எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, July 28, 2008

சாருவின் தவறு

//Its more than 10 hours since you replied and I still see some others name.
Please make sure you give credits to the right person and respond properly.
Respond after the changes are done.//

மாத்த சொல்லி பத்து மணி நேரம் ஆகுது இன்னும் மாத்தாம இன்னும் என்னடா
புடுங்கிட்டு இருக்கற மாங்கா மண்டையா என்று கவுண்டமணி செந்திலுக்கு சொல்வது
போல அமைந்த இந்த பதில்தான் இத்தனை வாதத்திற்கும் காரணம்.

நண்பர் பாலாஜி சாட்டில் வந்து தன் பதிவு சாருவின் தளத்தில் வந்திருப்பதாக
சொன்னபோது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.
(தனி உரையாடலை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும்).
பாலாஜி கொடுத்த சுட்டியை பிடித்து சென்றபோது அங்கே வேறு பெயர் இருந்ததை
பார்த்து அப்பொழுதே பாலாஜியிடம் குறிப்பிட்டேன். சாருவுக்கு மடல் அனுப்புமாறு கூட சொன்னேன். பின்னர் நடந்தது சாருவின் தளத்திலும் பாலாஜியின் வலைப்பூவிலும் பார்த்துதான் எனக்கு விஷயமே தெரிந்தது. அதற்குள் கருத்துப் பெருந்தகையாளர்கள்
தங்கள் ஆதரவு நிலை அல்லது எதிர்ப்பு நிலையை அவசர அவசரமாக
பகிர்ந்துகொண்டார்கள். பகிர்ந்து கொண்டவர்களில் உண்மைநிலை அறியும்
ஆவல் துளிகூட இல்லாதது பின்னூட்டங்களை படித்தாலே புரிந்துகொள்ளமுடியும்.
எதாவது ஒரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் போடப்பட்ட பின்னூட்ட்ங்களில் தெரிந்தது

என் வருத்தத்தின் உச்சகட்டம் என்பது வெட்டியின் பதிவில் பார்த்த அவரின்
எதிர்வினையில். இருந்தாலும் புரியாமையின் வெளிப்பாடு அதற்கு அத்தகைய
முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதைப்பற்றிய
அக்கறை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாலாஜியின் கதைகளுக்கு
என்ன மாதிரியான பின்னூட்டம் வருமோ அதேபோன்ற பின்னூட்டங்கள் அதிகமாக
வரும்போது பிரச்சினை வேறு திசை நோக்கி செல்வதை உணரமுடிந்தது. குறைந்தபட்ச பண்புகள் கூட இல்லாது எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு மக்களின் உணர்ச்சிகர
ஆதரவுநிலை என்பதனை ஏனோ யாருமே உணரவில்லை.

//இவருக்கு ஒரு கோ-ஆர்டிநேட்டர் இருப்பாரு. அவர் தான் இந்த மாற்றங்கள் எல்லாம் செய்வாருனு எனக்கு எப்படிங்க தெரியும்? அதை அவர் முதல் மெயில்லயே I will ask my co-ordinator to do the necessary Changeனு சொல்லியிருந்தா நான் அமைதியா இருந்திருப்பேன். இதுல யாரோட மெயில்ல சுடுசொல் இருக்குனு நீங்க சொல்லுங்க? அப்படி இருந்தும் நான் அவருக்கு அடுத்த 6 நிமிஷத்துல அனுப்பன மெயில்//

இந்த பதிலை பாலாஜியே நிதானமாக படித்துவிட்டு பார்க்கலாம். கவுண்டமணி
செந்திலுக்கு சொல்லும் பதில்தான் இதில் அடங்கியுள்ளது. வேறு வித்தியாசம் எதாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? எதிர்வினை அல்லது தன்னிலை விளக்கப்பதிவு
இவ்வளவு மட்டமான முறையில் எங்காவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதுவும் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிக்கு எதிராக? இதே மாதிரியா அவர் உங்களுக்கு பதில்
அளித்தார்? தொழில்முறை எழுத்தாளர் கம்பியூட்டர் கைநாட்டாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (உண்மையில் அவர் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்)
ஒரு அறிமுகமில்லாத பதிவரின் பதிவு பிடித்துப் போய்தான் அதை மேற்கோள் காட்டினார். அதில் எதோ குழப்பம் வந்து விட்டது. அந்தக்குழப்பத்தை சரி செய்ய பத்துமணி நேரம் கடந்தும் ஏன் மாற்றவில்லை என்று கேள்வி கேட்பது எந்த விதத்தில் அய்யா நியாயம்? சாருவின் தளத்தில் மாற்றங்களை தங்கவேல் என்பவர்தான் செய்து வருகிறார் அதற்கு காலதாமதம் ஏற்படுவது வழக்கம்தான் என பின்னூட்டத்தில் ஒருவரும் சொல்லவில்லை. மேலும் சாரு என்பவர் பலருக்கு புதிதான ஒரு பதிவர்! என் உதவியாளருக்கு சொல்லியிருக்கிறேன், அவர் மாற்றுவார் அதற்கு 24 மணி நேரம் ஆகும் என்றெல்லாம் ஒருவரால் நிச்சயமாக பதில் அளிக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நண்பர் வெட்டிக்கு சொல்வது இதுதான்.

உங்களின் இரண்டாவது மடலின் சாரம் நிர்வாக ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

அது நீங்கள் அறியாமலே வெளிப்பட்ட மொழி. முதிர்ந்த எழுத்தாளரின் முன் அந்த
சொற்கள் விளைவித்த பொருளை இதற்கு மேலும் விளக்க முடியாது.நிதானமாக
ஒவ்வொரு வரியாக படித்துப்பாருங்கள். இதைவிட வேறு மொழியில் உங்கள்
உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது என் வாதம்.

//பயமெல்லாம் இல்லை. சண்டை போட விருப்பமில்லை. நேரமுமில்லை..//

இந்த வரிகளை படிக்கும்போதெல்லாம் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. ஒரு
உண்மை நிலையை யாருமே புரிந்துகொள்ளாமல் இப்படி பயம்/ சண்டை போன்ற வார்த்தைகள் உபயோகிப்பது எல்லாம் அவசியமில்லாதது. மேலும் சாருநிவேதிதா
என்ற எழுத்தாளரை தெருச்சண்டைக்கு இழுப்பதுபோல இருக்கும் இந்த வரிகளை
படித்தும் மேலும் பரவசமடையும் கூட்டத்திற்கு என்ன சொல்வது?

அய்யா பின்னூட்ட கருத்து கந்தசாமிகளே! முதலில் கண்டனத்தை பதிவு செய்ய அலைந்துகொண்டே இருப்பீர்களா? இதில் என்ன ஆகப்பெரிய அநியாயம் நடந்து விட்டது
என கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று முழக்கமிடுகிறீர்கள்?

எதாவது ஒரு நிலை எடுத்தாகவில்லையென்று எந்த கட்டாயமுமில்லை. கண்டனத்தை
பதிவு செய்கிறேன் என்று சொற்களை வீணாக்காதீர்கள். இப்போதெல்லாம் இந்த ஆதரவு/ எதிர்ப்பு நிலைகளை பதிவிக்கவில்லை என்றால் குடிமூழ்கிப்போய்விடுமாம். தயவுசெய்து
இந்த பதிவையும் உங்கள் மூளை அப்படி எண்ணாதிருக்கட்டும்.

தமிழ் எழுத்துத் தளத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரை
இதைவிட வேறு எவராலும் அசிங்கப்படுத்த முடியாது. சாரு ஒரு கலகக்காரன்/ ஸ்திரிலோலன்/ வாசகர்களிடம் பிச்சை எடுப்பவன்/ தண்ணியடிப்பவன் இதுதான்
அங்கே பிரதானமாக பேசப்படுகிறது. பத்து மணி நேரத்தில் ஏன் இன்னும் மாற்றம் செய்யவில்லை? இதற்கு ஒரு நினைவுறுத்தும் மடல் அதற்கு ஒரு பதிவு அதற்கு
இத்தனை உணர்ச்சிகர பின்னூட்டங்கள் என நீண்டுகொண்டே இருக்கிறது.
உண்மையில் சாருதான் இந்த விஷயத்தில் பரிதாபத்துக்கு உரியவர்.

இந்தப் பின்னூட்டங்களை படிக்கையில் நம் சினிமாவில் ஊழலுக்கு எதிராக நாயகனுக்கு ஆதரவாக டீவி சேனல்களின் மைக்குகளின் முன்னால் ஆவேசமாக குழாயடியிலும்/ ரோட்டோரம் போகும் வருபவரிடமும் பெறப்படும் டெம்ப்ளேட் குரல்களாகத்தான் இருக்கின்றன. யாரும் எவரையும் தவறான புரிதலுக்கு காரணம் என்ன என்றும்
அதைநோக்கி விவாதம் செய்யும் முனைப்பும் எதுவுமே இல்லை. எதோ கொலை
ஒன்று நிகழ்ந்து விட்டதுபோலவும் அதை நேரில் கண்ட சாட்சிகள் போலவும் குற்றவாளிக்கூண்டிலே நிற்கவைத்து இவர்களே பேசவும் செய்கிறார்கள்.

ஒரு ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர்/ யார் என்றே தெரியாமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் எவரோ எழுதிய பதிவை பிடித்தது என்ற ஒரே காரணத்துக்காக பல ஆயிரம்
பேர் படிக்கும் தனது தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். எந்தவித சுயநோக்கமும்
இல்லாமல் அவர் பகிர்ந்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு இதனை யார்
எழுதியது என்று தெரியாது வெளியிட்டதும் உண்மை. இடையில் நடந்த
சிறுகுழப்பத்துக்கு இத்தனை பெரிய அவமரியாதை செய்வது எத்தனை
அசிங்கமானது?

பாஸ்டன் பாலா என்பவர் மீது எனக்கு பெரும் மதிப்பு இருந்தது. அவரைக்கண்டு
பலசமயத்தில் வியந்திருகிறேன். கீழ்க்கண்ட அவரின் பின்னூட்டம் படித்தவுடன் அருவருப்புதான் உண்டாகியது.

//சாருவிற்கு தமிழ்ப்பதிவுகளை தன் பக்கம் திசை திருப்பிக் கொள்ள இன்னொரு யுக்தி?

அடுத்த கட்டத்துக்கு போயிருக்கீங்க :)//

இத்தகைய மலினமாக சிந்திக்கும் ஒருவரை இவ்வளவு நாளாக என் ஆதர்சமாக நினைத்திருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

கிளிப்பிள்ளைக்கு விளக்கம் கொடுப்பதுபோல இத்தனை பேர் வரிந்துகட்டிக்கொண்டு
பதில் எழுதியிருக்கும் அத்தனை பெருந்தகையாளர்களுக்கும் ஒரே விஷயம்
கேட்கவேண்டும் பாலாஜியை முன்னிறுத்தி எதாவது பிரச்சினை செய்தால் தான்
பெரியாளாகி இந்த பெரிய்ய்ய தமிழ்வலைப்பதிவுலகின் திசையையே தன்பக்கம்
திருப்பி தன்வசம் வைத்துக்கொள்ளத்தான் இதை செய்தார் என்று சொல்ல முடியுமா?

இந்த வாதங்களெல்லாம் ஊனமுற்றவனை திட்டுவது போல அமைந்துள்ளது.
சரிதான் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்பவனே ஊனமுற்றவன் தானே! தவிர
தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெறாத சாரு ஊனமுற்றவர் இந்த விஷயத்தில்.
மாறாக பத்துமணி நேரத்திலும் ஏன் மாற்றம் செய்யவில்லை என்று கேள்வி கேட்கலாம்.
வார இதழில் கூட தவறான செய்திகளுக்கு அடுத்த வாரத்தில்தான் மன்னிப்பு
கேட்கிறார்கள். இங்கே நம்மாள் 10 மணி நேரம் கூட பொறுக்க முடியாது.
ஏனென்றால் கிரெடிட் எல்லாம் வேறு ஒருவருக்கு போய்விடும். அப்படி போய்விட்டால்
அடுத்த வேலை உலைகொதிப்பது பெரும்பாடாகிவிடும். ஒருநாளோ இரண்டு நாளோ
கெடு கொடுத்தெல்லாம் நமக்கு பழக்கமில்லை.

டிபிசிடி மட்டுமே வார்த்தைகளை இப்படியும் புரிந்துகொள்ளலாம் என்பதை
சொன்னவர். அவராவது சொன்னாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்
“இப்படியும்” (இப்படித்தான்) புரிந்துகொள்ள முடிகிற வார்த்தைகளின் கோர்வைதான் பாலாஜியின் மடல். இதை அவர் உணர்ந்து எழுதியிருப்பார் என்று நிச்சயமாக
நம்பவில்லை. அவரின் அலுவலக/வாழ்க்கை சூழ்நிலை அப்படி அமைந்தது
இப்படியாக மடல் எழுதி இப்படியாக பதில் பெற்று வந்தவரின் வழியில் திடிரென
இந்த மொழி/வார்த்தைகள் தவறான அணுகுமுறையைத் தரும் என்று சொல்வது என்னாலும்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றுதான். நிஜத்திலே இந்த அனுபவம்
எனக்கு நிறைய ஏற்பட்டிருக்கிறது. என்னையறியாமல் நான் பேசும் பல வார்த்தைகள்
என் மேல் அன்புகொண்டவர் கூட என்னிடம் சண்டை போடும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஏனென்றால் நான் கையாண்ட மொழி அப்படிப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நான் வளரப்பெற்றேன். திடிரென்று என்னால் அவர்களுக்கு
ஏற்றவகையில் பேசமுடியாது. அதேசமயம் என்னளவில் நான் சரி. என்
வார்த்தைகள் எத்தகையை தோற்றத்தை கேட்பவரிடம் செய்திருக்கும் என்ற
கற்பனையெல்லாம் நான் சிந்திக்க முடியாத தூரத்தில் இருந்ததுதான் உண்மை.
எல்லாருக்கும் இது பொருந்தும்.


இதை பாலாஜியின் பதிவில் பின்னூட்டமாக இடுவதை நான் விரும்பவில்லை.
முதலில் கும்பலாக ஒரு விஷயத்தை விவாதிப்பதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. மாறாக அங்கு நான் கண்டது கூச்சல்தான். என்னுடைய கருத்து மற்றவர்களிலும்
சிறப்பாக அமைந்துவிடவேண்டும் என்று வாதம் செய்பவர்களின் கூச்சல்.

வயதில் பெரியவரிடமோ, தன்னைவிட சிறியவர்களிடமோ/ முன்பின் தெரியாதவர்களிடமோ பேசும்போது குறைந்தபட்ச பண்புகளை பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு இருமுறை வார்த்தைகளை சரிபார்ப்பது நலம். சாருவின் எழுத்துக்கு தீவிரமான
வாசகனாக இருந்தும் அவருக்கு இதுவரை இரண்டு மடல்கள் மட்டுமே எழுதி
இருக்கிறேன். அதில் ஒன்றை அவரே வெளியிட்டுவிட்டார். இதெல்லாம் நான்
எதிர்பாராதது. அவர் வெளியிட்டதால் எனக்கு கிட்டத்தட்ட நாலாயிரம் ஹிட்ஸ்
எகிறியது. கூடவே நீ என்ன பெரிய புடுங்கியா என்றும்/ மேலும் மோசமாக பின்னூட்டம் வந்தது. இங்கே திட்டுபவரும் வாழ்த்துப்பவரும் தமிழ்வலைச்சூழலில் இயங்குபவர்தான். அதனால் எல்லாரையும் சந்தேகக்கண்களுடனே பார்க்க வேண்டியிருக்கிறது. என்
கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று சண்டையா போடமுடியும்.
அரைவெக்காட்டுத்தனமான என் பதிவை படித்து முழுவேக்காட்டுத்தனமாக திட்டுகிறான் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும். நேரடியான கொச்சை வார்த்தைகள் எத்தகைய
மன உளைச்சலைக் கொண்டுவரும் என்பது மடலை வாசிக்கும்போதுதான் தெரியவரும்.

பத்துமணி நேரமெல்லாம் தாமதமே அல்ல. அவர் இந்தியாவில் இருக்கிறார்.
நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள்.

இந்த பதிவை படித்தவுடன் பின்னூட்டத்தை போட்டுவிடவேண்டும் என்று கைகள்
பரபரத்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் நண்பர்களே! இதுகுறிந்து என்
ஆதங்கத்தை தெரிவிக்க மட்டுமே இந்த விளக்கம். அப்புறம் நாங்க எப்படி
கருத்து சொல்வதாம்? கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் கதிர் ஒழிக
என்றுகூட சொல்லிக்கொண்டு சந்தோஷப்படுங்கள். நமக்குதான் தினமும் நாலு
கருத்து சொல்லவில்லையென்றால் கீபோர்டு அரிக்குமே!

சாருவிற்கு ஒரு வேண்டுகோள். வாசகர்கள் உங்கள் எழுத்துக்களையே விரும்புகிறார்கள்.
மேற்கோள் காட்டி எழுதும் பதிவுகளினால் மற்றவர்களுக்கு மன உளைச்சல் வரும்
என்பதை உணர்ந்துகொள்வீர் என்று நம்புகிறேன். மேலும் பதில் மடல் எழுதும்போது
இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எழுதவும்.

நண்பர் பாலாஜி புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.