எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது தம்பியிடமிருந்து.
//வலையுலகத்துல எனக்கு ரோல்மாடலா எடுத்துகிட்டது உங்களத்தான்.// அப்படின்னு எழுதி என்னை உச்சி குளிர வச்சிருந்தான். அடடா!! எந்த மாதிரின்னு
நெனச்சு படிச்சா என்ன எழுதியிருந்தான் தெரியுமா?
//பதிவெழுத ஆரம்பிச்ச புதுசுல நான் எழுதின கன்றாவி கவுஜைக்கும் கமெண்ட்
போட்டு ஊக்கப்படுத்தியவர் நீங்கள்.//
அதாவது கண்றாவி கவுஜைக்கும் பின்னூட்டம் போடுற தறுதலைப் பயலுவ எல்லாமே
பதிவு போடுதானுவளே, நாம ஏன் எழுதக்கூடாதுன்னு நெனச்சிருக்கான். நல்லா இருடே!!
இதுதான் தம்பியோட எழுத்து மகிமைன்னு சொல்லலாம். எலி போல இருந்துக்கிட்டு
எருமை போல சாணி போடுறது'ன்னு சொல்லுவாங்க நம்மூருல. தம்பி கதிரும்
அப்படித்தான். ஒண்ணும் தெரியாத மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஊமக்குசும்பு
பண்றதுன்னா அல்வா திங்குற மாதிரி நம்ம பயலுக்கு.
நாமதான் எழுதுறோமே, நம்மளத்தான் வாசிக்கிறாங்களேன்னு நெனைக்க
ஆரம்பிச்சுட்டா சட்டில எல்லாம் தீர்ந்து போய் அகப்பையில ஒண்ணுமே வராமலேயே போயிடும். ஆனா தம்பி அப்படியில்ல. வாசிக்கணும், இன்னும் புதுசா தெரிஞ்சிக்கணும்,
தெரியாததை தெரியாதுன்னு சொல்லி கேட்டுத் தெரிஞ்சிக்கணும்கற ஆர்வம் அவன்
கிட்ட ரொம்பவே இருக்கு. (இல்லேன்னா 40 நிமிசம் நான் போடுற
மொக்கையையெல்லாம் தாங்கிக்க முடியுமா என்ன?) அந்த ஆர்வமும், வாசிப்பும்தான் எழுதணும்கற அவனோட முயற்சியை இப்ப மத்தவங்களும் கவனிக்க வைக்குற
அளவுக்கு வளர்த்திருக்குன்னு சொன்னா அதுல பொய்யில்லை.
எழுதுறவங்களுக்கு தன் எழுத்து மேல கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும். ஒரே
மாதிரியே எழுதிக்கிட்டிருக்காம பல விசயங்களையும் எழுத முயற்சிக்கணும்.
அதுக்கு தன் எழுத்து மேல நம்பிக்கை இருந்தா மட்டும்தான் முடியும். ரொம்ப
மொக்கை மட்டும் இல்லாம கவுஜை, கதை, வாசிப்பனுபவம், திரைப்பட
அனுபவம்னு வித்தியாசமா எழுதும்போதுதான் எழுத்து கொஞ்சமாவது
மேம்படும்.அப்படி நம்ம எழுத்து கொஞ்சமாவது தேறியிருக்கான்னு நமக்கே
வஞ்சகம் இல்லாம நாம கேட்டுக்கணும். அது ஒருவிதமான சுயபரிசோதனை.
நாம எழுதுற எழுத்து நமக்கே திருப்தி இல்லாம போகலாம்.ஆனா, அதை
உடைச்சு வெளிய வரதுக்குக் கொஞ்சம் பொறுமையும் முயற்சியும்
அவதானிப்பும் அவசியம். இதெல்லாம் தம்பி கிட்ட நான் பார்த்திருக்கேன்.
தன் எழுத்து தனது ஆரம்ப காலத்திலிருந்து வெகுவாக மாறியிருப்பதை அவராலேயே
உணர முடிவது ஆரோக்கியமான விசயம். முதல் தடவை பதிவர் சந்திப்பு
நடந்தபோது ஒன்றுமே பேசாமலிருந்தாலும் விசயங்களையும் விவாதங்களையும்
கூர்மையாக அவர் அவதானிக்கிறார் என்பதை அவரது உடல்மொழி உணர்த்தியது.
இந்த அவதானிப்பின் விளைவுகளைத்தான் இன்று தம்பியை வாசிக்கும் கூட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன்.
மனிதர்களுக்கு அடுத்தவர்களின் ஊனங்கள் எப்பவும் கேலிப்பொருள்தான் அது
அத்தகைய மனித மனங்களில் தோற்றுவிக்கும் ரணங்களை எவரும் யோசிப்பதில்லை.
யோசிக்க வைக்கிறது பூனைகளுடன் உறங்கும் கோபால் கதை சிறுகதை
எழுதுவதென்பது அத்தனை எளிய விசயமல்ல. அதுவும் பதிவில் பத்துவரிக்கு மேல்
எழுதினால் எவரும் படிக்க மாட்டார்கள் என்ற உண்மை தெரிந்தும் வாசிக்க
வைக்க வேண்டுமென்றால் அந்த எழுத்தில் ஈர்ப்பு இருந்தாக வேண்டும். தம்பியின்
இந்தக் கதையில் அந்த ஈர்ப்பு இயல்பாக வந்து விடுகிறது. இதைத்தான் எழுத்தில்
தெரியும் மாற்றம் எனக்குறிப்பிட்டேன்
இராக் என்ற தேசமே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது வல்லரசுகளின் ஏகாதிபத்திய சிந்தனைகளால். அங்கு வாழ்பவர்களின் அன்றாட வாழ்க்கை குறித்த நம் சிந்தனை செய்திகளோடு போய்விடுகிறது. பாதிக்கப்பட்டவரின் குரலிலேயே ஒரு பதிவிட்டிருப்பது
நன்றாக இருக்கிறது. அந்தப் பதிவின் மூலமாக எந்தக் கருத்தையும் உட்புகுத்தாமல் ஒரு யதார்த்தவாதியின் மௌனம் போல கதிர் தனது இயலாமையை
வெளீப்படுத்தியிருப்பதுதான் அழகு
//சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம்
பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச
காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு
பிடிச்சது. // இப்படி சொல்ற கதிரை நம்ப முடியாது. வெயில் படத்துக்கு இவர்
எழுதியிருக்குற விமர்சனம் தேர்ந்த கலைரசிகனுடைய முத்ரிச்சியோடு
எழுதப்பட்டிருக்கிறது.
கிராமத்தில் வளர்ந்தவர்களுக்குச் சொல்வதற்கு ஏகப்பட்ட விசயங்கள் நினைவலைகளாக மனதிற்குள் ஒளிந்து கொண்டேயிருக்கும். நகரத்து மனிதர்களின்
இறுக்கமில்லாத இயல்பான மனிதர்களும், மண் வாசம் தொலைக்காத
கலைகளும், தங்களுக்கேயுரித்தான தனித்துவங்களுமாக இருக்கும் கிராமத்திலிருந்து
வருபவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே சுகம்தான். தெருக்கூத்து, தீபாவளி பதிவுகள் இம்மாதிரி நினைவலைகளைச் சுமந்து வருவது நல்ல
வாசிப்பனுபவமாக அமைகிறது.
இவரோட விசிசி கிரிக்கெட் கிளப் ஒரு அழகான நினைவோடை. கவுண்டமணி
மாதிரி அந்த நாய் இந்த நாய் என்று சொல்வதைத் தவிர்த்து எழுதியிருந்தால்
சுவையான நகைச்சுவை கட்டுரைதான். இம்மாதிரி கிரிக்கெட் கிளப்கள் இல்லாமல்
இன்றைக்கு கிராமங்களே கிடையாது. ஆனாலும் இம்மாதிரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அதீதமான கற்பனைகளை நகைச்சுவை என்ற பெயரில் கலந்து
விடும் அபாயம் இருக்கிறது. மாறாக, உள்ளதை அப்படியே எளிய புனைவோடு சொல்லும்போது இயல்பான நகைச்சுவை வந்துவிடுகிறது. நல்ல வேளையாக கதிர்
இதில் இரண்டாவது வகை
//
யாருடைய கருத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது விவாதங்கள் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை// என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு கூடவே, இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைதான் யாருடைய நம்பிக்கைகளையோ பாதிப்பது போல் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன். என்று தடாலடியாக டிஸ்கி போட்டு தப்பிக்க நினைப்பது ஒருவித
தப்பித்தலாகவே தோன்றுகிறது. சொல்ல நினைப்பதை மட்டும் சொல்லிச் சென்றாலே போதுமானது. அடுத்தவர் மனம் புண்படுமென்றுபட்டால் அதை எழுதாமலே
இருப்பதுதானே சிறப்பு?!
வறட்டி அனுபவங்களும் சுவையான நினைவோடைதான். அதிலும் இதுபோன்றதொரு அனாவசியமான டிஸ்கி. குறிகளும் குறியீடுகளும்தான் எழுத்துக்களுக்கு ஜீவன் தருவதாக எண்ணும் காலகட்டத்தில் சாணி தட்டுவதை அதுவும் கிராமத்தின் ஆதாரமான ஒரு விசயத்தை 'உவ்வே' என்று சொல்வதென்னவோ தாழ்வுமனப்பான்மையாகவே தோன்றுகிறது. 'இப்படித்தான்யா எங்க கிராமத்தில..' என்று
அழுத்தமாகவும் பெருமையாகவும் சொல்லாததற்காக அவர் முதுகில் ரெண்டுநாளைக்கு
வறட்டி தட்டலாமா என்று யோசிக்கிறேன்.
ஓவ்வொரு விளம்பரப்படத்துக்குப் பின்னாலயும் ஒவ்வொரு ரகசியம் ஓளிஞ்சிருக்கலாம்.
அதை உருவாக்க ஒவ்வொருத்தரும் என்னென்னவோ கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனா
இனிமே ரஸ்னா விளம்பரம் பார்த்தாலே சிரிப்புதான் வரும்போல.
ஆனா, தேவையில்லாம இங்கயும் இது கவுச்சி பதிவுன்னு போட்டு ஏன் புனித பிம்ப
வேஷம் போடணும்னுதான் தெரியலை. என்னமோ யாருமே எம்ஜியாரைப்
பார்க்க போவாத மாதிரி.. இனிமே இப்படி ஒரு டிஸ்கி போட்டா கதிர்
கழுவுறதுக்கு வாழ்நாள் பூரா ரஸ்னாதான்.:-)))
'டயல்டு லிஸ்ட்டு' ன்னு ஒரு கவுஜை. 'சுழற்றப்பட்ட எண்கள்'னு கவிதையில
சொல்லத் தெரியுது? தலைப்புலயும அப்படியே சொன்னா என்னவாம்? இங்கிலிபீசு தேவைப்படுதோ? 'அகனாஸ்டிக்' னு தலைப்பு வச்சதை புரிஞ்சிக்க முடியுது.
இதுக்கான அவசியம்தான் புரியலை.
// சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா
விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொது அறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச
காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது.// விமர்சனம்னா வேற என்னன்னு தம்பி நெனச்சிருக்காருன்னு அவர்கிட்டதான் கேக்கணும். இப்படிச் சொன்னாலும் வெயில், Three Burials எல்லாம் நல்லாவே விமர்சனம் பண்ணியிருக்காரு தம்பி. குறிப்பா வெயில் திரைப்படம் பற்றி
எழுதும்போது வாழ்க்கையில் எல்லா நிலையிலும் தோற்றவனின் கதை என்ற
அவரது கோணம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.
ஊருக்கு ஊரு எது இருக்கோ இல்லையோ டீக்கடை தமிழகத்துல கட்டாயம்
இருக்கும். அந்த டீக்கடையை வச்சு நக்கலான பதிவு. சினிமா விளம்பரம்
மொத பக்கத்துல போடாட்டி என்னன்னு தம்பி கேட்டாலும், அப்புறம் பத்திரிகை
நடத்த தம்பியா காசு கொடுப்பார்னு பத்திரிகை நிர்வாகம் கேக்கும். சில
விசயங்களை நாம் கேள்வி கேக்கவே முடியாதுங்கறதை தம்பி மறந்துட்டாலும்
சுவாரஸ்யமான பதிவுதான்
வளைகுடா வாழ்க்கை சிலருக்கு சொர்க்கமாக இருந்தாலும் கட்டிடத் தொழிலாளர்களைப் போன்றவர்களுக்கு அது இன்னமும் தீர்க்கமுடியாத ஒரு சோகத்தின் எச்சம்தான்.
இதனை யார் எடுத்துச் சொன்னாலும் அதிலுள்ள யதார்த்தம் உறைக்கும்.
தம்பி சொல்லும்போதும் உறைக்கிறது
விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.
நாங்களும் வாழ்கிறோம்.
இதை சிறந்த கவிதை என்று சொல்ல முடியாவிட்டாலும் நேர்மையான உரைவீச்சாக ஒப்புக்கொள்ள முடியும்
இப்படிப் பரந்து கிடக்கிறது தம்பியின் பதிவுலக படைப்புகள். ஒரே திசையில் யோசித்துக்கொண்டு ஒரே மாதிரியான விசயங்களையே எழுதாமல்
எல்லாத்துறைகளிலும் கால் பதிக்க எண்ணும் தம்பியின் இந்த நூறு பதிவுகள் அவர்
எழுத்து மெருகேறியிருப்பதையே உணர்த்துகின்றன. எனது இந்த வாசிப்புரையின்
அவசியம் இல்லாமலேயே தம்பியின் பதிவை வாசிப்பவர்களுக்கு
இது நன்றாகப் புரியும்.
சொல்லுவதில் தெளிவும், லேசான எள்ளலும், வலிந்து மெனக்கெடாத நகைச்சுவையும்
தம்பியின் எழுத்துக்களின் சிறப்பாக நான் கருதுகிறேன்.இந்த எழுத்து மேலும்
வளம்பெறும் என நம்புகிறேன் - வாழ்த்துகிறேன்
இன்னும் சிறப்பான கதைகள் தம்பியிடமிருந்து வருமென்ற நம்பிக்கையும் இன்னும்
அதிகமான வாசிப்பனுபவம் அவரது எழுத்திற்கு மேலும் மெருகூட்டும் என்ற
நம்பிக்கையும் எனக்கிருக்கிறது - உங்களைப் போலவே
பண்புடன்
ஆசிப் மீரான்
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Showing posts with label ஆசிப் மீரான். Show all posts
Showing posts with label ஆசிப் மீரான். Show all posts
Thursday, August 30, 2007
Subscribe to:
Posts (Atom)