எனது சுயபுராணத்துக்கு அவசியமில்லாமல் நேரடியாக பதில்களுக்கு தாவி விடுகிறேன்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நான்காம் வகுப்பு படிக்கும்போது முதல் முதல்ல சினிமா தியேட்டருக்கு
போனேன். ஆனால் நான் ட்யூசன் முடித்து வரும்முன்னரே சித்தப்பாவுடன்
அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் கிளம்பி விட்டார்கள். அடித்து பிடித்து வந்தால் எல்லாம் போய்விட்டார்கள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அரங்கம் நோக்கி
ஓடினேன். டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டார்கள். எப்படியாவது எனக்காக
வருவார்கள் என்று தியேட்டரின் பெரிய கேட் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
யாரும் வருவதாகவே தெரியவில்லை. என்னை திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாக
நினைத்து ஏமாற்றத்தில் அங்கேயே அழுதுகொண்டிருந்தேன். அழுகையின் உச்சமாக
கோபம் தலைக்கேறியதால் அங்கேயே படம் முடியும் வரை அமர்ந்திருக்க முடிவு
செய்து அப்படியே அமர்ந்திருந்தேன். தியேட்டரின் முன் மைதானம் போன்ற
தரையில் அமர்ந்திருந்தபோது பலரும் ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார்கள் வைராக்கியமாய் பதில் பேசாமல் அமர்ந்தே இருந்தேன். ஒருவர் மிட்டாய் வாங்கித்தந்து
யார் வீடுப்பா நீ என்று கேட்டார் அப்போதும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே
வந்தனர் அனைவரும். என்னைப்பார்த்து அக்கா, அண்ணா, தம்பி எல்லாரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு அழுகை தாங்கமுடியாமல் சித்தப்பாவைக்
கட்டிக்கொண்டு முகம் பொத்திக்கொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மறக்காமல்
அப்பாவிடம் வத்தி வைக்க அடுப்பூதும் ஊதாங்கோலால் எனக்கு தர்ம அடி
விழுந்தது. இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் அப்பா கரைந்துபோனார். அடுத்தவாரமே என்னை மட்டும் தர்மதுரை என்ற ரஜினி படத்துக்கு
அழைத்துக்கொண்டு போனார். அவரின் கரம் பிடித்தபடி சென்றது நன்றாக
நினைவிருக்கிறது. இடைவெளியின்போது தின்பண்டமெல்லாம் வாங்கித்தந்து
அசத்தினார். நான் முதலில் திரை அரங்கில்
சினிமா என்று பார்த்தது அதைத்தான். அப்பாவுடன் கடைசியாக பார்த்ததும் அது
ஒன்றுதான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதை அவர் விரும்புவதில்லை.
இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.
உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கவுதமியை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அபுதாபி வந்ததிலிருந்து அரங்கம் சென்று சினிமா பார்க்க அதிகம் வாய்ப்பு
கிடைக்கவில்லை. ஒருமுறை மலையாளி நண்பனை அழைத்துக்கொண்டு குசேலன் சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்ததும் என் மூஞ்சியில் காறி துப்பாத
குறையாக இனிமேல் என்னை தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டேன்னா உன்ன
கொலபண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொன்னான். அவனுக்கு
எப்படியாவது நல்ல படத்தைக்காண்பித்து விடவேண்டும் என்று எண்ணியதால்
தாம் தூம் படத்துக்கு கூட்டிக்கொண்டு போனேன். இந்தப்படத்தையும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக எனது கணினியில் பார்த்த தமிழ்ப்படம் விஜயகாந்த் நடித்த அரசாங்கம்.
நண்பன் ஒருவன் பயங்கர சோகத்தில் இருந்தான். அவனுக்கு சந்தோஷம் வரவேண்டி இந்தபடத்தை எடுத்து வந்தானாம். “வேட்டையாடு விளையாடு ஸ்டைல்ல
எடுத்திருக்காங்க” என்று கமெண்ட் வேறு சொன்னதாலும் வட்டை அறையிலேயே விட்டுவிட்டுச்சென்றதாலும் அதை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
வைதேகி காத்திருந்தால் முதல் அரசாங்கம் வரை விஜயகாந்தின் முறைப்பெண்கள் எல்லாரும் “கட்னா மாமனத்தான் கட்டிக்குவேன்” என்ற ஒரே வசனத்தைதான்
பேசுகிறார்கள். பளிங்கு போன்ற வெண்மையான நம்பியாருக்கு விஜயகாந்த்
பேரனாம். படத்தின் பெரும்பகுதி கனடாவில் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. விஜயகாந்த் எவ்வளவுதான் இண்டலிஜெண்டலியாக படம் எடுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்பதை என்னவென்று சொல்வது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மூன்றாம் பிறை. எவ்ளோ வயசான ஆளுங்க என்று ஸ்ரீதேவி சொல்லும்போதும்,
இறுதியில் கமலின் ஏமாற்றமும் மிகவும் தாக்கியது என்று சொல்லலாம்.
தவிர தேவர்மகன், சேது, பிதாமகன், சுப்ரமணியபுரம் போன்றவையின்
தாக்கம் அதிகம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
படம் பார்த்து சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் அவர் இறந்துபோனதில்
என்ன அரசியல் இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறிந்ததாக தெரியவில்லை.
ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி
அப்பா சொல்வார். நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை சில காட்சிகள்
மட்டும் பார்த்திருக்கிறேன் என்றாலும் சாவித்திரியை மிகவும் பிடிக்கும்.
அதேப்போல சந்திரபாபுவின் நகைச்சுவை மற்றும் பாடல்களும் மிகவும் பிடிக்கும். இருவருமே போதையின் பிடியில் சிக்கி அற்பாயுளில் இறந்து போனார்கள்.
இருவருமே சினிமாவிலும் சொந்தவாழ்விலும் நிறைய இழந்ததினால் தன்னை அழித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் இருவரைப் பற்றியும் ராமகிருஷ்ணன் விரிவாக
எழுதி இருக்கிறார். மனதை கரைய வைக்கும் வாழ்க்கை இருவருடையதும்.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கே தெரியவில்லை என்றாலும்
இதுதான் சட்டென்று மனதில் தோன்றியது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சாருவின் அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகம் படித்தேன். அதற்கு
முன்பு சினிமா தொடர்பாக வாசித்த நூல்கள் சுசி கணேசனின் வாக்கப்பட்ட பூமி,
சேரனின் டூரிங் டாக்கிஸ், ப்ரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை வாசித்திருக்கிறேன். வலைப்பூக்களில் பத்துக்கு எட்டு பதிவுகள் சினிமாவைப்பற்றிதான் வருகின்றன.
7.தமிழ்ச்சினிமா இசை?
தமிழ்சினிமா தவிர வேற இசை இருக்குதா என்ற கேள்விக்கு விடையெல்லாம்
தெரியாது. ஆனால் வீணையின் இசை மிகவும் பிடிக்கும். அடுத்ததாக சாக்சபோன்
பிடிக்கும். வீணையின் இசையில் கூட தமிழ்ப்பட பாடலின் வீணையிசை மட்டுமே பிடிக்கிறது. இளையராஜா மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.
" 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
அதிகம் பார்ப்பதுண்டு. மிகவும் நெகிழ்வில் ஆழ்த்திய படங்களாக
டாமி லீ ஜோன்ஸின் three Buriels மற்றும் Clint Easteood ன் The Bridges of Madison county படமும். shawshank redumption, the way home, Spring Summer Autumn Winter சமீபத்தில் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே!
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடி மட்டுமல்ல மறைமுகத்தொடர்பு கூட இல்லை. எங்கள் ஊர் தியேட்டரில்
போஸ்டர் ஒட்டுகிற பணி செய்யும் தினகரன் என்பவர்தான் என் சினிமா நண்பர்.
அவருக்கு ஏராளமான சினிமாக்களைப் பற்றி தெரியும்.
கல்லூரி படிக்கும்போது இயக்குனராக வேண்டும் என்ற அசட்டு ஆசையெல்லாம்
இருந்தது. தமிழ்சினிமா மேம்பட பார்வையாளனாக மட்டுமே என்னால் செயல்பட
முடியும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பிரகாசமாக இருக்கிறது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
கழிவரையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குமுதமோ ஆனந்த விகடனோ இல்லாமல்
உள்ளே செல்லவே முடியாத பழக்கம் எனக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பத்து இதழ்கள் மட்டுமே அங்கே நிரந்தரமாக இருக்கிறது. அதையேதான் படித்து வருகிறேன். பழையது, புதியது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. எனக்கு வேலை ஆகவேண்டும். பொழுதுபோக்குக்கு புதிய சினிமா மட்டும்தான் இருக்கிறதா என்ன?
இதுவரை வந்த படங்களையெல்லாம் பார்த்து விடவும் இல்லை. எனவே இந்த ஒரு வருடத்தில் பார்க்காத மற்ற திரைப்படங்களை பார்த்துவிட்டால் போகிறது. பொழுதுபோக்குபவனாக எனக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும் சினிமாவையே
நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் நிலைதான் யோசிக்க வேண்டிய விஷயம்.
இப்படி ஒரு மொக்கை போட என்னை அழைத்த பரத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த உங்களுக்கு நன்றிகள்.
நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்
ஆசிப் மீரான்
கோபிநாத்
கப்பி
சென்ஷி
ஜியா
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Sunday, October 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//கனகாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.//
அதிசயப்பிறவியில் தானே கனகா???
கலக்கல் அண்ணன்...:)
\\
இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.
\\
இது மாதிரி பல அனுபவங்கள் இருக்க எனக்கு...:)
ஆனா இதுக்கு உளவியல் காரணங்கள் இருக்குமா என்ன...?
\\
உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கனகாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.
\\
அப்பவேவா...;)
ஆமா தர்மதுரைல கனகா இருக்காங்களா என்ன...
ஒரு சந்தேகத்துலதான் கேட்டேன் கௌதமிதானே தர்மதுரை படத்துல...
\\
ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.
\\
பிடிச்சது படமா இல்ல கங்கனாராவத்தா..:)
\\
ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.
\\
சூப்பர் செலக்சன்...!
பதினோராவது கேள்வியின் பதில் கலக்கல்...
அழைப்புக்கு நன்றி தம்பி ;)
உன்னோட நினைவுகளும் அருமை ;)
//அதிசயப்பிறவியில் தானே கனகா???//
இப்படிதாங்க நானு.... தப்பு தப்பா எழுதறதுல என்னை அடிச்சிக்க ஆளே இல்ல. அது கவுதமி னு வரணும்.
திருத்திடறேன். திருந்தறது கொஞ்சம் கஷ்டம். :)
பதிவையே படிக்காம நேரா கீழ வந்து யாரக் கூப்டிருக்கீங்கன்னு பாத்தேன்... :))
என்னையையும் இந்த ஆட்டைல சேத்ததுக்கு நன்னி... அதனால இந்த ஆட்டை எப்படின்னு ஒரு தடவ உங்க பதிவ படிச்சு தெரிஞ்சிக்கிறேன் :))
வாசிச்சிட்டேன்... சில கேள்விகள தவிர மத்ததெல்லாம் ஈஸிதான்... அதனால எழுதிடலாம் :))
BTW, கௌதமி & பானுப்ரியா எனக்கும் பிடித்த கதாநாயகிகள் :)))
தமிழன்
அத்தனை பின்னூட்டத்துக்கு நன்றி. :))
கோபி, ஜியா
நேரம் கிடைக்குமோது எழுதிடுங்கப்பா
//கோபிநாத் said...
அழைப்புக்கு நன்றி தம்பி
உன்னோட நினைவுகளும் அருமை
//
ரிப்பீட்டே::)
அழைப்பை ஏற்று உடனே பதிவெழுதியதற்கு நன்றி கதிர்!!
// ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த //
உங்களையே நான் ப.தி.கொ வரிசையில் தான் வச்சிருக்கேன்.
//பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி
//
இது தமிழ்சினிமா - தொழில் நுட்ப லிஸ்ட்ல எப்படி சேரும்னு இன்னும் யோசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க பின் நவீனதுவ முறயில பூடகமா எதோ சொல்லவறீங்கன்னு நெனைக்கறேன்.
//தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! //
I agree with you !
////தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! //
அது!!
Post a Comment