எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, January 12, 2009

நாட்குறிப்பு போன்றவை

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.

எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.

குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.

---

இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

---

எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.

குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....

6 comments:

இராம்/Raam said...

/இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது//


/அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.
//

:))

கதிர் said...

வைகை ராம்,

யாருமே இல்லாத டீக்கடையில எப்படிய்யா தைரியமா நுழைஞ்ச? :))

அபி அப்பா said...

தம்பி! "தம்பி"ன்னு பேர்ல இன்னும் ஒருத்தர் எழுதறார்ப்பா இப்ப!

சரி ஊர் சுத்தி பார்த்தாச்சுல்ல கிளம்பி வ்வர வேண்டியது தானே, இன்னுமா ஊர் அலுக்கலை?

King... said...

\\
இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.
\\

\\
இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள்.
\\

அது சரி..!

King... said...

இன்னொரு தம்பி வந்திருக்காரு- அண்ணே அடிக்கடி எழுதுங்க இல்லைன்னா பெயரையும் சுட்டுடுவாங்க...:)

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.