எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, April 11, 2009

வாத்தியார் அண்ணன்

இங்கு வந்து மூன்று நாட்களாகின்றன. இதற்கு முன் நாட்கள் அதன் தொடர்ச்சியில் செல்வதுபோலத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த மூன்று நாட்கள் தனித்தனியான வெவ்வேறு நாட்களாக தெரிகின்றன. முற்றிலும் புதுமையான உலகம் அதே பழைய முகங்களில் காண்கிறேன். அயல்தேசம் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரவர் வேலையில் அவரவர். வேலைவிட்டு வரும்போதும் போகும்போதும் ஒரு புன்னகையோடு எல்லாமும் முடிந்துவிடுகிறது. பகல்வேளைகளில் என்னை தனிமை தின்னத்தொடங்கியது. எல்லோரும் வேலையோடு வரும் இந்த தேசத்தில் வேலைதேடி வந்தது என் தவறுதான் என்று முதல்தினமே உணர்ந்திருந்தேன்.

நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு
அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய
பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது
பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு
பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள
நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்
மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்
அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.

அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை
வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்
என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்
தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்
சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்
என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று
பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்
உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை
செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார்.

தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்
அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட
உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு
இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.
இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.


இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள
வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை
அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.
இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து
படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு
கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய
வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.

ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்
வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்
அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால்
வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு
விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.
அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்
வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே
ஆச்சு" என்றேன்.

வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு
ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்
அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.
என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு
கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்
அதிக பிரயோஜனம் இல்லை.

அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக
உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்
நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.
அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள்.


அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்
அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்
நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்
என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு
முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.
எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக
சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்
குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த
தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக
பிரார்த்தனை செய்துகொண்டது.

14 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு மச்சி ;)

ஆயில்யன் said...

//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை///

வாழ்க்கை சொல்லித்தரும் வரிகள்! அனுபங்களிலிருந்து வலித்து வெளிவரும் வரிகள்!

அருமை கதிர் !

பிச்சைப்பாத்திரம் said...

கதிர்,

அருமையான பதிவு. அந்த நபரைப் பற்றின சித்திரத்தை மிகத் தெளிவாக வரைந்திருக்கிறீர்கள். இது போல் எத்தனை நபர்களின் கண்ணீரால் அரபு தேசங்கள் நிறைந்திருக்கிறதோ?

கதிரவன் said...

நல்ல பதிவு ’தம்பி’. அயல்நாட்டு வாழ்க்கையில் வாத்தியார் அண்ணன் கதையைப்போல இன்னும் எத்தனையோ சோக/கண்ணீர்க் கதைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன

ஆனாலும் ஏனோ,இதைப்படிக்கும் போது, நீங்க சந்தித்த மனிதர்களைப்பற்றி பதிவு எழுதும் ‘இலக்கியவாதி’ன்னு நண்பர்கள் உங்களைக் கிண்டல் செஞ்சது ஞாபகம் வருது - கோச்சுக்காதீங்க :-)

சென்ஷி said...

கலக்குற தம்பி...

//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை//

கலங்கவும் வைக்குறடா நீ!

ரௌத்ரன் said...

எதிர்பார்க்கவில்லை கதிர்,நன்றாக வந்துள்ளது சிறுகதை...என் தந்தை உட்பட பெரும்பாலான உறவினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அரபு தேசங்களில் இருப்பதால் எனக்கும் இது போன்ற நிகழ்வுகளின் பரிச்சயம் உண்டு...

நேர் பேச்சை விட எழுத்தில் ஒருவரை நெருக்கமாக அறிய முடிகிறது.

//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன்.//

இந்த உணர்தல் ஏனோ பலருக்கும் வருவதில்லை.

sarathy said...

என் உணர்வை விவரிக்க இயலவில்லை... என்னை சுற்றியும் வாத்தியார் அண்ணன் போல சில பேர்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரீடரில் லேபிள் வராது. அதனால் புனைவாயிருக்க வேண்டுமே என நினைத்துக் கொண்டே பக்கத்தைத் திறந்தேன்... நல்ல வேளை, சிறுகதைதான்.

நல்லா இருக்குங்க.

நிகழ்காலத்தில்... said...

நல்ல உணர்வோட்டத்தோடு எழுதப்பட்டுள்ளது கதிர்..

வாழ்த்துக்கள்..

கதிர் said...

கோபி
நன்றி மச்சி

ஆயில்யன் நன்றி.

சுரேஷ் கண்ணன்,

கண்ணீர் விடும் அளவுக்கு வாத்தியார் அண்ணன் கதை இருப்பதாக தோன்றினால் இந்த கதையின் தோல்வியாகவே எடுத்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்த பாத்திரங்களை எழுதவே இப்படி எழுதினேன். மற்றபடி சோகங்கள், கண்ணீர்கதைகள் எல்லா நாட்டிலும் உண்டு. அங்கே அதிகம் என்று சொல்லலாம்.

நன்றி.

கதிரவன்,

நான் பார்த்த மனிதர்களை பற்றி எழுதுவதே எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. சொல்லப்போனால் கற்பனையாக எதையும் எழுதும் திறன் எனக்கு இல்லை. அதனால்தான் இப்படி காலத்தை ஓட்டுகிறேன்.

சென்ஷி

நன்றி செல்லம்.

ரௌத்ரன்
எதிர்பார்க்காத அளவுக்கு என்னங்க இதுல இருக்கு? சிறுகதைனு நானாதான் லேபிள் போட்ருக்கேன். :)

நேர்ப்பேச்சுல மொக்கைனா எழுத்துல அதவிட மொக்கைனு சொல்ல வரிங்களா...

கதிர் said...

சாரதி..

லட்சியம்னு ஒன்ன வச்சுகிட்டு அதற்கு நேர் எதிரா போறவங்களோட வாழ்க்கை எப்பவுமே சந்தோஷமா அமையறதில்லை. உங்கள சுத்தி உள்ள வாத்தியார் அண்ணன் போன்ற பாத்திரங்களையும் எழுதுங்க.

ஜ்யோவ்

எனக்கு புனைவு வராதுங்க... :)
நன்றி

அறிவே தெய்வம்...

மிக்க நன்றி தெய்வம்.

Unknown said...

தல நீங்க ஒரு முழுமையான இலக்கியவாதின்னு புருவ் பண்னிட்டீங்க போங்க.

தமிழன்-கறுப்பி... said...

மனசுக்கு நெருக்கமாருக்கு அண்ணே நாங்களும் இங்கனதானே இருக்கோம்

நல்லாருக்கு...!

Kesava Pillai said...

inge irrukkira yarum santhoshamaha illai...yellorukkum prichanai irrukkirathu....