எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, September 17, 2008

கோயில்களைப்பற்றி

கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்
ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்
மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை
முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய
பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்
சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்
எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்
பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள
கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்
மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே
காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.
எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை
அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை
என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்
பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.
கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்
செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.

அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத
குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.
அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்
இருக்கிறது.

தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை
செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது
குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி
கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்
வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்
ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்
இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக
கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா
சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்
மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக
பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல
பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று
ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.
நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு
குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்
ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து
கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்
கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்
போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று
ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு
குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்
அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை
அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்
போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும்.

அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்
மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை
போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்
உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்
கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்
அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்
கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்
கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான
தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.
எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே
இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்
சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்
வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.

எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்
வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு
கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான
விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு
தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.
அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம்.
இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்
குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்
பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்
முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து
வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்
அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த
இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்
அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது
அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்
வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா
தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது
அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து
இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம்.
முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல
தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது
அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,
ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான
பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்
முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்
வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்
வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்
தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்
கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்
தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.
ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து
இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்
முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்
கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட
இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது
போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை
அழைத்துச் செல்லும்.

எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.
அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை
முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்
குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.
சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்
பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்
வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி
சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.

கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்
செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது
எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.

புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு
மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்
என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது
கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்
ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்
என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை
தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.
அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று
அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்
வந்ததே இல்லை.

குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி
இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.
திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள
பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்
அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது
அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்
கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட
அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே
வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை
தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன்.

கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்
இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்
சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.

கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்
நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து
நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.

10 comments:

Anonymous said...

நல்லா தொடங்கினீங்க. ஆனா கொஞ்சம் குழப்பிட்டிங்களே.

சடாரி (தலையில் வைக்கும் குடுவை) பெருமாள் கோவிலில் சரி. விபூதி, குங்குமம் எங்க வந்திச்சு பெருமாள் கோவில்ல. குங்குமமாவது தாயார் சன்னிதியில கொடுப்பாங்க. விபூதி பெருமாள் கோவிலுக்குள்ள கிடையாதே. ம்ம்ம்...

Anonymous said...

அழகாக எழுதியுள்ளீர்கள். ஆனால் இப்படி ஒரு கோவில் உண்மையிலேயே உள்ளதா? ஏனென்றால் பெருமாள் கோவிலில் நந்தி மற்றும் நவகிரகங்கள் இருப்பதில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட ஒரு பூமரம் இருந்தது//

அதன் பெயர்: பவழமல்லிகை. எனக்கும் அந்த வாசம் பிடிக்கும் - பாட்டி வீட்டு நினைவுகளைக் கிளறி விடுவதால்.

//முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில் சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள்.//

எனக்கும் இந்த இயல்பு இருக்கிறது :O)

நல்லதொரு பதிவு.

காயத்ரி said...

// அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது//

ஆமா.. அது பவழமல்லிகை தான். எங்க தெருவுல ஒரு வீட்டு வாசல்ல இருக்கு இந்தச் செடி. வாசத்தை விடவும் அந்தப் பூக்கள் உதிர்ந்து கிடக்கறதைப் பார்க்க்க ரொம்பவும் பிடிக்கும் எனக்கு. செம அழகு!

ஆயில்யன் said...

//கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும்.//

அருமை தம்பி!

பெரும்பாலான கோவில்களில் இந்த மணமே தெய்வீக மணமாக அதுவும் அதிகம் பக்தர்கள் கூடா கோவில்கள்
அமைதி + வவ்வால்களின் சத்தம்+நெய்விளக்கு வாசம்+கற்பூர வாசம்!

நல்லா இருக்கும்!

:)

ஆயில்யன் said...

//அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம்//

எங்க வீட்லயும் அந்த மரம் இருக்கு! :)

பவள மல்லி!

அதிகாலையில் பூக்கும் பூ! ( என்ன பாம்புகளின் நடமாட்டமும் கொஞ்சம் அதிகரிக்கும்!)

அதிகாலை வேளை மெல்லிய பனிக்காற்று பவளமல்லியின் வாசத்தோடு அருமையான பில்டர் காபி!

(இப்படித்தான் கொஞ்சம் காலம் வாழ்ந்தேன்!)

கோபிநாத் said...

அருமை ;)

கப்பி | Kappi said...

வாசம்..ம்ம்ம்

Anonymous said...

நாய் செத்து ரெண்டு நாள் ஆனால் ஒரு மணம் வருமே அது எனக்கு புடிக்கும். உங்களுக்கும் புடிக்குமா தம்பி

பெயர் வெளியிட வெட்கபடும் மூத்தபதிவர்

அய்யனார் said...

/அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது /

எனக்கும் ரொம்ப நாள் கேள்வி இது..அடிஅண்ணாமலை கோயில்ல ஆஞ்சநேயர் கோயில்ல இந்த செடிமரம்?! இருக்கும்..பவழமல்லி ன்னு பட் னு சொன்னவங்களுக்குலாம் நன்றியோ நன்றி :)