடல
இவ்ளோ அழகா பாடமுடியும்னு எங்களுக்கு தெரியாமலே போச்சு. எனிவே ரொம்ப
தேங்ஸ் ஆவ்சம், எக்சலண்ட்னு ரொம்ப ஜாஸ்தி கூவினார். (டேய் வுட்டா கால்லயே
வுழுந்துடுவ போலருக்கு). ரெண்டு பேருல யாரு வாசிச்சதுன்னு ஒரே குழப்பாச்சு.
சும்மா சொல்லக்கூடாது நல்லா கீபோர்டு வாசிக்கறாங்க. ஆங்கிலப்பாடலுக்கு ஏற்ற
குரல். பேசும்போது அப்படியே பெண்மை கலந்த கமலினை ஞாபகபடுத்துகிறார்.

என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? "நான் பொய் சொல்ல
மாட்டென், திருட மாட்டேன், கோவம் ஆக மாட்டேன்" இதெல்லாம் யார்
சொன்னாலும் பொய்.
(இந்த இடத்துல அப்படியே கமல் ஸ்டைல்)என்னைப் பத்தி
இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கேளுங்க அப்ப சொல்றேன். பேசும்போது தலைய
சாய்ச்சு. குனிஞ்சு, முகத்தை சுழிச்சி இந்த மாதிரி எல்லாத்தையும் குழந்தை
மாதிரி செய்தது ரசிக்க முடிஞ்சது.

லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக் கத்துகிட்டிங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக்
கத்துகிட்டிங்கன்னு ஒரே லாஸ் ஏஞ்சல்ஸ் புராணமா விட்டுகிட்டிருந்தாரு கேள்வி
கேட்டவர் நான் அவர ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். இந்தியாவிலருந்து
ஸ்ருதிதான் மொதமொத அமெரிக்கா போனாங்களா/போய் மியூசிக் கத்துகிட்டாங்ளா?
ஏன்யா இந்த மாதிரி பெரிய இடம்ன உடனே உடம்ப வளைச்சு கேள்வி கேக்கறிங்க?
ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி அஜித் பேட்டி கலைஞர் டீவில வரும்போது
என்னவோ அவர கடவுள் ரேஞ்சுக்கு வச்சு காபந்து பண்ணாங்க. இந்த பொண்ணு
இன்னும் அதிசயிக்கற மாதிரி ஒண்ணூமே பண்ணல. அதுக்குள்ள ஏன்யா இப்படி
மீடியா லைட்ட போடறிங்க?.

இசைத்துறைய பொறுத்தவரை இவர் என்ன சாதிப்பார் என்று தெரியவில்லை.
ஆனால் சினிமாத்துறையில் நிச்சயமாக சாதிப்பார். புலிக்கு பிறந்தது கண்டிப்பாக
பூனையாக இருக்காது. :) மியாவ்வ்

அடுத்ததா அனுஹாசன் மேல பயங்கர கொலவெறில இருக்கேன். காளைனு ஒரு
வெற்றி படமாம் அதுல நடிச்ச சொம்பு, வேதிகா மற்றும் இயக்குனர கூப்பிட்டு
காபி வித் அனுல பேச விட்டுருக்காங்க. ஒரு மொக்க படத்த எடுத்ததுமில்லாம
அத பத்தி பேசறதுக்கு ஒரு நிகழ்ச்சி அத ஊர் உலகம் பாக்கறதுக்கு ஒரு
தொலைகாட்சி மற்றும் இணையம். என்ன எழவுடா சாமி.

நானும் தெரியாமதான் பாக்கறேன் டீவி புரொக்ராம்ன உடனே இந்த கீரோயின்லாம்
எங்கருந்துதான் இந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ் வாங்கறாங்களோ தெரில. ஃபேன் ஓடாத
இடத்துல, காற்றோட்டம் அதிகமில்லாத இடத்துல கூட அவுங்க முடி அலைபாயும்
உடனே அத எடுத்து காதுல சொருவுவாங்க. இந்த மாதிரி அக்குள் காட்டி பேட்டி
குடுத்தின்னா போட்டிய எடுத்துடுவம்னு மிரட்டினாதான் ஒழுங்கா பெக்கெ பெக்கெனு
சிரிக்காம இருக்கும்.

தருண்கோபி எடுத்த திமிரு கன்னாபின்னானு ஓடுச்சாம். நான் சொல்வேன் பேரரசு
வரிசைல இவரும் ஒரு விஷச்செடி.

டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...

இப்படிக்கு
வெட்டியாக ஆபிஸ் நேரத்தில் youtube வீடியோ பார்த்து பதிவெழுதும் சங்கம்.

Sunday, March 09, 2008

நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!

தமிழக மக்களுக்கு ஏற்கனவே பரபரப்பான அறிமுகம் தந்தவரும் "கானல் நீர்"
படத்தில் அதிரடியாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவருமாகிய
முகவை குமார் என்கிற JK ரித்திஸ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை
விடுத்துள்ளார். தனது முதல் படம் தந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளும்
முன்பே அடுத்த படத்தையும் அறிவித்துள்ளது கண்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என் பங்களிப்பு
கணிசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிப்பேன்
என அறிவித்துள்ளதால் குழந்தைகள் முதல் பல்போன ஆயாவரை அனைவரும்
குலை நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் குய்யோ முறையோ என்று
தெரிவிக்கிறது.

அவரது அடுத்தபடத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக
அவரே குறிப்பிட்டு சிலாகித்தார்.
"பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" என்ற தலைப்பை
கேட்டவுடன் அவருக்கு பிடித்துவிட்டதாகவும் படத்தில் பத்தாவது படிக்கும் பையன்
வேடத்தில் நடிப்பதால் அதற்கேற்றவாறு முகத்தில் மேக்கப் அப்ப வேண்டும்
அதனால் கொட்டாம்பட்டி அருகிலிருந்து தெருக்கூத்து நடிகர்களுக்கு பவுடர்
போட்டு பளபளப்பாக்கும் மேக்கப் நிபுணர்களை ஸ்பெசலாக வரவழைப்பதாக
சொன்னார். படத்தின் அவரது மேக்கப் தனியாக தெரிய வேண்டும்
என்று இந்த ஏற்பாடாம்.

படம் வெகு ரகசியமாக எடுக்கப்படுவதால், சின்ன ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
கூட வெளிவரவில்லை. அதனால் அங்க இங்க பொறுக்கி பொறுக்கி எடுத்த
போட்டோக்கள்



பிகரின் பின்னால் கருஞ்சிறுத்தையென நிற்பவர்தான் ஜேகே ரித்திஸ், நன்றாக
உற்றூப்பாருங்கள். (என்ன கொடும்ம்ம சார் இதுனுலாம் புலம்ப கூடாது)

இங்கே ஜேகே ரித்திஸின் புஜபல
பராக்கிரமத்தை (அக்கிரமம்) காணலாம் மேலும் தனது அடுத்த ப்ராஜெக்ட் மற்றும்
அரசியல், சமூகம் குறித்த தனது பங்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இணைய முகவரி அளித்திருக்கிறார். அவருக்கு
நீங்கள் மடல் செய்யலாம். உங்களுடைய சந்தேகங்களை அவர் தீர்ப்பார்.

பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இரு
கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் தனது எவர்சில்வர் பாத்திரத்துக்கு பங்கம்
வராமல் இருப்பதால் ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும் இணைந்த கைகள், அக்னி
நட்சத்திராம், சின்னதம்பி பெரியதம்பி வரிசையில் இதும் மெகா வெற்றிப்படமாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு இருப்பதால் தன்னுடைய கால்ஷீட், பெட்ஷீட் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வரை எதுவாக இருந்தாலும்
அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.


ரித்திஸ் ரசிகராக என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான் பேரரசு இயக்கத்தில்
விஜய டோ ராஜேந்தரும், ரித்திஸும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே!

(கற்பனை பண்ணும்போதே உடம்பு சிலிர்க்குது)
பார்ப்போம் எம் கனவு பலிக்கிறதா என்று.

இப்படிக்கு உலக நடிப்பு சூறாவலி ரித்திஸ் ரசிகர் மன்றம்
அபுதாபி கிளை
கொல்லம்பாளையம் ரோடு
பொட்டிக்கடை சந்து
போஸ்டாபீஸ் எதிரில்
துபாய் 6003236568941115