எல்லையற்ற அன்பு கொள்வோம்
Tuesday, July 01, 2008
சாருபுராணம்
முழுவட்டம், டிக்மார்க், சூப்பர், கொன்னுட்டடா என்பதுபோல எதாவது சில்மிஷம்
செய்து வைப்பது வழக்கம். முக்கியமாக சாண்டில்யனின் புத்தகங்களில் என் கைவண்ணம்
கண்டிப்பாக இருக்கும். இப்படி செய்வதால் நான் எப்போது புத்தகத்தை திருப்பித்
தந்தாலும் அதை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புரட்டிப் பார்த்து
பின்புதான் வேறு புத்தகங்கள் எடுக்க அனுமதிப்பார் எங்கள் ஊர் நூலகர் அங்கமுத்து
சக்கரை. ஒருசிலருக்கு அடிக்கோடிடுவது சுத்தமாக பிடிக்காது. எனக்கு அதிலேதான்
கொள்ளை இன்பம். ஓசிபுத்தகத்தில் எதுவும் கிறுக்கினால் மறுபடி தரமாட்டார்கள்
என்பதால் அடிக்கோடிடும் அரிப்பை தள்ளியே வைத்திருந்தேன். சமீபத்தில் சாருவின்
புத்தகங்கள் அனைத்தையும் வாங்கியபோது(மொத்தம் ஏழு புத்தகம், ஆயிரத்து சொச்சம் கொடுத்து ஏன்யா இந்த குப்பையெல்லாம் வாங்குறன்னு கேட்டாரு) அனைத்துப் பக்கங்களிலும் நம் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று படிக்க
ஆரம்பிக்கும் முன்னரே தீர்மானித்தேன். இல்லாவிட்டாலும் பல இடங்களில்
அடிக்கோடிடுவது தவிர்க்கவே முடியாத அளவு நன்றாக இருந்தது.
குறிப்பாக ராஸலீலா வாசிக்க ஆரம்பிக்கும்போது அழகிய நீல மசி பேனாவை
அடிக்கோடிட வாங்கினேன். இப்போது மை தீர்ந்துவிடுமோ என்று அச்சமாக
இருக்கிறது. இந்த புத்தகத்தின் இரண்டு பக்கங்களை வாசித்த உடன் அபிஅப்பாவின்
ப்ரசர் ஏறு மாறாக எகிறி விட்டதாக கேள்விப்பட்டேன். இன்னும் நூறுபக்கங்களே
உள்ளன படித்து முடிப்பதற்குள் இது ஒரு ரன்னிங் கமெண்ட்ரி போல. மிச்சமுள்ள
சில நூறு பக்கங்களை படிக்க வாயில் நுரை எல்லாம் தள்ளவில்லை என்றாலும்
இப்போது படித்துக்கொண்டிருக்கும் கண்ணாயிரம் பெருமாளின் ஆன்லைன் லீலைகள்
படிக்கும்போது பொறாமையாகவும் பலவிஷயங்கள் சலிப்பாகவும் இருக்கிறது.
ராஸலீலாவை விட கண்ணாயிரம் பெருமாளின் தபால் இலாகா அனுபவங்கள்தான்
மிகுந்த சுவாரசியமானது.
---
விகடனின் வரவேற்பறை மாதிரி சாருவும் படித்ததில் பிடித்தது என்று எழுதுகிறார்
அதிலே நம் சுந்தரின் காமக்கதைகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார் (இதிலே என்ன
ஆச்சரியப்பட இருக்குகிறது என்கிறீர்களா?) கண்டிப்பாக அன்றைக்கு அவரின் பக்கம்
பல்லாயிரக்கணக்கான ஹிட்டுக்கள் விழுந்து அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்.
ஏனென்றால் என்னுடைய பதிவும் ஒருமுறை விபத்தாக அவரின் வலைப்பூவில்
வந்து அன்று எதிர்பாராதவிதமாக ஆயிரக்கணக்கில் ஹிட்டி விட்டார்கள். விஷயம்
என்னவென்றால் அனைவரும் வந்தது சாருவின் பக்கத்திலிருந்து. இப்போது லக்கியும்
வாயைத்திறந்து அங்கேயே சொல்லிவிட்டார். நான் இங்கே சொல்கிறேன்.
பல விமர்சனங்களை படித்த பிறகு தசாவதாரம் மிகச்சிறந்த படம் என்று
கண்டுகொண்டேன். சாருவின் பக்கத்தில் இருந்து என் வலைப்பூவை படிக்க வந்த சிலர்
செருப்பால் அடிக்காத குறையாக திட்டி விட்டார்கள். இன்னும் சிலர் கணக்கு புதிர்
எல்லாம் சொல்லி செய்ய சொன்னார்கள். ஒரே அனானி பலமுக மன்னன் ஜோ மாதிரி
வந்து உறுமிவிட்டு போனார். மொத்தமாக எல்லா பின்னூட்டங்களையும் அழித்து
விட்டேன். கணிசமான பின்னூட்டங்கள் பதிவுக்கு ஆதரவாக வந்திருந்தன. அதனை
இட்ட நண்பர்களுக்கு நன்றிகள். வெளியிட முடியாமைக்கு வருத்தங்கள்.
எல்லாரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் தேவையில்லாமல் என்
பதிவு தெரியவேண்டாம் என்பதாலும் சில பின்னூட்டங்கள் தந்த மன உளைச்சலாலும்
அவற்றை வெளியிடவில்லை.
சப்ப மேட்டர் இத ஏண்டா எழுதினுகிறன்னு தோணுதா?
---
"திரிகெ ஞான் வருமென்ன வார்த்த கேள்கானாயி
க்ராமம் கொதிக்காணுண்டென்னம்"
அரபிக்கதா - சீனிவாசன்
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக கேட்டு ரசித்த ஒரு பாடல் மேற்கண்டது. அரபிக்கதா
படத்தில் ஜேசுதாஸ் பாடியது. தனிமையின் பல அவஸ்தைகளை பூதாகரமாக
உணர்த்தியது. சீனிவாசன் யாரென்று தெரியாதவர்கள் லேசா லேசா படத்தை நினைவுக்கு
கொண்டு வரவும். மிகச்சிறந்த திரைக்கதாசிரியர் & நடிகர். தனிமையில் உள்ளவர்கள்
உணர்வுப்பூர்வமாக ரசிக்க முடியும் பாடல். ஜேசுதாசின் குரலைப்பற்றி எழுத வார்த்தைகள்
இல்லை.
http://123musiq.com/Arabhikadha.htm இதுவும் வேலை சேய்யலன்னா யூடியூப்ல
arabhikatha, thirike njan என்ற வார்த்தைகளை போட்டு தேடினிங்கன்னா கிடைக்கும்
---
இப்பலாம் செக்ஸ் கதைகள், காம கதைக்கள், ஜட்டி கதைகள், பலான கதைகள் னு
நிறைய தலைப்புகள்ல சூடா தமிழ்மணத்துல பல பதிவுகள் வருது. நாமளும் அந்த
மாதிரி ஒரு கதை(?) துண்டு போட்டு காம புரட்சில இறங்கணும்னு ஐடியா வந்தது.
ஆனா காமத்த பத்தி பேசறவங்க எல்லாரும் காம காட்சில்லாக்கள், தப்பானவர்கள்
என்ற பொத்தாம்பொதுவான எண்ணம் இருப்பதாலும், ஒருவேளை நான் எழுதி
அதைப் படிப்பவர்கள் என் மேல் என்ன மாதிரியான அபிப்ராயம் கொள்வார்கள்
என்று டரியல் கொள்வதாலும் தோன்றும்போதெல்லாம் விட்டுவிடுவேன். இப்போது
தமிழ்மணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காம புரட்சி நடந்துகொண்டிருப்பதால்
நம்ம பிட்டையும் அதிலே கரைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொசுறு
பதிவு.
மக்களே தயவுசெய்து இந்த மேட்டர்லயும் எதாச்சும் தொடர் விளையாட்டு
வெச்சிடாதிங்க. நினைச்சாவே கிலியா இருக்கு.
இது எல்லாமே கதை என்று நினைத்தே படிக்கவும்.
முதல்கதை அன்பழகனுடையது. சுருட்டை முடி, குண்டு கன்னம், சிரித்தால்
கன்னத்தில் குழி விழும், இரும்பு போன்ற தேகமுடைய இளைஞன். இவனுக்கு
ஹாஸ்டலில் பட்டப்பெயர் வாய்க்கா மண்டையன். கேரம் ஆடுவதில் புலி. ரயில்பயணங்களில் வரும் கதாநாயகனைப்போல அடர்த்தியான முடிகளுடன்
சைடு வகிடு எடுத்து தலைவாரியிருப்பான் அதனாலே வாய்க்காமண்டையன்
என்று பெயர். இதுல என்னடா செக்ஸ் கதை இருக்குன்னு திட்டவேணாம்
ஹீரோவ பத்தி கொஞ்சமாச்சும் சொல்லணும்ல.
அதாகப்பட்டது கதையின் நாயகன் ஒருநாள் கேரம் ஆடிக்கொண்டிருந்தான்.
நல்ல உச்சிவெயிலின் ஞாயிறு மதியம். ஹாஸ்டலின் வராந்தாவில் டேபிள்
போட்டு விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று என்ன நினைத்தானோ
எழுந்து வேக வேகமாக செல்ல ஆரம்பித்தான். (முந்தின தினம் பெரம்பலூர்
சுவாமி திரையரங்கில் ஷகீலா படம் பார்த்தது இங்கே குறிப்பிடத்தக்கது. காலம்
என்னும் பெருவெள்ளத்தில் அந்த திரையரங்கமும் திருமண மண்டபம் ஆகிவிட்டதை
இப்போது அறிகிறேன்) ஒண்ணுக்கடிக்கதான் போகிறான் என்று நினைத்து சும்மா
இருந்தோம். ஆனால் அவன் புயலென புறப்பட்டு ஒரு வெறி வந்தவன் போல
கிளம்பியதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நான் அவன் அறியாமல்
அவன் பின்னே சென்றேன்.
பத்து குளியலறை, பத்து கழிப்பறை எதிரெதிரே இருக்க பக்கத்தில் நீண்ட
தண்ணீர் தொட்டி இருக்கும். அதிகாலையில் அந்த நீண்ட தண்ணீர் தொட்டியில்
தண்ணீர் கோரி கோரி ஒரு கூட்டம் குளிக்கும். சிறையில் கைதிகள் குளிப்பதற்கு
சமமாய் அந்த காட்சி இருக்கும்.
இது எதற்கு... கதைக்கு வருவோம்.
நாயகன் ஒவ்வொரு கழிவறையாய் திறந்து பார்த்து துர்நாற்றம் வீசவே மூடிக்கொண்டே
வந்தான். ஒரே ஒரு கழிவறை மட்டும் சுத்தமாய் இருந்தது. ஆனால் பரிதாபமாய்
அதன் தாழ்ப்பாள் பல்லிளித்துக் கொண்டு மூட முடியாமல் இருந்தது. ஒருகணம்
யோசித்துவிட்டு உள்ளே நுழைந்து ஒருகையால் கதவை பிடித்துக்கொண்டான்.
ஒருகையால் லுங்கியை தூக்கிவிட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
"ச்ச்சே இவன் இதுக்குதான் வந்தான் போலருக்கு என்று திரும்பபோனேன்"
கதவு ஒருவித தாளலயத்துடன் சீராக முன்னும் பின்னும் ஆட துவங்கியது அந்த கதவு.
அவன் அசைய அசைய முன் பின் அசைந்தது. சீராக அசைந்து கொண்டிருந்த கதவு
திடிரென்று வேகமெடுத்து அசைந்தது. தகரக்கதவின் கிரீச் கிரீச் சத்தம் மெதுவாக
உயர்ந்து, பின் சீறி பின் மெதுவாக தாழ்ந்து ஒரு கட்டத்தில் சத்தம் வருவது நின்றது.
"உஸ்ஸ் என்று நிம்மதியான பெருமூச்சென்று கிளம்பி வந்தது". தண்ணீர் குழாயை
திருகும் சப்தம். நாயகன் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தான். முகத்தில்
முத்து முத்தாக வியர்த்திருந்தது.
ஓடிப்போய் அன்பழகன் முன்னாடி நின்றேன். அவனின் முகம் களவாடி மாட்டிக்
கொண்டவனின் முகத்தைப்போல பீதியில் இருந்தது.
"மச்சான் நீ பாத்துட்டியாடா" ப்ளீஸ்டா யார்கிட்டயும் சொல்லிறாதடா என்று
கெஞ்சினான். அடுத்தநாள் கேரம் காயினுக்கு பதிலாக இவனைப்போட்டுதான் எல்லாரும்
விளையாடினார்கள்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். திடிரென்று அவனுக்கு தேவைப்பட்ட விஷயம்
அவனாகவே திருப்தியடைந்துகொண்டான். அவனாகவே தேடிக்கொண்டான். எவருக்கும்
எந்தவித தொந்தரவுமில்லாமல். ஆனால் சுயபோகத்தை செய்வது எத்தனை மானக்கேடான
சமாச்சாரம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.
அனேகமாக மாத்ருபூதத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே மிக அதிகபட்சமான
கேள்வியாக இதைத்தான் குறிப்பிட முடியும்? (லார்டு லபக்தாஸ் இல்லிங்க.)
அதை உறுதிசெய்வது போலவே சிவராஜ் சித்த வைத்தியக்காரர்களின் விளம்பரங்களும்
அமைந்துவிட்டன.
Friday, June 13, 2008
தசாவதாரம் - உலகத்தரமா?
வைத்திருப்பவர்கள் இந்த பதிவை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் அவரவர்
விருப்பம். இங்கு எனக்குத் தெரிந்தவகையில் மட்டுமே பார்வை இருக்கும்.
படத்தின் தயாரிப்புக்காலம் இரண்டரை ஆண்டுகள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய
விஷயம்தான். பத்தில் எட்டுப்பேருக்கு மாஸ்க் மாட்டிவிடவே அத்தனை நேரம் தகும்.
கமலை விட்டால் இந்த வேடங்களில் யாராலும் நடிக்கவே முடியாது, காரணம் படத்தின்
பெயர் தசாவதாரம். பத்து வேடங்களில் நடித்திருப்பதை எப்படி சாதனை என்று சொல்ல
முடியும்? நடித்தபிறகுதான் சாதனை செய்ய வாய்ப்புள்ளதா என்று தெரியும் இல்லையா
என்று தெரியும். படம் முடிந்துவெளிவரும் முன்னரே உலக சாதனை, உலகத்தின்
ஒரேநாயகன் என்ற அடைமொழிகளோடு சொன்னவர்கள் எல்லாரும் கமலைச் சுற்றி
உள்ள அடிப்பொடிகள். இதுவும் ஒரு மார்க்கெட் உத்தி என்றே கொள்க. சிவாஜி என்ற
குப்பைப் படத்திற்கு ஆன அளவுக்கு ஆகாமல் மாறுபட்டிருந்தது என்பது குறித்து
சந்தோஷம் கொள்வோம்.
உலகத்தரம் என்ற கூச்சலுக்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய
கட்டாயம். எங்கே அய்யா இந்தமாதிரி உலகத்தரமான படம் எடுக்கிறார்கள்? அதிக
பட்சமாக இந்தியத்தரம் என்று சொல்வதுகூட சற்று அதிகம். மேம்பட்ட தமிழ்நாட்டுத்
தரம் என்பது சரியாக இருக்கலாம்.
சந்தானபாரதி என்பவர் கமலின் உற்றநண்பர். இவர் நடித்த படங்களில் கதாநாயகியை
அத்துவானக்காட்டில், ஆற்றங்கரையோரம் கற்பழிப்பதுதான் இவரின் ஹைலைட்.
அதற்காக தசாவதாரத்தில் கூடவா மாற்றமே இல்லாமல் எடுப்பார்கள்?.
ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி சேகர், க்ரேஸி மோகன் ஆரம்பகால நாடகங்களில்
அவர்களின் மொக்கைக் கடி ஜோக்குக்காகவே பிரபலமானது. அந்த வகைக் காமெடியை
கமல் இன்னமும் வீழ்ந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார். இப்பொழுதுகூட எந்தக்
குழந்தை சொல்லும் கடிஜோக்குகளின் சரிபாதி இவர்களிடம் இருந்து சுட்டதாகத்தான்
இருக்கும்.
கொல்டி கமலின் வேடத்திற்கு அவ்வை சண்முகியின் முகத்தை எடுத்திருக்கிறார்கள்.
மற்ற அனைத்து வேடத்திற்கும் உடலைவிட தலை பூதாகரமாக பெரிதாக இருக்கிறது.
உதாரணம் வேண்டுமென்றால் விநாயகர் வேடமிட்டு வரும் தெருக்கூத்து நாடகங்களை
நினைவுக்கு கொண்டுவாருங்கள்.
உலகத்தையே அழிக்கும் அந்த கிருமி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளிருந்து கடைசி
காட்சி வரை உச்சபட்ச வெயில் நகரமாகிய சென்னையில்தான் உலாத்திக்கொண்டிருந்தது
ஆனால் அதற்கு கமலாக மனது வைத்தாலொழிய மோட்சமில்லை.
தயவுசெய்து உலகத்தரத்திற்கு எடுக்கிறேன் என்று கிளம்புபவர்கள் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாதீர்கள். அல்லது உலகத்தரம் என்ற லேபிளை உபயோகிக்காதீர்.
படத்தில் மொத்தமாக எனக்கு வெறுப்பு வந்த இடம் நாகேஷ் விபத்துக்குள்ளாகி
சாலையோரத்தில் பேசும் வசனங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பத்து வினாடிகளில்
சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கடிஜோக்குகள் சொல்கிறார். கொல்டிகமலும்
வந்து தன்பங்குக்கு இரண்டு கடிஜோக்குகள் சொல்கிறார்.
ஆங்கிலத்தில் ஹெல்பாய் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் அல்லது Shrek படத்தின்
எடிமர்பி குரல்கொடுத்திருக்கும் வேடத்திற்கும் கைப் உல்லா வேடத்திற்கும் குறைந்த
பட்சமாக எத்தனை வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும்? இவர் இவ்வளவு
உயரம் என்று காட்டுவதன் பின்னே எந்த அரசியல் உள்ளது. தமிழ்நாட்டில் வளரும்
முஸ்லிம்கள் இன்னமும் தமிழை இப்படித்தான் பேசுகின்றார்களா? கண்மண் தெரியாத
அளவுக்கா இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்? உயரமான கமல் பேசும்
தமிழும் அவ்தார்சிங் பேசும் தமிழும் எந்த விதத்தில் வேறுபட்டது?
புஷ் கேரக்டரிலிருந்து சிதம்பரம் 95 வயசு பாட்டிவரைக்கும் இவர் மட்டுமே செய்ய
வேண்டுமா? இதற்கு ஹாலிவுட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டுமா? ஈரானில்
இப்படி யாரும் வருவதில்லை. மொராக்கோ, செசன்ய குட்டிநாடுகள் எல்லாம்
இவ்விதம் உலகத்தரம் என்று நீட்டி முழக்கி படம் எடுக்கவில்லை. ஆனால் அவர்களின்
படம் உலகத்தரத்திற்கு சவால் விடும்படி உள்ளது.
கமலின் நம்பிக்கை என்னவென்றால் சிவாஜி என்ற படத்தையே வெற்றிப்படமாக்கியவர்கள்
தசாவதாரத்தை கொண்டாடுவார்கள் என்பதுதான்.
பெனாத்தல் அய்யா சொல்லியிருக்கிறார். அமெரிக்க வில்லன், புஷ், ஜப்பான் கமல்
என்று பலவேடங்கள் இருந்தாலும் உடல்மொழி பிரமாதமாக உள்ளது என. என்னுடைய
கணிப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால் கடைசிகாட்சியில் புஷ் மேடையில் குத்து
டான்ஸ் ஆடாத குறையாக மேடையில் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து
இடமாகவும் நடக்கும் அந்த காட்சியை பார்த்ததும் மொத்தமாக கலைந்துபோனது.
பழைய நாடங்கங்களில் பிரதான நாயகர்கள் ஒப்பனை செய்யும் நேரத்தில் திரையை
இழுத்து மூடாமல் பபூன் என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகரை உலவ விடுவர்
அதுபோலதான் அந்த புஷ் வேடம் நடந்து சென்றது. இதற்கு ஆர்ப்பரிக்கும் மக்கள்
வேறு!
உயரமான கமல், புஷ் வேடம், பாட்டி வேடம் போன்றவை எண்ணிக்கைக்கு
உதவியதே தவிர வேறென்ன செய்தது. இந்த படத்தால் தெரியவரும் செய்தி என்ன
என்றால் கமல் 100 பாத்திரங்களைக் கூட ஒரே படத்தில் செய்ய முடியும் அதைச்சுற்றி
ஜிகினா போல கதையை அமைத்து ஹாலிவுட் தரம் என்ற லேபிளையும் குத்த
முடியும் என்பதே!
படத்தின் இசையைப் பற்றி சொல்லவேண்டும். இசை இந்த படத்தில் என்ன செய்தது
என்பதை யாராவதுதான் சொல்லவேண்டும். போக்கிரி படப்பாடல் கூட இந்தகாலத்தில்
ஹிட் ஆவது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. பின்னணி இசை வேறு ஒருவர்.
அய்யா கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே! உங்களுக்கு இப்படத்தின் இயக்குனர் என்ற
பெயரே அதிகபட்சம். சுந்தர் சி க்கு அளிக்கப்பட்டதே அதைப்போல. அதற்காக எல்லாபடத்திலும் வருவதுபோல கருப்பு கண்ணாடி கருப்பு கோட்சூட்டுடன் காக்காய்வலிப்பு வந்தவரைப்போல ஏன் ஆடுகிறீர்? உலகத்தரமான இப்படத்தில் நீங்கள் எதற்கு? சற்று ஒதுங்கிதான் நில்லுங்களேன். அந்த ஐந்து நொடி நடனத்தில் என்ன சாதித்துவிட்டீர்?
கசப்பு மருந்தை சாப்பிட்டவுடன் இனிப்பை நம் மனது நாடும் அல்லவா! அதுபோல
மூன்றாம் பிறையின் இந்திப்பதிப்பான சத்மா வை பார்த்தேன். பாலுமகேந்திராவுக்கும்
கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
எவ்வளவு அழகான தெளிவான முகம்? மூன்றாம் பிறை முதல் அன்பே சிவம்
வரை தங்களது முகத்தில் சிறிய மாற்றத்தினைதான் காணமுடியும். அக்கால
இடைவெளி கூட தங்கள் உடல்கட்டினை பாதிக்கவில்லை. பத்து வேடம் செய்கிறேன்
இருபது வேடம் செய்கிறேன் என்று முகத்தில் ரசாயனத்தை அள்ளிப் பூசாதீர்கள்.
மாயாஜால தந்திரப்படங்களைப் பார்ப்பதுபோல உள்ளது. தங்களின் நடிப்பிலும்
மேலாக உங்கள் முகத்தை ரசிக்கிறேன்.
சிவாஜி படத்தை தொழில்நுட்பம், ஒப்பனை இல்லாமல் யாராவது அதே கதையை
பார்க்க தைரியம் உள்ளவர்கள் இருக்கிறார்களா? ரஜினி என்ற அவ்வளவு பெரிய
காந்தத்திற்கே இந்த நிலைமை. அடுத்த ரஜினி படத்துக்கு கூட இதே நிலைமைதான்
"ரோபோ" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஷங்கர் கூட்டத்தினர்
ராமநாராயணனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. தொழில்நுட்பத்தை பரிகாசம்
செய்பவர்கள் இவர்கள்.
படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும் "கடவுள் இருந்திருந்தா நல்லா இருக்கும்"
என்று. ரஜினியின் அரசியல் பிரவேச அறிக்கைகள் போல உள்ள காட்சி இது.
எதிர்ப்பாளாரகவோ, ஆதரிப்பவராகவோ நடிகர்கள் இருக்கவேண்டும் என்று நம்பும்
மனப்பான்மையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு போவதில் இந்த நடிகர்களுக்கு
அப்படி என்ன மயக்கமோ தெரியவில்லை. தமிழனும் தினம் தினம் அதற்காகவே
காத்துக்கொண்டிருக்கிறான். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். இன்னும் இருபது
வருடம் கழித்து விஜய் கூட தகுதி பெற்றுவிடுவார் என்று நம்புவோம்.
இவ்வளவு செய்திருக்கும் இந்தப்படத்தில் குறைகள் சொல்லவே மனது அஞ்சுகிறது.
காரணம் அத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது. மாறாக கமலின் வேடங்கள்
மனதுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க வில்லன் பாத்திரத்தைப்
பார்க்கும்போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. அவ்வளவு பெரிய தலையா
அமெரிக்கர்களுக்கு இருக்கிறது? எம்.ஜி.ஆர் காலத்தில் மச்சம் ஒன்றுதான் இரட்டை
வேடத்திற்கு மாற்றாக இருந்ததே! சமீபத்தில் வந்த அ.த.ம கூட அந்த விதிகளை
மீறாமல்தானே வந்திருக்கிறது. :)
நிஜமுகத்தை வைத்துக்கொண்டே நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் கமல். இந்த பொய்
முகங்களுடனான முகத்தில் உங்கள் நடிப்பை கடினத்துடன் தேட நேர்கிறது முடிவில்
சலிப்புதான் மிஞ்சுகிறது.
100 கோடி பட்ஜெட், வெளிநாட்டு ஒப்பனைக்கலைஞர்கள், ஹாலிவுட் தரம், மயிர்க்
கூச்செரியும் சண்டைக்காட்சிகள் இதெல்லாம் சலித்து விட்டன கமல். உங்களைச்சுற்றி
இருக்கும் "ஒலகநாயக" கோஷத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். புகழுக்காக,
வியாபாரத்துக்காக மூளையை மழுங்கடிக்கும் வித்தையை செய்ய பலர் இருக்கிறார்கள். இப்பொழுதுகூட உங்கள் படத்தினைக் காண எனது ஒரு முழுமாத ஊதியத்தைக் கூட தரத்தயாராக இருக்கிறேன். அதற்கேற்றார்போல உங்களது படங்களும் இருக்கட்டும்.
சன் டீவி, கலைஞர் டிவி டாப்டென்னில் முதலிடம் பெற விஜய், அஜித், சிம்பு
போன்றவர்கள் இருக்கிறார்கள்.
'நீ சொல்வதை ஏற்கவோ மறுக்கவோ எனக்கு உரிமையுண்டு,
ஆனால் அதை நீ சொல்வதற்கான சுதந்திரத்தை என்
உயிரைக்கொடுத்தேனும் பெற்றுத்தருவேன்" புனிதர்களின் தாக்குதலில் இருந்து
தப்பிப்பதற்கான டிஸ்கி அல்ல இது.
Wednesday, June 11, 2008
ஓலைப்பகோடாவும் மெக்டொவலும்
ஓலைப்பகோடா வேண்டும் அமுத்தலாக அடம்பிடித்தான். இந்த அரபு நாட்டிலே
அபூர்வமாக கிடைக்கும் ஓ.பகோடாவுக்கு எங்கு போவேன். கொஞ்சம் கூட
கருணையில்லாமல் கேட்கிறான் பட்டியிண்ட மொவன். இருந்தாலும் என்ன
பண்றது விருந்தாளியா வந்துவிட்டவனை இவ்விதம் வைவது நாயமில்லை.
போடா மயிறுன்னு சொல்லலாம்தான். மெக்டொவலுடன் எப்போதும் பிரதாப்
போத்தனுடன் கூட்டணி. "பொன்மாலை மேகங்களே என் இன்ப ராகங்களே"
தனியறையுடன் இப்பாட்டிருந்தால் சைட் டிஷ், ஊறுகாய்கூட இரண்டாம்
பட்சமே. இவனுக்கென்றால் ஓலைப்பகோடா வேண்டுமாம். எந்த நாதாறி
இவனுக்கு ஓ.ப வை அறிமுகப்படுத்தியிருக்க கூடும். "ஷோபாவைக் காட்டி
நல்ல பிகர் என்றான்". மதுவின் கூடலுடன் இசையை ரசிக்கத் தெரியாதவன்
என்ன மனிதனாக இருக்க முடியும். முன்கூட்டிய தீர்மானங்களுடன் ஒருவனை
எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனின் சுவாசித்தல் கூட
தவறாகப் படும். முன்பொரு முறை "வான் நிலா நிலா அல்ல" என்ற பாடலை
கேட்டுக்கொண்டிருக்கையில் பங்களாதேஷி பன்னாடையும் கேட்டுத்தொலைத்து
அவனுக்கு அந்த இசையும், குரலும் என்ன நினைவுகளைத் தூண்டியதோ
தெரியவில்லை. பிறகு தினமும் ஆறுமுறை அப்பாடலைக் கேட்டபடி இருந்தான்.
இதனால் எனக்கொன்றும் பாதகமில்லை என்றாலும் அப்பாடலுக்கான வரிகளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு சொன்னபோதுதான் எரிச்சலாக வந்தது.
மனதுக்குள்ளே வான்நிலா நிலா அல்ல வை எப்படி மொழிபெயர்க்கலாம் என்று
தோற்றேன். அத்தனை சாமர்த்தியம் எனக்கு கைவரவில்லை மாறாக எரிச்சலே
வந்தது. இசை வடிவத்தை எந்த மொழியாயினும் ஏற்றுக்கொண்டால் என்ன
குறைந்துவிடப்போகிறது. மையமாக சிரித்தபோதுகூட புரிந்துகொள்ளாமல்
எதிர்பார்ப்பவனை தொல்விலங்கின் மூர்க்கத்துடம் தெரியாது என்றபோது அலறி
விட்டான். பிறகு அவனும் அதே மூர்க்கத்துடன் தினமும் பாடலைக்கேட்டு
அட்சர சுத்தமாக பாடிக்காட்டினான். அதில் என்ன சந்தோஷம் அவனுக்கு இருக்க
முடியும் என்று தேட ஆசைதான்.
ஓ.ப வை இவன் மறந்திருப்பான் என்ற நினைக்கும்போது ஒரு சிரிப்பினூடே
மறுபடி நினைவூட்டினான். அவன் கோப்பையின் விளிம்பில் அளவில் சிறிய
கரப்பான் ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் திரவத்திலோ அல்லது
மேசையிலோ விழக்கூடும். எதோ ஒரு சுவாரசியம் தொற்றிக்கொள்ள கூர்ந்து
கவனிக்க ஆரம்பித்தேன். நினைத்ததுபோலவே திரவத்தினும் விழுந்தது. சிறிது
நேரம் தத்தளித்துப் பின் இறந்தது. பிடி சாபத்தைக் கொடுத்து அதை தூக்கி
வெளியெறிந்து பின் குழலினில் சரித்தான். என்னைவிட அவன் கரப்பானுடன்
சமாதானத்தை பெற்றிருக்கவேண்டும். அவனின் மனநிலை எனக்குக் கைவர
நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, வரவேண்டும். மாறாக அதனுடன் என்
வன்முறை அளவுக்கு மீறிப்போகிறது. ஆயுதங்களாக வாசித்துக்கொண்டிருக்கும்
புத்தகம், லைட்டர், செருப்பு, செய்தித்தாள் போன்றவற்றைக் கொண்டு மூர்க்கமாக
தாக்கத் துவங்கினேன். இப்படி செய்யும்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து
தொல்லையும் குறையும் என்று நினைத்தேன். ஆனால் எந்த மாற்றத்தையும்
இந்த வன்முறை தரவில்லை. அதன் இனப்பெருக்கும் எந்த விதத்திலும் தடை
படவில்லை.

கரப்பான் பூச்சியை பார்த்தாலே நம் சினிமா இயக்குனர்களின் கற்பனா சக்தியும்
ஞாபகம் வரும். நாயகியை அச்சுறுத்தும் ஆயுதமாக அது இருந்தது. பயத்துடன்
நாயகனை கட்டி அணைப்பாள். நாயகனுக்கு கரப்புகளிடம் துளியளவும் பயம்
இருக்காது. இதேபோலதான் மின்னல், ரவுடி, மற்ற விலங்குகளிடத்தும்.
இவைகள் தோன்றும்போதெல்லாம் நாயகனின் பின்பக்கமாகவோ அல்லது
முன்பக்கமாக இறுக்கமாக கண்களை மூடி கட்டியணைத்திருப்பாள்.
உங்கள் கால்விரல்களின் கடைசி விரலின் அளவில் பெரிய இரண்டு உணர்வுக்
கொம்புகளுடன் ஒளி பட்டு மினுங்கள் றெக்கையுடன் ஒரு அழகிய கரப்பான்
உங்கள் அழகிய உணவின் மீது கொம்புகளை ஆட்டி நர்த்தனம் ஆடும்போது
கோபம் வரவில்லையென்றால் நீங்கள் இலவம்பஞ்சு போன்றவர். எனக்கு
கொலைவெறியுடன் அதை வீழ்த்தவேண்டும் என்று தோன்றும். துரத்துவேன்
செருபாலே குறிபார்த்து அடிப்பேன் அது தவறும், கையில் கிடைப்பவையே
ஆயுதம் பெரும்பாலும் என்குறி தவறிவிடும். அதுவும் சாமர்த்தியமாக எதாவது
இடுக்களில் நுழைந்துகொண்டு என் கொலைவெறியை அதிகரிக்கச் செய்யும்.
இப்படித்தான் ஒருநாள் நெருக்கத்தில் இருந்த கரப்பானை அடிக்கும்போது
வெள்ளை நிற திரவம் ஒன்று தெறித்து வந்து உதட்டில் விழுந்தது. கரப்பானுக்கு
ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும் என்று சிறுவயதிலே படித்தது நினைவு
வந்தது. நாற்றமா, மணமா என்பதை உணர முடியவில்லை. அருவெறுப்பாக
வந்தது. அழுத்தமாக துடைத்துவிட்டும் மனம் ஆறவில்லை. நன்றாக கழுவி
பிரஷ் செய்தபின்பு புத்துணர்வு கிடைத்த மாதிரி தெரிந்தது. இப்படிதான்
படிப்படியாக என் வன்முறை அதிகரித்து இப்படி வந்து நிற்கிறது.
ஓ.ப கூட வேணாம். எதாச்சும் இருந்தா பரவால்ல. நேந்திரம் சிப்ஸ் கிடைக்கும்ல
என்று ஷோபாவின் மேல் கண்வைத்தபடி கேட்டான். ம்... வாங்கிட்டு வரேன்.
போதையில் எனக்கு நினைவுகள் என்றால் அவனுக்கு பெண்ணின் தேகங்கள்
கிளர்ச்சியினை தருகின்றன. ஒவ்வொருவரும் பலவிதம். தொழுகை நேர
கடையடைப்புக்கு முன்பாக நாஸர் கடைக்கு சென்றால் எதாவது கிட்டலாம்.
எதிரே சூடானிய சகோதரர்கள் சலாம் அலைக்கும் என்றார்கள். இவ்விரு சூடானிய
சகோதரர்களைக் கண்டால் பலவேடப் புகழ் இயக்குனர் ரவிக்குமாரின் மீது அலுப்பே
வராது. கனரக இயந்திரங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளிகள் இருவரும். மிகுந்த
உடல் உழைப்பு. பெரியவரின் முகம் துன்பியல் நாடகத்தின் முடிவு போலவும்
இளைய சகோதரனின் முகம் அதற்கு நேர்மாறாக இருக்கும்.
நாஸர் கடையில் ஓலைப்பகோடாவின் வடிவத்தை விவரிக்கும்போது அவர்
சிரித்துவிட்டார். வாங்கிக்கொண்டு திரும்பியபோது, வந்த விருந்தினன் மல்லாக
கவிழ்ந்திருந்தான்.
"பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே..
ஓடிக்கொண்டிருந்தது. என் கோப்பையில் அளவில் பெரிய கரப்பான் ஒன்று மடிந்துபோயிருந்தது. உண்மையில் நாய்களை விட கரப்பானுக்குத்தான் அதிக
மோப்பசக்தி இருக்க முடியும். காவல்துறையிடம் நாய்களை பறித்து விட்ட்டு
ஹைபிரிட் கரப்பான்களை உற்பத்தி செய்து பழக்கிக் கொடுக்கலாம்.
மணியடித்தது... போனில் டில்லி.
"இன்று என்ன நாள்னு கண்டுபுடி மச்சான்"
"தெர்லடா"
"முக்கியமான நாள்ரா, இதுகூட தெரியாம என்ன மயித்துக்கு நீ லவ்வு
பண்ற"
"என்ன எழவு நாள்ரா இன்னிக்கு சொல்லித்தொலயேண்டா"
"இன்னிக்கு பாவனா பொறந்தநாள்ரா மச்சான்"
"சரி வைய்யி.
இந்த பதிவு அனானி தீர்க்கதரிசிக்கு கொலைவெறியுடன் எழுதப்பட்டது.
Saturday, June 07, 2008
சில குறிப்புகள்.
கருத்து உள்ளது. அதாவது நம்ம ஊர்ல இப்படி சொல்வாங்க. "இவளே இவ்ளோ
அழகா இருக்கான்னா இவ தங்கச்சி எப்படி இருப்பா" என்று. அதையே பட்டான்கள்
மாற்றி "இவளே இவ்ளோ அழகா இருந்தான்னா இவ தம்பி செமையா இருப்பான்"
என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து உண்மைதான். ஓரினச்சேர்க்கை விஷயத்தில்
கராராக இருப்பவர்கள் இவர்கள். வம்ச விருத்திக்கு மட்டுமே பெண்ணை நாடும்
குணம் உள்ளவர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாங்கள் தங்கி இருக்கும்
இடத்தில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பிலிப்பினோ திருநங்கைகள் மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். பிலிப்பைன் நாட்டில் மட்டுமே இவ்வித குறைபாடுகள்
கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியாக
நூற்றுக்கு மூன்றுபேர் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் விடுதியில் பட்டான்
என்ற பாகிஸ்தானிய ட்ரைவர்கள் அதிகம் பேர். கனரக வாகனங்கள் ஓட்ட அவர்களை
விட்டால் சிறந்த இனம் ஒன்று இல்லை. இந்த பிலிப்பினோக்கள் மூவரும் வெளியில்
செல்லும்போதோ, வரும்போதோ இவர்களை விழுங்கும் தாபத்தோடு அனேக
பட்டான்கள் நோக்குவர். முதுகின் கீழ் துளைப்பது போன்ற பார்வை பின் எதாவது
கமெண்ட் அடிப்பது. அதில் எரிக் என்பவர் மட்டும் என் நண்பர். "இந்தியர்களாவது
போகும்போதும் வரும்போதும் கிண்டல் மட்டும்தான் செய்வார்கள். படான்களோ
ஒருபடி மேலேபோய் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தனிமனித
சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஆதியினம் என்பார் அந்த
நண்பர். அவர் சொல்வதும் சரியே.
லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியினை காண
நேர்ந்தவுடன் நம் இந்தியச்சமூகம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது.
----
சென்ற வார குமுதம் இணையப் பதிப்பை பார்த்தவர்கள் பலருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்
ஆவேசம் கிலேசம்னு நிறைய வந்திருக்கலாம். ஆனால் எனக்கு குஜாலாக இருந்தது
மேலும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்து மேட்டர் சொன்னேன்.
அவர்களும் குஜாலாக பார்த்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். மேட்டர்
என்னன்னா குமுதம் பெண்கள் சிறப்புப் பகுதியில் சேலை கட்டுவது எப்படி
என்று விவரணப்படம் போட்டிருந்தார்கள். விவரணப்படம் என்றால் விலாவாரியாக
என்று கொள்க. சவுகார்ப்பேட்டை ஆண்டி ஒன்று சேலை கட்டுவதை ஒளிவுமறைவு
இல்லாமல் கவர் செய்திருந்தார்கள். பெண்கள் சிறப்புப் பகுதியில புடவை கட்ட
சொல்லித்தரும் அளவுக்கு வந்தாச்சு போல. ஆனாலும் விவரணப்படம் சகிலாவுக்கே
சவால் விடும் தரத்திற்கு இருந்தது. வாழ்க வளர்க. அடுத்தவாரம் ஜட்டி போடுவது
எப்படி என்று சொல்லித்தருவாங்களா என்று அய்யனார் கேட்டார். அடப்ப்ப்பாவி...
இதுகூடுமா தெரியாது...
----
திரும்பத் திரும்ப புத்தகங்களை சிலாகித்துப்பேசுவது எனக்கே சலிப்பைத் தருகிறது
என்றாலும் வாசிப்பதை நிறுத்துவதில்லை. அதைப்பற்றி பேசுவதையும் நிறுத்துவதில்லை
அய்யனாரிடமிருந்து பறித்து வந்த "ஆதண்டார் கோயில் குதிரை" என்ற சிறுகதைத்
தொகுப்பை வாசித்தேன். முன்பே கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" என்ற
தொகுப்பை வாசித்து பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இந்த நூலிலும் தமிழின்
தரமான சிறுகதைகள் என்று நேர்மையாக சொல்லக்கூடிய கதைகள் இருக்கின்றன.
சிறந்த படைப்பாளன் என்பவன் தான் வாழ்ந்த சூழ்நிலையை, மக்களை, அவர்களின்
மொழியை, வட்டார வழக்கத்தை நியாயமாக பதிவிப்பவனே நேர்மையான படைப்பாளன்.
அந்த வகையில் கண்மணி குணசேகரன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
என் வாசிப்பு தளத்தில் நாஞ்சில் நாடனுக்குப் பிறகு வட்டாரவழக்கிலான படைப்புக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படைப்பாளி.
மருதாணி என்பதை எங்கள் ஊரில் "அழவான" என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட
கொத்தடிமையைப் போல மாடுமேய்த்து, சாணியள்ளி, தொழுவம் பெருக்கி என
எல்லா வேலைகளையும் செய்யும் சிறுவனின் உலகம் என ஆரம்பித்து அவனின்
அழவான வைத்துக்கொள்ளும் ஆசையினையும் அதைவிட அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன். அதற்காக அழவான செடியைத் தேடுகிறான். மிகுந்த தேடலுக்குப்பின்
அழவானையை கண்டு பெரும்பயத்தினூடே பறிக்கிறான். மறுநாள் அதிகாலையிலே
வருமாறும் "மாட்டை பொலிபோட" வேண்டும் என்று பலமுறை எச்சரித்து
சொல்கிறாள் சொந்தக்காரி. மருதாணி வாசம் முகரும் ஆர்வத்துடன் அக்காவிடம்
அரைக்கச்சொல்லி வைத்துக்கொள்கிறான். மறுநாள் சூரியன் சூத்தாமட்டையில்
அடிக்கும்போதுதான் விழிப்பு வருகிறது கூடவே முந்தின தினம் எச்சரிக்கை
செய்ததும் நினைவு வர உதறி விட்டு ஓடுகிறான். அவள் இவனைக் கண்டபடி
ஏசுகிறாள் மிகுந்த அச்சத்துடன் சாணி அள்ளி எருக்குழியில் போடுகிறான். திடீரென
கை உதறிக்கொண்டு அழவான வாசனையை முகரும் தன் ஆசையை அவனே
அறியாமல் மூக்கருகே கோண்டு செல்கிறான். சாணி நாத்தம்தான் அடித்தது.
வாசம் என்ற கதையும் அழகாக இதனை பதிவித்திருந்தார். ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத அத்தனை கதைகளும் ஒருகிராமத்தின் வெவ்வேறு தளங்களில்
இயங்குகிறது.
----

சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் "RAY" என்ற படம். டைட்டில் இசைக்காக
மறுபடியும் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. படம் முழுக்க இசைதான்.
கண்தெரியாத ஒரு இசைமேதையின் வரலாற்றை சொல்லும் படம். வாய்ப்புக்
கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் வருவதுபோன்ற அற்புதமாக ப்ளாஷ்பேக்
காட்சிகள் வேறெந்தப்படத்திலும் கண்டதில்லை. ஒவ்வொரு ப்ரேமும் ஒரு
கவிதை. உண்மைக்கதை என்று போட்டிருக்கிறார்கள். ஒரு இசைக்கலைஞனின்
மிகச்சிறந்த பதிவு.
----
தமிழ்மணக்கவுஞ்சர்கள் கவிதை எழுதி வன்முறை செய்வதை தடுக்கும் விதமாக
அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளதா
என அடர்கானகப்புலி என்னிடம் கேட்டது, மேலும் இல்லையென்றால் எப்பாடுபட்டாவது
ஒரு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்று துயரத்துடன் விம்மியபடி
கிட்டத்தட்ட அழுதபடி சொன்னார். மிகச்சிறிய அளவில் வன்முறை செய்தவன்
என்ற வகையில் கடக்கவேண்டிய தூரம் அதிகமிருப்பதால் இதில் கருத்துச்சொல்ல
ஈரிழைத் துவர்த்து அளவுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை.
ஆகவே தமிழ்மணக்கவுஞ்சர்கள் வன்முறையின் உச்சம் தொட்டு அடர்கானகப்புலியின்
படைப்புச்சுதந்திரத்திற்க்கு எதிரான அதிகார மய்யத்தினை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டு
சிறந்த வன்முறைக்கவுஞ்சராக வைகை ராம் அவர்களையும் அவரின் கவுஜையை
பதிவிக்கிறேன்.
பெருவெளியின் காட்சியடைய
சாளரம் வழியும் எரிதழலின்
நிறமடைகிறது எனது அறை...
உந்தன் முதன்முறை வருகையை போலே...
Monday, May 26, 2008
அங்கே இப்ப என்ன நேரம்
மென்நூல் கோப்புகள் கண்டேன். முன்பே சுஜாதா தொடங்கி ஜெயமோகன், தமிழில்
லினக்ஸ், ஜாவா வரை பலகோப்புகள் சேமித்து வைத்திருந்தாலும் நான்காவது கொலை
தவிர்த்து மற்ற எதையும் முழுதாக வாசிக்கவில்லை. நா.கொ கூட நகைச்சுவைக்காக
படித்தது. அதை வாசிக்கும்போது அலுவலகத்தில் எவ்வளவு கட்டுப்படுத்தியும் பலர்
முன்னிலையில் காரணமில்லாமல் சிரித்தது கூட நினைவுக்கு வருகிறது. இறுக்கமான
அலுவலக சூழலை இந்த நகைச்சுவை எழுத்துக்கள் எளிதாக்கிவிட்டன. திரையில்
கண்கொட்டாமல் வாசித்துக்கொண்டிருக்கும்போது யாராவது தொலைபேசியில்
அழைத்தாலோ, அருகிலே நின்று எதாவது கேள்வி கேட்டாலோ தன்னிச்சையாக
தமிழிலே பதில் அளித்திருக்கிறேன். கேட்பவர் "ங்கே" என்று முழிப்பது கண்டு இயல்புநிலைக்கு திரும்பவேண்டும். இதற்காகவே நான் அலுவலகத்தில் தமிழ்மணம்
தவிர்த்து எதையும் வாசிப்பதில்லை.
"அப்ஸராவுக்கு இரண்டு வயது.
ஏற்கனவே பழக்கமான மெட்டுக்கு தன்னுடைய
சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடுகிறாள்.
நேற்று சந்திரனைப் பற்றிய ஒரு
பாடல் செய்தாள்.
அந்தப் பாடலில் நானும் இருந்தேன்.
அதுபோல ஒரு கவிதையை
என் வாழ்நாளில் கேட்டதில்லை.
அதுபோல ஒரு பரிசைப் பெற்றதுமில்லை.
இந்த புத்தகம் அப்ஸராவுக்கு"
இந்த ஆரம்ப வரிகளே என்னை படிக்கத் தூண்டியது.
எப்போது வீட்டுக்கு தொலைபேசினாலும் அம்மா தவறாமல் கேட்கும் முதல் கேள்வி
அங்க இப்ப என்னடா நேரம் என்பதுதான். சலிக்காமல் நானும் பதில் சொல்வதை
இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
எதிர்பாராத நிகழ்வுகள்தான் ஆச்சரியத்தை அளிக்கும். அதேபோல அ.முத்துலிங்கம்
அவர்களின் "அங்கே இப்ப என்ன நேரம்" என்ற கட்டுரைத் தொகுப்பை வாசிக்க
ஆரம்பித்ததும் சுற்றம் மறந்து போனது. முன்பு நாஞ்சில் நாடனின் கட்டுரைத்
தொகுப்பைப் பற்றி எழுதியபோது குறிப்பிட்ட ஆனால் சற்றே வித்தியாசமான
மொழி அழகில் படைப்பட்டதுதான் "அங்கே இப்ப என்ன நேரம். 343 பக்கங்கள்
கொண்ட இந்த பி.டி.எப் வடிவ புத்தகத்தை இரண்டே அமர்வில் வாசித்துமுடித்தது
உச்சகட்ட சாதனை. படித்து முடித்த இரண்டு நாட்களுக்கு என் கண்கள்
விஜயகாந்த் படத்தின் இறுதி சண்டைக்காட்சியின் போது அவர் கண் எப்படி
இருக்குமோ அதுபோல ஆகிவிட்டது.
பொதுவாக ஈழத்து எழுத்துக்களை இதற்கு முன்பு இணையத்தில் பல இடங்களில்
படித்தாலும் சில வார்த்தைகள்(இந்த சில என்பது கணிசமாக தேறும்)விளங்குவதில்லை
அதனால் வாசிக்க சோம்பல் படுவதுண்டு. உதாரணத்திற்கு கீழே சில வார்த்தைகள். இவற்றிற்கு ஓரளவு நானே அர்த்தப்படுத்திக்கொண்டாலும் உண்மையான அர்த்தம்
வேறாக இருக்கலாம்.
சிருங்காரநாரி - இடுப்புன்னு நினைக்கிறேன்
சீமைக்கிளுவை - முள்ளா இருக்குமோ?
கதிரை - நாற்காலி, முக்காலி, இருக்கை, மேசை இதுல எதோ ஒண்ணுதான்
சொண்டு - உதடு (இது மட்டும் சரியா தெரியும்)
றாத்தல்
அப்பியாசக்கொப்பி
வாங்கு
வலகம்ப்பாகு
இவையெல்லாம் எழுதி வைத்த வார்த்தைகள் மட்டுமே. எழுதாத வார்த்தைகளை
எலிக்குட்டி கொண்டு மேலும் கீழும் சறுக்கி கண்டுபிடிக்க முனைந்து பின் சலித்து
விட்டுவிட்டேன். ஈழத்தில் மட்டும் புழங்கும் வார்த்தைகளை இதற்கு முன் எவராவது
வலையில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தால் அங்கு சென்று
பார்த்துக் கொள்ளலாம். இல்லாதபட்சத்தில் நண்பர்கள் முயற்சி செய்யலாம்.
பல்வேறு நாடுகளில் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்த ஒருவருக்கு புத்தகம் மட்டுமே
தனிமையை போக்க உதவியிருக்கும். அவர் படித்த, பார்த்த, அனுபவித்த உலகத்தை
இந்த 343 பக்கங்களில் அற்புதமான மொழியினால் வடித்திருக்கிறார். வெளிநாட்டின்
சூழலை வாசிக்கிறோம் என்று தோன்றச்செய்யாத எழுத்து. மிகவும் வியப்பது
இவரின் நகைச்சுவை. சுஜாதாவின் எள்ளலும் நாஞ்சிலின் மொழியும் இணைந்த
கலவையான புதுவடிவம்.
கனடாவில் கடன் என்ற முதல் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கும்போது ஏற்பட்ட
புன்சிரிப்புடன் கடைசிவரை படிக்க முடிந்தது. கனடாவில் கடன் அட்டை இல்லாமல்
பொருள் வாங்குவது கடினம். அந்த கடன் அட்டைகளைப்பற்றிய இவரின்
நகைச்சுவையை ரசிக்காமல் இருப்பவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று
சொல்லலாம். கீழே இருப்பதை படித்துப்பாருங்கள்.
பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு.
இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட
வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வியடைந்து
கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பக்கப்பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த
நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்புக்
கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு
வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.
எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து
சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன்
அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சரித்திரத்தை
படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும்
கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல் கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கிலோமீட்டர் ஓடும் சிக்கனமான
ஒரு கார் வாங்கியிருக்கிறேன் அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும்
மாத வருமானத்தில் 1% குறைவான பாலில்,கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும் ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறேன். அதைக்கூட
தாங்கள் பார்க்கலாம். உணவிலும் பங்கு கொள்ளலாம்.
ஆனால் துரதிர்ஷடவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை.
எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை
கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த
இலக்கை அடைந்து விடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும்
முக்கியம் என்று எனக்கு படுகிறது.
தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என்
கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக்காட்டுவேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையான, கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்...
அங்கதம், பகிடி போன்ற குறிச்சொற்கள் கொண்டு விளங்க வைக்காமல் நேரடியான
நகைச்சுவை எழுத்து. அனுபவத்தை எழுத்தாக்கும்போது இருக்கும் அனுகூலமே
படிப்பவர் தன்னையும் எழுத்தோடு இணைத்துக்கொள்வதாகதான் இருக்க முடியும்.
நகைச்சுவை மாத்திரமன்றி குடும்ப உறவுகள், பாசம், நட்பு, ஆங்கில இலக்கியம்
மொழிபெயர்ப்பு, ரசனை, பயணம், விமர்சனம் என்று மொத்தம் 48 கட்டுரைகள்
அத்தனையும் ரசித்து வாசிக்கலாம்.
இத்தனை சுவாரசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் எப்படி எழுத முடிகிறது என்று
ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல மொழி
பெயர்ப்பிலும் மிகச்சிறந்த கதாசிரியர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளது அவரின்
பரந்த வாசிப்பனுபவத்தை காட்டுகிறது. ஒருவர் சிறந்த வாசகராக இருக்கலாம்,
சிறந்த எழுத்தாளராகவும் இருக்கலாம். வெற்றுமொழியை அதன் உலகத்தோடு
நமக்கு காட்சிப்படுத்துவது ஒரு கலை. ஆண்டன் செக்காவின் "வேட்டைக்காரன்"
மிகச்சிறந்த சிறுகதை. வாசித்தபின்பும் மனதை விட்டு விலகவில்லை. கடந்த
பதினைந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதை ஜெயமோகனின்
"வலை" என்ற சிறுகதையை குறிப்பிட்டிருந்தார். இது சிறந்த சிறுகதைதான்
மிகச்சிறந்த சிறுகதையா என்று தெரியவில்லை. ஜெமோவின் "திசைகளின் நடுவே"
சிறுகதைத் தொகுப்பில் "வலை" படித்தபோது திகைத்தது உண்மைதான்.
றோராபோரா சமையல்காரன்
பெஷாவரில் பணியாற்றியபோது பாகிஸ்தானிகளிடம் ஏமாந்த அனுபவங்கள். சமையல்
செய்ய ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த குலாம் என்பவர் தாம் இருபதுவ்
வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தன் பணி அனுபவ காகிகத்தை இவர் முன்
நீட்டுகிறார். எட்டு மடிப்புகளாக பிரிந்த அந்த காகிதத்தில் பின்வருமாறு ஆங்கிலத்தில்
இருந்தது. இருபது வருடங்களாக தன்வசமிருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதி
உள்ளது என்பதுகூட அறியாமல் இருந்திருக்கிறார்.
"To whom it may concern" இதனால் சகலமானவருக்கு அறியத்தருவது
"இந்தக்கடிதத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் "குலாம் முகம்மது நிஸாருதீன்"
உங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்று அர்த்தம். இவர் என்னிடம்
இரண்டு வருடகாலம் சமையல்காரராக வேலை பார்த்தார். இவருக்கு சமைக்க
தெரியாது. மிகவும் நல்லவர். மற்ற என்ன வேலை கொடுத்தாலும் செய்வார் என்றே
நினைக்கிறேன்".
"வில்பிரட் ஸ்மித்"
ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் மாயஜால புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை
படித்த உணர்வு.
பி.கு: கனநாட்களாக அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை இருக்கிறது என்றால் அது "கொழுவி" என்ற வார்த்தைதான். அந்த வார்த்தையும் நூலில் இடம் பெற்று
இருக்கிறது. ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும்... அசல் அர்த்தம் தெரியவில்லை.
அண்ணாச்சியும் மீனாவும் பின்ன சிலதும்
விழாவினை அபுதாபியில் நடத்தினார்கள். விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் எண்ணத்தில்
நடிகை மீனாவினைக் கொண்டு புற்றுநோய் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மீனாவுக்கு கலைத்தொழிலில் சிறப்பாக செயல்
பட்டமைக்காகவும் விருது வழங்கி கவுரவித்தார்கள்.
"டேய் ஒரு விழா இருக்கு வர்றியாடே" ன்னு அண்ணாச்சி போனவாரம் கேட்டார்.
வெள்ளிக்கிழமை கடவுளே பாலைவனத்துல வந்து வேலை செய்யுன்னு சொன்னாலும்
நம்ம செய்யறது கிடையாது. இருந்தாலும் பஸ், டாக்சி புடிச்சி ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு போறதும் ஒரு வேலைதானன்னு சோம்பேறித்தனம் மேலிட்டதால் "எத்தனை மணிக்கு விழா நடத்துறாங்க" என்றேன்.
சாயங்கலாம்தாண்டேன்னு சொன்னார். பெருசா வெட்டி முறிக்கற வேலை
இல்லன்னாலும் பில்டப் விடலன்னா நம்பவே மாட்டாங்கல்ல. விழாவுக்கு போக
முக்கியமான காரணியாக இருந்தது. அமீதா ஆண்ட்டி. (அரங்கத்தில் உள்ளவர்கள்
நமீதா என்றே அழைத்தனர்.)
ஒரு இடத்திற்கு தெளிவாக செல்லவேண்டும் என்றால் அண்ணாச்சியிடம் வழி
கேட்கவோ/சொல்லவோ கூடாது என்பதை எனக்கு இரண்டாவது முறையாக புரிய
வைத்தார்.
மறுபடியும் சரியான இடத்தை டாக்சி மூலம் அடைந்தேன். அரங்கின் வாயிலில்
காத்திருக்க அண்ணாச்சி வந்து உள்ளே கூட்டிப்போனார். நடிகைகள் ஒப்பனை இடும்
அறைக்கு நேராக அழைத்துப்போனார். அங்கே அமீதா வர்ணனை ஒத்திகை பார்த்துக்
கொண்டிருந்தார். இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே வேண்டும்.
அமீதாவும் அண்ணாச்சியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்ததுபோல
பேசிக்கொண்டிருந்தனர். நடுநடுவே மேஜர் கரகர சுந்தர்ராஜனின் புத்திரர் கரகர கவுதம்
வந்து போய்க்கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளால் அண்ணாச்சி இரண்டு நாளாக
சாப்பிடவில்லை போலும். அதை அவர் வெளிப்படுத்தியபோது சரவணபவன் அளவு
சாப்பாடு ஒன்றை அமீதா எடுத்து நீட்ட அவர் ஐந்தே வினாடிகளில் அனைத்தையும்
காலிபண்ணினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னை அப்பளம் சாப்பிடக்கூட
சொல்லவில்லை.
பின்பு பாட்டுக்குப் பாட்டு புகழ் B.H.அப்துல் ஹமீத் அறைக்கு அழைத்துச்சென்றார்.
மைக்கில் பேசுவதை விட என்ன அழகான குரல்வளம் அவருக்கு. அவரிடம்
வழக்கம்போல என்னைக்காட்டி இவர்தான் கவிஞர் கம் எழுத்தாளர் தம்பிகதிர்
என்று அறிமுக்கப்படுத்தி கொலைவெறியை தீர்த்துக்கொண்டார்.
"கவிதையெல்லாம் இயற்றுவீர்களா கதிர்"? என்று B.H.அப்துல் ஹமீத் என்னைப்பார்த்து கேட்டதும் "ங்கே" என்று முழித்து இல்லிங்க சார் என்று பதில் அளித்தேன்.
பிறகு வாயைத் திறக்கவேயில்லை.
சிறப்பு விருந்தினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக மேடை ஏறி
அமர்ந்தனர். மீனாவின் அருகில் ஒரு அரபி உட்கார்ந்தவுடன் அரங்கமே அதிரும்படி
ஓ போட்டனர். மீனா புத்தகம் வெளியிட ஒரு ஒரு அரபி பெற்றுக்கொண்டார்.
அதற்கு முன்னதாக ஒருநூறு குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பல்வேறு பாடல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க நடனமாடினார்கள்.
பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்.
சுவாரசியமாகவே இருந்தது. மார்கழி மாத கச்சேரிகளில் முன் வரிசை ரிட்டையர்டு
பெருசுகளுக்கு இணையாக தாளம்போட்டபடி பாடல்களை ரசித்தார் அண்ணாச்சி.
பழைய படத்தின் பாடல் பாடி முடிக்கும்போதெல்லாம் பாடல் இடம்பெற்ற படத்தின்
பெயர் மற்றும் இசையமைப்பாளர், பாடியவர் என்று அனைத்து தகவல்களையும்
திரு.அப்துல் கூறும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மேம்ப்பட்ட
தரவுத்தள சில்லுகளை மூளையில் பதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
சிறப்பாக பாடிய பெண்ணுக்கு முதல் பரிசளித்தனர். சிறந்த பாடல்களை தேர்வுசெய்த
அவர் சிறந்த குரலையும் வெளிப்படுத்தினார். மறக்காமல் அவரை சந்தித்து
பாராட்டினோம்.
நடுவராக பங்கேற்ற அண்ணாச்சிக்கு மீனா நினைவுக்கோப்பை வழங்கினார். அதை
பெறும்போது "உங்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே உள்ளது" என்று
மீனா சொன்னாராம். எங்கள் காதுகள்தான் அதைக்கேட்க கொடுத்து வைக்கவில்லை.
பிறகு ராஜ், விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பெண்களை பிழிந்து
நடிக்கும் நடிக நடிகையர் நடனம் ஆரம்பித்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்போது அற்புதமான வரிகளைக்
கொண்ட பாடல்களை பாடும்போதெல்லாம் மகிழ்ந்து பாராட்டிய அப்துல் அவர்கள்
தற்போது வெளிவரும் பாடல்களின் வார்த்தைகளையும் ஒரு பிடி பிடித்தார்.
வாடி, வாடா, நாயே, பிசாசு, போன்ற வார்த்தைகள் இடம்பெறும் பாடல்தான்
ரசிக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும்
ஏ ஆத்தா ரீமிக்ஸ், வாடி கப்பக்கெழங்கு, லூசுப்பொண்ணு, போன்ற புகழ்பெற்ற
பாடல்களுக்கு சின்னத்திரை சீக்காளிகள் நடனம் ஆடினார்கள்.ஆடி முடிந்ததும் ரசிகர்கள்
ஓடோடி வந்து ராஜ்காந்த், டவுசர்காந்த், விருச்சகாந்த் முதலான ஆட்களிடம்
ஆட்டோகிராப், போட்டோகிராப் என்று அவர்களை மகிழ்வித்தனர். பிறகு அப்துல்
அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அண்ணாச்சி காரில் (சொந்தக்கார்) நான், B.H, ஜீவராஜ் என்ற இசையமைப்பாளர்
(கின்னஸ் என்ற படத்துக்கு இசையமைக்கிறாராம்) வந்தோம்.
மகாராஜாவின் ரயில்வண்டி, மரப்பசு, நாளை மற்றும் ஒரு நாளே, யூமா வாசுகியின்
ரத்த உறவு போன்ற புத்தகங்களை பரிசளித்தார்.
இனிமையாக சென்றது வெள்ளிக்கிழமையின் மாலை.
***
குருவியின் மகத்துவம் அறிய குறுந்தகடு சொல்லி பலநாள் கழித்து கிடைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அன்பர் அறைக்குள் வந்தார். தான் குருவி
படம் நேற்று திரையரங்கில் பார்த்ததாகவும் அருமையான படம் என்றார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்டு குருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவரும்
பார்த்துக்கொண்டிருந்தார். பத்துநிமிடம் கழித்து இது என்ன புதுபடமா என்று கேட்டு
என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
***
எலக்கிய பில்டப் கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டும் எவரும் என்னை எலக்கியவாதி
என்று ஒத்துக்கொள்ளவில்லை. கட்டக்கடைசியாக அபிஅப்பா மட்டும் என்னை
எலக்கியவாதி என்று சொல்லி எலக்கிய கலாய்ச்சல் பதிவுபோட்டார். அந்த பதிவு
எழுத கழிவரையில் அரைமணிக்கும் மேலாக உட்கார்ந்துகொண்டு யோசித்ததாக
கூறினார். ஏன் கழிவறையில் உட்கார்ந்துகொண்டு எழுதவேண்டும் என்று கேட்டபோது
அதிஉன்னதமான, அவருக்கே உரிய அதிபுத்திசாலித்தனத்துடான் பதிலளித்தார்.
அதாவது புனைவு எழுத உலகில் கழிவறையை விட சிறந்த இடம் வேறு எதுவும்
இல்லை என்று சொன்னார்.
ஏன் அய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்டால். அது அப்படித்தான் எலக்கியவாதின்னா
டாஸ்மாக்ல சரக்கடித்துவிட்டு சண்டை போடணும், எவனையாச்சும் திட்டனும்
கெட்ட வார்த்தைல நாவல் எழுதணும் என்று அடுக்கிக்கொண்டே சென்றார். எனக்கு
டவுசர் கிழிந்தது, தாவூ தீர்ந்தது. இவ்வளவு சிறப்பான அறிவைக்கொண்டே அவர்
கழிவறையிலேயே குடியிருந்து மேலும் மேலும் புனைவு எழுத என்னாலான உதவியை
செய்யவேண்டும். அவருடைய தாகத்தை தீர்க்கவேண்டும்.
***
பை த பை ப்ளைட்டை மிஸ் பண்ணாமல் அய்யனார் அமீரக கரையோரம் வந்து
சேர்ந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ட்ரீட்டு எப்பய்யா?
*விழா தொடர்பான புகைப்படங்கள் நாளை வெளியிடப்படும்.
Sunday, May 18, 2008
மொக்கை ரிட்டர்ன்ஸ்
சில பாடல்கள், வசனங்கள் தவிர்த்திருந்தால் சிறந்த படமாக இருந்திருக்கும்.
சினிமாவுக்கென்றே பல இயக்குனர்கள் சவுகார்பேட்டை சேட்டுகளிடமிருந்து கடன்
வாங்கி வந்து வைத்துக்கொள்வார்கள். நா சுலுக்கெடுத்துக்கொள்ளும் வகையில்
பெயர்கள் இருக்கும் அவர்களைப் போல் அல்லாம் மாரிமுத்து என்ற தன் பெயருடன்
எதையும் சேர்க்காமல் தன் பெயரை வெளியிட்ட இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு கவிதையே படத்தின் மையக்கருவாக இருந்தது பலரை கவர்ந்திருக்கும். ஒரே
எழுத்துக்களுடன் ஒரே வார்த்தைகளில் இருவேறு நபர்கள் எழுதுவதென்பது சாத்தியம்
இல்லை எனினும் அதையும் மீறி கதைசொல்லி இருக்கிறார் மாரிமுத்து. படம்
முழுக்க பச்சையை அள்ளித் தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். என்னைப் போன்ற
பாலைவன ஆசாமிகளுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நீண்ட காலமாக எனக்கு ஒரு
சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழ்சினிமாவில்
நடிக்கும் தகுதியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா? இல்லை அழகான பெண்கள்
யாரும் இல்லையா? எல்லா படத்திலும் வெளிமாநில பெண்கள் நடித்துக்கொண்டேஏஏ
இருக்கிறார்கள். இது சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இல்லை என்றாலும் இங்கே
யாருமே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
உதாரணத்திற்கு இப்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்களை எடுத்துக்
கொள்ளுங்கள், மலபார் மால்களும், மும்பை மெகா மால்களுமாக இருக்கிறார்கள்.
தமிழில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் தவிக்கிறது கோலிவுட். கடைசியா
நான் பார்த்த தமிழ் நடிகை விஜயலட்சுமி என்று நினைக்கிறேன்.
கதாநாயகி அறிமுகப்பாடல் (அவரது தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத வேக நடன
அமைப்புகள்)வடிவேலு நகைச்சுவை (யார்கிட்டயாச்சும் அடி வாங்கறமாதிரி காமெடிய
எவண்டா கண்டுபிடிச்சது?) நீங்களாக படம் அருமை.
படத்தின் இறுதியில் ஊர்மக்கள் திரண்டு அல்லது குடும்பமே திரண்டு காதலர்களை
ஒன்று சேர்ப்பதாக முடிக்காமல் விட்டது புதுமை.
குருவிகள் பருந்து வேகத்தில் பறக்கும் ஊரில் இவை ஓடாதது ஆச்சரியம்தான்.
----
சமீபத்தில் தாயகத்தில் இரூந்து திரும்பிய அபிஅப்பாவை போனில் பிடிப்பது மிகவும்
சிரமமாக இருந்தது. பிடித்தபோது ஏன் அழைப்பை ஏற்கவில்லை என்று காரணம்
கேட்டேன். தான் பயன்படுத்தும் மொபைல் உலகத்திலேயே ஒன்றுதான் தயாரிக்கப்
பட்டதாகவும் அதனை இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுதான் அழைப்பை
எடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறினார். அந்த அதிசய மொபைலை
வாழ்நாள் முடிவிற்குள் நானும் காணவேண்டும். நோகியா தவிர்த்து வேறு போனை
உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை அவர் செயல்படுத்தி
வருகிறார் என்பதே சந்தோஷம்.
கடைசியாக அவர் பாவிக்கும் வகையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வத்தில்
கேட்டே விட்டேன். ஓட்டூ என்றார். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
ராஸலீலா அவரிடம் உள்ளதே!
-----
ஆங்கிலத்திலும் மொக்கைப்படங்கள் வரத்தான் செய்கின்றன நாம்தான் பார்க்கவில்லை
போலா. அனானி தியாகு என்று அமீரக பதிவர்களால் அழைக்கப்படும் நண்பர் அபுதாபி
வந்திருந்தார். சினிமா போகலாம் என்று முடிவானது. குசேலன் பார்க்கும்முன் "கத
பறயும் போள்" பார்க்கவேண்டும் என்ற என் ஆசையை தீர்க்கலாம் என்றால் அதற்கு
முன் அந்த படத்தை தூக்கி விட்டு குருவியை ஓடவிட்டார்கள். அந்த படத்திற்கு
டிக்கெட் கிடைக்காது என்று தெரியும். கிடைத்தாலும் அதை ஏன் பார்க்கவேண்டும்.
பிறகு கப்பியை போல பதிவெழுத வேண்டும். எதற்கு வீண் நமைச்சல்.

எட்டு திரையரங்குகள் கொண்ட அந்த மாலில் சுற்றிக்கொண்டிருக்கும்போது பல
நாட்டு பிகர்களை தரிசிக்கும் வாய்ப்புகிட்டியது. நண்பர் அயர்ன்மேன் செல்லலாம்
என்று சொன்னார் "என்னங்க நீங்க அதெல்லாம் குழந்தைகளுக்காக எடுக்கற படம்.
நாமல்லாம் நல்ல தரமான படம் பாக்கணும் என்று அங்கே காட்சிக்கு இருந்த
போஸ்டர்களிலே நீளமான தலைப்புள்ள படமாக தேர்வு செய்து அதற்கு போலாம்
என்றேன். அரைமனதுடன் சென்றோம்.
Before the Devil Knows You're Dead
அண்ணன் தம்பிகள் தங்களது சொந்த அப்பாவின் தங்க வைர நகைகள் அடங்கிய
கடையை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்கள். செயல்படுத்தும்போது
எதிர்பாராத விதமாக அம்மா கொல்லப்படுகிறாள். பிறகு உண்மை வெளிவந்து
அப்பா அவர்களை கொல்கிறார். படம் சுமாருக்கு படுபாதாளத்தின் அடியில்
இருந்தது. இந்த படத்திற்கு எதற்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள்
என்று தெரியவில்லை. குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படும் ஹாலிவுட்
கதாநாயகனை திரையில் காண்பித்ததை விட என்ன வித்தியாசம் உள்ளது
இந்த படத்தில்? பார்த்தவர்கள் விளக்கலாம்.
----
தொடர்ச்சியாக எனது பதிவுகளை வாசிக்கும் அவலநிலைக்கு உள்ளான ஒருவர்
என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். சந்தித்தேன்.
குருவி
சிவாஜி
அந்நியன் போன்ற படங்கள் வணிக படங்கள். அவற்றை ஏன் நல்ல படம் இல்லை
என்று வலையில் பரப்புகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவையும் சிறந்த படங்கள் என்று ஆணித்தரமாக வாதாடினார். ஷங்கரைப்போல
விஷயஞானம் உள்ளவர் போல!
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எப்படி பத்மபூஷன் விருது வாங்குவது
என்று கேட்டார். திரு திருவென்று விழித்தேன். எதாவது அரசியல் கட்சிக்கு
கட்சி நிதின்ற பேர்ல சிலபல கோடிகள கொடுங்க என்று சொல்லி சமாளித்தேன்.
அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர் சமீபத்தில் வாங்கி இருந்தாராம்.
இவருக்கும் ஆவல் வந்துவிட்டது போல. தவறில்லை கடின உழைப்பு இருந்தால்
கண்டிப்பாக வாங்கிவிடலாம் நண்பரே!
அருமையான காப்பி கொடுத்தார். உடம்பில் பச்சைக்குத்துதல், பேஷன் டிசைன்
பத்மபூஷன், வணிகசினிமா பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க. சும்மா எல்லாரும்
எழுதற மாதிரி எழுதிகிட்டு இருக்காதிங்க என்று அறிவுரை கூறினார். இதற்காகத்தான்
இவ்வளவு காலம் காத்திருந்தேன். வெறுமனே புத்தகங்கள் பற்றியும், உலகசினிமா
பற்றியும், நாவல்கள் பற்றியும் எழுதாமல் உபயோகமாக எழுதச்சொன்னார்.
உள்ளூர் சினிமாவ மொதல்ல கவனிங்க அப்புறம் உலகசினிமா போகலாம் என்றார்.
அறிவுரைக்கு தன்யனானேன் நண்பரே!
