எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 21, 2011

லெம்பு ரோடு கறுப்பு ரோஜா


சும்மா திகு திகுன்னு நமீதா உசரத்துக்கு இருப்பா மாப்ள
மாநிறந்தான் ஆனா அவ்ளோ அழகு
Black roseனு எழுதிருக்க கறுப்பு கார்லதான் வருவா
லெம்பு ரோட்லதான் எப்பவுமே பார்க் பண்ணியிருக்கும்
26 வயசுக்கு மேல இருக்கறவன ரிஜக்ட் பண்ணிடறாளாம்
ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான் என்று ரோபோ பாரில்
அமர்ந்தபடி 3 1/2 வெள்ளி பியரை அருந்திக்கொண்டிருந்த
20 வெள்ளி சம்பளக்காரனும் சும்மா அமர்ந்திருந்த
18 வெள்ளி சம்பளக்காரனும் பெருமூச்சொன்றை
விட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். அம்மூச்சின்
சிறு துகளொன்று சற்று தள்ளி ஏதோ ஒரு
அறையில் ஒப்பனையிலிருந்த கறுப்பு நமீதாவின்
அருகிலே செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன்
திரும்பிக்கொண்டிருந்தது.

Tuesday, January 11, 2011

19 டி.எம் சாரோனிலிருந்து

10, டவுனிங் தெரு எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானது 19 டி எம் சாரோன். இலக்கிய பரிச்சயம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த ஒரு முகவரி 19 டி.எம் சாரோன். அமீரகத்தில் பத்துக்கு பத்து அறையில் தனியனாக வசித்தபோது எனக்கு நாஞ்சில் நாடனும் முத்துலிங்கமும் அறிமுகமானார்கள். சதுரங்க குதிரை வாசித்த அந்த இரவு அடங்காத அழுகையாய் வெடித்து தனக்குள்ளே முடங்கிப்போனது. ஒரு நாவலின் மூலமாக இவ்வளவு மனவெழுச்சிகள் வாழ்வில் முன் கண்டிராதவை. பின்பு நாஞ்சில் நாடனின் அனைத்து நூல்களையும் தேடிக்கண்டடைந்து வாசித்து தீர்த்தது நினைவிலிருக்கிறது.

பின்பு ஒரு கல்வீட்டின் திறப்புவிழாவின் போது அறிமுகமாகி அவரின் ”நட்சத்திரங்கள் ஒளிந்து
கொள்ளும் கருவறை” வாசித்தபின் உறக்கமில்லாத ஒரு இரவை உண்டாக்கினார்.
ஏழுமலை ஜமா, சத்ரு, ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள் என்று அவர்
அறிமுகப்படுத்திய செந்தழல் மண்ணின் வெப்பம் வாசித்த அந்த இரவில் அறை வெப்பமாவதை உணர முடிந்தது. பிறகு அவரின் பிற படைப்புகளை தேடி வாசிக்க தேடினால் இப்போது கைகளின் 19 டி.எம் சாரோன் தவழ்கிறது இரண்டுக்கும் இடையில் சிலவருட இடைவெளிகள். இதில் தான் சந்த்தித்த கலைஞர்கள், நேசிப்பவர்கள், ஆன்மீகத்தேடல், குழந்தைகள் உலகம், யோகிராம் சுரத்குமாருடனான சந்திப்புகள், சமூகம், மார்க்சிய தேடல்கள் என விரிகிறது.



எப்படிப்பார்த்தாலும் இந்த கட்டுரைத்தொகுப்பைப் பற்றிய அறிமுகமாக இந்த எழுத்து அமையவேண்டும் என்ற என் முனைப்பு இரண்டாவது வரி தட்டச்சு செய்யும்போது காணாமல் போகிறது, மாறாக பவாவும் அந்த குடும்பமும் கண் முன்னே வந்துவிடுகிறது. வருவதை எழுதுவோம் என்றே எழுதுகிறேன்.

கவிதைகளை மைக் பிடித்து மேடையில் வாசிக்கும் சில கவியரங்கங்களை தொலைக்காட்சியிலும் நேரிலுமாக சில முறை கண்டு/கேட்டு கவிதைகளின் மேல் வெறுப்புற்றிருந்தேன். கவிதைகள் ஆசுவாசமாக மனதுக்குள் வாசிக்க மட்டுமே படைக்கப்படுபவை எனவும், நாதசுரத்தை வாசிக்கபோகும் முன் சீவாளியை பீப்பீ என ஒத்திகை பார்ப்பதுபோல் மைக் பிடித்து தட்டி, குரலெழுப்பி வரிகளை இரண்டிரண்டு
முறை வாசிப்பது மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணுவது என்பது என் எண்ணம்.

ஒருநாள் பகல்பொழுதில் பவாவின் கல்வீட்டின் மையத்தில் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சினிடையே தான் ஒரு கவிதை சொல்லவிரும்புவதாக பவா சொன்னார் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றை அவரின் கணீரென்ற குரலால் சொன்னார். கவிதை முழுக்க நினைவிலில்லை என்றாலும் கேட்டதை வைத்து கீழே தருகிறேன். பேருந்தில் ஏறி வாய்ப்பாடு, வரைபடம் போன்றவற்றை விற்கும் சிறுவனைப்பற்றியது,

உயிரெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள்
வாய்ப்பாடு
ஆனா ஆவன்னா
உலக நாடுகள் அவற்றின் தலைநகரங்கள்
இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள்
STD ISD கோட் நம்பர்கள்
உலக மேப்
இந்தியா மேப்
இப்படி எல்லா தகவல்களும் அடங்கிய இந்த புத்தகத்தின் விலை பத்தே பத்து ரூபாய்
வாங்கிக்குங்க சார் வாங்கிக்கு சார் என்று கூவியபடி வருகிறான். எவருமே
வாங்கவில்லை. இறங்கப்போகும் முன் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு அம்பது காசு
இருந்தா குடுங்கண்ணா என்று இறைஞ்சுவதாக முடியும்.

கேட்டு முடித்தபின் அனைவரும் சாப்பிட்டு முடித்த தட்டத்தை அப்படியே கையில் பிடித்தவாறு செய்வதறியாது அமர்ந்திருந்தோம்.யாரும் பார்க்காதவண்ணம் என் கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்தேன். கவிதை மிக சாதாரணமானதுதான். ஆனால் வரிகளுக்கேற்ற தாள லயத்துடனும் சோகத்துடன் அவர் முடித்த கடைசி வார்த்தையும் அதிர்ச்சியுற வைத்தது. என் கூற்றுப்படியே மிக ஆசுவாசமாக அந்தக்கவிதையை நான் வாசித்திருந்தால் கூட அவ்வளவு சுத்தமாக உள்ளிறங்கியிருக்காது. சிலருக்குத்தான் அந்த வசீகரமான குரல் கிடைக்கும். இதை தட்டச்சு செய்யும்போது கூட அவரின்
அந்த வாஞ்சையான குரல் என்னை கலங்கச்செய்கிறது.

கடந்த வருட புத்தக வெளியீட்டு விழாவின்போது 19 டி.எம் சாரோனிலேயே சில வாரங்கள்
தங்கி என்னாலான சிறு பங்களிப்பை தரமுடிந்தது மிகுந்த சந்தோஷத்தை தந்தது. ஆனால்
இந்த வருடம் என்னால் பங்குகொள்ள முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கடந்த
வருடம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என சாரோனின் மொட்டை மாடியில் பிழை திருத்தவும்
தட்டச்சு செய்யவும், பேச்சுமாக கழிந்தது. இந்த வருடம் அவை எல்லாவற்றையும் இழந்து
விட்டிருக்கிறேன். வம்சிக்காகவும் மானசிக்காவுமாவது சென்றிருக்கலாம். அவர்கள் மன்னிப்பார்களாக.

கடந்த வருடம் புத்தக சந்தையில் வேலுசரவணனின் தங்கராணி என்ற சிறுவர் நாடகத்துக்கான படங்களை வரைந்து தருவதாக சொன்ன நண்பர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. எனது ஊரில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார்.
பிரபலங்களை மட்டுமே கார்டூனாக கண்ட எனக்கு என் ஊர் மனிதர்களையும், நண்பர்களையும் கார்டூன் வடிவில் அவர் கடையில் வரைந்து வைத்திருந்தது
கண்டு திகைப்புற்றேன். சிறுவர் கதைக்கான சிறந்த படங்களை அவர் வரைய முடியும்
என்று எனக்குத்தோன்ற பவாவிடம் கேட்டேன் சனிக்கிழமை இரவு இருக்கும். பவா உடனே அவரை முடிந்தால் வரசொல்லுங்கள் நேரமின்மை ஒரு காரணம். நண்பர் துரை எழிலனுக்கு
அங்கிருந்தே தொலைபேசினேன். விஷயத்தை சொன்னதும் அரை மணி நேரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்கு பேருந்து ஏறினார். நள்ளிரவு வந்து சேர்ந்தார் குளிர்ந்த அந்த இரவில் அவரை அழைத்து வந்து சூடாக வாசித்து ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் எந்தவித
வரையும் உபகரணங்களும் இன்றி சாதாரண பேனாவினால் கோட்டோவியமாக வரைத்து தந்தார். அன்பினால் நிறைந்த அந்த குடும்பத்தின் சூழலில் இருந்து வெளியேற மனமின்றி எங்களுடனே தங்கி பிழை திருத்துவது, தட்டச்சு செய்வது, வாசிப்பது
நிலத்திற்கு சென்று வருவது என்று இரண்டொரு நாள் இருந்தார்.

கிளம்பிப்போகும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு வாசல்படி தாண்டி வெளியே வந்து பார்த்தவர் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார். வீட்டுன் வாயிலின் முன் அக்குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை நின்று வழியனுப்ப நின்றிருந்தனர். சென்றவர் அப்படியே நின்றுவிட்டார் மறுபடியும் வந்து அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றார். பிறகு தொலைபேசியில் இப்படி சொன்னார். நான் நெறய தெரியாதவங்க வீட்டுக்கு போயிருக்கேன் அதிகபட்சமா பாத்து பத்திரமா போப்பான்னுதான் சொல்வாங்க ஆனா யாரு யெவருன்னே தெரியாத எனக்கு ரெண்டொரு படம் வரைஞ்சு குடுத்ததுக்காக மொத்த குடும்பமுமே வழியனுப்ப வாசல்
வரைக்கும் வந்ததுமே எனக்கு ஒண்ணுமே புரியலய்யா அப்படியே கண்ணு கலங்கிருச்சு. உன் மேல எனக்கு முன்னாடி எந்த விதமான அபிப்ராயமும் இருந்ததில்ல ஒரு நண்பனா உன்ன தெரியும். ஆனா உனக்கு வாசிப்பு ஆர்வமும் எழுத்து ஆர்வமும் இருக்கும் இப்படி ஒரு குடும்பம் நட்பா இருக்கும்னு நெனச்சே பாக்கலய்யா. ரொம்ப பெருமயா இருக்கு கதிருன்னு
சொன்னார். எனக்கும் கூட!

19 டி.எம் சாரோனின் அறிமுகமாக எழுத எண்ணி அம்முகவரியுடனான நட்பை பகிரும் விதமாக இது அமைந்துவிட்டது. அம்முகவரிக்கும் இந்த எளிய வாசகனின் அறிமுகம் தேவையில்லாது என்பதுவும் கூட. ஒரு நல்ல கட்டுரையாளனைப்
பெறுவதற்காக ஒரு அற்புதமான நாவலாசிரியனை இந்த எழுத்துலகம் இழந்து விட்டது என்று நாஞ்சில் நாடனைப் பற்றி சொல்வார்கள். அதுபோல பவாவுக்கு ஏற்பட வேண்டாம் என்பது என் எண்ணம். மேலும் பிரத்யேகமாக நான் அவரிடம் கேட்டுக்கொள்ள ஒன்று இருக்கிறது. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறையின் அனைத்து கதைகளையும்
பவாவின் குரலால் ஒலி வடிவம் பெற்று ஒலித்தகடாக(சரியான பதம்தானா?!) வரவேண்டும் என்பது ஆசை.

புத்தக சந்தையில் கடை எண் 157, 158 ஆகியவை வம்சிக்கு. வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் அந்த எளிய மனிதனை அங்கு சந்திக்கலாம். இதமாக கைகுலுக்கலாம். அந்த குலுக்கலில்
ஆத்மார்த்த நண்பனின் பற்றுதல் இருக்கும்.

நூலின் பெயர்: 19 டி.எம் சாரோனிலிருந்து
விலை: 80 ரூபாய்.

Monday, April 05, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்

நண்பர்களுக்கு

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.




எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.


கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk


முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


தொலைப்பேசி: 9791460680 கதிர்



அன்புடன்
கதிர்

Thursday, February 11, 2010

பூச்சிறுமி


ஜனனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில்
பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள்
பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள்
வாசல்புறத்திலும் வாகனத்திலும்
எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம்
தங்கைக்கும் பூ வைப்பாள்
சாமிக்கென தனியே பூ கொய்வாள்
காலையில் செம்பருத்தி ரோஜாவும்
மாலையில் மல்லிகையும் சூடிக்கொள்வாள்
நேற்றிலிருந்து எனது கணினித்திரைக்கு
அடியிலும் சில பூக்களிட்டிருந்தாள்
இனி தினமும் வைக்கப்போவதாக
சொல்லியிருக்கிறாள்.

Sunday, November 22, 2009

பிரிதுயர்


வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?

Wednesday, November 11, 2009

முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு
உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்
தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது
கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்
எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து
என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி
எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக
இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு
பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய
வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை
தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்
முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை
அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய
செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை
வேறெங்குமே கண்டதில்லை.

கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்
இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே
அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக
வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்
பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து
விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்
நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.

அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே
செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்
தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு
மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த
இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்
சென்றிருப்பார்.

விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்
பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்
ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி
நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்
தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று
விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்
வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா
இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த
ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்
என நினைத்துக்கொண்டிருந்தேன்.

நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த
ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்
கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.

விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து
தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி
கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்
செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்
விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி
அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று
கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்
என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது
கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்
என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்
இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த
எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.

முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து
தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்
பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.

தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்
எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக
மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக
இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்
போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே
என்று தினமும் புலம்புகிறார்.

இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து
கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.

இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த
தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே
ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து
விட்டார்.

வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.




சம்பந்தமில்லாத பின்குறிப்பு

பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்
நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ
எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த
பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.
இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்
முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்
உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--