எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 03, 2007

பூனைகளுடன் உறங்கும் கோபால்

தான் சிறையில் இருப்பதாக என்றுமே நினைத்ததில்லை கோபால். ஏனென்றால்
ஊருக்குள் இருந்தாலும் யாருடனும் பழகாமல் தனித்தே இருந்து வந்ததால்
சிறையில் எந்த மாற்றத்தையும் அவன் உணரவில்லை. தன்னுடைய இந்த நிலைக்கும்,
முரட்டு குணத்திற்கும் காரணம் என்று தன்னை சுற்றியிருந்த சமூகத்தைத்தான்
நினைத்திருந்தான். வீட்டில் இருந்தபோது மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பிறகு
பூனைக்கூட்டத்திடம் மட்டுமே அவனது உலகம் என்று இருந்தது.

ஒரே விஷயத்துக்கு மட்டும்தான் கோபப்படுவான் அந்த ஒரே விஷயத்தைத்தான்
அனைவரும் விடாப்பிடியாக செய்து வந்தனர் அது அவனிடம் காணப்படும் மாறுகண்
குறைபாடு மட்டுமே.

அன்று கருப்பையன் கோவிலில் பஞ்சாயத்து. நிலத்தகராரு ஒன்றுக்காக பஞ்சாயத்தார்
முன்னிலையில் கைகட்டி நினிருந்த கோபாலை திட்டமிட்டே கூட்டத்தில் இருந்த
ஒருவன் குமரிமுத்து என்று கூவி விட்டான் தன் குறையை சொல்லி கிண்டல்
செய்ததற்காக அதே இடத்தில் இரண்டு கையையும் வெட்டி துண்டாக்கி சிறை
சென்று விட்டான்.

வீட்டிலிருந்த அவனை காவல்துறையினர் கைது செய்து கொண்டு செல்லும்போது
வாகனத்தின் பின்னே வழிநெடுக பூனைகள் பின் தொடர்ந்தன.

இன்றோடு சிறைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. தனிச்சிறைதான்
இவனது குணத்துக்கு உகந்தது என்று ஜெயிலர்கள் கருதியதால் தனிச்சிறை.

நீராருங்கடலுடுத்த பாடும்போது மட்டுமே தனக்கு பேசும் சக்தி இருப்பது அவனுக்கு
தெரியும். மற்ற நேரங்களில் மவுனம் மட்டுமே இவனின் நன்னடத்தை காரணமாக ஏழு
வருட கடுங்காவல் தண்டனையை ஆறு வருடமாக மாற்றினார்கள் இன்னும் ஓரிருநாளில்
கோபாலுக்கு விடுதலை.

விடுதலையாகும் முன்பு கோபாலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோபால் எல்லா குழந்தைகளை போலவே பிறக்கும்போது அழுதுகொண்டேதான்
பிறந்தான். எல்லா குழந்தைகளை போலவே பல கனவுகளுடன் பெற்றோரால்
வளர்க்கப்பட்டான். எல்லா குழந்தைகளைப் போலவே இரு கை, இரு கால்கள், இரு
காதுகள் மற்றும் ஏனைய உறுப்புகளுடன் பிறந்தான் ஆனால் கண்கள்தான் சற்று இடம்
மாறியிருந்தன. அது அவன் குழந்தைப்பருவம் தாண்டும் வரை அவனுக்கே தெரியாது.
வளர்ந்து பேசும் திறனை பெற்று, பள்ளி சென்று, அவன் வயது குழைந்தைகளுடனே
விளையாடி வரும்போதுதான் அறிந்துகொண்டான்.

பாவம் அவன் வயதையொத்த சிறுவர்கள்தான் இவனுக்கு மாறுகண் இருந்ததை
கண்டு கேலி செய்தார்கள். சில சமயங்களில் வாத்தியாரும் ஒன்றரை கண்ணா
வாடா என்று கூப்பிடுவார்.

எல்லாருக்கும் கண்கள் ஒரே மாதிரி இருக்க தனக்கு மட்டும் ஒரு பக்க கருவிழி
இடம்பெயர்ந்து கண்ணின் இடப்பக்கமாக இருந்ததுதான் குறையாக பட்டது.
அதைச்சொல்லி சொல்லியே அவனை கேலி செய்தார்கள்.

காலப்போக்கில் கோபால் என்று பெற்றோர் வைத்த பெயரை ஊராரும், பள்ளி
நண்பர்களும் குமரிமுத்து என்றே மாற்றி விட்டார்கள்.

"ஏம்மா என்னை ஒரு காலோ அல்லது ஒரு கையோ இல்லாமல் ஊனமா
"பெத்துருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே இப்படி ஒன்றரை கண்ணோட பெத்துட்டியேம்மா" என்று பள்ளி விட்டு வந்ததும் அம்மா மடியில் புதைந்து
அழுதிருக்கிறான்.

"மாறுகண்ணு குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்டா கோபாலு, மத்தவங்க கேலி பேசினா
கண்டும் காணாத இருந்துடு."

முடியலமா, அழுகையா வருது.

"உன்னை யாராச்சும் மாறுகண்ணான்னு கூப்பிட்டா அப்படி கூப்பிட வேணாம் என்
பேர் கோபால்னு சொல்லு, மீறி சொன்னாங்கன்னா கன்னத்துல அடி. அப்புறம்
எவனும் கூப்பிட மாட்டான். இந்த வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையை தந்தன.

ரௌத்ரம் பழக பெற்ற தாய் சொல்லிக்கொடுத்தாள் அந்த ரௌத்ரமே பின்னாளில்
அவனது அடையாளமாகிப்போனது.

ஒருநாள் வழக்கம்போலவே எண்ணையிட்டு தலை சீவி, மஞ்சள் பையில் சிலேட்டை
வைத்து பள்ளிக்கு அனுப்பினாள் அவன் தாய்.அதுதான் அவனது கடைசி பள்ளி நாள்.

அன்று பள்ளியில் குமரிமுத்து என்று கேலி செய்தவனிடம் தன் பெயர் கோபால் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டான். இரண்டாவது முறை அவன் குமரிமுத்து என்று
சொல்லும்போது சொன்னவனின் கன்னத்தோல் கிழிந்து காதோரம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"என்ன திமிருடா உனக்கு ஒன்றரைக் கண்ணா என்று கையில் பிரம்புடன் கேட்ட
கணக்கு வாத்தியாருக்கும் அதே கதி.

சற்று அதீதமான கோபம் கண்டு அவனது பெற்றோரே அதிர்ந்து விட்டதில் ஆச்சரியம்
இல்லை. பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்க்க
விட்டு விட்டனர் அவனது பெற்றோர். பள்ளி செல்வதை விட மாடு மேய்ப்பது
அவனுக்கு அதிகமான சந்தோஷத்தை தந்தது.

அன்றிலிருந்து மனிதர்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். அவனது பேச்சுகள் ஆடு,
மாடு, பூனைகளிடம் மட்டுமே. அவனுக்கென்னவோ பூனைகளை ரொம்ப பிடித்து விட்டது.

பூனைகள் மட்டுமே அவனிடம் எந்த குறைகளும் சொல்லாமல் விளையாடின. அதனால்
பூனைகளிடம் தன் பெற்றோரை விட அதிக பாசம் அவனுக்கு. தெருவிலே பூனையை
கண்டால் வீட்டுக்கு தூக்கி வந்து விடுவது அவன் தாய்க்கு எரிச்சலை கிளப்பியது. ஆடு மாடுகளுக்கு பட்டியை போல பூனைக்கு பட்டி வைக்கும் அளவுக்கு பெருகிப்போனது.

பச்சைப் பசேல் என இருபுறமும் விரியும் நெல் வயல்களுக்கிடையிலான வரப்பில்
இவன் நடந்து சென்றால் கருப்பும், வெள்ளையும் இன்ன பிற வண்ண பூனைகளும்
இவன் பின்னால் நடப்பது கொள்ளை அழகாக இருக்கும். வரப்பில் வரிசையாக வால்
தூக்கிய பூனைகள் நடந்து சென்றால் அழகாக இருக்காதா என்ன.

தப்பித்தவறி தன் குறை பற்றி எவராவது பேசினால் கூட வெளுத்து விட்டுதான்
மறுவேலை என்ற எண்ணம் அவனையறியாமலே அவனிடத்தில் நிரந்தரமாக
குடிகொண்டுவிட்டது.

இளமைப்பருவத்தை அவன் அடைந்தபோது ஊரே மிரளும் முரடனாக இருந்தது
பெற்றோருக்கு மிகுந்த வேதனையை தந்தது. தன் மகனால் எவருடமும் சகஜமாக பழகமுடியாமல் போனதற்கு இன்னதுதான் காரணம் என்று அறிந்துகொள்ள முடியவில்லை.

கல்யாணம் செய்து வைக்கலாமென்றால் எவரும் பெண் தர விரும்பவில்லை.
தனிமையே தனக்கு பாதுகாப்பானது என்று கருதி திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டான். தந்தையில் மரணப்படுக்கை அவனது சற்றே மாற்றி அமைத்தது.

அவசர அவசரமாக ஒரு கல்யாணத்தை முடித்தனர். பின்னர் தங்கள் கடமை முடிந்து
விட்டதாக கருதி ஒருவர் பின் ஒருவராக கண்மூடினர். தாய் தந்தை இறந்ததற்கெல்லாம்
அவன் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. தான் வளர்த்து வந்த பூனைகளில் ஒன்று இறந்துபோனால் கவலைப்படும் அளவுக்கும் கூட தாய், தந்தையின் இறப்புக்கு
அந்தளவுக்கு வருந்தவில்லை.

இந்த நிலையில்தான் அவன் சிறைக்கு செல்ல நேர்ந்தது.

இன்று விடுதலையாகி வருகிறான். ஐந்தாறு வருட சிறை வாழ்க்கை அவனை
வெகுவாக மென்மையுள்ளவனாக மாற்றியிருந்தது.

மனைவி சற்று பருத்திருக்கிறாள், குழந்தை சற்றே வளர்ந்து சிறுமி ஆகியிருக்கிறாள்.
அதே வீடு அதே ஊர், அதே மக்கள். எந்த மாற்றமும் இல்லை. இவனிடத்தில் மட்டும்
சிறிது மனிதத்தன்மை கூடியிருந்தது.

அவனது குழந்தை வினோதமாக இவனை பார்க்கும்போதுதான் வேதனைப்பட்டான். மேலும்
"இதுதான் புது அப்பாவா" என்று அம்மாவிடம் கேட்டவளை அவசரமாக வாயைப்
பொத்தினாள் அவள் அம்மா.

இரவு சாப்பிட்ட பிறகு வேப்பமரத்தடியில் கயிற்றுக் கட்டில் உறக்கம். சிலுசிலுவென்று
அடித்த காற்றில் தன்னை மறந்து உறங்கியே போனான்.

அதிகாலை நாலுமணி.

நல்லூர் காவல்நிலையம் தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஏட்டையாவின்
சன்னமான குறட்டை ஒலி காவல் நிலையத்தை உயிர்ப்போடு வைத்திருந்தது.

கதவு திறந்து யாரோ சாக்குப்பையுடன் உள்நுழையும் சத்தம்.

"ஏட்டையா எவனோ வந்திருக்கான் என்னான்னு பாருங்க"

பாதி தூக்கத்தில் இருந்த ஏட்டையா திடிரென்ற ஒருவனின் வருகையால் எரிச்சலுடன்
நிமிர்ந்து பார்த்தார்.

"வாய்யா கோபாலு, நேத்துதான் ரிலீசான போலருக்கு. வெடிகாலைல என்னடா
டேசனுக்கு வந்துட்ட?

ஏட்டையாவின் மேஜை மீது கொண்டு வந்திருந்த சாக்குப்பையை வைத்து ஓரமாக
கைகட்டி நின்றான் கோபால்.

வயல்களுக்கு உரமிடும் வெள்ளை நிற சாக்குப்பையில் அங்கங்கே சிகப்பு நிற திரவம்
பிசுபிசுத்தது. அதன் உள்ளே அவன் மனைவியின் தலையும், பக்கத்து வீட்டுக்காரனின்
இரு கைகளும் இருந்தன.

22 comments:

துளசி கோபால் said...

தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,
நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு!!!!

கதை நல்லா வந்துருக்கு.

கப்பி | Kappi said...

excellent!

Unknown said...

really a superb story
writing style is really good
i always read your blog
but this is the first time i am writing a comment

but it makes me to remember the story 'muttal kimbel'
by pashenger or some other
i am not sure about the writer

ramesh v

கோபிநாத் said...

நல்லா இருக்கு கதிர்

கோபிநாத் said...

கதிர்

உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்ல வித்தியாசம் இருக்கு. வழக்கமான காதல் கதைகள்...காதலனும், காதலியும் பேசிக்கிற மாதிரியான கதைகளில் இருந்து உங்க பார்வ்வை வித்தியாசமாக இருக்கு.

கதைகளில் சொல்லப்படாத காதபாத்திரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அப்படிப்பட்ட காதபாத்திரங்களை வைத்து எழுதுங்கள் கதிர்

வாழ்த்துக்கள் ;-))

கதிரவன் said...

தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்னு தோணுது.

குசும்பன் said...

சூப்பராக இருக்கிறது தம்பி, இன்று முதல் நீ சிறுகதை சூராவளி என்று அழைக்க படுவாய். உனக்கு இந்த சமுகம் கொடுக்கும் பட்டம் இது( நூல் கட்டி பறக்க விடலாமா என்று நீ கேட்டால் நானும் கோபால் மாதிரி மாறி விடுவேன் என்று உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை)..

இராம்/Raam said...

கதிரு,

கதை நல்லாயிருக்குப்பா..... :)

//கப்பி பய said...

excellent! //

ரீப்பிட்டேய்....

Unknown said...

கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங்கள், பொறுப்புகள் அவசியம்.
வாழ்வின் வெளிச்சப் பக்கங்களை சாதாரணமாக சுவையாகச் சொல்லலாம். ஆனால், இருட்டுப் பக்கங்களைச் சொல்லும்போது, வெளிச்சம் எங்கிருந்து வரும் என்பதையும் கூடவே சொல்ல வேண்டும்.
இது கதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றுவது. அன்புடன்

siva gnanamji(#18100882083107547329) said...

இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

ஆனாலும் நன்றாக இருந்தது

Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

வல்லிசிம்ஹன் said...

தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,
நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது??
:)

இப்படித்தான் நானும் கதைக்குள்ள வந்தேன்.
திகில் கதை.
சூப்பர் நரேஷன்,.
சிறையில் அவன் பூனைகளுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம்.
நல்ல கதை தம்பி.

கதிர் said...

//தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,
நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு!!!!

கதை நல்லா வந்துருக்கு.//

வாங்க டீச்சர்!

இது உண்மையில் எங்க ஊர்ல நடந்த சம்பவம். கோபால்னு ஒருத்தர் இப்பவும் இருக்கார் ஆனா ஜெயிலில்.

//excellent! //

நன்றி கப்பி.

கதிர் said...

//really a superb story
writing style is really good
i always read your blog
but this is the first time i am writing a comment

but it makes me to remember the story 'muttal kimbel'
by pashenger or some other
i am not sure about the writer

ramesh v //

நன்றி ரமேஷ்!

அய்யனார் உங்களைப் பற்றி சொன்னார். விரைவில் நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

நன்றி.

நன்றி கோபிநாத்.

கதிர் said...

//கோபிநாத் said...
கதிர்

உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்ல வித்தியாசம் இருக்கு. வழக்கமான காதல் கதைகள்...காதலனும், காதலியும் பேசிக்கிற மாதிரியான கதைகளில் இருந்து உங்க பார்வ்வை வித்தியாசமாக இருக்கு. //

நன்றி கோபி.

//கதைகளில் சொல்லப்படாத காதபாத்திரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அப்படிப்பட்ட காதபாத்திரங்களை வைத்து எழுதுங்கள் கதிர்

வாழ்த்துக்கள் ;-)) //

கண்டிப்பா எழுதறேன்.

கதிர் said...

//கதிரவன் said...
தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்னு தோணுது.
//

வாங்க கதிர்.

எழுதின பிறகு சுருக்க மனசே வரல.
அடுத்த முறை வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதாமல் காட்சிப்படுத்த முயல்கிறேன்.

நன்றி.

//சூப்பராக இருக்கிறது தம்பி, இன்று முதல் நீ சிறுகதை சூராவளி என்று அழைக்க படுவாய். உனக்கு இந்த சமுகம் கொடுக்கும் பட்டம் இது( நூல் கட்டி பறக்க விடலாமா என்று நீ கேட்டால் நானும் கோபால் மாதிரி மாறி விடுவேன் என்று உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை).. //

வாங்க குசும்பரே!

நீ ஒரு நொடிச்சிறுகதாசிரியன் என்பது இந்த உலகுக்கு தெரியும். :))

கதிர் said...

//கதிரு,

கதை நல்லாயிருக்குப்பா..... :)

நன்றி ராம்.

//கப்பி பய said...

excellent! //

ரீப்பிட்டேய்....//

தேங்கீஸ்

கதிர் said...

//கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங்கள், பொறுப்புகள் அவசியம்.
வாழ்வின் வெளிச்சப் பக்கங்களை சாதாரணமாக சுவையாகச் சொல்லலாம். ஆனால், இருட்டுப் பக்கங்களைச் சொல்லும்போது, வெளிச்சம் எங்கிருந்து வரும் என்பதையும் கூடவே சொல்ல வேண்டும்.
இது கதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றுவது. அன்புடன் //

என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல சுல்தான். கதையில எதாச்சும் கோளாரு இருக்கா? :)
எதாச்சும் புரியாத மாதிரி இருந்தா சொல்லுங்க.

கதிர் said...

//இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?//

சமூக புறக்கணிப்புக்கு ஆளான ஒருவன் தன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கரு. கதையல்ல இது நிஜத்தில் என் ஊரில் நடந்த சம்பவம். உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன்.

//ஆனாலும் நன்றாக இருந்தது //

தன்யனானேன். :)

நன்றி

கதிர் said...

//Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend). //

முடியாது செல்லம். :))

கதிர் said...

//இப்படித்தான் நானும் கதைக்குள்ள வந்தேன்.
திகில் கதை.
சூப்பர் நரேஷன்,.
சிறையில் அவன் பூனைகளுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம்.
நல்ல கதை தம்பி. //

நன்றிங்க வல்லியம்மா!

இங்க இருக்கறதா கேள்விப்பட்டேன். துபாய் பிடிச்சிருக்குங்களா? :)

மாசிலா said...

கதை நன்றாக வந்திருக்கிறது தம்பி.

ஊனமுடையவர்கள் எப்படி முரடர்கள் ஆகிறார்கள் என்பதை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.

இந்த சிறு ஊனமே அவனது வாழ்க்கை அழிவுக்கு காரணமாகிவிடுகிறது. ஊனம் அவனுக்கு என்பதைவிட மற்றவர்கள் அதை சுட்டிக்காட்டி அதையே ஒரு அடையாளமாக ஆக்கிவிடுகிறார்கள்.

கரு நிறமுடையர்கள் இது போல் முரடர்கள் அழகற்றவர்கள் போல் சித்தரிப்பதும் இதுபோலவே.

//"ஏம்மா என்னை ஒரு காலோ அல்லது ஒரு கையோ இல்லாமல் ஊனமா பெத்துருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே இப்படி ஒன்றரை கண்ணோட பெத்துட்டியேம்மா" என்று பள்ளி விட்டு வந்ததும் அம்மா மடியில் புதைந்து அழுதிருக்கிறான்.// உருக்கமான காட்சி.


நன்றி.