ஒரு சுவாரசியமான பிண்ணனியில்தான் இப்புத்தகம் என்னைச் சேர்ந்தது. நான் வசித்த குரோம்பேட்டையில்தான் எழுத்தாளர் லக்ஷி சரவணக்குமாரும் வசிக்கிறார். அரிதாக நாங்கள் எப்போவாவது சந்தித்துக்கொள்வதுண்டு. பெரும்பாலும் நான் அழைப்பேன். சந்திக்கலாம் என உடனே பதில் அளிப்பார். ராதா நகரில் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில்தான் சந்திப்போம். அப்படி ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது என் சூழ்நிலையை வருத்தத்தோடு அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். மெதுவாக கேட்டுக்கொண்டிருந்தவர் இதுபோன்ற மனசோர்வான நேரங்களில் வாசிக்க என சில புத்தகங்கள் உண்டு. அவை உங்கள் மனதை லேசாக்க உதவும் என “எழுதித் தீராப் பக்கங்கள்” என்ற புத்தகத்தைத் தந்தார். அப்போதுதான் புத்தக சந்தை முடிந்திருந்தது. நான் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தேன். அவை எல்லாமே தொடப்படாமல் தூசு படிந்திருந்தது. அக்குவியலோடு இதையும் சேர்த்து மறந்துவிட்டிருந்தேன். ஒரு விசேஷ தருணத்திற்கு காத்திருந்தது போல தூக்கம் பிடிக்காத இரவொன்றில் எழுந்து ஒவ்வொன்றாக ஒதுக்கி இறுதியாக லக்ஷ்மி கொடுத்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். அன்றையை இரவு முழுக்க அப்புத்தகம் எடுத்துக் கொண்டுவிடும் என்று தெரியவில்லை.
சில புத்தகங்களை நாம் வாரி எடுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு போவோம். சில புத்தகங்கள் நம்மை வாரி எடுத்துச் சென்றுவிடும். நம் வாழ்நாள் எல்லாம் அப்புத்தகத்தை கண்டெடுத்த அல்லது வாசிக்க நேர்ந்த கணங்களை மறக்க இயலாமல் செய்து விடும். ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஒரு புத்தகமாவது வழங்கும். எனக்கு அனேக புத்தங்கள் அந்தரங்கமான நெருக்கமுண்டு. அப்படி ஒரு புத்தகம்தான் “எழுதித் தீராப் பக்கங்கள்”. ஒரு வருடத்தில் நாம் எத்தனையோ புத்தகங்கள் வாசிப்போம் ஆனால் ஒரு புத்தகத்தை அவ்வருடத்தின் மிகச்சிறந்ததாக மனம் பதிவு செய்துகொள்ளும். எழுதித் தீராப் பக்கங்கள் அமைந்தது அப்படிதான். முதலில் இப்புத்தகம் வந்து சேர்ந்த நாட்களில் நான் மிகுந்த உளச்சோர்வாக இருந்தேன். சிங்கையில் இருந்து திடிரென இடம்பெயர்ந்து சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்தேன். வேலையும் இல்லை. மனைவியும் உடன் இல்லை. அவர் மட்டும் சிங்கை திரும்பி வேலையை தொடர்ந்துகொண்டிருந்தார். நானும் பிள்ளைகளும் மட்டுமே. இரண்டு பிள்ளைகளுக்கு எல்லாமுமாக இருப்பதென்பது பெரும் துயரத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிப்பது. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் ஒருநாளின் அனேக நேரங்கள் இருந்தும் மனம் ஒருமிக்கவேயில்லை. சரி, அதுவரை எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டுக் காத்திருந்தபோது அதற்கும் பெரிதாக எதிர்வினை வரவில்லை. குடும்பத்தின் பொருளாதாரம், மகிழ்ச்சி, நிம்மதி, மனைவி சம்பாத்தியத்தில் வாழ்கிறான் எனும் சுற்றத்தின் கேலிப்பேச்சு என சில விஷயங்கள் என்னை அழுத்திக் கொண்டிருந்தபோது அவற்றிலிருந்து என்னை மீட்டது புத்தகங்களும் என் குடும்பமும்தான்.
முதலில் ஆசிரியரின் பெயரை நான் எங்குமே கேள்விப்பட்டதில்லை. ஒரு வாசகனாக பதினைந்து இருபது வருடங்களுக்கு மேலாக வாசித்துக்கொண்டிருக்கிறோம் இப்படி ஒரு பெயர் ஏன் நம் கவனத்துக்கு வரவில்லை என்ற திகைப்பு உண்டானது. முன்னுரையில் ஆசான் மிகவும் விதந்தோதி இருந்தது பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அப்படி எளிதில் பாராட்டு கிடைத்துவிடாது. முன்னுரையைக் கடந்து முதல் அத்தியாத்திற்குள் நுழைந்த உடனே அது என்னை முற்றிலுமாக உள்ளே இழுத்துக்கொண்டது. ஓரிரு வார்த்தைகள் அல்லது அதிக பட்சம் ஒருபக்கம் போதும் இந்த எழுத்துதான் நமக்கான எழுத்து நம் ரசனைக்கு ஒத்துப்போகும் எழுத்து என மனம் வரித்துக்கொள்ளும் அப்படி ஒரு சினேகம் உடனே உண்டானது. இதற்கு முன்பும் இப்படி அதிக உற்சாகமடைந்த புத்தகங்கள் உண்டு. முதல் முறையாக அ.முத்துலிங்கம் நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது இப்படி உணர்ந்தேன், அசோகமித்திரனை, சாரு நிவேதிதாவை, க.சீ சிவகுமாரை, அஷ்வகோஷை, யூமாவை, பஷீரை என ஒரு சிறிய வரிசை உண்டு. முதல் எடுப்பிலேயே நம் மனதில் அந்தரங்கமான இடத்தை பதிவு செய்தவர்கள். இப்படி உண்டாகும் வரிசையை உற்றுநோக்கினால் உங்கள் வாசிப்பின் ரசனையை மிக எளிதாக அடையாளம் காண முடியும். எனக்கு மிக அந்தரங்கமாக அ.முத்துலிங்கம், அசோகமித்திரன், அஷ்வகோஷ் ஆகியோரின் எழுத்துகளை “மாஸ்டர்கள்” என மனம் பதிவு செய்துகொண்டது. இந்த மூன்று எழுத்தாளர்களுக்கும் மூன்று வெவ்வேறான எழுத்து வடிவத்திற்கு மாஸ்டர்கள், இம்மூன்று பேர் எழுத்தின் அடிப்படையான குணமாக நான் கருதுவது “பகடி” ஒரு மெல்லிய நூல் போல ஒவ்வொரு வரிகளிலும் இழைந்துகொண்டே போகும். என் வாசிப்பனுபத்தில் இம்மூன்று மாஸ்டர்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்த வரிசையில் நான்காவதாக செல்வம் அருளானந்தம் அவர்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் வைத்துக்கொண்டேன்.
இந்த நூல் எதைப்பற்றி பேசுகிறது என்றால், எல்லா நூல்களும் என்ன பேசுகிறதோ அதைத்தான் இந்த நூலும் பேசுகிறது. அவற்றைப் பேசிய முறையில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல் துவங்கி அது மிகப்பெரிய தொடர் யுத்தமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்காக, உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கு அகதிகளாக சிதறுண்டுபோனார்கள். அப்படி தன் நிலத்தை, குடும்பத்தை, மக்களை, ஊரை விட்டுப் பிரிந்து ப்ரான்ஸ் தேசத்திற்கு சென்ற ஒருவரின் நினைவுக்குறிப்புகள்தான் “எழுதித் தீராப் பக்கங்கள்” மொத்தமாக 26 அத்தியாயங்கள். ஒவ்வொன்றுமே அதனளவில் மிகமுக்கியமானவை, மிகுந்த அக்கறையோடும், பகடியோடும், சுய எள்ளலோடும் எழுதப்பட்டவை. வலி நிறைந்த அகதி வாழ்க்கையின் பக்கங்களை அதன் வலி குறையாமல் அங்கத நகைச்சுவையோடு எடுத்து நம் முன் வைப்பவை. ப்ரான்ஸ் தேசத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதன் மொழி யாழ்ப்பாணத்தின் கடைக்கோடி கிராமத்தில் புழங்கிய வட்டார மொழி. இந்நூலின் தனிச்சிறப்புக்குக் காரணமே அவ்வட்டார மொழியின் அழகும் புதிதாக நமக்குக் கிடைத்த வார்த்தைகளும்தான். “சலித்துக்கொண்டார்” என்ற வார்த்தையை நாம் உபயோகிக்கும் அதே இடத்தில் ஆசிரியர் “புறுபுறுத்தார்” என்று எழுதுகிறார். அது மேலும் ஒரு சுவையை நமக்கு அளிக்கிறது. புறுபுறுத்தல் என்பதை நாம் பூனைகளைக் குறிப்பிட உபயோகிப்போம். அதன் கோப மனநிலை. புத்தகம் முழுக்க இவ்வார்த்தை நிறைய இடங்களில் வருகிறது. இவ்வார்த்தை உபயோகப்பட்ட இடங்களை மிகவும் ரசித்தேன். “சேட்டை விட்டனீரோ” என்ற வார்த்தை வரும் இடங்களும் ரசித்தேன். இதுவரை வாசித்ததில் இல்லாத புதிய ஒரு மொழியை இதில் கண்டடைய முடிந்தது.
மொப் வாலியுடன் வெரிகுட் பேரழகி, பாதர் ஒடியோ, பத்திருபது பேர் நிற்கும் அறையில் வசிக்க நேரும் பெண், விளம்பர பதாகையை முதுகில் சுமக்கும் தமிழர் ஒருவர், அவருக்கும் அவர் ஆப்ரிக்க காதலிக்கும் மொழிபெயர்க்கச் சென்ற அனுபவம், பொடி விற்கும் ஒருவரின் வாழ்வும் அவரின் பெண் தோழியும, பாரிஸ் வந்தபின்பும் தொடரும் சாதிய மனநிலை கொண்ட ஆட்கள், சமறி என்ற சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல், பாண்டிச்சேரி கேட்டரிங்காரர், என இப்புத்தகம் முழுக்க அபூர்வமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். இரவு நேரங்களில் இதை வாசிக்க நேரும்போது சத்தம் வரும் அளவுக்கு சிரித்திருக்கிறேன். என் மூத்தவன் ஆச்சரியத்தோடு கேட்பான் “புத்தகம் படிச்சா சிரிப்பு வருமா” என. கிட்டத்தட்ட இரண்டு முறை இந்நூலை நான் வாசித்தேன். எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் இதைக் கையில் எடுத்துக்கொள்வேன். இப்புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்ததை விட நமக்கு பெரிதான துக்கம் நேரவில்லை என்ற சமாதானம் உண்டாகும்.
நான் கல்லூரி முடித்த அடுத்த மாதமே துபாய்க்கு அனுப்பப்பட்டேன். அதுவரை வெளிமாநிலம் கூட சென்றறியாத என்னை விமானமேற்றி துபாய்க்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா விசாவில் சென்று பிறகு வேலை தேடிக்கொண்டு விசா மாற்றவேண்டும். அப்போது நிறைய பேர் அப்படிதான் சென்றார்கள். அப்படிச் சென்றபோது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திசைக்கு பஸ் பிடித்து வேலை தேடச்செல்வேன். நாள் முழுதும் அலைந்து திரிந்து பசியோடு அறைக்குத் திரும்பிய பிறகே சாப்பிடவேண்டும். வழியில் சாப்பிடும் அளவுக்கு காசு இருக்காது. “அவுட்ட பாரிசிலை அவியாத கோழி” என்றொரு கட்டுரை இப்படி வெளியே வேலை தேடிச்செல்லும் இருவரைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு வரியும் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம். “திறவாயில் சில்வோபிளே” என்றால் ப்ரெஞ்ச் மொழியில் “தயவு செய்து வேலை தருவீங்களோ” என்று அர்த்தம். இந்த இரு வார்த்தைகளை மட்டும் தெரிந்துகொண்டு பாரிஸ் நகரத்துக்கு வெளியே வேலை தேடி செல்கின்றனர். அன்றைய நாளில் பெரும்பாலும் உணவகங்களில் பீங்கான் கழுவுவது, சுத்தம் செய்வது, மற்ற துப்புரவு பணிகளே அகதிகளுக்கு வழக்கமாக இருந்திருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு கடுமையாக பசிக்கிறது. அருகில் இருந்த எல்லாமே ப்ரெஞ்ச் உணவகங்கள். வேறு வழியில்லாமல் பசி உந்த ஒரு உணவகத்தில் அமர்கிறார்கள் செல்வமும், அங்கிளும். செல்வத்திடம் பத்து ப்ராங்கும், அங்கிளிடம் எண்பது ப்ராங்கும் இருக்கிறது. செல்வம் மெனு அட்டையின் விலைப்பட்டியலைப் பார்த்து அதிர்ந்துவிட்டு தான் ஒரு காபி மட்டும் குடித்துக்கொள்வதாக சொல்கிறார். இருப்பதிலேயே விலை குறைவான உணவு ஒன்றை ஆர்டர் செய்கிறார்கள். ஆர்டர் செய்யும்போது வரும் மொழிப்பிரச்சினையைத் தீர்க்க சமையலறையில் இருந்து இன்னொரு ஈழத்தமிழனே வருகிறான். இங்கு எல்லாமே விலை உயர்ந்தது, நம் வாய்க்கு ஒவ்வாத உணவு, இங்கிருந்து தள்ளிச்சென்றால் நீங்கள் கொடுக்கும் அதே காசுக்கு இருவர் திருப்தியாக சாப்பிட முடியும் என்கிறார். ஆனால் நேரம் பிந்திவிட்டது அவர்கள் பாணையும் ஒயினையும் சாப்பிட்டு தொடங்கிவிட்டனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவு வருகிறது. அவியாத கோழி, உப்பிடாத உருளை எதுவுமே வாயில் வைக்க முடியவில்லை. பணத்தை செலுத்திவிட்டு சாப்பிடாமல் வெளியேறுகிறார்கள். பிறகு இந்த சாப்பாட்டு பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது என விவரிக்கிறது கட்டுரை. அவர்கள் புலம்பெயர விமானத்தில் வெளிக்கிட்ட நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்சினையை எப்படி எதிர்கொண்டார்கள் என எழுதிச்செல்கிறது. இந்நூலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக “அவுட்ட பாரிசிலை அவியாத கோழி”யும், பிடித்த வார்த்தையாக “திறவாயில் சில்வோபிளே” (travail s’il vous plait) யும் மனம் பதிந்துகொண்டது. இந்நூலில் எழுதப்பட்ட அத்தனை அனுபவங்களும் வாசிக்கத் திகட்டாதவை, உங்களது வீட்டு நூலகத்தில் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகமாக இது மாறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
சிங்கப்பூரில் இருக்கும்போது எப்போதாவது இலங்கைத் தமிழர்களை, பாரிலோ, டீக்கடையிலோ, தெருக்களிலோ, பயணத்திலோ எங்காவது ஒரு இடத்தில் பார்க்க நேர்ந்தால் அவர்களிடம் ஒரு உரையாடலை தொடர்ந்துவிட்டு இந்தக்கேள்விக்கு கண்டிப்பாக வந்துவிடுவேன் “உங்களுக்கு கொக்குவில் தெரியுமா”?, “ உங்களுக்கு அல்லைப்பிட்டி தெரியுமா?” என்று கேட்டுவிடுவேன். கொக்குவில் கிராமத்திலே அ.முத்துலிங்கமும், அல்லைப்பிட்டியிலே ஷோபா சக்தியும் சொந்த ஊராகக் கொண்டவர்கள். இதுவரை யாருமே இந்த ஊரை அறிந்தவர்களாக இல்லை. இனிமேல் “உங்களுக்கு சில்லாலை என்ற ஊர் தெரியுமா?” என்ற கேள்வியும் இடம்பெரும். சில்லாலைதான் இந்நூலாசிரியர் செல்வம் அருளானந்தம் அவர்களின் சொந்த ஊர்.
இது ஒரு வேடிக்கைதான் ஆனாலும் ஊர் தொடர்பாக நான் கேட்கும் முக்கியமாக கேள்விகளில் இது ஒன்று. நாகர்கோவில்காரர் எவரையாவது சந்தித்தால் “ஜெயமோகன்” தெரியுமா சுந்தர ராமசாமி தெரியுமா என்பேன், கோவில்பட்டி விருதுநகர்காரர் எவரையாவது சந்தித்தால் மல்லாங்கிணறு தெரியுமா? என்றும், நாஞ்சில் நாட்டுக்காரர் என்றால் வீரநாராயணமங்களம் நாஞ்சில் நாடன், மா.அரங்கநாதன், விருத்தாசலம் என்றால் மணக்கொல்லை கண்மணி குணசேகரன், இமையம். இப்படி நீண்டதோர் பட்டியல் உண்டு. இதுவரை பல ஆட்களிடம் அவர்கள் பகுதியில் புகழ்பெற்ற எழுத்தாளர் இருப்பதைக் குறித்துக் கேட்டிருக்கிறேன். இதுவரை ஒருவர் கூட இன்னாரைத் தெரியும் வாசித்திருக்கிறேன் என்று பதில் அளித்ததில்லை. அதனால் ஒன்றும் பழுதில்லை. நமக்குத் தெரியாத முக்கியமான எழுத்தாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் நாம் என்ன எல்லாவற்றையும் வாசித்துவிடுகிறோமா என்ன. என்றாவது ஒருநாள் எவரிடமாவது கேட்கும்போது இன்னாரைத் தெரியும் என்ற பதில் கிடைத்துவிட்டால் ஒரு சிறிய மகிழ்ச்சி அவ்வளவுதான்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நான் குரோம்பேட்டையில் வாழ்ந்தேன். அந்நாட்களில் என் துயரத்தைப் போக்கிய இப்புத்தகம் எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமானது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு நான் குடும்பமாக சிங்கை திரும்பும் நாளுக்கு முன்பாக எனக்கு புத்தகத்தை அளித்த நண்பர் லக்ஷ்மியிடம் திருப்பியளிக்க சந்தித்தேன். அப்பேச்சின் இடையே இப்புத்தகம் எவ்வளவு தூரம் என்னை இலகுவாக்கியது என்று விதந்தோதிக்கொண்டிருந்தேன். ஆச்சரியமான தற்செயலாக அன்றைய நாளுக்கு அடுத்த தினங்களில் செல்வம் அருளானந்தம் சென்னையில் இருப்பார் என்றும் அவரை சந்திக்க விருப்பமா என்று கேட்டார் லக்ஷ்மி. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் சி.மோகன் அவர்களுக்கு நடக்க இருக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தருவதாக அறிந்தேன். எனக்கு அவரை சந்திக்க ஆசைதான். ஆனால் சூழல் அனுமதிக்கவில்லை. அடுத்த தினங்களில் எதாவதொன்றில் நான் சிங்கை போகவேண்டும். கடைசி நேர பரபரப்பில் சென்னை போன்ற நெருக்கடி மிகுந்த நகரில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சென்றுவரமுடியாது என்பதால் போகமுடியவில்லை. நான் பெரிதும் நேசித்த எழுத்துக்காரர் ஒருவர் நான் விமானமேறும் அதே நாளில் அவர் விமானத்திலிருந்து இறங்கி சென்னை வருகிறார். உலகம் விந்தையானது.