எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, November 19, 2007

அலெக்ஸ்

அலெக்ஸ் இலங்கைத்தமிழர், தமிழை விட சிங்களம் நன்றாக பேசக்கூடியவர்.
தமிழையும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்தான் ஆனால் கடந்த ஒன்றரை
வருடமாக தமிழை பேச அதிக வாய்ப்பு இல்லாததால் பல வார்த்தைகளை
மறந்து விட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை பேசும்போது காற்றில் துழாவி
வார்த்தைகளை வரவழைக்கிறார் அவை வராதபோது தோற்றுப்போன
குழந்தையின் முகத்தினை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம்.

அலெக்ஸ் நாம் பார்க்கும் உலகத்திலிருந்து விலகி நிற்பவர். அவர் உலகத்தில்
அவரும் அவர் பூனை மட்டுமே பெரும்பாலான நேரத்தினை நிறைத்துக்
கொள்கின்றன. அதற்கு மேல் அவருக்கும் செய்வதற்கு ஒன்றுமில்லை.
எனக்கு அலெக்ஸை இப்போது மூன்று நாட்களாகத்தான் தெரியும். என் வருகை
அவரை மிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. வண்டியை விட்டு இறங்கியதும்
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அளவிட முடியாததாக இருந்தது. மிக
உணர்ச்சிவசப்படுகின்ற ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

அலெக்ஸ் நகரத்திலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கிறார். அல் அய்னின்
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றோமானால்
ஒரு காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த பாக்டரியை நீங்கள் காணலாம். அந்த
பாக்டரியின் எடுக்கமுடியாத எச்சங்களாக ஒரு சில இயந்திரங்களும் சில பொருட்களும்
இருக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் வாட்ச்மேன் பொறுப்பில்தான் அலெக்ஸ்
இருக்கிறார். மாதத்தின் ஐந்தாவது நாளில் சம்பளமும் அதற்கடுத்த நாள் நகரத்திற்கு
சென்று வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு அம்மாத சாப்பாட்டு தேவைக்கான பொருட்களை
வாங்கி வருவார் அந்த ஒருநாள் நகரப்பிரவேசம்.

சுற்றிலும் மொட்டை பாலைவனம். நாளுக்கு நாள் தோன்றி மறையும் மணல் மேடுகள்.
மணலிலேயே இரண்டு மைல் நடந்தால் பந்தயத்திற்கான ஒட்டகங்களை தயார்படுத்தும்
பண்ணை. அங்கு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். தான் இறந்த செய்தி கூட உலகிற்கு
தெரிய ஒரு மாத காலமாகலாம். இதற்கு நடுவிலே அந்த இடத்தில் கடந்த ஒன்றரை
வருடமாக பணியில் இருக்கிறாராம்.

வந்திறங்கியதும் இந்த இடத்தில்தான் நாம் நாலைந்து நாட்கள் தங்க வேண்டும் என்று
நினைக்கும்போதே வயிற்றை கலக்கியது. வெளி உலக தொடர்புகள் அறவே அற்ற
இடம் நினைத்துப்பார்க்கவே கொடுமையாக இருந்தது. என்ன சமைக்கலாம் என்று
கேட்டார். ஏதாச்சும் செய்ங்க என்றேன்.

மாலை நெருங்கி விட்டிருந்தது. அந்த இரவில் பாலைவன் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக
இருந்தது. இதமான குளிர், நிலா வெளிச்சம் மணல் குன்றுகள் எல்லாமே அழகுதான்
என்றாவது ஒருநாள் காணவேண்டிய அழகு அவை. தினமும் அங்கே இருந்தால்
அழகும் சீக்கிரம் சலித்துவிடும்.

அலெக்ஸ் கிட்டத்தட்ட உங்க வாழ்க்கை மாதிரியே ஆங்கிலத்துல ஒரு படம் வந்திருக்கு
தெரியுமா? பார்த்திருக்கிங்களா? என்றேன்.

கடைசியா பார்த்த படம் கில்லி என்று சொன்னார்.

" சிரித்துக்கொண்டே "கேஸ்ட் அவே" னு ஒரு படம் அந்த படம் முக்காவாசி ஒரே
கேரக்டர் ஒரு தீவுல மாட்டிக்கறதுதான். அது விபத்து இது வாழ்க்கை அவ்வளவுதான் வித்தியாசம்".

தனியா என்னதான் பண்ணுவிங்க?

இங்க என்ன வேலை இருக்கு பெருசா செய்யறதுக்கு? என்னை பாத்துக்கறதே
பெரிய வேலையா இருக்கு இதுல என்னங்க அதுவுமில்லாம சொல்லிக்கற மாதிரி
ஒருவேலையும் இல்ல அதான் உண்மை. அதான் நீங்க பாக்கறிங்கல்ல. எந்த நேரமும்
யாராச்சும் போன் பண்ணிகிட்டே இருப்பாங்க. அவங்க கூட பேசிட்டே இருப்பேன்,
அப்போதுதான் கவனித்தேன் அவர் போனில் கிட்டத்தட்ட அரைமணி நேரம்
பேசிவிட்டு வைக்கும்போது மறக்காமல் முத்தம் வைப்பதை.

யாருங்க அதெல்லாம்?

தெரிலங்க. ப்ரெண்ட் ஒருத்தன் ஒருநாள் ஒரு பொண்ணோட நம்பர் தந்தான்.
அதுக்கு போன் பண்ணி பேசினேன். மனசுக்கு இதமா இருந்துச்சு. அப்படி அதிலருந்து இன்னொண்ணு அதுகூட இன்னொண்ணுன்னு கிட்டத்தட்ட பத்து பதினஞ்சு
பொம்பளைங்க நம்பர் இருக்கு ஒண்ணு மாத்தி ஒருத்தரா போன் பண்ணிகிட்டே
இருப்பாங்க. ஜாலியா பேசிட்டு இருப்பேன் நேரமும் போறது தெரியாது. எல்லாருமே
அரபி வீட்டுல வேலை செய்றவங்க. யாரையும் நேர்ல பாத்தது கிடையாது.
அவங்களுக்கு தேவை அன்பான பேச்சுதான். எனக்கும் அதுதான் தேவையா இருக்குது.

இதுக்கு முன்னாடி இங்க யாரு வேலை பார்த்தது?

"அது ஒரு சோகமான கதைங்க சொன்னா கேவலம் இங்க இந்த மாதிரிலாம் நடக்கறத
பாக்கும்போது கடவுள் இருக்காரான்னு சந்தேகமா இருக்குங்க."

அப்படி என்ன நடந்தது?

எனக்கு முன்னாடி இங்க ஒரு நேபாளி வேலை பாத்தாங்க. பாக்கறதுக்கு ஆள்
லட்சணமா கைக்கு அடக்கமா செக்கச்செவுப்பேன்னு இருப்பான். இங்க பட்டான்னு
சொல்ற பாகிஸ்தானி ஆளுங்க பக்கத்துல இருக்கற தோட்டத்துல வேலை
பாக்கறானுங்க. இந்த பையன் இங்க தனியா இருக்கறத பாத்துட்டு நாலஞ்சு பேரா
வந்து வண்டில அள்ளி போட்டுகிட்டு போய் ரெண்டு நாள் கழிச்சிதான் கொண்டு
வந்து விட்டானுங்க.

"தூக்கிட்டு போய் என்ன பண்ணாங்க?"

என்னங்க கேள்வி இது? ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கரை மாதிரி
பொம்பளைங்களயே பாக்காத அவனுவளுக்கு இவந்தான் பொம்பளை மாதிரி
தெரிஞ்சிருக்கான் போலருக்கு. பாவம் இவன் ஆபிஸ்லயும் சொல்லமுடியாம
வெளிலயும் சொல்ல முடியாம அவஸ்தைபட்டிருக்கான். அவனுங்க அடிக்கடி
வந்து தூக்கிட்டு போறதும் ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்து விடறதுமா
இருக்கவே இவன் பொறுக்க முடியாம மெயின் ஆபிஸ்க்கு போய் ட்ரான்ஸ்பர்
கேட்டுருக்கான் வேலைல சேர்ந்தே ரெண்டு மாசம்தான் ஆகுது அதெல்லாம் மாத்த
முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

இங்க வந்து இதோ பக்கத்து ரூம்லதான் தூக்கு மாட்டிகிட்டான் என்று சொல்லி
அலெக்ஸ் சிரித்தார். நான் ஆள் பாக்கறதுக்கு கருப்பா கட்டையா இருக்கறேனா
அதனால பட்டானிங்க வந்து பாத்துட்டு இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு
போயிட்டாங்க. மறுபடியும் அதே சிரிப்பு.

இந்த மாதிரி இடத்தில அவனுங்கதாங்க சரி. நம்மளால எல்லாம் வேலை பாக்க
முடியாது ஏதோ காலக்கொடுமை இங்கலாம் வேலை பாக்க வேண்டியதா இருக்கு.

இப்படி ஒரு மேட்டர சொல்லு நம்மள தூங்கவிடாம பண்ணிட்டிங்களே அலெக்ஸ்.

தூக்கம் வரலன்னா இந்த ஆல்பத்த பாருங்க. இவர்தான் எங்க அப்பா சாகும்போது
எடுத்த போட்டோ. இது என்னோட மனைவி, அந்த சின்ன பொடியன் என்னோட
பையன்.

இது என்னோட பொண்ணுங்க. பசங்கள எல்லாம் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைச்சிகிட்டு
இருக்கேன். அதுக்கேதான் மாசா மாசம் கனமா செலவாகுது.

20 comments:

ஆயில்யன் said...

டெலிபோன் பேச்சுக்கள் பற்றி ரொம்ப பாசிட்டிவ்வாக சொல்லியிருக்கீங்க நினைக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையும் நியாயங்களும் என்றிருக்கும்போது அந்தத் தொலைபேசிப் பேச்சுகளைப்பற்றி நெகட்டிவ்வாகச் சொல்ல வேண்டியதில்லையில்ல ஆயில்யன். கூகுள் போன்ற தளங்களிலே சில சொற்களையிட்டுத் தேடி வரும்போது அந்தச் சொற்களையும் தோராயமாக எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது சில விதயங்கள் புலனாகும். சில மாதங்களுக்கு முன்பு பொறுக்கி தேடுபொறிகளினூடே சில சொற்களையிட்டுத் தேடி வருவதைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருந்தார். அங்கே எழுத நினைத்து மறந்து போனது.. பெரும்பாலும் சில சொற்கள் மத்தியகிழக்கிலிருந்து வரும். கொஞ்சம் இந்தியா இலங்கை போன்ற ஊர்களிலிருந்து.. மிகக்குறைந்த அளவு பிற நாடுகளிலிருந்து. இதற்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையின் நிதர்சனங்களும் சோகங்களும் அனுதாபத்துடன் அணுகப்படவேண்டியவை என்று நினைக்கிறேன். just my two cents.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

btw, nice post as usual kathir.

-Mathy

இராம்/Raam said...

நல்லாயிருக்கு கதிரு...... :)

லொடுக்கு said...

கொடுமை தம்பி :(

அப்புறம் இன்னொரு மேட்டர்... வர வர உங்க எழுத்துல அய்யனார் வாசம் அடிக்குது (முதல் பத்து வரிகள்).

கோபிநாத் said...

அலெக்ஸ் மாதிரி நிறைய பேர் இங்கையும் ஒருதன் இருக்கான்.

போன் மேட்டர் எல்லோருக்கும் பொறுந்தும் ;)

நாகை சிவா said...

// இதமான குளிர், நிலா வெளிச்சம் மணல் குன்றுகள் எல்லாமே அழகுதான்
என்றாவது ஒருநாள் காணவேண்டிய அழகு அவை. தினமும் அங்கே இருந்தால்
அழகும் சீக்கிரம் சலித்துவிடும்.//

அனுபவித்த உண்மை

அலெக்ஸ் போன்ற ஆட்கள் எங்கும் நிறைந்து உள்ளவர்கள் தான். காலம் செய்த கோலம்.. யாரை குற்றம் சொல்ல...

கதிர் said...

வாங்க ஆயில்யன்!
பாசிடிவா சொல்லியிருக்கேன்னா அதுல என்ன நெகட்டிவ் இருக்கு? அவரவருக்கு வர்ற சூழ்நிலை அவருக்கு தனிமையை விரட்டும் வழிகள்ல இதுவும் ஒண்ணு! இதுல தவறேதும் இருக்கறமாதிரி தெரில. வீட்ட மறந்தாதாங்க பிரச்சினை அவர் குடும்பத்தோட வாரம் ஒருமுறையாச்சும் கதைப்பார்.

கதிர் said...

வாங்க மதி!

ரொம்ப உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கிங்க போல. :)
டெலிபோன் பேச்சு பத்தின உங்க கருத்தேதான் என்னோட் கருத்தும்.

நன்றி.

கதிர் said...

வாங்க ராம்!
நான் என்ன பதிவு போட்டாலும் உடனே வந்து நல்ல பதிவு சொல்லிட்டு போற உங்க நல்ல மனசு யாருக்கு வரும்.

பதினாலும் பெத்து பெருவாழ்வு வாழ்க!

கதிர் said...

//கொடுமை தம்பி :(//

நல்லவேளை சரவணான்னு சொல்லாம விட்டிங்களே!

//அப்புறம் இன்னொரு மேட்டர்... வர வர உங்க எழுத்துல அய்யனார் வாசம் அடிக்குது (முதல் பத்து வரிகள்).//

அந்தளவுக்கு மோசமாவா இருக்கு? :(
என்னை கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம். :)

கதிர் said...

//அலெக்ஸ் மாதிரி நிறைய பேர் இங்கையும் ஒருதன் இருக்கான்.//

அதை பத்தியும் எழுதலாமே!

//போன் மேட்டர் எல்லோருக்கும் பொறுந்தும் ;)//

உனக்கும் பொருந்துமா? அப்ப எனக்கும் நாலு நம்பர் தள்ளி விடேன். :)

கப்பி | Kappi said...

//கேஸ்ட் அவே" னு ஒரு படம் அந்த படம் முக்காவாசி ஒரே
கேரக்டர் ஒரு தீவுல மாட்டிக்கறதுதான். அது விபத்து இது வாழ்க்கை அவ்வளவுதான் வித்தியாசம்//

ம்ம்...


நல்ல பதிவுன்னு சொன்னா எல்லா பதிவுக்கும் வந்து இதை சொல்லிடுவியேன்னு நக்கலடிக்கக் கூடாது..இந்த தபா நெசமாலுமே சொல்லுறேன் :)))

அபி அப்பா said...

நலம் தானா தம்பி! நலம் தானா??? உடலும் உள்ளமும் சுகம் தானா??

ஜி said...

:(((

:)))

லொடுக்கு said...

//அந்தளவுக்கு மோசமாவா இருக்கு? :(
என்னை கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்.//

ஹி ஹி... அப்படியில்லை தம்பி.. கீழே பாருங்க..

//அலெக்ஸ் நாம் பார்க்கும் உலகத்திலிருந்து விலகி நிற்பவர். அவர் உலகத்தில்
அவரும் அவர் பூனை மட்டுமே பெரும்பாலான நேரத்தினை நிறைத்துக்
கொள்கின்றன.//

இதை சொன்னேன். :)

கதிர் said...

//நல்ல பதிவுன்னு சொன்னா எல்லா பதிவுக்கும் வந்து இதை சொல்லிடுவியேன்னு நக்கலடிக்கக் கூடாது..இந்த தபா நெசமாலுமே சொல்லுறேன் :)))//

அடிக்கல! :)

கதிர் said...

//நலம் தானா தம்பி! நலம் தானா??? உடலும் உள்ளமும் சுகம் தானா??//

முகம்தான் கொஞ்சம் ஷேப் மாறிடுச்சி. மத்தபடி எல்லாம் சரியாயிடுச்சி. :)

நன்றி ஜியா!

கதிர் said...

//இதை சொன்னேன். :)//

அப்டியா இருக்கு?

ஆயில்யன் said...

//வாங்க ஆயில்யன்!
பாசிடிவா சொல்லியிருக்கேன்னா அதுல என்ன நெகட்டிவ் இருக்கு? //
மதி கந்தாசாமி மற்றும் தம்பிக்கு


எனது கருத்துகள் தவறான புரிதல்களை உணர்த்தும்படி அமைந்ததற்கு மன்னிக்கவும்!
நான் கூறிய அர்த்ததின் தொனி "ஆக்சுவலா இங்க அது மாதிரி பெண் குரலில் பேசி காசு மாற்றும் வித்தை கற்ற சிலரை பார்த்தான் அடிப்படையிலான ஒரு கருத்து!
பட் சொல்ல தெரியாமல் பாசிட்டிவ் என்று போட்டு விட்டேன் மத்தப்படி நான் சொன்ன விஷயம் செம காமெடியாக காணப்படும் விஷய்ம் தான் இங்கு! (கண்டிப்பாக இது சம்பந்தமான பதிவை காண நேரும்போது உங்களுக்கு புரியும்!)