எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, March 27, 2018

டண்டண்டண் டண் டக்க

மனைவி ஊருக்குச் செல்வது என்பது கணவர்களுக்கு கொண்டாட்ட மனநிலை. நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கறியும் குடியுமாக இருக்கலாம். நண்பர்களோடு எங்காவது வெளியில் செல்லலாம். சினிமா, வாசிப்பு, ஊர்சுற்றல், மீன் பிடித்தல் போன்ற அபாயமான காரியங்களை எவ்வித இடையூறுமின்றி செய்யலாம். இதுபோன்ற கொண்டாட்டம் எல்லாம் ஊரில்தான் சாத்தியம் கைக்கும் வாய்க்குமான இந்த ஊர் வாழ்வில் அதெல்லாம் யதார்த்தம் மீறிய கனவு. ஒரு அவசர காரியமாக மனைவி சென்ற வாரம் ஊருக்கு போயிருந்தார். மகிழ்ச்சியை வெளிக்காட்டாதது மாதிரியும் பிரிய நேரும் சோகத்தை சுமந்தது மாதிரியும் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் நம் முகம் அந்நேர சுக துக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும் முகம். இரட்டை மனநிலையை நடித்துகூட வரவழைக்க முடியாது. இருந்தும் எப்படியோ ஒப்பேற்றி "நீ இல்லாம நாலஞ்சு நாள் என்ன பண்ண போறன்னே தெரியல" என்பது போல முகத்தை வைத்துக்கொண்டேன். ஒட்டுமொத்த மனைவிகள் சமூகமும் உளவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் கணவர்களை பெர்பார்ம் பண்ண விட்டு கலாமாஸ்டர் போல ரிசல்ட் சொல்வார்கள். "ரொம்ப நடிக்காத" என்பது போல.

சனிக்கிழமை இரவு விமானநிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வெளிவரும்போது நான் முற்றிலும் ஜனகராஜாக மாறியிருந்தேன்.  சின்ன சட்ட சிக்கல் என்னவென்றால் நவீனன் என்னுடன் இருந்தான். அவனை முழுநேரமும் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து அழைத்து வரும்வரை, பிறகு அவன் செய்யும் லோலாயங்கள் அனைத்தையும் ஜென் மனநிலையில் கையாள வேண்டும், இப்படி நாள் முழுவதும் பார்த்துக்கொள்ள வேண்டும். ப்ளே லிஸ்டில் நான்கு படங்களை வரிசையாக ஓடவிட்டால் நாள் முழுவதும் ரெண்டு இஞ்ச் கூட நகராமல் லூப்பில் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பான். அவ்விதம் செய்யலாகாது கண்ணுக்கு கேடு என நிறுத்தினால் அவன் கேள்விக்கணைகள் என்னை நிலைகுலையச் செய்துவிடும். ஒரு பதிலைத் தொடர்ந்து நூறு கேள்விகள் வரும். "ஸ்பைடர் மேன் அண்ணனா, சூப்பர் மேன் அண்ணனா? ஸ்பைடர் மேன் அம்மா யாரு? ஸ்பைடர் பூச்சி கடிச்சா ஸ்பைடர் மேன் ஆயிடலாமா? அந்த பூச்சி எங்க இருக்கு? என்ன அங்க கூட்டிட்டு போப்பா, அத என்ன கடிக்க சொல்லு நான் ஸ்பைடர் மேன் ஆயிடறேன்.  இந்த பில்டிங்லருந்து அப்படியே அந்த பில்டிங்கு இப்படித் தாவறேன் என சோபாவிலிருந்து நேராக என் நெஞ்சில் தரையிறங்குவான். நான் உடல் உறுதியாக இருந்தே ஆகவேண்டும்.

அதெல்லாம் கற்பனை கதாபத்திரங்கள் மை சன் என்று சொன்னாலும் அவன் ஏற்பதில்லை. "நீ பொய் சொல்ற போப்பா" என்பதுபோலவே பார்ப்பான். மனைவி ஊருக்குச் சென்றதும் முதலில் தோன்றியது கொஞ்சம் பன்றிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிடவேண்டும் என்ற வெறி. வீட்டில் சமைப்பதில்லை. அனுமதிப்பதில்லை. நிஜத்தில் நடந்தது என்னவோ மூன்று நாட்களாக அடுப்பே பற்றவைக்கவில்லை. இவனை சமாளிப்பதிலேயே எனது அனைத்து சக்திகளும் கரைந்துவிடுவதை கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்விதம் மனைவி தடை போட்டிருந்தாலும் ஊரில் கதை வேறு. எப்போவாவது மாமனார் பன்றிக்கறி வாங்கிவந்து சமைத்து சாப்பிடுவார். அவரே சமைப்பார். வீட்டுக்கு வெளியே. நல்லா மணக்க மணக்க இறக்கி வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்து பார்த்தால் சட்டி காலியாக இருக்கும். தின்றுவிட்டு ஆளுக்கொரு திசையில் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட வீட்டிலிருந்து வந்து எனக்கு தடை விதித்திருக்கிறார். இது பொதுவாகவே எல்லோர் மனநிலையும் இதுதான். பன்றிக்கறி சாப்பிடுவது இழிவான செயல். அது வெண்பன்றியானாலும் சரி காலா பன்றியானாலும் சரி. வார்டன்னாவே அடிப்போம் மனநிலை.

மாடுதான் கோமாதா வேணாம். பன்றி என்னா பண்ணுச்சி என்று கேட்கக்கூட முடிவதில்லை. பன்றி என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தையாகத்தானே நாம் உபயோகிக்கிறோம். தம்பி இங்கிருந்த வரை எப்போவாவது பன்றிக்கறி சமைத்து பொதி கொண்டுவருவான். பண்ணையாள் போல வெளியில் ஒதுங்கி சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

நெடுநாட்களாக பனிரெண்டு வருட சிவா ஒன்று கிடக்கிறது. அதை என்னவென்று கேடகாலம் என்றாலும் கூட முடிவதில்லை. பின்னிரவில் கூட சாத்தியமில்லை. நவீனனை தூங்கச்செய்துவிட்டு இரண்டு போடலாம் என்றால் என்னை அவன் தூங்கச்செய்துவிடுகிறான்.  காலை எட்டறைக்கு பள்ளி செல்லவேண்டும். பல்விளக்க வைத்து குளிக்க வைத்து, யூனிபார்ம் அயர்ன் செய்து, சாக்ஸ் உள்ளாடையிட்டு, தலைசீவி பவுடர் அடித்து வெளியில் வந்து ஓடி மூச்சு முட்ட பள்ளியில் விட்டால் தண்ணி பாட்டிலை மறந்து விட்டிருப்பேன். சம்பளத்தில் பாதியை பள்ளிக்குதானே தருகிறேன் இன்றொருநாள் குடுக்க கூடாதா என்றால் பிலிப்பைனி டீச்சர் வாழைப்பழக் கூழை வாயில் வைத்துக்கொண்டே ஆங்கிலத்தில் பள்ளி விதிமுறைகள் குறித்த பாடம் எடுக்கிறாள். எல்லாம் முடித்து சலிப்போடு டீக்கடையில் அமர்ந்து தே தாரே குடித்து எழும்போதுதான் நினைவுக்கு வந்தது பர்ஸ் எடுத்து வரவில்லை. கல்லாவில் நிற்பவரிடம் "அப்புறம்ணே எல்லாம் நல்லா போகுதா? வியாபாரம்லா எப்புடி" என்று உறவாடி கடன் சொல்லிவிட்டு வர நேர்ந்தது.

மனைவி சென்ற முதல்நாளே இப்படி. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் மோசம். நான் சரியாக திட்டமிடவில்லை, ரூம்போட்டு திட்டம் போட்டிருந்தாலுமே கூட இதுதான் கதி என்பது போலவே இருந்தது. எதை செய்துகொடுத்தாலும் "காண்டாமிருகம் சுச்சா" மாதிரி இருக்கு என்பது போல நவீனன் பார்வை இருந்தது. சமையல் க்ரிட்டிக்கில் இவன் என் வாரிசாக வருவான் என மகிழ வேண்டிய நேரத்தில் வளர்த்த கடா பழமொழியும் நினைவுக்கு வருகிறது. மெனுகார்டை நீண்ட நேரம் மேய்ந்து இட்லி ஆர்டர் செய்வதுபோல அதையும் இதையும் செய்து தின்று பார்க்கவேண்டும் என்ற வெறி உப்புமாவில் வந்து முடிகிறது. இதுதான் வாழ்க்கை. ஏன் இந்த வாழ்க்கை சாமான்யர்களுக்கு மட்டும் தினசரி திண்டாட்டங்களை ஒவ்வொரு நொடியும் வகுப்பெடுத்துக் கொல்கிறது என்று புரிவதில்லை.

நாளை மனைவி வந்துவிடுவார். எல்லா பொறுப்புக்களையும் ஒப்படைத்துவிட்டு அக்கடாவென்று இருக்கலாம் என நினைக்கிறது மனது. இதற்கு முன் இருந்த சலிப்பு நிலையே பரவாயில்லை என்று உணர்த்தியதுதான் இந்த நான்கு நாட்களின் சாதனை. இருகோடுகள் தத்துவம். 
1 comment:

இணைய திண்ணை said...

இரு கோடுகள் தத்துவம் உண்மைதான். புதிய கஷ்டங்கள் வரும்போது பழைய கஷ்டங்களே பரவாயில்லை என்று தோன்றும்.