எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, August 16, 2006

2. யார் இவர்?

சென்ற பதிவில் யார் இவர்? என்று ஒரு
பதிவு எழுதி இருந்தேன் அதன் தொடர்ச்சி....


இவர் எல்லா அரசியல் தலைவர்களும் பழக்கம்
என்றாலும் மிக மிக நெருக்கமானவர் அண்ணா!
அறிஞர் முதல்வரானதும் சென்னையில் உலக தமிழ்
மாநாடு நடத்தப்பட்டது. தமிழறிஞர்கள் பலருக்கும்
கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது! தேவாரம்
பாடிய திருநாவுக்கரசருக்கு மட்டும் இல்லை!
கொதித்துப் போனார் இவர். அண்ணாவிடம்
சென்று, என்ன? அப்பர் பெருமான் தமிழ் வளர்க்க
வில்லையா? அவருக்கு ஏன் சிலையில்லை?" என
எகிறினார். அதற்கு அண்ணா புன்சிரிப்புடன்,
"மரியாதைக்குரிய கவிஞர்களுக்கு மட்டும்தான்
கடற்கரையில் சிலை வைக்க முடிவெடுத்தோம்!
அதனால்தான் அப்படி" என்றார். இவர், கண்கள்
சிவக்க "என்ன? அப்படியானால் அப்பர் பெருமான்
மரியாதைக்குரியவர் இல்லையா?"

"இல்லை... அவர் வழிபாட்டுக்குரியவர்! அவருக்கு
கோயிலில் சிலை வைப்பதுதான் சரியானது"
அண்ணா அமைதியாக சொல்ல, இவர் நெக்குருகிப்
போனார். கண்களில் சுலபக்குளம்! அண்ணாவை
ஆரத்தழுவிக்கொண்டார்! பெரியாரின் சீடரான
அண்ணாவிடம் இத்தகைய தமிழ் பக்தியுடன்
தெய்வீக பக்தியும் எதிபார்த்திருக்கவே இல்லை
அவர்! 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்'
என்று அண்ணா பேச காரணமும் இவர்தான்.

இந்திரா பிரதமரானதும் கிராமங்களை வங்கிகள்
தத்தெடுக்கும் முறையை புகுத்தி கிராமங்களுக்கு
செழிப்பு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
அவரை இதற்கு தூண்டியது இவரின் நிர்வாக
முறைதான்! இவரின் ஊரிலும், அருகில் உள்ள
கிராமங்களில் உள்ள அத்தனை குடும்பங்களும்
தன்னிறைவு அடையும் வண்ணம் பாரததிலேயே
முன் மாதிரி கிராமங்களை ஏற்படுத்தினவர் இவர்.
பெரிய அதிகாரிகளும், பல மாநிலங்களில் இருந்து
வந்தும் பார்த்துவிட்டு இவரின் நிர்வாகத்தை
மெச்சியிருக்கிறார்கள்.

பட்டிமன்றங்களின் நாயகன் என்றால் அது இவர்தான்!
விடுதலை விரும்பி, தா.பாண்டியன், மாயண்டி பாரதி,
போன்ற கடவுள் மறுப்பு பேச்சாளர்களையும் கோயில்
மேடைகளுக்கு கூட்டி வந்தவர். அதுமட்டுமா? ஆத்திக
ஜனங்களிடம் கைதட்டலும் வாங்கி தந்தவர். பட்டி
மன்ற தலைப்புகளையும் "அவள் பத்தினியா இவள்
பத்தினியா" என்பதிலிருந்து மாற்றி சமூக சீர்திருத்த
கருத்துக்களை கருப்பொருளாக எடுத்துக்கொண்ட
பொதுவுடமைவாதி சாமியார்.

எமர்ஜென்சி நேரம்! இவரை மிசாவில் கைது செய்வதா
வேண்டாமா என்ற குழப்பத்தில் மத்திய அரசு
அதிகாரிகள்! எதிகட்சிகாரர்கள் எல்லாம் கைது
செய்யப்பட்டு சிறையில்! இவரோ தனது தூள் பரத்தும்
பட்டிமன்றங்களை மூலை முடுக்கெல்லாம் நடத்திக்
கொண்டிருக்கிறார்! ஆன்மீக அன்பர்களும்,
பக்தர்களும் கூட "நிலைமை சரியில்லை" பேச
வேண்டாமே என்றனர். ஆனால் இவரோ கேட்கவில்லை
இவரின் சொற்பொழிவென்றால் கூட்டமும் ஏறுக்கு
மாறாய் வழக்கத்தை விட நாலு மடங்காய் குவிகிறது
ரகசிய போலீசும் ஏகமாய் குவிக்கப்பட்டு கண்
காணிக்கப்படுகிறது. மதுரையில், நேரு ஆலால
சுந்தர கோயிலில் பட்டிமன்றம்! சிக்கலாக பேசினால்
மேடையில் வைத்தே கைது செய்யலாம் என்று
என்று காத்திருந்தார் டி.எஸ்.பி. கோயில்
நிர்வாகிகள் முகத்தில் பீதி!. இவர் பேச எழுகிறார்!

"மனிதன் தூங்க செல்லும்போதுதான் அன்று
நடந்ததை எல்லாம் யோசிக்கிறான்! பட்டிமன்றங்களை
இரவில் நடத்துவதே அதற்கு தான்... படுக்கைக்கு
செல்வதற்கு சமீபத்தில் கேட்ட பேச்சு அதுதான்
என்பதால் சிந்தனையளவில் பாதிப்படைவான்!
யோசிப்பான்... தெளிவு காண்பான் என்பதற்காக
தான்... பட்டி மன்றங்களை இரவில் நடத்துவது!

ஓகோ ... இவ்வளவு அபாயம் உள்ளதோ இதிலே?
என்று சுதாரித்து பட்டிமன்றம் தேவையா என்றே
கூட பட்டிமன்றங்கள் நடக்கலாம் எதிர்" காலத்தில்
என்று பேச சூட்சுமமான கூட்டம் புரிந்து கொண்டு
விண்ணதிர கைதட்டுகிறது! கலவரமான கோயில்
நிர்வாகிகள் அவசரமாக திரும்பி டி.எஸ்.பி.யின்
ரியாக்ஷன் என்ன என்று கவனிக்கிறார்கள்,
தன்னை மறந்து அவரும் கைதட்டி கொண்டு
இருக்கிறார்.

அவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள்.
1994ல் வெளிவந்த ஒரு இதழில் படித்த
செய்தி. இப்போதுள்ள சாமியார்களுக்கும்
அடிகளாருக்கும் இருக்கும் இடைவெளியை
நினைத்து பார்த்து வியந்தேன்.மேலும்
இவரின் எளிமை என் மனதை கவரவே
பதிவாய் போட்டுவிட்டேன்.

10 comments:

G.Ragavan said...

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு துறவி. சமூகத் துறவி. சைவக் கொழுந்து. தமிழ்ப் பகலவன். பட்டமன்றம் உயிரோடு இருக்கக் காரணமே அவர்தான். அவரது சாதனைகள் எக்கச்சக்கம். எந்த அரசியல்வாதியும் ஆன்மீகவாதியும் செய்து முடிக்காத சாதனைகள் அவருடையது என்பது என் கருத்து. குன்றக்குடி என்ற ஊர் சொல்லும் அவரது பெருமையை.

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல பதிவு!
பெரியவர்கள் பற்றிய பதிவு!
தங்களின் இரண்டு பதிவுகளியும் படித்தேன்,
தொடர்ந்து எழுதவும், வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

ராகவன்,

அவரை பற்றிய தகவல்களை படிக்கும்போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை, ஏனென்றால் இப்போதுள்ள ஆன்மீகவாதிகளின் தோற்றத்தை கண்டதினால். உங்கள் கருத்தும் என் கருத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கு.

நன்றி

கதிர் said...

//பத்திரிக்கையில் வந்ததை அப்படியே தட்டச்சு செய்திருக்கிறீர் என நினைக்கிறேன்.நன்று .மீள் நினைவுக்கு நன்றி.//

மாற்றக்கூடாது என்ற எண்ணம்தான்!

கதிர் said...

சரவணன்,

வருகைக்கு வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா!

பரத் said...

Good one....
very Informative
pakirnthu kondatharkku nandri

Unknown said...

தம்பி மிகவும் அருமையானப் பதிவு. பல தகவல்களைப் புதிதாய் தெரிந்துக் கொண்டேன் நன்றி.

கதிர் said...

தேவ்,
வாங்க வாங்க வராதவங்க எல்லாம் வந்துருக்கிங்க! டேய் தல க்கி ஒரு டீ போடு!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

6 ம் பந்தி படிக்கும் போது; நம்ம குன்றக்குடி அடிகளார் செய்தி போல் இருக்கே! என நினைத்தேன். சந்தோசமாக இருந்தது. எங்கள் ஈழத்திலும் அவருக்குப் புகழ் உண்டு. அவர் 60 களில் யாழ்ப்பாணம் வந்த போது, தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவில்களுக்குள் அனுமதியுங்கள்,நானும் வருகிறேன். எனப் பல கோவிலுள் செல்லவில்லை. என வீட்டில் பேசியதைக் கேட்டுள்ளேன். யாழ்பாண இறுக்கமான சாதி அமைப்பு அன்று அவர் சொல்லைக் கேட்கவில்லையென;பல மிதவாதிகள் வேதனைப்பட்டதை அறிந்தேன்.இவர் சாமியார் அல்ல. சமூக அக்கறையுள்ள சிந்தனைவாதி- பல காவிகள் இவர் வாழ்வில் படிக்க நிறைய உண்டு.
யோகன் பாரிஸ்

Siva said...

நல்ல பதிவு!நல்ல தகவல் !

அன்புடன்
சிவா