எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, August 08, 2015

விடை பெறும் நேரம் - கர்ட்லி அம்ப்ரோஸ்

1995 ஆண்டில் இங்கிலாந்து பயணத்தில் இருந்தோம். அப்போதே ஓய்வு பெற விரும்பினேன். பின் இந்தநேரத்தில் ஓய்வை அறிவிப்பது எனக்கும் எனது அணிக்கும் நல்லதல்ல என்று எண்ணி ஓய்வை மறுபரிசீலனை செய்தேன். பிற்பாடு 98ஆம் ஆண்டு வாக்கில் மிக தீவிரமாக ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பாகிஸ்தான் பயணத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தோம். மூன்று டெஸ்டுகளிலும் தோல்வி. கடைசி டெஸ்டில் முதுகுவலி காரணமாக நான் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் பயணத்தின் முடிவில் இதுதான் ஓய்வு பெற சரியான நேரம் என்று நினைத்தேன். ஏனென்றால் நான்கொஞ்சம் கொஞ்சமாக எனது ஆர்வத்தை இழக்கத் தொடங்கியிருந்தேன். லீவர்ட் தீவுக்கு எதிரான உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு திருப்தியாக ஆடிய பின்பு ஓய்வை அறிவிக்கலாம் என்று தீர்க்கமாகவும் முடிவு எடுத்திருந்தேன். அதாவது அடுத்த இங்கிலாந்து தொடர் (1998) விளையாடப் போவதில்லை என்பதே அது.
அணித்தேர்வாளர்கள் அவர்களாக ஒய்வு குறித்து பேசும் முன்பாக நானே அறிவிப்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. மேலும் உள்ளூர் போட்டிகளின்போது வர்ணனையாளர்கள் எனது பந்துவீச்சு குறித்து மோசமாக வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விமர்சனங்களில் இருந்து மீண்டு எனது இடத்தை அணியில் நிரூபிக்கவேண்டும் என்றும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். லீவர்டு போட்டிகளின் போது எனது நெருங்கிய நண்பர் ரோலன் ஹோல்டரிடம் இதுபற்றி ஆலோசித்து ஓய்வு பற்றிய கடிதத்தைக் தயாரிக்க சொல்லியிருந்தேன். ரோலன் அவருடைய நெருங்கிய நண்பரிடம் இது பற்றி விவாதித்திருக்கிறார். அந்த நண்பரோ ஒருபத்திரிக்கையாளர். ரகசியத்தை காக்கத் தெரியாத முட்டாள். அவர் மூலம் என் அனுமதியின்றி எனது ஓய்வு குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துவிட்டது.

 மறுநாளே எனக்கு தொலைபேசி விசாரிப்புகள் ஆரம்பித்து விட்டது. தவிர்க்கமுடியாமல் ஓய்வு பற்றிய செய்திகள் பொய்யானவை என்று அனைவருக்கும் தெரிவித்தேன். ஏனென்றால் என் ஓய்வு இப்படியாக அறிவிக்கவேண்டும் என நான் எண்ணவில்லை. என் வாழ்க்கையில் எல்லாமே மிக நேர்மையாகவேசெய்திருக்கிறேன். அதே போல எனது ஓய்வையும் நாட்டுக்கும், கிரிக்கெட் போர்டுக்கும் முறையாக தெரிவித்த பின்பு தான் ஊடகத்திற்கு தெரிந்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக ஊடகத்திற்கு முதலில் வந்ததை எண்ணி வருத்தமடைந்தேன். ஆகவே ஓய்வு குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டியதாகிவிட்டது.

என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை அப்புறப்படுத்த நினைத்தேன். ஒன்று எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து விடுபடவேண்டும். இரண்டாவது உலகிற்கு தெரியும் முன்பு தேர்வாளர்களுக்கு என் எண்ணங்களை அறியச்செய்வது.

கடைசியில் எல்லாமே சிக்கலாக மாறிவிட்டது. எனது திறமையை மறுபடியும் நிரூபிப்பது எனக்குள் இன்னமும் கிரிக்கெட் இருப்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டும். அதற்கு அணியில் நீடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனது ஓய்வை நானே அறிவிக்கவேண்டும் ஊடகமோ, மற்றவர்களோ அல்ல.

 ஒரு நல்ல பந்துவீச்சாளன் மோசமான நிலையின்போது தனது ஓய்வை அறிவிக்ககூடாது. அந்தவகையில் என்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு தான் நான் நன்றி கூற வேண்டும்.

 கொஞ்சம் வேகமாக நினைவுகளை நகர்த்துகிறேன். 2000த்தின் மே மாதம் மறுபடியும் ஓய்வு குறித்த சிந்தனைகள் என் மனதில் ஓடத்தொடங்கியது. பாகிஸ்தான் அணியுடன் எனது சொந்த மண்ணான ஆண்டிகுவாவில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். எனது பந்துவீச்சில் தோழனும் உடன்பிறவா சகோதரனாக நான் நினைக்கும் கர்ட்னி வால்ஷ் உடன் கலந்து பேசினேன்.

மிக நெருக்கமான தோழன் அவன். என் வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் அவனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறேன். அவனுக்கு நன்றாக பந்துவீச்சு எடுபட்டு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தால் நான் எதிரணிக்கு பதட்டம் குறையாமல் பந்து வீசுவேன். எனக்கு பந்துவீச்சு எடுபட்டு விக்கெட்டுகள் விழுந்தால் அவனும் ஆட்டத்தின் சூடு குறையாமல் பந்து வீசுவான். அவனிடம் நான் கேட்டேன்

”அனேகமாக இந்த போட்டிதான் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

 ”மிக வேகமாக இடைமறித்தவன் நீ கண்டிப்பாக தொடர வேண்டும் என்றான்”

 “ஏன் தொடர வேண்டும் என்று கேட்டேன்?”

 அந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினோம்

 “நீ ஏன் தொடர வேண்டும் ஒரே ஒரு காரணம் சொல்கிறேன். நீ 400 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சேர வேண்டும்.”

 அப்போது நான் 388 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். நேர்மையாக சொல்லப்போனால் எனக்கு எண்ணிக்கையில் விருப்பம் இருந்ததில்லை. 388 என்பதே எனக்கு மகிழ்ச்சியான முடிவுதான். ஆனால் கர்ட்னி என்னைத் தொடர்ந்து 400 கிளப்பில் சேர வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.

 அப்போது அந்த பட்டியலில் கர்ட்னியும் இருந்தான், மேலும் கபில் தேவ், ரிச்சர்ட் ஹட்லீ, வாசிம் அக்ரம் மற்றும் பலர் அந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

நான் எப்போதுமே அணிக்காகதான் விளையாடியிருக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியதில்லை. கர்ட்னி சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இந்த கிரிக்கெட் வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் 400 விக்கெட் கிளப்பில் சேரலாம் என்று முடிவெடுத்தேன். 400வது விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் இப்பட்டியலில் நானும் இருப்பேன்.

 இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக கரீபிய மண்ணில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “இங்கிலாந்து தொடருக்குபின் எனது ஓய்வை அறிவிப்பேன்” என்று சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் எனது ஓய்வை தள்ளிப்போட விருப்பமில்லை. முதலில் விமர்சகர்களுக்கு நிரூபிப்பதற்காக தொடர்ந்தேன். பின்பு என் நண்பன் கர்ட்னியின் வேண்டுகோளுக்காக தொடர்ந்தேன்.

 இங்கிலாந்து தொடரின் கடைசி டெஸ்ட். மற்ற போட்டிகளைப் போலவேதான் இந்த போட்டியும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. என் காதலி ப்ரிகெட் (பிற்காலத்தில் என் மனைவியானவள்) மற்றும் என் இரு மகள்களும் இருந்தனர். முதல் பெண் தான்யா பத்து வயது, இரண்டாவது மகள் சிலொ இரண்டு வயது. பின்னர் மேலும் இரண்டு மகள்களை பெற்றுத்தந்தார் என் மனைவி. ஐந்தாவது டெஸ்டின் கடைசி நாளன்று அமைதியான முறையில் இரவுணவை குடும்பத்தோடு சாப்பிட்டோம். ஓய்வு பெறும் நாளன்று என் குடும்பம் என்னோடு இருந்ததை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எவ்வித பதட்டமும் இல்லை. அன்றிரவு நன்றாக உறங்கினேன். இதுதான் முடிவு.

வீட்டில் வராண்டாவில் காலை உயரத்தூக்கி வைத்தபடி அமைதியாக என் வாழ்க்கையை வாழ வேண்டும். காலை வேளைகளில் நன்றாக உறங்க வேண்டும். நான் காலை உணவை ரசித்து சாப்பிடும் வழக்கம் உள்ளவன். அதற்கு இனி எந்த பிரச்சினையும் இருக்காது. கடைசி டெஸ்டின் போது என் மனைவிதான் என்னை எழுப்பினாள். இன்னும் ஐந்து நிமிடம் என்று சொல்லி மறுபடி தூங்குவேன். பின்பு அரக்க பரக்க எழுந்து அணி வீரர்கள் செல்லும் பேருந்தினை பிடிப்பேன். எப்போது ஆறு மணி ஆகும் ஆட்ட நேரம் முடியும் என்றுதான் பார்த்துக்கொண்டிருப்பேன். இத்தொடருக்கு முன் ஓய்வு பெற எண்ணியிருந்த என்னை உற்சாகமூட்டி 400 மைல்கல்லை எட்ட வைத்த என் நண்பன் கர்ட்னியை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

 ஐந்தாவது டெஸ்டின் ஐந்தாவது நாள். நான் மிகுந்த தன்னம்பிக்கை உடையவன். என்னால் பேட்டிங்கில் அதிகபட்சம் 20 அல்லது முப்பது ரன்கள் மட்டுமேசேர்க்க முடியும். ஆனால் பந்தினைக்கொண்டு ஆட்டத்தையே மாற்றிவிட முடியும். அன்று நாங்கள் வெற்றி பெற 374 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 215 ஓட்டத்தில் போட்டியை இழந்தோம். காலையில் போட்டி தொடங்கும்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினோம். ஏழாவது விக்கெட் வீழ்ந்தபோதே ஆட்டம் கையை விட்டுப் போய்விட்டதை உணர்ந்தேன். தோல்வி உறுதியானது என்றவுடன் அதுகுறித்த கவலை இல்லை. இதுதான் கடைசி தினம் நான் மைதானத்தில் இருப்பது.

ஓவல் மைதானத்தில் கூடிய அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று எனக்கு கைதட்டியபடி பிரியாவிடை கொடுத்தனர். இன்னமும் எனக்கு அந்த காட்சி நினைவில் இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரனுக்கு மறக்க இயலாத காட்சி.


மைக் ஆர்தர்டன் மிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என யூகிக்கிறேன். ஏன் என்றால் டெஸ்ட் ஆட்டத்தில் அவரை பதினேழு முறை வீழ்த்தியிருக்கிறேன். அதே போல ஆர்தர்டனும் எங்கள் அணிக்கு எதிராக ஏராளமான ரன்களை குவித்திருக்கிறார். அந்த போட்டியில் அவர் 83 மற்றும் 108 ரன்களை குவித்திருந்தார். ஒரு துவக்க வீரருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலானது புதிய பந்தை எதிர்கொள்வதுதான். ஆர்தர்டன் ஒரு சிறந்த துவக்க வீரர் என்பதில் சந்தேகமில்லை.

 வீரர்களின் அறை அமைதியாக இருந்தது. சக வீரர்களுக்கு என்னை நன்றாக அறிவார்கள். பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று எந்த ஏற்பாடும் செய்யவில்லை. போட்டியில் வென்றிருந்தால் ஒருவேளை கொண்டாடியிருக்க வாய்ப்புண்டு.

 தோல்வியுடன் ஒரு வீரனின் விளையாட்டு முடிவுறுவது சோகமானது. எனது ஆரம்பமும் இப்படித்தான் இருந்தது. ஆம் என் பயணமே தோல்வியில்தான் ஆரம்பித்தது. அதிலே முடிவதில் வருத்தமில்லை.

சிலர் கேட்கிறார்கள் “ஏன் பதினைந்து வருடம் கழித்து இந்த கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. இப்போதுதான் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 80களிலும் 90களின் மத்தியிலும் எங்கள் அணி சவாலான அணியாக இருந்தது. 1988 முதல் 2000 ஆண்டு வரையான கிரிக்கெட் வாழ்க்கையில் மேற்கிந்திய தீவுகள் அணியை பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் நான் உணர்ந்திருக்கிறேன். அக்காலகட்டத்தின் வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1 comment:

வடுவூர் குமார் said...

படிக்க அலுப்பு தட்டவில்லை அந்த வகையில் மொழிபெயர்ப்பு நன்றாகவே வந்துள்ளது.