எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, September 15, 2006

பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்!

வேலை தேடி துபாய் வந்த சமயம். ஏதோ ஒரு குருட்டு
நம்பிக்கையில் ப்ளைட்டு புடிச்சி வந்திட்டேன்.
வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து
அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில்
வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது
தெளிவாகவே புரிந்துவிட்டது. நமக்கு இங்கிலீசு
சுமாராதான் வரும், இந்தியோ சுத்தமா நஹி அப்புறம்
எப்படி வேலை கிடைக்கும்னு எல்லாரும்
பயமுறுத்திட்டாங்க. சரி வந்தது வந்தாச்சி விசா முடியுற
வரைக்கும் ஊர சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்பிட
வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். வந்து ஒரு
மாசத்தில பத்து இன்டர்வியூக்கு மேல அட்டெண்ட்
பண்ணிட்டேன். எல்லாமே ஊத்தல்ஸ், சொதப்பல்ஸ்தான்.
நம்ம விட திறமைசாலிங்க இருக்காங்களே
என்ன செய்யறது.

நான் தங்கி இருந்தது துபாயில் தேஹ்ரா என்ற இடத்தில்.
உறவினர்களுடன் இருந்தேன். நம்ம முயற்சி மட்டும்
நிக்கவே இல்ல தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்போதான் ஒரு அழைப்பு வந்தது ஆனால் துபாயில
இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் புஜைரா என்ற
ஊரில் இன்டர்வியூ. கிட்டத்தட்ட மூன்று மணி நேர
பயணம் இங்கிருந்து புஜைரா செல்ல. ஒதுக்கிடலாம்னு
நினைச்சேன் ஆனால் அறை நண்பர்களின்
வற்புறுத்தலால் சென்றேன்.

இவ்வளவு தூரம் யாரும் வரமாட்டாங்க வேலை
கிடைச்சுடும்னு நம்பிக்கைல போனேன். ஆனா எனக்கு
முன்னாடி அங்க பத்து பேர் உக்காந்து இருக்காங்க.
ஏதோ ஓரளவுக்கு அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன்.
இந்த வேலை இல்லாம போனாலும் நல்லதுதான் எவன்
இவ்வளவு தூரம் வந்து வேலை பார்ப்பான். மனசை
தேத்திகிட்டேன்.

நீங்க துபாய் போகணுமா?

ஆமாம்.

எங்க கம்பெனி ட்ரைவர் இப்போ துபாய் போக
இருக்காரு நீங்க வேணா அவர் கூடவே போயிருங்க!

தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு.

வெளிய வந்தேன். கார் தயாராக நின்றிருந்தது. உள்ளே
ஒரு பாகிஸ்தானியன் அமர்ந்திருந்தான்.

இவன் கூட போகலாமா வேணாமா? என யோசித்து பின்
வேண்டாம் என்று அவனை தவிர்த்து நடந்தேன்.

பொதுவாக பாகிஸ்தான் என்றாலே எந்த ஒரு
இந்தியனுக்கும் பிடிக்காது. ஏனென்றால் நம் நாட்டிலே
அமைதியை குலைப்பவர்கள், அப்பாவி மக்களை குண்டு
வைத்து கொல்பவர்கள் என்று தினசரிகளும்
சினிமாக்களும் எனக்கு சொல்லியிருப்பதும் ஒரு
காரணம்.

ஆவோ பாய்! ஆவோ!!

இவண் வேற ஒருத்தன், இந்தியிலதான் பேசுவான் போல
அப்போ கண்டிப்பா இவன் வண்டியில ஏறக்கூடாது!
பஸ்ஸுலயே போயிட வேண்டியதுதான்.

தொடர்ந்து ஹாரன் அடித்து வற்புறுத்தினான். எதுக்கு காசு
வீணாக்கற?, நான் துபாய்தான் போறேன் வந்து ஏறிக்கோ
துபாய்ல இறக்கி விடறேன்.

இல்ல நான் பஸ்ல போயிக்கிறேன்.

இப்போதாங்க பஸ் கிளம்பி போச்சு. இனிமே அடுத்த
பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும். டிக்கெட் கொடுப்பவர்
சொன்னார்.

அடடா! வலிய வந்து கூப்பிட்டான் அவன் கூடவே
போயிருக்கலாம். வீம்பா வந்திட்டோம். ரோட்டை
பார்த்தேன் அவனே வந்து கொண்டிருந்தான்.
என்னருகில் வந்து காரை நிறுத்தினான்.

எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டேன்.

ஆப்கா மதராஸி? ஆஞ்ஜி போட்டேன்!

ஏதோ இந்தியில பேச ஆரம்பித்தான். அய்யா சாமி
எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. இங்கிலிசுல சொல்லு
புரிஞ்சிக்குவேன்.

சாப்பிட்டாச்சா, வணக்கம்னு ரெண்டு மூணு தமிழ்
வார்த்தை சொல்லிட்டு கண் சிமிட்டினான்.

அவரை தெம்பூட்டும் விதமாக சிரித்து வைத்தேன்.

வீரப்பனை கூட அவனுக்கு தெரிந்திருந்தது
உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

பதினஞ்சி வருஷமா இங்க வேலை செய்யறேன்.
என்னை மாதிரியே அரை குறை ஆங்கிலத்தில்
சொன்னான்.

நானும் அவனும் கொஞ்ச நேரத்திலயே சகஜமாக பேச
ஆரம்பித்து விட்டோம். ஆனால் திடீர்னு அந்த கேள்விய
என்கிட்ட கேப்பான்னு எதிபாக்கவே இல்ல!

"பாகிஸ்தான் பத்தி என்ன நினக்கிற நீ ?"

என்ன சொல்றதுன்னே தெரியலை. நான் நினைக்கறதை
அப்படியே சொன்னா நடு பாலைவனத்தில இறக்கி
விட்டாலும் விட்டுறுவானோ? சரி என்ன ஆனாலும்
பரவாயில்லை.நான் என்ன நினைக்கிறேன் என்பதை
அப்படியே சொல்லிற வேண்டியதுதான்.

எனக்கு சுத்தமா பிடிக்காது. காட்டுமிராண்டிங்க ஊர்
அது.எனக்கு மட்டுமில்ல எந்த ஒரு இந்தியனுக்கும்
பாகிஸ்தானை பிடிக்காது. இந்த காரணத்துக்காகத்தான்
நான் உன்னுடன் வர மறுத்தேன். என் மனதில்
தோன்றியதை சொல்லி விட்டேன்

அவனுக்கு மூஞ்சியே சுருங்கி விட்டது.

எதுவும் சொல்லாம இருந்திருக்கலாமோ, பாவம்
அவன் மனசு கஷ்டப்படறானே என்று
வேதனைப்பட்டேன்.லொட லொடன்னு பேசிட்டு
வந்தவன் அமைதியாக மாறிட்டான்.

நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க
கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டு
மொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது. என்ன
பண்றது தலைமையே சரியில்லையே. நிஜமான
வேதனையுடன் சொல்கிறான் என்பது முகத்திலே
தெரிந்தது!

ஒருவேளை நம்ம நாடு பிரியாமலே இருந்திருந்தா
நல்லா இருந்திருக்குமோ!

தெரியவில்லை என்றேன்.

ஆனால் நான் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறேன்
தெரியுமா?

அது ஒரு புனிதமான நாடு. உங்க நாட்டு கலாச்சாரம்
எனக்கு ரொம்ப பிடிக்கும். காந்தியின் மீது எனக்கு
மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. எனக்கு என் நாட்டு
நண்பர்களை விட மதராஸி நண்பர்களே அதிகம்.

பாகிஸ்தானிகள் ஆறடி உயரத்தில், பருமனாகவும்,
பார்ப்பதற்கு ரவுடி போலவும் இருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன். இவனும் அப்படித்தான் இருந்தான்
ஆனால் இவண் கண்களே சொல்லியது நான் அந்த
ரகமல்ல என்று.

பேச்சு எங்கெங்கோ சென்றது. நான் நினைத்ததற்கு
மாறாக இருந்தது அவரின் குணாதிசயங்கள்.

இரண்டரை மணி நேர பயணம் மாதிரியே
தெரியவில்லை. சீக்கிரம் முடிந்தது போல
தோன்றியது.

விடைபெறும் தருணம். வழக்கமான கைகுலுக்கலில்
எல்லாம் முடிந்தது.

இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சீக்கிரமே வேலை
கிடைக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

ரொம்ப நன்றி!

இன்ஷா அல்லாஹ் சம்மதித்தால் நாம் மீண்டும்
சந்திப்போம்!

பாகிஸ்தான் மீதிருந்த என் பார்வையை சற்றே திசை
மாற்றி இருந்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு
வார்த்தையை கேட்டு என்னால் ஆச்சரியப்படாமல்
இருக்கவே முடியவில்லை!

இந்தியாவில்தான் நாமும் இருக்கிறோம் நமக்கு இது
தோணவே இல்லையே! ஏன?

என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக உள்ளதா?

சொன்னது இதுதான்.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது
புனித மெக்கா செல்வது கடமையாக கருதப்படும்.

எனக்கும் என் வாழ்வில் ஒருமுறையாவது தாஜ்மகாலை
தரிசிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை.

முடியுமா தெரியவில்லை! வேதனையோடு சொன்னார்!

யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!

57 comments:

நாமக்கல் சிபி said...

தம்பி,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா மெஸேஜோட வந்திருக்க...

நான் கேள்விப்பட்டவரையில் பாகிஸ்தானிகளும் நம்மை போல இளகிய மனம் கொண்டவர்களே!!!

தலைமை சரியில்லாததுதான் பிரச்சனை

கதிர் said...

//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா மெஸேஜோட வந்திருக்க...//

ரொம்ப நன்றி பாபாஜி!!

//நான் கேள்விப்பட்டவரையில் பாகிஸ்தானிகளும் நம்மை போல இளகிய மனம் கொண்டவர்களே!!!//

மிக மிக முரட்டு ஆசாமிகளை நான் சந்தித்திருக்கிறேன்.

கப்பி | Kappi said...

//ஆஞ்ஜி போட்டேன்!//

//இவன் கண்களே சொல்லியது நான் அந்த
ரகமல்ல என்று.
//

//யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!//

மிக அருமையான பதிவு தம்பி!
வாழ்த்துக்கள்!!

கப்பி | Kappi said...

////நான் கேள்விப்பட்டவரையில் பாகிஸ்தானிகளும் நம்மை போல இளகிய மனம் கொண்டவர்களே!!!//

மிக மிக முரட்டு ஆசாமிகளை நான் சந்தித்திருக்கிறேன்.//

சிக்கலே இங்க தாங்க...எல்லாவற்றையும் எளிமையாக்குவதற்காக பொதுமைபடுத்திவிடுகிறோம்!

ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவங்கள் தரும் தாக்கங்களை வைத்து மொத்தமாக இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்துவிடுகிறோம் :)

Santhosh said...

தம்பி,
நல்ல பதிவு

//தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு. //
அப்படியா :)) ??

நீங்க சொன்ன மாதிரி பாகிஸ்தான் ஆசாமிங்க எல்லாரும் கெட்டவங்க கிடையாது(ஏதோ ஒரு சிலர் தான் இப்படி இருக்காங்க). இங்க என்னுடைய காரை ஒரு பாகிஸ்தானை சேர்ந்தவரிடம் தான் ரிப்பேருக்கு விடுவேன் தங்கமான ஆளு. இதுக்கு முன்னாடி நம்ம நாட்டுக்காரங்கிட்ட விட்டு பெரிய லெவலில் அல்வா கிண்டி குடுத்தானுங்க. இவரு பேரு அயூப் என்னை பாய் என்று தான் அழைப்பாரு. ஏதாவது பிரச்சனை புதுசு போடுகிறேன் என்று சொன்னா கோச்சிகுவாரு சம்பாதிக்க வந்த இடத்துல் காசை ஏன் வெஸ்டு பண்ற என்கிட்ட கொண்டுவா அப்படின்னு சரி செய்து தருவாரு அவர் ஷெட்டுக்கு போன உட்கார வெச்சி ராஜ மரியாதை தான். :)) மக்கள் எல்லாரும் மக்கள் தான் நாம் தான் அவங்களை பாகிஸ்தானி,ஈரானி என்று கோடு போட்டு பிரிச்சிகிட்டு இருக்கோம். :))

Santhosh said...

////யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!//

எதிர்பார்க்கவே இல்ல இதை. அவரு தாஜ்மகாலை பார்க்க விரும்புவாருன்னு கலக்கிடிங்க.

கதிர் said...

//மிக அருமையான பதிவு தம்பி!
வாழ்த்துக்கள்!! //

வாழ்த்துக்களுக்கு நன்றி கப்பி!

கதிர் said...

//அப்படியா :)) ?? //

ஆஞ்ஜி!! ரொம்ப தங்கமான மனசுதான்!

கதிர் said...

//எதிர்பார்க்கவே இல்ல இதை. அவரு தாஜ்மகாலை பார்க்க விரும்புவாருன்னு கலக்கிடிங்க//

எனக்கும் அதுதான் ஆச்சரியமா இருக்கு! நான் திரும்பவும் அவரை பாக்க முடியுமான்னு நினைப்பதுண்டு. ஒவ்வொரு கார் என்னை கடந்து செல்லும்போதும் அவரின் முகத்தை தேடுவேன். இதுவரையிலும் சந்திக்கவே இல்லை. அவரின் பெயர் கூட தெரியாது.

உங்களுக்கும் அருமையான அனுபவம் இருக்கும் போல! அயூப்பை கேட்டதாக சொல்லுங்கள்.

நானும் மதம்பிரித்து பார்க்ககூடாதுன்னு கொள்கையுடையவன் தான்.
மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும்.

அவரவருக்கு கிடைக்கும் அனுபவம்தானே மனிதம் பார்க்க உதவுகிறது. அந்த வகையில் அவரின் மேல் அவரின் மேல் எனக்கு தனி மதிப்பு வருகிறது.

வருகைக்கு மிக்க நன்றி சந்தோஷ்!

கதிர் said...

//சிக்கலே இங்க தாங்க...எல்லாவற்றையும் எளிமையாக்குவதற்காக பொதுமைபடுத்திவிடுகிறோம்! //

எல்லாருக்கும் ஒரே மாதிரியான அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம்தானே கப்பி.

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய தம்பி,

பாகிஸ்தானியர்களுக்கு பல முகங்கள்.

இந்தியாவை அடியோடு வெறுப்பவரும் இருக்கிறார், இந்தியாவை விரும்புபவரும் இருக்கிறார்.

அறுபதாண்டுகளாக இன்னும் என்னய்யா மொஹாஜிர் (குடியேறியவர்) என இந்தியாவிலிருந்து வந்தவர்களை இன்னமும் திட்டும் பாகிஸ்தானியும் இருக்கிறார்.

சிந்த், பஞ்சாப், பலோச், NWFP என ஆளாளுக்குப் பிரித்துக்கொண்டீர்கள் எங்களுக்கு ஏது மாநிலம் என்று கேட்கும் பாகிஸ்தானி மொஹாஜிரும் இருக்கிறார்.

நீங்கள் குறிப்பிடும் தோற்றமுள்ள பாகிஸ்தானி ஒருவேளை NWFP பட்டாணாக இருக்கக்கூடும். அவர்களுள் சிலருக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று கான் அப்துல் கஃபார்கானுக்கும் மகாத்மாவுக்கும் இருந்த நட்பு. இந்த நட்பால் கான் அப்துல் கஃபார் கானை வெறுக்கும் பாகிஸ்தானியர்களும் இருக்கிறார்கள்.

எதையுமே பொதுமைப்படுத்த முடியாதென்றாலும் இயன்றவரையில் நல்லவற்றை மட்டுமே பார்க்க முயற்சி செய்யலாம்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

அன்புடன்
ஆசாத்

Sundar Padmanaban said...

நல்ல பதிவு. நன்றி!

சமுதாயத்தின் ஒவ்வொரு பொருளாதார நிலைகளிலும் இருக்கும் மனிதர்களின் குணாதிசயங்கள் - ஒரே நாட்டினராக இருந்தாலும் - வேறு மாதிரியாக இருக்கும் என்பது சாதாரண உண்மை. உடலுழைப்பு வேலைகளைச் செய்பவர்கள் முரடர்கள் போன்று காட்சியளிப்பார்கள். வெள்ளைக் காலர் கோஷ்டிகள் உள்ளங் கைகள் மெத்து மெத்து என்று பெண் போல இருப்பார்கள். அதற்காக முன்னவரை முரடன் என்றும் பின்னவரை மகாத்மா என்றும் உருவத்தை வைத்து மட்டும் எடை போட்டுவிட முடியாது இல்லையா?

நான் ஆறு வருடங்களில் பலதரப்பட்ட பாகிஸ்தானி நண்பர்களிடம் பழகியிருக்கிறேன் - நிறுவனத் தலைவர் பதவியிலிருந்தவர் முதல் வீடு மாற்றும் போது ஜன்னல் ஏஸியை அப்படியே உருவி முதுகில் சுமந்து நடந்து வண்டியில் ஏற்றி மறுபடியும் தூக்கிவந்து மாட்டிக்கொடுத்தவர் வரை பலதரப்பட்ட பாகிஸ்தானியர்களை - அவர்களில் யாரும் இந்தியன் என்பதற்காக எந்தவித வேற்றுமையையும் என்னிடம் காட்டவில்லை. நாம்தான் அவர்களைக் குறிக்க 'பச்சை' 'பட்டாணி' என்று பலவித பெயர்களில் அழைக்கிறோம். அவர்கள் எப்போதும் 'Bhai' தான்.

தலைவர்களின் தவறுகளுக்காக நாடும் இனமும் அவமானங்களையும் தூற்றல்களையும் சந்திக்கவேண்டியிருப்பது மக்களின் சாபம்!

வெறுப்பையும் பகையையும் காட்ட நாம் தலைவர்களல்லவே. சாதாரண மனிதர்கள்தானே - மனிதத்தை மட்டும் பார்ப்போமே! என்றாவது தலைவர்களிடமும் மனிதம் வெளிப்படும்போது பகை மறந்து சிநேகம் பாராட்டப்படும். அப்போது நாம் கராச்சிக்குப் போகலாம். அந்த நண்பரும் தாஜ் மஹாலைப் பார்க்கலாம்.

Sundar Padmanaban said...

சொல்ல மறந்துட்டேன். பதிவு நல்லா எழுதிருக்கீங்க. கொஞ்சம் முயற்சி பண்ணா சிறுகதையா வந்திருக்கும்!

பாராட்டுகள். வாழ்த்துகள் (வேலை கிடைக்கவும்)!

கதிர் said...

இனிய ஆசாத் அய்யா,

வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி!

//எதையுமே பொதுமைப்படுத்த முடியாதென்றாலும் இயன்றவரையில் நல்லவற்றை மட்டுமே பார்க்க முயற்சி செய்யலாம்.//

என்னுடைய கருத்தும் அதுவே!!

வெற்றி said...

தம்பி,
அருமையான பதிவு. பேச்சுத்தமிழ் நடையிலேயே மிகவும் அழகாக படிக்கச் சுவைக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

கதிர் said...

வாங்க சுந்தர்!

//வெறுப்பையும் பகையையும் காட்ட நாம் தலைவர்களல்லவே. சாதாரண மனிதர்கள்தானே - மனிதத்தை மட்டும் பார்ப்போமே! என்றாவது தலைவர்களிடமும் மனிதம் வெளிப்படும்போது பகை மறந்து சிநேகம் பாராட்டப்படும். அப்போது நாம் கராச்சிக்குப் போகலாம். அந்த நண்பரும் தாஜ் மஹாலைப் பார்க்கலாம்.//

பதிவை விட அருமையா நீங்க எழுதி இருக்கீங்க!

சிறுகதையா எழுதத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் அப்படி எழுதறதைவிட இந்த மாதிரி எழுதினா நல்லா இருக்கும்ணு தோணிச்சு. அப்படியே எழுதிட்டேன்.

அப்புறம் வேலையெல்லாம் எப்பவோ கிடைச்சிடுச்சி!!

உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி சுந்தர்!

கதிர் said...

//அருமையான பதிவு. பேச்சுத்தமிழ் நடையிலேயே மிகவும் அழகாக படிக்கச் சுவைக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். //

வருகைக்கும் வாழுத்துகளுக்கும் மிக்க நன்றி வெற்றி!!

வடுவூர் குமார் said...

""நானும் மதம்பிரித்து பார்க்ககூடாதுன்னு கொள்கையுடையவன் தான்.
மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும்""
தம்பி-இது எனக்கு பிடிச்சிருக்கு.

கதிர் said...

//நானும் மதம்பிரித்து பார்க்ககூடாதுன்னு கொள்கையுடையவன் தான்.
மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும்""//

மனிதம் மட்டுமே மனிதர்களிடம் காணவேண்டும். மனித முகத்தில் மதம் தேடுபவன் மனிதனில்லை

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்!

dondu(#11168674346665545885) said...

பாக்கிஸ்தானியருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்திருக்க முடியும்? இருவரும் ஒரே தேசத்தில் இருந்தவர்கள்தானே. அதிலும் பாக்கிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது அவை ரொம்ப பாந்தமாகவே இருந்தன. இப்போது அவற்றை பார்க்க முடியவில்லை என்பது சோகமே.

உருதுவும் இந்தியும் ஒரே மொழிதான் இலக்கணம் ஒன்று ஆனால் சொற்கள் சில வித்தியாசப்படும். உருதுவில் அரேபியத் தாக்கம் இருக்கும் இந்தியில் வடமொழியின் தாக்கம். எழுத்துருக்களில் வேறுபாடு, அதுவும் நாமாக வைத்துக் கொன்டது, அவ்வளவே. உருது மொழி பற்றி நானும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க கீழே:

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கதிர் said...

வருகைக்கு மிக்க நன்றி திரு.டோண்டு ராகவன் அவர்களே

நல்ல தகவல்கள் தந்தீர்கள்.

//இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html//

நாட்டிலே இந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கும்போது, இன்னும்
முழுமையான சுதந்திரம் கிடைக்க வில்லையென சிலர் புலம்புகிறார்கள்.

துளசி கோபால் said...

அருமையான பதிவு தம்பி.
நமக்கும் நிறைய பாகிஸ்த்தானி நண்பர்கள் இருக்காங்க.

எல்லா மனுஷரும் ஒண்ணுதான். அரசியல்வாதிகள்தான் இப்படி எல்லாத்தையும்
வெட்டித் துண்டாடிப்புட்டாங்க.

கதிர் said...

//அருமையான பதிவு தம்பி.//

வாங்க துளசியம்மா!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

லொடுக்கு said...

நானும் ஒரு முரட்டுத் தோற்றமுள்ள ஒருவரை சென்ற வியாழக்கிழமை மாலை கண்டேன். :)

நல்ல அனுபவம் தம்பி. நல்ல பதிவு. நல்ல நடை. ஆமா.. நீங்க ஃபுஜைரா சென்ற மலைகளுக்கிடயில் செல்லும் அந்த அழகிய வழியப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!

//
//இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html//

நாட்டிலே இந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கும்போது, இன்னும்
முழுமையான சுதந்திரம் கிடைக்க வில்லையென சிலர் புலம்புகிறார்கள்.
//
ஆமா, இதென்ன குத்து?? உ.கு? வெ.கு?

மதம் மீறிய பார்வையா? அப்போ நீங்களும்......

கதிர் said...

வாங்க லொடுக்கு!

அதில என்னப்பா உ.கு இருக்கு?

வந்த உடனே உ.கு, வெ.கு எல்லாம் வச்சி பேசறிங்களே இது நியாமா?

அழகிய மலைகளை பத்தி என்ன சொல்றது? மறந்திட்டேன்!

லொடுக்கு said...

//வந்த உடனே உ.கு, வெ.கு எல்லாம் வச்சி பேசறிங்களே இது நியாமா?//

வந்து கொஞ்ச நாள் கழிச்சு அதை பத்தி பேசலாமா? ;)


//
அழகிய மலைகளை பத்தி என்ன சொல்றது? மறந்திட்டேன்! //

என்ன இப்படி சொல்லிட்டீங்க, எனக்கு மிகவும் பிடித்த சாலைங்க அமீரகத்துல.

சும்மா அதிருதுல said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் வேலை கிடைத்ததற்கு...

இப்போது தாங்கள் இருப்பது புஜராவா..இல்லை ..?

கதிர் said...

//நல்ல பதிவு வாழ்த்துக்கள் வேலை கிடைத்ததற்கு...//

நன்றி சின்னபுள்ள!

நான் இப்போ இருப்பது துபாய், கராமா என்ற இடத்தில்.(குறுக்கு சந்து, பஸ்டாண்ட் பக்கதில இப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்).

கதிர் said...

//என்ன இப்படி சொல்லிட்டீங்க, எனக்கு மிகவும் பிடித்த சாலைங்க அமீரகத்துல. //

செல்லும்போது ஒரு விதமான கலக்கத்துடணும் வருகையில் ஒரு அவருடன் கதைத்துக்கொண்டே வந்ததினால் மலைகளை அவ்வலவாக கவனிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் நன்றாக ரசித்து பின் எழுதுகிறே.


//வந்து கொஞ்ச நாள் கழிச்சு அதை பத்தி பேசலாமா? ;)//

ஏதோ நமக்கு நாலஞ்சி பின்னூட்டம் வர்றது பொறுக்கலையா லொடுக்கு!

இதெல்லாம் பப்ளிக்குல பேசப்பிடாது!!

Anonymous said...

nalla pathivu thambi

vetri pera vaazththukkal

கதிர் said...

நன்றி அனானி அண்ணா!!
சங்கத்தில லேட்டஸ்ட் தகவல் என்னா?

ராம்குமார் அமுதன் said...

//யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!//

இந்த வரியில் வென்று விட்டீர்கள் தம்பி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு பாகிஸ்தானிய வலைவழி நண்பன் இருந்தான். மிகவும் நல்லவன். அத்துணை அனபானவன், அக்கறையானவன். என்னுடைய பல கஷ்டங்களை யாஹூ மெஸ்ஸஞ்சரிலேயே பகிர்ந்து கொண்டவன். ஆனால் இப்பொழுது தொடர்பு இல்லை. உங்கள் கதை படித்ததும் எனக்கு அவன் ஞாபகம் வந்துவிட்டது. அவனைப் பற்றி ஒரு பதிவு போடும் எண்ணமும் கூட.....

கதிர் said...

//இந்த வரியில் வென்று விட்டீர்கள் தம்பி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அமுதன்!
மறக்காம ஓட்டு போடுங்க!

உங்களுக்கும் அருமையான அனுபவம்
இருக்கும் போல!

ராம்குமார் அமுதன் said...

கண்டிப்பாக தம்பி... நானும் போட்டிக்காக ஒரு கதை எழுதிருக்கேன். பாத்துட்டு ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.

ராசுக்குட்டி said...

தம்பி கலக்கிட்டய்யா!

நல்ல பதிவு, அங்கங்க குண்டு வெடிக்கிறப்ப இந்த மாதிரி விஷயங்கள் ஆறுதலா இருக்கு!

இந்தி தெரியாதது சில சமயங்களில் குறைதான்!

பரத் said...

கலகிட்டீங்க தம்பி
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

கதிர் said...

அமுதன் சத்தம்போடாம கலக்கறீங்க உங்க பக்கம்!!

ராஸ்குட்டி,

நாங்க இப்போ கலக்கினாலும்,ஸ்பீக்கர்லாம் நீங்க வெயிட்டான பிரச்சாரம் பண்ணி ஓட்ட அள்ளிருவீங்களே நீங்க கடைசியா கெலிச்சிருவீங்க ராஸ்!

நன்றி பரத்! ரொம்ப நாள் ஆச்சி நம்ம பக்கம் வந்து!

கார்த்திக் பிரபு said...

thambi konjam busy ..adhan vara mudiyala..copy panni vaichrukan..padichitu nalaikku comments podurane

கதிர் said...

பொறுமையா வாங்க தப்பில்லை. ஆனா ஓட்ட மட்டும் சரியான நேரத்தில போடணும் சரியா கார்த்திக்!

கதிர் said...

பொறுமையா வாங்க தப்பில்லை. ஆனா ஓட்ட மட்டும் சரியான நேரத்தில போடணும் சரியா கார்த்திக்!

Leo Suresh said...

//மிக மிக முரட்டு ஆசாமிகளை நான் சந்தித்திருக்கிறேன்//Exceptions are not examples.நல்லவர்களும் இருக்கிறார்கள்.எல்லாம் அவர்களின் தலைவர்களின் கைங்கர்யம்.

லியோ சுரேஷ்
துபாய்

கதிர் said...

லியோ,

எல்லாமே நம் பார்வையிலதான் இருக்குங்க!, அனைவருக்கும் ஒரே விதமான புரிதல்கள் இருந்தால் சண்டை சச்சரவுகள், பிரச்சினைகள் எதுவுமே இருக்காது இல்லிங்களா!!

தன்னை நம்பாமல் தலைவனை நம்புபவன் மனிதக்கூட்டத்தில் இருந்து விலகுகிறான்.

வருகைக்கு நன்றி லியோ!

Anonymous said...

தம்பிக்கு லிஃப்ட் கொடுத்த அண்ணன் பாக்கிஸ்தானி வாழ்க!

இவன்,
தம்பி தற்கொலைப் படை,
கராச்சி,
துறைமுகம் அருகில்.

இராம்/Raam said...

கதிர்,

ஒரு + போட்டாச்சுப்பா....

கதிர் said...

தற்கொலைப் படையா?

என்னயா இது அநியாயமா இருக்கு!

கதிர் said...

"+" போட்ட மாதிரியே "ஓட்டு" போடுங்க! பிடிச்சிருந்தா மட்டும்

சந்திர S சேகரன். said...

முதல் முறை உங்கள் வலையத்துக்கு வருகிறேன்.. சிறந்த பதிவு..

நமக்கு எப்படி பாகிஸ்தானி என்றவுடன் மனசுல ஒரு அலாரம் அடிக்கிறதோ அதே மாதிரி தான் அவங்களுக்கும் நம்மள கண்டா அந்த மாதிரி எண்ணங்கள் வருது.. மக்களின் பால் எவ்வித தவறுமில்லை.. அரசாங்கமும் மீடியாக்களும் அந்த மாதிரியான கசப்பான , தவறான எண்ணங்கள் ஏற்படுவதுற்கு முக்கிய காரணமாகின்றன.. நீங்க www.dawn.com, www.nation.com போன்ற வலையத்துக்கு போய் பாருங்களேன்.. இந்தியாவில் என்ன செய்தி வருதோ அதுக்கு அப்படியே நேர்மாரான செய்திகளை அங்கு பார்க்கலாம்..அப்பறம் அவங்க என்ன செய்வாங்க.. அரசாங்கத்தால் ஏற்படுத்த இயலாத நல்லுணர்வை இதுமாதிரி ஆட்களிடம் நாம்தான் ஏற்படுத்த வேண்டும்..

எளிய நடைக்கும், வேலை கிடைத்ததற்க்கும் வாழ்த்துகள்..

கதிர் said...

வருக சந்திர S சேகரன்,

வருகைக்கு நன்றி. சிறப்பா எழுதணும்னு எல்லாம் எனக்கு எண்ணமில்லை ஏதோ தோணுச்சி எழுதினேன்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

Anonymous said...

சில சமயம் இப்படி நாம நெனச்சதுக்கு மாறா வித்தியாசமான நபர்களை நானும் சந்தித்திருக்கிரேன். நல்ல கதை. சரி, இங்கேயும் பாருங்க.

கதிர் said...

//சில சமயம் இப்படி நாம நெனச்சதுக்கு மாறா வித்தியாசமான நபர்களை நானும் சந்தித்திருக்கிரேன். நல்ல கதை. சரி, இங்கேயும் பாருங்க.//

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி முரட்டுக்காளை!!

கதிர் said...

முதல் பின்னூட்டமிட்ட வெட்டிப்பயலுக்கு நன்றி!

50 அடிச்சா நன்றி சொல்லணும்!

நன்றி.! நன்றி.! நன்றி.!

G.Ragavan said...

தம்பி, ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் மொழியிலும் இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். மத, மொழி, இனவாதிகளால் நாம் வேறு விதமான முடிவுக்குத் தள்ளப்படுகிறோம். வலைப்பூக்களில் நடக்கின்ற சண்டை தெரியும்தானே! உலகம் முழுதும் இப்படித்தான். ஆகையால் நாம் யாரிடம் பழகினாலும் நல்லவர்களாக இருக்க முயல வேண்டும். அவ்வளவுதான்.

கதிர் said...

//தம்பி, ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் மொழியிலும் இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். மத, மொழி, இனவாதிகளால் நாம் வேறு விதமான முடிவுக்குத் தள்ளப்படுகிறோம். வலைப்பூக்களில் நடக்கின்ற சண்டை தெரியும்தானே! உலகம் முழுதும் இப்படித்தான். ஆகையால் நாம் யாரிடம் பழகினாலும் நல்லவர்களாக இருக்க முயல வேண்டும். அவ்வளவுதான். //

அன்பு, புன்னகை, இசை, இதெற்கெல்லாம் மொழி இன பேதம் கிடையாது என்பது என் கருத்து. இருந்தாலும் ஒரு சமுதாயத்திலிருந்து வந்தவனின் பார்வைகள் அத்தளத்தில் இருந்து வேறுபடும்போது சமுதாயத்தின் மேல் கோபம் வரும். இனியும் என் பார்வையில் மதம் என்ற சாத்தான் ஒளிந்திருக்காது. இதை சொல்லியதுதான் அந்த சம்பவம்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராகவன்.

மருதநாயகம் said...

கட்டுமஸ்தான அந்த பாகிஸ்தானியிடம் உண்மையை சொன்ன உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்

கதிர் said...

//கட்டுமஸ்தான அந்த பாகிஸ்தானியிடம் உண்மையை சொன்ன உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மருதநாயகம்!

களவாணி said...

காபுல் எக்ஸ்பிரஸ் படம் பாருங்க... கண்டிப்பா ஒங்களுக்கு பிடிக்கும். ஹிந்தி தெரிஞ்சாத்தான் அந்த படம் பார்க்கணும்ன்னு இல்ல. கதை இதுதான், ரெண்டு இந்தியர்கள் (ஜான் ஆப்ரகாம், அர்ஷத்), ஒரு அமெரிக்கன், ஒரு பாகிஸ்தானி, ஒரு ஆஃப்கானிஸ்தானி. இவங்க எல்லாரும் ஒண்ணா பயணம் செய்யணும்னு விதி. இவங்கள்ல அந்த அஃப்கானிஸ்தானி ஒரு தீவிரவாதி. பயணத்தின் போது ஏற்படுகிற சம்பவங்களால நட்பு ஏற்பட்டும், பயணத்தொட முடிவுல சோகத்தோட தங்களோட நாட்டுக்கு பிரிஞ்சு போறாங்க. அதுல அந்த திவீரவாதி, அவனோட நாட்டு ஆர்மியாலயே அடையாளம் கண்டுபிடிக்க முடியாம கொல்லப் படுகிறான். ஆஃப்கானிஸ்தான்ல இருக்குர காபுல்ல முதல் முறையா படம் எடுத்திருக்காங்க. இத நானேன் உங்க கிட்ட சொல்றேன்னு தெரியல, உங்க பதிவ படிச்சதும், எனக்கு அந்த படம் பார்த்த ஞாபகம் வந்திரிருச்சி, கமெண்ட் எழுதிட்டேன். நானும் உங்கள மாதிரி எல்லா பாக். ஆப்கான். காரங்கள மோசமானவ்ங்கன்னு தப்பா நெனைச்சுட்டிருந்தேன். படம் பார்த்ததுக்கப்புறம் எல்லாமே உல்டா ஆயிடுச்சு. நான் எல்லாத்தையும் லேசா எடுத்துக்கிறவன், என்னையும் இந்தப் படம் கரைய வச்சிருச்சு. முக்கால்வாசி ஆங்கிலத்துலதான் டயலாக் என்றதால வாய்ப்பு கெடச்சா மிஸ் பண்ணாதீங்க படம் பாக்க. அருமையான பதிவு. நன்றி...

PPattian said...
This comment has been removed by the author.