எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, January 10, 2009

எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.

விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.

க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)

இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.

சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.

--

இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.

மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.

சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.

விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.

விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.

சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.

--

இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.

10 comments:

துளசி கோபால் said...

அனைத்தையும் ரசித்தேன், முக்கியமாகக் குட்டி நாய்:-))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.//

கூர்மையான கவனிப்பு,அழகான உவமை..
என்னை 45 வருடம் பின்னோக்க வைத்து என் ஜிப்போவை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

சென்ஷி said...

ஜமாய்டா தம்பி!! :)))

Kathir said...

//கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். //

:))

கதிர் said...

வாங்க துளசி டீச்சர்
பூனை, நாயெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலருக்கு. :)

நன்றி யோகன் பாரிஸ், சென்ஷி

கதிர்,
எப்டி இருக்கிங்க? நலமா...

வால்பையன் said...

என் தம்பியை நாய் கடிச்சிடுச்சுப்பா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

அவர் பெயர் க.நா.சு :)

பிச்சைப்பாத்திரம் said...

மன்னிக்கவும். விழா முடிந்தவுடன் உங்களிடம் சொல்லி்க் கொள்ளாமலேயே கிளம்பிவிட்டேன். அலுவலகத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி வந்துக் கொண்டேயிருந்தது. (நம்ப இல்லாதப்பதான் எல்லா பிரச்சினையும் வரும்) இருந்தாலும் கூட்டம் முடியும்வரை அழைப்பை கவனிக்கவில்லை. முடிந்தவுடன் மழையையும் பாராது ஒரே ஓட்டம்.. மற்ற பதிவர்கள் யாராவது வந்திருநதார்களா என்பதைக் கூட யோசிக்க இயலவில்லை.

KARTHIK said...

// யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.//

உங்க டாடா சுமோவும் நண்பர்கள் படையும் என்னாச்சு.

குசும்பன் said...

//தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும்//

நல்லா ரசிக்கிறானுங்கய்யா!

பதிவு சூப்பர்.