எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, June 19, 2007

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்

ஒரு முறை ஆமியில் இருந்த மாமா அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு வந்தார்கள்
அதை சமைச்சி சாப்பிட்ட பொறவுதான் இந்த வருத்தம் வந்தது. வகுத்துலே
ஊசி கொண்டு குத்துறாப்புல இருக்கி. நாட்டிலே டொக்டரிடம் காட்டினால்
வயித்துலே சிறிய கல் இருக்கிறதெண்டு சொன்னார்கள். ஆப்ரேசன் செய்ய
முடியாதெண்டும் மாத்திரை மூலமே சரிப்படுத்த முடியும் என்றும் சொன்னார்கள்.
சிறீலங்காவிலே பெரிய மருத்துவமனையிலே காட்டிதான் விமானமேறினேன்.
இங்க வந்தபிறகுதான் மறுபடி இந்த வருத்தம் வருதண்ணா. ஏன் எண்டுதான்
விளங்கல்லை.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு வந்த இலங்கை
நண்பரின் பேச்சுதான் இது. திடீர்னு அவருக்கு பயங்கரமான வயித்து வலி
வந்துடுச்சி. டாக்டர்கிட்ட தன் பிரச்சினைய எடுத்து சொல்ற அளவுக்கு ஆங்கிலம்
தெரியாத காரணத்தால் நானும் அவருடன் சென்றேன். அப்படி போனபோது
அவருடன் ஏற்பட்ட உரையாடலே மேல் உள்ளவை.

வாயிலை கடந்து செல்லும்போதும், வரும்போதும் கை அசைப்பார்.

ஏங்க வயித்துல ப்ராப்ளம் வச்சிகிட்டு எதுக்கு வந்திங்க? எல்லாம் சரியான பிறகு
வந்துருக்கலாமே!

அதுதான் அண்ணா நாங்க பண்ணின பாவம். எங்கட ஊரிலே எனக்கு சொந்தமாக
10 ஏக்கரும் ரெண்டு கிணறும் இருக்குது. கடந்த வருடம் கோயில் பூமியும் சேர்த்து
குத்தகைக்கு எடுத்து உழைத்தும் ஒண்ணும் காணல. கடன் வாங்கித்தான் விவசாயம்
பண்ணினோம். ரெண்டாவது முறை எடுக்கலாமெண்டுதான் நெல் விதைச்சேன்
அப்போதான் பிரச்சினை வந்து ஊரைவிட்டு ஓடிப்போனோம் அப்படியே பாடுபட்ட
நிலத்தை விட்டுபோட்டு. நல்ல விளைச்சலிலே ஆமிக்காரன் மாட்டை விட்டு மேய
விட்டுட்டான். மொத்தமும் கடனாகிப்போச்சு. அதெல்லாம் அடைக்கணும்
அல்லவா?

அதுக்கு ஏன் அவசரபட்டு வந்திங்க? ஏதாச்சும் தொழில் தெரிஞ்சாலும் பரவால்ல.
விவசாயத்தை மட்டும் தெரிஞ்சிகிட்டு வந்துட்டிங்களே. பாருங்க இங்க செக்யூரிட்டியா
நிக்க வச்சிட்டாங்க.

ஆமிக்காரனுக்கு பயந்தேதான் இங்கு வந்தேன். உழைக்கவெல்லாம் தெம்பிருக்கதுண்ணா
உடம்பிலே. ஆனால் உயிர்பயம்தான் கவலையாயிருக்கு. ரெண்டு வயசு பிள்ளைய
விட்டுபோட்டு வந்துட்டதுதான் இன்னும் வருத்தமாயிருக்குது.

பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு வந்துட்டிங்களே அவங்களுக்கு மட்டும் ஆபத்து
இல்லையா?

ஆண்கள கண்டாதான் அடிப்பான், உதைப்பான். பெண்களையும், குழந்தைகளையும்
அதிகம் துன்புறுத்த மாட்டான்.

மருத்துவமனை வந்திருந்தது. அந்த அரபி டாக்டரிடம் பேசி புரிய வைக்கறதுக்குள்ள
நாக்கு தள்ளிபோச்சு. நெஜமாவே இவன்லாம் டாக்டருக்கு படிச்சானா? இல்ல நம்மூரு
மாதிரியான்னு சந்தேகமாகிச்சு எனக்கு.

வழக்கம்போல, தேவையில்லாம எல்லா டெஸ்டும் எடுத்து வயித்துல கல்தான் இருக்குன்ற
பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. ஒரு ஊசி, மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.
எல்லாம் சேர்த்து 200 திர்ஹாமுக்கும் எட்டிவிட்டது. வந்து முதல் மாத சம்பளம் கூட
வாங்காமல் செலவாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. அந்த கவலையில் வயிற்று
வலி போயிடுச்சி.

இப்ப எப்படிய்யா இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவால்லங்கண்ணா

கொஞ்சம் சகஜ நிலைக்கு அவரை திருப்ப பேச்சை சுவாரசியமாக்க நினைத்தேன்.

ஏன்யா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?

மூண்டு வருடமும் ஐந்து மாதமும் ஆச்சு.

காதல் கல்யாணமா? வீட்ல பாத்தாங்களா?

சிறு புன்னகையுடன் வெட்கப்பட்டுக்கொண்டே காதல் கல்யாணம்தான் ஆச்சு என்றார்.

இந்த மாதிரி காதல் கதைகள கேக்கணும்னாவே கொஞ்சம் ஆர்வம் அதிகம் நமக்கு.
ஆமா எந்த இடத்துல பாத்திங்க முதல் முதல்ல? யார் முதலில் காதலை சொன்னது?

அவரும் சிரித்துக்கொண்டே என்ன இப்படியெல்லாம் கதைக்கறிங்களே என்று ரொம்பவே
கூச்சப்பட்டுவிட்டார்.

அட சும்ம சொல்லுங்க. அறைக்கு போக இன்னும் நேரமிருக்கு. உம்முனு இருக்காம
எதாச்சும் பேசலாமில்ல.

எங்கட மனைவிதான் முதலில் சொன்னது. பிறகு நானும் சொன்னேன்.

என்னன்னு?

மறுபடியும் வெட்கப்பட்டுவிட்டார்!

ஐ லவ் யூ எண்டுதான். வேறென்ன சொல்வார்கள். இதெல்லாம் கேள்வியெண்டு
கதைக்கறீங்களே அண்ணா!

சரி சரி கடைசியா ஒரே கேள்வி. பொண்ணு உங்க ஊரேவா? இல்ல பக்கத்து
ஊரா? எப்படி சந்திப்பிங்க என்ன பேசிப்பிங்க?

பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

யோவ்! உன்னயெல்லாம் என்ன செய்றது? சொந்த அத்தை பெண்ண யாராச்சும்
லவ் பண்ணுவாங்களா? நீங்க சும்மா இருந்தாவே பெரியவங்க அவங்களுக்குள்ள
பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.

சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.

ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.

17 comments:

அபி அப்பா said...

super thambi!!!

குட்டிபிசாசு said...

தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்

SurveySan said...

அருமையோ அருமை.

சிலர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே இம்புட்டு கஷ்டப் படரத நெனச்சா நெஞ்சு கனக்குது தம்பி.

என்னமோ போங்க. எல்லாரும் நல்லாருக்கட்டும்.

குசும்பன் said...

"ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத ஊரல்லவா இது."

உண்மை உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

ஆழியூரான். said...

ஒரு வித சோகமும், நெகிழ்ச்சியும் இழையோடுகிறது..ம்...

கதிரவன் said...

//வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.//


இதைப்படித்த எனக்கும்தான்.

கொஞ்ச நாளா உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குங்க தம்பி !!

ஜெஸிலா said...

பயங்கரமான ஆர்வ கோளாறுப் போல நீங்க. மத்தவங்க கல்யாண ஜாதகமெல்லாம் வாங்கி இணையத்தில வேற ஏத்திட்டீங்களே ;-)

லொடுக்கு said...

அனுபவப்பதிவுகளின் ஸ்பெஷலிஸ்ட் தம்பிதான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. :)

அய்யனார் said...

அடப்பாவி தம்பி உன்னோட ஒருத்தன் பேசினாலும் ப்ளாக் ல போட்டுற்றியே
எப்படிய்யா இதெல்லாம்... சம்பந்தபட்டவங்க படிக்கிறதில்ல அப்படிங்கிறதால பூந்து விளையாடுற ..ம்ஹிம்..நல்லாயிரு

ஜி said...

:((
:))

Anonymous said...

first two lines padithavudan konjam shock ennnaaa....apuram padithaal unmai purinthathu
Eppadithaan thambikentu valaiyil mattuvaarkalo - udane interview aarampithu vidukireerkal vittenaparunu entu - paavam nakkal vera - paavam, avan kathaiyaiyum sollivittu eachum vankikondu - eppadithaan ippadiellam thonumo - killaadinkappa - nalla irrukirathu - unkal sevai appavikalukkaga thodarattum - padikirom - veru yaaru naanthan

CVR said...

//ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.//
நேரமின்மை ஊரில் இல்லை
மனிதர்களித்தில் தான்!!

பதிவு நன்றாக இருந்தது தம்பி!
வாழ்த்துக்கள்!!

பி.கு: நான் தமிழ்ம்மணத்துல எல்லோரையும் அண்ணானு கூப்பிடுவேன்!!
உங்களை எப்படி?? தப்பியண்ணானு கூப்பிடனுமா??? :-S

PPattian said...

"அரபு நாட்டின் அனாதை மனிதர்கள்" ஒவ்வொண்ணா கண்ணுக்கு கொண்டு வரீங்க... நல்லாயிருக்கு. முன்னாடி ஒரு A/C மெக்கானிக், இன்னைக்கு ஒரு செக்யூரிட்டி...

கற்பனையை விட அனுபவங்கள் தான் சுவாரசியமே..

கப்பி பய said...

அருமை!

செந்தில் said...

ஏண்ணே அடிக்கடி காணாம போயிடறீங்க. அட்லீஸ்ட் மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்களேன்.

//பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.//

அவருக்கு ரொம்பதாங்க குசும்பு. :)

இனிமேயாச்சும் அடிக்கடி வாங்க.

அமைதியான அருமையான பதிவு,

ஈழப்புதல்வன் ஒருவன் said...

நன்றி தம்பி...ஈழத்தமிழ்ர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டதற்காக....

Anonymous said...

Nice post and this enter helped me alot in my college assignement. Gratefulness you on your information.