எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 04, 2020

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழான வல்லினத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். படைப்புகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்திருக்கிறேன். இம்மாத இதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். அதில் இரண்டு சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டது. மீதி பத்தும் உலகின் பல பகுதிகளிலிருந்து எழுதும் புதிய, மூத்த, சற்று அறிமுகம் ஆன எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆசானும், சு.வேணுவும் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்கள். அனோஜன், சுரேஷ் பிரதீப், நவீன், சுனில் கிருஷ்ணன் என அறியப்பட்ட எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கதைகளையும் வாசித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால் ஆசானின் சமீப கதையான சா தேவி படித்த சோர்வில் இருந்ததால் ஆசான் கதையைத் தவிர்த்து எல்லாவற்றையும் வாசித்தேன்.  தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் எல்லாவிதமாகவும் சிறுகதைகளை எழுதிப்பார்த்துவிட்டார்கள். வாசகர்களும் திளைப்பில் இருந்து மீண்டு விட்டார்கள், ஆனாலும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதை ருசித்துவிடவேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியாது. மிக அபூர்வமாகவே கலைத்தருணங்கள் மிளிர ஒரு கதை பேசப்படும்.  அப்படியான கதைகளைத் தேடித்தான் எல்லா கதைகளுமே வாசிக்கப்படுகின்றன. 

தெய்வீகனின் கதை “கறை நதி” முதல் வரியிலேயே உள்ளிழுத்துக்கொண்டது. எழுத்து நடை அ.முத்துலிங்கத்தைப் போலவே உணர முடிந்தது. சொற்களின் தேர்வு, உரையாடல்களுக்கிடையேயான பகடி. ஒரு கணம் இக்கதை அ.மு எழுதியதுதானோ என்றொரு மயக்கம் கொள்ள வைத்தது. இலங்கையிலிருந்து மேல்படிப்புக்கு ஆஸ்திரேலியா வரும் ஒருவனுக்கு இத்தாலிய முதியவர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்கிறது. பிறகு பகுதி நேர வேலை கிடைக்கிறது, அங்கே ஒரு சம்பவம் பிறகு முடிவு. வெகு இயல்பான கதை. சொல்லிச்செல்லும் விதமும், இடையிடையே வரும் தகவல்களும் கதையை ஆர்வமாக வாசிக்கக் கோருகிறது. எனக்கு மிகவும் பிடித்த கதையாக இதைச் சொல்வேன்.

அனோஜன் பெயரை அங்குமிங்கும் கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக இலக்கிய உலகில் உச்சரிக்கப்படும் பெயர். ஆசானின் தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது படித்த நினைவுள்ளது. அவரின் பச்சை நரம்பு சிறுகதைத் தொகுப்பு வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ள புத்தகம். அவரின் பெயர் பார்த்த உடனே ஆர்வமாக வாசித்தேன். கதையின் தொடக்கம் பொம்மையை புணர்வதாக ஆரம்பித்த உடனே சா தேவி போல கதை என்ற சலிப்பு உண்டானது. ஆனால் கதை வேறு தளத்தில் பயணித்தது. ஆரம்பகட்ட சலிப்பை எண்ணி நொந்துகொண்டேன். பிரமாதமான கதை.
இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களை வலியச்சென்று பிடித்து இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பார்கள் என்ற தகவல் புதியது. அதுவும் வீட்டுக்கொருவர் ஆண் பெண் பேதமின்றி. ஒருவீட்டில் 16 வயது நிரம்பிய பெண்ணை இயக்கத்திற்கு அனுப்பு விருப்பமில்லாத அப்பா அவளுக்கு விருப்பமில்லாத மூர்க்கனுடன் திருமணம் செய்து அனுப்புகிறார். அவள் கற்பமடைகிறாள். போர்ச்சூழலின் விபத்தொன்றில் அவள் கர்ப்பபை எடுக்கும்படி ஆகிறது. பிறகு இலங்கை வந்து படிப்பைத் தொடர்கிறாள். பொம்மையை புணரும் அதே சமயம் நிஜத்தில் தடுமாறும் அவனிடம் நானும் ஒரு பொம்மைதான். என்னைப்புணர்ந்தாலும் கர்ப்பம் தரிக்க முடியாது என்கிறாள். கதையின் இரண்டு பகுதிகளை ஒன்றாகச் சேர்த்த விதம் அபாரமானது.  போர் முடிந்த இந்த பத்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனப்பார்வை இலக்கியத்தில் பல்வேறு படைப்புகளின் வழியாகப் பதியப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். எல்லாத்தரப்பு மக்களின் பாடுகளும் வாசிக்கப்படவேண்டும். பதியப்படவேண்டும்.

சுசித்ராவின் கதை ஆராய்ச்சி மாணவி ஒருத்தியின் பயணம் வழியாக ஒரு தீவின் மக்களை, சடங்குகளை, வாழ்வியலைச் சொல்கிறது. திசைகளை நாம் பார்ப்பதற்கும் அத்தீவின் மக்கள் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எனக்கு இப்போது திசைகள் குழப்பம்தான் சிறு வயதில் இன்னும் மோசம். இடது மாட்டை இழுத்துப்பிடிக்கச்சொன்னால் எது இடது என்றொரு குழப்பம் படர்ந்துவிடும். தெக்காலப் போய் வடக்குல திரும்பணும் என்றால் எது தெற்கு எது வடக்கு என்று மண்டை காயும். என்னை ப்போலவே பலர் இருக்கலாம். நம் திசையறியும் அறிவு நமக்கு சரியாக போதிக்கப்படவில்லையோ என்று தோன்றும். ஆனால் கதையில் வரும் சிறுகுழந்தைகள் கூட திசையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்வியல் அறிவு. அது போதிக்கப்படுவதில்லை தலைமுறைகளாக கடத்தபடுவது என்று நினைத்துக்கொண்டேன். என்னைப்போன்ற திசைக் குழப்பவாதிகள் இருமுறை வாசிக்கவேண்டிய கதை இது. வித்தியாசமான சிறுகதை.

அடித்தூர் என்றொரு கதை. சிறுகதை எழுதப்பயிலும் எல்லோருமே முதலில் தேர்ந்தெடுப்பது சிறுவயது நினைவுகளை எழுதிப்பார்ப்பதுதான். பல மறந்த விஷயங்கள் துல்லியமாக மேலெழுந்து வந்து எழுத்தில் அமரும். எழுதியவருக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும். அப்படியொரு கதைதான் இது. தனது தாத்தா பாட்டியின் நினைவுகளை அசைபோடும் பேரனின் கதை. கதையின் முதல் பாராவில் தாத்தா ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்பினார் என்று வருகிறது. நடுவில் உள்ள விரலை அவர் என்ன செய்தார்? மடக்கினாரா அல்லது நடுவிரல் இல்லையா? அது எப்படி அருகிலேயே ஒரு விரல் இருக்க அவர் ஏன் மூன்றாவதாக உள்ள விரலைத் தேர்ந்தெடுத்தார். அனிச்சையாக நான் எனது ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்புவதுபோல முயற்சித்துப் பார்த்தேன். சுலபமாக வரவில்லை. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்தால்தான் சுலபம் அதுதான் உலக வழக்கமும் கூட. கதையைவிட்டு நான் இப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். உடனே சினிமாவில் வந்த நாக்கால் மூக்கைத் தொடும் காட்சி நினைவுக்கு வந்தது.
அந்தத் தாத்தாவின் பிடிவாத குணம் அவருக்கு நேர் எதிரான குணமுடைய பாட்டியின் குணம் இடையில் ஒரு பேரன் பாத்திரம் என மூன்றே பாத்திரங்கள்தான். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றியது.

சுரேஷ் பிரதீப்பின் வெம்மை சிறுகதை அபூர்வ வகை. அவரின் கதைகள் மிகுந்த கவனத்தோடு வாசிக்க வேண்டியவை. சில கதைகளை முதல் வாசிப்பிலேயே கொடுக்க வேண்டிய அனுபவத்தைக் கொடுத்து விடும். சில கதைகளை திரும்பத் திரும்ப வாசிக்கையில் வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தபடியே இருப்பவை. இரண்டாவது வகை கதைகள் சுரேஷ் உடையது.  மகாபாரதத்திலிருந்து ஒரு கருவை எடுத்து புனைவாக மாற்றியிருக்கிறார். கதை வாசிக்கும்போது தளபதி படமும், கர்ணன் சிவாஜி வாயில் ரத்தம் கொப்பு நினைவுக்கு வந்தனர். சந்தேகமில்லாமல் குந்தி களங்கிய கண்களுடைய ஸ்ரீவித்யாதான்.  இதிகாசங்களில் இருந்து இப்படி ஏராளமான சம்பவங்களை உருவியெடுத்து சிறுகதைகளாக மாற்றலாம். திரையில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வரவேற்கப்பட வேண்டிய உத்தி எழுத்து. இதுபோன்ற கதைகளை நீண்ட அனுபவமும் பயிற்சியும் உள்ளவர்கள் எளிதில் அடையாளம் கண்டு நுழைந்துவிட முடியும். கதைக்கு இடையேயான மெல்லிய விவரணைகளை அனுமதிக்கலாம் ஆனால் நீளமான விவரணைகள் அலுப்பூட்டுபவை, அன்றி அதையும் வாசகன் சோர்வடையாமல் எழுத முயல வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை கதை இயல்பாக இருந்தது. ஆசான் பள்ளியைச் சேர்ந்தவர் என்றே இவரை மனதில் நினைத்திருந்தேன். அந்த எழுத்தின் சாயல் இவரிடமும் இருக்கிறது என்றே வாசக மனம் சொல்லியது. இதற்கு முன் அனோஜனின் கதையிலும் அப்படி உணர்ந்தேன். மனதிற்கு நெருக்கமான முன்மாதிரி எழுத்தாளர்களின் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது. அப்படி எழுதியவர்களின் எழுத்து பிற்காலத்தில் தனித்த இடத்தில் தானாகவே சென்று அமர்ந்துவிடும். இந்த சிறப்பிதழில் கறை நதி கதைக்கு அடுத்த இடத்தில் இக்கதையை மனம் நினைத்துக் கொள்கிறது. ஒரு மருத்துவர், அவரின் அக்கா மகனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய தந்தை பொறுப்பில் இருக்கிறார். முதல் பெண் பார்த்து அது தடைபட்டுப் போன சோகத்தில் இரண்டாவது பெண் அமையும்போது பெண்ணைப் பற்றிய ஒரு உண்மை இவருக்குத் தெரிகிறது. உண்மையைச் சொல்லி நிறுத்தினால் தன் தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியாது, சொல்லாமல் விட்டால் தன் மருமகனின் வாழ்க்கையைப் பாழ்பண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு வரக்கூடும். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தவிக்கையில் ஒரு அற்புதம் நிகழ்கிறது. இக்கதை எனக்கு கி.ராவின் மின்னல் சிறுகதையை நினைவுபடுத்தியது. ஒரு நல்ல சிறுகதை உங்களை தொந்தரவு பண்ணும் அல்லது இன்னொரு நல்ல சிறுகதையை நினைவுபடுத்தும்.

துவந்த யுத்தம் என்ற கதையை கிரிதரன் ராஜகோபாலன் என்பவர் எழுதியிருக்கிறார். சற்றே நீளமான கதை. ஸ்க்ரோல் வாசிப்புக்குப் பழக்கப்பட்ட விரல்கள் அடம்பிடித்தன. விரலே நொந்துகொள்ளும்படி ஸ்க்ரோல் செய்யச் செய்ய போய்க்கொண்டே இருந்தது. விவரணைகள் மிக அதிகமாக இடம்பெற்றிருந்ததுதான் காரணம் என யூகிக்கிறேன். இப்போதெல்லாம் ஒப்பீடு இல்லாமல் ஒரு கதையை வாசிக்க முடியவில்லை. இக்கதைக்குள் நுழைந்த உடனே எனக்கு கோணங்கி நினைவுக்கு வந்தார். தொன்மம்தான் காரணம். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூலிகளாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியாவிலிருந்து மொரிஷியஸ் சென்றவர்களின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் மலேரியா காய்ச்சலில் இறந்த இந்தியர்களின் கல்லறைத்தோட்டத்தில் புதிய சர்ச் கட்டுவதற்காகவும் அதைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்படும் வேலு என்பரின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. வரலாற்றுப்பிண்ணனி உடைய கதைகளை வாசிக்கும்போது அவ்வரலாற்றுச் சம்பவங்கள் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில கதைகளுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. உதாரணம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கப்பால், சயாம் பர்மா மரண ரயில்பாதை, எரியும் பனிக்காடு போன்றவை. நாவல் அளவுக்கு விரித்து எழுத வாய்ப்புள்ள களம் உடைய கதை இது. ஒருவேளை இது நாவலாக வரும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக அமையலாம்.

சு.வேணுகோபால் கதைகள் எப்போதுமே ஒரு அதிசயத் திறப்பை முடிவில் உண்டாக்கிவிடும். இக்கதையில் பார்வையற்றவராக வரும் பாத்திரம் கோவை ஞானியாக இருக்குமோ என்றொரு சம்சயம் ஏற்பட்டது. ஒரு சிறிய நிகழ்வுதான் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும். அதுபோல குழப்பமான மனநிலையில் ஒருவரைச் சந்திக்கச்செல்பவர் அவரின் பாதையிலேயே சென்று தனக்கான தெளிவை அடைந்துகொள்ளும். சு.வே கதை கூறும் முறை மிக நுட்பமானது. இக்கதையில் மேலும் ஒருபடி கூடி வந்திருக்கிறது. பழனிச்சாமி ஐயா, ஒரு இடத்தில் பழனிவேல் அய்யா என்று மாற்றி எழுதியிருந்தது கண்டு குழம்பி மேலே சென்று பழனிச்சாமி ஐயா என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. மற்றபடி அந்தப் பாத்திர உருவாக்கம் அபாரம்.

மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை. திரையைப் பார்த்துக்கொண்டே வாசித்ததால் கண்கள் பூத்துவிட்டன. வல்லினம் குழுவினர் பாராட்டத் தகுதி உடையவர்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தகவல் பிழை, எழுத்துப்பிழைகளை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும். எல்லாருமே கணினியில் தட்டச்சு செய்து கதைகளை அனுப்புபவர்கள். பேனாவில் வருவதை விட க.த இல் பிழை அதிகம் வர வாய்ப்புண்டு. அதிகம் ஒற்றுப்பிழைகள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். அமிர்தலிங்கம் இரண்டு இடங்களில் அமிர்ந்தலிங்கமாகிவிட்டார். ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

No comments: