எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 31, 2007

அழகுன்னு எதை சொல்றாங்க???

என்னோட டெஸ்க்டாப்ல பாவனா, ஸ்க்ரீன்சேவர்ல பாவனா, போல்டருக்கெல்லாம்
பாவனான்னு பேரு தொட்டு எங்க பாத்தாலும் ஒரே பாவனா மயம்தான். இத
பாத்துட்டு நம்ம பய ஒருத்தன் என்னடா ஒரு மார்க்கமா இருக்கன்னு
கேட்டுபுட்டான். ரொம்ப அழகா இருக்கா மாப்ள அதான் பக்கத்துலயே வெச்சி
பாத்துகிட்டுருக்கேன்.

ஏண்டா வீணா போனவனே பருவத்துல பன்னிகுட்டி கூட அழகா இருக்கும் அதுக்காக
மடில எடுத்து வச்சி கொஞ்சுவியா? இதெல்லாம் ஒரு மூஞ்சி வந்துட்டான் அழகுன்னு
சொல்லிகிட்டு தூக்குடா அதையெல்லாம்.

"இவனுக்கு தெரியுமா பாவனாவோட அருமை". இருந்தாலும் அவன் சொல்றதுல
அர்த்தம் இருக்கத்தான் செய்யிது.

ரொம்ப நாளா இந்த டவுட்டு இருக்குங்க எனக்கு. சின்ன வயசில பள்ளியில் எனக்கு
பக்கத்துல உக்காந்திருந்த கவிதா ரொம்ப அழகுன்னு நினைச்சேன். அவள விட சூப்பரா
அமுதான்னு ஒருத்தி புதுசா வந்த உடனே கவிதா காணாம போயிட்டா. அப்புறம்
கஸ்தூரி டீச்சர், குஷ்பு, சுகன்யா, பானுப்பிரியா, மனீஷா, நேத்து அசின் இன்னிக்கு
பாவனா (கடைசி பேர சொன்ன வுடனே புதுசா பொறந்தமாதிரி இருக்கு) இப்படி
மாறிகிட்டே இருக்குங்க. அழகை நடிகைகள் முகத்துல நிரந்தரமா பாக்க முடியாதுன்னு
ஆகிப்போச்சு. நிலையான அழகுன்னு ஒண்ணு கிடையவே கிடையாதான்னு
மனசு கேட்டுகிட்டே இருக்கு

Photo Sharing and Video Hosting at Photobucket

மேல சொன்னதெல்லாம் திடீர்னு ஒரு நாள் காணாமல் போயிடுது. தினமும் ஸ்கூல்
போகும்போது அம்மா தலை சீவி விட்டு பவுடர் அடிச்சி விடுவாங்க அப்பலாம்
அடிக்கடி அவங்க கூந்தலை முகர்ந்து பார்ப்பேன் லேசான மல்லிகை மணம் வரும்
அதை இப்ப நினைச்சாலும் அழகான ஒரு நினைவா இருக்கு. பள்ளி கூடத்துல
என் வகுப்பு பெண்களின் ரிப்பன் முடிச்சை பார்த்தா படக்குனு பிரிச்சி விட்டுடுவேன்
இதுவே ஒரு பழக்கமாகி ஒரு முறை பஸ்ல ஒரு பொண்ணு ரிப்பன என்னையறியாமல்
பிரிச்சி விட்டுட்டேன் ஒரே ரசாபாசமாகி போச்சு இப்ப அதை நினைச்சு பார்த்தா
சின்னதா ஒரு சிரிப்பு வருது இதை அழகுன்னு சொல்லமாமான்னு தெரில.
தனிமையில் இருக்கும்போது இந்த மாதிரி பழசை நினைச்சி பார்த்து சிரிப்பது ஒரு
வகை அழகா.

எது அழகுன்னு தெரிஞ்சி ஒண்ணும் பண்ண போறதில்ல நானு இருந்தாலும் டவுட்டு
வந்தா கிளியர் பண்ணிக்கனும்ல சரி பக்கத்துல யார்கிட்ட கேக்கலாம்னு பாத்தா
நம்மள கண்டாவே அவனவன் தெறிச்சி ஓடறான். ஆன்லைன்ல யாரு இருந்தாலும்
கேட்டு விடலாம்னு போய் கேட்டேன். முதல்ல சிக்கினது நம்ம ராயலு.

தம்பி: ஏம்பா ராயலு அழகுன்னு எதை நீ நினைக்கற?

ராயல்: என்னோட புரொபைல் போய் பாரு அங்க ஒரு போட்டோ இருக்கு அதுதான்
அழகுன்னு நான் நினைக்கறேன்.

அங்க போய் பாத்தா அந்தாளு போட்டோவ போட்டு வச்சிருக்காரு. ரொம்ப
தலக்கனம் பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு. கோபியையும் வெட்டியையும்
கேட்டா என்னைய நம்பி பதில சொல்ல மாட்டேங்கறாங்க மாறா நாம ஒரு கேள்வி
கேட்டதுக்கு திருப்பி ஒம்பது கேள்வி கேட்டு நம்மள சாகடிக்கறாங்க.சரி நிறைய
அனுபவம் இருக்கற பெரியவர கேட்டா சரியா சொல்லுவாருன்னு நம்ம கொத்தனாரை
அணுகினேன்.

தம்பி: கொத்ஸ் ஒரு டவுட்டு

கொத்ஸ்: சொல்லுப்பா...

தம்பி: அழகுன்னு எதை சொல்றாங்க?

கொத்ஸ்: எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில்
ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு
படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு.

தம்பி: இதுவூம் நல்லாதான் இருக்கு. ரெண்டு நாளா பாவனாதான் அழகுன்னு
தோணுதுங்க பாஸ், இத பத்தி என்ன நினைக்கறிங்க?

கொத்ஸ்: மன்னிக்கவும் யாரு பாவனா?

தம்பி: என்ன கொத்ஸ் இப்படி சொல்லிட்டிங்க. பாவனாவை தெரிலன்னு சொன்னா
இளைஞர்கள் கொந்தளிச்சி போயிடுவாங்க.

கொத்ஸ்: யப்பா தெரியாத விஷயத்தைத் தெரியலைன்னு சொன்னா அது தப்புன்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்க நினைக்கறது தப்புன்னு தெரியாமலேயே நினைக்கறதுதான் தப்பு
வாழ்க விசு! அவரோட சில வசனங்களும் அழகு.

தம்பி:(புரிலன்னு சொன்னா இன்னும் விளக்குவாரோ!!) அழகுக்கு நீங்க சொன்ன
விளக்கம் அழகு, நாளைக்கும் இதே மாதிரி அழகான கேள்வியோடு இந்த
அழகுதம்பி வருவான்.

கொத்ஸ்: தம்பி தம்பி நில்லுப்பா, ஒரு சந்தேகம்

தம்பி: சொல்லுங்க கொத்ஸ். :)

கொத்ஸ்: என்னிய வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே!!

தம்பி: இல்லிங்க எசமான் அப்படிலாம் செய்வேணா திடீர்னு ஒரு டவுட்டு
வந்துச்சி நான் மட்டும்தான் பாவனா அழகா இருகான்னு நினைக்கறேனா இல்ல
எல்லாருமான்னு அதான் கேட்டேன். தப்பா நினைக்காதிங்க!

கொத்ஸ்: என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க. எதையாவது சொல்லி
குழப்பி விட நான் தயாரா இருக்கேன். குழப்பினாதான் தெளிவு பிறக்கும். இந்த
அழகு மேட்டரில் இன்னும் ஒண்ணு சொல்லறேன் சில அழகு வந்து நிரந்தர
அழகு, சில அழகு சீசனல் அழகு சீசனல் அழகை வந்து நிரந்திர அழகா நினைச்சு
ஏமாறக் கூடாது புரியுதா?ஆனா இந்த இந்தி ரேகா இருக்கங்க பாருங்க அவங்களுக்கு
எம்புட்டு வயசு பாருங்க ஆனாலும் அவங்க அழகு நிரந்திர அழகு.

தம்பி: அழகை நடிகைகள் முகத்தில தேடக்கூடாதோனு தோணுது.

கொத்ஸ்: அங்கயும் இருக்கு அதை மிஸ் பண்ணக் கூடாது ஆனா அங்க நிரந்திர
அழகு கம்மி. அழகோட மெயின் விதியே அதான் It is a very personal thing.

தம்பி: இயற்கை எல்லார் கண்ணுக்கும் அழகா தெரியும்தானே?

கொத்ஸ்: எனக்கு பீச் பிடிக்கும், உங்களுக்கு மலை பிடிக்கும், இன்னொருத்ருக்குப்
பனி மிடிக்கும் இன்னும் ஒருத்தருக்கு மழை பிடிக்கும் ஆனா எல்லாருக்கும்
எல்லாமும் பிடிக்கணுமுன்னு ரூல் இருக்கா என்ன?

தம்பி: இதை ஒரு பதிவா போட போறேன், ஆன் தி ரெக்கார்டா எடுத்துக்கலாமா?

கொத்ஸ்: ஆகா! பெருசு செஞ்சா மாதிரி செய்யறீங்களே.சரி போடுங்க போடுங்க.

இதான் பிரச்சினை மக்களே. நிரந்தரமான அழகுன்னு ஒண்ணு இருக்கா? இல்ல
பழைய நினைவுகள நினைச்சி பாக்கும்போது ஒரு புன்னகை வருமே அது அழகா,
நடிகைகள் அழகா, இயற்கை அழகா, காதலி அழகா, ராத்திரிகள் அழகா, குழ்ந்தையின்
சிரிப்பு அழகா, இல்ல அழகுன்றது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கா?
இப்படின்னு குழம்பி போயிருக்கேன். உங்க கருத்தை சொல்லி தெளிவு படுத்துங்க.

தனிமைல இருக்கும்போது நாம பண்ணின ஏதோவொரு குறும்பை நினைச்சி சின்னதா
ஒரு சிரிப்பு வருமே அந்த மாதிரி இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க சொல்லுங்க.

Thursday, March 29, 2007

சென்னை வாழ் வலைப்பதிவு மக்களே.

சென்னையில் வலைப்பதிவு சந்திப்புகளை வெற்றிகரமான முறையில் நடத்திய
டோண்டு, லக்கிலுக், மற்றும் பா.க.ச என்ற பாசக்கூட்டத்தின் "தல" தலைவர்
பாலபாரதி அவர்களே உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி.

இந்தமுறை தமிழ்வலைப்பதிவு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் சென்னை
நோக்கி ஒரு அமீரக அன்பர் விரைந்து கொண்டிருக்கிறார். சென்னையில் அனைத்து
பதிவர்களையும் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக இன்று காலை தொலைபேசி
என்னிடம் கூறினார்.முக்கியமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்துக்கான
செலவு, சாப்பாடுன் போக்குவரத்து ஆகியவற்றிற்கான செலவையும் அவரே
ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். (எவ்வளவு நல்ல மனசு பாருங்க,
இதுக்காச்சும் அட்லீஸ்ட் 10 சந்திப்பு நடக்கணும்) நாளை மாலை சென்னை வருகிறார்
அடுத்த வாரத்தில் சந்திப்பு நடத்தினால் நன்று.

அந்த நல்ல உள்ளம் யாருன்னு தெரிய ஆவலா இருக்குல்ல!

அவர்தாங்க லியோ சுரேஷ்

பின்னூட்டத்தில் மட்டும் வலைப்பதிவுகளில் உலாவர முடியும் என்று வலைப்பதிவு
உலகத்துக்கு உணரச்செய்த லியோசுரேஷ் என்பவர்தான் அந்த தியாகச்செம்மல்.
அவருக்கென்று தனியாக வலைப்பூ இல்லாததால் அன்புடன் என்னை கேட்டுக்
கொண்டார். வலைப்பதிய இல்லை என்றாலும் அமீரகத்தில் நடக்கும் அனைத்து
சந்திப்புகளுக்கும் தவறாமல் வருபவர். அருமையான சிந்தனையாளர். ஊருக்கு
போய் திரும்பியதும் வலைப்பூ தொடங்கி தன்னுடைய அனுபவங்களை எழுதுவேன்
என்று உறுதியளித்திருக்கிறார் நம்புவோம்.

சந்திப்பு நடந்தால் நண்பரை அழைக்க அவரது அலைபேசி கூட கொடுத்திருக்கிறார்.
+9941457283 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அருமையான சந்திப்பு
நிகழ எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு: அ.மு.க தொண்டர் ஒருவரையாவது சந்திக்க வேண்டும் என்பது அவரின்
நீண்ட நாள் ஆசை. அ.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் லக்கிலுக் மற்றும் செந்தழல் ரவி
மனது வைப்பாராக!

அ.மு.க தொண்டர்களே அலைகடலென திரண்டு வாரீர்!

வர வர நம்மகிட்ட விளம்பரம் தேடி வர்றவங்க ஜாஸ்தி ஆயிட்டாங்கப்பா...

Wednesday, March 28, 2007

அய்யனாரின் ஐந்து குணங்கள்

என்னடா இவன் இப்பதான் வியர்டுன்னு ஒரு பதிவு போட்டுட்டு மறுபடியும் வியர்டு
போட வந்துட்டான்னு நினைக்க வேணாம். இது என்னோட ஐந்து குணங்கள் இல்ல
நம்ம நண்பர் அய்யனாரின் ஐந்து குணங்கள். அவரோட ப்லாக்ல தமிழ்மண கருவி
பட்டைய இணைக்கறதுல சிறு பிரச்சினை இருந்துச்சி. சரி பண்ணி இணைத்த பிறகு
காத்திருப்போர் பட்டியல்ல ஒரு வாரமா உக்காத்தி வெச்சிருக்காங்க. சரி நம்மளயும்
மதிச்சி ஐந்து குணங்கள எழுத சொன்ன நல்லவரு (நாந்தாங்க) மனசு
கஷ்டபடக்கூடாது அப்படின்ற நல்ல எண்ணத்துல எழுதி என்கிட்ட அனுப்பி நீயே
உன்னோட பதிவில போட்டுடு எனக்கும் கொஞ்சம் விளம்பரம் கிடைச்ச மாதிரி
இருக்கும்னு சொன்னாரு.

தோ பார்றா நம்ம பக்கத்துக்கு வந்து போறதே பத்து பதினஞ்சி பேர்தான் இருப்பாங்க.
நம்மள போயி பெரிய ஆளுன்னு நினைச்சிட்டு இருக்காருப்பா ரொம்ப நல்லவருப்பா
இந்த அய்யனாரு.

இனிமேல் அவர் ஐந்து குணங்கள படிங்க.

வினோத ஐந்து ஜந்து குணங்கள்

தம்பி நீங்க என்ன இதுல மாட்டிவிட்டதும் இதுவர எழுதன எல்லாரயும் ஒரு
ரவுண்ட் பாத்தேன்..பூ யாருமே சரியா எழுதல ..சில பேர் தலைப்பை கூட
சரியா புரிஞ்சிக்காம அவங்களை பத்தின நல்ல குண்ங்களை தேடி பிடிச்சு பட்டியல் போட்டிருக்காங்க..ஹி..ஹி..இதான் என்னோட முதல் குணம் அடுத்தவங்களை
ரொம்ப ஏளனமா பார்ப்பது .சந்தர்ப்பம் கெடைச்சா புரியாத நாலு வார்த்தைகளை
சொல்லி அப்பாவிகளை கலங்கடிப்பது.உதாரணத்துக்கு எங்க ஊர்( திருவண்ணாமலை) விஜயகாந்த் ரசிகர் மன்ற துணை தலவர் கிட்ட போய் பை சைக்கிள் தீவ்ஸ் படம் பார்த்திருக்கிங்களா ன்னு கேக்குறது.

படிக்கும் இடங்கள் மற்றும் முறை

படிப்பது எல்லாரும் பண்ற வேலதான் னாலும் இந்த லொகேசன் தான் எனக்கு
பிரச்சினையே.

டாய்லெட்
எனக்கு உலகத்திலேயே ரொம்ப புடிச்ச விசயம் டாய்லெட்ல படிக்கிரதுதான்.
கிட்டதட்ட 17 வருஷமா இந்த பழக்கம் எங்கிட்ட இருக்கு. ஆனந்த
விகடன், தீராநதி, குமுதம் இதெல்லாம் இல்லாம எனக்கு..ஹி..ஹி..

குளியலறை

மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்..அட அட ..

உயரமான இடங்கள்
இந்த பழக்கம் எனக்கு எப்படி வந்ததுன்னா சின்ன வயசுல கதை புத்தகம்
படிக்கும்போது என்னோட அம்மா சொல்ற வேலைகள்ல இருந்து எஸ்கேப்
ஆகறதுக்காக என்னோட வீட்டுத் தோட்டத்துல இருக்கிற வேப்ப மரத்துமேல ஏறி
உட்கார்ந்து படிப்பேன்.அது அப்படியே பழக்கமாகி மலைமேல இருக்கிற பாறாங்கல்
உச்சில உட்கார்ந்து படிக்கிறது கட்ட சுவத்துமேல உட்கார்ந்து படிக்கிறதுன்னு
காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிடிச்சி.

ராத்திரியில கத்தறது..

ஆமாங்க ..சில நாட்கள் தூங்கவே முடியாது அப்படிங்கிறா மாதிரி ஏகப்பட்ட
சாத்தான்கள் மண்டைக்குள்ள ஓடும் அப்ப என்ன பன்னுவேன்னா மொட்டை
மாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. ஆனால் இதுல பல
சிக்கல்கள் வந்ததால சில மாடிபிகேசன் பண்னிக்கிட்டேன். இது ஓஷோ சொல்லிக்கொடுத்தது..ஜிப்ரிஷ்..

கூட்டம் பாத்தா தலை சுத்தறது

இது ஏதாவது மேனி யாவா இருக்குமோன்னு ஆரம்பத்தில எனக்கு ஒரு சந்தேகம்
இருந்தது. கோயில்,சினிமா,பஸ்,ரயில் ன்னு எங்க போனாலும் எனக்கு கூட்டம்
பிடிக்காது. கூட்டம் இருந்தா திரும்பி வந்துடுவேன் இந்த குணத்தால நிறய முறை
பஸ் ஸ்டாண்ட் போய் திரும்பவந்திருக்கேன்.

கதை சொல்வது

நான் ந.து.பள்ளி தேனிமலை,திருவண்ணாமலை ல 3 ங் கிளாஸ் படிக்கும்போது
ஓரு தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை என்னோட வாத்தியார் எங்கிட்ட கொடுத்து
இத படிச்சிட்டு நாளைக்கு கத சொல்றான் னு இந்த பழக்கத்துக்கு ஒரு பிள்ளையார்
சுழி போட்டு வச்சார் இதோ இன்னிக்கு வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த
பழக்கத்தால எல்லா சின்ன குழந்தைகளும் என்ன பார்த்து பயப்பட ஆரம்பிச்சாங்க
என் பக்கத்துல படுக்கவே மாட்டே ன்னு எங்க அக்கா பையன் அழுதுகிட்டே
ஓடுவான் இருந்தாலும் அத ஒரு பொருட்டா மதிச்சதே இல்ல.இதனால அதிகம் பாதிக்கப்பட்டவங்க என்னோட நண்பர்கள் தான் சமீப காலமா புரியாத படங்களா
பாத்து தள்ளி அதனோட கதைகள ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்லுவேன் பசங்க
பரிதாபமா கேட்டு தொலைவானுங்க (என்ன பன்றது பீரு க்கு காசு கொறையுதே)..

தம்பி என்னோட ஒட்டு மொத்த குணங்களும் ஜந்து மதிரிதான் இருக்கும். இதெல்லாம் சும்மா சாம்பிள்தான்.

அடுத்த ஐந்து பேர்

மஞ்சூர் ராசா
சித்தார்த்
ஜெஸிலா
இன்னும் ரெண்டு பேருக்கு ஒபன் இன்விடேஷன் எனக்கு தெரிஞ்சி எல்லாருமே
எழுதிட்டாங்க. எழுதாதவங்க இதையே ஒரு அழைப்பா எடுத்துகிட்டு வியர்டுதனத்த
காமிங்க.

Tuesday, March 27, 2007

ஆச்சரியங்கள்

ஆச்சரியப்பட வைக்கும் அழகு
என்றார்கள்!

ஆச்சரியத்தை தேக்கி வைக்கும்
முகமல்ல எனது.

கடந்து போகும்
ஜீவராசிகளில்
ஒருத்தி நீயெனவே
ஆச்சரியங்கள் கொள்ள
அவசியமில்லை.

நூல்கள் சில சொன்னது
அன்றாடங்களை மாற்றும்
வல்லமை காதலுக்குண்டென்று
எனக்குள் அந்த மாற்றங்கள்
எதுவும் நிகழவில்லை.
சலனமில்லாத குளம்
கல்லெறிந்தால் கண நேரத்தில்
சுயம் மீள்வேன்.

Wednesday, March 21, 2007

பஞ்ச தந்திரம்

weird மொதல்ல இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியல. ஓடிப்போய் அகராதிய
புரட்டினேன் (அகராதி படிச்சவன், பிடிச்சவன் இல்ல)very strange and unusual,
unexpected or not natural னு எழுதி இருந்துச்சி. அந்தளவுக்கு ஒண்ணும் விஷயம்
இல்லயே நம்மகிட்டன்னு விட்டுடலாம்னு பார்த்தேன். சரி பாசமா ரெண்டு பயலுவ
கூப்பிட்டு விட்டாங்க. அப்புறம் எழுதலன்னா அடுத்த பதிவுக்கு வந்து பின்னாடி
ஊட்ட மாட்டாங்கன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.

எப்படி யோசிச்சாலும் எனக்குன்னு எந்த ஒரு தனித்தன்மையே இல்லன்னு தெரிஞ்சு
போச்சு. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கிக்கலாம்னு அலாரத்தை ஆப் பண்ணுற
சாதாரண ஆளுதான். எந்த விஷயத்துலயும் எனக்குன்னு ஒரு தனித்தன்மையும் இல்ல.
தனித்தன்மையா இருந்தாத்தான் மனுசனா என்ன. அது இல்லாமலும் இருக்கலாம்.

புத்தகங்கள்: வயசுக்கு ஏத்த மாதிரி புத்தக வாசிப்பு மாறிகிட்டே
வருது. சின்ன வயசில காமிக்ஸ் படிச்சேன் இப்ப அதை படிக்க உக்காந்தா சலிப்பு
தட்டுது. நான் கதை படிக்க ஆரம்பிச்சேன்னா கண்ணு மண்ணு தெரியாம படிப்பேன்.
"சாப்பிட்டு படியேண்டா" அப்படி என்னதான் இருக்கோ அதுலன்னு தலைப்பாடா
அடிச்சிக்குவாங்க வீட்டுல. தட்டுல போட்டு பக்கத்துல வெச்சிடும்மான்னு சொல்லிட்டு
நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பேன். கண்ணும் கருத்துமா படிச்சி இருந்ததுல
தட்டுல என்ன வெச்சாங்கன்னு பாக்காமலே வாய்ல எடுத்து வச்சா ஒரே நற நறங்குது
என்னன்னு பாத்தா தட்டுல சாம்பல் வெச்சிருக்காங்க. பாத்திரம் விளக்க வச்சிருந்த
சாம்பல் தட்டை பக்கத்துல வெச்சிருந்தது கூட தெரியாம எடுத்து சாப்பிட்டுருக்கேன்.
அந்த அளவுக்கு புத்தகம் மேல காதல்(?).

தனிமை தனிமை, மவுனம் இரண்டையும் ஒரே மாதிரி பொருள்
கொள்ளலாம்.இரண்டுமே அமைதியை குறிக்கிறது இந்த இரண்டுமே எனக்கு
பிடித்தமான ஒன்று. நீ பேசாமல் இருக்கும்போது உன்னையே அறிந்து கொள்ளலாம்.
அதிகமாக பேசாமல் ஒரு நாளைக்கு முடிந்தளவு குறைவாக பேசிப்பாருங்கள். அந்த
நாளின் அற்புதம் விளங்கும். உங்களுக்காகவே ஒரு நாளை முழுமையாக அனுபவித்தது
போல தோன்றும். காற்றுக்கு இலைகள் அசைகின்றன, மலர்கள் அசைகின்றன,
மரங்கள் அசைகின்றன ஆனால் மலைகள் அசைவதில்லை அமைதியாக இருக்கும்
அது அசையாது இருப்பது உறுதியை காட்டுகிறது. எங்கோ படித்தது இது எனக்கு
பிடித்ததும் இதுவே. யாருமே இல்லாத ரோட்டுல நான் மட்டும் தனியா நடந்து
போவேன் அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தனிமை தரும் சுகமே தனிதான்
ஆனால் அதுவே நிரந்தர சுகமாகிவிடாது. மாற்றத்துக்கு மட்டுமல்லாமல் கிடைக்கும்
நேரங்களில் தனிமைய அனுபவித்துக்கொள்வேன். கோவிலில் இருக்கின்ற சிலை
வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத்தொடங்குமானால் பக்தனுக்கே அலுப்புத் தட்டி
விடும். மவுனமாக இருக்கவே அதற்கு அவ்வளவு மரியாதை.

"நிறைய கேள் குறைவாக பேசு"

பயம் எல்லாரும் பயப்படற ஒரு விஷயத்துக்கு நாம பயப்படாம இருக்கணும்னு முயற்சி செய்வேன். உதாரணத்துக்கு பாம்புக்கு எல்லாரும் பயந்துகிட்டு
நின்னாங்கன்னா நான் தைரியமா முன்னால போய் அதை அடிச்சி சாகடிப்பேன். சின்ன
வயசில கிணத்துக்கு பசங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் குளிப்போம். டேய் இந்த
கிணத்துல பாம்புங்க இருக்கு வேற கிணத்துக்கும் போகலாம்னு கூட பசங்க
பயமுறுத்துவாங்க ஆனா நான் மொத ஆளா குதிப்பேன். கிணத்துல குதிச்ச உடனே
பொந்துல இருக்கற பாம்புங்க எல்லாம் வெளில தலை நீட்டி பார்க்கும்.(தண்ணி
பாம்பு கடிச்சாலும் ஒண்ணும் ஆகாதுன்ற தைரியம்தான்) ஒரு முறை கடிச்சிவச்சிடுச்சி.
எங்க வீட்டு பக்கத்துல நிறைய கரும்புதோட்டம் இருக்கறதினால பாம்புங்க குறுக்கும்
மறுக்கும் போறது சகஜமாயிடுச்சி. முடிஞ்ச வரைக்கும் எந்த விஷயத்துக்கும்
பயமில்லாம இருக்கணும் ஒருமுறை சவாலுக்காகவேண்டி விடியற வரை சுடுகாட்டுல
ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். பயந்தா எதுவுமே நடக்காது. பயத்தை
காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்னு
உக்காந்திருக்கும்போதுதான் தெரியும்.

பயணம் சின்ன வயசில வருசத்துக்கு ஒருமுறை லீவுல பாட்டி
வீட்டுக்கு போவேன் அதுதான் அந்த வயசில நீண்ட பயணம் மூணு மணிநேரமாச்சும்
ஆகும் அதுக்காக வருஷம் முழுக்க காத்திருப்பேன். பயணத்துல அதுவும் பஸ்ல
ஜன்னல் சீட்டுன்னு இல்ல எதாச்சும் ஒரு மூலைல இருந்தா கூட போதும். வயசு
ஆக ஆக பஸ் பயணத்தை விட பைக் பயணம் ரொம்ப பிடிச்சி போச்சு. எங்க
போகணுமின்னாலும் வரணும்னாலும் பைக்தான். என் பின்னாடி உக்காந்து வர்றவங்க
என்னை திட்டிகிட்டே இறங்குவாங்க, என் அம்மா கூட "இவன்பின்னாடி உக்காந்து
போகறதுக்கு நடந்தே போகலாம்னு". ரொம்ப ஸ்லோவா போவேன். அதிகபட்சம்
நாப்பதுதான். வேகமா போய் என்னத்த சாதிக்க போறோம்?

சினிமா எந்த படமா இருந்தாலும் எங்க ஊரு தியேட்டருக்கு வந்த
பிறகு பாக்கறதுல ஒரு சுகம். இருவது முறை பாத்திருந்தாலும் மழை, கீறல் விழுந்த,
திரையில் கோடு கோடா ஆன பிறகு படத்தை பாக்கறதுல ஒரு சொர்க்கமே இருக்கு.
எந்த விதமான நவீன வசதியும் கிடையாது அந்த தியேட்டர்ல ஆன எனக்கு விவரம்
தெரிஞ்சி சினிமான்னு பார்த்தது அந்த தியேட்டர்லதான்(க்ரசண்ட் தியேட்டர்) அதனால
ஒரு பாசம். சீட்டு ஒழுங்கா இருக்காது, மூட்டைப்பூச்சி தொல்லை, சவுண்டு ஒழுங்கா
கேக்காது. படம் ஓடிட்டே இருக்கும்போது கரண்டு கட்டாகிடும் நம்ம விசில் அடிக்க
வைக்க அவங்க வேணும்னே ஆஃப் பண்றாங்கன்னு நினைப்பேன் அப்போது.
ஜெனரேட்டர போடுடா மச்சின்னு ஒரு சவுண்டு விட்டவுடனே கரண்டு வந்துடும்
கப்சிப்னு அடங்கிடுவேன்.


இதெல்லாம் தேடிப்பிடிச்சி எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சி. என்ன இருந்தாலும்
நம்மள பத்தி நாமளே அளந்து விடறது ரொம்ப ஓவர்னு நினைக்கிறேன்.
என்ன பண்றது கேட்டுட்டாங்க சொல்றது கடமை. அடுத்ததா அஞ்சு பேர
சொல்லணுமில்ல அதுதான் பயங்கர கஷ்டமா இருக்கு (யாரு கண்டு பிடிச்சது
இந்த விளையாட்ட?)

லியோ சுரேஷ் (இப்பவாச்சும் பதிவெழுத ஆரம்பிங்க தலைவா!)
முத்துக்குமரன்
ஆசிப்மீரான் அண்ணாச்சி
அய்யனார் விஸ்வநாத்
பெனாத்தல் சுரேஷ்

Saturday, March 17, 2007

வறட்டி தட்டுவது எப்படி??

டிஸ்கி: இந்த பதிவு ஒரு கடுமையான உவ்வ்வே பதிவு. கிராமத்தில பிறந்து
வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரிந்தாலும். நகரத்தில் பிறந்து வளர்ந்து
வந்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருக்கும். அதனால டிஸ்கி படிச்சிட்டு
டிமிக்கி கொடுத்துட்டு ஓடி விடவும். மீறி எதையும் தாங்கும் இதயம்னு படிக்க
ஆரம்பிச்சிங்கன்னா நீங்க மகா தெகிரியசாலி.

இப்ப நாம வறட்டி தட்டுவது எப்படின்னு பார்க்கலாம்.

கேஸ், மின்சார அடுப்பு இதெல்லாம் வந்துட்ட காலத்துலயும் எதுக்குடா வறட்டிய
தூக்கிட்டு திரியறிங்கன்னு நீங்க கேக்கலாம். எல்லா வசதியும் இருக்கற இந்த்
காலத்துலயும் வறட்டியின் தேவை இருந்துகிட்டுதான் இருக்கு. அதனால அதை
எப்படி செய்யிறது என்று இந்த "எப்படி" பதிவில் பார்ப்போம்.

அதிகாலையில் எழுந்து மாட்டு கொட்டாயிக்கு போய் அங்க இருக்குற சாணி
எல்லாம் பொறுக்கி வீட்டு காம்பவுண்ட் சுவரு கிட்ட கொட்டணும். இது உங்கள்
உடலுக்கு நல்ல உடற்பயிற்சியும் கூட.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு ஓரு 8 மணி வாக்குல வைக்கோல் கொஞ்சம்
எடுத்துகிட்டு போய் அந்த சாணியுடன் கலக்கணும். கலக்கும்போது ஈசியா
இருக்கணும்னா சாணியுடன் கொஞ்சம் தண்ணி மிக்ஸ் பண்ணிக்கணும். இந்த
வேலை ஒரு பதினஞ்சி நிமிடம் எடுக்கும்.

கலந்ததுக்கு அப்புரம், அந்த கலவைய நல்லா ரெண்டு கைல பத்தற மாதிரி
உருண்டை உருண்டையா செஞ்சி அந்த காம்பவுண்ட் சுவருல தட்டணும்.
ஒவ்வொரு வறட்டியும் ஆறு இஞ்ச்க்கும் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லன்னா ஒடச்சி யூஸ் பண்ண வேண்டியதா இருக்கும். செவுத்தலயே ரெண்டு
நாளைக்கு காயட்டும்னு விட்டிங்கன்னா அருமையான வறட்டி ரெடி. இதை
நீங்க அடுப்பெரிக்க யூஸ் பண்ணிக்கலாம்.

வேலையெல்லாம் முடிச்சிட்ட பிறகு உங்களுக்கு டயர்டா இருக்கும். போய்
டீ, டிபன் சாப்பிட்டு விட்டு அடுத்த மேட்சுக்கு தயாராகணும்.

மேலதிக தகவல்களுக்கு தலைவரின் "அதிசய பிறவி" மற்றும் "முத்து"
திரைப்படத்தை பார்க்கவும்

மேலும் சில உபயோகமான குறிப்புகள்.

1.அந்த கலவையுடன் சிறிது நெல்லின் உமியோ, பதரோ கலந்து கொண்டால்
வறட்டி க்ரிஸ்பியாக இருக்கும்

2.வறட்டி தட்டும்போது, பக்கத்துல ஒரு ஹீரோயின் அல்லது செகண்ட் ஹீரோயின்
இருந்தா ஈசியா தட்ட முடியும் ( ஐ மீன் வறட்டிய) அது பொண்டாட்டியாதான்
இருக்கனும்னு அவசியம் இல்லை.. அவங்க இல்லாம (வேற யாராவது) இருந்தா
இன்னும் பெட்டரா தட்ட வரும்..

3.எருமைச் சாணிய விட பசுவின் சாணத்துல தட்டினா, வறட்டி நல்ல வரும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கங்க

4.கொஞ்சம் செலவு பண்ணா கோபர் ப்ளாண்ட் இன்ஸ்டால் பண்ணிட்டா கேஸ்
பிரச்சினை தீர்ந்துடும், அரசு மானியம் கூட கிடைக்குதாம்!.

5.உங்க வீட்ல மாட்டு கொட்டாய் இல்லை என்றால் காலைல ரோட் ரோடா
போய் சாணி தேட வெண்டாம். ஏன் என்றால், ஒன்று சாணி கொஞ்சம
காய்ந்து போய் இருக்கும், இரண்டு தேடும் ஏரியா மிக பெருசாக இருக்கும்
சாணி கண்டிப்பாக கிடைக்கும் என்று தீர்மானமாக சொல்ல இயலாது!

6.இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒரு வாளி எடுத்துட்டு(குறிப்பு: அந்தா வாளியில்
பாதி தண்ணி நிரப்பி வையுங்க்ள் ), எதாவது ஒரு மாட்டை டார்கெட் செய்து,
அது பின்னாலயே ஓடணும். அது சாணி போடும் போது வாளியில் பிடிச்சுக்கணும்
பிடிச்ச பிறகு, கொஞ்சம் சாணி எடுத்து அது இடுப்பில் ஒரு பெரிய X போட்டு.
விட்டு(அடையாளம் தெரியணுமில்ல) அடுத்த மாட்டை தேடணும். அடுத்த மாடு
அன்றைக்கு சாணி போட்டு விட்டதா என்பது, சிலர் வாசம் வைத்து சொல்லி
விடுவார்கள்.

6. மாட்டை செலக்ட் பண்ணும்போது குண்டா இருக்கற மாட்டை செலக்ட்
பண்ணனும் அதுதான் நிறைய புல் தின்னும். அதுக்கேத்தமாதிரி அவுட்புட்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


மேலும் தகவல்கள் வேண்டுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Agnostic

எங்கள் கல்லூரியில் கேண்டீன் வைத்திருந்த பெரியசாமி அண்ணனை எல்லாருக்கும்
பிடிக்கும் மிகவும் மென்மையானவர். கடவுள் மறுப்பு கொள்கைகளில் மிகவும்
தீவிரமானவர். திராவிட கழகத்தில் தன்னை இளம் வயது முதலே இணைத்துக்
கொண்டவர். அருமையான பேச்சாளர் கல்லூரி முடிந்து அவரிடம் சிறிது நேரம்
அவரிடம் பேசியிருந்து விட்டு செல்வது வழக்கம். எதைப் பற்றி வேண்டுமானாலும்
அவரிடம் பேசலாம் அவரின் கருத்துக்களை தெளிவாக எடுத்து பேசுவார் ஆனால்
திணிப்பு என்பது இருக்காது. கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவராக இருந்தாலும்
அவரின் குடும்பத்தில் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆறாவது வகுப்பு படிக்கும் அவரின் மகள் விடுமுறை நாட்களில் கேண்டீனில் வந்து
அமர்ந்து கொண்டு சிறு சிறு வேலைகள் செய்வாள். அக்கவுண்ட் நோட்டில் அன்றைய
தேதியை எழுதிவிட்டு பிள்ளையார் சுழியை போடுவது அவளின் வழக்கம். ஏனோ
அன்று மறந்து விட்டது அந்த பிள்ளை. "தேன்மொழி பிள்ளையார் சுழி போட
மறந்துட்ட பாரும்மா" என்றார் மகளிடம். அப்பெண்ணும் சிரித்துக்கொண்டே
பிள்ளையார் சுழி போட்டுவிட்டு போடாத பக்கங்களுக்கு சேர்த்து போட
துவங்கினாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நான் கேட்டேன். என்னங்க நீங்களோ கடவுளை
நம்பாத ஆளு. நீங்களே இது மாதிரி எழுத சொல்றிங்களேன்னு கேட்டேன். அவர்
சொன்னார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லதான் இதை என் அனுபவத்தில்
நானாக கற்றுக் கொண்டது. அதே போல அவளுக்கும் கடவுள் என்ற ஒருவர்
இல்லை என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் புரிந்து கொள்ளட்டும்.
நானாக எதையும் சொல்லித் தருவதில் விருப்பமில்லை. அதுவுமில்லாமல் என்
கொள்கைகளை அவளுக்கு திணிப்பது போலாகும். அவளாக உணர்ந்து கொள்ள
வேண்டும். பெரியாரே ஒரு காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக இருந்து
நாத்திகத்திற்கு மாறியவர்தான். அவளின் நம்பிக்கைகள்அவளுக்கு, என் நம்பிக்கைகள்
எனக்கு.

"தெளிவாக வந்தது பதில் அவரிடம். சிரித்துக் கொண்டே காபியை அருந்திவிட்டு
கணக்கு சொலிவிட்டு நகர்ந்தேன்.

என் வீட்டு அருகினில் வெற்றிலை தோட்டம் வைத்திருந்த பெரியவர் ஒருவர்
இருந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர். வயது 80 க்கு மேல்
இருக்கும். ஆனால் அவரின் வேலைகள் அனைத்தையும் அவரே செய்து
கொள்வார். பிறரிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற
கொள்கையில் கடைசி வரை இருந்தார்.தனது சொத்துக்களை மகன்,மகள்களுக்கு
கொடுத்துவிட்டு தனக்கென்று காணி நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதில்
வெற்றிலை தோட்டம் போட்டிருந்தார். எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர்.
மிகவும் எளிமையாக இருப்பார். முக்கியமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
எங்கள் பகுதி திராவிட கழகத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். கோயில் பக்கம்
கூட ஒதுங்கியதில்லை. அவரின் வாரிசுகள் இதனாலேயே இவரை வெறுத்து
ஒதுக்கிவிட்டனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையே பட்டதில்லை.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டே அவரிடம் நிறைய பேசுவேன்.

பொங்கல், தீபாவளி, அமாவாசை தினங்களில் படையலுக்கு தேவையான இலை,
பூ, பழம், கீரை, வெற்றிலை போன்றவைகளை பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு
இலவசமாகவே தருவார். முக்கியமாக எங்கள் வீட்டுக்கு தவறாமல் அதிகாலை
அல்லது முதல் நாளே வீடு தேடி வந்து கொடுப்பார். அவர் பெயர் எனக்கு
தெரியாது அனைவரும் கருப்பு தாத்தா என்றே அழைப்பர். எனக்கு விவரம்
தெரிந்து மேல்சட்டை அணிந்ததில்லை. ஒருமுறை தேர்தலில் ஓட்டு போடும்போது
பின்வரிசையில் நின்றிருந்தார் அப்போது மட்டும் சட்டை அணிந்து வந்திருந்தார்.
மற்ற சமயங்களில் மேல்துண்டு மற்றும் வேட்டி மட்டுமே. தினமும் இரவு எட்டு
மணிக்கு செய்திகள் பார்க்க தவறாமல் வந்து விடுவார். செய்தி முடிந்த பின்னர்
திண்ணையில் அமர்ந்து தன் கருத்துக்களை சொல்வார். அவரின் பேச்சை நாள்
முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். திறமையான பேச்சாளர். சுதந்திரத்தில்
ஈடுபட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி கேட்பேன் அவரும்
சளைக்காமல் சொல்வார்.

தினமும் அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு சென்று மோட்டாரில் குளித்து
செம்பருத்தி பூக்களை பறித்து வந்து பூஜையறையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட
படங்களுக்கு இட்டு சாமி கும்பிடுவார் என் அப்பா. ஒருநாளும் என்னை சாமி
கும்பிட வற்புறுத்தியதில்லை. பூஜையை முடித்து மணி ஆட்டும்போது மட்டும்
ஓடிபோய் திருநீறு இட்டுக்கொள்வேன். இன்று நேற்றல்ல அவரின் சிறுவயது முதலே
சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர் ஆனால் ஒருநாளும் என்னை சாமி
கும்பிட வற்புறுத்தியதில்லை. நீங்கல்லாம் நல்லா இருக்கணும்னுதாண்டா அவர்
தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிறாரு திருநீறாச்சும் போய் வாங்கிக்கோங்கடான்னு
அம்மா அடிக்கடி சொல்வாங்க. நானும் மறுக்காமல் செய்துவிடுவேன்.

ஆனால் தமிழ்மணத்தில் அப்படி அல்ல. தினந்தோறும் நடக்கும் கூத்துக்களை
பார்த்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது. என்னைப் பொருத்த வரை அவரவர்
நம்பிக்கை அவருக்கு. யாரும் யாரையும் மாற்றிவிட முடியாது. என் வாழ்வில்
நான் கண்ட நாத்திகவாதிகளும் சரி, ஆத்திகவாதிகளும் சரி எந்த நேரத்திலும்
யாரையும் நோகடித்ததில்லை வீண் வாக்குவாதங்களில் இறங்கியதில்லை. நான்
சொல்வதுதான் சரி, கடவுள் என்பது கல், கடவுளை கும்பிடுபன் முட்டாள்,
கும்பிடாதவன் பகுத்தறிவாளன் என்று அவர்களும். கடவுளை கும்பிடாதவர்கள்
கெட்டவர்கள் என்று இவர்களும் சொல்லி கேள்விப்பட்டதே இல்லை.

இங்கு அப்படியல்ல தினந்தோறும் ஏதாவது ஒரு சண்டை நடந்து கொண்டுதான்
இருக்கிறது. முருகக்கடவுள் காமக்கடவுள் என்று சமீபத்திய பிரச்சினை.
அவரவர் பிரச்சினைகளை பார்க்கவே நேரமில்லாத இந்த உலகத்தில் கடவுளின்
இருப்பை கேலிக்குள்ளாக்கும் இது போன்ற விவாதங்கள் தேவையே இல்லை
என்பது என் கருத்து. யாருடைய கருத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக
இல்லாத போது விவாதங்கள் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக
தெரியவில்லை.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லன்னு அர்த்தம் கிடையாது பிறந்தநாளின் போது
மறக்காமல் கோயிலுக்கு செல்வது வழக்கம் அதுவும் அம்மாவின் ஆசைக்காக.
மத்தபடி என்றைக்கும் கடவுள் இல்லைன்னு நினைச்சது கிடையாது அதுக்காக
தினமும் சாமி கும்பிடணும், கோயிலுக்கு போகணும்னு நினைச்சதும் இல்லை.
அவரை போய் பார்க்கணும்னு தோன்றியதில்லை. நிஜத்துல அவரை போய்
ஏன் பார்க்கணும், பார்க்கலைன்னாலும் ஒண்ணும் ஆகப்போறது இல்ல.
அப்புறம் எதுக்கு பார்க்கணும்?. அவர்பாட்டுக்கு அவர் வேலையை செய்கிறார்.
நான் பாட்டுக்கு என் வேலையை செய்கிறேன். கடவுள் என் வருகையை
எதிர்பார்த்திருக்கவில்லை என்று என்னால் கண்டிப்பாக நம்ப முடியும். ஒருவேளை
என்னால் தாங்க முடியாத ஒரு சோகமோ, கஷ்டமோ வந்தால் அவரிடம்
போகலாம். பெரியார் கூட ஒரு காலத்தில் ஆன்மீகவாதியாக இருந்து பின்
நாத்திகவாதியாக மாறினவர்தான். அவர் நாத்திகவாதி ஆவதற்கும் அவகாசம்
தேவைப்பட்டது. நான் இன்னும் ஆன்மீகவாதியாகவே இல்லை.

தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்பதுதான் நிஜம். கடவுள் நம்பிக்கையும்
இல்லாமல், கடவுள் மறுப்புக்கொள்கையிலும் இல்லாமல் ஒரு பிரிவு இருக்கிறார்கள்.
Agnostic என்பதுதான் அது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவெடுக்க
முடியாத ஒரு நிலைதான் Agnostic. ஒருவேளை அந்த கூட்டத்தை சேர்ந்தவனாக
இருப்பேன் போல.

ஆன்மீகத்தை பத்தி நட்சத்திர வாரத்தில் எழுதியே ஆகணும்னு தோணுச்சி.
அதனால்தான் இதை எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைதான்
யாருடைய நம்பிக்கைகளையோ பாதிப்பது போல் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன்.

அன்புடன்
தம்பி

Friday, March 16, 2007

புயலிலே ஒரு தோணி

பெரிய கட்டடத்தின் மாடிப்படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத்
துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன் தூய வெள்ளாடை உடுத்திய கருத்து
வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக்கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது.
சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கடகடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில்
ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிகொண்டிருந்தன. கரடுமுரடான
ஓசை, எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை.
"திரும்பி போய்விடலாம்". அவரை இன்னொருக்கா பார்க்கலாம்" மனதின்
ஊசலாட்டத்தையும் மீறி பெரியவரிடம் கேட்டேன். "ஐயா... வணக்கம்.. இங்க
சிங்காரங்கறது யாருங்க?"

"நான்தான். உட்காருங்க" மூக்கைத் தடவிக்கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான
இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்கு தள்ளி
என்னை உற்றுப்பார்த்தார்.

"நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு நாவல்
களையும் படிச்சிருக்கேன்."

"அப்படியா??" வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ
சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை.

அவரது நாவல்களை பற்றிய எனது அபிப்ராயங்களை கூறினேன். தமிழில் மிகவும்
முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படி பாராட்டினேன்.

"நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர்
வந்து நாவல்களை பற்றிப் பேசிவிட்டு போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி
பிரகாஷ்ங்கறவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில
பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி.ராஜ
நாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலை பாராட்டிக் கடிதம் எழுதி
இருந்தார்... இவங்களை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? எதுவும் பெரிசா
எழுதியிருக்காங்களா?"

"நீங்கா சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறு
பத்திரிக்கைச் சூழலில் முக்கியமானவர்கள்" என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தை பார்த்தார் அப்படிங்களா... கி.ராஜ
நாராயணன் மூலம் எனது நாவலை கேள்விப்பட்ட சிட்டி, சிவபாதசுந்தரம்னு ரெண்டு
பேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வா பேசினார்கள். சென்னை கொண்டு
போய் Orijinal Version-க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த
ஒரே பிரதியையும் வாங்கிட்டு போனாங்க. பல வருஷாமாச்சு. இன்னம் ஒரு பதிலயும்
காணாம்" எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களை சொன்னார்." புயலிலே ஒரு
தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கு யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க...
இங்க சீரியசா படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ
விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் இந்த உலகத்தில எங்க
இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையா பார்க்க மாட்டாங்க
அப்படி பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கி தமிழ்ல ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்..
பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப் பத்தி ஒரு இடம் வருது
அது நாங்க யுத்த நேரத்தில இந்தோனேஷியாவிலருந்து மலேயாவுக்கு சரக்குகளோட
போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடல்ல வீசினோம் நாவல் எழுதறப்ப
தோணுன சந்தேகங்களை கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போனோம்
வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேன்னு
சொல்லிட்டாங்க அது எதுக்கு.. வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து
தங்கினா போது, நம்ம வாழ்க்கைய வச்சு ஒரு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை
டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணு சீட்டு
போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கறவன், கூவி ஏலம் போடறவன்,
பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பல
சரக்குக்கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம்
தெரியுமா? உண்மையாச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு
விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையா பார்த்து எழுதற வழக்கம் நம்ம ஆளு
களுக்கு கிடையாது."

"நீங்க எப்ப மலேசியா போனீங்க?"

"எனக்கு இன்னிக்கு அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன்.
வட்டிக்கடையில வேலை பார்த்தேன். அப்ப இரண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து இல்ல.இந்தியாவிலிருந்து எந்த
தமிழ்பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரரியில ஹெமிங்வே,தல்ஸ்தோய், பாக்னர்,செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி.. இப்படி பலரையும்
படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட "ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்" நாவல்தான்
எனக்கு ரொம்ப பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்துல திருப்புமுனைன்னு
நினைக்கிறேன். தல்ஸ்தோவின் அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டீக்ஸ் "வார் அண்ட் பீஸ்" தான் சிறந்ததுன்னு சொல்றான்ங்க."

"தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கிங்க?"

"என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவில இருக்கிறப்ப 'மணிக்கொடி'
பத்திரிக்கை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன்,மௌனி கதைகள் படிச்சிருக்கேன்ன்.
அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கு வரைக்கும் தமிழ்ல நாவல்கள்
வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான் இப்பதான் சுஜாதா, சிவசங்கரின்னு கதைகள
எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம் கூட
வாசிக்க முடியவில்லை"

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச்
சொன்னேன்" அவங்க எழுதியதை படிக்கவில்லை" என்றார்.

"யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதினது நீங்கதான்.
நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்திங்களா?"

"இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க.ஆர்மியில பெரிய
பதவியில் சிலர் இருந்தாங்க. அங்க பினாங்கில காபி,டீ கடைகள் ஐரோப்பிய
மாதிரியில இருக்கும். அதை கிளப்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை
காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம்
பத்தின பல சமாச்சாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து
நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாக போயிருந்தேன். நாவல்னா என்ன?
கற்பனையில எழுதறதுதானே1 அப்ப்படியேவா எழுதணும்? நாம் கேள்விப்பட்ட
விஷயங்கள். அனுப்வங்களைட் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதா
பாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல
வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்."

"நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்தில... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி
தோணுச்சு."

"தமிழ்ல - தாய்மொழில -எழுதினாத்தான் உணர்ச்சிப்பூர்வமா நாம நினைக்கிறத
சொல்ல முடியும்னு எழுதினேன்."

"திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்திங்க?"

"சுதந்திரம் கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே "தினத்தந்தியி"ல வேலைக்குச்
சேர்ந்தேன் அப்பயிலருந்து மதுரையிலதான் இருக்கேன்."

"முதல் நாவலை எப்ப எழுதினீங்க?"

"1950இல் 'கடலுக்கு அப்பால்' நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல
பிரசுரகர்த்தர்களை கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல
தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல்
போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த
ஒருத்தர் தனிப்பட எனக்கு கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த
நாவலை என்னிடம் இருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப்போனார், கடைசீல 'கலைமகள்' பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்ப்பினார்.
அதுக்கு முதல்பரிசு கிடைத்தது. நாவலும் 1959இல் பிரசுரமாச்சு."

"புயலிலே ஒரு தோணி?"

"அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962-வாக்கில
எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடன் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல
சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972இல்
வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு."

"நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?"

"ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக்குறிக்குள்
போடலைக்கிறதுக்காக 'கண்ணதாசன்' பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க
என்பதுகூட புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு
எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவட்டாகச் சொல்லணும். தமிழ்ல dash-க்கும்
hyphen-க்கும் வீத்தியாசமே பலருக்கு புரியல."

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லி
விட்டுசற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத்தொடங்கினார்.

"அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும். எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப்
புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம்
வாசிக்கிற யாருக்கும் தெளிவா புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர்,
வெளிநாட்டுச்சூழல் சம்பந்தப்பட்டா விஷயங்கள் - தமிழ் ஆளுகளுக்கு புதிசு என்றாலும்
நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை." அவரது குரலில்
நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

"குடிங்க" காபி கிளாசை என்னை நோக்கி நகர்த்தினார் பணியாளரிடம் சிகரெட்டை
வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாசை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரெ மூச்சில் கிளாசை காலிசெய்தார்.

"நீங்க தொடர்ந்து எழுதலியே..."

"அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக
யாருமில்லை, இப்ப அந்த மனநிலை இல்ல... எழுதவும் முடியாது."

"புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே...
உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?"

"அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்ல. 1947 லிருந்து மதுரை Y.M.C.A யில தங்கி
இருக்கேன். முந்தி பக்கத்து அறையில் தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார்.
அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராஹ்டியை வைத்து நானே படிச்சேன்.
அவ்வளவுதான் ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல
பார்த்திங்களா? எதைப்பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? South Indian Trees
என்று ஆயிரம் பக்கத்தில புத்தகம் போடறான். அதையும் வாங்கி படிக்க ஆளுக
இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல.
என்னோட முதல் நாவல்ல் கடலுக்கு அப்பால்... நல்ல ரொம்ப சொல்ல முடியாது
ஆனா கடலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு? எந்த Responseம்
இல்ல." மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். " அந்த நாவலில் செட்டிம்மார்பற்றி
வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது
மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க."

"உங்க குடும்பம்..."

"நான் ஒரு Widower."

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. சூழல் இறுகியது. அவரே
தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

"மலேயாவில் மனைவொயோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும்
இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம்
பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்கு போயிடலாம்னு
ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேன்... ஆனால் போகலை."

"அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கிங்க?"

"என்ன தனிமை!" கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். "உண்மையாய் பார்த்தால்
எல்லாரும் தனிமையில்தான் இருக்கோம்."

"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?"

"அதெல்லாமில்ல. கோயிலுக்கு போவதுமில்லை. சாமி கும்பிடறதும் இல்லை"

இடையில் பத்திரைக்கைச் செய்தி கொடுக்க வந்தவரிடம் News Editorஐப் பாருங்க
என்று கூறி பத்திரிக்கை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே
பார்த்துக்கொண்டிருந்தேன்.

"உங்க சொந்த ஊரு?"

"எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம்.
எங்க அப்பா காலத்திலயே சிங்கணம்புரிக்குப் போயிட்டோம்."

"உங்க சொந்தக்காரங்க..."

"சிங்கணம்புரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது..."

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான
நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். " அதெல்லாம் எதுக்கு...? வேணாம்" கைகளை
ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம்
முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று
வலியுறுத்தினேன் "தயவுசெய்து வேண்டாம்" என்று அழுத்தமாக மறுத்துவிட்டார்.
சற்றுநேரம் இருவருக்கும் இடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது?
திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

"சரி அப்ப வர்ரேன்"

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி "வாங்க" என்றார்
தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சட்த இயந்திரங்களிண் பலமான
ஓசை உறைத்தது. வெயில் கண்களைக் கூசசெய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால்
ப.சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் சிறந்த
நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான்
கூறியபோது ஒருவிதமான கூச்சத்துடன் "அதெல்லாம் இல்லிங்க. நான் என்னமோ
எழுதினேன்" என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப.சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும்.
ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே
வந்தேன். வெளியே காற்று புழுதியுடன் வலுவாக வீசிக்கொண்டிருந்தது.

ந.முருகேசபாண்டியன்
மதுரை
10.9.1984
---------------------------------------------------------------------

பொதுவா நாவல்களை வாசிக்கும்போது எழுத்தாளரின் பெயரை வாசித்துவிட்டு
நேரடியாக கதைக்கு சென்று விடுவது வழக்கம். அட்டைக்கு அடுத்து இருக்கும்
பதிப்பகத்தின் பெயர்களையோ, எத்தனையாவது பதிப்பு என்றோ ஒருநாளும்
பார்த்தது இல்லை. முக்கியமாக இந்த "முன்னுரை, முகவுரை,பதிப்புரை,கடுப்புரை
நெடுப்புரை", இதெல்லாம் பார்க்க விரும்பியதே இல்லை. அதில் கதையின்
போக்கும் கதையின் கருவையும் சொல்லிவிடுவதால் வாசிக்கையில்
சுவாரசியமில்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே வாசிப்பதில்லை.
ஆனால் முதல்முறையாக புயலிலே ஒரு தோணி என்ற நாவலின் முன்னுரை
(முன்னுரை என்று சொல்வதைவிட நாவலாசிரியரின் பேட்டி என்று சொல்லலாம்)
வாசிக்கும்போதுஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. கதையை
வாசிக்கும்போதும் அதே.

கதையின் களமும், இடத்தின் பெயர்களும் புரியவில்லை என்றாலும் வாசிக்கும்
போது கதையின் போக்கில் நாமும் பயணம் செய்ய முடிகிறது. இன்னும்
முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. நாவல் சற்று பெரியதாகவும் இடத்தின்
பெயர்களும், கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்நியப்படுவதால் வேகமாக
வாசிப்பதில் சிரமம் இருக்கிற்றது. முழுவதுமாக வாசித்து பின்பு எழுதவேண்டும்.

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் என்ற இருநாவல்களின்
தொகுப்பு. எழுதியவர் ப.சிங்காரம் விலை ரூ.180

நூலை வாசிக்க கொடுத்ததற்காக என் பெயரை கண்டிப்பாக போடவேண்டும் என்று
நண்பர் முத்துக்குமரன் எதுவும் சொல்லவில்லை. :))

இது ஒரு மொக்கை பதிவு.

டிஸ்கி: இது ஒரு மொக்கை பதிவு. ஆர்வத்துடன் படிக்கலாம்னு உள்ள வந்தவங்க
அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.

கல்லூரி வாழ்க்கைல அதுவும் விடுதியில நடந்த சம்பவங்களை வாழ்வின் எந்த நிலைக்கு போனாலும் மறக்கவே முடியாது. இப்போ நினைச்சாலும், ச்சே இவ்வளவு
மோசமாநடந்திருக்க கூடாதில்லன்னு தோணும் அப்படியொரு சம்பவம்தான் இது.
என் ரூம்ல அய்யன், கரடி, வாய்க்கா மண்டையன், ஊத்தவாயன், விமல
கோவிந்தானந்தா, டைரக்டர் என்னையும் சேர்த்தா ஏழு பேர். எல்லாருக்கும் சொந்த
பேர் இருந்தாலும் அதை யாரும் சீண்டறதே இல்ல.ராஜசேகர் உடம்பு பூரா முடி
இருக்கறதினால அவன் பேர் கரடி. எழுபதுகளில் வந்த படங்களின் வரும் கதாநாயகன்
மாதிரி நீளமா வகிடு எடுத்து தலை வாரியிருக்கறதினால அன்புவோட பேர் வாய்க்காமண்டையன்னு வச்சாச்சி. தோசைப்பிரியரா இருந்ததினால ஜெயக்குமார் பேர் ஊத்தவாயன். சாமியார் மாதிரி எந்நேரமும் அமைதியா, சாந்தமா இருக்கறதினாலயும் பொண்ணுங்ககிட்ட மட்டுமே பேசறதினாலயும் இவர் பேர் விமல்ராஜ் என்ற பெயரை
விமல கோவிந்தானந்தாவா மாத்தினோம். சினிமா சிந்தனையிலயே இருக்கறதினால
கார்த்திக் டைரக்டர். எனக்கு நிறைய பேரு இருக்கு, உயரமா இருக்கறதினால
நெட்டை, பனைமரம்னு செல்லமா கூப்பிடுவாங்க.

ஹாஸ்டல் நிர்வாகமே சரியில்லன்னு எல்லாரையும் தூக்கிட்டு புதுசா ஒரு வார்டனை போட்டாங்க. வரப்போறவரு பயங்கர கண்டிப்பு, அப்படி இப்படின்னு ஒரே பில்டப்பு
வேற. சரி யாரு வந்தா என்ன நம்மள ஒண்ணும் அசைக்க முடியாது அப்படின்னு
வீறாப்பா சுத்திகிட்டு இருந்தோம்.

புது வார்டன் வந்த அன்னிக்கே ஒரு மீட்டிங்க போட்டு ஏழரைக்கு சாப்பிடணும்
எட்டரை மணிக்குள்ள கேம்பஸ்ல இருக்கணும், ராத்திரி ஒம்பது மணிக்குள்ள
சாப்பிடணும். பத்துலருந்து பதினொரு மணி வரைக்கும் படிக்கணும். யாராச்சும் இதை
சரியா பாலோ பண்ணலன்னா 3 முறை வார்னிங் நாலாவது முறை ஹாஸ்டல விட்டு தூக்கிடுவோம்னு பயங்கர ஒவ்வாத கண்டிஷன்கள் குடுத்துட்டு இருந்தாரு.

மாப்ள இது கொஞ்சம் கூட சரியில்ல திடீர்னு "க்ளாஸ்ல போர் அடிச்சுதுன்னு
களைச்சி போயி" ரூம் வந்து படுத்துட்டு இருந்தேன். அந்த வாட்ச்மேன் பய
வார்டன்கிட்ட போட்டுகுடுத்துட்டான்.ரூமுக்கு வந்தவன் நேரா பிரின்சிபால் ரூமுக்கு
அனுப்பிட்டான்னு அங்க போனா காதுல கேக்க முடியாத அளவுக்கு திட்டறார் பிரின்சி.
இப்படி வாய்க்கா மண்டையன் கதறிட்டான்.

இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்கற ஆளு நேத்து ஜூனியர் பையன் ஒருத்தனுக்கு
ராத்திரி காக்கா வலிப்பு வந்துடுச்சி. ஹாஸ்டல் ஜீப்பு ட்ரைவர போய் எழுப்பினா
வார்டன சொல்ல சொல்லு நான் வரேன்றான். அந்தாள போய் எழுப்பினா
எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்னு கதவ திறக்காமலே பதில் சொல்லி
அனுப்பிட்டாரு. இது ஊத்தவாயன்

மச்சி மேட்டர் தெரியாதா? அந்தாளுக்கு மூலம்டா ராத்திரி பத்து மணிக்கு மேல
மருந்தை தடவிட்டு படுத்தான்னா கடவுளே வந்து எழுப்பினாலும். எந்திரிக்க
மாட்டாரு. விடிஞ்சாதான் படுக்கைய விட்டு எந்திரிப்பாரு. விமல கோவிந்தானந்தாவுக்கு
இந்த மாதிரி மேட்டர்லாம் எப்படி தெரியுதுன்னே தெரியல.

"ஏண்டா சாமியாரே. இவ்ளோ விஷயம் உனக்கெப்படிடா தெரியும். ஒருவேளை
அந்தாளுக்கு நீதான் ஒற்றனா"?

இல்லடா நம்ம வாட்ச்மேன் இருக்கானே அவனுக்கு ஒரு கட்டு பீடி வாங்கி
குடுத்தேன். அவன்கிட்ட வார்டன பத்தி மேட்டர எல்லாம் கறந்துட்டேன்.

மெஸ்ல கரெக்ட் டயத்துக்கு போய் சாப்பிடல்லன்னா குத்தம். அப்படியே
சாப்பிட்டு ரோட்டு பக்கம் காலாற நடந்து போலாம்னு பாத்தா கேட்டை
மூடிட்டான். கிரிக்கெட் விளாடலாம்னு பாத்தா பந்து, பேட் எல்லாம் அவர்
ரூமுக்கு கொண்டு போய் வெச்சிகிட்டாரு.

ஒரு அளவுக்குதாண்டா இருக்கணும் எல்லாமெ. இப்ப பாரு பொழுது போகவே
மாட்டேங்குது ஏதாச்சும் பண்ணனும். இபப்டியே விட்டா வேலைக்கு ஆகாது.

சரி ஒண்ணு செய்யி நாளைக்கு காலேஜ் பஸ்ல போய் லட்சுமி வெடி அப்புறம்
அந்த பச்சை கலர்ல ஒரு பாம் இருக்குமே அது ரெண்டையும் வாங்கிட்டு வந்துடு.

சரியா பன்னெண்டு மணிக்கு ரெண்டு பக்க ஜன்னல்லயும், ஆளுக்கு ஒருத்தன்
நான் வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு கதவிடுக்குல ஒரு பாம் வெக்கிறேன்
சரியா அடுத்த பத்தாவது நிமிஷத்துல மூணு பக்கமும் வெடிக்கணும். வெடிக்கற
சத்தத்துல கட்டுல்ல இருக்கறவன் படார்னு கீழ விழணும். இங்க இருந்தா
உசுருக்கே ஆபத்துன்னு நாளைக்கு வார்டன் பொறுப்புல இருந்து விலகணும்.
இதான் ப்ளான். இத செய்யிறதுக்கு முன்னாடி அந்த வாட்ச்மேன் கிழவன்
ரூமுக்கும் தாழ்ப்பாள் போட மறந்துடாத. அந்த கிழம் போட்டு குடுத்துடும்.

டன்.

மறுநாள் ராத்திரி. சரியா பன்னெண்டு மணிக்கு ஏற்கனவே போட்ட திட்டத்தின்
படி கச்சிதமா முடிச்சாச்சு. நாலு பக்க சுவருக்குள்ள கைதட்டினாவே பயங்கரமா
எதிரொலிக்கு. இதுவே பாம் போட்டோம்னா காது கிழிஞ்சிடும். எங்க வார்டனுக்கு
வேற எதுவோ கிழிஞ்சிடுச்சி. வெடிச்ச சத்தத்துல எல்லா பசங்களும். அடிச்சி
பிடிச்சி வந்து வார்டன் ரூம் முன்னாடி வந்துட்டானுங்க. எவனுக்கும் கதவை திறக்க
பயம். நாங்க நாலு பேரும் இப்பதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி கண்ண கசக்கிகிட்டே
வார்டன் ரூமை நானே திறந்தேன்.

வார்டன் மூஞ்சுல எள்ளும் கொள்ளும் வெடிக்குது, பீதில வேர்த்து வழியுது
ஏத்தி கட்டின லுங்கி எந்த நேரத்துலயும் அவிழ்ந்து விழுந்துடுமோன்னு கைல
புடிச்சிகிட்டே வெளில வராரு பொது மாத்து வாங்கின வடிவேலு மாதிரி.

என்ன சார் யாரோ உங்க ரூமுக்கு பாம் வெச்சிட்டாங்க போலருக்கு. என் காது
கிழிஞ்சி போச்சு சார். உங்களுக்கு வேண்டாதவங்க யாரோதான் இந்த மாதிரி
செஞ்சிருக்காங்க. ரொம்ப நாள் கழிச்சி "ஊழல் பண்ணாத, பசங்களுக்கு நல்லது
செய்யிற வார்டன்" வந்துட்டாருன்னு சந்தோசமா இருந்தோம். அதுக்குள்ள
இப்படி பண்ணிட்டானுங்களே.

"நீங்க ஒண்ணும் கவலைபடாதிங்க சார் நாளைக்கே அவன் யாருன்னு கண்டுபுடிச்சி
உங்க முன்னாடி நிறுத்தறேன்". நீங்க போய் தூங்குங்க சார்னு அவரை
தைரியபடுத்தினோம். எங்க மேல சந்தேகம் வந்திடக்கூடாதுல்ல அதான்.

ரெண்டு நாள் கழிச்சி எங்கள் அறையில இருந்த எல்லாரையும் ஹாஸ்டல விட்டு
தூக்கிட்டாங்க. எவனோ ஒரு நாதாறி ஸ்பை நாயி எல்லாத்தையும் போட்டு
குடுத்துடுச்சி.

அப்புறமென்ன ஹாஸ்டல விட்டு கூண்டோட தூக்கிட்டாங்க எங்க குரூப்பை.

Thursday, March 15, 2007

ரசிகர் மன்றங்கள்.

ரசிகர் மன்றங்கள்..

புதுசா வந்துருக்கும் புதுப்புயல் பூதகாந்தா இருந்தாலும் சரி, ரஜினிகாந்தா
இருந்தாலும் சரி எல்லாநடிகருக்கும் பாரபட்சம் பாக்காம ரசிகர் மன்றம்
தொறந்துடுவாங்க நம்ம ஆளுங்க. எங்க ஊர்லயும் அதே மாதிரி ரசிகர் மன்றதுக்கு
பஞ்சமில்ல அதை பத்தின ஒரு பதிவுதான் இது.

ரஜினி

ஊர்ல உள்ள பெரிய கைங்கதான் இந்த கோதாவுல இருக்கும் சண்டையே
போடமாட்டாங்க தலைவர் பிறந்தநாள் அன்னிக்கு ஸ்கூல் முன்னாடி நின்னுகிட்டு எல்லாருக்கும் புத்தகம், பேனா பென்சில்னு கொடுத்து அசத்துவாங்க. வயசான
விதவை பாட்டிமார்களுக்கு புடவை குடுப்பாங்க. ரொம்ப நல்ல நல்லவங்க.
ரஜினி படத்துக்கு பேரை அறிவிச்சாவே எங்க ஊர்ல டிஜிட்டல் பேனரெல்லாம்
போட்டு அசத்துவாங்க.

கமல்

பாதி படிச்ச பயலுவ இருக்கறது இங்கதான், லயன்ஸ் கிளப் கூட சேர்ந்து
நல்ல காரியம் நிறைய பண்ணுவாங்க ஆனா வெளில எதுவுமே தெரியாது. நானும்
இந்த மன்றத்துல இருந்தேன். குணா படத்தை வகை தொகையில்லாம பார்த்ததினால
ஊர்ல ஒருத்தருக்கு அரைக்கிறுக்கு பிடிச்சி போக கமல் ரசிகன்னாவே ஒரு டைப்பா பார்ப்பார்கள்.

விஜயகாந்த்

அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ள மன்றம் இதுவாத்தான் இருக்கும்.
போர்டை பாத்தோம்ணா மக்கள் தொகை தகவல் அறிக்கை மாதிரி கொச கொசன்னு
நிறைய பேர்கள் எழுதியிருக்கும். சென்சஸ் எடுக்கற ஆளுங்க வந்தாங்கன்னா ஊர்ல
எத்தனை பேர் இருக்கானுங்க ஈசியா கண்டுபிடிக்கலாம். விஜயகாந்த் படம் ரிலீஸ்
ஆச்சின்னா ரசிகர் ஷோவுக்கு மூணு லாரில ஆளுங்க போவாங்க. இப்ப
கட்சியா மாறிட்டதுனால கட்டுக்கோப்பா இருக்கிறார்கள்.

ராமராஜன்

இவர் படம் ரிலீஸ் ஆனாலும் சரி ரிலீஸ் ஆகலன்னாலும் சரி மன்றத்து போர்டு
மட்டும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் ஏன்னா அவரோட வெறித்தனமான ஒரு பக்தரின்
மெயின் வேலையே அதுதான் கெட்டப்பும் அதே மாதிரிதான். ராமராஜன் படம்
செகண்ட் ரிலீஸ்னா போதும் வெத்தலை போட்டுகிட்டு இருக்கும் பாட்டிய
மொதகொண்டு தெருல இருக்கற எல்லாருக்கும் ஃப்ரீ டிக்கெட்தான். இந்த
மன்றத்துனால ஊர்ல பெரிய சேதாரம் ஒண்ணும் இருக்காது. (பின்ன ஆளுங்க இருந்தாத்தான)

விஜய்&அஜித்

முக்கால்வாசி எல்லாருமே இளைஞர்கள்தான் விதிவிலக்கா ஒரு பெரியவர் இருக்கார்
அவர் என் ப்ரெண்டோட அப்பாதான் அஜித் ரசிகர்மன்ற தலைவர் அவரு. அவரோட
பையனோ விஜய் ரசிகர் மன்றத்துல பொருளாலர். அஜித் படம் ரிலீஸ் ஆச்சின்னா
தன்னோட டிராக்டர் வண்டில அம்புட்டு பேத்தையும் அள்ளி போட்டுகிட்டு போவாரு. அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய சண்டையே நடக்கும். இந்த ரெண்டு
மன்றத்துக்காரங்களும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. எல்லா பயல்களும்
மாமன் மச்சானா இருந்தாலும் அந்தந்த நடிகர்கள் எங்கயோ இருந்துகிட்டு இந்த உறவுகளுக்குள் சண்டையமூட்டிகிட்டு இருப்பாங்க அவங்க பொழப்புக்கு இவங்க
ஊறுகாய் மாதிரி. இதெல்லாம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இப்ப எதுவும் சண்டை போட்டுக்கறதில்லு.

சிம்பு & தனுஷ்

ஊர்ல உள்ள நண்டு சிண்டு பசங்க எல்லாம் இங்கதான் இருப்பானுங்க. யாருமே
இவன்கள கவனிக்கலன்னாலும் ஊரே இவங்களதான் கவனிக்கறமாதிரி ஒரு நினைப்பு.

நடிகர்களுக்கு இல்லாம தலைவர்களுக்கும் நற்பணி மன்றங்கள் இருக்கு. நேரு,
பகத்சிங், அம்பேத்கர். இவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னே தெரியாது ஆனா
ஏதாச்சும் செஞ்சுகிட்டே இருப்பாங்க.ஆனா கண்டுக்கதான் ஆள் இல்ல.

எனக்கு பெரிய ஆசை என்னன்னா எப்படியாவது ஒரு ரசிகர் ஷோவுக்கு போயிடணும்.
(ரசிகர் ஷோன்னா ரசிகர்களுக்காக மட்டும் மன்றம் தனியா தியேட்டரின் மொத்த
டிக்கெட்டும் வாங்குவது)அப்படி இருக்கும்போதுதான் தலைவரின் பாபா படம்
வெளியானது. எனக்கு தெரிஞ்சி உலகத்துலயே (சூரிய விளம்பரம் மாதிரி இருக்கோ??) இல்லல்ல தமிழ்சினிமா வரலாற்றிலேயே அதிகாலை மூணு மணிக்கு படம் ரிலீஸ்
ஆனது அது மட்டும்தான். ராத்திரியே தியேட்டர் வாசல்ல நின்னு பொட்டி வர்ற
வரைக்கும் காத்திருந்து பார்த்தேன் ராமதாஸ் கட்சியினர் கொடுத்த டார்ச்சரின்
பேரால் அதிகாலைலயே ரிலீஸ் செய்திருந்தார்கல் தியேட்டர் முழுக்க போலீஸ்.
500 பேர் உக்காந்திருக்க வசதியுள்ள தியேட்டர்ல மூவாயிரம் பேர் பார்த்தோம்.
நிக்கிறதுக்கு கூட இடமில்ல வாசல்ல ஒரு ஓரமா நின்னு பாத்தா திரை கூட தெரில
இந்த லட்சணத்துல விசில் சத்தம், கைதட்டல், பேப்பர் கட்டிங் வீசுறது இதுக்கு
நடுவில ஒரு சீன் கூட ஒழுங்கா பார்க்க முடியல. தியேட்டர்ல இருந்து வரும்போது
சட்டை பூரா நனைஞ்சி போய் போங்கடா நீங்களும் உங்க ரசிகர் ஷோக்களும்னு
ரிலீஸ் ஆகி பத்து நாள் கழிச்சிதான் தியேட்டர் பக்கமே எட்டி பாக்கறது.

என்னை பொறுத்தவரை ரசிகர் மன்றங்கள் தேவையா இல்லையான்னு கேட்டா
கண்டிப்பா தேவையில்ல தேவைதான்னு ரெண்டையும் சொல்லமாட்டேன். அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்குற மாதிரி அது ஒரு ஜாலியான கட்டம். ஆனா அஞ்சாப்புலயே கப்பு வெச்சிகிட்டு உக்காந்துகிட்டு இருந்தா பொழப்பு நாறி போயிடும். இதெல்லாம்
பாக்குறதுக்கு முன்னாடி எங்க ஊருல மன்றம் வெச்சிகிட்டு அலம்பல் பண்ணது
செம ஜாலியான அனுபவம்.

வயசுப்பையனோ, இல்ல வயசான ஆளோ ஏதாவது ஒரு நடிகனுக்கு ரசிகனா இருந்தே ஆகணும் அப்படி இல்லன்னா அவன மனுசனாவே மதிக்க மாட்டானுங்க எங்க ஊர்ல. அவனுங்களாவே வந்து மன்றத்துல சேத்துக்குவாங்க. இதுல தலைவர், செயளாலர், பொருளாலர். உபதலைவர்,உபதலைவருக்கு ஒரு உதவி தலைவர்னு மன்றத்துல எல்லாருக்கும் ஒரு போஸ்ட் கண்டிப்பா உண்டு. உங்கள மன்றத்துக்கு இழுக்கும்போதே
ஒரு பதவியோட இழுப்பாங்க அதான் அவங்க ஸ்பெசாலிட்டியே.

தட்டி வைக்கறதுல இருந்து பேர பெருசா போடலன்றது வரை ஒரே சண்டையும்
சச்சரவுமா இருக்கும் ஆன ஒரு படம் ரிலீசாச்சுன்னு வைங்க அத்தன பேரும் ஒண்ணாயிடுவாங்க. பொண்ணுங்க படிக்கற ஸ்கூல், டியூஷன், பிடிச்ச பிகர்
வீட்டுப்பக்கம் இந்த மாதிரி இடங்கள்ல இருக்கற சுவர்களில் விளம்பரம் அதிகமா
பார்க்கலாம் அங்க சுவர் பிடிக்கற விஷயத்தில் கரை வேட்டிகள விட அதிகம் பாலிடிக்ஸ் பண்ணுவாங்க. ஹார்டின் படம் வரைஞ்சு அதுக்குள்ள அம்புகள குறுக்கும்
நெடுக்கும் விடறது, தன் பேர மட்டும் கண்ணும் கருத்துமா பக்கத்துலயே இருந்து
கலர்ல போட சொல்றது செவுத்துல பேர் வந்துடுச்சின்னா ஒரு கெத்துதான்.
"ஏய் அங்க பாருடி உன் ஆள் பேரு" அங்க இருக்கு அப்படின்னு ஒரு பொண்ணு சொல்லுச்சின்னு வைங்க அன்னிக்கு ஒரே பார்ட்டிதான்.

பஸ்ஸுக்காக பொண்ணுங்க நிக்கும்போது எதிர்த்தாப்புல எல்லாரும் பாக்கற வகைல
எந்த மன்றத்து போர்டு இருக்குதோ அதுதான் பசங்க ஜாஸ்தி இருக்கற மன்றம்.
நடிகர்களுக்கு பட்டம் இருக்கற மாதிரி இவனுங்களும் ஆளுக்கு ஒரு பட்டம் குடுத்துக்குவானுங்க செம காமெடியா இருக்கும் "தெற்குத்தெரு புயல் சுகுமார்"
"மின்னல் ராஜா" இப்படின்னு இதெல்லாம் பத்தாதுன்னு காதலர் தினம் வந்துச்சின்னா
வீட்டுல கிடக்குற பழைய வேட்டிய எடுத்திகிட்டு வந்து ரெண்டு பக்கமும் ஹார்ட்டின்
போட்டு நடுவில நாலஞ்சு ஜோடிப்புறா பறக்கும் அதுக்கு கீழ அழகான எழுத்துக்களில்

"காதலர் தினத்தை முன்னிட்டு காதல் சிட்டுக்களை வாழ்த்தும் இளம் நெஞ்சம்"
இவண்
சுப்பிரமணி.
"இணைந்து வாழ்த்தும் இதயங்கள்னு"
இன்னும் நாலு வெளங்காதவனுங்க பேரு.

அப்படின்னு வேட்டியோட ரெண்டு பக்கமும் குச்சி கட்டி இழுத்து கரண்டு கம்பத்துல கட்டிருவானுங்க. ஆனா இவன் சொந்தக்கார பொண்ணு வேற யாரையாச்சும் லவ் பண்ணுச்சின்னா ரணகளமாக்குவாரு. எல்லாமே பிஸ்து காமிக்கிறதுதான். ஒரு
வயசுக்கு மேல நினைச்சு பாத்தானுங்கன்னா கேவலமா இருக்கும்.

என்ன எழுதறதுன்னே விளங்கவில்லை அதனால்தான் இந்த மொக்கைப்பதிவு.

Wednesday, March 14, 2007

துபாய் ரிட்டர்ன் மாப்ளடோய்!!

மாப்ள போறான் பாத்தியா துபாய் ரிட்டர்ன் போலருக்கு அதான் அங்க வரும்போதே
இங்க வாசனை ஆள அமுக்கி போடுது. இப்ப பாரு கோல்டு கலர் வாட்ச், ஒரு கைல
மூணு மோதிரம், ப்ரேஸ்லெட் எல்லாத்தையும் காமிக்கிற மாதிரி அவனோட செய்கை இருக்கும்பார். அடிக்கடி கை ஆட்டுவான், டைம் பார்ப்பான் காலரை இழுத்து லூஸ் விட்டுக்குவான்.

இன்னும் ரெண்டு மாசத்துக்கு இவன் அலப்பறை தாங்க முடியாது. கேட்டா கம்பேனில
ரெண்டு மாசம் லீவுன்னு கோட்டா அடிப்பான். பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு எல்லாம்
ஹீரோ பேனா, கோடாலி தைலம்னு பட்டாசு கெளப்புவான். பக்கத்து கடைல
டீக்குடிக்கணும்னா கூட பைக்லதான் போவான். முழுக்கை சட்டைய போட்டுகிட்டு
கீழ லுங்கி(மேட் இன் இந்தோனேசியா) கட்டிகினு போவான். ஆனா அந்த லுங்கி
நம்ம ஊர் உழவர் சந்தைல கூட கிடைக்கும்ன்றது வேற விசயம். இந்த மாதிரி
அலம்பல் எல்லாம் பண்ணிட்டு துபாய்க்கு போயிடுவான்.

ம்ம் ராஜ வாழ்க்கைடா மேலுக்கு, காலுக்கும் பவுனு போட்டு பதவிசா சுத்தினா
இப்படிதான் எங்க ஊருல நாங்க நக்கல் அடிப்போம். அதுவும் துபாய் ரிட்டர்ன்
அப்படின்னா கேக்கவே வேணாம். இந்த கூத்த பாக்குற என்னைய மாதிரி ஆளுங்க எப்படியாச்சும் துபாய், சவுதி, போய் நிறைய சம்பாதிச்சு இவன விட
நல்லா பிஸ்து காமிக்கணும்டான்னு தோணும்.

பொதுவா பார்த்தா எல்லாரும் இப்படிதான் நினைப்பாங்க. நானும் அப்படிதான்
நினைச்சேன். ஆனா அவங்கல்லாம் இங்க எப்படி கஷ்டபடறாங்க, எத்தனை மணி
நேரம் உழைக்கறாங்கன்னு பாத்தா அந்த எண்ணமெல்லாம் அப்படியே சிதறிப்போயிடும். அவங்க மனசு சந்தோஷமா இருக்கறதே தாயகம் வரும்போதுதான்
அதுனால அப்படி இப்படி அலம்பல் பண்றது சகஜம்தான் புதுசா பாக்கும்போது
நமக்கு கொஞ்சம் ஓவரா தெரியும்.

இங்க வர்றவங்க ரெண்டு விதமான விசா முறையில வராங்க. ஒண்ணு வரும்போதே எம்ப்ளாய்மெண்ட் விசால வர்றவங்க, இன்னொண்ணு விசிட் விசா (இது அதிக பட்சம்
மூணு மாசம் இங்க இருக்கலாம்) என்ற முறையில் வருவாங்க. எம்ப்ளாய்மெண்ட்
விசா ஏதாவது ஒரு ஏஜன்ட் மூலமாவோ அல்லது இங்க இருக்கற நண்பர்களோ,
உறவினர்களோ எடுத்து அனுப்புவது. இந்த முறையில வர்றவங்களுக்கு அதிக பிரச்சினை இல்லை. கம்பெனி நல்ல கம்பெனியா இருந்துட்டா போதும். ஒரு சிலர்
ஏஜன்ட் மூலமா இங்க வந்து ஏமாந்து போறவங்களும் இருக்காங்க. அல்லது
கம்பெனி பிடிக்கலன்னு ஓடறவங்களும் இருக்காங்க இவங்கள போலிஸ்லயோ,
அரசாங்கமோ பிடிச்சி அனுப்புனாதான் உண்டு. ஓடறவங்க 5 வருசம் பத்து வருசம்
கூட ஊருக்கு போகாம இருக்கும் ஆட்களையும் நான் பாத்துருக்கேன். சில பேர்
ஊருக்கு போகும்போது அவங்கள அடையாளம் தெரியாம போன சம்பவமும்
சொல்ல கேட்டிருக்கேன். சில பேர் வந்து இறங்கும்போது விசாவில்
குறிப்பிட்டிருக்கும் கம்பெனியே இல்லன்னு சொல்றதும் நடக்குது.

ரெண்டாவது முறையான விசிட் விசாவில வர்றவங்க இங்க வந்து அவங்களுக்கு பிடிச்ச, அனுபவமுள்ள துறையில வேலை தேடிக்குவாங்க. மூணுமாசத்துல வேலை
கிடைக்கலன்னா இந்தியாவுக்கோ அல்லது பக்கத்தில் இருக்கும் தீவுக்கோ போய்
மறுபடியும் வேறு விசிட் விசாவில் வரலாம். நான் இந்த முறையில் தான் துபாய்
வந்தேன் வந்து நல்ல வேலை கிடைக்காம நாய்படாத பாடுபட்டேன் இப்பவும்
பட்டுகிட்டு இருக்கேன். எல்லாரும் கஷ்டப்படறாங்கன்னு சொல்லமுடியாது. பலபேர்
வந்த சில நாளில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து செட்டில் ஆனவங்களும்
இருக்காங்க. என்னை மாதிரி கொஞ்சம் சிரமப்பட்டவங்களும் இருக்காங்க ஆனால்
இங்க வருவதற்கு முன்னமே எல்லாத்துக்கும் தயாரா வரணும்.


நான் ஏன் கஷ்டப்பட்டேன்னா முதல் முறையா பாஷை தெரியாத ஊருக்கு வரேன்.
இந்தியும் தெரியாது ஆங்கிலமும் அவ்வளவா வராது. பஸ், டாக்சி எதிலயும் இந்தி
பேசும் நம் நாட்டு பிரஜைகளும்,பாகிஸ்தான் ஆளுங்களும் இருப்பாங்க. இந்தி மொழி எவ்வளவு முக்கியம்னு வெளிமாநிலத்துக்கோ, வெளிநாட்டுக்கோ போனாத்தான்
தெரியுது. இந்த நாட்டு பிரஜைகள விட மலையாளிகள்தான் அதிகம் தமிழ் பேசினா
ஓரளவுக்கு நாமளும் அவங்களும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கறதுனால ஒண்ணும் பிரச்சினையில்லை. வந்த புதுசுல மூணு மாசம் வேலையே கிடைக்கலை, கிடைக்கற
வேலை மனசுக்கு பிடிக்கலை. அப்படி சும்மா இருந்த நாட்களில் எங்க அறையில்
இருந்த சில ஆளுங்க கூட லோடிங் அன்லோடிங் வேலைக்கு கூட போயிருக்கேன்.
மூணு மணி நேரத்துல இருநூறு திராம்ஸ் கிடைச்சுதுன்னா நாலு பேர் ஷேர்
பண்ணிக்குவோம் அந்த காசை என்னோட செலவுக்கு வெச்சிக்குவேன். வீட்டுல
செலவுக்கு காசு வேணும்னா அப்பா, அம்மா கிட்ட ஏமாத்தி வாங்கிடலாம். இங்க
என்னோட மாமாதான் இருந்தார் அவர்கிட்ட எப்படி கேக்கறதுன்னு கூச்சப்பட்டுகிட்டு
கேட்க மாட்டேன். கேட்டா குடுப்பாருன்னு எல்லாத்தையும் கேக்க கூடாதுல்ல.அவருக்கு தெரியாமலே இந்த மாதிரி வேலைக்கு போவேன். எல்லாமே ஒரு
அனுபவம்தாங்க இந்த மாதிரி கஷ்டப்படும்போதுதான் பணத்தின் அருமை
தெரியும் அப்படி பாத்தோம்ணா நான் நிறைய கத்துகிட்டேன்.

சொந்த கதைய சொல்லி போரடிக்கிற மாதிரி இருக்கு...

மீதி நாளைக்கு..

டெவில் ஷோ - கவுண்டர் டீ.ஆர் - பகுதி இரண்டு.

முதல் பகுதி இங்கே சொடுக்கவும்

டெவில் ஷோவில் கவுண்டர் டீ.ஆருக்கு கேள்விக்கணைகளை கன்னா பின்னாவென்று வீசுகிறார்

கேண்டீன்ல விக்கிறாண்டா பஜ்ஜி
என் வீட்டு நாய்க்குட்டி பேரு புஜ்ஜி
லைட்டு எரியணும்னா போடணும் சுச்சி
கேள்விக்கணைகளை தொடுடா மச்சி

கவுண்டர்: எடுபட்ட பய கேப்புல நம்மளயே மச்சினு கலாய்க்கறானே, சரி விடு
கழுத போகட்டும் கிங் காங் னு ஒரு ஆங்கிலப்படத்துல ஒரு மனிதக்கொரங்கு
நடிச்சிருக்கும். அது ஹீரோயின லவ் பண்ணும் ஆனா கடைசில சேரமுடியாம இறந்து போயிடும், வீராச்சாமிலயும் அப்படிதான் வருது. அந்த படத்தோட அப்பட்டமான
தழுவல்தான் வீராசாமினு வெளில பேசிக்கறாங்களே.

டீ.ஆர்: என்னோட படத்தை பார்த்துதான் அந்த படத்தை எடுத்துட்டாங்கன்னு நான்
புகார் செஞ்சா ஆராச்சும் நம்புவாங்களா ஆனா அதுதான் உண்மை. தமிழனுக்கு
ரசனையே இல்லாம போச்சு. என் கதைய ஹாலிவுட்ல எடுக்கறான் கோலிவுட்ல
கெடுக்கறான்.

கவுண்டர்: டேய் அப்பிரிக்கா மண்டையா அந்த படம் எடுத்து ஆறு மாசம் ஆகுதுடா
கீரிபுள்ள தலையா. ஆனா ஒண்ணு அந்த படத்தை அவனுங்க க்ராபிக்ஸ், மேக்கப்
போட்டு கஷ்டப்பட்டு எடுத்தாங்க உனக்கு க்ராபிக்ஸ், மேக்கப்பு எல்லாம் போடாம
அம்சமா பொருந்துச்சே அதுதான் படத்தோட ஹைலைட்டு அந்த விஷயத்துல நீ
ஜெயிச்சிட்ட.

டீ.ஆர்: நல்லவேளை என்னோட அருமை பெருமையெல்லாம் யாருக்குமே தெரியாம போயிடும்னு பயந்துட்டேன் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. (சிரிக்கிறார்)

கவுண்டர்: உலகத்துலயே ஒரு ஆள வெச்சிகிட்டு கட்சி நடத்துற ஆள் நீயாத்தான்
இருப்ப, எதுக்கு உனக்கு கட்சி அதுவும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்
மத்தவன்லாம் லட்சியமே இல்லாம கட்சி நடத்திட்டு இருக்கானா. எதுக்கு மேன்
இந்த ஒன் மேன் ஆர்மி. உன் கொள்கைதான் என்ன.

டீ.ஆர்: கவுண்டரே என்னோட கட்சில பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
இருக்காங்க. அதுலயும் மூணு முதலமைச்சர்கள எதிர்த்து அரசியல் செஞ்சவன்
நான். எம்.ஜி.ஆர எதிர்த்து உண்ணா விரதம் இருந்தேன், கருணாநிதிய எதிர்த்து
ஊர்வலம் நடத்துனேன், அம்மாவை எதிர்த்து யாகம் செஞ்சேன். அவங்க பரிகாரம் பண்ணாங்க. "பண்ண வேண்டாம் பரிகாரம் உங்க கைக்கு கிடைக்காது அதிகாரம்"னு
அம்மாவுக்கு எச்சரிக்கை குடுத்தேன். ஈரோட்டுல கலைஞருக்கு ஆதரவா பேசினேன்
அதனாலதான் இந்த தேர்தல்ல அவர் ஜெயிச்சாரு.

கவுண்டர்: தெரு முக்குல நின்னு சத்தம் போட்டா அதுக்கு பேர் எதிர்ப்பா இதுல
மூணு முதலமைச்சர்கள எதிர்த்து நின்னேன்னு கப்சா அடிக்குதுபாரு. ஏண்டா ஜனங்க மூடநம்பிக்கைய போக்குறதுல திராவிட கட்சிக்கு பெரிய பங்கு உண்டு. அந்த வகைல
உன் கட்சியும் திராவிட கழகத்துல சேர்ந்ததுதான் அப்படி இருக்க உன் பேருக்கு
முன்னாடி விஜய நகர பேரரசர் மாதிரி "விஜய"ன்ற வார்த்தைய சேத்துகிட்டா என்ன
அர்த்தம் பாடையில போகறதுக்கு பத்து வருசந்தான் இருக்கு இந்த பேர மாத்துனா
இருவது வருசமா மாறிட போகுதா. ஏண்டா கல்லு விக்கறவன், கடப்பாறைய வச்சி
வீட்ட நோண்டறவன் கிளி, எலி ஜோசியம் பாக்கறவன், இவனுக்கு உனக்கும் என்ன வித்தியாசம்??

டீ.ஆர்: கடந்த மக்களவை தேர்தல் நடந்தப்ப பிரதமரா வாஜ்பாயி வருவாரா இல்ல
சோனியா வருவாங்களான்னு எல்லாரும் மண்டைய பிச்சிகிட்டாங்க அப்ப நான்
சொன்னேன் ரெண்டு பேருமே வர மாட்டாங்கன்னு, எதிர்பார்க்காத யாரோ ஒரு
மன்மோகன்சிங் பிரதமரா வந்தாரா இல்லையா அது மாதிரி டீ.ராஜேந்தர்னு இருந்த
என் பேர்ல "விஜய" வார்த்தைய சேத்துகிட்டா தமிழ்நாட்டு முதலமைச்சர்
ஆயிடுவேன்னு மனசுக்குள்ள கவுளி கத்துச்சி. யாருக்கு தெரியும் அந்த வெண்தாடி
வந்த மாதிரி இந்த கருந்தாடி நாளைக்கு முதலமைச்சராக கூட வர வாய்ப்பிருக்கு.

கவுண்டர்: அது கனவுல கூட நடக்காது மேன். தமிழ்நாட்டு ஜனங்க ஒண்ணும்
முட்டாள் இல்ல. அது இருக்கட்டும் உன் பையனுக்கு யார்றா லிட்டில் சூப்பர் ஸ்டார்னு
பட்டம் குடுத்தது?

டீ.ஆர்: அது நாந்தாங்க குடுத்தேன். சின்ன வயசில கை கால விசுக்கு விசுக்குனு
ஆட்டுவானா அதுனால நானே அவனுக்கு பேர் வெச்சிட்டங்க. ஆனா பாருங்க
அவன் தமிழ்நாட்டையே கலக்கிடு இருக்கான். அடுத்த என் பையனுக்கு டுங்கிள்
டுங்கிள் சூப்பர் ஸ்டார்னு வெச்சிருக்கேனுங்னா அவனும் பெரிய ஆளா வருவான்.

கவுண்டர்: என்னமோ நாடார் கடையில முட்டாய் வாங்கி குடுத்த மாதிரி
சொல்றயேடா பட்டம்ங்றது மக்களா பாத்து குடுக்கறது. நீங்களா வச்சிக்கறதுக்கு
பேரு முடிச்சவிக்கத்தனம். ஏண்டா புல்டோசர் தலையா உங்குடும்பத்துல இத்தன
பேரு நடிக்கறது பத்தாதா? இன்னும் ஒரு பையன இட்டாந்து என்ன பண்ண போற.
மக்கள் பாவம் இல்ல. ஒண்ணாம் நம்பர் பொறுக்கி உன் பையன். இன்னொருத்தன்
எப்படி வரப்போறானோ தெரில.

டீ.ஆர்: அவனும் என்னை மாதிரியே எல்லா திறமையும் இருக்கற ஆளா
சினிமாவில ஜொளிப்பானுங்னா அது நிச்சயம்.

கவுண்டர்: கிழிப்பான் சரி, நீ மனுதாக்கல் பண்ண போகும்போது உங்கிட்டருந்து
பத்தாயிரம் ரூபாயை எவனோ களவாடிட்டு போயிட்டானாமே, சினிமாலதான் உன் வீரமெல்லாம். நிஜத்துல பாத்தியா ஒரு ப்ளடி பிக்பாக்கெட் உன்னை ஏமாத்திட்டான்.
இதுக்கு என்ன மேன் சொல்ற நீ?

டீ.ஆர்: அண்ணே அது எதிர்க்கட்சியோட சதி. நான் நின்னா ஜெயிச்சிடுவேன்னு
அப்படி பண்ணிட்டாங்க.

கவுண்டர்: நின்னா டெபாசிட்டே கிடைக்காதுன்னா பேச்சு மட்டும் டன் கணக்குல
பேசு. இன்னும் உன் குடும்பத்துல இண்டு இடுக்கு, சந்து பொந்துலருந்து எல்லாரையும்
கூட்டி சினிமால விட்டு தமிழ் மக்கள சாகடி. நான் என்ன சொன்னாலும் திருந்த
போறதில்ல. ஆனா இன்னொரு படம் மட்டும் நீ நடிச்சேன்னு தெரிஞ்சுது மகனே
அடுப்புக்குள்ள உன் தலைய விடு கருக்கிபுடுவேன் ஜாக்கிரதை.

பேட்டி முடிஞ்சி போச்சு அப்படியே திரும்பி பாக்காம ஓடிப்போயிடு.

Tuesday, March 13, 2007

Blood Diamond

கடைசியாக நான் பார்த்த இரண்டு ஆங்கிலப்படங்களின் கதைக்களன் ஆப்பிரிக்க
தேசத்தை பற்றியது. இதற்கு முன் ஆப்பிரிக்க தேசத்தை பற்றியோ, மக்களை
பற்றியோ கேள்விப்பட்டிராதவன். அதிகபட்சமாக விளையாட்டு போட்டிகளில் கண்டிருக்கிறேன்.மற்றபடி அது ஒரு நாடு நம்மைப்போல மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றளவே எனது எண்ணங்கள் இருந்தன. இந்த இரண்டு திரைப்படங்களை
பார்த்த பின் இத்தனை ரத்த சேதம் அடைந்த ஒரு நாடு, அதன் கருப்பு பக்கங்கள், இனக்கலவரங்கள் போன்றவை நடந்தது என்பது படத்தை பார்த்த பின்புதான்
தெரிகிறது.

ஹோட்டல் ருவாண்டா, ப்ளட் டையமண்ட் இதுதான் அந்த இரண்டு படங்கள்
மிகவும் உணர்ச்சிகரமான

கதைகள் இரண்டுமே. முதலாவது இனக்கலவரத்தில் தனியாளாக மக்களை
காப்பாற்றும் ஒருவரின் கதை. ஆங்கிலப்படத்திற்கு உரிய எந்தவித ஜிகினாக்களும்
இல்லாத கதாநாயகன். இந்த கதையை பற்றி ஏற்கனவே அண்ணாச்சி எழுதிவிட்டார் என்பதால். அடுத்த படமான ரத்த வைரம் அதாங்க ப்ளட் டையமண்ட்
படத்தை பற்றிய என் பார்வை

உலகிலேயே அதிக வைரங்கள் கிடைக்கும் நாடுகளில் ஆப்பிரிக்க தேசம் முதலிடம்
வகிப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வைர வியாபாரத்தின் பிண்ணனியில்
இருக்கும் பயங்கரங்களை பற்றி சொல்வதே இப்படம். நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும்வைரத்தின் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று
அதிர்ச்சி படம் பார்க்கும்போது வரும். இந்த வைரக்கடத்தலை தவிர ஒரு குடும்பம்
பிரிந்து இணைவது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

மீன்பிடிக்கும் தொழிலாளியாக சாலமன் வாண்டி (Solomon Vandy) உண்மையில்
கதை இவரை சுற்றிதான் நடக்கிறது. மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். மகனை
டாக்டராக்க வேண்டும் என்று சாலமன் தன் மகனை பள்ளிக்கு இட்டுச்செல்வதில்
ஆரம்பிக்கிறது படம் அங்கிருந்து துப்பாக்கி சத்தம் படம் நெடுகிலும் காணப்படும்.
ஏதோவொரு இயக்கத்தின் பெயர் சொல்லி மக்களை கண்மூடித்தனமாக சுடுகிறார்கள்.
கை காலை வெட்டுகிறார்கள் மனம் பதறுகிறது பார்க்கும்போது. அங்கிருக்கும் பெரும்பாலானாவர்களை சுட்டுவீழ்த்தி சிறுவர்ளையும், வாட்டசாட்டமாக இருக்கும்
சிலரையும் பிடித்து இழுத்து செல்கிறார்கள். சாலமனின் மனைவி மக்கள் கலவரத்தில்
பிரிந்து ஓடுகின்றனர். சாலமன் மட்டும் கூட்டத்திடம் சிக்கிக் கொள்கிறார்.

அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்று குளம், குட்டைகளில் வைரம் தேட
விடுகிறார்கள். சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து மக்களை கொல்லச்
சொல்லி கட்டளையிடுகின்றனர். இப்படி தேடிக் கிடைக்கும் வைரங்களை சொற்ப
விலைகொடுத்து அதிகவிலைக்கு விற்கின்றனர். பணத்துக்கு பதிலாக ஆயுதமாகவும்
சப்ளை நடக்கிறது. இது போன்ற வைரங்களை வாங்கி கடத்தும் வேலைக்கு வருகிறார்
நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ.

இதற்கிடையில் அளவில் பெரிய, அபூர்வமான பிங்க் நிற வைரம் ஒன்று சாலமன்
கைக்கு சிக்குகிறது அப்போது ராணுவப்படை ஒன்று புகுந்து அங்கிருந்த அடிமைகளை
காப்பாற்றி சிறைக்கு அழைத்து செல்கிறது. அவசரத்துக்கு அந்த வைரத்தை அங்கேயே புதைத்துவிட்டு வருகிறார். வில்லனுக்கு இது தெரியவர சிறையில்
சாலமனிடம் விசாரிக்கும்போது லியனார்டோ ஒட்டுக்கேட்க அந்த வைரத்தை
எப்படியாவதுமடக்கி எடுத்து லண்டனுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சிகளே படம்
முழுக்க சொல்லியிருக்கிறார்கள். இடையில் சாலமனின் குடும்பத்தை தேடுகிறார்கள்
இதுதான்கதை. ஒரு நொடி கூட கொட்டாவியை வரவழைக்கும் காட்சிகள் இல்லை.
மனம் பதறுகிறது இப்படியெல்லாம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று
நினைக்கும்போது வைரத்தின் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேல்நாடுகள் பணமும் கொடுத்து ஆயுதங்களும் கொடுத்து மக்களை எப்படி மூளை
மழுங்கடித்து வேலை வாங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை படம் பார்த்து முடிக்கையில் தெளிவாக புரிகிறது.

என் குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்தால் மட்டுமே அந்த வைரத்தை உனக்கு
காட்டமுடியும் என்கிறார் சாலமன். ஆகவே அவர் குடும்பத்தை தேடும்பணியில்
ஈடுபடுகிறார் டிகாப்ரியோ. வைரக்கடத்தலை பற்றி பத்திரிக்கையில் கட்டுரை எழுத வரும் கதாநாயகி. அவரின் உதவியுடன் பல அகதி முகாம்களில் தேடுவதற்காக ஒரு
ஒப்பந்தத்துடன் கருப்பரான சாலமனை கேமராமேன் என்று சொல்லி அழைத்துச்
செல்கிறார்கள்.

அப்போது அருமையான காட்சி வரும்...

சாலையில் இவர்கள் கார் பயணித்துக் கொண்டிருக்கும் அப்போது எதிரே வரும்
ஒரு வாகனத்தில் குண்டு வெடிக்கும். இந்த வண்டியில் வரும் பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் உடனே போட்டோ எடுப்பார்கள். அப்போது சாலமன் மட்டும் துடித்துக்கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற அவர்களை தூக்கி அவசர அவசரமாக
வண்டியில் ஏற்றுவார். அப்போது அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் சாலமனை
திட்டுவார்கள். அந்த காட்சியில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு அசாதாரண சம்பவம் நடக்கும்போது அதை பார்ப்பவrகளின் உணர்ச்சி
எப்படியிருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லும்.

ஒருவழியாக அகதிகள் முகாமில் தன் குடும்பத்தை சந்திக்கிறார் சாலமன். பின்னர்தான் டிகாப்ரியோவுடன் செல்ல ஒத்துழைக்கிறார். வைரத்தை தேடும் இடத்தில் தன்
மகனும் அந்த கொலைகார கூட்டத்துடன் இருப்பதை கண்டு பதறும் சாலமன் தன்
மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டு வர முயற்சிக்க மகனோ இவர் என் அப்பா
இல்லையென்று சொல்லுகிறான். அவனின் மூளை சலவை செய்யப்பட்டுவிட்டது.

அந்த கூட்டத்தை அழித்து மகனை காப்பாற்றுகிறார் டிகாப்ரியோ. இறுதியில்
டிகாப்ரியோவை சிறுவன் சுட முயற்சிக்கும் காட்சியில் மூவரின் நடிப்பும் பிரமாதமான
ஒன்று குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் கடைசி ஐந்து நிமிட காட்சி
குறிப்பிடவேண்டிய ஒன்று. அந்த காட்சியிலேயே குண்டு ஒன்று துளைத்து விட
டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம்
முடிகிறது.

மனதை தொடும் காட்சிகளும், கனக்கச்செய்யும் காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.

Monday, March 12, 2007

டெவில் ஷோ - கவுண்டர், டீ.ஆர்.

கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ.

டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்
வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு
இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை
போடுகிறார்.

கவுண்டரின் போன் அலறுகிறது.

இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த
பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று

கவுண்டர்: ஹலோ

டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு
இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு"

கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு
இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன்.

டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா
ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார்.

கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத
சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன
மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா
கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா.

டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான
பார்ட்டி வந்துகிட்டு இருக்கு.

டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா
ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா...

சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு
தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார்.

அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே
வாசலில் ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வருகிறது.

வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....

என்ற வீராசாமியின் தீம் பாடலை பாடியபடி வருகிறார்கள். நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை
அணிந்துகொண்டு
வருகிறார்.

கவுண்டர்: டேய் நில்லுங்கடா எல்லாரும், இங்க என்ன கட்சி மீட்டிங்கா நடக்குது பூரா
பேரும் அப்படியே ஓடிப்போயிடுங்க இந்தாள உள்ள விட்டதே பெரிய விஷயம் இதுல பிரியாணிகூட்டத்த பின்னாடியே கூட்டிட்டு வர்றியா. ஆல் புரொக்ராம் கேன்சல்.

தொண்டர்: எங்க தலைவர பேட்டி எடுக்கலன்னா இங்கயே எல்லாரும் தீக்குளிப்போம்..

கவுண்டர்: எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே. இந்த பிட்டலாம் வேற எங்கயாச்சும்
போடு இங்க வேணாம் ஒழுங்க எல்லாரு ஓடி போயிருங்க.

யோவ் டீ.ஆரு அங்க என்னயா தாடிய சொறிஞ்சிகிட்டு இருக்க ஒழுங்க இவனுங்கள
வெளில போக சொல்லு.. இல்லன்னா அப்படியே நீயும் ஓடிப்போயிடு.

"அவங்க எல்லாம் என் தொண்டர் படை
போடாதிங்க நீங்க தடை
எனக்கு பிடிச்சது ஆமை வடை."

இவன விட்டா இப்படியே பேசி சாகடிச்சிடுவான் சட்டு புட்டுனு பேட்டிய எடுத்து இவன பேக்கப் பண்ணி அனுப்பிடணும் இல்லாட்டி அடுக்கு மொழி வசனம் பேசி எல்லாரையும் சாகடிச்சிடுவான்.

பேட்டி ஆரம்பமாகிறது.

கவுண்டர்: இப்ப தமிழ்ல என்ன ஹீரோவுக்கு பஞ்சம் வந்துடுச்சின்னு நீ இப்ப ஹீரோவ
வேசம் கட்டுன பாவம் மக்கள் பயந்துட மாட்டாங்களா?

டீ.ஆர்: சார் இன்னி வரைக்கும் நான் ஹீரோயின தொட்டு நடிச்சதில்ல, ரஜினிய விட
பத்து வயசு கம்மி கமல விட எட்டு வயசு கம்மி, விஜயகாந்த விட பத்து வயசு கம்மி ஏன் அவங்கல்லாம் நடிக்குறாங்க நான் நடிக்க கூடாதா?

கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?

டீ.ஆர்: எனக்கும் ரசிகர் மன்றம் இருக்கு, என்னை ரசிக்கறவங்களுக்காக நான் படம் எடுக்கறேன். ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமே இல்லாம போச்சே. என்னை கலைஞனா
பாருங்க, இளைஞனா பாக்காதிங்க

கவுண்டர்: சரி விடு பொருத்துக்குவோம். புதுசா ஏதாச்சும் கதை சொல்லுவேன்னு
பாத்தா அதே பழைய தங்கச்சி, அம்மா செண்டிமெண்ட், நான் தெரியாமத்தான்
கேக்கறேன் உன் எல்லா படத்துலயும் உன் தங்கச்சி ஏண்டா உனக்கு பிடிக்காத ஒருத்தன
லவ் பண்றா?

உடனே கலையாத தலையை வேணுமின்னே சிலுப்பி கோதி விடுகிறார், சொடக்கு
போட்டவாறே

டீ.ஆர்: என் தங்கச்சி , பாசமுள்ள தங்கச்சி வேலிதாண்டி போகும்போது பாசக்கார
அண்ணன் தடுக்காம பின்ன முறுக்கு தின்னுகிட்டு இருப்பானா? சொல்லுங்க சார்.

கவுண்டர்: ஏன் எங்களுக்கு ஏமாத்திட்டு ஓடிப்போற தங்கச்சி, உனக்கு மட்டும் பாசமுள்ள தங்கச்சியா? எல்லாருக்கும் ஒரே மாதிரிதாண்டா தங்கச்சியிம். ஓவர் செண்டிமெண்ட் போட்டு உசுர வாங்கிரியேடா அஞ்சு ரூவா காயின் மண்டையா!

சரி ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கிறேன். (கண்களில் கண்ணீருடன் கவுண்டமணி).
அந்த படத்துல ஒரு பாட்டு வருதே "வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன்" னு ஒரு
பாட்டுல ஹீரோயின தொட மாட்டேன்னு மத்தபடி எல்லா வேலையும் செஞ்சுபுட்ட அதுவுமில்லாம சாதாரணமாவே நீ பிக்காரி மாதிரி இருப்ப இதுல லுங்கிய மடிச்சி
கட்டிகிட்டு மும்தாஜுக்கு சமமா கவர்ச்சி காமிக்கற. ஏன் இதெல்லாம்? தமிழ்நாடு
தாங்காதுடா..

டீ.ஆர்: சார் ரஜினியவிட பத்து வயசு கம்மி, கமலவிட அஞ்சு வயசு கம்மி,
விஜயகாந்த விட 8 வயசு கம்மி அவங்கல்லாம் அறுபது வயசு வரைக்கும் நானும்
போடுவேன் கும்மி. அவங்க எல்லாம் டம்மி. உருவத்த பாக்காதிங்க எனக்கு அவங்கள
போல கர்வம் இல்ல.

கவுண்டர்: பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து டீ.ஆர் தலையில் ஓங்கி அடிக்கிறார்.
நாய, நாய சொம்பு திருடறவன் மாதிரி இருந்துகிட்டு அவங்கள எல்லாம் நக்கல் விடுது
பாரு. எந்த கேள்விய கேட்டாலும் இதே பதில சொல்லிகிட்டு இருக்கே இந்த டாபரு.
என்ன மேன் நினைச்சிட்டு இருக்க அவங்கள எல்லாம் வம்புக்கு இழுத்த
ஸ்டுடியோவுக்கு உள்ளயே பூந்து உன்னய தூக்கிட்டு போயிடுவானுங்க.

கவுண்டர்: வீராச்சாமி படத்துல நீதான் அந்த ஏரியா தாதா, முன்னால் எம்.எல்.ஏ
அப்படி இருந்தும் மும்தாஜை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணாம அப்படியே
பெரிய தியாகி மாதிரி ஹஸ்கி வாய்சுல வசனம் பேசிகிட்டு அனாதையா
விட்டுட்டியேய்யா பாவம்யா அந்த பன்னு ச்சி பொண்ணு.

டீ.ஆர்: சார் அந்த சீனுக்கு முந்தின சீன் வரைக்கும் மும்தாஜ் என்னைய லவ் பண்றது
எனக்கு தெரியாது. தெரிய வரும்போது அதைவிட சூப்பர் பிகர் ஒண்ணு கரெக்ட் ஆச்சு
அதனாலதான் அப்படியே டீல்ல விட்டுட்டேன்.

ஆடியன்ஸ் பக்கமிருந்து ஒரு குரல் கவுண்டரய்யா இண்டர்வெல் எல்லாம் கிடையாதா,
எங்க தலைவர் பதில் சொல்லி டயர்டா ஆயிட்டாரு.

டேய் மாங்கா கொட்ட மண்டையனுங்களா இன்னும் பேட்டியவே ஆரம்பிக்கல அதுக்குள்ள என்னடா இடைவேளை, இது என்ன சினிமா தியேட்டரா இடைவேளை விடறதுக்கு என்று சொல்லிவிட்டு திரும்ப அங்கே டீ.ஆரை காணவில்லை.

டேய் அடுக்குமொழி மண்டையா சீக்கிரம் வா உனக்கு ஆப்பு கொஸ்டின்ஸ் நிறைய இருக்கு.


நாளை தொடரும்..

கந்துமணி, பென்ஸ் மாமா - க.க.க.போ

அன்று ஞாயிற்றுக்கிழமை________

வழக்கம்போல பென்ஸ் மாமா மற்ற உ.பா பிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்துக்கொண்டார். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை சந்திப்பதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக பென்ஸ் மாமாவுக்கு
அவர் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே உளறி விட்டேன். அவரும் ட்யூட்டி
ப்ரீ ஷாப்பில் உ.பா வாங்கி வருமாரு நண்பருக்குஅன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
நண்பரும் சிரித்தபடியே வாங்கி வருவதாக உறுதியளித்து விட்டார். அந்த
சரக்குகளுக்கு உற்சவம்தான் இன்று.

மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சந்திப்பதாக
ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற குடிமகன்களுக்கு
மத்தியில் கும்மி அடித்து பழகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை. பென்ஸ்
மாமா காலையிலேயே குளித்து முடித்து பட்டையடித்து வந்திருந்தார். இது
போன்ற மேட்டர்களுக்கு ஒரு அதீதமான ஆர்வம் காட்டுவது இவரின் வழக்கம். அதுவுமில்லாமல் வந்திருப்பது வெளிநாட்டு சரக்கல்லவா அதுதான் ,மனிதர்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரேஞ்சுக்கு அளப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பூஜைக்கு காண்டிராக்டர் சுப்பிரமணியம், போலீஸ் உயரதிகாரி பெயர்
குரிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (கண்ணியமாம்),
வெளிநாட்டுக்கார் டீலரான சண்முகம், இன்கம்டாக்ஸ் அதிகாரி குலசேகரன்
ஆகியோர் வருவதாக பென்ஸ் மாமா முன்பே சொல்லியிருந்தார்.

சரியாக பத்து மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. என்னை ஏகத்திற்கும்
விரட்டிக் கொண்டிருந்தார் இதற்கிடையில் பங்சுவாலிட்டி அட்வைஸ்
வேறு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்பினேன்.
கண்ணியமான அந்த அதிகாரி பிக்கப் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார்
அதற்காக காத்திருக்கொம்போது எங்களை கடந்து இரு இளம்பெண்கள்
கடந்து சென்றனர்.

ஏம்பா கந்துமணி இப்போ போனாங்களே ரெண்டு பேரு, அவங்கள பாத்தியா?
பென்ஸ் மாமா கேட்டார்.

"பாத்தேனே"

எப்படி தோணுது?

எப்படி தோணுதுன்னு ஏன் எங்கிட்ட கேக்கறிங்க?

"அட, சும்மா சொல்லுப்பா"

"சரியா கவனிக்கலயே"

நம்மள கடந்து போன அந்த ரெண்டு செகண்ட்ல நான் கவனிச்ச
விஷயத்த சொல்றேன் கேளு.

போனவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி ஆனா தாலியை
மறைச்சிருக்காங்க. இடப்பக்கம் போனாளே அவளுக்கு வயது 29 இருக்கலாம்
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் இந்திய தயாரிப்பல்ல. தங்க நிறத்துல கேசம்
இருக்கறத பாத்தா மாதத்துக்கு இருமுறையாச்சும் அழகு நிலையத்துக்கு
போய் கலரிங் பண்ணிக்குவாங்க போலருக்கு. உனக்கு தெரியுமா? இரண்டு
வாரங்களுக்கு ஒருமுறை நகத்தை அழகுபடுத்தறதுக்கு மட்டுமே 200 ரூபாய்
செலவு பண்றாங்களாம் பொண்ணுங்க. அந்த மாதிரி அவள் நகத்தை ஒழுங்கு
படுத்தி நளினமா வெச்சிருக்கா. கல்யாணமாகி சுமார் ரெண்டு மூணு வருசம்
ஆகியிருக்கலாம். ஆனா இன்னும் குழந்தை பெத்துக்கல. ஏதாவது பன்னாட்டு
கம்பெனில வேலை செய்றவளா இருக்கலாம். அவள் போட்டிருக்கற செண்ட்
டெர்ரிக் உமன் அமெரிக்கதயாரிப்பு....

சொல்லிக்கொண்டே போனவரை கையமர்த்தினேன்.

எப்படிங்க இவ்வளவு நுணுக்கமா கவனிச்சிங்க?

"அதான் பென்ஸ் _______"

இரண்டு நொடிகள் கடந்து போனதுக்கே இவ்வளவு சொல்றாரு. அஞ்சு நிமிஷம்
பேசினா ஜாதகத்தையே புட்டு புட்டு வெச்சிடுவாரு போல. மனிதரின் கண்,
புத்திக்கூர்மையை நினைத்து வியந்து போனேன்.

இல்லையா பின்ன!

சொன்னவர்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள் இது போன்ற விஷயங்களில்
நேரத்திற்கு வருவதில் வெள்ளையகளுக்கு சவால் விடுவார்கள் இவர்கள்.

ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்த மாமாவை இழுந்து வராத
குறையாக இழுத்து வந்தார் லண்டன் நண்பர். மிஸ்டர் கண்ணியம்
பிரிய மனமில்லாம திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.

வீட்டில் மனைவி கைப்பட செய்த தூள் பக்கோடா, முந்திரிபருப்பு (நெய்யில்
வறுத்தது), மிளகு வடை, மசாலா பொரி ஆகியவற்றை கடைபரப்பி வைத்தார்
இது போன்ற சமயங்களில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட சைட்
டிஷ்களில் டேஸ்ட் இருக்காது என்று வீட்டிலிருந்து எடுத்து வரும் பழக்கம்
உடையவர் திருவாளர் கண்ணியம். அவருடை மனைவிக்கும் வெளியில்
சாப்பிடுவது பிடிக்காதாம்.

பூஜையை ஆரம்பித்திருந்தனர். ஒயிட் ரம், ஸ்காட்ச் விஸ்கி, ப்ளாக் லேபிள்
ஸ்வியோன் ப்ளோங்க் போன்ற மதுவகைகளை உ.பா பிரியர்களுக்கு
"பரிசளிக்க" வாங்கி வந்திருந்தார்.

பென்ஸ் மாமாக்கு நாக்கில் எச்சில் ஊறியது போலும் பூஜையை உடனே
துவக்குமாறு காளைகளை முடுக்கி விட்டார். அவரவர் தத்தமது கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு உற்சாக உலகத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.

நண்பரிடம் லண்டன் அனுபவங்களை சொல்லுமாறு வேண்டினேன்.
பொருளாதாரம், தமிழ்மக்களின் விருந்தோம்பல், என்று பேச்சு போனது
இடையில் பென்ஸ் மாமா தன் துறை சார்ந்த கேள்வியொன்றை வழக்கம்
போல வீசினார்.

லண்டனில் வளரும் தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் எப்படிப்போகிறது?
உடை, நடை, எல்லாவற்றிலும் இந்தியத்தன்மை இருக்கிறதா
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய பாணி இருக்கிறதா?

லண்டனில் இருவகையான பெண்களை காணமுடியும், ஈழத்து தமிழ்ப் பெண்கள்,
தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்கள் அனைவருமே அங்கத்திய நாகரீகத்தில்தான் வாழவிரும்புகிறார்கள். சாதாரணமாக பெண்களை பப்களிலும், பார்களிலும்
காணலாம். சென்னையில் கூட பார்த்திருக்கிறேன்.

"எனக்குள் தோன்றியது சென்னையில் கூட வளர்ந்து விட்டதா"

என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?

"மேலே உள்ளது நான் எழுதினதுதான்"
ஆனால் நம்மிள் பலரும் பல வருடங்களாக இது போன்ற கட்டுரையினை
படித்திருக்கலாம். நான் கூட சிறுவயதில் இருந்தே படித்து வந்தேன்.

எங்கப்பா சொல்வாரு. டேய் உனக்கு படிப்புதான் ஏறமாட்டேங்குது அதனால
தினசரிகள படிக்குற பழக்கத்தை வளர்த்துக்கோ. அட்லீஸ்ட் நாட்டு நடப்பாச்சும்
தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு. அப்போதான் ஆரம்பிச்சது இத படிக்கும் பழக்கம். ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாக வரும் அதில் நான் விரும்பி பார்ப்பது
குறுக்கெழுத்து போட்டிதான். நிரப்புவதில் இருக்கும் ஆர்வம் அனுப்புவதில்
இருந்ததில்லை.


இவங்க எங்கிட்டாச்சும் போய் கும்மாளம் அடிச்சுட்டு வருவாங்களாம் அதை
அப்படியே தைரியமா பத்திரிக்கையில வேற எழுதுவாங்களாம். இதுல பெரிய
பெரிய அதிகாரிங்களும், காவல்துறையை சேர்ந்தவங்களும், ரவுடிகளும் அருகருகே
அமர்ந்து அருந்துவாங்களாம்.

அட நாட்டுல எவந்தான் ஜாலியா இல்ல எல்லா உரிமையும் இருக்குதான். ஆனா
அதை ஏன் நாலு பேரு படிக்குற எடத்தில ஏன் எழுதறாங்கன்னு தெரில. வயதில்
சிறியவர்கள் படிச்சாங்கன்னா இது போனற செயல்கள் தவறே இல்லன்னு
முடிவுக்கு வந்துடுவாங்க.

பெரிய காமெடியே கேள்வி பதில்தான், அங்குட்டு கேக்குற கேள்வி
எதுவுமே விளங்குற கேள்வியா தெரியாது. படிக்க படு காமெடியா இருக்கும்.
"அந்த" மாதிரி சர்வே ஒண்ணு சொல்லுங்க சார்னு ஒரு கேள்வி கண்டிப்பா
இருக்கும். (எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இந்த மாதிரி கேள்விய இவங்களே
கேட்டுக்கறாங்கன்னு)


சரி இப்ப எதுக்குடா இந்த மாதிரி கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன்னு கேக்கறிங்களா

ஏதோ தோணுச்சு எழுதறேன்.

காமெடி காமெடி காமெடி மட்டுமே!!

Sunday, March 11, 2007

எல்லாருக்கும் வணக்கம்.

என்னையும் நட்சத்திரமாக்கிட்டாங்களாம். என்ன கொடுமை சரவணன்னு
எல்லாரும் புலம்பறது எனக்கு நல்லாவே கேக்குது. என்ன செய்யிறது கொஞ்சம் பொறுத்துக்கிடணும் சாமிகளா.

நட்சத்திர பதிவுகளை படிக்கும்போது தோன்றும். "வலைப்பூவில் ஆறுமாதம்
தொடர்ந்து எழுதினால் நட்சத்திரமாக்கி விடுவார்கள்". இந்த எண்ணம்
வலைப்பூக்களில் வலம் வர ஆரம்பித்த சில நாட்களில் தோன்றியது. சில பதிவுகளை படிக்கும்போது, ஆஹா சிறந்த எழுத்தாளர்கள் அளவுக்கு சிந்தித்து தங்கள் பார்வையை
மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள் நிச்சயமாக இவர்கள் கவனிக்கப்படவேண்டிய
பதிவர்கள்தான் என்று என் எண்ணத்தை சற்றே மாற்றினேன். நாந்தான் தவறாக நினைத்துவிட்டேன் போல. ஒரு பதிவர் அங்கீகரீக்கப்ப்ட்டு அவரின் பதிவுகள் தமிழ்மண முகப்பில் நிறுத்தப்படுவதால் பல பேரை சென்றடைகிறார். பரவலான
கவனமும் கிடைக்கிறது. இந்த மாதிரி தெளிவா சிந்தித்து வைத்திருந்த நேரத்துல
நான் முதலில் நினைத்ததுதான் சரி என்பது போல என்னையும் நட்சத்திரமா
தேர்ந்தெடுத்தவுடன் விளங்கிக்கொண்டேன்.

தமிழ்தேர்வுகளில் தவறாமல் ஒரு பெரிய மதிப்பெண் கேள்வி, கேள்வித்தாளின் கடைசி
பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். நான்கு பத்திகளில், 300 வார்த்தைகளுக்கு மிகாமல்
என்பது போல வகை.

"பள்ளி சுற்றுலா சென்றதை பற்றி உன் பார்வையில் விரிவாக 300 வார்த்தைகளுக்கு
மிகாமல் ஒரு கட்டுரை வரைக."

"தற்கொலைக்கு முயன்ற வேடனின் முன் கடவுள் தோன்றும் காட்சியை உன் கற்பனையில்
ஒரு கட்டுரை எழுதுக."

இந்த கேள்விய படிக்கும்போதுதான் எனக்கு பெரிய குழப்பமே வரும். எந்த
கேள்வியா இருந்தாலும் கோனாரில் விடை கிடைக்கும். இந்த கேள்விக்கு விடை
எப்படி எழுதறது? ஒருவேளை கேள்வி எண்ணை மட்டும் எழுதினாக் அவுட் ஆப்
சிலபஸில் மதிப்பெண் வழங்குவார்களோ என்று கூட நினைப்பேன். சொந்த நடையில
எழுத சொன்னா எப்படி எழுதறது? லீல் லெட்டர்ல இருந்து...

"_____ முதல எழுத்தெல்லாம் ஆதி _______
முதற்றே _____". என்பது வரை கோனாரையோ, வெற்றித் துணைவனையோ
புரட்டினால் தெரிந்துவிடும். சொந்தமா எழுதுன்னா என்னாத்த எழுதறதுன்னு சாய்ஸில்
வரும் வேறொரு கேள்விக்கு கோனாரின் உரையை எழுதிவிடுவேன்.

ஆனா நட்சத்திர வாரத்தில் அப்படியில்ல சுவாரசியமாக அனைத்து பதிவர்களும்
வாசிக்கும் வண்ணம் எழுத வேண்டும். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த
முற்படுவது போன்ற பதிவுகளை இடவேண்டும். ஒரு பிரச்சினையில் தன் பார்வை
இதுதான் என்று தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். அழகான கவிதைகள் எழுத
வேண்டும். இப்படி பல வேண்டும்கள் வேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் நம்ம பதிவுகள்ல உருப்படியா ஒரு விஷயமும் இருந்ததில்ல.
இப்படி இருக்கறச்சே நட்சத்திர வாரத்தில் என்னை எப்படி வெளிப்படுத்துவது என்றே
தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நக்கலாவோ, உப்புமாவோ எதாவது எழுதி
இருவது, முப்பது பின்னூட்டத்த வாங்கறதுதான். அதே மாதிரி இல்லாம சில
உருப்படியான பதிவுகள் எழுதணும்னு தோணுது. (பயம் வேணாம்)
"சட்டியில இருந்தாத்தானே அகப்பைக்கு வரும்" அதனால நீங்களே பார்த்து
முடிவு பண்ணிக்கோங்க. பாசிட்டிவா இருந்தா ஒரு பின்னூட்டமிடுங்கள்,
நெகட்டிவா இருந்தா மைண்ட்ல வச்சிக்கோங்க.

உங்களுக்கெல்லாம் இந்த ஒரு வாரமும் கொஞ்சம் இம்சையாத்தான் இருக்கும் :((

மறுபடியும் எல்லாருக்கும் வணக்கம்!!!

Wednesday, March 07, 2007

மகத்தானதொரு தினம் இன்று.

"டேய் தூங்குனது போதும் எந்திரிடா மணியாச்சு"

சுடுதண்ணி போட்டுட்டியா? இது நான்

ஏண்டா பத்து மணிக்கு எந்த புள்ளடா சுடுதண்ணில குளிக்குது? உனக்கே இது ஓவரா
தெரியல!

உம்புள்ள குளிப்பான், சுடுதண்ணி போடாம எழுப்பக்கூடாதுன்னு எத்தனை முறை
சொல்லியிருக்கேன்.

எல்லாம் ரெடியா இருக்கு பாத்ரூம்ல போடா!

"டேய் கதிர்வாலு சாப்டுட்டு அப்புறமா ஊர் சுத்த போடா" அம்மா

நீ போடுற சோத்த சாப்டுட்டு எப்படி ஊர் சுத்த முடியும். ஏம்மா நல்ல சோறு பொங்கி
போட தெரியாதா உனக்கு? எப்ப பாரு சாதம் சாம்பாரு இத விட்டா உனக்கு என்ன
தெரியும். ஆனா ஒண்ணு ஒம்பொண்ணுக்கு நீ எவ்வளவோ பரவால்ல.

"எங்க அந்த நளபாக அரசி"

"ஆமா இவரு பெரிய புதுமாப்பிள இவருக்கு கறியும்சோறும் ஆக்கிப்போடணும்"..

அடி செருப்பால வெட்டிச்சோறு திங்கும்போதே உனக்கு இவ்ளோ கொழுப்பு
கேக்குதா? கண்ட கண்ட ஓட்டல்ல வாய்க்கு ருசியா தின்னுபுட்டு வீட்டுலயும் அதையே எதிர்பாக்குறியா உனக்கு வாய்க்கு வக்கனையா சாப்பிடணும்னா அது எங்க
கிடைக்குதோ அங்க போய் கொட்டிக்கோ அநாவசியமா வீட்டு சமையல நக்கல்
பண்ணாத.

தோ பார்றா உண்மைய சொன்னா மட்டும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வருமே
மூக்கு மேல கோவம். இந்த கோவத்தை அப்படியே எப்படியாச்சும் நல்லா சமைச்சு
போட்டு தம்பிகிட்ட நல்ல பேரு வாங்கணும்னு ஒரு வைராக்கியமா மாத்தி
வெச்சிருந்தின்னா பரவால்ல, இந்நேரம் என்கிட்ட ஒரு நல்லபேரு வாங்கியிருப்ப. அத
விட்டுபோட்டு பொசுக் பொசுக்குனு கோவம் மட்டும் வருமே.

இவரு சர்டிபிகேட் கொடுத்துதான் எனக்கு ஆக போகுதா, தின்னா தின்னு தின்னாட்டி
போடா பொறுக்கி.

பொழுது விடிஞ்சி பொழுதுபோனா உங்க சண்டைய கேட்டு கேட்டு காது வலிக்குது
ஒரு நாளாச்சும் குறை சொல்லாம சாப்டுருக்கியாடா நீ? இது அம்மா

ஆமாம்மா இதே கேள்வியத்தான் நானும் கேக்கறேன் ஒரு நாளாச்சும் குறை சொல்லாத
அளவுக்கு செஞ்சிருக்கிங்களா நீங்க?

இவன்கிட்ட என்னம்மா பேசிட்டு இருக்க, எல்லாரும் ஒரு குறையும் சொல்லாம
சாப்டுட்டு போயிட்டாங்க தொற தொண்டையில மட்டும் இறங்க மாட்டேங்குதாக்கும்.

இதோ பாருக்கா நீ என்னதான் சொல்லு அந்த கரிகாலன் ரெஸ்டாரண்ட்ல போடறானே
ஒரு சில்லி சிக்கன் அது மாதிரி என்னிக்காச்சும் செஞ்சுருக்கியா, இல்ல
போட்டோலதான் அந்த மாதிரி ஐட்டங்கள பாத்துருக்கியா, நீயெல்லாம் எங்கத்த
கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ண போற? எல்லாம் உன்னை சொல்லணும்மா
உன்ன மாதிரியே எல்லாத்தையும் கத்து கொடுத்துருக்க!

என்னை ஏண்டா இழுக்கற? இஷ்டம் இருந்தா சாப்பிடு இல்லாட்டி இடத்தை காலி
பண்ணு இன்னிக்கு சுமங்கலி அப்பா ஜெயில்ல இருந்து வருவானா
மாட்டானான்னு நானே தவியா தவிக்கிறேன், நீ வேற சும்மா அது சரியில்ல இது சரியில்லன்னுகிட்டு..

நீ வேணா பாரு அடுத்த எபிசோட்ல அவன தூக்குல போட போறாங்களாம். சம்பளம்
ஓவரா கேட்டானாம்ல அதான். இத பாக்குறதுல கொஞ்சம் வீடுகள பாத்துகிட்டாவது
இருக்கலாம். ஒண்ணுத்துக்கும் உதவாத சீரியல பாத்துகிட்டு கதை அடிச்சிட்டு
உக்காந்திருப்பிங்க.

ஒண்ணுத்துக்கும் உதவாதத பத்தி நீ பேசறியா?? :)) சிரித்துக்கொண்டே அக்கா!

பின்ன நான் பேசாம சாலமன் பாப்பையாவா வந்து பேசுவாரு??

அம்மா மரியாதையா இவன கொட்டிகிட்டு வெளில போயிட சொல்லு, இல்லன்னா
நடக்குறதே வேற.

எது நடந்தாலும் நீங்க திருந்த போறதில்ல, கடைசி வரைக்கும் இந்த சீரியல்,
சுண்ணாம்பு, வெத்தலன்னு காலத்தை ஓட்டப்போறிங்க! இங்க இவ்ளோ நடந்துகிட்டு
இருக்கு அங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி வெத்தலைக்கு பாக்கு இடிச்சிட்டு இருக்கு
பாரு கெழவி. ஏ கெழவி இதுங்க ரெண்டு பேத்தையும் என்னான்னு கேக்கக்கூடாதா??

"போடா போக்கத்த பயலே"

இந்த வார்த்தைய விட்டா உனக்கும் வேற ஒண்ணும் தெரியாதே! சரி சரி டிபன
போடுங்க வெளில முக்கியமான வேலை இருக்கு!

சீக்கிரம் சாப்பாடு போட்டு அனுப்புடி அவன! இருந்தா லொட லொடன்னு பேசிட்டே
இருப்பான்.

"வெளில அனுப்பறதுலயே குறியா இருங்க"

பெண்கள் தினம்னதும் முதல்ல எனக்கு ஞாபகம் வந்தது அம்மாதான்.

இதுமாதிரி தினமும் எங்கவீட்டுல சண்டை போடலன்னா நமக்கு தூக்கமே வராது.
அதே மாதிரிதான் அவங்களும்.

உண்மைய சொல்லணும்னா வீட்டு சாப்பாடு மாதிரி உலகத்துல வேற எதுவும்
சுகம் கிடையாது. இருந்தாலும் நாலு நக்கல் அடிச்சுட்டே சாப்பிடறதுல ஒரு தனி
கிக் இருக்கும். மத்தபடி சாப்பாட்டு விஷயத்துல எங்கம்மா ஒரு தங்கம்.

வீட்ட விட்டுட்டு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க அருமையெல்லாம் தெரியுது.
என்னையெல்லாம் வச்சி காப்பாத்தியிருக்காங்கன்னா அதுவே ஒரு பெரிய சாதனைதான்.
அதனால நல்ல பிள்ளையா இன்னிக்காச்சும் அவங்கள நினைச்சு பாக்கணும். ஒருவகைல
நான் இங்க இருக்கறதும் நல்லதுதான் ஏன்னா என்னோட இம்சை இல்லாம இருக்கலாம் :))

இந்த வலையுலகம் எனக்கு தந்த சகோதரிகளுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த
"பெண்கள் தின வாழ்த்துக்கள்"

Thursday, March 01, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவையாக்கும்....

இப்படித்தான் ஒரு படத்துல வடிவேலு ஒரு பீட்டர் விட்டு அடிவாங்குவாரு.
நானெல்லாம் ஜெயில்னு பாத்தது சினிமால மட்டும்தான்னு பொய்யெல்லாம் சொல்ல
மாட்டேன். ஆனா துபாய் ஜெயில பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஊரு
ஜெயிலுக்கும் இங்க இருக்குற ஜெயிலுக்கும் என்ன வித்தியாசம்னு பாக்கத்தான்.
அதுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சுது.

நம்ம பய ஒருத்தன் எக்குத்தப்பா வண்டிய ஓட்டி செவுத்துல விட்டுட்டான் என்னவோ
நாலு பேர மர்டர் பண்ணா மாதிரி தூக்கிட்டு போய் 26 நாள் ரெஸ்ட் எடுக்க
விட்டுட்டாங்க நாலு வெள்ளிக்கிழமை கணக்குல வராதாம் அதுனால 26 நாள்தான்.
சரி பய காய்ஞ்சி போய் கிடப்பானே ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்ணு
முடிவு பண்ணினோம். உள்ள இருக்குற ஆள பாக்கணும்னா முன்னாடியே டோக்கன்
போடணுமாம். சனிக்கிழமைகள்ல காலை 7 மணி முதல் 11 மணி வரைக்கும்தான்
பாக்கமுடியுமாம் இது நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி தெரியல அங்க போய்தான்
தெரிஞ்சிகிட்டோம். இதுல காமெடி என்னான்னா ஒரு ஜெயில் இருக்கற எடத்த
தேடி கண்டுபுடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு.

வழக்கம்போல எட்டு மணிக்கு கெளம்ப வேண்டியது 9 மணியாகிபோச்சு. முந்தின
நாளே எந்த இடம், எப்படி போகணும்னு விசாரிக்க சொன்னேன் காரோட்டி நண்பரை
ஞாபகமா அதை எதுவும் செய்யாமலே வந்துட்டார். சரி விசாரிச்சிகிட்டே போகலாம்னு
கெளம்பியாச்சு. சிறைச்சாலை இருக்குற இடம் அல் அவிர் அப்படிங்கறத தவிர அதுக்கு
எப்படி போகணும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. அங்க ஒரு "அரபிதாத்தாகிட்ட
அவிர் ஜெயிலுக்கு எப்படி போகணும்னு" சீதா ஜாவ், ஆதா ஜாவ்னு சொல்ல
ஆரம்பிச்சிட்டாரு. எலேய் ட்ரைவரு நீயே வந்து கேட்டுக்க எனக்கு இந்தியில
பேசினாவே நமக்கு வெளங்காது. இதுல அரபி வேறயா(அவர் இங்க மூணு வருசமா கொட்டறாரு ஏதாச்சும் புரியும்னுதான்) சொன்னது புரிஞ்சா மாதிரியே மண்டைய
மண்டைய ஆட்டிட்டு வந்துட்டாரு.

இங்கருந்து நேரா போயி சோத்தாங்கை பக்கமா திரும்பினா ஜெயில்தான்னு
சொன்னாராம் அப்படி சொன்ன மாதிரி போனோம். போயிகிட்டே இருக்கு பாத்தா
ஒரு கிராமம் வந்துடுச்சி நாலு தலைமுறையா அங்க ஒட்டகம் மேய்க்கிற பாகிஸ்தானி
ஆளுங்க இருந்தாங்க இது என்ன இடம்னு விசாரிச்சா ஏதோ ஒரு கிராமம்னு
சொன்னாங்க. ஏதோ ஒட்டக சந்தை போலருக்கு நூத்துக்கணக்குல ஒட்டகம்
வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்துச்சி. இப்படிக்கா இன்னும் 50 கிலோமீட்டரு
போனிங்கன்னா மஸ்கட் வரும்னு சொன்னாங்க ஆக நம்மாளு சொன்னத சரியா
வெளங்கிக்கல. சரி வந்த வழியே திரும்பி போனோம். திரும்பவும் வழிகேட்ட
இடத்துக்கு வந்தோம்.

அங்க ஒரு போலிஸ்காரரு வண்டிய நிறுத்திட்டு தம் அடிச்சிட்டு இருந்தாரு அவர்கிட்ட
வழி கேட்டோம் அவர் சொன்ன மாதிரி போனோம் மறுபடியும் துபாய்க்கே வந்து
சேர்ந்துட்டோம். பாவிங்க ரூட்டு தெரியலன்னா தெரியலன்னு சொல்லவே
மாட்டேன்றானுங்க ஏதாவது ஒரு வழிய சொல்லி எங்கிட்டாசும் அனுப்புறானுங்க.
ஒரு ஜெயிலு இருக்குற எடம் தெரியல இவன்லாம் எப்படி போலிஸ்ல சேர்ந்தான்னே
தெரில. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து குத்துமதிப்பா அந்த ஏரியாவில
சுத்த ஆரம்பிச்சோம். அங்க ஒரு பாகிஸ்தானிகிட்ட நான் ஜெயில் எங்க இருக்குன்னு
கேட்டேன் அவனும் என் பின்னாடியே வாடான்னு சொல்லவே.அவன் பின்னாடியே
போனோம் கடேசில அவன் கம்பெனிக்கு எங்கள கூட்டிட்டு போயிட்டான்.
இதான் எங்க கம்பெனி எப்படி இருக்குன்னு கேள்வி வேற. அடப்பாவி நீயும்
பழிவாங்கிட்டியான்னு நொந்துகிட்டேன். நாம ஒருவேளை இந்தியில தப்பா
கேட்டுட்டனான்னு எனக்கே புரியல.

ரோடு சுத்தம் பண்றவர கேட்டோம் அவரு கரெக்ட்டா ரூட்டு சொல்லி போனோம்
அல் அவிர்லருந்து ஹத்தா போற வழில சோத்தாங்ககை பக்கமா திரும்பினா
துபாய் ஜெயில் வரும்னு சொன்னாரு. 25 ஏக்கர்ல பயங்கர செக்யூரிட்டியோட ஒரு
ஜெயில். இத கண்டுபுடிக்கறதுக்குல்ல டவுசர் கிழிஞ்சிடுச்சி. எதெதுக்கோ போர்டு
வெக்கீறானுங்க இதுக்கு ஒண்ணும் வெக்கல. வெச்சிருந்த ஒரு போர்டும் அஞ்சுக்கு
மூணுல ஒரு சின்ன போர்டு. அதுல எவனோ ப்ராக்டிஸ் பண்ண மாதிரி ஒரு
கோணல் மாணல் எழுத்துல இருக்கு.வழி சொல்றாங்களாம். வெளிலருந்து
பாக்கும்போதே உள்ளுக்குள்ள ஏகபோகமா பொழுதை கழிக்கலாம் போலருக்குன்னு
நினைச்சேன். அதே மாதிரிதானாம்.

ஒருவழியா எல்லாமும் செஞ்சு உள்ள போய் பாத்தோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி
இவனென்ன தீவிரவாதியா. வெளில விட்டாவே வழி எங்கருக்குன்னு கண்டுபுடிச்சி
போக தெரியாத அப்பாவி இவனப்போயி நாப்பதடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள்ள
வெச்சிருக்கானுங்க. எப்படிலே மக்கா இருக்கு ஜெயிலு. காசு இருந்தா போன்கார்டு
வாங்கி எல்லாருக்கும் போன் பண்ணலாம். நான் சின்ன லெவல்ல தப்பு பண்ணதால
அதிகம் இம்சை பண்ணமாட்டாங்க.போர் அடிச்சா டீவி பாப்பேன் இல்லன்னா
குப்புற அடிச்சி தூங்குவேன். காலைல ஏழு மணிக்கே எழுப்பி விட்டு பிரியாணி
போடுறானுங்க. மூணு வேலையும் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து
போச்சு.

ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல வந்த நாளா அதே கருமத்த சாப்பிடவேண்டியதா
இருக்கு. ரொம்ப அலுத்துக்கறாரு அவரு.