எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, August 02, 2016

மனிதக் குரங்கு - சியா ஜூ மிங்

வனத்தின் மலைச்சரிவில் உள்ள கூடாரத்திலிருந்து அவர்கள் நான்கு பேரும் வெளியே வரும்போதுதான் கவனித்தார்கள். அவர்களைச் சுற்றி வளைத்தது போல மனிதக்குரங்குகள் வந்துவிட்டன. அவைகளை தலைமையேற்று நடத்துவது போல ஒரு மனிதக்குரங்கு முன்னேறி வந்துகொண்டிருந்தது. அதனைப்பின்பற்றி மற்ற குரங்குகள் மெல்ல அடியெடுத்து வைத்து வந்துகொண்டிருந்தன. அவைகளின் கைகளில் சிறிய கற்களும் ஒடிந்த கிளைகளும் ஆயுதத்தைப் போல வைத்துகொண்டு மூர்க்கமாக வந்துகொண்டிருந்தது.


நான்கு பேரும் அதிர்ச்சியுடன் அசையாமல் நிற்கிறார்கள். நால்வரின் கையிலும் துப்பாக்கி. பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அத்தனை துப்பாக்கிகளின் குண்டுகள் பாய்ந்தாலும் கூட சில குரங்குகள் மீதம் இருக்கலாம். உயிர் போவது உறுதி. ஆயுதத்தை உபயோகிப்பது சரியான முடிவல்ல என்ற என்னும் முதலாமவன் மெல்ல கிசுகிசுத்தபடி மற்ற நண்பர்களிடம் சொல்கிறான். மறந்தும் கூட சுட்டு விடவேண்டாம். மெதுவாக ஆயுதத்தைக் கீழே போட வலியுறுத்துகிறான். மற்ற மூவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. மெல்ல இறைஞ்சுகிற தொனியில் சூழ்நிலையை விளக்குகிறான். அதிலே ஒருவன் சமாதானமடைந்து சம்மதிக்கிறான்.



முதலில் நம்மாள் அவைகளுக்கு ஆபத்து இல்லை என புரியவைக்க வேண்டும். அவைகளை அதன் போக்கில் விட்டு விடலாம். சரணடைவதைப்போல துப்பாக்கிகளை தூரப்போட்டு கையை உயர்த்தசொல்லி கெஞ்சுகிறான்.
அசைவற்ற முதலாமவனின் காலில் இரண்டு இஞ்ச் அளவுள்ள கட்டெறும்பு ஒன்று ஊர்ந்தபடி மேல்நோக்கி ஏறுகிறது. வியர்வையில் ஊறிய உடம்பில் எறும்பு ஊர்வது எரிச்சலைக் கிளப்பினாலும் இப்போதைய சிறு அசைவும் பெரிய ஆபத்தில் முடியலாம் என எறும்பை அனுமதிக்கிறான்.


மெல்ல பேசி அனைவரையும் சமாதானம் செய்தவன் ஒருசேர துப்பாக்கிகளை தரையில் போட்டு காலால் அதனை தூரத்தள்ளுமாறு பணிக்கிறான். பெரிய கம்புடன் முன்னேறி வந்த தலைமைக்குரங்கு இந்த செய்கையைப் பார்த்தனும் தொலைவில் நிற்கிறது.


முதலாமவன் தான் நின்ற இடத்திலிருந்து நான்கடி முன்னே வைத்து “மன்னிப்பு கோரும் தொனியில் மண்டியிட்டு வேண்டுகிறான்”


தலைக்குரங்கு அவனிடம் வந்து முகத்தை உற்று நோக்குகிறது. மெல்லச் சிரித்துவிட்டு ஒருவிதமான ஒலியெழுப்ப மற்ற குரங்குகள் ஆமோதிப்பதைப் போல சத்தமிட்டு பின்வாங்குகின்றன. சற்று நேரத்தில் அந்த இடத்தில் ஒரு குரங்கு கூட இல்லை. எல்லாம் சென்றுவிட்டன.


ஒரு மாயம் போல நடந்தவற்றை நம்ப முடியாமல் அங்கிருந்து ஊர்சேர்கின்றனர்.


நடந்தவற்றை தம் தாய்தந்தையரிடம் அதிசயத்துடன் பகிர்கிறான் ஒருவன்.


அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவனது அப்பா சொல்கிறார் “அவை உன்னை அடையாளம் கண்டு விட்டன. அதனால் விலகிச் சென்றிருக்கிறது” என்கிறார்.


நான் முன்பே சில முறை சொல்லியிருக்கிறேன்.  என் அப்பாவின் சாயல் உனக்கு வந்திருக்கிறது. உனது தாத்தா மனிதக்குரங்குகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.


ஒருமுறை நமது தோட்டத்தில் புகுந்த மனிதக்குரங்கு பழங்களைப் பறித்து நாசம் செய்துகொண்டிருந்தது. கோபமடைந்த தாத்தா துப்பாக்கியால் குரங்கை குறிபார்த்து சுடத்தயாரானபோதுதான் கவனித்தார். அதன் முதுகில் பெரிய காயம் இருந்தது. அதற்கு ஒரு குட்டியும் இருந்தது. சுடும் எண்ணத்திலிருந்த அவர் அதை மாற்றிக்கொண்டார். அதற்கு முந்தைய தினங்களில்தான் காட்டுத்தீ பரவி பெரும்பகுதி காடுகள் நாசமாகிவிட்டன. அதில்தான் காயம்பட்டிருக்க வேண்டும். மனதை மாற்றிக்கொண்டவர் பறித்த பழங்களை அதை நோக்கி வீசினார். பொறுமையாக அவற்றை சேகரித்த குரங்கு அவ்விடத்தை விட்டு அகன்று விட்டது.



மறுநாள் பழம் கொடுத்த நன்றியின் அடையாளமாக அவ்விடத்தில் ஒரு தகர டின்னை விட்டுச்சென்றிருந்தது குரங்கு. பிறகு தினசரி அத்தகர டின்னில் பழங்கள் போட ஆரம்பித்தார். இப்படித்தான் அவர் குரங்குகளுடன் பழகினார். ஒருகட்டத்தில் அவைகள் அவருடன் நெருக்கமாகிவிட்டன.

ஒருமுறை பன்றிக்கு வைத்த கண்ணியில் ஒரு குட்டிக்குரங்கு மாட்டிக்கொண்டது. அவர் அதைக் காப்பாற்றி சிகிச்சையளித்து ஒப்படைத்தார். அன்றிலிருந்து அவரை தன் கூட்டத்தில் ஒருவராகவே சேர்த்துக்கொண்டது அந்தக்குரங்குகள்.

உனது தாத்தா இறந்தபோது. குரங்குகள் அவரது சடலத்தை இழுத்துச் சென்றுவிட்டன. கடைசிவரை எங்கு தேடியும் ஒரு எலும்புத்துண்டு கூட கிடைக்கவில்லை.

நீ நாளை குரங்குகளை சந்தித்த அதே இடத்துக்கு செல். நிறைய பழங்களை வாங்கிக்கொள். குரங்குத்தலைவன் நின்றிருந்த இடத்தில் அப்பழங்களை விட்டுவிட்டு வந்துவிடு. அவைகளை நாம் வரவேற்கும் விதமாக இதை முயற்சி செய்து பார் என சொல்கிறார்.

மறுநாள் பழங்களை வாங்கிக்கொண்டு அந்த இடத்திற்கு செல்கிறான். கூடையை வைத்துவிட்டு வீடு திரும்புகிறான்.

அதற்கடுத்த நாள் அதே இடத்துக்கு செல்கிறான். பழக்கூடை அங்கு இல்லை. ஆனால் இலைகளால் மறைக்கப்பட்ட சிறு குவியல் இருக்கிறது. அதன் மேல் இரண்டு பட்டாம்பூச்சிகள் சிறகடித்தபடி அமர்ந்திருக்கின்றன. மெல்ல இலைகளை அகற்றிப் பார்க்கிறான். உள்ளே மனித எலும்புக்குவியல் இருப்பதைக் காண்கிறான்.

----


Saturday, May 28, 2016

பால்கனிகள் - சு.வேணுகோபால்



வாசிக்கும் நூல்களைப் பற்றி சிறு குறிப்பாவது எழுதிவிடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் ஒரு சில புத்தகங்கள் பெரிதாக ஈர்ப்பதில்லை. ஈர்க்கும் புத்தகங்களைப் பற்றி எழுத உட்கார்ந்தாலும் முழுபடைப்பை சிறு குறிப்பைக்கொண்டு எழுதிவிடமுடியுமா என்று யோசிப்பதால் எழுதுவதில் ஒரு தயக்கம் உண்டாகிறது. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது. அப்படி ஒரு புத்தகம்தான் சு.வேணுகோபால் அவர்களின் “பால்கனிகள்”. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு நான் பார்த்த வகையில் சு.வே அவர்களைப்பற்றி இலக்கிய உலகில் அறிந்திருக்கவேயில்லை. தீவிரமாக இயங்கவில்லை எனினும் பெரும் எழுத்தாளர் முதல் புதிதாக எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர் வரை அங்கும் இங்குமாக இணையம் முழுக்க பல தகவல்களும் குறிப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இவரைப்பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை. பால்கனிகள் வாசித்து முடித்தபோது ஏன் இவரை இதுநாள் வரை வாசிக்கவில்லை என்று உணர முடிந்தது. இதைப் படி என்று பரிந்துரைத்தவரின் மேல் உள்ள நம்பிக்கையால்தான் இதை வாசிக்கவே ஆரம்பித்தேன். ஒருவித அலட்சியத்துடம் வாசிக்க ஆரம்பித்து பிரமிப்புடன் முடித்தேன் என்பதுதான் உண்மை. அந்த வகையில் பால்கனிகளில் இடம்பெற்றுள்ள இரண்டு குறுநாவல்களுமே மிக முக்கியமான தளத்தில் இயங்கும் சிறந்த படைப்புகள். எளிமையான மொழியும் முகத்தில் அறையும் உண்மைகளுமாக உண்மையான எழுத்து சு.வேணுகோபால் உடையது.


விருத்தாசலம் சென்று வந்த ஒருவரிடம் கண்மணி என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் அவரிடம் ஒரு புத்தகம் இருக்கு வாங்கிட்டு வரணும் என்று வேண்டினேன். அவரும் கண்மணி குணசேகரன் அவர்களைப் பார்த்து அவரின் சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வாங்கி வந்தார். ஒரே ஒரு பிரதிதான் உள்ளது அதையும் என்னிடம் கொடுத்து விட்டார். கூடவே வேறு சில புத்தகங்களையும் அனுப்பினார். சு.வேணுகோபாலின் ”பால்கனிகள்”, தா.பாண்டியனின் “ஒரு லாரி ட்ரைவரின் அனுபவங்கள்”, நாஞ்சில் நாடனின் “தொல்குடி” போன்றவை வந்து சேர்ந்தன.



எதுக்கு இதயெல்லாம் கொடுத்து அனுப்பிருக்கார் என்றுதான் முதலில் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாமல் பால்கனிகள் எடுத்து வாசிக்கத் தொடங்கி முழுவதுமாக வாசித்து முடித்து விட்டேன். சற்றே பெரிய சிறுகதை. குறுநாவல் என்ற வகைக்குள் வருமா என்றறியேன். மொத்தம் அறுபது பக்கங்கள்.

இரண்டு பேரின் பார்வையில் விரியும் கதை. கிட்ணன் என்பவனின் கதை. பின்னாளில் அவன் திருநங்கையாய் மாறுகிறான். அவனை மொத்த குடும்பமும் வெறுக்கிறது ஆனால் திவ்யா என்ற அவளின் சகோதரி வெறுக்கவில்லை. அவன் மீது தனிப்பட்ட ப்ரியம் கொள்கிறாள். ஆண் என அறியப்பட்டிருந்த அவனின் பெண்மை விழித்தெழும் கணங்களில் குடும்பத்தினர் சகோதரன் மூலம் ஏற்படும் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திவ்யாவின் வீட்டிற்கு தஞ்சமடைகிறான். எல்லாவற்றிலும் பெண் தன்மையை உணரும் கிட்ணனை யாருக்குமே பிடிப்பதில்லை, திவ்யாவைத் தவிர. தன் பெரியம்மாவின் அந்திமக் காலங்களில் பணிவிடை செய்ய எல்லோரும் அருவெருப்பாக யோசிக்கும்போது இவன் தனியாளாக பெரியம்மாவை குளிப்பாட்டி, ஆடையிட்டு, மருத்துவ உதவிகள் செய்தல் என பார்த்துக்கொள்கிறான். திவ்யா வங்கி ஊழியை. குழந்தை பெற்றுக்கொண்டு மருத்துவ விடுப்பில் அவ்வீட்டில் கொஞ்சநாள் வாழ்கிறான். திவ்யா வேலைக்கு சென்றிருந்த ஒருநாளில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது என வீட்டின் பின்னால் தூக்கிச் சென்று தன் குறுமுலைகளில் வாய்பதிக்கச் செய்கிறான் கிட்ணன். வேலையிலிருந்து திரும்ப வரும் திவ்யா குழந்தையைக் காணாது தேடும்போது அந்த காட்சியைக் கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைகிறாள். கிட்ணனை கண்டிக்கவில்லை எனினும் உள்ளூர அவனின் மீது வெறுப்பு உண்டாகிறது. அதை உணரும் கிட்ணன் திவ்யாவின் நகைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

பிள்ளை பெற்ற தாய்மார்கள் பிள்ளையை பால் மறக்கடிக்கச்செய்யும் போது மனதளவில் உடைந்துவிடுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் திவ்யா தன் குழந்தையை பால் மறக்கச்செய்ய எடுக்கும் முயற்சிகளை ஒரு பெண்ணே எழுதியிருந்தால் கூட இத்தனை உணர்வுபூர்வமாய் எழுத்தில் கொண்டு வரமுடியுமா என தெரியவில்லை. பால் மறக்கச்செய்தாலும் உடலுக்கு அது தெரியாதல்லவா. சுரப்பது அதன் வேலை. மறக்கச்செய்த முதல் நாளில் திவ்யா பணியில் இருக்கும்போது பால் சுரந்து தானாக வெளியேறி மார்பகம் முழுதும் ஈரமாகிவிடும் சக ஆண் ஊழியர்களிடம் சமாளித்து பாத்ரூம் சென்று ரண வேதனையுடன் பாலை தரையில் பீய்ச்சி அடிப்பாள். நியாயமாக பிள்ளைக்கு சேர வேண்டிய இம்முலைப்பால் வாழ்க்கைச்சூழல் காரணமாக தரையில் சிந்தப்படுவதை எண்ணிக்கொண்டே சத்தமிடாமல் அழுவாள். இந்தப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களில் எழுதியிருக்கிறார். நான் மனைவியிடம் கொடுத்து இந்தப்பகுதியை மட்டும் வாசிக்கச் சொன்னேன். இயல்பிலேயே வாசிப்பதில் எல்லாம் ஆர்வம் காட்டாதவர். படித்து முடித்ததும் யார் எழுதியது எனப்பார்த்தார். ஒரு ஆண் இத்தனை அனுபவப்பூர்மவாக எழுதியிருப்பதைக் கண்டுகொண்டதும் ஆச்சரியப்பட்டார். பால் கசிந்து ஆடையில் பட்டு பின்பு அடைபோல ஆகிவிடும். மெல்லிய பால்வாடையும் வரும். இத்தனையும் கவனித்துக்கொண்டு வேலையையும் பார்க்கவேண்டும். நிஜவாழ்வில் நான் பார்த்தும் கண்டுகொள்ளப்படாத பகுதி இவை. பிள்ளையை பால் மறக்கச் செய்த சூழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

ஓடிப்போன கிட்ணன் ஐந்தாறு வருடங்கள் கழித்து முழுமையான பெண்ணாக வருகிறாள். இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சகோதரனலிருந்து பெற்றவர் ஊரார் என அனைவருமே அடித்து அவமானப்படுத்தியும் அனுப்பும்போது சொல்கிறாள். மறைவா கூட்டிட்டு போய் வாயத்தொறடா வாயத்தொறடா கெஞ்சின நாய்களும், என்னை அவுத்துப் பாத்த நாய்களும் எனக்கு நியாயம் சொல்ல வேணாம். ஒரு வாரிசா எனக்கு சொத்துல பாத்தியதை இருக்கு. என் பங்கை பிரிச்சுக் கொடுங்க என்று எதிர்க்கும்போது மொத்தக் கூட்டமும் சேர்ந்து அடித்து துரத்துகிறது. சொந்தங்களே ஆனாலும் மனிதர்களின் உணர்வற்ற மட்டித்தனமான எண்ணங்களை வேணு இத்தனை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். திருநங்கைகளே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார்கள். அதை வாசித்தும் இருக்கிறேன் அங்கெல்லாம் கண்டுகொள்ளப்படாத பதிவு செய்யாத பல விஷயங்களை அத்தனை கச்சிதமாகவும் நுண்ணுனர்வோடு பதிவு செய்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. பெண்களைத்

காலம் ஓடுகிறது. குழந்தைகளை பெரியவர்களாகிறார்கள், பெரியவர்கள் முதியவர்களாகிறார்கள். கிட்ணன் உலகத்தின் ஒரு மூலையில் வாழ்கிறாள். தன்னை நிராகரித்த, மறுத்த மனிதர்களின் முன்னே தனக்கென ஒரு மேன்மையான வாழ்வை வாழ்கிறாள். திவ்யா தன் பணிசார்ந்த ஒரு கருத்தரங்கிற்காக கோவை செல்லும்போது எதேச்சையாக அங்கே கிட்ணனை சந்திக்கிறாள். தான் நேசித்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை தனக்கு நெருக்கமானவர்களிடம் பிரகடப்படுத்தவேண்டும் என திவ்யாவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே திவ்யா சந்திக்கும் காட்சிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் கீழ்மைகளையும் பகடி செய்வது போல கனவிலும் இல்லாத ஒரு புதுவாழ்க்கையை வாழ்வதைக் காண்கிறாள் திவ்யா. கிட்ணனின் மேல் அளவில்லாத அன்பு சுரக்கிறது. அவள் எவ்விதம் வாழ்கிறாள் என்பதை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

படித்து முடித்து இரண்டு நாட்களாக கிட்ணன் நினைவாகவே இருந்தது. வாசித்தது புனைவாகவே தெரியவில்லை. திருநங்கையாக மாறும் ஒவ்வொரு ஆணும் சந்திக்கும் பாடுகள்தான் அவை. வாழ்நாள் முழுக்க நினைவு கொள்ளும்படியான படைப்பு.

இரண்டாவது குறுநாவல் “இழைகள்”

பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து ஆசிரியராக இருக்கும் ராமமூர்த்தி தனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தான நிகழ்வில் இருந்து தொடங்குகிறது. இதுவும் ஒரு அற்புதம்தான். இன்னொரு பதிவில் இதைப்பற்றி எழுதுவென்.

Wednesday, April 06, 2016

உலக சுகாதார தினம்

காலையிலேயே யாரோ கதவு தட்டினார்கள்.

வீட்டில் கதவு தட்டப்படுவது இது இரண்டாம் முறை. முதல்முறையானது நான் சாவியை தொலைத்தபின் தட்டியதுதான். எல்லோரும் அவரவர்க்கான தனி சாவிகள் உண்டு. ”புக்கு விக்கிறேன்” ”பூ விக்கிறேன்” என்றெல்லாம் கதவைத் தட்டி விற்பனை செய்யும் தொழில் கிடையாது. காரணமில்லாமல் தட்டி தொந்தரவு தந்தால் போலீசுக்கு சொல்லிவிடுவார்கள். விருந்து வந்து தட்ட இது என்ன ஊரா? யாருமே இருப்பதும் தெரியாது செல்வதும் தெரியாது. கண்டிப்பாக வேறு யாரோவாகதான் இருக்க வேண்டும். 

கதவு திறந்தேன். நல்ல ஆங்கிலத்தில் ஒருவர் காலை வணக்கம் சொன்னார். “தேசிய சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து” வருவதாக சொல்லி அடையாள அட்டையைக் காட்டினார். மெல்லிய தேக சீனர்.

“கொசு இருக்கிறதா என சோதனை செய்ய வந்திருக்கிறார்.” என புரிந்துகொண்டேன். வழக்கமாக நடப்பதுதான்.

இங்கு திடீரென வீட்டுக்குள் வந்து சோதனை செய்வார்கள். எங்காவது நீர் தேங்கி நின்றால் சுத்தம் செய்ய சொல்வார்கள். வீட்டில் எங்குமே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள சொல்வார்கள் கொசு ஒன்றைப் பார்த்தாலும் அபராதம் கட்ட சொல்லுவார்கள். குறைந்த அபராதத்தொகை 200 வெள்ளிகள்.

என் வீடானது இரு அறைகளில் பேச்சிலர்களுடன் பகிர்ந்த வீடு. ஓரளவு சுத்தம் பேணி வந்தோம். 

உள்ளே வந்தார் கிச்சன், கழிவறைப்பக்கம் சென்று பார்த்தார். டார்ச் அடித்துப்பார்த்தார். ஒன்றும் இல்லை. தரை துடைக்கும் ப்ளாஸ்டிக் வாலியில் முந்தைய தினம் துடைத்த அழுக்குத்தண்ணீர் இருந்ததை பார்த்து விட்டார்.

“எத்தனை நாளாக இது இங்கிருக்கிறது? என்றார்”

இரவு மாப் போட்டு விட்டு அப்படியே இருக்கிறது. இதோ கீழே ஊற்றி விடுகிறேன் என்றேன்.

இப்படி தேங்கும் அழுக்கு நீரில்தான் கொசுக்கள் முட்டை இடும். இது கொசு பரவும் காலம். மிக அபாயகரமான டெங்கி கொசு பரவுவதாகவும், இந்த ஏரியாவில் “ரெட்  அலர்ட் ஸோன்” செய்திருப்பதாக சொன்னார்.

சென்ற வாரம் 86 வயது மூதாட்டி ஒருவர் டெங்கி காய்ச்சலால் இறந்துவிட்டார். அதை முன்னிட்டு   இப்பகுதியில் எல்லா வீடுகளிலும் சோதனை செய்து எச்சரிக்கை செய்து வருவதாக சொன்னார்.

86 வயது மூதாட்டி இருந்தென்ன போயென்ன என தோன்றினாலும் உயிருக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

இதே அதிகாரியை சென்ற வாரம் காலையில் பார்த்திருந்தேன். கூடவே மருந்து தெளிக்கும் இயந்திரத்துடன் ஒரு வேலையாள் இருந்தார். சந்தேகப்படும் இடங்கள் அனைத்திலும் மருந்து தெளித்தபடி வந்தார் அவர். என் வீட்டுக்கு அருகில் கம்பி வேலி இடப்பட்டிருந்த வெற்றிடம் ஒன்று உண்டு. வேலிக்கு உள்ளே பெயிண்ட் பக்கெட் ஒன்று நெடுநாளாக அதே இடத்தில் இருந்தது போல. ஒருவேளை அதில் தண்ணீர் தேங்கியிருக்கும் என சந்தேகித்தார் போல. உள்ளே போக முடியவில்லை. நின்ற இடத்தில் இருந்தே யாருக்கோ போன் அடித்தார். ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ஆள் வந்து கதவு திறந்து விட்டார். உள்ளே நுழைந்து வாலியை நோட்டமிட்டார். முழுக்க மழை நீர் தேங்கி இருந்தது. கதவு திறந்தவரிடம் அதை சுட்டிக்காட்டி எதோ பேசினார். நாலைந்து போட்டோ எடுத்தார். பின் வாலியை சுற்றி மருந்தடித்துவிட்டு கீழே தண்ணீரை ஊற்றி வாலியை கவிழ்த்துவிட்டு ஸ்பாட் பைன் அடித்து விட்டுச் சென்றார்.

பூட்டியிருக்கிறது என சோம்பல் கொள்ளாமல் போன் அடித்து வரவழைத்து சோதனை செய்தது என் கற்பனைக்கும் எட்டாத செயலாக இருந்தது. 

நன்றி கூறி விட்டு விடை பெறும் முன்பு “ கீழே ஒரு புறா இறந்து கிடக்கிறதே, அதற்கு நீங்கள்தான் அரிசி போட்டீர்களா?” என வினவினார்.

”நம்மள மட்டும் எப்படித்தான் இவ்ளோ சுலபமா கண்டுப்டிக்கறாய்ங்களோ” என நினைத்துக்கொண்டேன். அந்த புறா சீக்கு வந்தது போல நகர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. நல்ல வெயில் வேறு. கைப்பிடி அரிசியும் கொஞ்சம் தண்ணீரும் கொண்டுபோய் படியோரம் நிழலான இடத்தில் விட்டு வந்தேன். பிழைக்குமா, அரிசியை தின்னுமா என்றெல்லாம் தெரியவில்லை. பார்த்தும் காணாதது  போல செல்லக்கூடாதல்லவா. ஊரில் என்றால் பறவைகளுக்கென்று நுரோபின் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து வைத்தால் சரியாகிவிடும். இந்தப்புறாவுக்கு முற்றிய நிலை. அதுவுமில்லாமல் மாத்திரைக்கு எங்கு அலைவது. இது பற்றி தனியே கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் உள்ளது.

இதுக்கு தனியா அபராதம் கட்ட சொல்வார்களோ என்று ஒரு நொடி கலங்கிப்போனேன். புறாவுக்கு உணவளித்தல் கூட இங்கு குற்றம்தான்.

“எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டு  விட்டேன்?”

உன் வீட்டு வாசல்படிலதான் இருந்தது. வேறு யாராவது போட முடியாதல்லவா? மேலும் இந்தியர்கள் இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவயப்படும் மனதும் கொண்டவர்கள். 
சும்மாதான் கேட்டேன். நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். இதற்கு அபராதம் போடுவது என் வேலையல்ல. பயப்பட வேண்டாம் என்றார். மேலும் எச்சரிக்கையுடன் உணவிடுமாறு கேட்டுக்கொண்டார்.



அப்பாடா பிரச்சினையில்லை. கீழே சென்று இருவருமாக அப்புறாவை எடுத்து குப்பையில் வீசினோம்.

மறுபடி நன்றி கூறி விடைபெற்றார். இவர் அரசு அதிகாரிதானா என்று கூட சந்தேகம். ஊரில் என்றால் வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க வரும் பெண் அதிகாரிகள் செய்யும் அழிச்சாட்டியங்களை ஒரு நொடி நினைத்துக்கொண்டேன்.

இந்த சின்ன கொசுவுக்காக இந்த அரசாங்கம் எத்தனை தூரம் அக்கறை எடுத்துக்கொள்கிறது என ஆச்சரியமளித்தது. இணையத்தில் தேடினால் மேலும் பல ஆச்சரியங்கள் கிடைத்தன.

நாடு முழுவதும் பத்தாயிரம் தன்னார்வலர்கள் இந்த வருடம் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் டெங்கினால் ஏற்படும் பிரச்சினைகள், சரிசெய்வது எப்படி, கொசு உற்பத்தி ஆகாமல் தடுப்பது, என பயிற்சியளிக்கப்பட்டவர்கள். இது பருவமே இல்லாத நாடு. கடும் வெயிலும், கடுமையான மழை பெய்யும் தீவு. எவ்வளவுதான் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்க விடுவதில்லை. மழை நின்ற அரைமணி நேரத்தில் தரை பளிச்சென்று இருக்கும். எப்படித்தான் பார்த்துக்கொண்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் நீர் தேங்குமல்லவா? அதைக் கண்டறிவதுதான் தன்னார்வலர்களின் வேலை. 

எத்தனைதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இந்த கொசுக்களை மட்டும் ஒழிக்கவே முடிவதில்லை. முன்பு Den-1 என்ற வைரஸ் முன்பு டெங்கி காய்ச்சலுக்கு காரணமாக இருந்தது என கண்டறிந்தனர். அதோடு இப்போது Den-2, Den-3, Den-4  என வைரஸ் வகைகள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். இவையனைத்துமே கொசு மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல்கள். சரியாக கவனம் செலுத்தி சிகிச்சை எடுக்காவிடில் மரணம் நிச்சயம். இவ்வகை கொசுபெருக்கத்துக்கு காரணம் எல்-நினோ பருவ மாற்றத்தையும் காரணம் என சந்தேகிக்கின்றனர். பொதுவாக ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் வரை இவ்வகை கொசுக்கள் பெருகுவதாக சொல்கின்றனர். சிங்கப்பூரின் இக்குறிப்பிட்ட மாதங்களில் வெயில் அதிகரித்தும் மழை குறைந்தும் காணப்படும். கொசு பெருக வெயில் காலம்தான் அதிகம் உதவுமாம். அதிகபட்சமாக 2013ஆம் ஆண்டில்  22170 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அரசாங்கப்பதிவு சொல்கிறது. இந்த வருடம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரித்துள்ளது.



அரசாங்கங்கள்தான் இப்படி புலம்புகின்றனவே தவிர நான் இந்த நான்கு வருடங்களில் அதிகபட்சமாக ஒரு பத்து கொசுவை பார்த்திருக்கிறேன். ஊரில் என்றால் பத்து நிமிடத்தில் இத்தனை கொசுக்களை ஒரே ஆள் கொன்றிருப்பார். இங்கு குறைந்த அளவு கொசுக்களே இருக்கின்றன. ஆனால் அவைதான் பெரிய பாதிப்பை ஏறுபடுத்தும் வகைகள் போல. ஊரில் உள்ளதெல்லாம் சாதா கொசு. 

இந்த வாரத்தில் மட்டும் 308 பேர் டெங்கி காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவம் முன்னேறிய பொருளாதார தன்னிறைவு அடைந்த நாட்டிலேயே இவ்வளவு பாதிப்பு என்றால் இந்தியா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை நினைத்துப் பார்த்தால் பேரச்சமாக இருக்கிறது.

இவ்வளவு அழிவையும் செய்வது சின்னஞ்சிறு கொசுதான். சாதாரண காய்ச்சல் என்று விட்டுவிடாதீர்கள். மருத்துவரிடம் எல்லாவற்றையும் தெரிவித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எங்குமே நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உயிர் வாழ உயிர் மிக முக்கியம் மக்களே.

சென்ற வாரம் எழுதியது. இன்று ”உலக சுகாதார தினம்” என்பதால் பகிர்கிறேன். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் நம் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மைதான்.

Wednesday, February 10, 2016

வெல்லிங்டன் - சில குறிப்புகள்.

வெல்லிங்டன்


“கரிய அலைபுரளும் சுருள் கூந்தல் கொண்டவள்; பூரண
நிலவின் வதனம் கொண்டவள்; முடிவில்லா ஓரப்
பார்வைகள் கொண்டவள்; அலங்கரித்த மெல்லுடல்
கொண்ட கணிகை. அவளே இந்த இரட்டை பயநாடு.”

நீலகிரி மலைப்பகுதியைப் பற்றி கி.பி 12ஆம் நூற்றாண்டில்
கன்னட மொழியில் எழுதப்பட்ட குறிப்பு.



கவிஞராக அறியப்பட்டவர் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களுக்காக
பேசப்பட்டவர். பல கட்டுரைகள் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியவருமான சுகுமாரனின் முதல் நாவல் வெல்லிங்டன். இவருடைய தனிமையின் வழி எனக்கு மிகப்பிடித்தமான கட்டுரை நூல்களில் ஒன்று. அது ஒன்றுதான் இதை வாசிக்க எனை ஈர்த்தது என்று சொல்லலாம்.


இதை நாவல் என்று சொல்வதை விட நினைவோடை என்று சொல்லலாம்.
நாவலின் ஆரம்ப சில அத்தியாயங்கள் நீலகிரி மாவட்டத்தை உருவாக்கியரான ஜான் சல்லிவனின் பார்வையில் ஆரம்பிக்கிறது. வெள்ளையர்கள் ஆண்ட பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கதை துவங்குகிறது. கோவை மாவட்ட ஆட்சியரான ஜான் சல்லிவன் கவர்னர் சர் தாமஸ் மன்றோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

இந்த மலைப்பிரதேசத்தை பணம் விளையும் பிரதேசமாக மாறச்செய்யும் திட்டத்தை மாட்சிமை தாங்கிய கவர்னர் அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் ஜான் சல்லிவன் எம்.சி.எஸ் சமர்ப்பிக்கிறார். மலைச்சரிவுகளில் ஜீவிதம் நடத்தும் படகர்களும், தோடர்களும் மலபாரிலிருந்து வந்து குடியேறியிருக்கும் மலையாளத்தார்களும் மைசூரிலிருந்து வந்த கன்னடிகர்களும் சமவெளியிலிருந்து
புகையிலை கடத்தல் நிமித்தம் மலையேறி ஸ்திர ஜீவிதமாயிருக்கும் கவுண்டர்களும் பறையர்களும் செய்யும் பாரம்பரிய விவசாயத்தை ஐரோப்பிய முறைக்கு மாற்றலாம். ஐரோப்பிய பூகண்டத்தில் பயிராகும் தாவரங்கள் சகலமும் இந்த மலைத்தொடரில் முளைக்கும். கவர்னர் அவர்களே இங்குள்ள சீதோஷ்ணத்தை சுவிட்சர்லாந்து வெப்பமானியை கொண்டு அளந்தால் இரண்டுமே துள்ளியமானதாக இருக்கக் காண்பீர்கள். மலைச்சரிவுகளில் தேயிலை விளைவதற்கான சாத்தியங்களைக் காண முடிகிறது. இவையெல்லாம் திட்டங்கள். மலையில் பாதைகளை உண்டுபண்ணும் முஸ்தீபுக்காக ஜில்லா நிர்வாகத்தின் சேவையிலுள்ள இருவரை நியமிக்கிறேன். இருவரும் இந்த பணிநிமித்தம் மலைப்பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கவர்னர் அவர்களைக் கோருகிறேன். திட்டமிட்டபடி இவர்களின் சரிவே  பூர்த்தியாகுமானால் நமது கஜானாவில் அதிருஷ்ட தேவதை வாசம் செய்யத்தயங்கமாட்டாள்.

இவ்வாறு கடிதம் நீள்கிறது. மலைப்பாதை அமைக்க சர்வே எடுக்க என நிதி
கோருகிறார். அனுமதிக்கப்படுகிறது. சப்கலெக்டர் ஜே.சி விஷ், கிண்டர்ஸ்லே
ஆகியவர்களின் மேற்பார்வையில் மலைப்பாதை அமைக்கிறார்கள். மிரட்சியுடன் படகர்களும் தோடர்களும் வெள்ளையர்களின் வருகையை பார்க்கிறார்கள். மெல்ல மெல்ல அவர்கள் புழங்கிய இடங்கள் பறிக்கப்பட்டு இடம்பெயர வைக்கப்படுகிறார்கள்.



இன்று நாம் காணும் ஊட்டியும், நீலகிரியும் ஒரு வெள்ளைக்கார கலெக்டரின்
கனவிலிருந்து உதயமானதுதான்.

நாவலை சுவாரசியமாக நகர்த்திச் செல்வதாக  கருதுவது நாவலின்
இடையிடையே வரும் பழங்குடி இனத்தின் பூர்வ கதைகளைத்தான்.
சமவெளி மனிதர்கள் நுழைந்திராத காலத்தில் மலையின் பூர்வ
குடிகளிடையே நிலவி வந்த நம்பிகைகள், மற்றும் செவி வழிக்
கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக புனையப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு கதை.

பழங்குடி இனப்பெண்ணொருத்தி. தேவதை போன்றவள், வனமோகினி
போல காடெங்கும் சுற்றித்திரிபவள், குறும்புக்காரி காற்றைப்போல
சுழன்று வருபவளிடம் ஒருநாள் அவளின் தகப்பன் சொல்கிறன்.
அக்காவுக்கு திருமணமாகி இத்தன வருஷம் குழந்தை கைகூடல.
அதனால நீ வயசுக்கு வந்ததும் மாமனுக்கு இரண்டாம்தாரமா
நீ போகணும், வாரிசு உண்டாக்கனும் என்று சொல்லப்படுகிறது.
அந்த செய்தியை கேட்ட நொடியில் இருந்து தனது குறும்புகள்
அத்தனையும் தொலைக்கிறாள். வயசுக்கே வரக்கூடாது என்று
கூட வேண்டிக்கொள்கிறாள். தன் வயதொத்த பெண்களுடன் காட்டிற்கு
சுள்ளி பொறுக்க செல்லும் ஒருநாளில் அவளின் பெண்மை மலர்ந்து விடுகிறது. புரிந்துகொள்ளும் அவள் கூட்டத்திலிருந்து நழுவி அடர்ந்த காட்டுக்குள் செல்கிறாள். விறகுகளை பாரமாக அடுக்கி அதில் சிதை மூட்டுகிறாள். வனதேவதையை நோக்கி அவள் வேண்டுதல் நீள்கிறது. பரிசுத்தமான என்னை எடுத்துக்கொண்டு என் அக்காவின் வயிற்றில் வாரிசை
உண்டாக்கு என்று வேண்டியபடி சிதையில் இறங்குகிறாள்.
ஊர் திரும்பிய தோழிகள் இவளைக்காணாது திகைக்கின்றனர்.
வெகுதொலைவில் காட்டின் பகுதியொன்றிலிருந்து வானை நோக்கி
கரும்புகை கிளம்புவதை காண்கிறார்கள். அவளின் அக்கா வயிற்றில்
கரு உண்டாகிறது. இது ஒரு செவி வழிக்கதை இதுபோல
பல கிளைக்கதைகள் நாவலின் முதல் சில அத்தியாங்களில் அங்கக்கே
வாசிக்க கிடைக்கிறது.

இன்னொரு செவி வழிக்கதை ஒன்று. நான்கைந்து சகோதரர்களுக்கு கடைசியாக ஒரு தங்கை. பேரழகிலும் பேரழகு. அத்தனை அண்ணன்களும் அவளைத்தாங்குகிறார்கள். மலையின் ஓரிடத்தில் பயிர் செய்து மாடு கன்றுகளோடு வாழ்கிறார்கள். காட்டுக்கு வேட்டையாட வரும் ராஜா அவள் அழகில் மயங்கிவிடுகிறார். தன் அந்தப்புரத்தில் அவளையும் சேர்த்து விட நினைத்து தன் ஆட்களை அனுப்பி அவளை வரச்சொல்கிறார். வீரர்களும் அவளின் அண்ணன்களிடம் இதைச் சொல்கின்றனர். நாளை மாலை குளித்து முடித்து பட்டாடை அணிவித்து தயாராக இருக்கும்படி சொல்லிச்செல்கின்றனர். ராஜாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. துன்பத்திற்குள்ளாகும் அண்ணன்கள் அனைவரும் இரவோடு இரவாக கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு கண்காணாத மலையின் இன்னொரு பக்கத்திற்கு செல்கின்றனர். பல மைல் தூரம் கடந்து வந்த பின்புதான் தெரிகிறது தொட்டிலில் தூங்கிய குழந்தையை எடுக்க மறந்துவிட்டோன் என்று. ஒருவாரு சமாதானம் சொல்லி கிளம்பி புது இடம் சென்று அங்கு ஒரு குடியிருப்பை உருவாக்குகிறார்கள். இப்படித்தான் இனக்குழுக்களுக்கு பயந்து ஒளிந்து சென்று வெவ்வேறு இடங்களில் மக்கள் குடியிருப்பை உண்டாக்கியிருக்கின்றனர் என்பதை நாவலாசிரியர் சொல்கிறார்.


முதல் நான்கைந்து அத்தியாயங்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வெல்லிங்டன் ஊட்டி உருவான விதங்களை விவரித்து செல்லும் நாவல் பின்பு ஊசி என்கிற பாபுவின் பார்வையில் நீண்டு சென்று முடிகிறது. மக்கள் குடியேற்றத்துக்கு பின்னான வெல்லிங்டன் நகரையும் அதில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் பாபுவின் வழியாக சொல்லப்படுகிறது.

வெல்லிங்டன் ஏகாம்பரம் பிள்ளைத்தெரு இங்குதான் கதை நிகழ்கிறது.
அங்குதான் பாபு வாழ்கிறான். போலவே நாவலாசிரியர் சுகுமாரனும்
இதே இடத்தில்தான் தனது இளம்பிராயத்தை கழித்திருக்கிறார். நாவலை
தனது அனுபவத்தினூடே வரலாற்றுத்தகவல்களை வைத்து புனைவு
எழுதப்பட்டிருக்கிறது.

வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னை ஊசி என்கிற பாபுவாக உணர அனேக இடங்கள் உள்ளன. பாசாங்கில்லாத அந்தப்பருவத்தின் நினைவுகள் பல அனைவருக்கும் உண்டு. அந்த தெருவுக்கே செல்லப்பிள்ளையாக
பாபு வளர்கிறான். விமலாம்மாவுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளை அவன்.
தன்னை அம்மா என்று அழைக்காமல் அத்தை என்று அழைக்கிறானே என்று
உள்ளூர அவளுக்கு வருத்தம். 

தன்னிடம் ஒட்டுதல் இல்லை என்பதால் அவனை அக்தர் சாயபு தர்காவுக்கு அழைத்துச்செல்கிறாள். கண்ணீரோடு பாயிடம் முறையிடுகிறாள்.
“என்னோட தம்பி பையன் பாய். பொறந்து ஒரு வருசத்துல தூக்கியாந்துட்டேன். நாங்க ரெண்டு பேருதான தொணையாருக்கட்டும்னு இங்கயே படிக்க வைக்கிறோம். இவங்க மாமாவுக்கு இவன்னா உசுரு,  ஒரு கொறையும் வைக்கிறதுல்ல, எல்லாமே பாத்து பாத்துதான் பண்றேன். கக்கூசுக்கு போனா குண்டி களுவி உடறதுலேருந்து காய்ச்சலானா பக்கத்துலேர்ந்து பாத்துக்கறது வரைக்கும் பாத்து பண்றேன். ஆனா எங்ககிட்ட கொஞ்சங்கூட ஒட்டுதல் இல்ல பாய். ரெண்டு நாளக்கி லீவ் விட்டா கூட அம்மாவ பாக்கனும்னு ஓடறதுலயே இருக்கான். எங்க கூடவே நீங்கதான் எதாவது வழி பண்ணனும் பாய் என்று அழுதபடியே சொல்கிறாள். அவனுக்கு இதுகுறித்து உள்ளூர வருத்தம் இருந்தாலும் விமலாம்மாவை அம்மா என்று அழைப்பதில் ஆரம்பத்தில் இருந்தே புரிந்துகொள்ள இயலாத சிக்கல் இருந்தது. பாய் சாம்பிராணியை அள்ளிப்போட்டபடி எல்லாம் சரியாயிடும் அக்தர் சாயபு பெயரைச்சொல்லி தாயத்து கட்டி அனுப்புகிறார்.

நானும் கூட அப்படியே அண்ணனை இதுவரை பெயரோடு அண்ணா என்று சொல்லியே அழைத்திருக்கிறேன். எத்தனையோ பேர் வற்புறுத்தியும் அக்காவை பெயர் சொல்லியே அழைத்திருக்கிறேன். அண்ணா, அக்கா என்றோ அழைத்து பழகவேயில்லை. எத்தனை முறை அடித்து உதைத்து பார்த்து விட்டு விட்டார்கள். இந்தபகுதியை வாசித்ததும் பழைய நினைவுகள் மீண்டு கண் முன்னே விரிந்தது.

சகுந்தலாவை சக்குக்கா என்றுதான் அழைப்பான் பாபு. பக்கத்து வீடு மிகப்பிடித்தமான அக்கா அவள். எங்கு சென்றாலும் தன்னை துணைக்கு அழைத்துச் செல்பவள். தனியாக சென்றால் கோபித்துக் கொள்வான். சிறுவயதிலிரிந்தே அப்படித்தான். சற்று வளர்ந்தும் கூட தன்னை இன்னும் சிறுவனாகவே அவள் பாவிப்பாள். ஒரு கட்டத்தில் வளர்ந்துவிட்ட தன் முன்னே ஆடை மாற்றுகிறாள். ஆடையே இல்லாமல் ஒரு பெண்ணை பார்க்கிறான். “சக்குக்கா நீ இப்போ பாக்குறதுக்கு கிரவுண்டு மாரியம்மன் கோயில் சிலையாட்டம் இருக்க” என்கிறான். பொய்க்கோபத்துடன்
அவனை அவள் இறுக்கிக் கட்டிக்கொள்கிறாள்.

நாவல் வாசித்ததை ஒரு குறிப்பாக எழுதிவிட வேண்டும் என்று எழுத
அமர்ந்தால் ஒன்றுமே எழுத மறுக்கிறது. இத்தனை பக்கங்கள்
வாசித்தபின் நான்கு வரிகூட எப்படி எழுதவரவில்லை என்று என்னை
நானே கடிந்துகொள்கிறேன்.

சித்தா என்கிற லட்சுமண தாத்தா, ராமசாமி தாத்தா, பெரிய டீச்சர், சரஸ்வதி டீச்சர், கவுரியேச்சி, ராஜு, நஜீர், நந்தகோபால், பெத்துசாமி நாயுடு, மம்மது, ஜானம்மா, தேவகி அம்மாயி, மீரான் பாய், நஞ்சே கவுடர் என்கிற சிரில், ரெஜினா, எபிநேசர், சுசி என ஏராளமான உயிரோட்டமான பாத்திரங்கள் உள்ளது. பனியினூடாக இம்மனிதர்கள் உலவுவது போலவும் அவர்களுடன் நாமும் பயணிப்பது போலவும்தான் நாவல் நகர்கிறது. வாசிக்கும் நேரத்தில் நீங்களே வெல்லிங்டனில் வசிப்பது போலவே உணர்வீர்கள். அம்மனிதர்களுடன் வாழ்ந்துவிடலாம் என்று தோன்றும் அவ்வளவுதான். அமைதியான நேரத்தில் இப்புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் தவற விடாதீர்கள்.