எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 11, 2022

சுறாக்குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்

 இன்னிக்கு என்ன கதை வேணும்?

ஷார்க் கதை?

ஷார்க்னா என்ன?

அதுவா... அது ஒரு பெரிய மீனு.

அப்படியா, ஷார்க்னா தமிழ்ல சுறா என்று அர்த்தம். சுறா மீன். இதோட பற்கள் பயங்கர கூரா இருக்கும். ரொம்ப ஆபத்தான கடல்வாழ் உயிரினம். இந்த மீன வச்சு நிறைய ஹாலிவுட் படங்கள் வந்திருக்கு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனதும் பாக்கலாம்.

சரி ஓகே. இன்னிக்கு கதையோட பேரு வந்து "சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்"


சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும். 


அது ஒரு பெரிய கடல். நல்ல ஆழமான கடல். ஆழமான கடல்லதான் சுறா மீன் நிறைய இருக்கும். அந்தமாதிரி ஆழமான ஒரு கடலில் ஒரு சுறாமீன் குடும்பம் இருந்தது. அந்த சுறா மீன் குடும்பத்துல புதுசா ரெண்டு சுறாக்குட்டிகள் பிறந்துச்சு. அது ரொம்ப அழகா பயங்கர சுட்டி சுறாக்களா இருந்துச்சு. ஆழமான கடல்ல ஆபத்துகளும் நிறைய இருக்கும் இல்லையா அதனால தன்னோட குட்டிகள பாதுகாக்க ஒரு நல்ல இடம் தேடுச்சாம் பெரிய சுறா. 



அப்படி ஒருநாள் தேடும்போது ஒரு நல்ல இடம் கிடைச்சுதாம். அந்த இடத்துல ஒரு பெரிய போர்க்கப்பல் மூழ்கி இருந்தது. அந்தக்கப்பல் இரண்டாம் உலகப்போர்ல நடந்த சண்டைல மூழ்கிய ஒரு கப்பல். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மூழ்கியதால அது ரொம்ப பாழடைஞ்சி இருந்தது.  அந்த பாழடஞ்ச கப்பல்ல ஒரு கண்ணாடி அறை இருந்தது. அது பாக்க நம்ம வீடுகள் இருக்கற மீன் தொட்டி மாதிரி இருந்துச்சு. இந்த இடம் பாதுகாப்பா இருக்கும்னு நினைக்கிறேன்னு அப்பா சுறா சொன்னது. 



ஆமாங்க இந்த இடம் பாதுகாப்பா இருக்கும் என்று அம்மா சுறா சொன்னது. 

அப்போது அந்தக்கப்பலில் இருந்து ஒரு வயதான ஆமை அவர்களை வரவேற்றது.

ஆமையாரே நீங்க இங்கதான் தங்கி இருக்கிங்களா?

ஆமாம், கடந்த ஐம்பது வருஷத்துக்கு மேல் இங்கதான் இருக்கேன்.

ஏன் நீங்க இங்கயே இருக்கிங்க?



என்னை ஒரு சுறா ரொம்ப வருஷத்துக்கு முன்னர் கடித்துவிட்டது. அதனால் பின்புறம் எனக்கு ஒரு கால் இல்லை. அதனால் வேகமாக நீந்த முடியாது. பாதுகாப்பாக இருக்கும் என்று இங்கயே தங்கிட்டேன் என்றது ஆமை.

சுறா இனத்தின் சார்பாக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். என்றது அப்பா சுறா.

மன்னிப்பெல்லாம் வேண்டாம் சுறா. மிக வயதாகிவிட்டதான் முன்பு போல இரை தேடி வெளியில் செல்ல முடிதில்லை என்றது ஆமை.

எங்களுக்கு இரண்டு பிள்ளை சுறாக்கள் உள்ளது. அவை பெரிதாக வளரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இடம் தேடி வந்தோம். இந்த கப்பல் பாதுகாப்பாக இருக்கும்போல தோன்றுகிறது. எங்களுக்கு இடம் கொடுப்பீர்களா ஆமையாரே?

இந்தக்கடல் எல்லோருக்கும் சொந்தமானது. தாராளமாக இங்கே தங்கிக்கொள்ளலாம் என்றது ஆமை.

ரொம்ப நன்றி ஆமையாரே. நாங்கள் இரை தேடி வெளியே சென்று திரும்பும் வரை எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பசியை நாங்கள் போக்குகிறோம் என்றது சுறா.



மகிழ்ச்சி சுறாவே. இன்றிலிருந்து நான் உங்கள் பிள்ளைகளுக்கு வாட்ச்மேன் போல பாதுகாப்பாக இருப்பேன். பத்திரமாக அந்தக்கண்ணாடி அறைக்கும் பிள்ளைகளை விடுங்கள் என்றது ஆமை.

அந்தக்கண்ணாடி அறை இரண்டு சிறிய சுறாக்கள் நீந்தும் அளவுக்கு இடவசதியுடன் இருந்தது. தாழிட ஒரு கதவும் இருக்கிறது. எனவே இது குட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நிம்மதியடைந்தன பெரிய சுறாக்கள்.

உள்ளே மகிழ்ச்சியுடன் நீந்திக் களித்தன சுட்டி சுறாக்கள். 

ஆமையாரே நாங்கள் இருவரும் இரை தேடிச் செல்கிறோம். நீங்கள் எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டியது.

நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக கிளம்புங்கள் என்றது ஆமை.

இரண்டு பெரிய சுறாக்களும் இரை தேடச்சென்றன. அன்று கடலில் இரை கிடைப்பது பெரிய சாதனையாக இருந்தது. மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. 

அதேநேரம் இங்கே கப்பலிந் அருகில் வசித்து வந்த கெட்டசுறா ஒரு திட்டம் தீட்டியது. புதிதாக வந்த இந்த குட்டி சுறாக்களை தின்றுவிட திட்டம் போட்டது. 



கப்பலின் அருகே சென்று சுறாக்களை தின்ன முயற்சித்தது. கண்ணாடி அறையினை முட்டிப் பார்த்தது. உறுதியான கண்ணாடி அறையினை அந்த கெட்ட சுறாவால் உடைக்க முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி சுறாக்கள் பயந்து அழுதன. சத்தம் கேட்டு வெளிய வந்த ஆமை கெட்ட சுறாவினைப் பார்த்து சொன்னது.

"இங்கே இருந்து சென்று விடு", இவை இரண்டும் எனது பாதுகாப்பில் உள்ளது. இவற்றைக் காக்கும் பொறுப்பும் உள்ளது என்னைத் தாண்டிதான் நீ செல்ல வேண்டும் முடிந்தால் செய்து பார் என்றது ஆமை.

கெட்ட சுறா பயங்கரமாக சிரித்தது, நீ பாதுகாப்பா? உனக்கே ஒரு கால் இல்லாம இங்கயே தங்கி இருக்க, இந்தக் கண்ணாடி அறை இல்லன்னா இந்நேரம் நான் இந்தக் குட்டிக்கள தின்னு ஏப்பம் விட்டுருப்பேன். என்றது

முடிஞ்சா செஞ்சி பார் என்றது ஆமை.

கோபம் வந்த கெட்ட சுறா, தூரத்திலிருந்து வேகமாக நீந்தி வந்து கண்ணாடி மீது மோதியது. ஆனால் கண்ணாடி உடையவில்லை. பதிலாக கெட்ட சுறாவின் மூக்குதான் உடைந்து ரத்தம் ஒழுகியது.

உள்ளே இருந்த குட்டி சுறாவும் ஆமையும் அதைப்பார்த்து சிரித்தன.

என்ன பாத்தா உங்களுக்கு சிரிப்பு வருதா, நான் போய் என் தலைவன கூட்டிட்டு வரேன். அவன் வந்த உடனே உங்க சிரிப்பு எங்க போகுது பாருங்க, அவன் வாலால உங்கள அடிச்சி தின்னுடுவான் என்று சொன்னவாறு அங்கிருந்து கிளம்பியது.

போய் யாரவேணாலும் கூட்டிட்டு வா என்று ஆமை நக்கலடித்தது.

இப்படி சொன்னாலும் ஆமைக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது. இந்த கெட்ட சுறா யாரைக் கூட்டிக்கொண்டு வரும் என்று கணக்குப் போட்டது. கப்பலில் இருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய நீலத்திமிங்கிலம் வசித்து வருகிறது ஒருவேளை அதைக் கூட்டி வந்தால் இந்தக்கப்பலையே புரட்டிப்போடும் பலம் அதற்கு உண்டு. நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தது.



இது போர்க்கப்பல் இங்கே வெடிக்காத குண்டுகள் சில இருந்தது நினைவுக்கு வந்தது. கப்பலின் கீழ் அறைக்கு சென்று ஆமை பார்த்தது. அங்கே வெடிக்காத குண்டுகள் நிறைய இருந்தன.  ஆமையின் அளவின் உள்ள ஒரு குண்டை கஷ்டப்பட்டு நகர்த்தி வந்தது. அந்தக்  குண்டின் மேல் ஆமை போலவே படம் வரைந்தது. யாராவது அந்தக் குண்டைப் பார்த்தால் ஆமை என்றே நினைக்கும் அளவுக்கு அந்தக்குண்டு ஆமை வடிவத்தில் இருந்தது.

அந்த ஆமை குண்டை நகர்த்தி வந்து தான் அமரும் இடத்தில் வைத்துவிட்டு கண்ணாடி அறையின் பின்புறம் மறைந்துகொண்டது.

இங்கிருந்து கோபத்தோடு கிளம்பிச்சென்ற கெட்டசுறா நேராக திமிங்கிலத்திடம் சென்று முறையிட்டது. திமிங்கிலமும் பசியோடு இருந்தது. அதனிடம் எனக்கு சுவையான இரண்டு குட்டி சுறாக்கள் இருக்கும் இடம் தெரியும். அதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். ஆளுக்கு ஒன்றாக சாப்பிடலாம் என்று ஆசை காட்டியது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று கொக்கி போட்டது.

என்ன சிக்கல் என்று திமிங்கிலம் கேட்டது.

அந்த குட்டி சுறாக்கள் இரண்டும் கண்ணாடி அறைக்குள் இருக்கிறது. என்னால் உடைக்க முடியவில்லை. நீங்கள் வந்தால் சுலபமாக உடைக்கலாம். அதுவுமில்லாமல் அங்கே கால் உடைந்த ஆமை பாதுகாப்புக்கு இருக்கிறது.

சரி அதற்கென்ன என்றது திமிங்கிலம்.

அந்த ஒரு கால் உடைந்த ஆமை என்னைப் பார்த்து சவால் விட்டது. அதை மீறி குட்டி சுறாவை தின்ன முடியாதாம். 

அப்படியா, அந்த ஆமையை அப்படியே விழுங்கிவிடுகிறேன். வா போகலாம் என்று புறப்பட்டது திமிங்கிலமும் கெட்ட சுறாவும்.

முன்னரே திட்டமிட்டபடி ஒளிந்திருந்த ஆமை. இவை இரண்டும் எதோ திட்டத்தோடு வருகிறது என்று புரிந்துகொண்டது. 

கப்பலின் அருகே வந்த திமிங்கிலத்திடம் "அங்கே ஒண்ணுந்தெரியாத மாதிரி உக்காந்திருக்கான் பார் அவன முதல்ல முழுங்கிடுங்க திமிங்கிலம் சார்" என்றது கெட்டசுறா.

நேராக ஆமை இருக்குமிடம் சென்று அதை ஒரே வாயில் முழுங்கியது திமிங்கிலம்.

என்னமோ சவால் விட்ட? உன் கத இதோட முடிஞ்சி போச்சு ஆமையாரே. இப்ப நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுறாவ சாப்பிடப் போறோம். என்று நக்கலாக சொன்னது கெட்ட சுறா.

அந்த நொடியில் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஆமை. "உன்னால் ஒருநாளும் என்னை வெல்ல முடியாது" என்றது

கெட்டசுறாவும், திமிங்கிலமும் விழித்தது. இவனத்தான் முழுங்கிட்டோமே எப்படி திரும்ப வந்தான் என இரண்டும் குழப்பமடைந்தது.

"ரொம்ப முழிக்காத, நீ முழுங்குனது என்னையில்ல, அணுகுண்டு முழுங்கியிருக்க, இவன மாதிரி கெட்ட சுறாவோட பழக்கம் வச்சிகிட்டா இதான் உனக்கு கதி என்றது ஆமை.

இதைக்கேட்ட திமிங்கிலம் பதறியது, அடப்பாவி சும்மா இருந்த என்னைக் கூட்டி வந்து இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்க வச்சிட்டியே என்று கதறிய திமிங்கிலம் பக்கத்தில் இருந்த கெட்ட சுறாவை லபக்கென முழுங்கி அங்கிருந்து ஓடியது.

கொஞ்ச தூரம் சென்றவுடன் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த குண்டு வெடித்தது. கடலே அதிர்ந்துபோகும் அளவுக்கு பயங்கர சத்தம். நீல நிறக்கடல் செந்நிறமாக மாறியது. உள்ளே இருந்த கெட்டசுறாவும் வெடித்து செத்தது.

கண்ணாடி அறையில் இருந்த குட்டி சுறாக்கள் பயந்து நடுங்கின. யாரும் பயப்பட வேணாம். இனிமேல் நமக்கு ஆபத்தில்ல என்றது ஆமை.

அந்த நேரம் இரை தேடிச்சென்ற பெரிய சுறாக்கள் திரும்பி வந்தன. அங்கே எல்லாமே சிவப்புற நிறத்தில் இருந்தததும் குட்டிகளுக்கு எதோ ஆபத்து போல என்று நினைத்து அழுதுகொண்டே ஓடி வந்தன். ஆனால் அங்கே குட்டிகள் பாதுகாப்பாக இருப்பதைக்கண்டு நிம்மதியடைந்தன.

என்ன ஆச்சு ஆமையாரே? ஏன் இவ்வளவு ரத்தம்?

நடந்த கதையை சொன்னது ஆமை. 

சுறாக்கள் இரண்டும் ஆமையைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னது. எங்கள் வாழ்நாள் பூராவும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்றது.

என்னுடைய கடமை. அதைத்தான் நான் செய்தேன். குட்டிகள் எல்லோரும் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றது ஆமை.

போதுமான அளவு உணவு உள்ளது, வாருங்கள் ஆமையாரே நாம் அனைவரும் பகிர்ந்து உண்ணுவோம் என்றது பெரிய சுறாக்கள்.

கண்ணாடி அறைக்குள் சென்று அவர்கள் அனைவரும் பசி தீர உண்டனர்.

நீண்ட காலம் ஆமையும் சுறாக்களும் நட்போடும், மகிழ்ச்சியோடும் அந்த கப்பலில் வாழ்ந்தனர்.


No comments: