எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, December 17, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 3

 சிங்கப்பூரில் பொதுமுடக்கம் திறந்த பிறகும் கூட விமானங்கள் இயங்கவில்லை. இந்திய அரசு வெளியேற விரும்பும், வெளியேறியே ஆக வேண்டிய இந்தியர்களை வரவழைக்கும் பொருட்டு சிறப்பு விமானங்களை இயக்கினார்கள். தூதரகத்தில் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். என் வேலைக்கான ஒப்பந்தகாலம் முடிந்து அடுத்த வேலை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கொரோனா சனியன் வந்தது. வேறு வேலை தேடுவது அத்தனை சுலபமாயில்லை. வேலை கிடைத்தும் கூட அரசு புதிய வேலைக்கான ஒப்பந்த காலங்களை அனுமதிக்கவில்லை. எங்கும் நிலைமை அதுவே. முதல் அலையின் போது வேலைக்கான அனுமதிக்காலம் முடிந்தவர்கள், நிறுவனம் மாறுபவர்கள் எல்லோரும் சிரமப்பட்டார்கள். பிள்ளைகளின் படிப்பு, வீடு, பொருட்கள், நண்பர்கள், புத்தகங்கள், அழியாத நினைவுகள் என அப்படியே விட்டு விட்டு வரவேண்டிய சூழல் வந்தது. இப்படியொரு நிலை வரும் என என் கனவில் கூட நினைக்கவில்லை. சிங்கையில் இருந்தபோது சேகரமான நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை ஒரு சலூன் கடை நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அவர் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் இருப்பதுதான் சரி.

சிறுவயதில் என்னை பாதித்த பிரச்சினைகளில் ஒன்று, வேலை இடமாற்றம். அப்பாவுக்கு அரசு வேலை. அவர் எங்கெங்கு பணியாற்றுகிறாரோ அந்த ஊர்களில் இருப்போம். என்னைப்போல அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இதை எதிர்கொண்டிருப்பார்கள். ஒரு புதிய ஊருக்கு வந்து புதிய தெருவில் நுழைந்து, புதிய வீட்டில், புதிய பள்ளியில், புதிய நண்பர்களின் மத்தியில், என எல்லாமே புதிய விஷயங்களாக இருக்கும். அதைப்போலவே பழைய ஊரின் ஏக்கம், நண்பர்கள் என நினைவில் வருத்தும். இப்படி புதிய இடத்தில் பழகி, கலந்து வேறூன்றி இதுதான் நமக்கான ஊர் இங்கேயே இருக்கலாம் என்று இருக்கும்போது மறுபடி ஒரு மாற்றல் வரும். 

அப்படி ஒருமுறை சிங்காரப்பேட்டை என்ற ஊரில் குடியிருந்தோம். சிங்காரப்பேட்டை திருவண்ணாமலையில் இருந்து 55 கிமீட்டரில் ஊத்தங்கரை என்ற ஊருக்கு அருகில் உள்ள சிறிய ஊர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக இருந்தது. அப்போது எனக்கு வயது 7 வயது இருக்கலாம். இரண்டோ மூன்றோ படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்பு திண்டிவனத்தில் இருந்தோம். அந்த வேலை மாற்றலாகி சிங்காரப்பேட்டை வந்தோம். எனக்கு வயது குறைவாக இருந்ததால் எந்த மாற்றமும் பாதிக்கவில்லை. ஆனால் அண்ணனும் அக்காவும் 12 வயது தாண்டியவர்கள் குறிப்பாக அம்மாவுக்கு இந்த இடமாற்றங்கள் தந்த தொந்தரவுகள் ஏராளம். தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி எங்கள் நால்வரையும் சமாளித்து ஒவ்வொரு ஊராக அலைகழிந்த அவரது உழைப்பு சொல்லிமாளாது. எந்த ஊருக்கு சென்றாலும் கூட அந்த ஊரில் ஒரு குடும்பம் நெருக்கமான நட்பாகிவிடும். உயிரையே கொடுக்கும் அளவுக்கு அந்த நட்பில் இருக்கும் அப்படி ஒரு பிணைப்பு உருவாகும்போதுதான் அந்த ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகிவிடும். 

சிங்காரப்பேட்டையில் முதலில் நாங்கள் குடிபுகுந்த வீடு ஒரு கூரை வீடு. நவாப்களின் கோட்டை நகரமாக திப்பு காலத்தில் இருந்த நகரம். இப்போது இடிபாடுகளுக்கு இடையில் இருக்கும் சிதிலமடைந்த கோட்டைக்கு அருகில் இருந்தது. பெரிய சதுர வீடு உள்ளே ஒரு ஆளுயர தடுப்பு சுவர் அந்தபக்கம் உடைகள் மாற்றலாம். படுக்கை எல்லாம் ஹாலில்தான். நாங்கள் ஆறுபேர் வரிசையாக படுத்திருப்போம். வெளியே மண் அடுப்பு. இடதுபுறம் தென்னையோலை மறைப்பில் குளியலறை. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர். பொதுவாகவே சென்னைக்கு கிழக்கே போகப் போக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் மிக இனிமையானவர். அவர் மேல் எப்போதும் அத்தர் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். சொந்தமாக விவசாய நிலங்கள் இருந்தது. அவர் விவசாயம், ஆடு, மாடு வளர்த்து வந்தார்.  எங்கள் கூரை வீட்டிற்கு எதிரில் இருந்த இன்னொரு கூரை வீடு அவர்களுடையது. அப்பாவின் அன்றைய வருமானத்தில் அப்படி ஒரு வீட்டில்தான் இருக்க முடிந்தது. 


அவருக்கு அப்போது ஐந்து பிள்ளைகள், மற்றும் பாய்விட்டம்மா வயிற்றில் ஒன்று. எங்கள் வீட்டில் நான்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். மெல்ல மெல்ல பாய்வீட்டம்மாவுக்கும் எங்கள் அம்மாவுக்கும் ஒரு நட்பு உருவானது. அது எப்படிப்பட்ட நட்பு என்றால் முப்பது ஆண்டுகள் கழிந்தும் கூட இன்றும் தொடரக்கூடிய நட்பாக இருக்கிறது. அந்த ஊரில் நாங்கள் இருந்தது இரண்டரை ஆண்டுகள்தான். ஆனால் இன்னமும் அவர்களுடனான நட்பு தொடர்கிறது. ஜீவனக்கஷ்ட காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ உதவியிருக்கிறது அக்குடும்பம். பாய் கடுமையான உழைப்பாளி, அந்த ஊருக்கு சென்ற புதிதில் பாஷை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. பொதுவாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்து வட்டார வழக்கு வித்தியாசம், இவர்கள் உருது கலந்து பேசியது இன்னும் குழப்பமாக இருந்தது. அவர் வயல் உழும்போது கூட உதவிக்கு செல்வோம். அப்போது மோட்டர்கள் இல்லை, கமளத்தில்தான் தண்ணீர் இறைப்பார். கமளத்தில் தண்ணீர் இறைப்பது கொண்டாட்டமாக இருக்கும். இந்தகாலத்தில் கமள இறைப்பு பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பொழுதுகள் மிக இனிமையாக பொறுமையாக நகர்ந்த காலம் அவை.

நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அவருக்கு ஆறு குழந்தைகள். பிறகு இரண்டு என மொத்தம் எட்டு பிள்ளைகள். எல்லா நல்ல/கெட்ட காரியங்களுக்கு அவர்களும், நாங்களும் தவறாமல் கலந்துகொள்வதுண்டு. அக்காவின் திருமணம், அண்ணனின் திருமணம், புதுவீடு புகுவிழா, என எல்லாவற்றிலும் கலந்துகொள்வோம். இதில் என்ன சிக்கல் என்றால் எங்கள் தரப்பில் அப்பாவும், அவர்கள் தரப்பில் பாய் மட்டுமே கலந்துகொள்வார்கள். எனக்கு அந்த ஊரை அக்குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் அடியாழத்தில் இருந்துகொண்டே இருந்தது. முப்பது வருடம் கழித்துகூட நிறைவேறவில்லை. சென்ற வாரத்தில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது. முகநூலில் தேடி என்னைக்கண்டுபிடித்து ஒருவர் அழைத்திருந்தார். அவர் அண்ணா பல்கலையில் வேதியியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர், முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இருந்தார். பர்கதுல்லா. எனக்கு சுத்தமாக நினைவில்லை. அவரே சொன்னார். "நீங்க அந்த ஊர்ல இருந்து போகும்போது நான் கைக்குழந்தை, அம்மா உங்க குடும்பத்தை சொல்லி சொல்லி வளர்த்தார். எப்போதும் உங்கள் நால்வரையும் காணவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. இவ்வளவு காலமும் கைகூடவில்லை. நான் உங்களைப் பார்க்க வரலாமா? என்றார்.

கண்டிப்பாக வரவேண்டும் என்றேன். அன்று மாலையே வந்திருந்தார். மிகச்சிறு பிராயத்தில்தான் நாங்கள் பார்த்திருக்கிறோம். பார்த்த நினைவே எனக்கு இல்லை, அவருக்கு வாய்ப்பே இல்லை ஆறு மாதக்குழந்தை. எது எங்களை இன்று சந்திக்க வைத்தது? எங்கள் குடும்பத்தில் அம்மாவும், அவர்கள் குடும்பத்தில் அவர் அம்மாவும் இரு குடும்பங்களுக்கிடையிலான நட்பை சொல்லி வளர்த்திருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான நெகிழ்ச்சியுரும் கதைகள் ஏராளம் உண்டு இம்மண்ணில். இவருக்குப் பிறகு பிறந்த மூன்றுமே ஆண்பிள்ளைகள், ஒருவர் மிருகவைத்தியர், ஒருவர் வணிகமேலான்மை, கடைசித்தம்பியும் உயர்வகுப்பு படித்திருக்கிறார். ஏராளமாக பேசி விடைபெற்றோம். தலைமுறை தாண்டி தொடரும் இந்த நட்பு.


தொடரும்....

No comments: